Friday, September 30, 2005

கிளி ஜோசியம் - 1

ஒரு ப்ளாக்கில் நண்பர் ஒருவர் குமுதம் ஜோசியம் பற்றி கூறியிருந்தார். சரி ! என்ன தான் போட்டிருக்குன்னு போய் பாத்தா...செம காமெடிப்பா. இப்பொவெல்லாம் டி.வி-ல காலைலயே ஆரம்பிச்சுடறாங்க. "இன்னைக்கு உனக்கு சனி. நாசமா போய்டுவே..நீ செய்ற காரியம் எதுவும் உருப்படாது" - இப்படி போகும். அப்புறம் நாள் வெளங்குனது மாதிரி தான். அது தவிர சில கோஷ்டி கலர் கலரா கல் விக்க ஆறம்பிச்சுடுது. அப்புறம் என்ன..மஞ்ச கலரு ஜிங்கிச்சா...பச்ச கலரு ஜிங்கிச்சா தான். காசு வர ஒரு கல்லு.. கல்யாணம் ஆக ஒரு கல்லு...மக்களும் கலர் கலரா கைல போட்டுக்கிட்டு கலக்க தான் செய்றாங்க. ஆனா ஒன்னும் உருப்பட தான் மாட்டேங்குது.

இன்னொரு கும்பல் அம்மா அப்பா ஆசையா வெச்ச பேரை மாத்த சொல்லி காசு பாத்துக்கிட்டு இருக்கு. "உங்க பேருல முன்னாடி ஒரு கால போட்டு ( துனை எழுத்து ) பின்னாடி ஒரு கைய போட்டா...வாழ்க்கையில எங்கேயோ போய்ருவீங்க" - இப்படி போகும் உரையாடல்.

இந்த கும்பல் எல்லாம் ஒரே மாதிரி விபூதி பட்டையை அடித்து கொண்டு பக்தி பழமாக இருக்கும். மக்கள் அப்போ தான் நம்புவாங்களாம்.

இதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ராஜெக்ட். கிராமத்துல பாத்தீங்கன்னா சின்ன பட்ஜெட்ல சின்னதா ஒரு கிளி (இல்லன்னா எலி), ஒரு பத்து சாமி படம் வச்சு சில பேரு காலத்த ஓட்டிட்டு இருப்பாங்க. கிளியும் அது பாட்டுக்க கொடுக்கற பொறிகடலைய கொறிச்சிக்கிட்டு, தொறந்து விட்டா அதுக்கு புடிச்ச படத்தை எடுத்து கொடுக்கும். அனுமார் படம் எடுத்திச்சுன்னா, அது என்னை கொரங்குன்னு நினைச்சுட்டுன்னு அர்த்தம். ரெண்டு பொண்டாட்டியோட முருகர் வந்தா , அது என் பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கி கொடுக்க முடிவு பண்ணிடுச்சுன்னு அர்த்தம்.

இன்னொரு கும்பல் நீங்க திருச்செந்தூர் போனீங்கன்னா பாக்கலாம். ஹாரி பாட்டர் படத்துல கொளந்தைங்கல்லாம் கைல ஒரு குச்சி வச்சிக்கிட்டு பூச்சாண்டி காட்டுமே, அதே மாதிரி குச்சி வச்சிக்கிட்டு குறி சொல்ல (குழி பறிக்க) சுத்திக்கிட்டு இருக்கும். ஏற்கனவே சந்தணம் தடவிய திருச்செந்தூர் மொட்டையில் மொளகா அரைக்க ரெடியா இருப்பாங்க. " 5 ரூவா தான் சாமி. கோவில்ல வந்து இல்லன்னு சொல்ல கூடாது சாமி" இப்படி சாமி எல்லாம் பலமாக இருக்கும். அழகாக ஆரம்பிப்பார்கள் - "ராசா நீ ! ஊரு மெச்ச வாழ்பவன் நீ ! உன் மனைவி மக்கள் எல்லாம் நல்லாருக்கும்" . கடைசில வரப்போகும் தோசம் மேட்டர் தெரியாம பார்ட்டி சந்தோசமா தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கிட்டு இருக்கும். "உனக்கு ஒரு தோசம் இருக்கு ராசா. அதுக்கு நீ பரிகாரம் பண்ணனும் ராசா. இல்லன்னா உனக்கு அது நல்லதுல்ல ராசா. நானே அதை பண்ணி தறேன் ராசா. ஒரு 100 ரூ ஆகும் ராசா" - கல்கத்தா காளி, மாரி என்று நம்மை பயம் காட்ட எல்லோரையும் துனைக்கு அழைத்து கொள்வார்கள். வேணாம்னு சொல்லவும் முடியாம், கோவிலுக்கு வந்து பணத்தையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு செல்வார்கள்.

(தொடரும்...)


Thursday, September 29, 2005

பூவார் சென்னி மன்னன்


இளையராஜாவின் 'திருவாசகம்' வந்த புதிதில் எனக்கு அதில் உள்ள இசை பிடித்திருந்தது. ஆனால் பாடலின் பொருள் அவ்வளவாக புரியவில்லை. எதோ சிவனை போற்றி பாடப்படுகிறது என்று தெரிகிறது, ஆனால் முழு பொருளும் புரியவில்லை. B.Sc முதலாமாண்டில் இரண்டாவது செமஸ்டரில் 3 கணித பாடத்திலும் சேர்த்து 94 % எடுத்ததற்க்காக தமிழ் ஆசிரியர் என்னை கூப்பிட்டு பாராட்டிவிட்டு தமிழில், ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டார். நானும் பாசாகிட்டேன் சார் என்று 35 , 36 என்றேன். காரி துப்பிவிட்டு சென்றார் (ஆங்கிலத்தில் 1 மார்க் அதிகம் எடுத்த கோபம் அவருக்கு). இப்போது இந்த இளையராஜாவால் மறுபடியும் தமிழ் படிக்க வேணடியதா போச்சு.


அங்கே, அங்கே சில பாடல்களுக்கு பொருள் கிடைத்தது, ஆனால் முழு பாடலுக்கும் கிடைக்கவில்லை. அந்நேரம் கிடைத்தவர் தான் எனது நண்பர் குமரன். நம்ம மரமண்டைக்கு ஏறும் வகையில் தினமும் ஒரு அடிக்கு பொருள் எழுதி தருகிறேன் என்றார். தன் வேலைகளுக்கு இடையே எனக்காக எழுதி கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும். இப்போது 4-வது பாடல் எழுதி கொண்டு இருக்கிறார்.

திருவாசகத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு பொருளை கொண்டு வரும். 'பூவார் சென்னி மன்னன்' பாடல் 'வாருங்கள் ! இறைவனை நோக்கி செல்வோம்' என்று ஒரு நடைபயணம் போல என்பது போல எல்லா பாடல்களும் வரும். அதற்கு ஏற்றார் போல் இசையும் ஒரு Marching போல செல்லும். "பூவேறு கோனும்" பாடலில் ஒரு தும்பி வாயிலாக இறைவனின் புகழ் பாடப்படும்.

பொருள் புரியாமல் கேட்டதை விட, திருவாசக பாடல்கள், பொருள் புரிந்து கேட்க்கும் போது பல மடங்கு ரசிக்க முடிந்தது. பூவார் சென்னி மன்னன் பாடலின் பொருளை கீழே உள்ள சுட்டியில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

முதலில் மறக்காமல் SaiIndra Font-ஐயும் இங்கே இருந்தது இறக்கிக்கொள்ளுங்கள். இது அழகி மென்பொருளை கொண்டு எழுதியது. ( யுனிகோடில் சரியாக எனது கணிணியில் வரவில்லை). ( Copy to your C:\Windows\fonts folder)

ஒரு முறை முழுவதும் வாசித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள். முழு இசையையும் உணர்வீர்கள்.

பூவார் சென்னி மன்னன்

இந்த Document-ல் எதாவது எழுத்து பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்கிறேன். தமிழ் தட்டச்சுக்கு நான் புதிது.

பின்னணி இசை-1 பாரதி

நேற்று cinesouth-ல் சந்திரமுகி படத்தின் பின்னணி இசை ஒலித்தட்டாக வருவதாக ஒரு செய்தி பார்த்தேன். வரவேற்க்கதக்க ஒன்று.

என்னிடம் இருக்கும் இந்த பாரதி படத்தின் பின்னணி இசையையும் கேட்டு பாருங்கள்.

பாரதி, இளைராஜாவின் இசை தாலாட்டு. அத்தனை பாடல்களுமே அருமை. பாரதி வெளிவந்து தேவி திரையரங்கு 40 நாள் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்க்க சென்று 'ஹவுஸ்புல்' என்று திருப்பி வந்தேன் (பகல் காட்சி மட்டும் ஒடியது). ரொம்ப மகிழ்ச்சியோடு திரும்பி வந்தேன், படம் ஓடுகிறதே என்று. அந்த படத்தில் வரும் அத்தனை பின்னணி இசையுமே அருமை. இதோ உங்களுக்காக....பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

1. பாரதி கல்கத்தாவில் மக்களின் மூடநம்பிக்கைகளை பார்த்து மனம் வெதும்பி தனது சடை முடி எடுத்து விட்டு ஒரு மகாகவியாக மாறும் காட்சி. கேட்டு பாருங்கள்.


மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

2. பாரதி-செல்லமா முதலிரவு காட்சி. இங்கே அந்த தொடக்க பியானோ, அழகாக செல்லம்மாளின் பதட்டத்தை கொண்டுவரும். அதை தொடர்ந்து 'மயில் போல' பாடலை லேசாக தொட்டு வரும் இசை (அப்படியே பாடலை பிரதிபலிக்காமல்), அழகு. இசையிலேயே மனசுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க விட்டிருப்பார்.மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

3. பாரதி அரண்மனையில் வேலையில் சேர வரும்போது வரும் இசை. என்ன ஒரு கம்பீரம். பாரதியின் மிடுக்கான நடையை அப்படியே இசையில் பிரதிபலிக்க வைத்திருப்பார்.மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

4. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இசை இது. பாரதி தன் வீட்டிற்க்கு வந்திருக்கும் நண்பர்களை சாப்பிட்டு விட்டு போக சொல்ல, செல்லம்மா அவர்கள் வேறு சாதிகாரர்களாக இருப்பார்கள் போல என்று தயங்க, பாரதி செல்லம்மாவை அறையும் காட்சி. பியானோவும் வயலினும் அழகாக பாரதியின் பதட்டத்தையும் (நண்பர்கள் கேட்டிருப்பார்களோ! என்று) செல்லம்மாவின் அழுகையையும் ஒரே காட்சியில் கொண்டு வரும். இங்கே..மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

5. பாரதி தன் சொந்த ஊருக்கு திருப்பி வரும் காட்சி. 'நல்லதோர் வீணை செய்தே' பாடலை தொட்டு வரும் வயலின் அழகு.மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

6. பாரதி தன் அழிந்து போன வீட்டில் சென்று பழையவற்றை நினைத்து வருந்தும் காட்சி. வித்தியாசமான தொடக்க இசை எனக்கு பிடித்திருந்தது. கேட்டு பாருங்கள்.மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

7. இது பாரதி படத்தின் ஆரம்ப இசை. அழகான வீணை இசை.மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

Monday, September 26, 2005

ஒரு ஹீரோ.. ரெண்டு காமெடியன்கள்..

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதிது. முதன் முதலாக விடுதி வாழ்க்கை. முதல் வருடத்தில் எனது அறையில் மூன்று பேர். நான், தனபால், வேல். வேலுவின் வீட்டிற்க்கு (செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமம்) கூட போய் ரெண்டு நாள் ஆட்டம் போட்டு விட்டு வந்தோம்.

விசயம் இது தான். சேர்ந்த புதிதில், பொது பாடம் நிறைய இருக்கும். மற்ற துறை மாணவர்களும் ஒரே வகுப்பில் இருப்போம். எங்கள் வகுப்பில் பசங்க மட்டும் தான். ஒரே வறட்சி. எப்போதும் வகுப்பு முடிந்ததும் எங்க கூடவே வரும் வேலு, கொஞ்ச நாளாக மட்டம் போட ஆரம்பித்தான். ஒரு நாள் பார்த்ததில், அடுத்த துறை பிகர் ஒன்றுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தான். வகுப்பு முடிந்ததும் தேங்கி விட்டு, கடைசியில் அந்த பிகருடன் சேர்ந்து விடுதி வரை பேசி கொண்டே வந்தான். இது வழக்கமா தொடர்ந்தது.

தனபால் துறை பிகர் என்பதால், அவனுக்கு லேசான ஒரு புகைச்சல். என்னிடம் புலம்பி கொண்டிருப்பான். எங்களுக்கு தெரியும், அது ஏதோ பையன் பாவம் என்று பேசுகிறது என்று. பையன் சில காலமாக ரொம்ப எங்களை கழட்டி விடுவதும், ரொம்ப பீற்றி கொள்வதும் அதிகமானதால், தனபாலும் நானும் பேசி, நண்பருக்கு ஒரு ஆப்பு வைப்பது என்று முடிவு செய்தொம். அதன் படி...


ஒரு நாள் பையனை அறையில் வைத்து, எங்களுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி, "டேய்! மச்சி! நீ பெரிய ஆளுடா. வகுப்பு முடிஞ்சி ரெண்டு பேரும் சேர்ந்தே வறீங்க. சேர்ந்தே போறீங்க. பெரிய ஆளுடா நீ", ஆப்புவை மெதுவாக வைக்க ஆரம்பித்தேம். பையன் 'மன்மதன்' சிம்பு மாதிரி உள்ளுக்குள் பறப்பது நன்றாக தெரிந்தது. லேசாக வெட்க பட்டு வைத்தான். "எப்படிடா கண்டு புடிச்சிங்க!" ஆப்பு வேலை செய்ய ஆரம்பித்தது. "மச்சி! எவ்வளவு நாள் தாண்டா காலேஜ்குள்ளேயே சுத்திக்கிட்டு இருப்பீங்க. சென்னையில் இடமா இல்ல. எங்கயாவது வெளியே கூட்டிட்டு போடா" தனபால் ஐடியா கொடுத்தான். "அவள் வருவாளாடா" இது பையன். பையனுக்கு உற்சாக டானிக் கொடுத்து (அட்வைஸ்) தேத்தி அனுப்பினோம், 'எப்படியோ நாளைல இருந்து பையன் நம்ம கூட தான் வருவான்' என்ற நம்பிக்கையில்.

அடுத்த நாள் மாலையில் வேலு அறையில் சோகமாக இருந்தான். கப்பல் கவுந்து விட்டது நன்றாக தெரிந்தது. லேசா தான் வைக்க நினைத்த ஆப்பு கொஞ்சம் பெரிதா போய்விட்டது. அதற்க்கப்புறம் கல்லூரி முடியும் வரை இரண்டும் பேசிக்கவே இல்லை. இவனும் 'அவ என்ன பெரிய இவளா. நா என்ன பெரிசா கேட்டுட்டேன். பீச்சிக்கு போலாமான்னு தானே கேட்டேன். பெரிய இவா மாதிரி இனி என்னிடம் பேசாதேன்னு சொல்லிட்டா' புலம்பினான். 'விட்றா மச்சி! உன் மூஞ்சிக்கெல்லாம் இது ரொம்ப கம்மிடா' நாங்கள் இருவரும் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தோம்.


அதற்க்கப்புறம் வேலு ஒரே சோகப்பாடல்களாக கேட்டு கொண்டிருப்பான். தனபால் நன்றாக கவிதை எழுதுவான். நன்றாக மேடையில் பாடவும் செய்வான். அவன் தான் வேலுவுக்கு கவிதை சப்ளை பண்ணிக்கொண்டிருப்பான். நாங்கள் வைத்த ஆப்பினால், தன் கவிதைக்கு ஒரு ரசிகன் கிடைத்த சந்தோசம் அவனுக்கு. வேலு என்னையும் கவிதை கேட்டு படுத்துவான். கிட்ட தட்ட அவனை ஒரு ஹீரோ மாதிரியும் எங்க ரொண்டு பேரையும் சுத்தி இருக்கற காமெடியன்கள் மாதிரியும் நினைத்து கொண்டிருந்தான். நாங்கள் தான் அவன் கதைக்கு வில்லன்கள் என்று அவனுக்கு தெரியாது.

நானும் அவ்வப்போது பழைய பாடல்களை சுட்டு கவிதை என்று கொடுப்பேன். பையனுக்கு அவ்வளவாக சினிமா பாடல்கள் தெரியாததால், ஆஹா..ஓகோ ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்படி சுட்டு படம் காட்டிய பாடல் ஒண்ணு. 'ஆட்டோ ராஜா' படத்தில் இருந்து சுட்ட பாடல். அருமையான பழைய எஸ்.பி.பி பாடல்.

பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்.

Sunday, September 25, 2005

வாடாத ரோசா பூ

வாடாத ரோசா பூ...நா ஒன்னு பார்த்தேன்... (பக்கத்து ரோசா தோட்டத்திலிருந்து)


Friday, September 23, 2005

நன்றிகள் பல..

நான் எழுதியும் ரெண்டு மூனு பேர் படிச்சு நல்லாருக்குன்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப நன்றிங்கோ! இனி படிக்க போற நண்பர்களுக்கும் நன்றிகள்.

கணேஷ்
கங்கா
ரவிசங்கர்
ஜெகதிஷ்
குமரேஷ்
வசந்தன்
ரம்யா நாகேஸ்வரன்
மதி கந்தசாமி
சித்தன்
C R வெங்கட்
அனுராதா ...

இப்படியே பட்டியல் போய் கொண்டே இருக்குது (ஹி..ஹி..ஹி..இவ்வளவு தான்).

பிந்துகோஷ் கட்சி ஆரம்பிக்கிறார்..

இப்போதெல்லாம் அந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார், இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார். இதுதான் பத்திரிகைகளில் செய்தி. அவரது கூட்டத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள் என்று செய்தி வருகிறது.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு 10, 15 வருடம் இருக்கும், நான் சிறுவனாக இருக்கும் போது. ஏதோ ஒரு தேர்தல் வந்தது. எங்க தாத்தா என்னிடம் கேட்கிறார் "ஏல, பிந்துகோஷ் வர்றான்னு சொன்னாங்கலால..எப்போல வர்றா?.". தாத்தா ஏதோ ஸ்ரீதேவி வரபோற மாதிரி காலைல இருந்தே கேட்டு கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு வண்டியில் சென்று கொண்டே அறிவிப்பு கொடுக்கிறார்கள். "இதோ ! இன்னும் சற்று நேரத்தில் உங்கள் முன், திரைப்பட நடிகை, நகைச்சுவை மின்னல், நடிகை பிந்துகோஷ் உங்கள் முன் தோன்றி வோட்டு கேட்பார்". ஊர் மொத்தமும் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பார்த்துகொண்டிருக்கும் (என்னையும் சேர்த்து தான்). பிந்துகோஷ் கொஞ்ச நேரத்தில் ஒரு ஜீப்பில், மக்களை பார்த்து கையை அசைத்து கொண்டே வந்தார். ஊர் மக்கள் முகத்தை பார்க்க வேண்டுமே! ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட மாதிரி.

ஓமகுச்சி நரசிம்மனை நெல்லை இரயில் நிலையத்தில் பாத்தாலும் 'மக்கா! நான் ஓமக்குச்சி நரசிம்மனை பார்த்தேன்டா" அப்படின்னு பீற்றி கொள்ளும் இந்த பொது மக்களை பற்றி ஒரு நடிகனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்!. எல்லாரும் திரையில் ஆடி, வாய்ப்பு இல்லாமல் ஓய்ந்து போன காலத்தில் தான், மக்கள் மீது பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. கூட்டம் சேர்க்க உங்கள் சாதி பற்றும் சேர்ந்து கொள்கிறது. திரையில் வாய் கிழிய நாட்டு பற்று பற்றியும், சாதி வெறியை எதிர்த்தும் 3 பக்க வசனம் பேசும் உங்களுக்கு, கூடும் கூட்டத்தில் பாதிக்கும் மேல், நான் மேலே சொன்ன கூட்டம் தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வாருங்கள்! மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் ஒரு பரபரப்பு வேணும்ல. கூட்டத்தில் ரசிகர்கள் கொந்தளிப்பு. நடிகரின் வேட்டி அவிழ்ப்பு. இப்படி எல்லாம்.

Wednesday, September 21, 2005

திருவாசகம்

ஒரு வழியாக இரண்டு வருடமாக காத்திருந்த 'திருவாசகம்' ஒலித்தட்டு (CD) ஜுலை 1 ஆம் தேதி வந்து வெளிவந்தது. நான் ஒரு இளையராஜாவின் பரம ரசிகன் ஆதலால் நம்மலால என்னவெல்லாம் இந்த திருவாசக விற்பனைக்கு செய்ய முடியுமோ அத செய்ய நினைத்தேன். நம்ம நண்பர் ஒருவர் வேற அவர் பங்குக்கு ஒரு 100 CD விற்க போவதாக சொல்ல, நம்மை உசுப்பி விட்டது. காசு கொடுத்து CD வாங்கி இங்கே உள்ள மக்களுக்கு பழக்கமே இல்லை. எல்லாமே இனையத்தில் இருந்து இறக்கி கொள்கிறார்கள்.

நம்ம பங்குக்கு tis-usa கிட்ட இருந்து ஒரு 10 CD அனுப்ப சொன்னேன். ஒரு 20 CD வந்து சேர்ந்தது. வித்தப்புறம் காசு கொடுங்கன்னு சொல்லிட்டங்க. CD விலையை சொன்னதும் எல்லோரும் தலைதெரிக்க ஓடி விட்டார்கள். எல்லாவற்றையும் இந்திய ரூபாயிலேயே மாற்றி பார்த்து பழகி போன நம்ம புத்தி, $15 CD விலை என்றதும், Rs.650 - ஆ ஆ ஆ என்று எட்டி பாக்காலலே ஓட வைக்கிறது. $15 கொஞ்சம் அதிகம் தான். $8 - $10 சரியாக இருந்திருக்கும். தவிர இந்தியாவில் Rs.150 - ம் இங்கே Rs.650 வைத்ததால், நிறைய பேர் இந்தியாவில் இருந்து அனுப்ப சொல்லி விடுகிறார்கள். Rs. 300 க்குள் மேட்டர் முடிந்து விடும் இல்லையா.

சில நண்பர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். மெதுவாக போக ஆரம்பித்தது. tis-usa -ல இருந்து 'நீங்க அங்கே இருக்கற தமிழ் சங்கம், கோவில் எல்லாம் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உதவி பண்ணுவார்கள்" என்று சொன்னார்கள். எனக்கும் சரி என்றே பட்டது.

முதலில் தமிழ் சங்கம். கடல் கடந்து, தமிழை வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறார்கள். இந்த திருவாசகத்திற்க்கும் ஏதாவது உதவி பண்ணுவார்கள் என்று நினைத்தேன். அவர்கள் இனையம் போய் பர்த்தேன். சுனாமிக்கு நிதி கொடுங்க என்று முதல் பக்கத்துலேயே 'ஈ ஈ ஈ' என்று விளம்பரம் பல்லை காட்டியது. வங்கி கணக்கு எண், காசு கொடுக்க விவரம் எல்லாம் தெளிவாக இருந்தது. சுனாமி போய் 6 மாதம் போய் விட்டது, இன்னும் காசு பிரிக்கும் அவர்களின் நாட்டு பற்றை பார்த்து கண் கலங்கி விட்டது. சரி ஒரு இ-மெயில் அனுப்பி பாக்கலாம் அப்படின்னு ஒன்னு அனுப்பினேன். ஒரு வாரம் ஆனது பதிலே இல்லை. பாவம் எல்லாரும் ஜுலையில் டிசம்பரில் வந்த சுனாமிக்கு உதவி செய்ய போய் விட்டார்கள் என்று நினைத்து, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா என்று உறுதி செய்ய, இன்னொரு மெயில் (வேறு ID-ல இருந்து தான்) அனுப்பினேன் , "சார், நான் கொஞ்சம் சுனாமிக்கு பணம் கொடுக்க நினைக்கறேன், விவரம் அனுப்புங்கன்னு'. (புழுவ போட்டா மீன் வெளியெ வந்து தானே ஆக வேண்டும்). அடுத்த நாளே பதில் வந்தது, பணம் அனுப்பசொல்லி விவரங்களுடன். இப்படி இயற்கை அழிவுகள் வந்தால், அடிக்கிற அனுதாப அலையில மீன் பிடிக்க தான் நிறைய கும்மல் கிளம்பிவிடுகிறது. என்னோட திருவாசக மெயிலுக்கு இன்னும் பதில் இல்லை. காசு மேட்டர்னா சொல்லு அப்படின்னு சொல்லறாங்க. என்னே ஒரு தமிழ் பற்று.

சரி, சங்கம் தான் கவுத்துட்டு. கடவுளை பாக்கலாம் அப்படின்னு கோவில் போனேன். ஐயர் தமிழ் தான். பரவாயில்லையே கண்டிப்பா உதவி பண்ணுவார் என்று ஒரு நம்பிக்கை. போய் பேசினேன், "திருவாசகமா..அப்படின்னா என்னா" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டாரு. "பள்ளிக்கூடத்துல எல்லாம் 'புல்லாகி பூடாய்' அப்படின்னு படிசிடுப்போமே' - இது நான். ' நியாபகம் வரலை. ஒன்னு பண்ணுங்கோ. ஒரு CD எனக்கு கொடுங்கோ (ஓசி). கேட்டு பாத்துட்டு மத்தவாகிட்ட சொல்லறேன்." இது வேலைக்கு ஆகாதுன்னு, " இங்கே ஒரு நாள் CD வித்துக்கலாமா?. கோவிலுக்கு வெளியே தான் - கேட்டேன். "ஓ! நீங்க என்ன வேணும்னாலும் வித்துக்கோங்கோ. ஆனா, கொஞ்சம் டொனேசன் (donation) மட்டும் கொடுத்துட்டு பண்ணிக்கோங்கோ' . அதோடு அந்த திட்டத்திமும் ஊத்திக்கிச்சு.

பணம் கொடுத்தாதான் எல்லாமே நடக்கும் போலன்னு, நானே நண்பர்கள் எல்லோரிடமும் போய் திருவாசக பாடலை போட்டு காட்டி பேசினேன். கேட்ட எல்லோருமே வாங்கி கொண்டர்கள். கடைசியில மொத்தமாக 35 CD வித்தேன். ஏதோ ஒரு சின்ன திருப்தி..

Tuesday, September 20, 2005

இன்னொரு வாத்து

இப்போதெல்லாம் வாத்து படம் இல்லன்னா இனையதளமாக யாரும் மதிப்பது இல்லை என்பதால் போன வாரம் ஒரு வாத்தை தேடி ஏரி ஏரியாய் தேடி கடைசியில் சிலதுகளை படம் எடுத்தேன். வாத்து சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படம் அவ்வளவு சரியாக வரவில்லை.இந்த இனையத்தில் வாத்து கூப்பிட விசில் எல்லாம் விற்கிறார்கள். பொதுவாக Tom & Jerrry கார்ட்டுனில் Tom இதை வைத்து தான் வாத்தை கூப்பிடும். நீங்களும் வேணும்னா வாங்கி பாருங்க.

Monday, September 19, 2005

பருவ காலங்கள்


எல்லாரும் படம் காட்டறாங்க. நாமும் காட்டலாமே என்று இந்த பதிவு..

அமெரிக்கா வந்த புதிது. சரியான குளிர் நேரத்தில் வந்து சேர்ந்தேன். மைனஸ் 25 குளிர் எல்லாம் சாதாரணமாக போகும். சர்வ நாடியும் ஒடுங்கி போய் விடும். எங்கு பார்த்தாலும் பளீறென்று வென்மையாக பனி. வெறும் தரையையே பார்க்க முடியாது. திரைபடங்களில் மட்டுமே பார்த்த பனி மலைகள். கதாநாயகனும் கதாநாயகியும் பனிகட்டியை எடுத்து எறிந்து கொள்வார்கள். நமக்கு கேட்கவா வேண்டும். வார இறுதி நாட்களில் எனது அறை நண்பர்கள் மூன்று பேருடன் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம். ஆளுக்கொரு கேமரா இருக்கும். பனியில் படுத்துகிட்டு ஒன்னு, பனிக்கட்டியை தலையில் வைத்துகொண்டு ஒன்னு, தலைகீழாக நின்னு ஒன்னு என்று ஜோராக படம் தயாராகி கொண்டிருக்கும் (எல்லாம் ஊரில் படம் காட்ட தான்.)

விசயத்துக்கு வருகிறேன். பள்ளிக்கூடத்தில் 4 பருவ காலங்கள் படித்ததாக நியாபகம். நம்ம ஊரில் கோடை காலம் மட்டும் தான் நமக்கு தெரியும் (சென்னை வெயில் காட்டு காட்டுன்னு காட்டும்ல). மழை காலத்தில் வானத்தை பார்த்து பார்த்தே மழை காலமும் ஓடி விடும். வசந்த காலமும், இலை உதிர் காலமும் (மரம் இருந்தாதானே இலை உதிர?) பாடத்தில் படித்ததோடு சரி (ஊட்டி போகனுமோ என்னமோ?).

இங்கே அமெரிக்காவில் எல்லா காலங்களும் அழகாக தெரிகிறது. பனி காலத்தில் (Winter) ஒரே வெண்மை நிறம் ( 6 மாதம்.. கொடுமை). அது முடிந்ததும் இளம் பச்சை நிறத்தில் வசந்த காலம், அழகு நிறங்களில் பூக்கள், அப்போது தான் தளிர் விடும் மரங்கள். அதுக்கப்புறம் கரும் பச்சை நிறத்தில் கோடை காலம். பின் வரும் ஆரஞ்சு/மஞ்சள் நிற இலையுதிர் காலம். அழகு தான். படத்தையயும் பாருங்களேன் (எல்லா படமும் நான் தான் எடுத்தேன். எல்லாமும் ஒரே தெரு தான். பருவ காலங்கள் தான் வேறு)

பனி காலம் (Winter) - வெள்ளை நிறம்.


வசந்த காலம் (Spring) - இளம் பச்சை


கோடை காலம் (Summer) - கரும் பச்சை

இலையுதிர் காலம் (படத்திற்க்கு இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். இப்போது தான் கோடை முடிய போகிறது).

Saturday, September 17, 2005

5 நிமிடத்தில் நீங்கள் கோடீஸ்வரனாக..

.

என்னங்க ஏதோ காளான் வளர்க்க, மெழுகுவர்த்தி செய்ய விளம்பரம்னு நெனைச்சிங்களா?. இல்லீங்கோ!. இது வேற விசயம்.. நீங்கள் கோடீஸ்வரனாக உங்களுக்கு தேவை கீழ்கண்டவற்றுள் ஒன்று,

சில பசு மாடுகள்..இல்லன்னா பரவாயில்லை.. எளிதா ஒன்னு..ஓரு முறுக்கு சட்டி, 1 லி எண்ணை, கொஞ்சம் கடலை மாவு.. கொஞ்சம் வசதி இருந்தா ஒரு பேருந்து.. ஒன்னுமே இல்லயா, கவலைய விடுங்க… உங்க வீட்டுல உங்க தாத்தா பழைய பெட்டிய தொறந்து பாருங்க, ஏதாவது மூலிகை செய்ய ரகசியம் எதாவது இருக்கும்.. இது தவிர முக்கியமான ரெண்டு பேர்… ஒரு திரைப்பட இயக்குனர்.. ஒரு இசை அமைப்பாளர்… ஹீரோ!!! . அது நீங்க தாங்க…

இப்போ புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். போன வாரம் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் பார்த்தேன். ஒரு காட்சியில ஸ்ரீகாந்தோட அம்மா” டேய்.. நீ அவ இடத்துக்கு போய் (அதாங்க அந்தஸ்து) அவள கூட்டி வர வேண்டும்’ அப்படிம்பாங்க.. படமும் கிட்டதட்ட முடியும் நேரம் ஆகிவிட்டது. இனி ஒறே வழி.. “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்’ அண்ணாமலை பாட்டு மாதிரி பாட்டு தான்னு நினைச்சேன். இருந்தாலும் பாசில் மேல ஒரு நம்பிக்கை ( படம் இந்த காட்சி வரும் போதே டப்பா டான்ஸ் ஆடிபோய்தான் இருத்தது). போட்டாரு பாருங்க ஒரு பாட்டை ‘இளமைக்கோர் வேகம் உண்டு , நீயும் எழுந்து வா’ அப்படின்னு. 5 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கோடீஸ்வரனாயிட்டார். பாசில் நீங்களுமா!

விக்ரமனிடமே இருந்த காப்புரிமையை இப்போ சுரேஷ் கிருஷ்ணா, பாசில், ஆர். வீ. உதயகுமார் (படம் ‘நந்தவன தேரு’) எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எதற்க்கும் விக்ரமன் ஒரு வழக்கு தொடர்வது நல்லது.

எல்லா பாட்டுமே5 நிமிடம் வரும் பாட்டு என்றாலும் நல்ல காமெடியா தான் இருக்கு. கதாநாயகன் பஞ்ச பரதேசியா இருப்பார். பாட்டு உச்ச சுதியில் ஓடி கொண்டிருக்கும். ஊருல இருக்கற மில், பள்ளிகூடம்(சைடுல பொது சேவையும் பண்ணறாராம்) ஹீரோ பேருல காண்பிப்பாங்க. ஹீரோ தன் குடும்பத்தை ஒரு பெரிய வீட்டுக்கு மாற்றுவார். குடும்பமே ‘ஆ’ என வாயை பொளந்துகிட்டு நிக்கும். சுத்தி இருக்கற காமெடியனுங்க எல்லாருக்கும டை (Tie) கட்டி விட்டுருவாங்க. அவங்களும் நடக்க முடியாம கஷ்டப்பட்டு ஹீரோ கூட ஓடிக்கிட்டு பரபரப்பா இருப்பாங்க. ஹீரோ எதாவது கோப்புகளிள் கையெழுத்து போட்டுகிட்டே இருப்பார். தலைமுடியையும் மாற்றி மழுங்க சீவீ இருப்பார் (சீரியசா ஆயிட்டாராம்).

இந்த மேட்டர் சீரியல் பண்ணறவங்க கைல கெடைச்சுதுன்ன 365 எபிசோடா மாத்திர மாட்டாங்க…

முதல் பதிவு

தமிழ் மணமும், இந்த ப்ளாக்குகளும் எனக்கு புதிது. நான் இதுவரை எழுதியதும் இல்லை. நான் இலக்கியவாதியும் கிடையாது. மனதில் தோன்றுபவற்றை தமிழில் எழுத நிறைய ஞானம் வேண்டியது இல்லை என, எழுத ஆரம்பிக்கிறேன். உள் குத்து, வெளி குத்து எல்லாமும் வரவேற்க்க படுகின்றன. என் தமிழில் குற்றம் இருப்பின், சுட்டி காட்டுங்கள்.

அன்புடன்,
சிவா.