Sunday, December 11, 2005

கல்யாணமாம் கல்யாணம் -3 (கடைசி)

(சும்மா ஆரம்பிச்சி, இந்த பதிவு இழு இழுன்னு இழுத்துக்கிட்டு போயிடுச்சி. மன்னிக்கனும். இந்த பதிவுல முடிச்சிடறேன்.) . பாகம்-1 பாகம்-2

அடுத்த நாள். கல்யாண நாள். காலையிலேயே பொண்ணுவீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தோம். அதே ஜீப். மாப்பிள்ளை காரில் ஏறப்போன அண்ணன் முருகேசை "ஏல! எங்கள மாத்திரம் ஆத்துல தள்ளி விட்டுட்டு நீ சொகுசா போலாம்ணு பாக்றியா! ஜீப்ல எங்க கூட வால" அப்படின்னு துரை மாமா, மாப்பிள்ளையையும் எங்க கூட ஏத்திவிட வண்டி கிளம்பியது. போக போக வழியில் இருக்கும் சாமிக்கெல்லாம் தேங்காய் உடைத்துக் கொண்டே வண்டி கிளம்பியது.


பொண்ணு வீட்ல எங்களுக்கெல்லாம் வேலை இருக்காது. நாங்க சும்மா தாமிரபரணி ஆத்துல போய் காக்கா நீச்சல் அடிக்கிறது, மீன் புடிக்கிறது போன்ற வேலைகளை பார்த்திக் கொண்டிருந்தோம். இல்லன்னா வான வெடி விடுவாறே அந்த தாத்தாக்கிட்ட செட்டில் ஆகிடுவோம். கைல வச்சி ராக்கெட்ட என்னம்மா வுடுவாரு. ஒரு கயிறுல தணல வச்சி, கைல வெடிய பத்தவச்சி வெடிக்க போகுதுன்னா, தூக்கி மேலே வீசுவாரே, செம த்ரில்லிங் அது.

அப்புறம் திடிர்னு கல்யாண் வீட்ல ஒரே பரபரப்பு. மாப்பிள்ளை மயங்கி விழுந்துட்டாராம். அடப்பாவிங்களா இது என்ன உல்டாவா இருக்குன்னு போய் பாத்தா, எல்லோரும் மாப்பிள்ளைய உக்காரவச்சி விசிறிக்கிட்டு இருந்தாவ. மாலை கணம் தாங்க முடியாம மாப்பிள்ளை மயங்கி விழுந்திட்டாருன்னு ஒரே கேலி. அப்புறம் தாலி கட்ட ரெடியானதும், பொண்ண அழைச்சிட்டு வந்தாங்க. அதிக மேக்கப் இல்லாம பொண்ணு வந்தது. ஒரு கல்யாணத்துல அப்படித்தான், நிறைய மேக்கப் போட்டு "ஏ! பொண்ண மாத்திட்டாங்கடோ" அப்படின்னு மாப்பிளளையோட அம்மா ஏக ரகளை பண்ணிட்டாங்க. அப்புறம் அப்பின பாண்ட்ஸ் பவுடரை எல்லாம் எடுத்தப்புறம் தான் அமைதி ஆனாங்க.


பொண்ணு குனிஞ்ச தல நிமிராம வருது (சொல்லி வச்சி கூட்டி வருவாங்களோ?). ( ஊருக்கு வந்தப்புறம் தான் பாக்கணும், அக்கா போடற சவுண்ட்ல குடிகாரன் போதை கூட எறங்கிடும்) அப்புறம் என்ன, ஆயிரம் வாலா வெடி வெடிக்க, கெட்டி மேளம் ஒலிக்க அண்ணன் முருகேசு தாலி கட்டினார். சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாங்க எல்லோரும் ஊர் கெளம்பினோம்.

கடைசியா ஒன்னு இருக்கே. மாலையில் மாப்பிள்ளை வரவேற்பு. மாப்பிள்ளை வாராரா அப்படின்னு ஊர் எல்லையில இருந்து பார்த்துக்கிட்டே இருந்தோம். எதுக்கு தெரியுமா?. பாட்டு போடத்தான். தூரத்தில் வண்டி தெரிந்ததும், ஓடி வந்து செட் கார அண்ணன் கிட்ட வந்து சொன்னோம்னா, டக்குன்னு பாட்டு ஒன்ன தட்டி விடுவாரு. "மணமகளே! மருமகளே! வா..வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா..வா...குணம் இருக்கும் குலமகளே வா..வா". இந்த பாட்டு போட்டாலே ஊர் சனம் எல்லாம் உசாராயிடும். பொண்ணு-மாப்பிள்ளை வருதுன்னு. கல்யாணத்துக்கு போக முடியாத எல்லாரும் ஓடி போய் சாலை ஓரத்தில் நின்னுக்கிடுவாங்க. அந்த மக்கள் முகத்தை பார்க்கணுமே, பொண்ணு எப்படி இருக்குன்னு பார்க்க அப்படி ஒரு ஆவலோடு நிற்ப்பார்கள். (பார்த்தவுடன் வரும் கமெட்ட போட ஒரு தனி பதிவே போடலாம். "ஏலா! பொண்ணு கொஞ்சம் ஒயரம் கம்மியா தான் இருக்கு" " முருகேசு கலருக்கு கொஞ்சம் கம்மி தான்" இப்படி நெறைய). அப்புறம் வரவேற்பு. நாங்க பரிமாறுவதில் பிசியாகி விடுவோம்.

ஒரே ஒரு கவலை மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். "நாளைக்கு ஸ்கூலுக்கு போவணுமே"

7 comments:

சிங். செயகுமார். said...

ஏன்யா ஒன்ன எல்லாம் எவன்யா மைக் செட் போட சாவி குடுத்தவன்
நான் எடுத்து வச்சிருந்த அந்த பாட்டு எங்கே? "வாராயோ என் தோழி வாராயோ மனப்பந்தல் கான வாராயோ?"இன்னோரு முறை எனக்கு தெரியாம மைக் செட்ட போடு, அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய!

குமரன் (Kumaran) said...

காக்கா நீச்சல்ன்னா என்ன சிவா?

ramachandranusha(உஷா) said...

"நினைவிடை தோயல்" நல்லா இருக்கு. கடைசி வரி ரொம்ப நல்லா இருக்கு.

துளசி கோபால் said...

என்னங்க சிவா, கல்யாணச் சாப்பாட்டை வர்ணிக்காம, மெனு எல்லாம் விவரிக்காம இப்படி விருந்துன்னு மொட்டையா முடிச்சிட்டீங்க?

'பொண்ணு மாப்பிளே ச்சும்மாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே' பாட்டுப் போட்டுருக்கலாம்தானே?

மூணு பதிவுக்கே இழுத்துக்கிட்டே போகுது'ன்னு சொல்லி 'என்னமோ 'சொல்ல் வர்றப்புலே இருக்கேப்பா:-)))

[ 'b u s p a s s' ] said...

excellent blog.

kalakkiteeenga.

"adutha naal school..", enga amma ithu maathiri vizhakal'la adikadi enakku nyabaga paduthi vayithul puliya karaippaanga.

சிவா said...

சிங்! வாங்க. ரெக்கார்டு ஒடஞ்சி போச்சி மக்கா! அதனால 'வாராயோ' பாட்டு போட முடியாம போச்சி :-)). அடுத்த தடவை ஒங்ககிட்ட உத்தரவு வாங்கிக்கிட்டு தான் மைக் செட் பக்கம் போறேன். சரியாவே :-)

குமரன்! காக்கா நீச்சல்னா...காக்கா குளிச்சி பாத்திருக்கீங்கலா? அது என்னைக்காவது ஆழமான குளத்துல, ஏரில குளிக்குமா?. கொஞ்சூண்டு தண்ணில அப்படி இப்படி உருண்டு எந்திரிக்கும். அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. ஆழம் இல்லாத எடமா பாத்து, உருண்டு எந்திரிக்கிறது தான் 'காக்கா நீச்சல்'.

உஷா! வாங்க. நல்லாருக்கீங்கலா. பாராட்டுக்கு நன்றி.

துளசி அக்கா! கதை இழு இழுன்னு இழுத்திடுச்சா (உங்க நியூசிலாந்துக்கு போட்டியா வந்துர கூடாதே :-)), அதனால கொஞ்சம் எடிட்டிங் போட்டு அதுல மெனு கட் ஆகி போச்சி..மன்னிச்சிக்கோங்க..ஒங்க நியூசிலாந்து எப்படி போகுது :-))

புதுசா வந்துருகிற 'பஸ்பாஸ்' அண்ணாச்சியின் பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

Anonymous said...

ஆஹா! வலைபதிவு(blog)லேயும் மெகா சீரியல் ஆரம்பிச்சிட்டாய்ங்க போலருக்கே! எப்பிடி எஸ்ஸாவறது??