Friday, January 13, 2006

பொங்கல் விடலாம் வாங்க

நாளைக்கு பொங்கல். ம்ம்ம்ம். இந்த தடவை அமெரிக்காவுல மாட்டிக்கிட்டேன். சரி! இங்கே இருந்து ஒன்னும உருப்பட போறதில்லை. பொங்கல் விட்ட புராணத்தையாவது எழுதலாம்னு கிளம்பிட்டேன். இன்னைக்கு காலைல நண்பர் நடாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது, உங்க ஊர்ல பொங்கல் எப்படி இருக்கும் சிவா என்று கேட்டார். ஸ்டவ்ல பொங்கல் வச்சிட்டு டி.வி முன்னாடி உட்கார்ந்து கொண்டாடுற பொங்கல் இல்லப்பா. அந்த பொங்கலே தனி, அத ரெண்டு வார்த்தைல சொல்ல முடியாது. பதிவாகவே போட்டுடறேன். படிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டேன். எனக்கு பிடித்த பண்டிகைகளிலே முதல் இடம் பொங்கல் தான். அது ஒரு உயிரோட்டமான பண்டிகை.

பொங்கலுக்கு ஒரு வாரத்திற்க்கு முன்னமே கிராமத்தில் எல்லா வீடும் களை கட்ட ஆரம்பித்துவிடும். முதல் வேலை வீட்டுக்கு வெள்ளை அடிப்பது. சந்தையில் தான் வெள்ளை அடிக்க சிப்பு சுண்ணாம்பு கிடைக்கும். எங்க ஊருல செவ்வாய்கிழமை. திசையன்விளைல வெள்ளிக்கிழமை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருல சந்தை இருக்கும். சிப்பி சுண்ணாம்பு படி ஒரு ரூபாய்க்கு ஒரு பத்து படி அள்ளிக்கிட்டு வந்து அப்பாகிட்ட கொடுத்தா, அத ஒரு பெரிய மண்பானைல தண்ணி ஊத்தி நீத்த போடுவாங்க. ரெண்டு நாள் கழித்து வெள்ளை அடிக்க சுண்ணாம்பு ரெடி. ஒரு பனை பாளைய எடுத்து சுத்தியல வச்சி நச்சுன்னு ரெண்டு அடி அடி அடிச்சா வெள்ள அடிக்க பிரஷ் ரெடி. வீட்ல ரெண்டு நாளைக்கு பரபரப்பா இருக்கும். "யப்பூ! எனக்கும் கொஞ்சம் வெள்ள அடிச்சி கொடுத்திருப்பூ' ன்னு அத்தை மாமான்னு ஊருல நெறைய கோரிக்கை இருக்கும். எல்லாம் முடிச்சி கொடுக்கவே நாலு நாலாகிடும். இத முடிச்சிட்டு நம்ம பீட்டர் அண்ணன கூட்டிக்கிட்டு தேரிக்கு போய் பனை ஓலை வெட்டி வருமோம்.

அப்புறம் பொங்காங்கட்டி செய்ற வேலை. பொங்காங்கட்டின்னா பொங்கல் விட அடுப்பு கல். வெறும் செங்கலையோ, கல்லையோ அடுப்பாக வைப்பது கிடையாது. அதற்கென்று மண் குழைத்து ஒரு வடிவத்தில் செய்வது தான் பொங்காங்கட்டி. பொங்காங்கட்டி செய்ய களிமண் வெட்ட, ஒரு மம்பட்டியையும் ஒரு வாளியையும் எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். நல்ல களிமண்ணில் தான் கட்டி நன்றாக வரும். அதனால் ஊரில் ஓடைகரையில் வெட்டி ஒரு இடத்தில் ஊரே வெட்டி வெட்டி என் ஆழத்திற்க்கு பள்ளம் கிடக்கும். அதில் இறங்கி மஞ்சள் களிமண்ணை வெட்டி வர வேண்டும். அதை தண்ணில குழைத்து ஒரு சட்டியில் போட்டு கவுத்தால் சட்டி போல பொங்காங்கட்டி ரெடி. அதோடு முடிவதில்லை. அதற்க்கு வெள்ளை அடித்து, காவி அடித்து அழகு படுத்தினால் தான் அது பொங்காங்கட்டி. இல்லான்னா அது மண்ணாங்கட்டி.

பொங்கலுக்கு முந்தின நாள் தான் ஊரே அல்லோல படும். அன்று ஊரில் சிறப்பு சந்தை இருக்கும். பொங்கலுக்கு காத்திருப்பதே அந்த கரும்புக்காக தான். அம்மாவ கூட்டிக்கிட்டு சந்தைக்கு போனா, ரெண்டு கரும்பு, மஞ்சககுலை, காய்கறி. இன்னொன்ன விட்டுட்டேன். பனங்கிழங்கு. ம்ம்ம்ம். எல்லாத்தையும் வாங்கி வருவோம். கடையில இருந்து பச்சரிசி, சர்க்கரை, பூஜை பொருள் எல்லாம் அப்பா வாங்கி வர, பொங்கல் விட எல்லாம் ரெடி. அம்மா வீடு, முற்றம் எல்லாம் கோலம் போட்டு முடிக்க எப்படியும் இரவு 12 ஆகி விடும்.

காலைல 4 மணிக்கே எழுப்பி விடுவார்கள். தோட்டத்துல அந்த மார்கழி குளிரிலும் (தை ஒன்று தான இன்னைக்கு. மார்கழி குளிர் இருக்கும் தானே) தொட்டில கெடக்குற பச்சத் தண்ணில நடுங்கிகிட்டே குளிக்கும் சுகம் தனி தான். அப்புறம் நாம ஆவலா காத்துக்கிட்டு இருக்கிற கோடு போட்ட சட்டையையும் டவுசரையும் போட்டு அழகு பார்ப்பது அடுத்த சுகம்.

இனி பொங்கல் விட வேண்டியது தான். சூரியன் உதிக்கும் போது பொங்கல் பொங்கியிருக்க வேண்டும். அதனால் காலை 5 மணிக்கே அடுப்பில் பானை ஏறியிருக்கும். மஞ்சள்குலை சுற்றப்பட்டு குங்குமம் விபூதி எல்லாம் பூசப்பட்டு மங்களகரமாக இரண்டு பானை ரெடியாக இருக்கும். ஒன்று வெண் பொங்கல். இன்னொன்று சர்க்கரை பொங்கல். முற்றத்தில் போன வருடம் பொங்கல் விட்ட இடத்தை தோண்டி கண்டுபிடித்து அந்த போன வருட சாம்பலில் மேல் இலை போட்டுதான் சாமி படையல் போடுவோம். இந்த வருடம் பொங்கலும் அதே இடத்தில் தான் விடுவோம். எத்தனை வருடம் ஆனாலும் பொங்கல் விடும் இடம் மாறாது. மழை நேரத்தில் காட்டுக்குள் இருந்து புடுங்கி நட்ட என் தக்காளி, கத்தரி செடி எல்லாம் காய்த்திருக்கும். அதையும் பரித்து படையலில் வைத்துக்கொள்வேன். சாமிக்கு என் படையல் அது.

அப்பா ஆரம்பித்து வைக்க, நான், அண்ணன், அக்கா மூவரும் ஆளுக்கொரு கரையில் பனை ஓலையயை வைத்து தீ மூட்டிக்கொண்டிருப்போம். பொங்கல் பொங்கி வந்ததும் அம்மா குலவை விட, சூரியன் எட்டி பார்ப்பதற்க்கும் சரியாக இருக்கும். எல்லோரும் கை கூப்பி வணங்கி விட்டு தீ மூட்டும் வேலையை தொடர்வோம். பொங்கல் ரெடியானதும், அப்பா பூஜை செய்து தீபாராதனை காட்டுவார்கள். நம்ம கண் முழுவதும் அந்த கரும்பு மேல தான் இருக்கும். எந்த இடத்தில் வெட்டினா பெரிய கணுவா வரும். பல்லுக்கு வேலை இல்லாம சாப்பிடலாம் என்று மூவருக்கும் போட்டி வரும். உடனே பொங்கலில் கை வைத்தால் அம்மாவிடம் இருந்து அடி தான் விழும். ஏனென்றால் முதலில் கவனிக்க படவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு கொடுத்தபின் தான் நாம் சாப்பிட வேண்டும். அது யார் சொல்லுங்க பார்ப்போம்....

அவர் தான். காக்கா. பொங்கல் கொஞ்சம், வாழை பழம் என்று எடுத்துக்கிட்டு மாடியேறி 'கா..கா..காக்காச்சி' அப்படின்னு கூப்பிடணும். எங்கிருந்தாவது ஒரு காக்கா வந்து விடுவார். வந்து மாடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் சந்தேகத்தில் நம்மை பார்ப்பார். நேத்து தான கிண்ணத்தோட எஸ்கேப் ஆகும் போது இவன் கல்ல விட்டு எறிந்தான். இப்போ வாழை இலையில் பழம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் கொடுத்து சாப்பிட சொல்கிறானே. என்ன மேட்டர்னு தெரியலையேன்னு யோசிப்பார். அப்புறம் கொஞ்சம் நம்பிக்கை வைத்து சாப்பிட்டு பார்த்துவிட்டு அவர் சொந்தங்களையும் கூப்பிட ஆரம்பிப்பார். எல்லோர் வீட்டிலும் இந்த பழக்கம் உண்டு. அன்று ஊரில் இருக்கும் எல்லோருக்குமே பொங்கல் தான்.

அப்புறமும் உடனே சாப்பிட முடியாது. அத்தைக்கு, மாமாவுக்கு என்று ஒரு பட்டியல் இருக்கும். சில பேர் கிருஸ்தவர்கள். நமக்கு கிருஸ்மசுக்கு கரெக்டா வந்து விடும். சில பேர் மாலையில் தான் பொங்கல் விடுவார்கள். அவர்கள் வழி அப்படி. அப்புறம் சாப்பிட்டு விட்டு, ஒரு கரும்பை கடிச்சிக்கிட்டே அத்தை வீட்டில் ஆஜராகி விடுவேன். 'என்னல! பொங்கல் விட்டாச்சா" " ஆமாம்! மாமா. நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல போல" "ஏல! ஒங்க அத்தய பத்தி தாம் தெரியும்ல. இவ என்னைக்கு சீக்கிரம் ஆரம்பிச்சா". அத்தைக்கு தெரியும் நான் அங்கே நான் எதற்கு முதலில் ஆஜர் என்று. எல்லா பொங்கலுக்கும் படம் பார்க்க 50 பைசா கொடுப்பது அத்தை தான். "என்னல படம் போட்டிருக்கிறான்". "சின்ன வீடு போட்டிருக்கிறான் மாமா. எம்ஜார் படம் விக்கிரமாதித்தனும் போட்டிருக்கிறான்". 'சின்ன வீடு' லேடிஸ் ஒன்லி படம் என்பதால், தலைவர் படம் தான் அந்த பொங்கலுக்கு. அடிச்சி புடிச்சி கவுண்டர்ல எறிகுதிச்சி டிக்கட் வாங்கி படம் பார்த்தா, ஒரு வருசத்துக்கு திருப்தியா இருக்கும். தலைவர் பாவாடைய கட்டிக்கிட்டு வாள் சண்டை போடுவார் பாருங்க. அது தாங்க பொங்கல் படம்.

இப்படியே பொங்கல் நாள் ஓடி விடும். அடுத்த நாள் பொங்கல் விளையாட்டு விழா. குழந்தை முதல் குமரி வரை. தாய்குலம், தந்தை குலம் எல்லா குலத்திற்க்கு அன்று விளையாட்டு உண்டு. முறுக்கு கடித்தல், பலுன் உடைத்தல், ஓட்ட பந்தையம் என்று ஒரு கரையில் போய் கொண்டிருக்கும். ஊசி கோர்த்தல், சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் இப்படி பெண்களுக்கும் விளையாட்டு உண்டு. அப்புறம் கயிறு இழுத்தல். ஸ்லோ சைக்கிள், பானை உடைத்தல் இன்னும் நிறைய. இந்த விளையாட்டு பற்றி தனி பதிவா பார்க்கலாம். கடைசில ரெண்டு பேரையாவது அடிச்சி வீட்டுல படுக்க வைக்கலன்னா நமக்கு தூக்கம் வராதே. அதுக்கு தான் கபடி இருக்குதே. பயலுவ தூக்கி வீச தான் செய்வானுவ. சில பெரிசுங்க கொலுத்து போய் களத்துல இறங்கி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடும் நெலையும் ஆகிருக்கு. நான் இன்று வரை கபடி பார்ப்பதோடு சரி. ஒடிச்சி வீசிருவானுங்க, பாவி பயலுவ.

அப்புறம் பரிசு கொடுக்கும் போது 'ஏல! எவம்ல பரிசு கொடுக்குறது. மானங்கெட்டவனுங்களா. கண்ட நாய்ங்கள தலைவர்னு சொல்றீங்களேல" அப்படின்னு அருவாள தூக்கி, மாலைக்கு அடிச்சிக்கிட்டு முடிச்சோம்னா தான் பொங்கல் விழா சிறப்பாக முடிந்ததாக ஒரு திருப்தி இருக்கும். போன வருசம் யாருமே அடிச்சிக்கல. இந்த தடவை என் நண்பனிடம் கேட்டால் தான் தெரியும். அடுத்த தடவை ஏதாவது நாமலாவது போய் செய்யணும். வாழ்க்கைனா ஒரு சுவாரசியம் இருக்கணும் இல்லையா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஒரு நாளுக்காக ரொம்பவே ஏங்கும் என் மனம். பணம் மட்டும் இல்லடா வாழ்க்கை. அதுக்கும் மேல ஒன்னு இருக்குன்னு உணர்த்துவது இந்த பொங்கல் விழா தான். கோபுரத்திலும் வெறுமை இருக்கும். குடிசையிலும் சந்தோசம் இருக்கும் என்பது இப்படி ஒரு பொங்கல் கொண்டாடி பார்த்தால் தெரியும். அந்த வகையில் நான் கிராமத்தானாக ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவன். இத்தனையையும் விட்டுப்புட்டு இந்த தடவை இங்கே கம்யூட்டரில் உட்கார்ந்துக்கிட்டு உங்ககிட்ட புராணம் பாடவேண்டியதா போச்சு. இது தான் நான் மிஸ் பண்ணும் கடைசி பொங்கலாக இருக்கணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அடுத்த பொங்கலுக்கு லைவ் கவரேஜ் பண்ணிடலாம்டே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து நண்பர்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

14 comments:

குமரன் (Kumaran) said...

பாத்து சிவா. அடுத்த வருஷம் உங்களைத் தலைவர்ன்னு சொல்லி பரிசு கொடுக்க விட்டுறுவாங்கன்னு நினைக்கிறேன். வெளிநாடு எல்லாம் போயிட்டு வர்றீங்கல்லா? பாத்து. அருவாளைப் போட்றப் போறாங்க.

Unknown said...

பொங்கல் வாழ்த்துக்கள்

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

ஞானவெட்டியான் said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Thekkikattan|தெகா said...

என்ன சிவா சாரே, வுங்க வீட்டுல அடூ மாடெல்லாம் இல்லையா...இல்லை இன்னவொரு பதிவு வைச்சியிர்க்கியளா தனியா...அடுத்த வருசம் லைவ் கவரேஸ் சா...அடப் பாவி மனுசா எங்கள தனியா வுட்டுப் புட்டு போறீகளா...சரி இந்த புடிங்க அமெரிக்கா பொங்கல் சுடச் சுட மைக்ரோவெவ்ல பண்ணது.

தெக்கிக்காட்டான்.

Unknown said...

Siva, you have written it in such a way that, I felt as if I am at your village with you......rhombah nalla pathivu...Inniya Pongal nal Vaazthukal Siva.....

Anbudan,
Natarajan

b said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

வாழிய நலமே!

சிங். செயகுமார். said...

சிவா அண்ணே ! பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் கொண்டாட இதோ வந்துகிட்டே இருக்கேன்.வூட்ல அல்லாருக்கும் நம்ம வாழ்த்த சொல்லிடுங்க!

ஜோ/Joe said...

தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் ,தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

"மழை நேரத்தில் காட்டுக்குள் இருந்து புடுங்கி நட்ட என் தக்காளி, கத்தரி செடி எல்லாம் காய்த்திருக்கும். அதையும் பரித்து படையலில் வைத்துக்கொள்வேன்"

அட! நானும் அப்படி செய்வேங்க.. காடெல்லாம் இல்லை .. முன்னல்லாம் எங்க வீட்டுக்கு கொல்லைப்புறமே காடு மாதிரி இருக்கும். அங்கருந்து பிடுங்கி வந்து தக்காளி, மாங்காய் செடிகளை நடுவேன்.

அதில் ஒரு மாங்காய் செடி பெரிசா வளர்ந்து 5 வருஷமா 150க்கு மேற்பட்ட மாங்காய் தருது.. ஆனா இப்ப நான் இங்க இருக்கேன்.. ம்ம் வீட்டுக்கு போய் தான் பார்க்கணும்.

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

சிவா said...

நண்பர்கள் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

குமரன்! நமக்கு தலைவர் பதவி எல்லாம் ஒத்து வராது குமரன். அடுத்தவன் பதவிக்கு அடித்துக்கொள்வது தான் சுவாரசியம். நாமே அடித்துக்கொள்ளலாமா :-))

வாங்க தெக்கிக்காட்டான். பல நாள் கழிச்சி வர்றீங்க. மைக்ரோவேவ் பொங்கலா..கொடுங்க கொடுங்க. இங்கே வேற வழி. மாடெல்லாம் எங்க வீட்டில் இருந்ததில்லை. அதனால் மாட்டுப்பொங்கல் கொண்டாடினது இல்லை. அதான் எழுதாம விட்டுட்டேன். நீங்க எழுதுங்களேன்.

கீதா! முதல் புராணம் வருகைக்கு நன்றி. ஊரில் எல்லாமே அப்படி முளைத்த செடிகளும் மரங்களும் தானே. நீங்களும் சின்ன வயதில் என்ஜாய் பண்ணிருப்பீங்க போல. கொடுதது வைத்த வாழ்க்கை. இல்லையா :-)

Santhosh said...

என்ன சிவா பொங்கள் வைச்சதோட சரி வருசப்பிறப்பே வரப்போகுது. ஆளேக்காணோம்.

சிவா said...

ஆமாம் சந்தோஷ். கொஞ்சம் வேலையாகி போச்சு. சீக்கிரம் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறேன். :-). வந்து பார்த்ததுக்கு நன்றி