Friday, November 11, 2005

பா..பா...பா...பா..பா...பாம்பு


பாம்பு.

என் தைரியத்தையும் வீரத்தையும் சோதிப்பதற்க்காகவே கடவுளால் படைக்க பட்ட ஒரு உயினினம். படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்புக்கு பொதுவாக ரெண்டு வேலைகள் தான் கொடுக்கப் பட்டிருக்கும். ஒன்னு, கதாநாயகி தலையில் பூவைத்து விடுவது, அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுவது, தொட்டில் ஆட்டுவது, வில்லியை பயங்காட்டுவது. இது (இராமநாராயணன்) சாமி பாம்பு. ரெண்டாவது, நேரே போய் ஹீரோ கழுத்துல போய் தொங்கிக்கிட்டு காமெடி பண்ணுறது. ஹீரோவும் "பா..பா..பா...பா" அப்படின்னு நமக்கு வயிறு வலி வரும் வரைக்கும் இழுத்துக்கிட்டே இருப்பாரு. "பா" க்கள் தாங்க முடியாமல் பாம்பும் வெறுத்துப் போய் இறங்கி பொந்துக்குள்ள போயிடும். அப்புறம் "ம்பு" அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ தொப்புன்னு மயக்கம் போட்டு விழுந்திடுவாரு. இது காமெடி பாம்பு. இப்போதெல்லாம் இராமநாராயணன் கலைஞரை வைத்து மட்டும் தான் படம் எடுப்பதால் (கழக கண்மணிகள் மன்னிக்கவும்), பாம்புகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் கோடம்பாக்கத்தை சுற்றி வருவாதாக கேள்வி.

எனக்கும் பாம்பை பார்த்தால் 'பா...பா...பா...பா.." தான். கிராமத்தில எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்பு ரொம்ப சகஜம். யாரு தோட்டத்திலாவது பாம்பு புகுந்திட்டுன்னா, என்னை மாதிரி அப்பாவிங்க ஜீவன்கள் கைல ஒரு கம்ப கொடுத்து பாம்பு அடிக்க அனுப்பிருவாங்க. எனக்கு பாம்பு என்று நினைத்தாலே உள்ளுக்குள் உதறும். அதன் வழ வழ உடம்பும், நெளிந்து வளைந்து ஒடும் ஓட்டமும், நினைத்தாலே சகலமும் ஒடுங்கி விடும். என்ன பண்ணறது?. ஆம்பளையா பொறந்துட்டோம். அதுவும் கிராமத்துல பொறந்துட்டோம். அதனால், கொஞ்சம் தைரியமா நடிச்சி தான் ஆவனும். பாம்பு வரும் போது எவன் மாட்டுகிறானோ அவன் தான் அன்னைக்கு "டாக் ஆஃப் த கிராமம்".

அப்படித்தான் ஒரு நாள் அத்தை வீட்டு தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. "எய்யா! ராசா! நம்ம தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. வந்து அடிய்யா" அப்படின்னு அத்தை, மகளுடன் வந்து என்னிடம் சொன்ன போது, என்னால் தட்ட முடியவில்ல. பாம்படிக்க போகும் போதெல்லாம் நான் வேண்டுவது "நல்ல பாம்பாகவோ, சாரை பாம்பாகவோ இருக்கக் கூடாது. பாம்பு கொஞ்சம் சின்னதாக இருந்தால் நல்லது. நம் மானம் காப்பாற்றப்படும்" என்று. இதுல வேற, 'ஏல! நல்ல பாம்ப அடிச்சி விட்டுறாதல! நெனவு வச்சி வந்து போட்டு தள்ளிடும்" என்று பெரிசுங்க வேற கொஞ்சம் இருக்கிற தைரியத்துலயும் மண் அள்ளி போட்டுங்க. "நீயா" மாதிரி படம் பார்த்து, அந்த நெனப்பு வேற நம்மை ஆட்டும். "ஒரு வேள இது ஜோடி பாம்பா இருக்குமோ" இதுவும் அதே பெருசு தான்.

கையில் ஒரு கம்பை கொடுத்து, பாம்பு இருப்பதாக தெரியும் இடத்தை காட்டி விட்டு எல்லோரும் பாதுகாப்பா ஒரு 30 அடி தள்ளி நின்று கொண்டார்கள். உள்ளுக்குள் உதறினாலும், அத்தை பொண்ணு வேற நம்ம சாகசத்தை பார்க்க நின்று கொண்டிருப்பதால், தடியை எடுத்துக் கொண்டு, எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு கிளம்பினேன். ஆடிப் போய்விட்டேன். சும்மா ஒரு 5 அடி நீளத்தில், எனக்கு சோதனையாக நின்று கொண்டிருந்து பாம்பு. என் நேரம், கோட்டைச் சுவரின் முக்கில் (Corner), ஓட வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இல்லன்னா, படம் காட்டி அதை விரட்டிட்டு "பாம்பு ஒடிடிச்சி" அப்படின்னு சொல்லிக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஒன்னு அது. இல்லன்னா நான். அப்படி ஒரு நெலம.

கொஞ்ச நேரம் நான் பாம்பு கூட போட்ட சிலம்பாட்டத்தில் சுத்தி இருக்கற பூச்செடி எல்லாம் ஒவ்வொன்னா மண்டைய போட, அத்தை தள்ளி நின்னு "ஏல! மனுசா! ஒன்ன பாம்படிக்க கூட்டி வந்தா! இருக்கற செடிய அடிச்சிக்கிட்டு இருக்கற" என்று சொல்ல, அத்தை பொண்ணு வேற நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்க, வீரம் வந்து பாம்பு மண்டைல ஒரே போடு. பாம்பும் மண்டைய போட, அப்புறம் அன்றைக்கு நான் தான் "டாக் ஆஃப் த கிராமம்".

சென்னை மடிப்பாக்கம் . நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே வசிக்க கூடிய இடம். வேலையில் சேர்ந்த புதிதில் அக்கா வீட்டில் அங்கு தான் தங்கி இருந்தேன். மழை பெய்தால் வெள்ளம் தான். சகலமும் வந்து போகும். அப்படித்தான் ஒரு பாம்பு பொழுது போகாமல் நேரே எதிரில் உள்ள மாமி வீட்டு சமையல் அறைக்குள் போய்விட்டது. நல்ல வேளை. மாமி பார்த்து விட்டார்கள். அசைவ பாம்புக்கு அது 'மாமி வீடு' என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு என்ன பசியோ, சமையல் அறையை உருட்ட போய்விட்டது. மாமி அலறிக் கொண்டு அக்கா வீட்டுக்கு ஓடி வந்தார்கள். நானும் என் அத்தான் கடை பையன் கோட்டானும் (சின்ன பையன் தான்) கம்பை எடுத்துக்கிட்டு போனோம். மாமி பையனுக்கும் என் வயது தான். வீட்டில் தான் இருந்தான். ஆனால் அம்பி நடுங்கி போய், வீட்டுக்குள் வரவே இல்லை. மாமி பொண்ணோ சமையல் அறை வாசலில் தைரியமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அது போதாதா நமக்கு. சின்ன சமையல் அறை. அறை எங்கும் உரிக்கப்படாத தேங்காய் குவிந்து கிடக்க, வெளிச்சமும் அதிகம் இல்லாத அறை. பாம்பு ஒடினால் நமக்கு ஓடவும் இடம் இல்லாத அறை. நானும் கோட்டானும் ஒவ்வொரு தேங்காயாக நகர்த்திக்கொண்டே வந்தோம். சரியான பாம்பு. பெரிய போராட்டத்துக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பாம்பை காலி செய்தோம்.

வெளியே வரும் போது மாமி அம்பியை பார்த்து "ஏண்டா! ராம்கி. சின்ன பையன். எவ்வளவு நன்னா, தைரியமா இருக்கான் பாரு. நோக்கு தைரியமே கிடையாதுடா. தண்டம்" . இப்படி மாமியின் மொத்த ஓட்டையும் கோட்டான் அள்ளிக் கொண்டு போக, நான் முடிவு செய்தேன் " அடுத்த தடவை மாமி வீட்டுக்குள்ள பாம்பு போனா, கோட்டானை கழட்டி விடுவது" என்று.

14 comments:

குமரன் (Kumaran) said...

அதென்ன சிவா...ஒவ்வொரு தடவை நீங்க பாம்பு அடிக்கிறப்ப எல்லாம் ஒரு அம்மிணி நின்னு பாத்துக்கிட்டு இருந்திருக்கு...யாராவது அம்மிணி வந்தாதான் உங்களுக்கு தெகிரியமே வருமோ?

நான் மதுரைங்கற பெரிய கிராமத்தில பிறந்து வளர்ந்தாலும் பாம்பெல்லாம் பார்த்ததில்லை. Zoo போனாத்தான் உண்டு. முதமுதலா இயற்கை சூழலில் பாம்பைப் பார்த்தது நான் ச்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல இருக்கிற கிருஷ்ணன்கோவிலில் BE படிக்கிறப்பதான். பாம்பு ஒய்யாரமா என் நண்பன் வீட்டு வாசல்ல படுத்துக்கிட்டிருந்துச்சு. நான் நண்பனைக் கூப்பிட்டுப் பார்த்தேன். அவனோ TVயில மூழ்கியிருந்ததாலே என் கத்தல் கேக்கல. கொஞ்ச தூரம் இந்தப்பக்கம் வந்து பார்த்தா கொஞ்சம் பேரு தம்மடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட 'அங்க பாம்பு இருக்கு. வந்து அடிங்க'ன்னு சொன்னா என்னை ஒரு மாதிரியா பாத்துட்டு என் கையில ஒரு கம்பை குடுத்துட்டு அனுப்பிச்சுட்டாங்க. நானும் கம்பை கையில எடுத்துக்கிட்டு நடுங்கிகிட்டே வந்து பார்த்தா என் நல்ல வேலை பாம்பு தூக்கம் கலைஞ்சு போயிருச்சு போல; அங்க இல்லை.

rv said...

சிவா,
நல்லாருக்கு உங்க பாம்பு புராணம். ஆனா, எனக்கு மிகவும் பிடித்த உயிரினங்களில் ஒண்ணு. முதலைகளும் தான். தனி அழகு! (டிவியில் பாக்கறச்சே)

ஒரு தடவை நண்பன் வீட்டு கேட்டை திறந்து நான் உள்ளே நுழையற நேரம், ஓசிக் காப்பிக்கு ஆசைப்பட்டு பின்னாடியே பெரிய நல்ல பாம்பு ஒண்ணும் வந்துருச்சு. ஆனா, அதுக்குள்ள நண்பனோட அக்கா பாத்துட்டு அவங்க அப்பாவக் கூப்பிட..

தடியெல்லாம் இல்லாம நேரா போய், செடிகளுக்குள் மறஞ்சு எஸ்கேப் ஆகப் பார்த்த பாம்போட வால புடிச்சு தூக்கு, சிமெண்ட் தரையில் போட்டு என்னமோ துணி துவைக்கிறா மாதிரி சாத்து சாத்துன்னு சாத்தினார். அதிலேயே பாம்பு அவுட். நானும் நண்பனும் அப்போ எங்க இருந்தோம்னு கேக்கக்கூடாது. :)

Unknown said...

Dear Siva,

Paambu is a real threat. Mavaney..Once I went to my sister's house and I was resting with my back on floor, watching TV. My sister was near in the kitchen. All of a sudden she screamed,"Paamby Paambu...."...Man I got shcoked and asked her....Yenga...near ur bed, "get up..get up"...Mavaney avaluvuthaan....Ada paavingala...paatha it was next to me......Ayyo......as we shouted it reached a corner...My uncle was ready with a Kaambu then and he killed that. Then after that they asked me to sleep....Mavaney....Who will...?? I was waiting for it to become morning...as soon as I got up....took the first bus and came back to my home town...obviously, the next thing I did was very soon we shifted my sister's house from vilage to our home town only.....

There are many such things...but no time.....nice Pathivu...I am sure all of us must be having some experience with Paambu ....

Anbudan,
Nata

Ganesh Gopalasubramanian said...

நானெல்லாம் பாம்பு வந்தா ஓட்டம் பிடிச்சிடுவேன். என்னைக்குமே எனக்கு பாம்பை பாத்தா பயம் தாங்க

சிங். செயகுமார். said...

பொண்ணுங்கள கண்டா நமக்கு வீரம் பொத்துகிட்டு வந்துடுமே!
இருந்தாலும் உங்க துணிச்சல பாராட்டுறேன் . ஒரு தடவ நான் பாம்படிக்க பந்தயம் கட்டி இரு நூறு ரூபா கெடச்சிதுங்க (செத்தபாம்பு இல்லீங்க உசுரு பாம்புதன்)

dvetrivel said...

நாங்கெல்லாம் எங்க ஊருல பாம்படிச்சாங்கன்னா பத்திரமா ஒளிஞ்சிட்டு, அது செத்தப்புறம் பொய் ஒரமா நின்னு எட்டிப்பாத்து, அதுக்கே பயந்துபோய் அலையுவோம்... அதே எதாவது பொண்னுங்க இருந்தாங்கன்னா "அந்த பாம்பு என் காலுக்கு நடுவுல தாந்தா பூந்து போச்சி" அப்பிடி எப்பிடினு கொஞ்சம் அடிச்சி விடுவோம்.... நல்ல பதிவு

சிவா said...

குமரன் மற்றும் செயகுமாரு, பொண்ணு நின்னா வீரம் வரும் என்பது இரண்டாவது தான். நம்ம மானத்தை காப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று உள்மனது சொல்லும் அல்லவா. அது தான் முக்கியமான காரணம் (சொன்னா! நம்புங்கப்பா)

ராமநாதன், பாம்பு உங்க செல்ல பிராணியா. யோவ்! கொஞ்சம் ஓவரா இல்ல! நாங்களும் எலி வால்னு நெனைச்சி பாம்பை புடிச்சி இழுத்திருக்கோம். ஆனா, தொவைச்சது எல்லாம் கிடையாது. போட்டுட்டு தலை தெரிக்க ஓடியதோடு சரி.

நடராஜன், நல்ல கதை! மற்ற கதைகளையும் சொல்லுங்க.

கணேசு, இப்படி பயப்படுறீங்க. சீக்கிரம் ஒரு பாம்பிடம் மாட்டி உங்கள் வீரத்தை காட்ட என் ஆசிகள்.

ஆள்தோட்டபூபதி, வருகைக்கு நன்றி.நல்லா சொல்லியிருக்கீங்க உங்க பாம்பு புராணத்தை :-)

NambikkaiRAMA said...

ஆ..ஆ! பா...ம்...பா ?
கடவுளே..கடவுளே..கடவுளே :))

தி. ரா. ச.(T.R.C.) said...

siva who told snakes to be beaten.those creatures has also got a right to live in this world like u and me. however u r description is good to read. thanks TRC

Anonymous said...

பாம்புக்கு பயம் என்றெல்லாம் இல்லை... ஆனா ஒரு அருவருப்பு, பாத்தாலே உடலில் உல்ல மயிர்கள் எல்லாம் எழுந்து நிற்கிறமாதிரி ஒரு பிரமை..
ஆனால் பாம்பை கொலை செய்வதைல்லாம் toooo much , பேசாமல் ஒரு தடியால் எடுத்து அதை எங்கையாவது விட்டுவிடலாம்!

பரஞ்சோதி said...

சிவா, உங்க பாம்பு புராணம் அருமை.

எனக்கும் பாம்புக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்க வீட்டிலும் தோட்டத்திலும், ஊரிலும் பாம்புகள் சகஜமாக நடமாடும்.

பள்ளி விட்டு வந்ததும் அம்மா என்ன குழம்பு, கூட்டு வைத்திருக்காங்க என்ற கவலை எனக்கு இல்லை, சோறும், வடித்த நீறும், ஊறுகாயும், கூட ஒரு காமிக்ஸ் புத்தகம் போதும், அத்துடன் முட்டை ஆம்லெட் தேவை, எனவே பள்ளி விட்டு வந்ததும், நேராக கோழிக்கூண்டு போய், அதில் கையை விட்டு துழாவி அங்கே இருக்கும் முட்டையை எடுத்து வந்து விடுவேன்.

அப்படி ஒரு நாள் கையை விட்டு துழாவ, கையில் ஏதோ வழவழப்பாக இருந்தது, என்னடா என்று குனிந்து தலையை பாதி உள்ளே விட்டு பார்த்தால் ஒரு பாம்பார் இருக்கிறார், அவ்வளவு தான், இருக்கும் அத்தனை தெய்வங்களை கூப்பாடு போட்டு அழைத்து கொண்டு ஓட, 10 மீட்டர் தூரத்திற்கு பின்னர் என்னை ஒரு முந்திக் கொண்டு ஓட, அவர் யார் என்றால், அந்த பாம்பார் தான்.

அதன் பின்னர் எப்போவும் நீண்ட குச்சியை தூரத்தில் இருந்து கூண்டில் விட்டு பின்னர் முட்டையை வெளியே எடுக்கத் தொடங்கினேன்.

இன்னும் நிறைய பாம்பு புராணம் இருக்குது.

Usha Sankar said...

Dear Siva,
Nalla irundhadhu unga paambu puranam.
Neenga sonnadhu unmai dhan.Ambalainga nu veerthai nirubika, nichayam ellarum paambu and scorpio vai adichae aganam.

Ennudiaya villagilum,
paambum, nangalumaga than irundhu irukom.One time. naan en veetu vasalail seriyaga gavanikavillai.Oru peirya snake(kattuviriyan) nanraga surundu paduthu kondu thungikondu irundhadhu.Naan adhai, kinatril thannir iraika use pannum kayiru enru ninaithu adhai midhithu kondu veetukul ponaen.Poi sonna udan ellarum bayandhu vandhu parthargal.Nalla velai!! Andha snake ku ayul adigham.ADhu poi vittadhu!!!

Scorpiovai patriyum solliyae aganam.Veetil angae angae nadamadum.Periyavargal solvargal(en chinna vayadhil) Poi solla kudadhu.Periyavargalai edhirthu pesa kudadhu.Appadi seidhal pambu vandhudum!!! Thell vandhudum!!! Kadichudum!!!! Thell kadicha romba valikum!!! Pambu kadicha sethu poiduvom!!!

So. vera vazhiyae illai.Nanga ellarum samathaga irupom!!! irundhom!!!

ADhanalayae dhan namaku konjam bayam adhigama thonugiradhu nu feel panraen.(paambai patri than)

INdha kaala kids ku bayam kaati seri seiya edhavahu vazhi iruka ippodhu!!! Ha Ha ha!!!

With Love,
Usha Sankar.
So, paambaiy

G.Ragavan said...

சிவன் பம்பை அடிக்கலாம். பாம்பை அடிக்கலாமா? ஹா ஹா

தூத்துக்குடியில் சிறுவயதில் வீட்டுத் தோட்டத்தில் பாம்பு வந்தது. முழு நீளம் இருக்கும். ஒரு கிழவி வெளக்குமாரை எடுத்து ஒரேஏஏஏஏ போடு. அந்த வெளக்குமாத்துலேயே பாம்பைத் தூக்கீட்டுப் போயி தூரப் போட்டுட்டாங்க. கொஞ்ச நாளைக்கு அந்த வெளக்கமாத்தையே தொடலயே!

சிவா said...

TRC அவர்களே. வருகைக்கு நன்றி. பரஞ்சோசி, உங்க பாம்பு புராணமும் சூப்பர். உங்கள் சிறுவர்பூங்காவின் ரெகுலர் வாசகன் நான். தொடருங்கள்.

உஷா! உங்க கதையையும் ரசித்தேன். தேளும் பயம் தான். ஆனால் அருவருப்பு இல்லை என்பதால் அவ்வளவாக பயம் கிடையாது. இப்போ உள்ள வாண்டுகளிடம் என்ன சொல்லி பயம் காட்ட :-) . நம்மல பயம் காட்டாம இருந்தா சரி. :-)

ராகவன்! //**சிவன் பம்பை அடிக்கலாம். பாம்பை அடிக்கலாமா **// ஹஹஹஹா...இங்கேயும் வார்த்தைகளில் விளையாடுறீங்களே. அப்பன் சிவனுக்கே பாம்பு என்றால் பயம் இல்லை. நமக்கு :-))