Saturday, November 26, 2005

கல்யாணமாம் கல்யாணம் -1


ஒரு கல்யாண வீட்டுக்கு போகலாமா?. எங்கன்னு கேக்கறீங்களா?. எங்க கிராமத்துல தான். யாருக்கு கல்யாணம்?. நம்ம முருகேசன் அண்ணனுக்கு தான். சும்மா! உங்கள கிராமத்து கல்யாணத்த காட்டலாம்னு நெனைச்சேன். அப்படியே ஒரு 18 வருசம் பின்னாடி போயிரலாம். . சரி தொடஙகலாமா.....

எங்க கிராமத்துல மொத்தமே 40 வீடு தான். எல்லோரும் சொக்காரனுங்க.. சொந்தகாரனுங்க.. ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும். கல்யாணம்னா சொல்ல வேண்டுமா! . திருவிழா தான் போங்க. நிச்சயம் பண்ண போறதுல இருந்தே ஜாலி தான். அதுவும் என்னை போல வாண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். மொதல்ல பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுடலாம். அப்புறம் புதுசா ஊர் பாக்கலாம். இன்னும் நெறைய இருக்கு. ஒவ்வொன்னா பாக்கலாம்.

காலைலயே ஒரு மகிந்திரா ஜீப் வந்துட்டு. முருகேசன் அண்ணன் ஒவ்வொரு வீடா வந்து கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். "யக்கா! ரெடியா! மயினி! ரெடியா! வண்டி வந்துட்டு. கெளம்புங்க" இப்படி வீடு வீடாக கெளப்பிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை முருகேசு. எல்லோரையும் அள்ளிக்கிட்டு மூச்சு முட்ட ஜீப் கெளம்பியது, பொண்ணு பாக்க. இந்த மாதிரி சமயங்களில் தான் பெரிசுங்க குசும்பு , நக்கல், நையாண்டின்னு பொளந்து கட்டும். "ஏல! தெக்கயா பொண்ணு எடுக்க. வெளங்குமாடே! ஏற்கனவே மயினி கத்துனா ஊர்ல எவனும் இருக்க முடியல! இதுல எதிர்பாட்டு பாட தெக்காட்டு காரிய வேற விட்டா ஊரு தாங்குமால. பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடி ஊர் பயலுவலயும் நெனைச்சு பாருங்கல" வாலகுரு மாமா முருகேசு அண்ணனை பயம் காட்டிக்கொண்டிருந்தார். "இல்லண்ணே! நம்ம சொடலமாடன் சாமி போன கோயில் கொடைல தம்பிக்கு தெக்க தான் பொண்ணு எடுக்கணும்னு வாக்கு சொல்லிருச்சுல்ல. பய என்ன பண்ணுவான்" இது துரை மாமா.

ஆழ்வார்தோப்பு வந்து விட்டது. ஆத்துக்குள் அத்தனை பேரையும் வைத்து இழுக்க முடியாமல், போராடி தோற்று , ஜீப் ஆத்துக்குள்ளேயெ நின்று விட்டது. எங்க ஊர்ல ஆறு, குளம் எதுவும் இல்லை என்பதால், வாண்டுகள் எல்லோரும் தாமிரபரணி ஆத்துக்குள் இறங்கி வெளையாட ஆரம்பித்தோம். ஜீப் டிரைவர் ஒரு நீள 'ட' மாதிரி ஒரு கம்பியை ஜீப்பின் முன்னாடி விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்தி போராடிக்கிட்டு இருந்தார். வண்டி ஒரு வழியாக மூச்சு விட, எல்லோரும் ஆத்துல மீன் பிடிக்கிற வேலைய விட்டுட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்ல எங்க ஜீப்ப பாத்தவுடன் ஊர் ஜனம் எல்லாம் வரிசையாக பாதை ஓரத்தில் நின்னு மாப்பிள்ளை ஜீப்புக்குள்ள எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள்.

பொண்ணு வீட்ல பெரிய வரவேற்பு. அங்கேயும் ஊர் பெரிசுகள் எல்லாம் ஆஜர். ஒவ்வொன்னும் அது அதுக்கு ஏற்ற மாதிரி கும்பல் சேர்த்துக்கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தன. பெரியவர்கள் தட்டு மாற்றிக்கொண்டார்கள்.

"யண்ணே! பொண்னு கலரு கம்மியா இருக்கும் போலயே" நம்ம துரை மாமாவிடம் கல்யாணி சித்தி.

"சும்மா. கெடடே. நம்ம மாப்ள மழைல நனைஞ்ச பன மரம் கலர்ல தான இருக்கான். அவனுக்கு இது போதும்டே. மயினிக்கு ஈடுக்கட்ட இது தாண்டே சரி. நிம்மதியா கள்ள குடிச்சிட்டு ஊர்ல அலம்ப முடியுதா. மயினி போடுற சந்தத்துல எல்லா போதையும் எறங்க்கிடுது " துரை மாமாவின் வழக்கமான நக்கல் தொடர்கிறது.

தட்டு மாற்றி, கல்யாண நாள் எல்லாம் குறித்து, சம்பிரதாயம் எல்லாம் முடிந்தவுடன், பந்தி ஆரம்பிக்கிறது. பொண்ணு வீட்டில் எல்லோருக்கும் ராஜ மரியாதை தான். போடுகிற இலையில் இருந்து பரிமாறுகிற இட்லி வரை மிக கவனமாக பரிமாறினார்கள். இல்லன்னா "பொண்ணு வீட்டுக்காரன் கிழிஞ்ச எலைய போட்டுட்டான்"னு பெரிய ரகளையை உண்டு பண்ண, மாமா மாதிரி ஊருக்கு ரெண்டு மூனு பேராவது இருப்பாங்க. எல்லாம் முடிந்து கிளம்ப ஊருக்கு ஆரம்பித்தோம்.

( கல்யாணத்துக்ககு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. காத்திருங்கள்)

9 comments:

சிங். செயகுமார். said...

ஒரு கல்யாணம் காட்சி ஊர்ல நடந்தா ஒம்போது நாளக்கி ஊர் சாப்பாடுதானா?
கட்டுபடியாகனும்ல அதான் ஊர விட்டு அடிச்சு வெரட்டிடாங்க!

குமரன் (Kumaran) said...

என்ன சிவா. திரும்ப ஊர்கதையை ஆரம்பிச்சாச்சா? இப்ப கல்யாணத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. முதல் பகுதி நல்லா வந்திருக்கு. குறைஞ்சது ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது ஒவ்வொரு பகுதியா போட்டு சீக்கிரம் முடிங்க. இல்லாட்டி விஷ்ணுசித்தர் வரலாறு மாதிரி மாசக்கணக்குல போகப்போகுது. :-)

துளசி கோபால் said...

இதென்ன அநியாயம் சிவா.

கல்யாணத்துக்கு எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்க?

நல்லா வந்திருக்கு சிவா.

வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Siva kalyanam marghazhikul nadanthu viduma? Avaludan kathu irukkiren TRC

சிவா said...

செயகுமார்! //** அதான் ஊர விட்டு அடிச்சு வெரட்டிடாங்க **// யார சொல்லறீங்க. என்னையா, உங்களையா?. உண்மை தான். ஒம்போது நாளைக்கு இல்லை. குறைந்தது மூனு நாளக்காவது.

குமரன்! விஷ்ணுசித்தர் வரலாறு மாதிரி எனக்கும் ஒரு தொடர் எழுதணும்னு ஆசை தான். ஆனா இதை அப்படி இழுக்க திட்டம் இல்லை.

வாங்க துளசி அக்கா! வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போ நிச்சயம் தானே ஆகி இருக்கு. கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிடறேன். ரெடிய இருங்க.

TRC அவர்களே! தவறாமல் எனது இந்த வாரபதிவையும் மறக்காமல் படித்து கருத்து சொன்னதற்க்கு நன்றி. கல்யாணத்திற்க்கு தை தானே நல்ல மாதம்?. :-) சீக்கிரம் முடித்துவிடலாம்.

Unknown said...

ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும்.

Miga Arrumai. Nadraga Rasitheen. Thodarga ummathu pani.

Anbudan,
Nata

நிலா said...

சிவா,
இந்தப் பதிவுக்கு பதில் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு முழுப் பத்வே போட்டுட்டேன். முடிஞ்சா பாருங்க

http://nilaraj.blogspot.com/2005/11/blog-post.html

ஜெகதீஸ்வரன் said...

Really Nice...

சிவா said...

நடா & ஜெகதீஸ்வரன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நிலா, உங்கள் பதிவை பார்த்து என் கருத்துக்களை கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.