Wednesday, February 08, 2006

*நட்சத்திரம்* - ஏங்குதே மனம்....இந்த நாளிலே..

எல்லா கிராமத்தை போலவே என் கிராமமும் ஒரு சுறுசுறுப்பான கிராமம். மொத்த கிராமமும் 5 மணிக்கே எழுந்து விடும். அம்மா எழுந்து முற்றம் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்பா வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருப்பார்கள். சேவல் கூவுகிறதோ இல்லையோ எங்கள் ஊர் மில் 6 மணி சங்கு சரியாக அடிக்கும். 'ஏல ராஜா! சங்கு அடிச்சப்புறமும் தூங்கறான் பாரு. எழுந்திரு' அம்மா என்னை எழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஊரில் முக்கால்வாசி பேர் வீட்டில் கடிகாரம் இருக்காது. எங்க ஊர் நூற்பாலை சங்கு தான் கடிகாரம். அதை கேட்டு, பேசத்தெரிந்த எந்த குழந்தையும் சரியாக நேரம் சொல்லும்.

ஊரில் பாதி பேருக்கு வேலை கொடுத்து வந்தது அந்த நூற்பாலை. அப்பா ஒரு சைக்கிள் கடையில் கணக்கு எழுதும் வேலை பார்த்து வந்தார்கள். கணக்காப்பிள்ளை வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆறு, ஏரி என்று நீர்வளம் எதுவும் கிடையாது.நிலத்தடி நீர் தான் ஆதாரம். ஊரை சுற்றி தென்னை தோப்புக்கள், புளிய மரங்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் பச்சை பசேல் என்று இருக்கும். ஊரில் நுழைந்தவுடன் வரவேற்கும் மாரி அம்மன் கோவில். அதை தாண்டி சுப்ரமண்ய சாமி கோவில். அதை ஒட்டி கத்தோலிக்க தேவாலயம். இப்படி 40 வீட்டிற்கு 3 கோவில்கள்.

ஆண்கள் வேலைக்கு சென்றாலும், வீட்டிற்கு வீடு ஏதாவது வேலை நடந்து கொண்டிருக்கும். பொதுவாக பனை சார்ந்த தொழில்கள்.கிராமத்தை ஒட்டி தேரி (பனங்காடு) என்பதால், காலையிலேயே பெண்கள் ஒரு அருவாளையும், தூக்குசட்டியில் கொஞ்சம் கஞ்சியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். அந்த கஞ்சிக்கும், வெங்காயத்துக்கும் ஆசைப்பட்டு நானும் அம்மா கூட நிறைய தடவை போயிருக்கிறேன். ஒரு 6 கி.மீ காட்டுக்குள் நடந்து போவோம். எங்கும் பரவி கிடக்கும் செம்மண். நிழலுக்கு ஒதுங்க கூட பனையை விட்டால் வேறு மரங்கள் கிடையாது. மழை பெய்து விட்டால் அவ்வளவு தான். ஒரு பனை ஓலையை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்போம். மதியம் சாப்பிட கொண்டு போன கஞ்சியும் கடித்து கொள்ள வெங்காயமும் தேவாமிர்தம். முடித்துவிட்டு கிளம்பும் போது தான் ஏண்டா போனோம் என்று இருக்கும். கொண்டு போன துண்டை சுற்றி தலையில் வைத்து ஒரு கட்டு ஓலையை தூக்கிவிட்டு விடுவார்கள். அந்த சுமையுடன் 6 கி.மீ நடக்க வேண்டுமே. ஊர் கண்ணில் தெரிந்து விட்டால் அப்படி ஒரு சந்தோசம். அப்போ அப்போ வழியில் கண்ட காளான்கள், விழுந்து கிடக்கும் பனம்பழம், முளைத்த பனங்கொட்டை என்று அள்ளி வருவதுண்டு. வந்து சேர்ந்ததும் காளானை சுட்டு தின்போம். அம்மா பனம்பழம் சுட்டு அருவாளால் கொத்தி சின்ன சின்னதாக கொடுப்பார்கள். அந்த வாசனைக்கே சுத்தி இருக்கிற அத்தை, சித்தி எல்லோரும் வந்துவிடுவார்கள். எல்லோரும் சுற்றி இருந்து பேசிக்கொண்டே தின்று கொண்டிருப்போம்.

இதை போல சில வீடுகளில் தென்னை ஓலையை வைத்து கீற்று முனைவார்கள். எப்படியோ தினமும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். எவருக்கும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. சந்தோசம். அது மட்டுமே நிறைந்த கிராமம் அது. சண்டைகளும் உண்டு. அருவாள் வரையும் போகும். ஆனால் வெட்டியது எல்லாம் கிடையாது. சும்மா 'ஏய்! வெட்டிருவேனாக்கும்' என்பதோடு சரி. அதுவும் பெரியவர்களை தாண்டி வராது. அந்த சண்டையும் பொதுவாக சின்ன பசங்க எங்களால் முடிவுக்கு வரும். 'வா! ராஜா! உள்ள வா! எதுக்கு வெளியயே நின்னுக்கிட்டு இருக்க. மருகப்புள்ளைக்கு என்னோட சேர்த்து சாப்பாடு போடுடீ' என்று நேற்று அருவாளை தூக்கிய மாமா வீட்டுக்குள் கூப்புடும் போது, தயங்கி தயங்கி போனதுண்டு. சாப்பிட்டு விட்டு வந்து பயந்துகொண்டே 'அம்மா! மாமா வீட்டுல உள்ள கூப்பிட்டாங்க. சாப்பிட்டுட்டு வந்தேன்' என்று கூறியதுண்டு. 'அவன மாதிரி எவனுமே பாசமா இருக்க மாட்டானுங்கடா' அம்மா மாமாவுக்கு நற்சான்றிதழ் கொடுப்பார்கள். ரெண்டாவது நாள் மாமா எங்க வீட்டுல சாப்பிட்டுக்கிட்டு இருப்பார். இப்படி நகமும் சதையுமாக பின்னி பிணைந்த உறவுகள்.

ஊரில் ஒருவருக்கு சுகமில்லை என்றால், ஊர் மொத்தமும் போய் விசாரிக்கும். ஒருவர் வீட்டில் மாடு கன்று ஈன்றதென்லால், ஊரில் எல்லார் வீட்டிற்கும் சீம்பால் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். சின்ன விசேஷம் என்றாலே திருவிழா கோலம் தான். திருமணம் ஆகட்டும், கோவில் திருவிழா ஆகட்டும். அத்தனையும் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும். வில்லுப்பாட்டு, பாவை கூத்து என்று விடிய விடிய உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். பக்கத்து ஊரில் திரைப்படம் போடுறாங்க என்று பாய் தலையனை சகிதமாக கிளம்பிய காலங்கள் அவை.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அரிசி, பருப்பு, எண்ணை என்று கொண்டு வந்து மொத்தமாக புளியமரத்தடியில் அம்மா, சித்தி, அத்தை என்று எல்லோரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைப்பார்கள். எல்லோரும் மொத்தமாக மரத்தடியில் அமர்ந்து உண்போம். பௌர்ணமி இரவு சின்னப் பசங்க நாங்க எல்லோரும் சாப்பாட்டு தட்டை தூக்கிக்கொண்டு தெருவில் மொத்தமாக நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்போம். அது தான் நிலாச்சோறு. இன்று நிலவை பார்த்தே நாளாச்சு.

மின்சாரம் முக்கால்வாசி வீட்டில் கிடையாது. நான் மின்சார விளக்கில் முதன் முதல் படித்தது எனது கல்லூரி இறுதி ஆண்டில் தான். மண்ணெண்ணையில் எரியும் திரி போட்ட பழைய இங்க் பாட்டில் தான் எங்கள் விளக்கு. சமயத்தில் தெரு விளக்கில் அமர்ந்து படித்ததுண்டு. மூளையை மழுங்கடிக்க, நேரத்தை வீணடிக்க தொலைக்காட்சி எவர் வீட்டிலும் கிடையாது. மாலை ஆகிவிட்டால், பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கதைத்து கொண்டிருப்பார்கள். நாங்கள் அந்த இருட்டிலும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருப்போம். வெறும் காடு தான். இருட்டுக்கும் பயம் கிடையாது. பாம்புக்கும் பயம் கிடையாது. முள்ளிற்க்கும் பயம் கிடையாது. காலில் குத்திவிட்டால் புடுங்கி போட்டுட்டு ஓடிக்கிட்டே இருப்போம். அப்படியும் ஏதாவது வெட்டிவிட்டால், கொஞ்சம் மஞ்சளும் உப்பும் வச்சி ஒரு கட்டு. ரெண்டாவது நாள் காயம் இருந்த இடம் தெரியாது.

சில ஆண்கள் குடித்து வருவதுண்டு. ஊருக்குள் வரும்போதே வசனம் பட்டையை கிளப்பும். எல்லாம் ஊருக்கும் வரும் போது தான். பெண்கள் யாராவது சத்தம் போட்டால், கை எடுத்து கும்பிட்டு விட்டு 'யக்கா! மன்னிச்சிருங்கக்கா' அப்படின்னு சத்தம் இல்லாமல் போய்விடுவார்கள். ஒருவருக்கொருவர் மரியாதை அப்படி வைத்திருப்பார்கள்.

மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் புதிதாய் முளைத்த செடிகள். விதவித புட்டான்கள்(தட்டான்), சிவப்பு பட்டு பூச்சிகள் என்று கிராமம் புதுக்கோலம் பூணும். மழையில் காடுகளில் முளைத்த செடியில் தக்காளி, செண்டு, கத்தரி என்று பிடுங்கி வீட்டில் நட காடு காடாய் அழைந்து கொண்டிருப்போம். வீட்டிலேயே சின்ன தோட்டம். காலையிலே எழுந்தவுடன் தக்காளி மொட்டு விட்டதா, செண்டு பூத்ததா, சுரை ஒழுங்காய் படர்கிறதா என்று பார்பதிலே தான் எவ்வளவு சந்தோசம். சுடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காடு எங்கிலும் வித விதமான பழங்கள். தேடி தேடி தின்பதில் தான் என்ன ஒரு சுகம்.


நூற்பாலையை மூடிய போது, என் கிராமம் கொஞ்சம் கலைந்து போனது. பிழைப்புக்கு வழியில்லாமல் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து போனது. சில வருடம் வானம் பொய்த்து போனதில், தென்னை மரங்களும், தோட்டங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மடிந்து போயின. ஊரே வெறிச்சோடி போனது. சிறுவர்கள் நாங்கள் தலை எடுத்த போது, ஒவ்வொரு வீட்டின் பொருளாதார நிலை கூடி போனது. ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புகள், உதவிகள் தேவைப் படாமல் போனது. வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள். நாங்கள் நீந்தி விளையாண்ட கிணறுகள் குப்பை தொட்டிகளாய் போயின. எங்கும் பாலித்தின் கவர் வந்து பனை தொழிலை அழித்துப் போனது. பனை ஓலையில் மிட்டாய் வாங்கினால் டீசண்ட் இல்லை என்று டி.வி கற்று கொடுத்தது. ஒரு கிரிக்கெட் மட்டையிலும், பந்திலும் மொத்த விளையாட்டும் அடங்கி போனது. கோலிக்காய், பம்பரம், மரம் ஏறி குரங்கு, கில்லி காணாமல் போயின. கேபில் டி.வி சனியனால், பக்கத்து வீட்டு அரட்டைகள் தேவையற்றதாய் போனது. வில்லுப்பாட்டும் பாவை கூத்தும் போரடித்து போயின. வீட்டுக்குள்ளேயே முடங்கி போனது வாழ்க்கை.

இன்று என் கிராமம் தன் அடையாளங்களில் முக்கால்வாசியை இழந்து போனது. இன்றும் அங்கே அங்கே முளைத்த தக்காளி செடிகளும், படர்ந்து கிடக்கும் புட்டு முருங்கையும் அப்படியே இருக்கிறது. பறிப்பதற்கு தான் எவருக்கும் மனம் இல்லை.

Tuesday, February 07, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே (இறுதி பாகம்)

இதை படிச்சிட்டு வாங்க

கடிதம் வந்ததில் இருந்து மலரை எப்போ பார்ப்போம் என்று இருந்தது. எல்லா சந்தோசமும் திங்கள் கிழமை வரை தான். இந்த கடிதம் எல்லாமே பசங்க செட்டப் தான் என்று தெரிந்த போது ரொம்பவே நொந்து போனேன். அதற்கு மூலக்காரணமே பாலா தான் என்று அறிந்த போது ரொம்பவே என்னை வைத்து விளையாடிட்டானுங்க என்று தெரிந்தது. 'டேய்! சந்தனம். ஜோசப் தான்டா அப்படி ஒரு வெளாட்டு பண்ணலாம்னு சொன்னான். லெட்டர் எழுதியது அவன் தான்டா. சாரிடா'. 'டேய் அவ எப்படிடா லெட்டர் போடுவா. அதுவும் ஊரே பார்க்கிற மாதிரி எந்த பொண்ணாவது போஸ்ட் கார்டுல எழுதுமாடா. அறிவு கெட்டவனே' பாலா செய்வதையும் செய்துவிட்டு என்னை திட்டினான். 'ஆமான்டா எனக்கு அறிவு கெட்டு தான் போச்சு' வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை.

மலர் வழக்கம் போல என்னிடம் பேசுவாள். இயற்பியல் செய்முறை வகுப்புகள் எங்கள் நட்புக்கு ரொம்பவே உதவியது. மலர் பக்கத்திலேயே உள்ள எக்ஸ்பரிமென்ட் வந்து விட்டால், அன்று அவ்வளவு தான். நான் ஏதாவது வேண்டுமென்றே சொதப்புவதும், மலர் என்னை செல்லமாக திட்டிக்கொண்டே உதவி செய்வதும், மறக்க முடியாத நாட்கள் அவை. பசங்களை சொல்லவும் வேண்டுமா?. 'டேய்! சந்தனம். அது எப்படிடா மலர் பக்கத்துல வந்துட்டா நீ அப்படி சொதப்புற. ம்..நடத்து நடத்து'. இப்படி எங்கள் நட்பு வேறுன்ற ஆரம்பித்தது. நான் வகுப்பு போகாவிட்டால் எழுதி கொடுப்பது, பரிட்சைக்கு முக்கிய வினாக்கள் சேகரித்து கொடுப்பது என்று மலருக்கு நான் ரொம்பவே நட்பாகி போனேன்.

'இன்னும் எதுக்குடா சொல்லாம இருக்குற. நேர்ல சொல்ல முடியலன்னா, ஒரு லெட்டராவது கொடுடா. லெட்டர் எழுதனும்னா நம்ம ஜோசப் கிட்ட வேணும்னா ஐடியா கேளுடா' பாலா அடிக்கடி என்னை கேட்க ஆரம்பித்தான். ஒரு நாள் கடிதம் எழுதியே விட்டேன். நானும் பாலாவும் செமஸ்டர் பரிட்சையை பாதியில் கட் அடித்துவிட்டு மலருக்காக காத்திருந்தோம். 'டேய்! அவ வெளியே வரும் போது நான் பேச்சு கொடுத்து நிறுத்தறேன். அப்புறம் உன் கைல தான் இருக்கு' பாலா திட்டம் வகுத்தான். மலரும் பரிட்சை முடித்துவிட்டு வெளியே வந்தாள். 'என்ன மலர்! எக்ஸாம் எல்லாம் எப்படி?' பாலா ஆரம்பித்தான். நான் அவன் பின்னாடி பைக்கில் பையில் லெட்டரோடு. 'ஈஸியா இருந்தது பாலா. உனக்கு எப்படி. சந்தனம் உனக்கு எப்படி. தேறுமா' சிரித்தாள். 'நாங்க ரெண்டு பேரும் சென்டம் அடிச்சிருவோம்னு பாதில வரும் போதே மோகன் சார் சொல்லிட்டார்' பாலா பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். அதுவரை தைரியாமாக இருந்த எனக்கு லெட்டரில் கை வைத்ததும் எல்லா தைரியமும் ஓடி விட்டது. சுற்றி எல்லோரும் என்னையே பார்ப்பது போல இருந்தது. 'டேய் குடுடா..குடுடா' மலரிடம் பேசிக்கொண்டே கை முட்டியால் என்னை இடித்தான் பாலா. 'சரி பாலா! சந்தனம் நான் வரேன். பஸ்ஸுக்கு நேரம் ஆச்சு' மலர் போய் விட்டாள்.

'போடா! எதுக்குடா குடுக்கலை. உன்ன நம்பி வம்பா ஒரு அரியர்ஸ் வேற வாங்கியாச்சு' திட்டினான் பாலா. 'இல்லடா! பாலா. ஒரு வேள மலருக்கு என்ன புடிக்காம போய் என்கிட்ட பேசாம போய்ட்டா, என்னால தாங்க முடியாதுடா. இன்னும் ஒரு வருடம் இருக்கு. என்னால அந்த இழப்பை தாங்க முடியாதுடா' மலர் என்னுள் எவ்வளவு படர்ந்து விட்டாள் என்று எனக்கே இப்போது புரிந்தது.

இறுதி ஆண்டும் வந்தது. மலரின் அண்ணன் கல்யாணம் என்று எங்கள் வகுப்புக்கு விடுமுறை. எல்லோரும் மலரின் வீட்டிற்கு முதன் முதலாக சென்றோம். அன்பான குடும்பம். மலர் எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்து கொண்டாள். அவளது இரு தங்கைகளையும் ரொம்பவே விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் வீட்டில் எல்லோரும் அவள் மேல் காட்டிய பாசம், அவள் அந்த வீட்டின் தேவதை என்று அழகாக காட்டியது. என்னை மட்டும் அழைத்துப்போய் அவள் அம்மா அப்பாவிடம் சிறப்பு அறிமுகம் செய்த போது, நான் மலருக்கு ஏதோ ஒரு பந்தத்தில் நெருங்கியவனாகிய போனது நன்றாகவே தெரிந்தது. அந்த பந்தம் நட்பா, காதலா?. முடிவு செய்ய முடியாமல் தவித்தேன்.

கடைசி செமஸ்டரும் வந்து சேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து கொடைக்கானல் சுற்றுலா போகலாம் என்று முடிவானது . மூன்று நாள் கொடைக்கானலில். இன்று நினைத்தாலும் இனிக்கும் நாட்கள். நானும் மலரும் மூன்று நாளும் சேர்ந்தே சுற்றினோம். பேச நினைத்ததை எல்லாம் மொத்தமாக மூன்று நாளில் பேசி தீர்த்தேன். என் காதல் மட்டும் மனசுக்குள்ளேயே தங்கி போனது. இரண்டு பேரும் சேர்ந்தே சுற்றிய போது, மனோ சாரே கேட்டார், 'என்னப்பா சந்தனம். என்ன மேட்டரு' 'ஒன்னும் இல்ல சார்' சிரித்து மழுப்பினேன்.

கல்லூரி இறுதி நாட்களும் வந்து சேர்ந்தது. எல்லோர் கைகளிலும் வண்ண வண்ண ஆட்டோகிராப் புத்தகங்கள். இந்த மூன்று வருடத்தில் கிடைத்த சந்தோசங்களும், நட்புகளும் இன்னும் சில நாட்களில் பறி போகப் போகும் கவலை எல்லோர் முகத்திலும். என் மனதில் இருப்பதை சொல்ல இன்னும் சில நாட்களே இருந்தது. இனி சொல்லி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்ல முடிவு செய்தேன். மலர் என்னுடைய ஆட்டோகிராப்பை எழுதி திருப்பி கொடுக்கும் போது சொல்லியே விட்டேன். 'இல்ல சந்தனம். நீ எனக்கு எப்பவுமே ப்ரண்ட் தான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட். நான் அந்த எண்ணத்தோட எப்பவுமே உன்னிடம் பழகவில்லை' மூன்றே வார்த்தையில் முடித்து விட்டாள். அவள் கொடுத்த ஆட்டோகிராப்பை திறந்து பார்த்தேன் 'உன்னுடைய பால் போன்ற தூய்மையான நட்பை என்றும் மறவாத - மலர்' என்றிருந்தது..

அதன் பிறகு மலரை தொடர்பு கொள்ள மனது கேட்கவில்லை. பிறகு வேலை தேடுவதிலேயே வருடங்கள் ஓடி விட்டது.

'சார்! காபி! காபி' குரல் கேட்டு எழுந்தேன். வண்டி மணியாச்சியை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் விடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நெல்லை வந்து விடும். மேலே இருந்து இறங்கி பெட்டியை எடுத்து இறங்க தயாரானேன். மலரை எட்டிப் பார்த்தேன். இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். இத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் என்னிடம் தான் அதே உரிமை, அதே பேச்சு. நான் வாழ்க்கையில் இழந்தது கொஞ்சம் பெரிதாகவே பட்டது. மலரிடம் சொல்லாமல் செல்ல மனசு வரவில்லை. தொட்டு எழுப்பவும் உரிமை இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'மலர்' கூப்பிட்டுப் பார்த்தேன். எந்திரிப்பது மாதிரி தெரியவில்லை. இவ்வளவு நாள் கழித்து பார்த்துவிட்டு சொல்லாமல் போவது ஏனோ மனசை பிழிவது மாதிரி இருந்தது. நெல்லையும் வந்து விட்டது. 'தம்பி! எறங்குப்பா' பின்னாடி நிற்பவர்கள் அவசரப் பட்டார்கள். மலர் என் வாழ்வில் இருந்து மொத்தமாக போய்விட்டதை உணர்ந்த போது, சட்டென்று வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். ரயில் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது, என் மலரோடு.

(முற்றும்)

Monday, February 06, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே !

ஒரு வழியாக அலுவலகத்தில் விடுப்பு வாங்கி விட்டேன். பொங்கலுக்கு ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். இந்த நெரிசல் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போவது தான் என்ன ஒரு சந்தோசம். ஒரு வழியாக ஆட்டோக்காரனிடம் ரேட் பேசி தாம்பரம் இரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். பொங்கல் என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்ததும் ஏறி லக்கேஜுக்கு ஒரு இடத்தை கண்டுபுடித்து தள்ளிவிட்டு என் இருக்கையில் அமந்த்தேன். எதிரில் வயதான தம்பதிகள். என்னை பார்த்ததும் லேசாக புன்னகைத்தார்கள். 'தம்பி ஒங்களுக்கு லோயர் பெர்த்தா. கொஞ்சம் அப்பர்ல படுத்துக்க முடியுமா' அந்த பெரியவர் கேட்டார். 'சரிங்க. படுக்கும் போது சொல்லுங்க'. இன்னும் ஒரு சீட் காலியாகவே இருந்தது. 'பையனுக்கு லீவு கெடைக்கல. ரெண்டு நாள் கழிச்சி தான் வரேன்னு சொன்னான். அதான் மருமகள கூட்டிக்கிட்டு பொங்கலுக்கு ஊருக்கு கெளம்பறோம்' என்றார். பொதுவாக ஒரே ஊர்காரர்களை ஒரே இடத்தில் பார்த்தால் இந்த மாதிரி விசாரிப்புகள் எப்போதும் இருக்கும். 'மருமக ஏதோ அவ ப்ரண்ட் பக்கத்து பொட்டில பார்த்தாளாம். அதான் பேசிட்டு வர்றேன்னு போய்ருக்கா'. ரொம்ப உரிமையாக பேசிக்கொண்டு வந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மருமகள் வந்தாள். அவள் மலர். என் கல்லூரி தோழி. கல்லூரி முடிந்தவுடன் மறைந்து போன, மறந்து போன எத்தனையோ நட்புகள். யாரையாவது மறுபடி பார்க்க மாட்டோமா என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் மலரையே பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அவளுக்கும் ஆச்சர்யம். 'சந்தனம்! எப்படி இருக்கீங்க' முகத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோசம். பக்கத்திலேயே அவளது மாமனார்-மாமியார். 'நீங்க' என்று ஆரம்பிப்பதா, 'நீ' என்று ஆரம்பிப்பதா என்ற சின்ன தடுமாற்றத்துடன் 'நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க' நான். என்னிடம் இன்னும் அதே புன்னகை. அதே விசாரிப்புகள். கல்லூரியில் என் நெருங்கிய தோழி அல்லவா. கிட்டத்தட்ட 5 வருடம் கழித்து இருவரும் பார்க்கிறோம். என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாள். 'எங்கே இருக்குறீங்க ! என்ன வேலை! எப்போ வேலை கெடைச்சது! கல்யாணம் ஆயிடுச்சா' என்று விசாரிப்புகள் நீண்டு கொண்டே போனது.

சில வருடங்களில் வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது. என் நினைவுகள் கொசுவத்தி சுருளாய் பின்னோக்கி சுழன்றன.

பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண்ணில் சாதிக்க முடியாமல் கடைசியில் எனக்கு கிடைத்தது எங்க ஊர் கல்லூரியில் இயற்பியல் துறை தான். பசங்க பள்ளிக்கூடத்தில் படித்து விட்டு கல்லூரியில் ஒரே தாவணியா பார்த்த போது அசந்து தான் போனோம். மற்ற துறை மாணவர்கள் பொறாமை படும் அளவுக்கு எங்கள் வகுப்பில் நிறைய பெண்கள். பசங்களில் நிறைய பேர் ஏற்க்கனவே பாய்ஸ் ஸ்கூலில் வருடக் கணக்கில் ஒன்னா குப்பை கொட்டியவர்கள் தான். சுத்தி இருக்கும் அத்தனை ஊருக்கும் அது ஒன்று தான் கல்லூரி.

எல்லோருக்குமே பொண்ணுங்க கிட்ட முதல்ல பேச சின்ன தயக்கம். அப்புறம் பாலா தான் தொடங்கி வைத்தான். 'ஏல! நாம எல்லாம் ஒரே வகுப்புடா. எல்லோரும் நம்ம ப்ரண்ட்ஸ்டா. மூனு வருசம் ஒண்ணா தான் படிக்க போறோம். பட்டிக்காட்டன் முட்டாய் கடைய பாத்த மாதிரி முழிக்காதீங்கடா. பேசுங்கடா' எங்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான். அப்படி நான் முதலில் பேசியது மலர்விழியிடம் தான். செய்முறை வகுப்பில் நான் வயரை மாற்றிக் கொடுத்து முழித்துக் கொண்டிருந்த போது 'சந்தனம்' என்று ஒரு குரல். குரல் வந்த திசையை எட்டிப்பார்த்தேன். மலர் நின்று கொண்டிருந்தாள். 'நீ தப்பா கொடுத்திருக்க. அதான் வேலை செய்யலை' அவளே எல்லாம் சரி செய்து கொடுத்த போது, ஏதோ ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். மனசுக்குள் சில பட்டாம்பூச்சிகள் பறக்கத் தான் செய்தது.

அப்புறம் வகுப்பு முடிந்தவுடன் கிணத்தில் போட்ட கல்லு மாதிரி பின் தங்கி மலர் கிளம்பும்போது எதேச்சையாக கிளம்புவது போல கிளம்பி மலரிடம் பேசிக்கொண்டே வர ஆரம்பித்தேன். நான் அடித்து பிடித்து கடைசி பெஞ்சில் இடம் பிடித்த போது 'டேய் சந்தனம்! உன் ஒயரத்துக்கு பின் பெஞ்ச் எதுக்குடா. தூங்கணும்னா முன் பெஞ்சில ஒங்காந்தே தூங்குடா. மனோ சார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க' பாலா இடம் கொடுக்காமல் அடம்பிடித்தான். நான் பின் பெஞ்சிக்கு ரொம்பவே முரண்டு புடிக்க, மோப்பம் புடிச்சிட்டான். 'டேய் சந்தானம்! கத இப்படி போகுதா. நடத்து நடத்து'. இது போதாதா அத்தனை பசங்களுக்கும் சேர்ந்து அவனுங்களே வகுப்பில் ஒரு காதல் கதை ரெடி. அதுல ஹீரோவா என்னை போட்ட போது 'டேய்! ஒன்ன ஏத்தி வுடுறானுங்கடா. ஒனக்கு ஒத்து வராத வேலடா இது' அப்படின்னு உள்மனசு சொன்னது. ஆனால் அதை கேட்கும் நிலமையில் நான் இல்லை. 'டேய் பாலா! அவளுக்கு என்ன புடிக்குமாடா'ன்னு நானே உளறியபோது என்னை அறியாமல் நான் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதில் இருந்து பசங்க ஒவ்வொரு விசயமா சேகரித்து கொடுக்க ஆரம்பித்தார்கள். மலரோட அப்பா என்ன பண்ணுறார். கூட பொறந்தவங்க எத்த பேரு. இப்படி பல விவரங்கள். 'எல்லாம் சரிடா! மலருக்கு என்ன புடிக்குமா'. கேட்டுட்டா போச்சி. ஆசிரியர் இல்லாத நேரம் பார்த்து பாலா 'எப்பா! நம்ம சந்தனம் மலர லவ் பண்ணராம்பா. என்ன சொல்றீங்க' அப்படின்னு எல்லோருக்கும் கேட்கிற மாதிரி கத்த நான் ஆடி போனேன். சரி மொத்தமா சமாதி கட்டிட்டான். கொஞ்ச நஞ்சம் பேசுறதுக்கும் மூடு விழா நடத்திட்டான் என்று தான் நினைத்தேன். மலரை லேசாக எட்டி பார்த்தேன். கொதித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்தால் குளிர்நிலவாய் ஒரு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். 'உன் ஆள பாருடா. இந்நேரத்துக்கு பண்ணி இருக்கிற வேலைக்கு, நான் பிரின்சிபால் முன்னாடி கை கட்டி நின்னுக்கிட்டு இருக்கனும். அவ சிரிக்கிறாடா. போய் தைரியா சொல்லுடா'. 'என் ஆள்' இந்த இரண்டு வார்த்தையில் தான் எவ்வளவு போதை. பாலா எனக்கு உதவி செய்வதாகவே பட்டது.

அன்று சனிக்கிழமை. வீட்டிற்கு என் பெயருக்கு ஒரு போஸ்ட் கார்ட். உருகி உருகி காதலில் நனைந்து போய் இருந்தது. இறுதியில் 'சந்தனம்! இது 15 பைசா கார்டு கிடையாது. என்னோட வாழ்க்கை. உன் முடிவுக்காக காத்திருக்கும்' அப்படின்னு ஒரு பூ படம் மட்டும் போட்டிருந்தது. கையெழுத்து எதுவும் இல்லை. என்னால் நம்பவே முடியலை. நம்ப சொல்லி காதல் பித்து பிடித்த மனசு சொன்னது. அன்று முழுவதும் சாப்பாடே இறங்க வில்லை . அடுத்த நாள் பாலா வீட்டுக்கு போய் காட்டினேன். 'டேய். சந்தேகமே இல்லை. பூ படம் போட்டிருக்குல்லா. மலர் தான்டா. கலக்கிட்டாடா சந்தனம்'. உலகமே என் காலடிக்குள் கிடப்பது போல் ஒரு சந்தோசம்.

(இறுதி பாகம் அடுத்த பதிவில்..கதையின் நீளம் கருதி மட்டுமே)

Sunday, February 05, 2006

*நட்சத்திரம்* - இன்று முதல்...

வணக்கம் நண்பர்களே! நல்லாருக்கியலா! ஒங்க நேரம் இந்த வார நட்சத்திரம் அடியேன் தான் :-). முப்பது பதிவே இன்னும் தாண்டலை. அதுக்குள்ள மதி அவர்களிடம் இருந்து நம்ம குமரனுக்கு ஒரு மடல் 'சிவா மெயில் ஐடி கொடுங்க' என்று. அதை குமரன் எனக்கு அனுப்பிய போது என்னால் நம்ப முடியவில்லை (எல்லோரும் இதையே தான சொல்றாங்கன்னு சொல்றீங்களா..உண்மை அது தானே). அப்புறம் மதி என்னிடம் நட்சத்திரம் ஆக இருக்கறீங்களான்னு கேட்ட போது, மறுக்க முடியல. வாரம் ஒரு பதிவு, அதிகமா போனா 10 பின்னோட்டம் என்று ப்ளாக் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தது. தினமும் பதியணும்னு சொல்றாங்க, முடியுமா. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். கிடைத்த வாய்ப்பு அரிய வாய்ப்பு அல்லவா.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மதி கந்தசாமி அவர்களுக்கும், காசி சாருக்கும் முதலில் என்னோட நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிறைய எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லலைங்க. பத்தாப்பு படிக்கும் வரை தான் முழுசா நாலு வார்த்தை தமிழில் எழுதியது. அப்புறம் அம்மா அப்பா ஆசை படறாங்கன்னு இங்கிலீசு மீடியத்துல தூக்கி போட்டாங்க. அத்தோட தமிழும் போச்சி. ஆங்கிலமும் போச்சி. ப்ளாக் என்பது தெரியும் முன்னமே அல்வா சிட்டி விஜய்யின் இனையம் அறிமுகம் ஆனது. அடடே நல்லா இருக்கே. மக்கள் எல்லாம் படிச்சி பாக்கறாங்களேன்னு தேடி பார்த்ததில் கிடைத்தது தான் ப்ளாக்கர். இளையராஜாவின் திருவாசகத்திற்கு குமரன் பொருள் எழுதி கொடுத்த போது, மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தது தான் சிவாபுராணம். அப்புறம் நம்ம ஓணான் அடித்த கதை, ஊர் கதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். இப்போ இங்கே வந்து நிக்குது. சரி குமரனையும் உள்ளே இழுத்து போடலாம்னு நான் தான் அவரையும் ப்ளாக் ஆரம்பிக்க வச்சி அவரு தூக்கத்தை கெடுத்தேன். இப்போ 10, 15 ப்ளாக் வச்சிக்கிட்டு மனுசன் எப்படித்தான் மேய்க்கறாரோ.

இளையராஜா மேல் எனக்கு ரொம்ப பைத்தியம். நாள் முழுக்க, வாழ்க்கை முழுக்க அவர் பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர் பற்றி மற்றவர்களுடன் பேச அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அதனால் ஆரம்பித்தது தான் கீதம் சங்கீதம். எனக்கு இசை ஞானம் எல்லாம் கெடையாதுங்க. மனசு ரசிக்கிறதை அப்படியே எழுதுகிறேன். நிறைய நண்பர்கள் படித்துவிட்டு நல்லாயிருக்கு என்று சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நினைவுகளை பதிய சிவபுராணம், ராஜாவை பற்றி பேச கீதம் என்று இனைய வாழ்க்கை உங்கள் ஆதரவால் திருப்தியா போய்ட்டு இருக்கு.

என்னை பற்றி சொல்லணும்னா, பேரு சிவா தாங்க (புனை பெயர்..பூனை பெயர் எல்லாம் கெடையாது) சொந்த ஊர் நெல்லை (அல்வா...அல்வா) அருகில் ஒரு கிராமம் (நான் சென்னைல வாய தொறந்தாலே 'இன்னாப்பா! சொந்த ஊரு திருநவேலி அண்டயா' அப்படி கேட்டுடுவாவ). கல்லூரி வரை ஊரிலேயே படிப்பு. முதன் முதலாக சென்னைக்கு வந்தது பொறியியல் படிக்க. அப்படியே ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை. இப்போ தற்காலிகமாக அமெரிக்காவில்.

வேறு என்னத்த சொல்ல. என்னால முடிஞ்ச அளவு சுவாரஸ்யமா கொண்டு போக முயற்சிக்கிறேன். வாழ்த்துவீங்க கண்டிப்பா :-). அப்படியே உங்கள் ஆதரவையும் தொடர்ந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் வாரத்தை தொடங்குகிறேன்.

சென்ற வார நட்சத்திரம் தாணு வாரத்தில், ப்ளாக்கர் ரொம்பவே படுத்திட்டு போல. என்னோட வாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாம இருக்க சாமிய வேண்டிக்கிட்டு ஆரம்பிக்கிறேன்.

அன்புடன்,
சிவா

Friday, January 13, 2006

பொங்கல் விடலாம் வாங்க

நாளைக்கு பொங்கல். ம்ம்ம்ம். இந்த தடவை அமெரிக்காவுல மாட்டிக்கிட்டேன். சரி! இங்கே இருந்து ஒன்னும உருப்பட போறதில்லை. பொங்கல் விட்ட புராணத்தையாவது எழுதலாம்னு கிளம்பிட்டேன். இன்னைக்கு காலைல நண்பர் நடாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது, உங்க ஊர்ல பொங்கல் எப்படி இருக்கும் சிவா என்று கேட்டார். ஸ்டவ்ல பொங்கல் வச்சிட்டு டி.வி முன்னாடி உட்கார்ந்து கொண்டாடுற பொங்கல் இல்லப்பா. அந்த பொங்கலே தனி, அத ரெண்டு வார்த்தைல சொல்ல முடியாது. பதிவாகவே போட்டுடறேன். படிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டேன். எனக்கு பிடித்த பண்டிகைகளிலே முதல் இடம் பொங்கல் தான். அது ஒரு உயிரோட்டமான பண்டிகை.

பொங்கலுக்கு ஒரு வாரத்திற்க்கு முன்னமே கிராமத்தில் எல்லா வீடும் களை கட்ட ஆரம்பித்துவிடும். முதல் வேலை வீட்டுக்கு வெள்ளை அடிப்பது. சந்தையில் தான் வெள்ளை அடிக்க சிப்பு சுண்ணாம்பு கிடைக்கும். எங்க ஊருல செவ்வாய்கிழமை. திசையன்விளைல வெள்ளிக்கிழமை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருல சந்தை இருக்கும். சிப்பி சுண்ணாம்பு படி ஒரு ரூபாய்க்கு ஒரு பத்து படி அள்ளிக்கிட்டு வந்து அப்பாகிட்ட கொடுத்தா, அத ஒரு பெரிய மண்பானைல தண்ணி ஊத்தி நீத்த போடுவாங்க. ரெண்டு நாள் கழித்து வெள்ளை அடிக்க சுண்ணாம்பு ரெடி. ஒரு பனை பாளைய எடுத்து சுத்தியல வச்சி நச்சுன்னு ரெண்டு அடி அடி அடிச்சா வெள்ள அடிக்க பிரஷ் ரெடி. வீட்ல ரெண்டு நாளைக்கு பரபரப்பா இருக்கும். "யப்பூ! எனக்கும் கொஞ்சம் வெள்ள அடிச்சி கொடுத்திருப்பூ' ன்னு அத்தை மாமான்னு ஊருல நெறைய கோரிக்கை இருக்கும். எல்லாம் முடிச்சி கொடுக்கவே நாலு நாலாகிடும். இத முடிச்சிட்டு நம்ம பீட்டர் அண்ணன கூட்டிக்கிட்டு தேரிக்கு போய் பனை ஓலை வெட்டி வருமோம்.

அப்புறம் பொங்காங்கட்டி செய்ற வேலை. பொங்காங்கட்டின்னா பொங்கல் விட அடுப்பு கல். வெறும் செங்கலையோ, கல்லையோ அடுப்பாக வைப்பது கிடையாது. அதற்கென்று மண் குழைத்து ஒரு வடிவத்தில் செய்வது தான் பொங்காங்கட்டி. பொங்காங்கட்டி செய்ய களிமண் வெட்ட, ஒரு மம்பட்டியையும் ஒரு வாளியையும் எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். நல்ல களிமண்ணில் தான் கட்டி நன்றாக வரும். அதனால் ஊரில் ஓடைகரையில் வெட்டி ஒரு இடத்தில் ஊரே வெட்டி வெட்டி என் ஆழத்திற்க்கு பள்ளம் கிடக்கும். அதில் இறங்கி மஞ்சள் களிமண்ணை வெட்டி வர வேண்டும். அதை தண்ணில குழைத்து ஒரு சட்டியில் போட்டு கவுத்தால் சட்டி போல பொங்காங்கட்டி ரெடி. அதோடு முடிவதில்லை. அதற்க்கு வெள்ளை அடித்து, காவி அடித்து அழகு படுத்தினால் தான் அது பொங்காங்கட்டி. இல்லான்னா அது மண்ணாங்கட்டி.

பொங்கலுக்கு முந்தின நாள் தான் ஊரே அல்லோல படும். அன்று ஊரில் சிறப்பு சந்தை இருக்கும். பொங்கலுக்கு காத்திருப்பதே அந்த கரும்புக்காக தான். அம்மாவ கூட்டிக்கிட்டு சந்தைக்கு போனா, ரெண்டு கரும்பு, மஞ்சககுலை, காய்கறி. இன்னொன்ன விட்டுட்டேன். பனங்கிழங்கு. ம்ம்ம்ம். எல்லாத்தையும் வாங்கி வருவோம். கடையில இருந்து பச்சரிசி, சர்க்கரை, பூஜை பொருள் எல்லாம் அப்பா வாங்கி வர, பொங்கல் விட எல்லாம் ரெடி. அம்மா வீடு, முற்றம் எல்லாம் கோலம் போட்டு முடிக்க எப்படியும் இரவு 12 ஆகி விடும்.

காலைல 4 மணிக்கே எழுப்பி விடுவார்கள். தோட்டத்துல அந்த மார்கழி குளிரிலும் (தை ஒன்று தான இன்னைக்கு. மார்கழி குளிர் இருக்கும் தானே) தொட்டில கெடக்குற பச்சத் தண்ணில நடுங்கிகிட்டே குளிக்கும் சுகம் தனி தான். அப்புறம் நாம ஆவலா காத்துக்கிட்டு இருக்கிற கோடு போட்ட சட்டையையும் டவுசரையும் போட்டு அழகு பார்ப்பது அடுத்த சுகம்.

இனி பொங்கல் விட வேண்டியது தான். சூரியன் உதிக்கும் போது பொங்கல் பொங்கியிருக்க வேண்டும். அதனால் காலை 5 மணிக்கே அடுப்பில் பானை ஏறியிருக்கும். மஞ்சள்குலை சுற்றப்பட்டு குங்குமம் விபூதி எல்லாம் பூசப்பட்டு மங்களகரமாக இரண்டு பானை ரெடியாக இருக்கும். ஒன்று வெண் பொங்கல். இன்னொன்று சர்க்கரை பொங்கல். முற்றத்தில் போன வருடம் பொங்கல் விட்ட இடத்தை தோண்டி கண்டுபிடித்து அந்த போன வருட சாம்பலில் மேல் இலை போட்டுதான் சாமி படையல் போடுவோம். இந்த வருடம் பொங்கலும் அதே இடத்தில் தான் விடுவோம். எத்தனை வருடம் ஆனாலும் பொங்கல் விடும் இடம் மாறாது. மழை நேரத்தில் காட்டுக்குள் இருந்து புடுங்கி நட்ட என் தக்காளி, கத்தரி செடி எல்லாம் காய்த்திருக்கும். அதையும் பரித்து படையலில் வைத்துக்கொள்வேன். சாமிக்கு என் படையல் அது.

அப்பா ஆரம்பித்து வைக்க, நான், அண்ணன், அக்கா மூவரும் ஆளுக்கொரு கரையில் பனை ஓலையயை வைத்து தீ மூட்டிக்கொண்டிருப்போம். பொங்கல் பொங்கி வந்ததும் அம்மா குலவை விட, சூரியன் எட்டி பார்ப்பதற்க்கும் சரியாக இருக்கும். எல்லோரும் கை கூப்பி வணங்கி விட்டு தீ மூட்டும் வேலையை தொடர்வோம். பொங்கல் ரெடியானதும், அப்பா பூஜை செய்து தீபாராதனை காட்டுவார்கள். நம்ம கண் முழுவதும் அந்த கரும்பு மேல தான் இருக்கும். எந்த இடத்தில் வெட்டினா பெரிய கணுவா வரும். பல்லுக்கு வேலை இல்லாம சாப்பிடலாம் என்று மூவருக்கும் போட்டி வரும். உடனே பொங்கலில் கை வைத்தால் அம்மாவிடம் இருந்து அடி தான் விழும். ஏனென்றால் முதலில் கவனிக்க படவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு கொடுத்தபின் தான் நாம் சாப்பிட வேண்டும். அது யார் சொல்லுங்க பார்ப்போம்....

அவர் தான். காக்கா. பொங்கல் கொஞ்சம், வாழை பழம் என்று எடுத்துக்கிட்டு மாடியேறி 'கா..கா..காக்காச்சி' அப்படின்னு கூப்பிடணும். எங்கிருந்தாவது ஒரு காக்கா வந்து விடுவார். வந்து மாடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் சந்தேகத்தில் நம்மை பார்ப்பார். நேத்து தான கிண்ணத்தோட எஸ்கேப் ஆகும் போது இவன் கல்ல விட்டு எறிந்தான். இப்போ வாழை இலையில் பழம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் கொடுத்து சாப்பிட சொல்கிறானே. என்ன மேட்டர்னு தெரியலையேன்னு யோசிப்பார். அப்புறம் கொஞ்சம் நம்பிக்கை வைத்து சாப்பிட்டு பார்த்துவிட்டு அவர் சொந்தங்களையும் கூப்பிட ஆரம்பிப்பார். எல்லோர் வீட்டிலும் இந்த பழக்கம் உண்டு. அன்று ஊரில் இருக்கும் எல்லோருக்குமே பொங்கல் தான்.

அப்புறமும் உடனே சாப்பிட முடியாது. அத்தைக்கு, மாமாவுக்கு என்று ஒரு பட்டியல் இருக்கும். சில பேர் கிருஸ்தவர்கள். நமக்கு கிருஸ்மசுக்கு கரெக்டா வந்து விடும். சில பேர் மாலையில் தான் பொங்கல் விடுவார்கள். அவர்கள் வழி அப்படி. அப்புறம் சாப்பிட்டு விட்டு, ஒரு கரும்பை கடிச்சிக்கிட்டே அத்தை வீட்டில் ஆஜராகி விடுவேன். 'என்னல! பொங்கல் விட்டாச்சா" " ஆமாம்! மாமா. நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல போல" "ஏல! ஒங்க அத்தய பத்தி தாம் தெரியும்ல. இவ என்னைக்கு சீக்கிரம் ஆரம்பிச்சா". அத்தைக்கு தெரியும் நான் அங்கே நான் எதற்கு முதலில் ஆஜர் என்று. எல்லா பொங்கலுக்கும் படம் பார்க்க 50 பைசா கொடுப்பது அத்தை தான். "என்னல படம் போட்டிருக்கிறான்". "சின்ன வீடு போட்டிருக்கிறான் மாமா. எம்ஜார் படம் விக்கிரமாதித்தனும் போட்டிருக்கிறான்". 'சின்ன வீடு' லேடிஸ் ஒன்லி படம் என்பதால், தலைவர் படம் தான் அந்த பொங்கலுக்கு. அடிச்சி புடிச்சி கவுண்டர்ல எறிகுதிச்சி டிக்கட் வாங்கி படம் பார்த்தா, ஒரு வருசத்துக்கு திருப்தியா இருக்கும். தலைவர் பாவாடைய கட்டிக்கிட்டு வாள் சண்டை போடுவார் பாருங்க. அது தாங்க பொங்கல் படம்.

இப்படியே பொங்கல் நாள் ஓடி விடும். அடுத்த நாள் பொங்கல் விளையாட்டு விழா. குழந்தை முதல் குமரி வரை. தாய்குலம், தந்தை குலம் எல்லா குலத்திற்க்கு அன்று விளையாட்டு உண்டு. முறுக்கு கடித்தல், பலுன் உடைத்தல், ஓட்ட பந்தையம் என்று ஒரு கரையில் போய் கொண்டிருக்கும். ஊசி கோர்த்தல், சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் இப்படி பெண்களுக்கும் விளையாட்டு உண்டு. அப்புறம் கயிறு இழுத்தல். ஸ்லோ சைக்கிள், பானை உடைத்தல் இன்னும் நிறைய. இந்த விளையாட்டு பற்றி தனி பதிவா பார்க்கலாம். கடைசில ரெண்டு பேரையாவது அடிச்சி வீட்டுல படுக்க வைக்கலன்னா நமக்கு தூக்கம் வராதே. அதுக்கு தான் கபடி இருக்குதே. பயலுவ தூக்கி வீச தான் செய்வானுவ. சில பெரிசுங்க கொலுத்து போய் களத்துல இறங்கி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடும் நெலையும் ஆகிருக்கு. நான் இன்று வரை கபடி பார்ப்பதோடு சரி. ஒடிச்சி வீசிருவானுங்க, பாவி பயலுவ.

அப்புறம் பரிசு கொடுக்கும் போது 'ஏல! எவம்ல பரிசு கொடுக்குறது. மானங்கெட்டவனுங்களா. கண்ட நாய்ங்கள தலைவர்னு சொல்றீங்களேல" அப்படின்னு அருவாள தூக்கி, மாலைக்கு அடிச்சிக்கிட்டு முடிச்சோம்னா தான் பொங்கல் விழா சிறப்பாக முடிந்ததாக ஒரு திருப்தி இருக்கும். போன வருசம் யாருமே அடிச்சிக்கல. இந்த தடவை என் நண்பனிடம் கேட்டால் தான் தெரியும். அடுத்த தடவை ஏதாவது நாமலாவது போய் செய்யணும். வாழ்க்கைனா ஒரு சுவாரசியம் இருக்கணும் இல்லையா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஒரு நாளுக்காக ரொம்பவே ஏங்கும் என் மனம். பணம் மட்டும் இல்லடா வாழ்க்கை. அதுக்கும் மேல ஒன்னு இருக்குன்னு உணர்த்துவது இந்த பொங்கல் விழா தான். கோபுரத்திலும் வெறுமை இருக்கும். குடிசையிலும் சந்தோசம் இருக்கும் என்பது இப்படி ஒரு பொங்கல் கொண்டாடி பார்த்தால் தெரியும். அந்த வகையில் நான் கிராமத்தானாக ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவன். இத்தனையையும் விட்டுப்புட்டு இந்த தடவை இங்கே கம்யூட்டரில் உட்கார்ந்துக்கிட்டு உங்ககிட்ட புராணம் பாடவேண்டியதா போச்சு. இது தான் நான் மிஸ் பண்ணும் கடைசி பொங்கலாக இருக்கணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அடுத்த பொங்கலுக்கு லைவ் கவரேஜ் பண்ணிடலாம்டே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து நண்பர்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Saturday, January 07, 2006

கிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா)

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சுடே! சரி இன்னொரு ஊர் கதைய சொல்லிட்டு போலாம்னு வந்தேன். எங்க ஊரு பீட்டர் அண்ணனும் நாங்களும் பண்ணின கூத்தை கிராமத்து மணம்-1 ல சொல்ல ஆரம்பிச்சி அப்படியே கெடப்புல போட்டுட்டேன். சரி இன்னைக்கு ஒன்ன சொல்லலாம்னு ஆரம்பிச்சாச்சு.

பீட்டர் அண்ணன் கூட சுத்துறதுல இன்னொரு விசயம் என்னனா, தீனி. போட்டுக்கிட்டே இருப்பான். எளநீ வேணுமால அப்படின்னு தென்ன மரத்துல ஏறி கொல கொலையா வெட்டி போட்டிக்கிட்டே இருப்பான். எல்லாம் நம்ம ஊரு காரங்க தோட்டம் தான். நம்ம தோட்டம்னு நெனைச்சுக்காதீங்க. ஒரு நாள் அப்படி தான் பனை நுங்கு சாப்பிடலாம் என்று ஒரு அருவாளையும் எடுத்துக்கிட்டு தேரிக்கு கெளம்பினோம். தேரின்னா பனங்காடு. வெறும் பனை மரம் மட்டும் தான் ஏக்கர் கணக்கில் பரவி கிடக்கும். ஊர்ல இத தேரின்னு சொல்லுவோம்.

பனை ஏறுவதற்க்கு ரொம்ப திறமை வேண்டும். பாதி வழியில முடியலன்னா குதிக்க முடியாது. ஓய்வு எடுக்கவும் கிளை கெடையாது. மேலே கொண்டைக்கு போனவுடன் நெரே போய் ஒக்கார முடியாது. கிழிச்சுரும். மட்டைல இருக்குற கருக்க எல்லாம் அருவாளால வெட்டிவிட்டு பன மரத்துல ஒக்காரததுக்குல்ல போதும் போதும்னு ஆயிடும். கைய எசகுபிசகா விட்டோம்னா நேரே சொர்க்கலோகம் தான். எங்க பசங்களில் எல்லோருக்குமே பனை ஏற சொல்லி கொடுத்தான். அதுல தேறாதது நான் தான் :-). பாதி பனை எறிவிட்டு முன்னேறவும் முடியமாம, இறங்கவும் தெரியாம நெஞ்செல்லாம் காயத்தொரு நான் சறுக்கி விழுத்ததோடு சரி, என் பனை ஏறும் முயற்சி. அப்புறம் சரிந்து கிடக்கும் பனைல ஏறுவதோடு சரி.

சரி கதைக்கு போவோம். தேரில ஒரு நல்ல பனைய தேர்ந்தெடுத்து பீட்டர் அண்ணன் ஏற ஆரம்பித்தான். நாங்கள் தூர நின்று குத்தகைகாரன் வரானானு பாத்துக்கிட்டோம். மாட்டிக்காம திருடனும் இல்லையா. பெரிய கொலையா (குலையா..பயந்துராதீங்க) மூனு வெட்டி போட்டான். ஊரே ஒக்காந்து திங்கலாம். நாங்க ஒரு அஞ்சு பேரு இருந்தோம். அண்ணன் கீழே இறங்கி எல்லோருக்கும் சீவி கொடுக்க, திங்க ஆரம்பிச்சோம்.

திடிர்னு "ஏல! பாவி மக்கா" அப்படின்னு சத்தம் வரவே, எட்டி பாத்தா தூரத்துல குத்தகை காரன். 'நிம்மதியா திங்க விடமாட்டானுங்களே" அப்படின்னு திட்டிக்கிட்டே எல்லோரும் ஓட ஆரம்பிச்சோம். சினிமாவுல விசிலடிச்சு திருடன எச்சரிக்கை பண்ணி வெரட்டிட்டு பின்னாயே போலிசு தொறத்துமே, அப்படியே அண்ணாச்சியும் ஒரு சத்தம் கொடுத்ததால் நாங்களும் ஓட ஆரம்பித்தோம். நாங்க எல்லாம் அப்போ ஆறாவது படிச்சிக்கிட்டு இருந்தோம். பீட்டர் அண்ணன் தான் எட்டாங்கிளாஸ். எல்லோருக்கும் பெரியவன். அவன் முன்னாடி ஓட, நாங்க எல்லாம் அவனை தொடர்ந்து ஓட, (குத்தகை) அண்ணாச்சி வெரட்ட, ஓட்ட பந்தயம் தான் அன்னைக்கு. பின்னாடி திரும்பி பாத்த அண்ணன், அப்படியே நின்னுட்டான். என்னடா இது, எல்லோரும் நல்லா தானே ஓடரோம். இவன் எதுக்கு இப்படி நிபந்தனையற்ற சரண்டர் ஆகிறான் என்று நாங்களும் நின்னோம்.

பாத்தா, அண்ணாச்சி மடி நெறைய பெரிய பெரிய கருங்கல். வேட்டில மடிச்சு வச்சுருக்காவ. இன்னும் ரெண்டு அடி ஓடிருந்தோம்னா மண்டைய பொளந்திருப்பாரு. நாங்க பனைய மேஞ்சிக்கிட்டி இருப்பதை தூரத்துல பார்த்தவுடனேயே கல்லு பொறுக்கி வச்சிட்டு தான் எங்களுக்கு சத்தம் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பீட்டர் அண்ணன் பின்னடி போய் ஒளிஞ்சிக்கிட்டோம். இப்படி பட்ட சமயங்களில் அண்ணன் எப்பவுமே பின் வாங்கியதும் இல்லை, எங்களை மாட்டிவிட்டுட்டு ஓடினதும் இல்லை. தலைவன் என்றால் அவன் தான். அதை நம்பி தான வீட்டுல அவன் பின்னாடி விடுவாங்க.

"பாவி மக்கா! இப்படி கொல கொலையா வெட்டி சாச்சுப்புட்டியலேல. யாரு மவன்ல நீங்க". அமைதியா நின்னுக்கிட்டு இருந்தோம். அப்பா பேர சொல்றதும், வீட்டுக்கு அட்ரஸ் சொல்லி அனுப்புவதும் ஒன்னு தான். ஊர்ல போய் இன்னாரு பையன்னு சொன்னா ஊரே கைய காட்டும். அதுகாக அப்பா பேர தப்பாவா சொல்ல முடியும். "என்னல! புடிச்சு வச்ச கொழுக்கட்ட மாத்தி நிக்கீங்க. பேசுங்கல". அப்புறம் பீட்டர் அண்ணன் தான் பேச்சு வார்த்தை நடத்தினான் "இத பாருங்க அண்ணாச்சி! பயலுவ ஆசபட்டானுங்க. அதான் வெட்டினோம். இந்த ஒரு வாட்டி (நெறைய வாட்டி) விட்டுடுங்க. இனி இந்த பக்கம் வரமாட்டோம்". எங்க கிட்ட பிடுங்குவதற்ககு ஒன்னும் இருக்காது. மேல் சட்டை கூட இருக்காது. கைல ஒரு கவட்டை, கொஞ்சம் கல்லு. இது தான் இருக்கும். அப்புறம் அருவாள (அது ஒன்னு தான எங்க கிட்ட இருக்குறதுல உருப்படி) புடிங்கிகிட்டு "ஓடுங்கல. இனி இந்த பக்கம் வரப்புடாது" என்று எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க அண்ணாச்சி.

---

என்னடா கிராமத்துல இப்படி திருட்டு எல்லாம் சாதாரணம் தானா என்று நெனைச்சிராதீங்க. உள்ளூர் காரன் பண்ணுர வரைக்கும் தான் அது ஜாலி. அசலுரு கார பய பண்ணினா அவன் காலி. ஒரு பிடி மண் எடுத்தாலும் வெட்டு குத்தாயிடும்.

அப்படி தான். ஊரில் சுடலைமாடன் சாமி கோவில் கொடையோட, ராத்திரி ஊர் சனங்க எல்லாம் கோவில்ல வில்லுப்பாட்டு பார்த்துக்கிட்டு இருக்கு. அசலூருகார பய ஊருக்குள்ள சுத்துறதா தகவல் வந்தது. எல்லோரும் டார்ச் லைட் ஒன்னையும், ஒரு கம்பையும் எடுத்துக்கிட்டு தெரு தெருவா (மொத்தமே 3 தெரு தான), தோட்டம் எல்லா இடத்திலும் தேடினோம். கை வேற நம நமன்னு யாரையாவது அடிக்கனும் போல எல்லொருக்கும் இருந்தது. பய தப்பிச்சிட்டான்.

மூதேவி. அடுத்த வாரமே ஏதோ தோட்டத்துல ஏறி குதிக்க, மாட்டிக்கிட்டு. புடிச்சி ஊர்ல இருக்குற அம்மன் கோவில் வேப்பமரத்துல கட்டி போட்டுட்டு, நாங்க எல்லாம் வீடு வீடா போய் "சித்தி! கள்ளன் மாட்டிருக்கான். பெரியப்பா! கள்ளன் மாட்டிருக்கான். ஊர் வேப்பமரத்துல கட்டி போட்டிருக்கு" அப்படின்னு சொல்லிட்டு வந்தோம். எல்லோரும் வந்தது பூஜை ஆரம்பித்தது. கேட்ட கேள்விக்கு எடக்கு முடக்கா பதில் வர, பெரிசுங்க எல்லாம் அடி பொளக்க ஆரம்பிச்சது. ஊர்மக்கள் எல்லாம் வரிசையா நின்னு டோக்கன் போட்டு அடிச்சது அவன தான். நேத்து பொறந்தது வரை வந்து ரெண்டு அப்பு அப்பியது. "ஐயோ! என்ன போலிசுல புடிச்சு கொடுத்துருங்க" அப்படின்னு அடி தாங்காம அவன் அலற, அப்புறம் அவன அவுத்து விட்டு 'இந்த பக்கமே வந்துராதல" அப்படின்னு எச்சரிக்கை பண்ணி வெரட்டி விட்டோம். வாங்குன அடிக்கு அவன் திரும்பி வருவான்னு நெனைக்கறீங்க?

கிராமத்துல எல்லாம் திருட்டு பயம் எல்லாம் கிடையாது. 50,000 ரூவா வண்டிய வெளிய விட்டுட்டு 10 நாள் ஊருக்கு போய்ட்டு வந்தா வண்டி அப்படியே நிற்க்கும். ஊருக்குள்ள வருகிற புது மனிதர்கள் ஒவ்வொருத்தாரும் தெரியும். போலிசு எல்லாம் ஊருக்கும் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு தனி உலகம்.

சென்னையில் நிலமை தலைகீழ். அப்படி தான், பக்கத்து வீட்டுகாரர் தன்னோட வண்டிய ஒரு யானைய கட்டுற சங்கிலியால டெய்லி ஒரு தூண்ல கட்டி போட்டுட்டு, தொங்கி பார்த்து கொள்வார். ஒரு நாள் ராத்திரி லாரில வந்து தூணோட உடைச்சு வண்டிய தூக்கிட்டு போய்டானுங்க. சிட்டில நெலம இப்படி இருக்கு.

- அன்புடன்
கிராமத்தான்.

Friday, December 23, 2005

ஓணானும் ராமாயணமும்


பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம்.

ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்!

ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. ஓடி ஓடி ஓய்ச்சி போய்ட்டோம் சாமி. அதான் ஒங்கள பாத்து ஒரு நியாயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.

ராமர்: அடடா! என்ன கொடுமை இது! பூலோகத்தில் மானிடர்கள் இப்படி எல்லாமா கொடுமை செய்கிறார்கள்.

ஓணான்: மரத்துல நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாலும் தொல்ல பண்ணுறானுங்க! காலார ஒரு வாக்கிங் போனாலும் தொல்ல பண்ணுறானுங்க! நிம்மதியா பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்தாலும், வெவஸ்தை இல்லாம அப்பவும் தொல்ல பண்ணுறானுங்க! வெறுத்துப்போயி தான் ஒங்க கிட்ட வந்தேன் சாமி!

ராமர்: தொல்லை! தொல்லை! என்கிறாயே! அப்படி என்ன பண்ணுகிறார்கள்

ஓணான்: வெளக்க வேற செய்யணுமா! சாமி! நேத்து அப்படி தான், பக்கத்து காட்டுல என் மச்சினன பாத்துட்டு வரலாம்னு மரத்தவுட்டு இறங்கினேன். பக்கத்து வீட்டு கொரங்கு நா எறங்குறத பாத்துட்டு. அவ்வளவு தான் சாமி! எல்லா பயலுவலும் சேர்ந்து்க்கிட்டு ஊர்ல கெடக்குற மொத்த கல்லையும் அள்ளி அடிக்கறானுவ. அவ்வளவு கல்லையும் வச்சா, ஒரு வீடே கட்டலாம் சாமி! உயிர கைல புடிச்சிக்கிட்டு ஓடி போயி மரத்துல ஏறுனா, சுத்தி நின்னு அடிக்கிறானுவ.நல்ல வேள சாமி, ஒரு பயலுக்கும் குறி பார்த்து அடிக்க தெரியல. இல்லன்னா, எங்க இனத்தையே காலி பண்ணியிருப்பானுங்க.

ராமர்: அடப் பாவமே!

ஓணான்: இருங்க! இன்னும் முடியலை. அதுல ஒரு எரும அடிச்ச கல்லு எம்மேல பட்டு நான் கீழே விழ, மறுபடியும் அந்த காட்டு கும்பல் என்ன தொரத்த ஆரம்பிச்சது. பக்கத்துல இருக்கற பன மரத்துல ஏறிட்டேன்.ஒரு பயலுவலுக்கும் பன ஏற தெரியாது, நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, பெரிய பெரிய கல்ல எடுத்து பன மரத்து தூர்ல டங்கு டங்குன்னு அடிக்கிறானுவ. மரமே ஆடி போச்சு. நான் பயத்துல பல்ல கடிச்சிக்கிட்டு அவ்வளவு உச்சில இருந்து சர்க்கஸ் காரன் மாதிரி குதிச்சேன். தரைல வந்து விழுந்து சுதாரிக்கறதுக்குள்ள, ஒருத்தன் மண்டைல போட்டுட்டான்.

ராமர்: அப்புறம் என்னவாயிற்று?

ஓணான்: அப்புறம் சாமி! எல்லோரும் ஏதோ புலிய வேட்டையாடி புடிச்ச மாதிரி ஆடிக்கிட்டானுங்க. அப்புறம் தான் கொடுமையே ஆரம்பிச்சுது சாமி! அல்கொய்தா கைல மாட்டுன அமெரிக்க காரன் மாதிரி தான் என்னோட நெலமை. என்ன இழுத்துக்கிட்டு ஊருக்குள்ள போனானுங்க. ஒரு எரும அவனோட தாத்தா பொடி தடைல இருந்து மூக்கு பொடி எடுத்து வந்தது.

ராமர்: மூக்கு பொடியா அது என்ன?

ஓணான்: ஓ அதுவா! அது இந்த மனுச பயலுவ சர் சர்னு மூக்குக்குள்ள ஒரு பொடிய போட்டு உறிஞ்சறானுங்க. கருமம்! சும்மா கிர்றுண்ணு மண்டைல ஏறுது. மனுச பய மூக்கு தாங்கும். இந்த குட்டி மூக்கு தாங்குமா. பொடிய எடுத்துட்டு வந்து என்னோட மூக்குல ஒரு எரும போட, எனக்கு கிறு கிறுத்து போச்சி. நான் சும்மா ராட்டினம் மாதிரி சுத்த, மனசாட்சியே இல்லாம, எல்லா கொரங்கும் சிரிக்குதுங்க. இப்படி பல கொடுமைகள் சாமி! அப்புறம் விட்டுட்டானுவ. ரெண்டு நாளா எந்திரிக்க முடியல.

ராமர்: உன்னை மட்டும் தான் இப்படி கொடுமை செய்கிறார்களா?. இல்லை எல்லோரையுமா?

ஓணான்: ஓணான் என்று பேப்பர்ல எழுதினா, அந்த பேப்பரையும் கல்ல தூக்கி எறிவானுங்க, இவனுங்க. போன வாரம், என்னோட மாச்சான் அப்படித்தான் சாமி. ரொம்ப அப்பாவி சாமி! அவனோட சைட்ட பாக்க கெளம்பி இருக்கிறான். பாவி பயலுவ! சத்தமே இல்லாம அவன் பின்னாடியே போய் கழுத்துல சுருக்க மாட்டிட்டானுவ. தெரு தெருவா இழுத்துட்டு போயி, ஒடம்பெல்லாம் ஒரே காயம். இப்போ தான் தேறிருக்கான்.

ராமர்: சரி! அதற்கு என்னை எதற்க்கு பார்க்க வந்தாய்?. உனக்கு வேறு கடவுளே கிடைக்க வில்லையா?.

ஓணான்: பொறுங்க சாமி! மேட்டர் இல்லாமலா ஒங்கல பார்க்க வருவேன். இவ்வளவு கொடுமைக்கும் இந்த பயலுவ ஒரு நியாயம் வேற வச்சிருக்கானுவ. என்னன்னு கேக்கறீயலா.
ஒங்க பொண்டாட்டிய எவனோ தூக்கிட்டு போய்ட்டனாம, இலங்கைல இருந்து. அப்போ நீங்க வாணர படைகளோட சிலோனுக்கு பாலம் போட்டீங்கலாம். அந்த நேரத்தில், தாகமா இருந்த ஒங்களுக்கு அணில் இளநீர் கொடுத்ததாம். ஒடனே! நீங்க அத பாசமா எடுத்து முதுகுல ஒங்க விரல வச்சி தடவி கொடுத்தீங்களாம். அது அதோட முதுகுல மூனு கோடாக விழுந்ததாம்.

ராமர்: கதை நன்றாக தானே இருக்கிறது! அதற்கு என்ன ஓணானே?

ஓணான்: அதுவரைக்கும் கத நல்லாத்தான் இருக்கு. அப்புறம் தான் ஏதோ ஒரு மூதேவி எங்க மேல இருக்கற எரிச்சல்ல, ஒரு கதைய சேர்த்துடுச்சி. அணில் இளநீர் கொடுத்திச்சா. நாங்கல்லாம் ஒன் அடிச்சி குடுத்தோமாம். :-( இப்படி ஒரு கதைய கேட்டு தான் இந்த பயலுவ "நம்ம சாமிக்கே ஒன் அடிச்சி கொடுத்திட்டுடா" ன்னு எங்கள ஓட ஓட வெறட்டுதானுவ. ஏன்! சாமி ! அப்படி நாங்க எப்போ செஞ்சோம். எங்க பாட்டுக்கு செவனேன்னு போய்ட்டு இருக்கோம்.

ராமர்: கேட்க வருத்தமாக தான் இருக்கிறது. வால்மீகி, கம்பரும் எழுதிய ராமாயணத்தில் இவை எல்லாம் இல்லையே. சரி! நான் என்ன செய்ய வேண்டும்.

ஓணான்: அப்படியே எங்க முதுகுலயும் மூனு கோடு போட்டு விட்டுடுங்க. நாங்களும் பொழச்சுப்போம்லா.

ராமர்: அப்படியெல்லாம் உடனே செய்ய முடியாது ஓணானே. அது இயற்கைக்கு புறம்பானது. பரிணாம வளர்ச்சியினால், உன் முதுகிலும் கோடு வரும். அப்போது நீ நிம்மதியாக இருக்கலாம்.

ஓணான்: எப்போ சாமி அது நடக்கும்!

ராமர்: இன்னும் சில கோடி வருடங்கள் ஆகலாம்.

ஓணான்: அட போங்க சாமி! இந்த வெளாட்டு தான வேணாங்கிறது. பக்கத்து வீட்டு டி.வில ஒரு நாள் பார்த்தேன். அமெரிக்காவுல ஓணான எடுத்து கொஞ்சல்லாம் செய்றாங்க. செல்ல பிராணியா வேற வளக்கறாங்கலாமே. அப்படியே சிலோனுக்கு போட்ட பாலம் மாதிரி, சின்னதா அமெரிக்காவுக்கும் ஒரு பாலம் போட்டு கொடுத்திடுங்க. அகதியா ஓடி போயாவது பொழச்சுக்கறோம்.

ராமர்: நன்றாய் சொன்னாய் போ! ஈரானில் இருந்து குழாய் போட்டலே, அமெரிக்காகாரன் தீவிரவாதம் என்கிறான். என்னை, அமெரிக்கவுக்கே பாலம் கட்ட சொல்கிறாய். அப்புறம் மூன்றாம் உலகப்போர் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகி விடும். ஆள விடப்பா!

எங்கிகுந்தோ பறந்து வந்த கல், ஓணானின் மண்டையை தாக்குகிறது. "வந்துட்டாய்யா அந்த சிவா!" ஓட ஆரம்பிக்கிறது ஓணான்.

Saturday, December 17, 2005

வேலை கிடைச்சிடுச்சி

'பற்களின் வெண்மைக்கு பூபால் பல்பொடி
பூப்போன்ற பற்களுக்கு பூபால் பல்பொடி
ஒய்யாங்குடி, பாட்டக்கரை, சாத்தான்குளத்தில்
விற்பனையில் முதலிடம் பூபால் பல்பொடி'


இப்படி எங்க ஊரு தேட்டருல அடிக்கடி ஒரு விளம்பரம் ஓடும். ஒரு நாள் அப்படி தான் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா 'ஏல! பூபால் கம்பெனில ஒனக்கு வேல கெடச்சிருக்கு. நாளைல இருந்து போவணும்" அப்படிங்கறாங்க. அடடா! நம்ம திரைல பாத்த கம்பெனில நமக்கு வேலையா. ஒரே சந்தோசம். தூக்கமே வரல.

அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டு, லீவுல வீட்ல இருந்தேன் :-). வெயில்ல புள்ள காடு காடா சுத்தி கருத்து போயிர கூடாதுன்னு இப்படி ஒரு வேலை ஏற்பாடு. இங்கே கருத்து போறதுக்கு ஒன்னும் இல்லன்னாலும், நானும் காக்காவும் ஒரே ஜாதி என்றாலும், ஒரு பழமொழி சொல்லுவாங்கல்லா. அதான்.

கம்பனிக்கு போறதுக்கு முன்னாடி பல்பொடி பற்றி ஒரு ப்ளாஷ் பேக். என்னோட சின்ன வயசுல சாம்பல் (உமிக்கரி) தான் பல்பொடி. காலைல எந்திருச்சோம்னா, வீட்டு பின்னாடி ஒரு டால்டா டின்ல உமிக்கரி தொங்கிகிட்டு இருக்கும். ஒரு கை நிறைய அப்படியே அள்ளி வாயில போட்டு சவச்சி வாய கொப்பளிச்சா, பல் வெளக்கின மாதிரி. பல்பொடி முடிஞ்சி போச்சின்னா, டின்ன தூக்கிக்கிட்டு பக்கத்து ஊரு மணிநகருல போய் யாரு வீட்லயாவது 'யக்கா! பல்பொடி இருக்குமா' ன்னு கேட்டா, "அடுப்புக்குள்ள கெடக்கு. அள்ளிட்டு போப்பு" அப்படின்னு நெல் அவிக்கும் பெரிய அடுப்ப காட்டுவாவ. மணிநகர்ல எல்லோருக்கும் நெல் அவிக்கிற தொழில். "பாத்துப்பு! தணலா கெடக்கு. அப்படியே அள்ளி வாயில போட்டுறாத. வாயி வெந்துரும்". அடுப்பு அண்டா சைசுக்கு இருக்கும். ஒரு நீளமான கரண்டிய வச்சி டின்ன நெறப்பிக்கிட்டு வந்து சேருவோம்.

நான் கண்ணால பல்பொடிய பார்த்தது, மூனாங்கிளாஸ் படிக்கும் போது தான். எம்.ஜி.ஆர் படம் போட்டு பல்பொடி ஒன்னு பள்ளிக் கூடத்துல ஓசில கொடுப்பாவ. செம டேஸ்ட். அதும் வீட்டுக்கு வந்து சேர்வதற்க்குள் காலியா போய்விடும். மொத்த பாக்கெட்டையும் வர வர தின்னே தித்துடுறது.

இப்படி பட்ட நிலமைல, பல்பொடி கம்பெனில வேலைன்னா சும்மாவா. ஆயிரம் கனவுகளோடு பல்பொடி கம்பெனிக்கு எங்க ஊரு பசங்க ஒரு அஞ்சு பேரு கெளம்பினோம். மொதளாளி எல்லோரையும் வரவேற்று வேலை நெளிவு சுழிவுகளை பற்றி சொல்லி கொடுத்தார். எனக்கு கொடுக்கப் பட்ட முதல் வேலை "ஏல! அந்த ரூமுக்குள்ள கெடக்கற பல்பொடிய இந்த மெஷின்ல அள்ளி வந்து கொட்டுல". நானும் அண்ணாச்சி காட்டுன ரூமுக்குள்ள போய் பாத்துட்டு "யண்ணே! அங்க பல்பொடி ஏதும் இல்லண்ணே. உமிக்கரி தான் கெடக்கு" என்றேன். "அதாம்ல பல்பொடி. கொண்டு வந்து கொட்டுல" என்றார் சூப்பர்வைசர் அண்ணன். அடப்பாவிங்களா! இங்கேயும் அதானா. பல்பொடி திங்கலாம்னு வந்த நாக்கு செத்து போச்சி.

என்னோட வேலை. பல்பொடி :-) ய கலக்குற மெஷுன்ல கொண்டு வந்து கொட்டணும். மெஷின் பல்பொடியோட ரோஸ் கலர் சாயம், கொஞ்சம் சாக்கரீன் (அப்போ தான சுவையா வரும்) கலக்கும். அதை அள்ளி வெயில்ல காய வைக்கணும். இப்போ சுவையான, மணமான பூபால் பல்பொடி தயார். அப்புறம் அதை அள்ளி, ஒரு பொடி டப்பா சைசுல அளந்து சின்ன சின்ன பாக்கெட்ல அடைச்சி ஒட்டணும். அப்புறம் சின்ன பாக்கெட் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பெரிய பண்டலா மாற்றுவோம். வாரம் அஞ்சு ரூவா சம்பளம். ரெண்டு வாரம் வேலைக்கு போனேன். மொத்தம் பத்து ரூவா கெடைச்சது. அப்படியே அம்மா கைல கொடுத்தாச்சி. மொத சம்பளம் இல்லையா.


அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன்.

Sunday, December 11, 2005

கல்யாணமாம் கல்யாணம் -3 (கடைசி)

(சும்மா ஆரம்பிச்சி, இந்த பதிவு இழு இழுன்னு இழுத்துக்கிட்டு போயிடுச்சி. மன்னிக்கனும். இந்த பதிவுல முடிச்சிடறேன்.) . பாகம்-1 பாகம்-2

அடுத்த நாள். கல்யாண நாள். காலையிலேயே பொண்ணுவீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தோம். அதே ஜீப். மாப்பிள்ளை காரில் ஏறப்போன அண்ணன் முருகேசை "ஏல! எங்கள மாத்திரம் ஆத்துல தள்ளி விட்டுட்டு நீ சொகுசா போலாம்ணு பாக்றியா! ஜீப்ல எங்க கூட வால" அப்படின்னு துரை மாமா, மாப்பிள்ளையையும் எங்க கூட ஏத்திவிட வண்டி கிளம்பியது. போக போக வழியில் இருக்கும் சாமிக்கெல்லாம் தேங்காய் உடைத்துக் கொண்டே வண்டி கிளம்பியது.


பொண்ணு வீட்ல எங்களுக்கெல்லாம் வேலை இருக்காது. நாங்க சும்மா தாமிரபரணி ஆத்துல போய் காக்கா நீச்சல் அடிக்கிறது, மீன் புடிக்கிறது போன்ற வேலைகளை பார்த்திக் கொண்டிருந்தோம். இல்லன்னா வான வெடி விடுவாறே அந்த தாத்தாக்கிட்ட செட்டில் ஆகிடுவோம். கைல வச்சி ராக்கெட்ட என்னம்மா வுடுவாரு. ஒரு கயிறுல தணல வச்சி, கைல வெடிய பத்தவச்சி வெடிக்க போகுதுன்னா, தூக்கி மேலே வீசுவாரே, செம த்ரில்லிங் அது.

அப்புறம் திடிர்னு கல்யாண் வீட்ல ஒரே பரபரப்பு. மாப்பிள்ளை மயங்கி விழுந்துட்டாராம். அடப்பாவிங்களா இது என்ன உல்டாவா இருக்குன்னு போய் பாத்தா, எல்லோரும் மாப்பிள்ளைய உக்காரவச்சி விசிறிக்கிட்டு இருந்தாவ. மாலை கணம் தாங்க முடியாம மாப்பிள்ளை மயங்கி விழுந்திட்டாருன்னு ஒரே கேலி. அப்புறம் தாலி கட்ட ரெடியானதும், பொண்ண அழைச்சிட்டு வந்தாங்க. அதிக மேக்கப் இல்லாம பொண்ணு வந்தது. ஒரு கல்யாணத்துல அப்படித்தான், நிறைய மேக்கப் போட்டு "ஏ! பொண்ண மாத்திட்டாங்கடோ" அப்படின்னு மாப்பிளளையோட அம்மா ஏக ரகளை பண்ணிட்டாங்க. அப்புறம் அப்பின பாண்ட்ஸ் பவுடரை எல்லாம் எடுத்தப்புறம் தான் அமைதி ஆனாங்க.


பொண்ணு குனிஞ்ச தல நிமிராம வருது (சொல்லி வச்சி கூட்டி வருவாங்களோ?). ( ஊருக்கு வந்தப்புறம் தான் பாக்கணும், அக்கா போடற சவுண்ட்ல குடிகாரன் போதை கூட எறங்கிடும்) அப்புறம் என்ன, ஆயிரம் வாலா வெடி வெடிக்க, கெட்டி மேளம் ஒலிக்க அண்ணன் முருகேசு தாலி கட்டினார். சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாங்க எல்லோரும் ஊர் கெளம்பினோம்.

கடைசியா ஒன்னு இருக்கே. மாலையில் மாப்பிள்ளை வரவேற்பு. மாப்பிள்ளை வாராரா அப்படின்னு ஊர் எல்லையில இருந்து பார்த்துக்கிட்டே இருந்தோம். எதுக்கு தெரியுமா?. பாட்டு போடத்தான். தூரத்தில் வண்டி தெரிந்ததும், ஓடி வந்து செட் கார அண்ணன் கிட்ட வந்து சொன்னோம்னா, டக்குன்னு பாட்டு ஒன்ன தட்டி விடுவாரு. "மணமகளே! மருமகளே! வா..வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா..வா...குணம் இருக்கும் குலமகளே வா..வா". இந்த பாட்டு போட்டாலே ஊர் சனம் எல்லாம் உசாராயிடும். பொண்ணு-மாப்பிள்ளை வருதுன்னு. கல்யாணத்துக்கு போக முடியாத எல்லாரும் ஓடி போய் சாலை ஓரத்தில் நின்னுக்கிடுவாங்க. அந்த மக்கள் முகத்தை பார்க்கணுமே, பொண்ணு எப்படி இருக்குன்னு பார்க்க அப்படி ஒரு ஆவலோடு நிற்ப்பார்கள். (பார்த்தவுடன் வரும் கமெட்ட போட ஒரு தனி பதிவே போடலாம். "ஏலா! பொண்ணு கொஞ்சம் ஒயரம் கம்மியா தான் இருக்கு" " முருகேசு கலருக்கு கொஞ்சம் கம்மி தான்" இப்படி நெறைய). அப்புறம் வரவேற்பு. நாங்க பரிமாறுவதில் பிசியாகி விடுவோம்.

ஒரே ஒரு கவலை மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். "நாளைக்கு ஸ்கூலுக்கு போவணுமே"

Sunday, November 27, 2005

கல்யாணமாம் கல்யாணம் -2

இத படிச்சிட்டு வாங்க - பாகம்-1

கல்யாண நாளும் வந்தது. கல்யாண நாளுக்கு முந்தின நாளே ஊர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. மாப்பிள்ளை வீட்டில் பந்தல் போட்டவுடனேயே, எங்களை போன்ற வாண்டுகள் வெளையாட்டு இடத்தை அங்கே மாற்றி கொண்டோம். "ஏல! ஸ்பீக்கர் செட் வந்துட்டுடா' கத்திக்கொண்டே செந்தில் ஒடி வந்தான். அதற்க்காக தானே காலையில் இருந்தே காத்து கொண்டிருந்தோம். எதற்க்கு என்று கேட்கறிங்களா? எல்லாம் அந்த பொட்டி சாவிக்காக தான். அப்போல்லாம் LP ரெக்காட்டு, பெரிசா வால்வு வச்ச ஆம்ளிபயர் தான். ஒரு பெரிய பொட்டில எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு செட்டு கார அண்ணன் வருவாவ. சில நேரம் சாப்பிட போகும் போது அந்த பொட்டி சாவி நம்ம கைல கெடைக்கும். நம்ம இஷ்டத்துக்கு பாட்டு போடலாம்லா. அதுக்கு தான், அண்ணனுக்கு எல்லா சேவையும் செஞ்சிக்கிட்டு இருப்போம்.

கொய்யா மரத்துல ஏறி குழாய் ஸ்பீக்கர் கட்டுறது, ஊர்ல ட்யூப் லைட் போட குழி தோணறது, இப்படி சகல வேலையும் செஞ்சி கொடுப்போம். அப்போத்தான நம்ம கைக்கு சாவி வரும். சாப்பிட போவும் போது எந்த எந்த ரெக்கார்டு எந்த நம்பர்ல ஓட்டணும்னு வெவரம் எல்லாம் சொல்லிருவாவ. அப்புறம் என்னா...விவித்பாரதியே நம்ம கைல கெடைச்ச மாதிரி தான். அப்போல்லாம் ரேடியோவ விட்டா பாட்டு கேக்க வேற நாதி கெடையாது. சிலோன் ரேடியோல தான் பாட்டு. எங்க ஊர்லருந்து திருச்சி ரேடியாவ புடிச்சா, ரெயில் சத்தம் தான் கேட்கும்..அப்போ அப்போ பாட்டு எட்டி பாக்கும். இல்லன்னா, பக்கத்து ஊர்ல ஏதாவது விசேசம்னா, காத்து நம்ம ஊருக்கு நேரே காத்து அடிச்சா, பாட்டு நல்லா கேக்கும். எதிர்காத்து அடிச்சிச்சுன்னா, பாட்டையும் சேர்த்து தள்ளிக்கிட்டு போய்டும். அப்படி பாட்டு கேக்கறது கூட ஒரு சொகம் தான்.

இந்த மாதிரி சமயம் மட்டுமே தேர்ந்து எடுத்து பாட்டு போடலாம். அப்புறம் என்ன! நேயர் விருப்பம் தான். பாரதிராஜா 'என் இனிய கிராமத்து மக்களே" அப்படின்னு ஆரம்பித்து "முதல் மரியாதை"ல இருந்து ஒவ்வொரு பாட்டா போட்டுக்கிட்டு இருப்பாரு. ஓட்ட ரெக்கார்டு மாட்டிக்கிட்டா தட்டிவிடறது, ஸ்பீடு மாத்தி பாட்டு போடறது இப்படியே நல்லா பொழுது போவும். "ஏல! அந்த விதி கதை வசனம் இருந்தா போடுல" அப்படின்னு அத்தை கேட்டா, " அந்த ரெக்கார்டு போட்டு போட்டு தேஞ்சி போச்சாம்" சொல்லி தப்பித்துக்கொள்வோம் ( யப்பா! அந்த ரெக்கார்டு ஒரு காலத்துல எப்படி ஓடிச்சி தெரியுமா)

சாயங்காலம் ஆனவுடன் ஊர் ஜனங்கள் ஒவ்வொன்னா வர ஆரம்பித்தது. பந்தக்கால் நட்டறது, தாய்மாமன் சடங்கு எல்லாம் அன்று தான். தாய்மாமன் என்று இருந்தால், அங்கே பகை இருக்க வேண்டும் என்பது கிராமத்தில் எழுதப்படாத விதி. அப்போ தான ஊர்ல மத்த பயலுவலுக்கு இவங்க சண்டைய பாத்து பொழுது போவும். அப்புறம் ஊர் பெரிசுங்க எல்லாம் போய் "ஏ! உன் தங்கச்சி பையன் தானப்பா! நீ வராம இருந்த எப்படி..வாடே" அப்படின்னு தள்ளிக்கிட்டு வரும். அப்புறம் ஆலந்தலை (ஆல்+அத்தி+இலை) மாப்பிளைக்கு சுத்தி போடுற கதை ஒன்னு நடக்கும். நாங்களும் வரிசையில் பெரிய ஆள் மாதிரி நின்றுக்கிட்டோம். துரை மாமா "ஏல! இது சொக்காரனுங்க மட்டும் தான் செய்யணும். பொடிசுங்க அந்தால போங்கல" என்று எங்களை பத்தி விட, எங்க செட் குமாரு " போங்க சித்தப்பா! ஓந்தான் அடிக்கிறதுல இருந்து பன மரத்துல ஏறி பயினி திருடறது வர நாங்களும் மாப்ளையும் ப்ரண்டு. தெரியுமா! நீங்க போங்க சித்தப்பா" அப்படின்னு மாப்ளைக்கு எங்க ஜன்ம பந்ததை சொல்லி வைத்தான்.

அப்புறம் பந்தி ஆரம்பிச்சதும் தான் எங்க வேலையே ஆரம்பிக்கும். அவன் அவன் சைசுக்கு தகுந்த மாதிரி கொளம்பு வாளி, கூட்டு வாளி, தண்ணி ஊத்துறது போற்ற பதவிகளை பிடித்துக்கொண்டேம். அந்த பாயச வாளில மட்டும் ஒரு கண்ணு இரூக்கும். ஆனா அது நம்ம கைக்கு கெடைக்காது. சமையல்காரர் கஸ்டடில தான், அவர் தான் பரிமாறுவார். இல்லன்னா, நாங்க கொண்டாடிருவோம்லா. இப்படி பரிமாறுவதுல இருக்கற சொகமே தனி தான். நம்ம சொந்த பந்தங்கள பாத்து, வேணுமா, வேணுமான்னு கேட்டு பரிமாறுகிறதே சொகம் தான். கூட்டத்துல 'ஏ! இது நம்ம ராஜி மொவனா" அப்படி விசாரிப்புகள் வேறு நடக்கும். எந்த கல்யாண வீடு என்றாலும் ஒரு போதும் பந்திக்கு முந்துகிற வழக்கம் கெடையாது. எவன் எந்த வாளியை புடிக்கலாம்னு தான் போட்டி இருக்கும். எல்லாம் முடிஞ்சப்புறம் மொத்தமா உக்காந்து வாளியை வரிசையா வச்சி இஷ்டத்துக்கு அள்ளி கட்டினோம்னா, ரெண்டு நாளைக்கு இரை எடுக்க வேண்டியது இல்லை பாருங்க :-)

எல்லாம் முடிஞ்சப்புறம் பெரிசுங்க, இளசுங்க எல்லாம் சீட்டாட ஆரம்பிச்சிட்டங்க. ஊர்ல இருந்து ரொம்ப நாள் பாக்காத மாமன், மச்சினன் எல்லாம் வந்திருக்கும் அல்லவா. விடியும் வரை சீட்டாட்டம் தான்.

( தொடரும் - மன்னிக்கனும். வேலை அதிகமாகி விட்டதால் :-) )

Saturday, November 26, 2005

கல்யாணமாம் கல்யாணம் -1


ஒரு கல்யாண வீட்டுக்கு போகலாமா?. எங்கன்னு கேக்கறீங்களா?. எங்க கிராமத்துல தான். யாருக்கு கல்யாணம்?. நம்ம முருகேசன் அண்ணனுக்கு தான். சும்மா! உங்கள கிராமத்து கல்யாணத்த காட்டலாம்னு நெனைச்சேன். அப்படியே ஒரு 18 வருசம் பின்னாடி போயிரலாம். . சரி தொடஙகலாமா.....

எங்க கிராமத்துல மொத்தமே 40 வீடு தான். எல்லோரும் சொக்காரனுங்க.. சொந்தகாரனுங்க.. ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும். கல்யாணம்னா சொல்ல வேண்டுமா! . திருவிழா தான் போங்க. நிச்சயம் பண்ண போறதுல இருந்தே ஜாலி தான். அதுவும் என்னை போல வாண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். மொதல்ல பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுடலாம். அப்புறம் புதுசா ஊர் பாக்கலாம். இன்னும் நெறைய இருக்கு. ஒவ்வொன்னா பாக்கலாம்.

காலைலயே ஒரு மகிந்திரா ஜீப் வந்துட்டு. முருகேசன் அண்ணன் ஒவ்வொரு வீடா வந்து கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். "யக்கா! ரெடியா! மயினி! ரெடியா! வண்டி வந்துட்டு. கெளம்புங்க" இப்படி வீடு வீடாக கெளப்பிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை முருகேசு. எல்லோரையும் அள்ளிக்கிட்டு மூச்சு முட்ட ஜீப் கெளம்பியது, பொண்ணு பாக்க. இந்த மாதிரி சமயங்களில் தான் பெரிசுங்க குசும்பு , நக்கல், நையாண்டின்னு பொளந்து கட்டும். "ஏல! தெக்கயா பொண்ணு எடுக்க. வெளங்குமாடே! ஏற்கனவே மயினி கத்துனா ஊர்ல எவனும் இருக்க முடியல! இதுல எதிர்பாட்டு பாட தெக்காட்டு காரிய வேற விட்டா ஊரு தாங்குமால. பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடி ஊர் பயலுவலயும் நெனைச்சு பாருங்கல" வாலகுரு மாமா முருகேசு அண்ணனை பயம் காட்டிக்கொண்டிருந்தார். "இல்லண்ணே! நம்ம சொடலமாடன் சாமி போன கோயில் கொடைல தம்பிக்கு தெக்க தான் பொண்ணு எடுக்கணும்னு வாக்கு சொல்லிருச்சுல்ல. பய என்ன பண்ணுவான்" இது துரை மாமா.

ஆழ்வார்தோப்பு வந்து விட்டது. ஆத்துக்குள் அத்தனை பேரையும் வைத்து இழுக்க முடியாமல், போராடி தோற்று , ஜீப் ஆத்துக்குள்ளேயெ நின்று விட்டது. எங்க ஊர்ல ஆறு, குளம் எதுவும் இல்லை என்பதால், வாண்டுகள் எல்லோரும் தாமிரபரணி ஆத்துக்குள் இறங்கி வெளையாட ஆரம்பித்தோம். ஜீப் டிரைவர் ஒரு நீள 'ட' மாதிரி ஒரு கம்பியை ஜீப்பின் முன்னாடி விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்தி போராடிக்கிட்டு இருந்தார். வண்டி ஒரு வழியாக மூச்சு விட, எல்லோரும் ஆத்துல மீன் பிடிக்கிற வேலைய விட்டுட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்ல எங்க ஜீப்ப பாத்தவுடன் ஊர் ஜனம் எல்லாம் வரிசையாக பாதை ஓரத்தில் நின்னு மாப்பிள்ளை ஜீப்புக்குள்ள எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள்.

பொண்ணு வீட்ல பெரிய வரவேற்பு. அங்கேயும் ஊர் பெரிசுகள் எல்லாம் ஆஜர். ஒவ்வொன்னும் அது அதுக்கு ஏற்ற மாதிரி கும்பல் சேர்த்துக்கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தன. பெரியவர்கள் தட்டு மாற்றிக்கொண்டார்கள்.

"யண்ணே! பொண்னு கலரு கம்மியா இருக்கும் போலயே" நம்ம துரை மாமாவிடம் கல்யாணி சித்தி.

"சும்மா. கெடடே. நம்ம மாப்ள மழைல நனைஞ்ச பன மரம் கலர்ல தான இருக்கான். அவனுக்கு இது போதும்டே. மயினிக்கு ஈடுக்கட்ட இது தாண்டே சரி. நிம்மதியா கள்ள குடிச்சிட்டு ஊர்ல அலம்ப முடியுதா. மயினி போடுற சந்தத்துல எல்லா போதையும் எறங்க்கிடுது " துரை மாமாவின் வழக்கமான நக்கல் தொடர்கிறது.

தட்டு மாற்றி, கல்யாண நாள் எல்லாம் குறித்து, சம்பிரதாயம் எல்லாம் முடிந்தவுடன், பந்தி ஆரம்பிக்கிறது. பொண்ணு வீட்டில் எல்லோருக்கும் ராஜ மரியாதை தான். போடுகிற இலையில் இருந்து பரிமாறுகிற இட்லி வரை மிக கவனமாக பரிமாறினார்கள். இல்லன்னா "பொண்ணு வீட்டுக்காரன் கிழிஞ்ச எலைய போட்டுட்டான்"னு பெரிய ரகளையை உண்டு பண்ண, மாமா மாதிரி ஊருக்கு ரெண்டு மூனு பேராவது இருப்பாங்க. எல்லாம் முடிந்து கிளம்ப ஊருக்கு ஆரம்பித்தோம்.

( கல்யாணத்துக்ககு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. காத்திருங்கள்)

Thursday, November 17, 2005

அன்புள்ள தாத்தாவுக்கு...


அன்புள்ள தாத்தா மலேசியா ராஜசேகரன் அவர்களுக்கு பேராண்டி சிவா எழுதுவது, நலம். நலமறிய அவா. உங்களை இங்கே தாத்தா என்று குறிப்பிட்டது சத்தியமாக கிண்டல் அடிப்பதற்காக அல்ல. "சமுதாய உணர்வு கொண்ட பெரியவர்" என்று நீங்களே சொல்லியிருக்கிற காரணத்தினாலும் "விடை பெறுகிறேன்" என்று கடைசி பதிவு போல போட்டிருந்ததினாலும், நானும் சின்னப்பையன் என்பதாலும் 'தாத்தா' என்றே அழைக்கிறேன்.

நம்ம கதை, குஷ்பு கதை போல மறுபடி உங்களால் தொடங்கி வைக்கப்பட்டாதால், இந்த பதிவு போட வேண்டியாதா போச்சி. முதலில், என்னோட "இவர்கள் இந்தியர்கள்" பதிவு உங்களுக்கு வெறும் வசை கட்டுரையாக தெரிந்தது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமே. அந்த பதிவிற்க்கு நீங்கள் "பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று சொன்ன போது, எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதைக்கத் தான் செய்தது "மவனே! ஏதோ பருப்பு மாதிரி எழுதிட்ட. பெரியவர் அவர் பதில் சொல்லி உனக்கு லாடம் கட்ட போறார்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . இன்று குமரன் வந்து உங்கள் எதிர்பாட்டு பதிவை சொன்ன போது, ஓடி வந்து பார்த்த முதல் ஆள் நான் தான். எனக்காடா அருகதை இல்லை இந்தியாவ பத்தி சொல்ல - என்று நீங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு ஆரம்பித்ததை பார்த்து நான் பயந்தே போய்விட்டேன். இப்படி சப்பென்று ஆக்கிட்டியலே தாத்தா.

"என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள்" என்று ஆரம்பித்து போகும் உங்க பட்டியல் --

1. வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட.

2. மலேசியாவில் சம்பாதித்ததை வைத்து தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன

3. "இதெல்லாம் போக " என்று பெரிய Build-up கொடுத்து என்னமோ சொல்ல போறீங்கன்னு பாத்தா, இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது.

4. உங்கள் சொத்து சொந்த பந்தம் எல்லாம் அங்கே இங்கே தான் இருக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறீர்கள்.

5. உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன் " -- இப்படி முடித்திருக்கிறீர்கள். இப்படி ஒரு பட்டியலை கொடுத்துவிட்டு, இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கிறது என்கிறீர்கள். அந்த 'இன்னும்' என்ன "தவறாமல் இந்தியா சுதந்திர தினத்திற்கு எங்க வீட்ல பாயாசம் பண்ணிருவோம்" " எல்லா குடியரசு தினத்திற்கும் மாரியாத்தா கோவில்ல கூலு ஊத்திருவோம்" இப்படியா?.

சரி இவ்வளவு உணர்ச்சி வசப்படும் உன் அருகதை என்ன என்று ஒரு கேள்வி வரும் அல்லவா. அதை சொல்லத் தான் இந்த பதிவே. நீங்களும் உங்கள் சுயபுராணம் பாடிட்டீங்க. சரி நாங்களும் எங்க சுயபுராணத்த இந்த சிவபுராணத்தில் பாடிடலாமேன்னு தொடங்குகிறேன்.

DreamIndia2020 பற்றி தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். என்னோட பதிவுகளில் தவறாம நடராஜனையும் குமரனையும் பார்த்திருக்கலாம். நடராஜனின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு சின்ன இயக்கமே DreamIndia2020. இவர்கள் வேலை 'இதோ சீனாவை பாருங்கள். ஜப்பானை பாருங்கள்' என்று இந்தியாவை வெறுமனே எழுத்துக்களில் மட்டும் நேசிக்காமல், கொஞ்சம் செயலிலும் காட்டுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நமக்கு அரை மணி நேரம் செலவழித்து இணைய வசதியோடு இதை படிக்க வசதி இருக்கிறது. நம் நாட்டில் எத்தனை பேர் அடுத்த வேளை சோத்துக்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவையே நம்மால் தலைகீழாக ஒரே நாளில் மாற்ற சக்தி வேண்டும் என்றல்ல. நம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு நன்றாக இருக்கும் நாம் நம்மாலான உதவிகளை செய்யலாம் அல்லவா. நாம் ஆளுக்கு இரண்டு பேரை முன்னேற்றினால், நம் நாடு முன்னேறாதா என்ன?. சொல்லுங்கள்.

DreamIndia2020 நண்பர்கள் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குழு அமைத்து சுற்றி இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வது, வயதான உழைக்க முடியாத, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவுவது போன்றவற்றை முடிந்த அளவு செய்து வருகிறார்கள். இப்போது மும்பையில் நரிக்குறவர்கள் போல் வாழும் ஒரு இன மக்களுக்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வாரம் 'பாத்திமா இல்லம்' என்று ஒரு அனாதை விடுதி சென்னை மழையால் மூழ்கிப் போய்விட, அதை கவனித்துக்கொள்ளும் அம்மாவின் வேண்டுகோளின் படி, 10 லோடு மணல், கழிவுகள் போட்டு தரை மட்டத்தை உயர்த்த நடா & Co வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்க்கு எல்லாம் பணம் கொடுக்க எல்லா நண்பர்களுமே உதவி செய்கிறார்கள்.

நண்பர் குமரன் இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்க Rs. 13000 கொடுத்துள்ளார். நான் போன மாதம் தான் இவர்கள் நட்பு வட்டத்துக்குள் வந்து விழுந்தேன். போன வாரம் நடராஜன் மூன்று ஏழை குழந்தைகளை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிடலாம், Rs.4500 ஆகும் என்று சொன்ன போது, அதற்கான செலவை ஏற்றுக் கொண்ட மூன்று நண்பர்களுள், உங்கள் பேராண்டி நானும் ஒருவன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா எங்கள் தாய் நாடு என்ற ஒரு பற்றும் அது முன்னேறும் என்று நம்பிக்கையும் இந்த இளைஞர்களிடம் இருக்கிறது. இதை சுயவிளம்பரம், வசை பதிவு என்று எடுத்துக் கொண்டாலும், உங்களில் சொத்துப் பட்டியலை விட எங்கள் பட்டியல் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்லறீங்க.

இவர்கள் எல்லோருமே போன வருடம் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர்கள். உங்கள் கிழட்டு அனுபவத்தில் நீங்கள் பட்டியல் போட்டிருக்கும் அருகதையை விட இந்தியாவை பற்றி பேச எங்கள் அருகதை கொஞ்சம் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் என்னவோ. நாங்கள் இன்று சிறிய அளவில் இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நாள் நாங்கள் வளர்வோம். இந்தியாவும் வளரும்.

இந்த இளைஞர்களுக்கும் இந்தியாவுக்கும் உங்கள் கிழட்டு அனுபவம் எந்த வகையில் பயன்?. சொல்லுங்க தாத்தா. வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் இவர்கள் இந்தியாவில் செய்திருக்கும் விசயங்கள் என்ன? இவர்கள் வயத்தை விட அதிக அனுபவம் கொண்ட தாங்கள் பட்டியலிட்டிருக்கும் "அருகதை" என்ன?. எந்த நாட்டில் அடுத்து புலம் பெயர்தால் நல்லது என்று மண்டையை போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இதை பற்றி யோசிக்க நேரம் இருக்காது தான்.

நீங்க ஏரோப்ளேன் படம் எல்லாம் போட்டு அழகழகா ஓயின் கதை எல்லாம் சொல்லிருக்கீங்க. எங்களிடமும் சில கதைகள் இருக்கு. அதை போட்டா பதிவு பெரிசாயிடும் என்பதால், நேரம் இருந்தால் இங்கே படித்துக்கொள்ளுங்கள்.

கதை எண்-1 ; கதை எண்-2 ; கதை எண்-3

அன்புடன் பேராண்டி,

சிவா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களில் யாராவது எங்களை போல எண்ணத்தில் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (dream_india_2020@yahoo.co.in) . பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை.





தீபாவளிக்கு வசந்தம் என்ற ஒரு மனநிலை குறைந்த குழந்தைகளின் காப்பகத்தில் குழந்தைகளோடு DreamIndia நண்பர்கள்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் DreamIndia நண்பர்கள்:

Friday, November 11, 2005

பா..பா...பா...பா..பா...பாம்பு


பாம்பு.

என் தைரியத்தையும் வீரத்தையும் சோதிப்பதற்க்காகவே கடவுளால் படைக்க பட்ட ஒரு உயினினம். படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்புக்கு பொதுவாக ரெண்டு வேலைகள் தான் கொடுக்கப் பட்டிருக்கும். ஒன்னு, கதாநாயகி தலையில் பூவைத்து விடுவது, அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுவது, தொட்டில் ஆட்டுவது, வில்லியை பயங்காட்டுவது. இது (இராமநாராயணன்) சாமி பாம்பு. ரெண்டாவது, நேரே போய் ஹீரோ கழுத்துல போய் தொங்கிக்கிட்டு காமெடி பண்ணுறது. ஹீரோவும் "பா..பா..பா...பா" அப்படின்னு நமக்கு வயிறு வலி வரும் வரைக்கும் இழுத்துக்கிட்டே இருப்பாரு. "பா" க்கள் தாங்க முடியாமல் பாம்பும் வெறுத்துப் போய் இறங்கி பொந்துக்குள்ள போயிடும். அப்புறம் "ம்பு" அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ தொப்புன்னு மயக்கம் போட்டு விழுந்திடுவாரு. இது காமெடி பாம்பு. இப்போதெல்லாம் இராமநாராயணன் கலைஞரை வைத்து மட்டும் தான் படம் எடுப்பதால் (கழக கண்மணிகள் மன்னிக்கவும்), பாம்புகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் கோடம்பாக்கத்தை சுற்றி வருவாதாக கேள்வி.

எனக்கும் பாம்பை பார்த்தால் 'பா...பா...பா...பா.." தான். கிராமத்தில எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்பு ரொம்ப சகஜம். யாரு தோட்டத்திலாவது பாம்பு புகுந்திட்டுன்னா, என்னை மாதிரி அப்பாவிங்க ஜீவன்கள் கைல ஒரு கம்ப கொடுத்து பாம்பு அடிக்க அனுப்பிருவாங்க. எனக்கு பாம்பு என்று நினைத்தாலே உள்ளுக்குள் உதறும். அதன் வழ வழ உடம்பும், நெளிந்து வளைந்து ஒடும் ஓட்டமும், நினைத்தாலே சகலமும் ஒடுங்கி விடும். என்ன பண்ணறது?. ஆம்பளையா பொறந்துட்டோம். அதுவும் கிராமத்துல பொறந்துட்டோம். அதனால், கொஞ்சம் தைரியமா நடிச்சி தான் ஆவனும். பாம்பு வரும் போது எவன் மாட்டுகிறானோ அவன் தான் அன்னைக்கு "டாக் ஆஃப் த கிராமம்".

அப்படித்தான் ஒரு நாள் அத்தை வீட்டு தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. "எய்யா! ராசா! நம்ம தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. வந்து அடிய்யா" அப்படின்னு அத்தை, மகளுடன் வந்து என்னிடம் சொன்ன போது, என்னால் தட்ட முடியவில்ல. பாம்படிக்க போகும் போதெல்லாம் நான் வேண்டுவது "நல்ல பாம்பாகவோ, சாரை பாம்பாகவோ இருக்கக் கூடாது. பாம்பு கொஞ்சம் சின்னதாக இருந்தால் நல்லது. நம் மானம் காப்பாற்றப்படும்" என்று. இதுல வேற, 'ஏல! நல்ல பாம்ப அடிச்சி விட்டுறாதல! நெனவு வச்சி வந்து போட்டு தள்ளிடும்" என்று பெரிசுங்க வேற கொஞ்சம் இருக்கிற தைரியத்துலயும் மண் அள்ளி போட்டுங்க. "நீயா" மாதிரி படம் பார்த்து, அந்த நெனப்பு வேற நம்மை ஆட்டும். "ஒரு வேள இது ஜோடி பாம்பா இருக்குமோ" இதுவும் அதே பெருசு தான்.

கையில் ஒரு கம்பை கொடுத்து, பாம்பு இருப்பதாக தெரியும் இடத்தை காட்டி விட்டு எல்லோரும் பாதுகாப்பா ஒரு 30 அடி தள்ளி நின்று கொண்டார்கள். உள்ளுக்குள் உதறினாலும், அத்தை பொண்ணு வேற நம்ம சாகசத்தை பார்க்க நின்று கொண்டிருப்பதால், தடியை எடுத்துக் கொண்டு, எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு கிளம்பினேன். ஆடிப் போய்விட்டேன். சும்மா ஒரு 5 அடி நீளத்தில், எனக்கு சோதனையாக நின்று கொண்டிருந்து பாம்பு. என் நேரம், கோட்டைச் சுவரின் முக்கில் (Corner), ஓட வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இல்லன்னா, படம் காட்டி அதை விரட்டிட்டு "பாம்பு ஒடிடிச்சி" அப்படின்னு சொல்லிக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஒன்னு அது. இல்லன்னா நான். அப்படி ஒரு நெலம.

கொஞ்ச நேரம் நான் பாம்பு கூட போட்ட சிலம்பாட்டத்தில் சுத்தி இருக்கற பூச்செடி எல்லாம் ஒவ்வொன்னா மண்டைய போட, அத்தை தள்ளி நின்னு "ஏல! மனுசா! ஒன்ன பாம்படிக்க கூட்டி வந்தா! இருக்கற செடிய அடிச்சிக்கிட்டு இருக்கற" என்று சொல்ல, அத்தை பொண்ணு வேற நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்க, வீரம் வந்து பாம்பு மண்டைல ஒரே போடு. பாம்பும் மண்டைய போட, அப்புறம் அன்றைக்கு நான் தான் "டாக் ஆஃப் த கிராமம்".

சென்னை மடிப்பாக்கம் . நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே வசிக்க கூடிய இடம். வேலையில் சேர்ந்த புதிதில் அக்கா வீட்டில் அங்கு தான் தங்கி இருந்தேன். மழை பெய்தால் வெள்ளம் தான். சகலமும் வந்து போகும். அப்படித்தான் ஒரு பாம்பு பொழுது போகாமல் நேரே எதிரில் உள்ள மாமி வீட்டு சமையல் அறைக்குள் போய்விட்டது. நல்ல வேளை. மாமி பார்த்து விட்டார்கள். அசைவ பாம்புக்கு அது 'மாமி வீடு' என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு என்ன பசியோ, சமையல் அறையை உருட்ட போய்விட்டது. மாமி அலறிக் கொண்டு அக்கா வீட்டுக்கு ஓடி வந்தார்கள். நானும் என் அத்தான் கடை பையன் கோட்டானும் (சின்ன பையன் தான்) கம்பை எடுத்துக்கிட்டு போனோம். மாமி பையனுக்கும் என் வயது தான். வீட்டில் தான் இருந்தான். ஆனால் அம்பி நடுங்கி போய், வீட்டுக்குள் வரவே இல்லை. மாமி பொண்ணோ சமையல் அறை வாசலில் தைரியமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அது போதாதா நமக்கு. சின்ன சமையல் அறை. அறை எங்கும் உரிக்கப்படாத தேங்காய் குவிந்து கிடக்க, வெளிச்சமும் அதிகம் இல்லாத அறை. பாம்பு ஒடினால் நமக்கு ஓடவும் இடம் இல்லாத அறை. நானும் கோட்டானும் ஒவ்வொரு தேங்காயாக நகர்த்திக்கொண்டே வந்தோம். சரியான பாம்பு. பெரிய போராட்டத்துக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பாம்பை காலி செய்தோம்.

வெளியே வரும் போது மாமி அம்பியை பார்த்து "ஏண்டா! ராம்கி. சின்ன பையன். எவ்வளவு நன்னா, தைரியமா இருக்கான் பாரு. நோக்கு தைரியமே கிடையாதுடா. தண்டம்" . இப்படி மாமியின் மொத்த ஓட்டையும் கோட்டான் அள்ளிக் கொண்டு போக, நான் முடிவு செய்தேன் " அடுத்த தடவை மாமி வீட்டுக்குள்ள பாம்பு போனா, கோட்டானை கழட்டி விடுவது" என்று.

Friday, November 04, 2005

தாலாட்டு கேக்குதம்மா!!


திரை இசையில் தாலாட்டுப் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்று தேடியதில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு. தாலாட்டு பாடல்கள் எல்லாமே சுகமானவை. அழகான தாய்மையை சொல்லும் வரிகள் கொண்ட பாடல்கள். இங்கே சிலவற்றை கேட்டு பாருங்கள்.
__________________________________________________

முதல் பாடல். இசைகருவிகள் பயன்படுத்தாத ஒரு பாடல். சின்ன குயில் என்று சும்மாவா சொன்னார்கள். பாடல் இதோ...

தவமான தவமிருந்து தாளாம நா சொமந்த முக்கனியே !
நவமான மாமணியே ! நா படைச்ச கண்மணியே எந்துரையே !
பழஞ்சேலையில ஏனகட்ட செல்வ மக தூங்கிரலாம் !
அதிகாலையிலே கண்முழிச்சி வெளையாட போயிரலாம்.!




________________________________________________________

இதுவும் சித்ரா தான். அப்படி ஒரு இனிமை. தபேலா இசை மேலும் அழகு சேர்க்கிறது. கேட்டு பாருங்கள்.

சிறுவாழை தண்டு ரெண்டு சினுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில்
தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா!
உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா!
இளங்காற்றின் இன்பமே ! இனி ஏது துன்பமே !



__________________________________________________

மூன்றாவதாக ஒரு சுசிலா பாடல்.

குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழழை உன் சொல் போல இசையாவதேது!

யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை !
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவும் இல்லை !

அன்பிலே அன்பை இனைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே !




_________________________________________________________

"துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில், புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்....அறிவாயோ" இதோ ஒரு அன்னையின் பாசம்.

பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடி இருக்கும்!
இதழ் ஒரத்திலும் சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும் !
நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் !
நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்.....அறிவாயோ?.




_____________________________________________________________

கடைசியாக ஒரு சின்ன தாலாட்டு. மூன்று வரி தான் இந்த பாடல். சோகம் கலந்த ஒரு தாலாட்டு.

ஆசை ராஜா ஆரீரோ !
அம்மா பொன்னே ஆரீரோ !
தோளிலே மாலையாய் ஆடும் கண்ணா ஆரீரோ!
ஆடும் கண்ணா ஆரீரோ!

உமா ரமணனின் முதல் பாடல் என்று நினைக்கிறேன். பாடல் கேட்க..



_________________________________________________________________

பின் குறிப்பு : இதில் சின்ன தம்பியில் வரும் "தூளியிலே ஆட வந்த" போன்ற பாடல்களை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பாடல்களில் பொதுவாக "பாட்டெடுத்து நான் படிச்சா. ...காட்டருவி கண்ணுறங்கும்" - இந்த ரீதியில் ஹீரோவில் பாடும் திறமையை போற்றி பாடுவதாகவே போகும். இதை தாலாட்டு பாடலாக எடுத்துக் கொள்ளவில்லை.

உங்களுக்கு தெரிந்த பாடல்களையும் கூறுங்கள்.

Saturday, October 29, 2005

"முறுக்கு" செல்லையா (தொடர்ச்சி)


இதை படிச்சிட்டு தொடருங்கள்.

தான் பிச்சை எடுக்க வந்திருப்பதை கூட உணராமல், என்னை பார்த்தவுடன் வெள்ளத்தியாய் சிரித்தான் செல்லையா. "யம்மா! இவ என் கூட தான் படிக்கறான்" அவன் அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொண்டான். என் அம்மாவும் குரல் கேட்டு முன்னால் வர, "யம்மா! இது சின்னவரா?. சின்ன வயசுல பாத்தது. நல்லா வளந்துட்டாவ " இது செல்லையாவின் அம்மா. இப்படி பிச்சை எடுப்பவர்கள் வழக்கமாக வருவதால், நலம் விசாரிப்பது எல்லாம் சகஜம் தான். " சரி! வரேன்" சொல்லிவிட்டு அடுத்த விட்டை பார்க்க செல்லையா கிளம்பிவிட்டான். 'மனது என்னவோ போல இருந்தது' என்று சொல்ல எனக்கும் வயசு பத்தாது. நானும் வெள்ளத்தியாய், அவனுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன்.

பள்ளியில் ஒரு நாள், எனக்கும் ராஜாமணிக்கும் ஏதோ கைகலப்பு வர, சண்டையில் அவன் என் சட்டையை பிடித்து இழுத்து விட்டான். ஏற்கனவே இத்து போயிருந்த சட்டை, அவன் இழுத்தவுடன், ட்ர்ர்ர்-னு மொத்தமா கிழிந்து போய்விட்டது. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் போய் செல்லையாவிடம் போய் "ராஜாமணி என்ன அடிச்சிட்டான்ல" என்று முறையிட, செல்லையா கிளம்பிவிட்டான். எனக்கொரு அடியாள் மாதிரியே அவன் இருந்தான். எவனும் என்னை திட்ட கூடாது, அடித்தாலோ அவ்வளவு தான். பாசக்கார பய. இவன் போய் ராஜாமணியை அடிக்கவும், டீச்சர் வகுப்பிற்க்குள் வரவும் சரியாக இருந்தது. அப்புறம் டீச்சர் வைத்த பஞ்சாயத்தில், ரெண்டு அடி கொடுத்து, என் சட்டையயை வீட்டுக்கு போய் தைத்து கொண்டுவர ராஜாமணிக்கு தீர்ப்பு ஆயிட்டு. ராஜாமணி வீட்டிலும் போய் வாங்கி இருப்பான். தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததற்க்காக செல்லையாவும் அடி வாங்கினான். மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் ஆண்டி போல உக்காந்திருந்ததால் நான் அடி வாங்காமல் தப்பித்தேன்.

செல்லையாவின் ஒரு திறமை, அவன் அப்பாவிடம் இருந்து பழைய ரப்பர் செருப்புகளை வெட்டி அழகாக டிராக்டர் சக்கரம் போல அழகாக செதுக்கி, அதற்கு வண்டியும் ஒன்று செய்து கொண்டு வருவான். எங்களுக்குள் சில சமயம் பண்டமாற்று நடக்கும். நான் அவனுக்கும் சிறுவர் கதை புத்தகங்களில் வரும் கதைகளை படித்து வந்து சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் என் அப்பா வேலை பார்க்கும் சைக்கிள் கடைக்கு வெள்ளிக்கிழமை போய்விடுவேன். தினமணிகதிரில் தொடராக வந்த "சூப்பர் தும்பி" தொடரை படித்து வந்து செல்லையாவுக்கு வாரா வாரம் சொல்லிவிட வேண்டும். அதற்கு அவன் செய்த வண்டியை எனக்கு கொடுப்பான். தியேட்டருக்கு வரும் எல்லா படத்துக்கும் விமர்சனம் சொல்லிவிடுவான். 'நான் சிகப்பு மனிதன்'ல ரஜினி 29 கொலை பண்ணுவான்டா. சூப்பர் படம்" இப்படி தான் இருக்கும் அவனது பட விமர்சனம்.

அப்புறம் என் பெற்றோர்களின் ஆசையால், நான் ஐந்து முடிந்ததும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அதற்க்கப்புறம் இன்று வரை செல்லையாவை பார்க்க முடியாமலே போனது. அவன் நினைவுகள் மெல்ல அடிமனதில் தேங்க தொடங்கின......

சென்னை விமான நிலையம். " வரேன்பா" ஆசிரியர் விடைப்பெற்றுக்கொண்டார். நெல்லை விரைவு வண்டியை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊரில் கல்யாண ஏற்பாடு எல்லாம் போய்க்கிட்டு இருப்பது தூரத்தில் இருந்தே தெரிந்தது. அமெரிக்க புராணத்தை எல்லோரிடம் கொஞ்ச நேரம் பாடிவிட்டு, படமெல்லாம் காட்டி கொண்டிருந்தேன். 'நல்லாருக்கியலா. மருமகன. பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்திச்சா? " மாமனார் நலம் விசாரித்துவிட்டு போனார். ஸ்பீக்கரில் "வினாயகனே! வெவ்வினையை வேரருக்க வல்லான்" சீர்காழி தொடக்க பாடலை கணீரென்று பாடிக்கொண்டிருந்தார். ஊர் வாண்டுகள் எல்லாம் ஒடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கல்யாண வீடு களை கட்டிக்கொண்டிருந்தது.

கல்யாணத்திற்க்கு முந்தின மாலை, ஊரில் இருக்கும் அம்மன் கோவில், சுப்ரமணியன் கோவிலுக்கெல்லாம் மேள தாளத்தோடு ஒரு ரவுண்ட் விட்டுட்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பந்தல் போட்டுக்கொண்டிருக்கும் முகம் ரொம்ப பழகிய முகமாக படவே, போய் பார்த்தால், அது செல்லையா. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனாலும், அந்த முகம் செல்லையா தான் என்று உடனே மனதில் பட்டது.

கிட்ட போய் "ஏல! செல்லையா! எப்படி இருக்கற. என்ன நியாபகம் இருக்குதா" . என்னை அடையாளம் கண்டு கொண்டவன் "நீங்களா! நல்லா இருக்கீங்களா?. ஆளு மாறவே இல்ல. அப்படியே இருக்கீங்க. அமெரிகாவிலா இருக்கீங்க. எல்லோரும் சொன்னாங்க. நல்லா இருக்கியல்லா?" . வார்த்தைக்கு வார்த்தை "ங்க" சேர்த்து கொண்டான். அவனின் "ங்க" வில் அவன் சொல்ல வந்தது ஒன்று மட்டும் புரிந்தது. "நாம் இருவரும் வளர்ந்துவிட்டோம்! ஜாதி, அந்தஸ்து என்னும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்துவிட்டது. " சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான் 'முறுக்கு' செல்லையா.

அவன் அன்று ஓசியில் எனக்கு கொடுத்த அஞ்சு பைசா முறுக்கின் ருசி லேசாக நாக்கில் வந்து போனது.

(முற்றும்).

Friday, October 28, 2005

"முறுக்கு" செல்லையா


ப்ராங்பர்ட் (Frankfurt) விமான நிலையம். சிகாவோவில் இருந்து வந்த என் விமானம் தாமதமானதால், சென்னை செல்லும் விமானத்தை தவற விட்டு நின்று கொண்டிருந்தேன். அடுத்த வாரம் கல்யாணம். யாருக்குன்னு கேக்கறீங்களா?. எனக்கு தான். இந்நேரம் பார்த்து இவனுங்க வேற படுத்தறானுங்களே என்று எரிச்சலாக இருந்தது. மும்பை செல்லும் விமானத்தில் அனுப்புவதாக கூறினார்கள். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. எரிச்சலோடு இருக்கையில் போய் அமர்ந்தேன். பொழுது போகாமல், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி, ஒரு அம்மாவை, எங்கேயோ பார்த்தது போல இருக்கவே, அருகில் போய் பார்த்தால், எனது நாலாம் வகுப்பு ஆசிரியர். அவர் பெயர்....தெரியாது. ஆரம்ப பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் பெயர் ஒன்னாப்பு டீச்சர், ரெண்டாப்பு டீச்சர், இப்படி தான். இரு கைகளையும் கூப்பி "வணக்கம்! டீச்சர்" என்றேன். என்னை இனம் கண்டு கொண்டவர், "எப்படிப்பா இருக்க?" என்று நலம் விசாரித்தார். தன் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு திரும்புவதாகவும் கூறினார். ஆசிரியரை எனக்கு ஊரிலேயே தெரியும். மெயின் பஜாரில் தான் அவர்கள் வீடு. அடிக்கடி பார்க்கலாம். "நீ நல்லா வருவேன்னு எனக்கு அப்பவே தெரியும். அப்பவே நீ நல்லா படிப்பே" என்று என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். தான் கற்றுக் கொடுத்த மாணவனை இன்று நல்ல நிலைமையில் பார்க்கும் போது வரும் நல்வார்த்தைகளே அவை.

ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "கிருஷ்ணன தெரியுமா! டீச்சர். இப்போ அவன் மெட்ராசுல ஒரு பேங்க்ல வேலை பாக்கறான். சக்தி கணேசன் மெட்ராசுல ஜூஸ் கடை வச்சிருக்கான்" - இப்படி எனது ஐந்தாம் வகுப்பு நண்பர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு அவர்கள் நினைவிருக்க நியாயம் இல்லை தான். எத்தனை ஆயிரம் மாணவர்கள் அவரை கடந்து வந்திருப்பார்கள். இருந்தாலும், சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டு வந்த போது தான் "செல்லையா" பேச்சும் வந்தது.

செல்லையா. எனது ஆரம்ப பள்ளித் தோழன். எனது ஆரம்ப பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்ப பிண்ணனியும் வித்தியாசமானது. அதில் செல்லையாவின் பிண்ணனி,
செல்லையா கிராமத்தில் பிச்சை எடுப்பதே ஒரு தொழிலாக இருந்தது. காலையிலேயே ஒரு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு குழந்தைகளுடன் கிளம்பி விடுவார்கள். சில பேர் செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். செல்லையா அப்பாவும் செருப்பு தைப்பவர் தான். அப்படி ஒரு ஏழ்மையான நிலையில் இருந்து அவன் படிக்க வந்திருப்பதே பெரிய விசயம் தான்.


ஐந்து படிக்கும் போது, என் சித்தி தவறாமல் எம்.ஜி.யார் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டி போவார்கள். அங்கு தியேட்டரில் செல்லையாவை பார்க்கலாம். முறுக்கு விற்றுக் கெண்டிருப்பான். "முறீக்கே! முறீக்கே!" என்று அவன் கத்துவது தியேட்டர் முழுவதும் கேட்கும். ஒரு தகட பெட்டியில் அடுக்கி வைத்த முறுக்கை தலையில் வைத்துக்கெண்டு, மேல் சட்டை இல்லாமல், டவுசரை கையில் பிடித்த படி முறுக்கு விற்றுக் கொண்டிருப்பான். அந்த கூட்டத்தில் என்னை எப்படியும் கண்டு பிடித்து, என்னிடம் வந்து ஒரு முறுக்கையாவது கொடுத்து "வச்சிக்கல" ன்னு கொடுத்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைப்பதே இரண்டு முறுக்குக்குறிய காசாக தான் இருக்கும். முறுக்கை எண்ணி தான் கொடுத்திருப்பார்கள் என்றும் அவனுக்கு தெரியும். இருந்தாலும், ஒன்றை கைல தினித்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைக்கும் பெரிய கூலி, ஓசியில் படம் பார்ப்பது தான். அவனுக்கு கொடுக்க என் கையிலும் அஞ்சு பைசா கூட இருக்காது. என் வகுப்பில் வேறு யாருக்கும் முறுக்கு கொடுக்க மாட்டான். நண்பன் நான் என்றால் மட்டும் தான்.

ஏற்கனவே நிறைய தடவை இதே படத்தை பார்த்து இருப்பான் என்பதால், படம் தொடங்கியதும் என்னிடம் வந்து அமர்ந்து கொண்டு, கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். நம்பியார் எம்.ஜி.யாரை கத்தியால் குத்த மணிக்கணக்கில் போராடி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் கத்தியை பார்த்தவுடனே பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொள்வோம். இடைவேளை வரப் போவது தெரிந்ததும், தன் பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவான், "முறீக்கே! முறீக்கே" என்று கூவிய படி. என் வருப்பில் எல்லோருமே தியேட்டருக்கு போகும் போது செல்லையாவை பார்த்திருப்பதால், அவனுக்கு பட்ட பெயரே "முறுக்கு" செல்லையாவாகி போனது.

ஒரு நாள் வீட்டில், "அம்மா! தருமம் போடு தாயீ" என்று குரல் வர, அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி வைத்து "போட்டுட்டு வந்துருல" ன்னு கூறினார்கள். நான் தட்டை எடுத்துக் கொண்டு கதவை திறந்தால், வெளியே, தட்டு எந்திய படி அவன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தான் செல்லையா!

(தொடரும் - பதிவின் நீளம் கருதி)

Thursday, October 20, 2005

கிராமத்து மணம் - 1 (குதிரை சவாரி)

கிட்டத்தட்ட 20 வருடம் கிராமத்து (கல்லூரி முடிக்கும் வரை) வாழ்க்கை. சின்ன வயசில் பண்ணிய சின்ன சின்ன குறும்புகள், சின்ன சின்ன ஆசைகள் . அடடா! அது அல்லவா வாழ்க்கை. அவற்றை வாழ்க்கை முழுவதும் அசை போட்டுக் கொண்டே இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பதிய ஆரம்பிக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

எல்லா கிராமத்திலும் ஒரு சகலகலா வல்லவர் இருப்பார். எங்க ஊரிலும் ஒருத்தர் உண்டு. ஊரில் செமையா பீட்டரு விட்டுக்கிட்டு இருந்த எங்கள் அண்ணன் (கூட பொறந்த அண்ணன் இல்லப்பா) "பீட்டர்" பற்றி தான் இந்த முதல் பதிவு.

"வெள்ள அடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "மரம் வெட்டணுமா பீட்டர கூப்பிடு" "கோழி புடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "குழி தோண்டனுமா பீட்டர கூப்பிடு" என்று ஊரே எதற்க்கெடுத்தாலும் பீட்டர் அண்ணனிடம் தான் போய் நிற்க்கும். அதற்க்கேற்றார் போல் சரக்கும் அவனிடம் இருக்கும். எலக்ரிக்கல் வேலைல இருந்து எலி பிடிக்கற வேலை வறை பொறுமையாக, கச்சிதமாக செய்து கொடுப்பான். அதுமட்டும் அல்ல, எங்களை போன்ற வாண்டுகளுக்கு , ஓணான் அடிப்பதில் இருந்து, நீச்சல் அடிப்பது வரை அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்த "குரு" அவன் தான். அதனால் நாங்கள் எப்போதுமே அவனையே சுற்றிக் கொண்டிருப்போம். " பீட்டர் கூடயா போற..போய்ட்டு வா" என்று எல்லார் வீட்டிலும் விட்டு விடுவார்கள். அந்த அளவுக்ககு அவன் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை.

எங்கள் குருகுலத்தில் நடந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்...

அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். ஓரு நாள் ஊர்ல சொடல மாடன் கோயில் கொடைக்கு "அன்பே வா" படம் திரை கட்டி போட்டாங்க. அதுல வந்த "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாட்ல குதிரைல சரோஜா தேவியோடு 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் டூயட் பாடறத பாத்து , எங்களுக்கும் குதிரை ஓட்ட ஆசை வந்தது. அதை எங்கள் குரு பீட்டரண்ணணிடம் சொல்ல, "குதிரை தானல. புடிச்சிரலாம். நாளைக்கு மேக்கே வந்துருங்கல" என்றான்.

அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் போக, பீட்டரண்ணனும் ரெடியாக இருந்தான். "என்னன்னே, குதிரய எங்கண்ணே". "வரும்ல வெயிட் பண்ணுங்க. எல்லோரும் சேர்ந்து தான் புடிக்கணும். ரெடியா இருங்கல" "டேய். அதோ வருதுடா" பீட்டரண்ணன் எங்களை ரெடியா இருக்கச் சொன்னான். அவன் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்தது.......எங்க ஊர் வண்ணானின்...........கழுதை.

"டேய் இது குதிர இல்லல..குதிர மாதிரி..அட்ஜஸ்ட் பண்ணுங்கள. இந்த தேரி காட்டுக்குள்ள குதிரைக்கு எங்கல போறது " - இது குரு (பீட்டர் அண்ணன்). ஒரு வழியாக கழுதையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மடக்கி பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. செமையா ஓட்டம் காட்டியது. ஊரில் எவனாவது பார்த்தால் மானம் போய் விடும் என்பதால் ஊருக்கு கொஞ்சம் தள்ளியே எங்கள் குதிரை ஓட்டும் பயிற்சியை வைத்துக் கொண்டோம். கழுதை பிடிப்பது பார்த்து பிடிக்க வேண்டும். பின்னால போனா நம்ம கேப்டன் மாதிரி Back kick போட்டு தாக்கி விடும். முன்னால போனா கடித்து விடும்.

ஏற்கனவே வண்ணானிடம் பொதி சுமந்து, பொதி சுமந்து நொந்து போன கழுதை, இருந்து இருந்து எங்களிடம் வந்து மாட்ட, அது எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ! . குதிரையை கட்டுப்படுத்த கடிவாளம் இருக்கும். கழுதைக்கு.....பீட்ரண்ணன் ஒரு பம்பர கயிறை எடுத்து கழுதை மூஞ்சியில் கட்டி கையில் பிடித்துக் கழுதை மீதேறி அமர்ந்து கொண்டான். இந்த மாதிரி டெக்னிகல் விசயங்கள் எல்லாம் அவன் அழகாக பண்ணுவான். கயிறும் நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. கழுதை வாயை கட்டினாதால் அது கடிக்கவும் முடியாம போச்சி. நாங்கள் ஒவ்வொருவாரா அவன் பின்னால் ஏறிக் கொள்ள, அவன் சாரதியாக இருந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு வந்து விடுவான். கழுதையும் இரண்டு பேரை ஏத்திக்கிட்டு நல்லா தான் ஓடிச்சி. கழுதைக்கு ஏதாவது ஆச்சின்னா, இதே கழுதையில வச்சி ஊர்ல ஊர்வலம் விட்டுடுவாங்க என்பதால், அப்போ அப்போ ஊர்ல எவனாவது பாக்கரானான்னு பார்த்துக்கிட்டோம்.

கொஞ்ச நேரம் கழிச்சி, நாங்களே தனியாக சவாரி செய்யலாம் என்று எங்கள் குரு இல்லாமல் ஓட்ட ஆரம்பித்தோம். ஊட்டி கொடைக்கானல்ல எல்லாம் குதிரைன்னு ஒன்ன வச்சி சவாரி போவாங்களே, அதை விட எங்க ஊரு கழுதை அழகாகவே ஓடிச்சி.

என் சுற்றும் வந்தது. என் சுற்று வரும் போது தானா கழுதைக்கு கிறுக்கு புடிக்க வேண்டும். போன ரவுண்டில் கழுதை ஒரு முள் காட்டுக்குள் ஓட, உடம்பெல்லாம் வீர தழும்புகளுடன் திரும்பி வந்த செந்தில் என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டான். "போடா..போ..நானும் பாக்கத்தான போறேன்" என்பது போல இருந்தது. நான் ஏரி உக்காந்ததும், நாசமா போன கழுதை தலைதெரிக்க ஓட ஆரம்பித்தது.....எங்கள் கிராமத்தை நோக்கி....

போன தீபாவளிக்கு இதே கழுதை வாலில் சரவெடி கட்டி வுட்டது, காவோலை (காய்ந்த பனை ஓலை) கட்டிவிட்டு அதை தலை தெரிக்க ஓட வைத்தது எல்லாம் நினைவுக்ககு வந்துச்சி. அப்போது தான் எனக்கு உறைத்தது, கழுதை அதற்கு பழி வாங்க, நம்ம மானத்தை வாங்க முடிவு செய்து விட்டது என்று. நான் பம்பர கயிரை புடிச்சி இழுக்க, என் போதாத காலம், கயிறு அத்து கைல வந்து விட்டது. அது ஓடுன ஓட்டத்துக்கு என்னால கழுதையில இருந்து குதிக்கவும் முடியாம, புடிக்க கயிறும் இல்லாம முழிச்சிக்கிட்டு இருக்க, நேரே கழுதை ஊருக்குள் போய் நின்று விட்டது. ஊர் சனம் எல்லாம் பார்த்து "ஏல! என்னல தப்பு பண்ணுண. கழுதைல ஏத்தி விட்டுருக்காங்க! " என்று சிரிக்க, ஒரே கேவலமா போச்சி. கழுதை வந்த வேலை முடிந்த சந்தோசத்தில், என்னை கீழே தள்ளி விட்டு ஓடியது. ...வண்ணான் வீட்டை நோக்கி.


(தொடரும்)

Sunday, October 16, 2005

பிடித்த பாடல் - S.P.B & வாணி ஜெயராம்

பழைய பாடல்களில் ஒரு சுகம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் S.P.B பாட வந்த புதிதில் ஜெய்சங்கர் படங்களிலும், சிவகுமார் படங்களிலும் தன் இளங்குரலால் பாடிய பாடல்கள் (வேதா போன்ற இசை அமைப்பளர்களின் காலத்தில்) எனக்கு மிகவும் பிடித்தவை. இசையில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளராத காலத்தில், பாடலின் ராகமும், பாடகரின் குரலுமே பாடலை எடுத்துச் செல்லும். அப்படி இருந்தும், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

வாணி ஜெயராம் குரலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதெல்லாம் அந்த காலம் என்று ஏங்க வைக்கும் பாடகி. S.P.B -யும் வாணி ஜெயராமும் பாடிய பாடல்கள் நிறைய. அவற்றில் ஒன்று இதோ உங்களுக்காக,

படம் : அவன் அவள் அது
பாடல் : இல்லம் சங்கீதம்..அதில் ராகம் சம்சாரம்..




எனக்கு பிடித்தவைகளில் சில S.P.B & வாணி ஜெயராம் பாடல்கள்:

  1. அன்பு மேகமே இங்கு ஓடி வா..எந்தன் துணையை அழைத்து வா - எங்கம்மா சபதம்.
  2. தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் - காமாட்சியின் கருனை
  3. இதோ உன் காதலி கண்மணி..இவள் மனம் இனி உனது - சௌந்தர்யமே வருக வருக
  4. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை..மனம் தாளாமல் துடித்திடும் ஓசை - என்னடி மீனாட்சி
  5. சொர்க்கத்திலே முடிவானது..சொந்தத்திலே நிலையானது - லலிதா
  6. தங்கச்சி பொண்ணு..தங்கச்சி பொண்ணு..தல குனிஞ்சிக்கம்மா - கிழக்கும் மேற்க்கும் சந்திக்கின்றன.

S.P.B & P. சுசிலா பாடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Wednesday, October 12, 2005

இவர்கள் இந்தியர்கள்

"நாங்கள்லாம் இந்தியாவுல எந்த விதியையும் (Rules) கடைபிடிக்கவே மாட்டோம். எங்க ஊர்ல எதுவுமே உருப்படியாக இருக்காது" - இப்படி இங்கே அமெரிக்கவில் இருக்கும் நம்ம பசங்க தன்னுடன் சிலர், வேலை செய்யும் அமெரிக்கரிடம் சொல்லிக் கொள்வதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப பெருமையாக சொல்லி விட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியது போல சிரித்து கொள்வார்கள். "டெண்டுல்கர் எல்லாம் ஒரு Player-ஆ" "கமல் எல்லாம் ஒரு நடிகனா?" இப்படி பேசி தன்னை ரொம்ப தெரிந்தவன் போல காட்டிக் கொள்ளும் புத்தி, தாய் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஒரு அயல் நாட்டவனிடம் தன் தாய் நாட்டை கேவலமாக பேசுகிறோமே என்று கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டிருப்பார்கள்.

இங்கே அமெரிக்காவிலும் அத்தனையும் உண்டு என்று பார்த்திருந்திருந்தும், ஏனோ அப்படி பேசுவார்கள். இங்கேயும் மாலையில் வாகன நெரிசலில் எத்தனையோ பேர் சாலையை விட்டு கரையில் வண்டியை ஓட்டி செல்கிறார்கள் (அங்கு வண்டியை ஓட்டக் கூடாது என்று விதி இருந்தும்). அதற்கு மேல் போக பாதை இல்லை என்றதும் சாலைக்குள் வர, முன்னேறி போறவனையும் போக விடாமல் தங்கி கொண்டிருப்பார்கள். எல்லா கண்ராவியும் இங்கேயும் உண்டு. தெருவுக்கு தெரு பிச்சை காரர்கள் இங்கேயும் உண்டு. "Hey! Man! U have a dollar change" - என்று கேட்கும் கருப்பண்ணன். பாலத்திற்க்கு அடியில் தூங்கி விட்டு, "Homeless! Hungry! Help Please! God Bless You" என்று சோம்பேறித்தனமாக அட்டையை வைத்துக் கொண்டு சிக்னலில் பிச்சை எடுக்கும் வெள்ளையன். தாளமே இல்லாமல் ஒரு கொட்டை வைத்துக்கொண்டு "டண்ட நக்கர" என்று தட்டிக் கொண்டு தட்டு ஏந்தும் கருப்பண்ணன். இப்படி இந்த சின்ன ஊரிலேயே என்னால் 100 பிச்சை காரர்களை காட்ட முடியும். தொலை தூரம் போகும் பஸ்ஸில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததும் இடத்திற்க்காக அடித்து கொள்ளும் அமெரிக்கர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்க்காக நான் அமெரிக்காவை குறை சொல்ல வில்லை. எல்லா நாட்டிலும் எல்லாமும் இருக்கிறது என்றே சொல்கிறேன்.

அமெரிக்காவிலும் எல்லா ஒழுங்கும், எல்லாம் தனக்கு தாராளமாய் கிடைக்கும் என்பது வரைக்கும் தான். ஏனோ! எதற்க்கெடுத்தாலும் "அமெரிக்காவை பார்! ஜப்பானை பார்!" என்று பாடம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள் ( என்னடா 'அன்னியன்' -அ பத்தியான்னு நினைக்காதீர்கள். இது வேற).

இந்த பதிவை நான் போட காரணமே "கிழட்டு அனுபவங்கள்" என்று ராஜசேகரன் எழுதிய பதிவினால் தான். ஏதோ பெரிய மேதாவி போல் " தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது." "இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? " என்று சொல்லியிருந்தார். சரி, அது அவரது அபிப்பிராயம் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இது ஏதோ குஷ்பு மேட்டரும் இல்லை, "பெண் சுதந்திரம்" மேட்டரும் இல்லை.

ஐயா! மேதாவியே! அயல்நாட்டிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தங்களுக்கு என் தாய் நாட்டை பற்றி என்ன நக்கல்?. அயல் நாட்டுக்கு போங்கள். நன்றாக சம்பாதியுங்கள். முடிந்தால் தாயகம் திரும்பி வாருங்கள். இல்லை "சூழ்நிலை" காரணமாகவோ, இல்லை "இந்தியா உங்களுக்கு வாழ தகுதியற்ற நாடு என்று நீங்கள் நினைத்தாலோ" அங்கேயே குடிமகனாகி விடுங்கள். அதில் தப்பேதும் இல்லை. அது அவன் அவன் விருப்பம்.

ஆனால், அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு, பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். ஏதோ ஒரு A/C அறையில் உட்கார்ந்து கொண்டு, ஓசியில் ஒரு இனையம் கிடைத்ததும் உங்கள் புண்ணாக்கு மேதாவி தனத்தை "இந்தியா ஒரு போதும் முன்னேற போவதில்லை" "நான் சீனா போயிருக்கிறேன்" "ஜப்பான் போயிருக்கிறேன்" என்று கேணத்தனமாக பேசாதீர்கள். நீங்கள் வேறு நாட்டை பற்றி உயர்வாக தாராளமாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஏன் எதற்க்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்கிறீர்கள். நீங்கள் வந்து இறங்கியவுடன் பளிங்கு போல சாலையும், பல்லக்கு போல காரும் இருந்தால் தான் அது உங்களுக்கு வளர்ந்த இந்தியாவாக தெரியும் என்றால், அது உங்கள் தவறு.

தன் வேலையை விட்டு அடுத்தவர் பசி போக்க உழைத்து கொண்டிருக்கும் இந்த மதுரை இளைஞரும் இந்தியாவில் தான் இருக்கிறார்.

ஏழை மாணவிக்காக பணம் சேர்த்து கொடுத்து சந்தோசமாக இருக்கிறது என்று சொல்லும் இந்த டோண்டு ராகவனும், பாலாவும் இந்தியாவில் தான் இருக்கிறார். முட்டி அளவு சென்னை மழை நீரில் செருப்பை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக கூறும் இவர்கள், அதற்க்காக 'இந்தியா முன்னேறாது' என்றா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் ஒரு ஏழை மாணவிக்கு உதவுவது. அது அவர்களின் நல்ல எண்ணம்.

தன்னால் முடிந்த கல்வியை ஏழை மாணவர்களுக்கு கற்று கொடுக்க, நேரம் ஒதுக்கி, இந்தியா முன்னேற வேண்டும் என்று இருக்கும் இவர்களும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இவர்களின் கனவு இது தான்.

இவர்கள் திரு. அம்பானியோ. டாட்டாவோ கிடையாது. நம் ஒருவரால் என்ன மாற்றம் கொண்டு வர முடியும் என்று சப்பை கட்டுபவர்களுக்கு மத்தியில், சாதாரண மக்களாய் இருந்து தன்னால் முடிந்தவற்றை தன் தாய் நாட்டுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடம் கேட்டால், இந்தியா "சீனா மாதிரியோ! அமெரிக்கா மாதிரியோ" ஆக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். "நான் நன்றாக இருக்கிறேன். என்னால் என் தாய் நாட்டுக்கு, என் மக்களுக்கு முடிந்ததை செய்வது என் கடமை " என்று தான் சொல்வார்கள். இவர்கள் சாலை உடைந்து கிடந்தாலும், தன்னால் ஒரு கல்லை எடுத்து போட முடியுமா என்று பார்ப்பார்கள். இந்தியாவில் எதுவுமே சரியில்லை என்று உம்மை போல சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட இவர்களின் இந்தியாவிற்க்கு, உம்மை போன்றவர்களின் பரிதாபமோ, கரிசனமோ தேவை இல்லை.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் மனிதன்.

இருப்பதை சிறப்பாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் இந்தியர்கள்.

இவர்களுக்கு (இந்தியர்களுக்கு) உங்கள் புண்ணாக்கு அனுதாபம் தேவை இல்லை.

பரபரப்பாக எழுத வேண்டும் என்றால் "பெண் விடுதலை" "கற்பு" "ஆண் ஆதிக்கம்" என்று எழுதுங்கள். கேணத்தனமாக எதற்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்காதீர்கள்.

அன்புடன், சிவா.