எல்லா கிராமத்திலும் ஒரு சகலகலா வல்லவர் இருப்பார். எங்க ஊரிலும் ஒருத்தர் உண்டு. ஊரில் செமையா பீட்டரு விட்டுக்கிட்டு இருந்த எங்கள் அண்ணன் (கூட பொறந்த அண்ணன் இல்லப்பா) "பீட்டர்" பற்றி தான் இந்த முதல் பதிவு.
"வெள்ள அடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "மரம் வெட்டணுமா பீட்டர கூப்பிடு" "கோழி புடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "குழி தோண்டனுமா பீட்டர கூப்பிடு" என்று ஊரே எதற்க்கெடுத்தாலும் பீட்டர் அண்ணனிடம் தான் போய் நிற்க்கும். அதற்க்கேற்றார் போல் சரக்கும் அவனிடம் இருக்கும். எலக்ரிக்கல் வேலைல இருந்து எலி பிடிக்கற வேலை வறை பொறுமையாக, கச்சிதமாக செய்து கொடுப்பான். அதுமட்டும் அல்ல, எங்களை போன்ற வாண்டுகளுக்கு , ஓணான் அடிப்பதில் இருந்து, நீச்சல் அடிப்பது வரை அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்த "குரு" அவன் தான். அதனால் நாங்கள் எப்போதுமே அவனையே சுற்றிக் கொண்டிருப்போம். " பீட்டர் கூடயா போற..போய்ட்டு வா" என்று எல்லார் வீட்டிலும் விட்டு விடுவார்கள். அந்த அளவுக்ககு அவன் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை.
எங்கள் குருகுலத்தில் நடந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்...
அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். ஓரு நாள் ஊர்ல சொடல மாடன் கோயில் கொடைக்கு "அன்பே வா" படம் திரை கட்டி போட்டாங்க. அதுல வந்த "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாட்ல குதிரைல சரோஜா தேவியோடு 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் டூயட் பாடறத பாத்து , எங்களுக்கும் குதிரை ஓட்ட ஆசை வந்தது. அதை எங்கள் குரு பீட்டரண்ணணிடம் சொல்ல, "குதிரை தானல. புடிச்சிரலாம். நாளைக்கு மேக்கே வந்துருங்கல" என்றான்.
அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் போக, பீட்டரண்ணனும் ரெடியாக இருந்தான். "என்னன்னே, குதிரய எங்கண்ணே". "வரும்ல வெயிட் பண்ணுங்க. எல்லோரும் சேர்ந்து தான் புடிக்கணும். ரெடியா இருங்கல" "டேய். அதோ வருதுடா" பீட்டரண்ணன் எங்களை ரெடியா இருக்கச் சொன்னான். அவன் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்தது.......எங்க ஊர் வண்ணானின்...........கழுதை.
"டேய் இது குதிர இல்லல..குதிர மாதிரி..அட்ஜஸ்ட் பண்ணுங்கள. இந்த தேரி காட்டுக்குள்ள குதிரைக்கு எங்கல போறது " - இது குரு (பீட்டர் அண்ணன்). ஒரு வழியாக கழுதையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மடக்கி பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. செமையா ஓட்டம் காட்டியது. ஊரில் எவனாவது பார்த்தால் மானம் போய் விடும் என்பதால் ஊருக்கு கொஞ்சம் தள்ளியே எங்கள் குதிரை ஓட்டும் பயிற்சியை வைத்துக் கொண்டோம். கழுதை பிடிப்பது பார்த்து பிடிக்க வேண்டும். பின்னால போனா நம்ம கேப்டன் மாதிரி Back kick போட்டு தாக்கி விடும். முன்னால போனா கடித்து விடும்.
ஏற்கனவே வண்ணானிடம் பொதி சுமந்து, பொதி சுமந்து நொந்து போன கழுதை, இருந்து இருந்து எங்களிடம் வந்து மாட்ட, அது எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ! . குதிரையை கட்டுப்படுத்த கடிவாளம் இருக்கும். கழுதைக்கு.....பீட்ரண்ணன் ஒரு பம்பர கயிறை எடுத்து கழுதை மூஞ்சியில் கட்டி கையில் பிடித்துக் கழுதை மீதேறி அமர்ந்து கொண்டான். இந்த மாதிரி டெக்னிகல் விசயங்கள் எல்லாம் அவன் அழகாக பண்ணுவான். கயிறும் நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. கழுதை வாயை கட்டினாதால் அது கடிக்கவும் முடியாம போச்சி. நாங்கள் ஒவ்வொருவாரா அவன் பின்னால் ஏறிக் கொள்ள, அவன் சாரதியாக இருந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு வந்து விடுவான். கழுதையும் இரண்டு பேரை ஏத்திக்கிட்டு நல்லா தான் ஓடிச்சி. கழுதைக்கு ஏதாவது ஆச்சின்னா, இதே கழுதையில வச்சி ஊர்ல ஊர்வலம் விட்டுடுவாங்க என்பதால், அப்போ அப்போ ஊர்ல எவனாவது பாக்கரானான்னு பார்த்துக்கிட்டோம்.
கொஞ்ச நேரம் கழிச்சி, நாங்களே தனியாக சவாரி செய்யலாம் என்று எங்கள் குரு இல்லாமல் ஓட்ட ஆரம்பித்தோம். ஊட்டி கொடைக்கானல்ல எல்லாம் குதிரைன்னு ஒன்ன வச்சி சவாரி போவாங்களே, அதை விட எங்க ஊரு கழுதை அழகாகவே ஓடிச்சி.
என் சுற்றும் வந்தது. என் சுற்று வரும் போது தானா கழுதைக்கு கிறுக்கு புடிக்க வேண்டும். போன ரவுண்டில் கழுதை ஒரு முள் காட்டுக்குள் ஓட, உடம்பெல்லாம் வீர தழும்புகளுடன் திரும்பி வந்த செந்தில் என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டான். "போடா..போ..நானும் பாக்கத்தான போறேன்" என்பது போல இருந்தது. நான் ஏரி உக்காந்ததும், நாசமா போன கழுதை தலைதெரிக்க ஓட ஆரம்பித்தது.....எங்கள் கிராமத்தை நோக்கி....
போன தீபாவளிக்கு இதே கழுதை வாலில் சரவெடி கட்டி வுட்டது, காவோலை (காய்ந்த பனை ஓலை) கட்டிவிட்டு அதை தலை தெரிக்க ஓட வைத்தது எல்லாம் நினைவுக்ககு வந்துச்சி. அப்போது தான் எனக்கு உறைத்தது, கழுதை அதற்கு பழி வாங்க, நம்ம மானத்தை வாங்க முடிவு செய்து விட்டது என்று. நான் பம்பர கயிரை புடிச்சி இழுக்க, என் போதாத காலம், கயிறு அத்து கைல வந்து விட்டது. அது ஓடுன ஓட்டத்துக்கு என்னால கழுதையில இருந்து குதிக்கவும் முடியாம, புடிக்க கயிறும் இல்லாம முழிச்சிக்கிட்டு இருக்க, நேரே கழுதை ஊருக்குள் போய் நின்று விட்டது. ஊர் சனம் எல்லாம் பார்த்து "ஏல! என்னல தப்பு பண்ணுண. கழுதைல ஏத்தி விட்டுருக்காங்க! " என்று சிரிக்க, ஒரே கேவலமா போச்சி. கழுதை வந்த வேலை முடிந்த சந்தோசத்தில், என்னை கீழே தள்ளி விட்டு ஓடியது. ...வண்ணான் வீட்டை நோக்கி.
(தொடரும்)
9 comments:
ஹாஹாஹாஹா...நல்லா கீது கத....
சிவா....சிரிப்பா இருக்கு உங்க குதிர சவாரி பத்தி படிக்கிறது...சே...அதை கண்ணால பாக்காம போயிட்டோமேன்னு இருக்கு....:-)
சிவா, ரொம்ப நல்ல வந்திருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க எனக்கும் இதே குதிரை சவாரி அனுபவம் கிட்டியிருக்கிறது என்றால். அதுவும் அதெ பருவத்தில் ஆனால் என் குரு நாதர் ஒணான்களுக்கு சுருட்டு (cigar), பீடி, சிகரெட் துண்டுகளிலிருந்து கிடைக்கும் புகையிலையை வைத்து drug பண்ணி நடு மைதானத்தில் விட்டு சும்மா cricket fielding பண்ணற கணக்க ஒட விட்டு பசங்கள பிடிக்க விடுவார், ஒரு முறை அப்படி fielding பண்ணும் போது வல்லுன்னு கடி வாங்கி ரத்தம் சொட்டியது இன்னும் என் நினைவில் பசுமையாக...எழதுங்கள் மேலும் மேலும் படிப்போம். Hope America oneday will outsource garden lizard hunting to India, I am good at it (hehehehe).
அன்புடன்,
தெக்கிக்காட்டான்.
தெக்கிக்காட்டான்! உங்க கழுதை இப்போ எப்படி இருக்கு :-)
ஓணான் கதை தானே. அடுத்த பதிவுல அதுவும் வருது :-)
Miga Nalla paathivu Siva......Vaazhkaiyyay Nalla anubavchu irrukinga.......
Mellum ungal Pathvugallai avalloda ethir nookum...
Anbudan,
Nata
சிவா...இது கதையா உண்மையா நடந்ததா.........
நல்ல அனுபவம். தொடரும்னு போட்டிருக்கீங்க...காத்திருக்கேன்.
ராகவன்! இது உண்மை தான். அந்த கழுதை மேல போன கழுதைங்க எல்லாம், இப்போ கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளோடு இருக்குதுங்க :-)
கழுதை சவாரி அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. பீட்டரும், செந்திலும் இதை படித்தால் "அந்த நாள் ஞாபகம் நெஞ்ஞிலே வந்ததே, நண்பனே நண்பனே.." தான். மேலும் பல அனுபவங்களை எதிர் பார்க்கிறேன். தொடரட்டும் ஊர் கதைகள்.
Dear Siva,
Ha ha Ha Ha!!! Miga nanraga ezhudhugireergal.Indha madhiri anubavam illadhavargal,village
boysaga iruka mudiyadhu.Indha anubavam dhan ippodhu USA layil
dhariyamaga iruka vaikiradhu.
Gilli, Goli Gundu, Bambaram
vitta anubavam patriyum solungalen.
Nichayam indha games ellam
play panni irupeenga nu ninaikiraen.City boys ellam
idhai miss panranga!! including
my son!!! Nichayam indha gaems
elllam dhan vazvin vetri tholvi
tention ai samalikum oru
nalla anubavam i believe!!!
Enna solreenga Siva?
With Love,
Usha Sankar.
Post a Comment