Saturday, October 29, 2005

"முறுக்கு" செல்லையா (தொடர்ச்சி)


இதை படிச்சிட்டு தொடருங்கள்.

தான் பிச்சை எடுக்க வந்திருப்பதை கூட உணராமல், என்னை பார்த்தவுடன் வெள்ளத்தியாய் சிரித்தான் செல்லையா. "யம்மா! இவ என் கூட தான் படிக்கறான்" அவன் அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொண்டான். என் அம்மாவும் குரல் கேட்டு முன்னால் வர, "யம்மா! இது சின்னவரா?. சின்ன வயசுல பாத்தது. நல்லா வளந்துட்டாவ " இது செல்லையாவின் அம்மா. இப்படி பிச்சை எடுப்பவர்கள் வழக்கமாக வருவதால், நலம் விசாரிப்பது எல்லாம் சகஜம் தான். " சரி! வரேன்" சொல்லிவிட்டு அடுத்த விட்டை பார்க்க செல்லையா கிளம்பிவிட்டான். 'மனது என்னவோ போல இருந்தது' என்று சொல்ல எனக்கும் வயசு பத்தாது. நானும் வெள்ளத்தியாய், அவனுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன்.

பள்ளியில் ஒரு நாள், எனக்கும் ராஜாமணிக்கும் ஏதோ கைகலப்பு வர, சண்டையில் அவன் என் சட்டையை பிடித்து இழுத்து விட்டான். ஏற்கனவே இத்து போயிருந்த சட்டை, அவன் இழுத்தவுடன், ட்ர்ர்ர்-னு மொத்தமா கிழிந்து போய்விட்டது. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் போய் செல்லையாவிடம் போய் "ராஜாமணி என்ன அடிச்சிட்டான்ல" என்று முறையிட, செல்லையா கிளம்பிவிட்டான். எனக்கொரு அடியாள் மாதிரியே அவன் இருந்தான். எவனும் என்னை திட்ட கூடாது, அடித்தாலோ அவ்வளவு தான். பாசக்கார பய. இவன் போய் ராஜாமணியை அடிக்கவும், டீச்சர் வகுப்பிற்க்குள் வரவும் சரியாக இருந்தது. அப்புறம் டீச்சர் வைத்த பஞ்சாயத்தில், ரெண்டு அடி கொடுத்து, என் சட்டையயை வீட்டுக்கு போய் தைத்து கொண்டுவர ராஜாமணிக்கு தீர்ப்பு ஆயிட்டு. ராஜாமணி வீட்டிலும் போய் வாங்கி இருப்பான். தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததற்க்காக செல்லையாவும் அடி வாங்கினான். மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் ஆண்டி போல உக்காந்திருந்ததால் நான் அடி வாங்காமல் தப்பித்தேன்.

செல்லையாவின் ஒரு திறமை, அவன் அப்பாவிடம் இருந்து பழைய ரப்பர் செருப்புகளை வெட்டி அழகாக டிராக்டர் சக்கரம் போல அழகாக செதுக்கி, அதற்கு வண்டியும் ஒன்று செய்து கொண்டு வருவான். எங்களுக்குள் சில சமயம் பண்டமாற்று நடக்கும். நான் அவனுக்கும் சிறுவர் கதை புத்தகங்களில் வரும் கதைகளை படித்து வந்து சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் என் அப்பா வேலை பார்க்கும் சைக்கிள் கடைக்கு வெள்ளிக்கிழமை போய்விடுவேன். தினமணிகதிரில் தொடராக வந்த "சூப்பர் தும்பி" தொடரை படித்து வந்து செல்லையாவுக்கு வாரா வாரம் சொல்லிவிட வேண்டும். அதற்கு அவன் செய்த வண்டியை எனக்கு கொடுப்பான். தியேட்டருக்கு வரும் எல்லா படத்துக்கும் விமர்சனம் சொல்லிவிடுவான். 'நான் சிகப்பு மனிதன்'ல ரஜினி 29 கொலை பண்ணுவான்டா. சூப்பர் படம்" இப்படி தான் இருக்கும் அவனது பட விமர்சனம்.

அப்புறம் என் பெற்றோர்களின் ஆசையால், நான் ஐந்து முடிந்ததும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அதற்க்கப்புறம் இன்று வரை செல்லையாவை பார்க்க முடியாமலே போனது. அவன் நினைவுகள் மெல்ல அடிமனதில் தேங்க தொடங்கின......

சென்னை விமான நிலையம். " வரேன்பா" ஆசிரியர் விடைப்பெற்றுக்கொண்டார். நெல்லை விரைவு வண்டியை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊரில் கல்யாண ஏற்பாடு எல்லாம் போய்க்கிட்டு இருப்பது தூரத்தில் இருந்தே தெரிந்தது. அமெரிக்க புராணத்தை எல்லோரிடம் கொஞ்ச நேரம் பாடிவிட்டு, படமெல்லாம் காட்டி கொண்டிருந்தேன். 'நல்லாருக்கியலா. மருமகன. பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்திச்சா? " மாமனார் நலம் விசாரித்துவிட்டு போனார். ஸ்பீக்கரில் "வினாயகனே! வெவ்வினையை வேரருக்க வல்லான்" சீர்காழி தொடக்க பாடலை கணீரென்று பாடிக்கொண்டிருந்தார். ஊர் வாண்டுகள் எல்லாம் ஒடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கல்யாண வீடு களை கட்டிக்கொண்டிருந்தது.

கல்யாணத்திற்க்கு முந்தின மாலை, ஊரில் இருக்கும் அம்மன் கோவில், சுப்ரமணியன் கோவிலுக்கெல்லாம் மேள தாளத்தோடு ஒரு ரவுண்ட் விட்டுட்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பந்தல் போட்டுக்கொண்டிருக்கும் முகம் ரொம்ப பழகிய முகமாக படவே, போய் பார்த்தால், அது செல்லையா. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனாலும், அந்த முகம் செல்லையா தான் என்று உடனே மனதில் பட்டது.

கிட்ட போய் "ஏல! செல்லையா! எப்படி இருக்கற. என்ன நியாபகம் இருக்குதா" . என்னை அடையாளம் கண்டு கொண்டவன் "நீங்களா! நல்லா இருக்கீங்களா?. ஆளு மாறவே இல்ல. அப்படியே இருக்கீங்க. அமெரிகாவிலா இருக்கீங்க. எல்லோரும் சொன்னாங்க. நல்லா இருக்கியல்லா?" . வார்த்தைக்கு வார்த்தை "ங்க" சேர்த்து கொண்டான். அவனின் "ங்க" வில் அவன் சொல்ல வந்தது ஒன்று மட்டும் புரிந்தது. "நாம் இருவரும் வளர்ந்துவிட்டோம்! ஜாதி, அந்தஸ்து என்னும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்துவிட்டது. " சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான் 'முறுக்கு' செல்லையா.

அவன் அன்று ஓசியில் எனக்கு கொடுத்த அஞ்சு பைசா முறுக்கின் ருசி லேசாக நாக்கில் வந்து போனது.

(முற்றும்).

Friday, October 28, 2005

"முறுக்கு" செல்லையா


ப்ராங்பர்ட் (Frankfurt) விமான நிலையம். சிகாவோவில் இருந்து வந்த என் விமானம் தாமதமானதால், சென்னை செல்லும் விமானத்தை தவற விட்டு நின்று கொண்டிருந்தேன். அடுத்த வாரம் கல்யாணம். யாருக்குன்னு கேக்கறீங்களா?. எனக்கு தான். இந்நேரம் பார்த்து இவனுங்க வேற படுத்தறானுங்களே என்று எரிச்சலாக இருந்தது. மும்பை செல்லும் விமானத்தில் அனுப்புவதாக கூறினார்கள். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. எரிச்சலோடு இருக்கையில் போய் அமர்ந்தேன். பொழுது போகாமல், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி, ஒரு அம்மாவை, எங்கேயோ பார்த்தது போல இருக்கவே, அருகில் போய் பார்த்தால், எனது நாலாம் வகுப்பு ஆசிரியர். அவர் பெயர்....தெரியாது. ஆரம்ப பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் பெயர் ஒன்னாப்பு டீச்சர், ரெண்டாப்பு டீச்சர், இப்படி தான். இரு கைகளையும் கூப்பி "வணக்கம்! டீச்சர்" என்றேன். என்னை இனம் கண்டு கொண்டவர், "எப்படிப்பா இருக்க?" என்று நலம் விசாரித்தார். தன் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு திரும்புவதாகவும் கூறினார். ஆசிரியரை எனக்கு ஊரிலேயே தெரியும். மெயின் பஜாரில் தான் அவர்கள் வீடு. அடிக்கடி பார்க்கலாம். "நீ நல்லா வருவேன்னு எனக்கு அப்பவே தெரியும். அப்பவே நீ நல்லா படிப்பே" என்று என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். தான் கற்றுக் கொடுத்த மாணவனை இன்று நல்ல நிலைமையில் பார்க்கும் போது வரும் நல்வார்த்தைகளே அவை.

ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "கிருஷ்ணன தெரியுமா! டீச்சர். இப்போ அவன் மெட்ராசுல ஒரு பேங்க்ல வேலை பாக்கறான். சக்தி கணேசன் மெட்ராசுல ஜூஸ் கடை வச்சிருக்கான்" - இப்படி எனது ஐந்தாம் வகுப்பு நண்பர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு அவர்கள் நினைவிருக்க நியாயம் இல்லை தான். எத்தனை ஆயிரம் மாணவர்கள் அவரை கடந்து வந்திருப்பார்கள். இருந்தாலும், சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டு வந்த போது தான் "செல்லையா" பேச்சும் வந்தது.

செல்லையா. எனது ஆரம்ப பள்ளித் தோழன். எனது ஆரம்ப பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்ப பிண்ணனியும் வித்தியாசமானது. அதில் செல்லையாவின் பிண்ணனி,
செல்லையா கிராமத்தில் பிச்சை எடுப்பதே ஒரு தொழிலாக இருந்தது. காலையிலேயே ஒரு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு குழந்தைகளுடன் கிளம்பி விடுவார்கள். சில பேர் செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். செல்லையா அப்பாவும் செருப்பு தைப்பவர் தான். அப்படி ஒரு ஏழ்மையான நிலையில் இருந்து அவன் படிக்க வந்திருப்பதே பெரிய விசயம் தான்.


ஐந்து படிக்கும் போது, என் சித்தி தவறாமல் எம்.ஜி.யார் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டி போவார்கள். அங்கு தியேட்டரில் செல்லையாவை பார்க்கலாம். முறுக்கு விற்றுக் கெண்டிருப்பான். "முறீக்கே! முறீக்கே!" என்று அவன் கத்துவது தியேட்டர் முழுவதும் கேட்கும். ஒரு தகட பெட்டியில் அடுக்கி வைத்த முறுக்கை தலையில் வைத்துக்கெண்டு, மேல் சட்டை இல்லாமல், டவுசரை கையில் பிடித்த படி முறுக்கு விற்றுக் கொண்டிருப்பான். அந்த கூட்டத்தில் என்னை எப்படியும் கண்டு பிடித்து, என்னிடம் வந்து ஒரு முறுக்கையாவது கொடுத்து "வச்சிக்கல" ன்னு கொடுத்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைப்பதே இரண்டு முறுக்குக்குறிய காசாக தான் இருக்கும். முறுக்கை எண்ணி தான் கொடுத்திருப்பார்கள் என்றும் அவனுக்கு தெரியும். இருந்தாலும், ஒன்றை கைல தினித்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைக்கும் பெரிய கூலி, ஓசியில் படம் பார்ப்பது தான். அவனுக்கு கொடுக்க என் கையிலும் அஞ்சு பைசா கூட இருக்காது. என் வகுப்பில் வேறு யாருக்கும் முறுக்கு கொடுக்க மாட்டான். நண்பன் நான் என்றால் மட்டும் தான்.

ஏற்கனவே நிறைய தடவை இதே படத்தை பார்த்து இருப்பான் என்பதால், படம் தொடங்கியதும் என்னிடம் வந்து அமர்ந்து கொண்டு, கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். நம்பியார் எம்.ஜி.யாரை கத்தியால் குத்த மணிக்கணக்கில் போராடி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் கத்தியை பார்த்தவுடனே பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொள்வோம். இடைவேளை வரப் போவது தெரிந்ததும், தன் பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவான், "முறீக்கே! முறீக்கே" என்று கூவிய படி. என் வருப்பில் எல்லோருமே தியேட்டருக்கு போகும் போது செல்லையாவை பார்த்திருப்பதால், அவனுக்கு பட்ட பெயரே "முறுக்கு" செல்லையாவாகி போனது.

ஒரு நாள் வீட்டில், "அம்மா! தருமம் போடு தாயீ" என்று குரல் வர, அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி வைத்து "போட்டுட்டு வந்துருல" ன்னு கூறினார்கள். நான் தட்டை எடுத்துக் கொண்டு கதவை திறந்தால், வெளியே, தட்டு எந்திய படி அவன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தான் செல்லையா!

(தொடரும் - பதிவின் நீளம் கருதி)

Thursday, October 20, 2005

கிராமத்து மணம் - 1 (குதிரை சவாரி)

கிட்டத்தட்ட 20 வருடம் கிராமத்து (கல்லூரி முடிக்கும் வரை) வாழ்க்கை. சின்ன வயசில் பண்ணிய சின்ன சின்ன குறும்புகள், சின்ன சின்ன ஆசைகள் . அடடா! அது அல்லவா வாழ்க்கை. அவற்றை வாழ்க்கை முழுவதும் அசை போட்டுக் கொண்டே இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பதிய ஆரம்பிக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

எல்லா கிராமத்திலும் ஒரு சகலகலா வல்லவர் இருப்பார். எங்க ஊரிலும் ஒருத்தர் உண்டு. ஊரில் செமையா பீட்டரு விட்டுக்கிட்டு இருந்த எங்கள் அண்ணன் (கூட பொறந்த அண்ணன் இல்லப்பா) "பீட்டர்" பற்றி தான் இந்த முதல் பதிவு.

"வெள்ள அடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "மரம் வெட்டணுமா பீட்டர கூப்பிடு" "கோழி புடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "குழி தோண்டனுமா பீட்டர கூப்பிடு" என்று ஊரே எதற்க்கெடுத்தாலும் பீட்டர் அண்ணனிடம் தான் போய் நிற்க்கும். அதற்க்கேற்றார் போல் சரக்கும் அவனிடம் இருக்கும். எலக்ரிக்கல் வேலைல இருந்து எலி பிடிக்கற வேலை வறை பொறுமையாக, கச்சிதமாக செய்து கொடுப்பான். அதுமட்டும் அல்ல, எங்களை போன்ற வாண்டுகளுக்கு , ஓணான் அடிப்பதில் இருந்து, நீச்சல் அடிப்பது வரை அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்த "குரு" அவன் தான். அதனால் நாங்கள் எப்போதுமே அவனையே சுற்றிக் கொண்டிருப்போம். " பீட்டர் கூடயா போற..போய்ட்டு வா" என்று எல்லார் வீட்டிலும் விட்டு விடுவார்கள். அந்த அளவுக்ககு அவன் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை.

எங்கள் குருகுலத்தில் நடந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்...

அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். ஓரு நாள் ஊர்ல சொடல மாடன் கோயில் கொடைக்கு "அன்பே வா" படம் திரை கட்டி போட்டாங்க. அதுல வந்த "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாட்ல குதிரைல சரோஜா தேவியோடு 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் டூயட் பாடறத பாத்து , எங்களுக்கும் குதிரை ஓட்ட ஆசை வந்தது. அதை எங்கள் குரு பீட்டரண்ணணிடம் சொல்ல, "குதிரை தானல. புடிச்சிரலாம். நாளைக்கு மேக்கே வந்துருங்கல" என்றான்.

அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் போக, பீட்டரண்ணனும் ரெடியாக இருந்தான். "என்னன்னே, குதிரய எங்கண்ணே". "வரும்ல வெயிட் பண்ணுங்க. எல்லோரும் சேர்ந்து தான் புடிக்கணும். ரெடியா இருங்கல" "டேய். அதோ வருதுடா" பீட்டரண்ணன் எங்களை ரெடியா இருக்கச் சொன்னான். அவன் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்தது.......எங்க ஊர் வண்ணானின்...........கழுதை.

"டேய் இது குதிர இல்லல..குதிர மாதிரி..அட்ஜஸ்ட் பண்ணுங்கள. இந்த தேரி காட்டுக்குள்ள குதிரைக்கு எங்கல போறது " - இது குரு (பீட்டர் அண்ணன்). ஒரு வழியாக கழுதையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மடக்கி பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. செமையா ஓட்டம் காட்டியது. ஊரில் எவனாவது பார்த்தால் மானம் போய் விடும் என்பதால் ஊருக்கு கொஞ்சம் தள்ளியே எங்கள் குதிரை ஓட்டும் பயிற்சியை வைத்துக் கொண்டோம். கழுதை பிடிப்பது பார்த்து பிடிக்க வேண்டும். பின்னால போனா நம்ம கேப்டன் மாதிரி Back kick போட்டு தாக்கி விடும். முன்னால போனா கடித்து விடும்.

ஏற்கனவே வண்ணானிடம் பொதி சுமந்து, பொதி சுமந்து நொந்து போன கழுதை, இருந்து இருந்து எங்களிடம் வந்து மாட்ட, அது எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ! . குதிரையை கட்டுப்படுத்த கடிவாளம் இருக்கும். கழுதைக்கு.....பீட்ரண்ணன் ஒரு பம்பர கயிறை எடுத்து கழுதை மூஞ்சியில் கட்டி கையில் பிடித்துக் கழுதை மீதேறி அமர்ந்து கொண்டான். இந்த மாதிரி டெக்னிகல் விசயங்கள் எல்லாம் அவன் அழகாக பண்ணுவான். கயிறும் நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. கழுதை வாயை கட்டினாதால் அது கடிக்கவும் முடியாம போச்சி. நாங்கள் ஒவ்வொருவாரா அவன் பின்னால் ஏறிக் கொள்ள, அவன் சாரதியாக இருந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு வந்து விடுவான். கழுதையும் இரண்டு பேரை ஏத்திக்கிட்டு நல்லா தான் ஓடிச்சி. கழுதைக்கு ஏதாவது ஆச்சின்னா, இதே கழுதையில வச்சி ஊர்ல ஊர்வலம் விட்டுடுவாங்க என்பதால், அப்போ அப்போ ஊர்ல எவனாவது பாக்கரானான்னு பார்த்துக்கிட்டோம்.

கொஞ்ச நேரம் கழிச்சி, நாங்களே தனியாக சவாரி செய்யலாம் என்று எங்கள் குரு இல்லாமல் ஓட்ட ஆரம்பித்தோம். ஊட்டி கொடைக்கானல்ல எல்லாம் குதிரைன்னு ஒன்ன வச்சி சவாரி போவாங்களே, அதை விட எங்க ஊரு கழுதை அழகாகவே ஓடிச்சி.

என் சுற்றும் வந்தது. என் சுற்று வரும் போது தானா கழுதைக்கு கிறுக்கு புடிக்க வேண்டும். போன ரவுண்டில் கழுதை ஒரு முள் காட்டுக்குள் ஓட, உடம்பெல்லாம் வீர தழும்புகளுடன் திரும்பி வந்த செந்தில் என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டான். "போடா..போ..நானும் பாக்கத்தான போறேன்" என்பது போல இருந்தது. நான் ஏரி உக்காந்ததும், நாசமா போன கழுதை தலைதெரிக்க ஓட ஆரம்பித்தது.....எங்கள் கிராமத்தை நோக்கி....

போன தீபாவளிக்கு இதே கழுதை வாலில் சரவெடி கட்டி வுட்டது, காவோலை (காய்ந்த பனை ஓலை) கட்டிவிட்டு அதை தலை தெரிக்க ஓட வைத்தது எல்லாம் நினைவுக்ககு வந்துச்சி. அப்போது தான் எனக்கு உறைத்தது, கழுதை அதற்கு பழி வாங்க, நம்ம மானத்தை வாங்க முடிவு செய்து விட்டது என்று. நான் பம்பர கயிரை புடிச்சி இழுக்க, என் போதாத காலம், கயிறு அத்து கைல வந்து விட்டது. அது ஓடுன ஓட்டத்துக்கு என்னால கழுதையில இருந்து குதிக்கவும் முடியாம, புடிக்க கயிறும் இல்லாம முழிச்சிக்கிட்டு இருக்க, நேரே கழுதை ஊருக்குள் போய் நின்று விட்டது. ஊர் சனம் எல்லாம் பார்த்து "ஏல! என்னல தப்பு பண்ணுண. கழுதைல ஏத்தி விட்டுருக்காங்க! " என்று சிரிக்க, ஒரே கேவலமா போச்சி. கழுதை வந்த வேலை முடிந்த சந்தோசத்தில், என்னை கீழே தள்ளி விட்டு ஓடியது. ...வண்ணான் வீட்டை நோக்கி.


(தொடரும்)

Sunday, October 16, 2005

பிடித்த பாடல் - S.P.B & வாணி ஜெயராம்

பழைய பாடல்களில் ஒரு சுகம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் S.P.B பாட வந்த புதிதில் ஜெய்சங்கர் படங்களிலும், சிவகுமார் படங்களிலும் தன் இளங்குரலால் பாடிய பாடல்கள் (வேதா போன்ற இசை அமைப்பளர்களின் காலத்தில்) எனக்கு மிகவும் பிடித்தவை. இசையில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளராத காலத்தில், பாடலின் ராகமும், பாடகரின் குரலுமே பாடலை எடுத்துச் செல்லும். அப்படி இருந்தும், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

வாணி ஜெயராம் குரலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதெல்லாம் அந்த காலம் என்று ஏங்க வைக்கும் பாடகி. S.P.B -யும் வாணி ஜெயராமும் பாடிய பாடல்கள் நிறைய. அவற்றில் ஒன்று இதோ உங்களுக்காக,

படம் : அவன் அவள் அது
பாடல் : இல்லம் சங்கீதம்..அதில் ராகம் சம்சாரம்..
எனக்கு பிடித்தவைகளில் சில S.P.B & வாணி ஜெயராம் பாடல்கள்:

  1. அன்பு மேகமே இங்கு ஓடி வா..எந்தன் துணையை அழைத்து வா - எங்கம்மா சபதம்.
  2. தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் - காமாட்சியின் கருனை
  3. இதோ உன் காதலி கண்மணி..இவள் மனம் இனி உனது - சௌந்தர்யமே வருக வருக
  4. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை..மனம் தாளாமல் துடித்திடும் ஓசை - என்னடி மீனாட்சி
  5. சொர்க்கத்திலே முடிவானது..சொந்தத்திலே நிலையானது - லலிதா
  6. தங்கச்சி பொண்ணு..தங்கச்சி பொண்ணு..தல குனிஞ்சிக்கம்மா - கிழக்கும் மேற்க்கும் சந்திக்கின்றன.

S.P.B & P. சுசிலா பாடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Wednesday, October 12, 2005

இவர்கள் இந்தியர்கள்

"நாங்கள்லாம் இந்தியாவுல எந்த விதியையும் (Rules) கடைபிடிக்கவே மாட்டோம். எங்க ஊர்ல எதுவுமே உருப்படியாக இருக்காது" - இப்படி இங்கே அமெரிக்கவில் இருக்கும் நம்ம பசங்க தன்னுடன் சிலர், வேலை செய்யும் அமெரிக்கரிடம் சொல்லிக் கொள்வதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப பெருமையாக சொல்லி விட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியது போல சிரித்து கொள்வார்கள். "டெண்டுல்கர் எல்லாம் ஒரு Player-ஆ" "கமல் எல்லாம் ஒரு நடிகனா?" இப்படி பேசி தன்னை ரொம்ப தெரிந்தவன் போல காட்டிக் கொள்ளும் புத்தி, தாய் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஒரு அயல் நாட்டவனிடம் தன் தாய் நாட்டை கேவலமாக பேசுகிறோமே என்று கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டிருப்பார்கள்.

இங்கே அமெரிக்காவிலும் அத்தனையும் உண்டு என்று பார்த்திருந்திருந்தும், ஏனோ அப்படி பேசுவார்கள். இங்கேயும் மாலையில் வாகன நெரிசலில் எத்தனையோ பேர் சாலையை விட்டு கரையில் வண்டியை ஓட்டி செல்கிறார்கள் (அங்கு வண்டியை ஓட்டக் கூடாது என்று விதி இருந்தும்). அதற்கு மேல் போக பாதை இல்லை என்றதும் சாலைக்குள் வர, முன்னேறி போறவனையும் போக விடாமல் தங்கி கொண்டிருப்பார்கள். எல்லா கண்ராவியும் இங்கேயும் உண்டு. தெருவுக்கு தெரு பிச்சை காரர்கள் இங்கேயும் உண்டு. "Hey! Man! U have a dollar change" - என்று கேட்கும் கருப்பண்ணன். பாலத்திற்க்கு அடியில் தூங்கி விட்டு, "Homeless! Hungry! Help Please! God Bless You" என்று சோம்பேறித்தனமாக அட்டையை வைத்துக் கொண்டு சிக்னலில் பிச்சை எடுக்கும் வெள்ளையன். தாளமே இல்லாமல் ஒரு கொட்டை வைத்துக்கொண்டு "டண்ட நக்கர" என்று தட்டிக் கொண்டு தட்டு ஏந்தும் கருப்பண்ணன். இப்படி இந்த சின்ன ஊரிலேயே என்னால் 100 பிச்சை காரர்களை காட்ட முடியும். தொலை தூரம் போகும் பஸ்ஸில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததும் இடத்திற்க்காக அடித்து கொள்ளும் அமெரிக்கர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்க்காக நான் அமெரிக்காவை குறை சொல்ல வில்லை. எல்லா நாட்டிலும் எல்லாமும் இருக்கிறது என்றே சொல்கிறேன்.

அமெரிக்காவிலும் எல்லா ஒழுங்கும், எல்லாம் தனக்கு தாராளமாய் கிடைக்கும் என்பது வரைக்கும் தான். ஏனோ! எதற்க்கெடுத்தாலும் "அமெரிக்காவை பார்! ஜப்பானை பார்!" என்று பாடம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள் ( என்னடா 'அன்னியன்' -அ பத்தியான்னு நினைக்காதீர்கள். இது வேற).

இந்த பதிவை நான் போட காரணமே "கிழட்டு அனுபவங்கள்" என்று ராஜசேகரன் எழுதிய பதிவினால் தான். ஏதோ பெரிய மேதாவி போல் " தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது." "இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? " என்று சொல்லியிருந்தார். சரி, அது அவரது அபிப்பிராயம் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இது ஏதோ குஷ்பு மேட்டரும் இல்லை, "பெண் சுதந்திரம்" மேட்டரும் இல்லை.

ஐயா! மேதாவியே! அயல்நாட்டிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தங்களுக்கு என் தாய் நாட்டை பற்றி என்ன நக்கல்?. அயல் நாட்டுக்கு போங்கள். நன்றாக சம்பாதியுங்கள். முடிந்தால் தாயகம் திரும்பி வாருங்கள். இல்லை "சூழ்நிலை" காரணமாகவோ, இல்லை "இந்தியா உங்களுக்கு வாழ தகுதியற்ற நாடு என்று நீங்கள் நினைத்தாலோ" அங்கேயே குடிமகனாகி விடுங்கள். அதில் தப்பேதும் இல்லை. அது அவன் அவன் விருப்பம்.

ஆனால், அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு, பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். ஏதோ ஒரு A/C அறையில் உட்கார்ந்து கொண்டு, ஓசியில் ஒரு இனையம் கிடைத்ததும் உங்கள் புண்ணாக்கு மேதாவி தனத்தை "இந்தியா ஒரு போதும் முன்னேற போவதில்லை" "நான் சீனா போயிருக்கிறேன்" "ஜப்பான் போயிருக்கிறேன்" என்று கேணத்தனமாக பேசாதீர்கள். நீங்கள் வேறு நாட்டை பற்றி உயர்வாக தாராளமாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஏன் எதற்க்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்கிறீர்கள். நீங்கள் வந்து இறங்கியவுடன் பளிங்கு போல சாலையும், பல்லக்கு போல காரும் இருந்தால் தான் அது உங்களுக்கு வளர்ந்த இந்தியாவாக தெரியும் என்றால், அது உங்கள் தவறு.

தன் வேலையை விட்டு அடுத்தவர் பசி போக்க உழைத்து கொண்டிருக்கும் இந்த மதுரை இளைஞரும் இந்தியாவில் தான் இருக்கிறார்.

ஏழை மாணவிக்காக பணம் சேர்த்து கொடுத்து சந்தோசமாக இருக்கிறது என்று சொல்லும் இந்த டோண்டு ராகவனும், பாலாவும் இந்தியாவில் தான் இருக்கிறார். முட்டி அளவு சென்னை மழை நீரில் செருப்பை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக கூறும் இவர்கள், அதற்க்காக 'இந்தியா முன்னேறாது' என்றா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் ஒரு ஏழை மாணவிக்கு உதவுவது. அது அவர்களின் நல்ல எண்ணம்.

தன்னால் முடிந்த கல்வியை ஏழை மாணவர்களுக்கு கற்று கொடுக்க, நேரம் ஒதுக்கி, இந்தியா முன்னேற வேண்டும் என்று இருக்கும் இவர்களும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இவர்களின் கனவு இது தான்.

இவர்கள் திரு. அம்பானியோ. டாட்டாவோ கிடையாது. நம் ஒருவரால் என்ன மாற்றம் கொண்டு வர முடியும் என்று சப்பை கட்டுபவர்களுக்கு மத்தியில், சாதாரண மக்களாய் இருந்து தன்னால் முடிந்தவற்றை தன் தாய் நாட்டுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடம் கேட்டால், இந்தியா "சீனா மாதிரியோ! அமெரிக்கா மாதிரியோ" ஆக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். "நான் நன்றாக இருக்கிறேன். என்னால் என் தாய் நாட்டுக்கு, என் மக்களுக்கு முடிந்ததை செய்வது என் கடமை " என்று தான் சொல்வார்கள். இவர்கள் சாலை உடைந்து கிடந்தாலும், தன்னால் ஒரு கல்லை எடுத்து போட முடியுமா என்று பார்ப்பார்கள். இந்தியாவில் எதுவுமே சரியில்லை என்று உம்மை போல சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட இவர்களின் இந்தியாவிற்க்கு, உம்மை போன்றவர்களின் பரிதாபமோ, கரிசனமோ தேவை இல்லை.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் மனிதன்.

இருப்பதை சிறப்பாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் இந்தியர்கள்.

இவர்களுக்கு (இந்தியர்களுக்கு) உங்கள் புண்ணாக்கு அனுதாபம் தேவை இல்லை.

பரபரப்பாக எழுத வேண்டும் என்றால் "பெண் விடுதலை" "கற்பு" "ஆண் ஆதிக்கம்" என்று எழுதுங்கள். கேணத்தனமாக எதற்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்காதீர்கள்.

அன்புடன், சிவா.

Saturday, October 08, 2005

சூப்பர் ஸ்டார் - S.P.B பாடல் - ரசித்த பாடல் -1

பாடலுக்கு முன் கல்லூரி முதலாமாண்டு நடந்த ஒரு சின்ன சம்பவம்.
நம்ம அறை நண்பர் வேலு கும்பகர்ணன் தம்பி என்பதால், தூக்கத்தில் பொளந்து கட்டுவான். சுத்தி என்ன நடக்குது. எப்போ தூங்கினோம், எப்போ முழிக்கிறோம் என்பது கூட தெரியாமல் தூங்குவான். ஒரு நாள் எதோ ஒரு வகுப்பு இல்லாமல் போக, மதியமும் வகுப்பு இல்லை என்பதால், வந்தவுடன் கட்டையை சாய்த்து விட்டான். நான் மதியம் துணி எல்லாம் தொவைச்சி குளிச்சி மாலையில் அறையில் உக்கார்ந்து இருந்தேன். மாலையில் எழ போகும் நண்பரை கொஞ்சம் கலாய்க்கலாம் என்று, எழுந்தவுடன் "என்னடா! நாயே! இப்படி தூங்கிட்ட! வகுப்புக்கு நேரமாச்சுடா. ஏண்டா மனுசன்னா இப்படியா தூங்குவான். நேத்து தூங்கி, இன்னைக்கு காலைல எழுந்திருக்கிறே! " என்றேன். சாயங்காலம் என்பதால் வேலுக்கு சூரியன் மறையுதா, உதிக்குதான்னு கொஞ்சம் குழப்பமாயிடுச்சு!. தவிர நான் வேற குளிச்சி விபூதி பட்டையெல்லாம் அடிச்சு இருந்தேனா, விடிஞ்சிடுச்சு போலன்னு நம்பிட்டான்.

மட மடன்னு ப்ரஷ்ல பேஸ்ட வச்சி பல்ல வெளக்கிகிட்டே குளிக்க பக்கட்டையும் எடுத்துக்கிட்டு பாத் ரூம் கெளம்பிட்டான். அங்கே எவனும் இல்லாததை பார்த்து வேலுக்கு சந்தேகம் வந்து விட்டது. உடனே பக்கத்து அறைல போய் பசங்க கிட்ட சூரியனை காட்டி
" டேய்! இப்போ விடியுதா! இருட்டுதா!" ன்னு கேட்க செம காமெடியாச்சு.

நேற்று ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். "போக்கிரி ராஜா' படத்தில் இருந்து S.P.B அலம்பி தள்ளிய பாடல். சில பாடல்கள் S.P.B மட்டுமே பாடமுடியும். அதுவும் இந்த மாதிரி பேசி கதை சொல்லிக் கொண்டே பாட அவரை விட்ட வேற ஆளு கிடையாது. அதில் வரும் "சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு" வரியை கேட்டதும் என் கல்லூரியில் நடந்த மேலே சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது.

இந்த பாடலை கேட்டு சந்தோசமா இருங்க. (பாடலுக்கு கீழே).

பாடல்:


கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்

அந்திபட்ட நேரத்தில சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்

சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன் தலைகீழா

தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்

என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாரு நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி

கடவுள்...

ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னே..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னே...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னே
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்.. கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்ட அவசியம் வந்தது.

விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..


கடவுள்...

Thursday, October 06, 2005

சனங்களே ! நாங்க படம் போட போறோம்..

எங்கேடா படம்னு கேக்காதீங்க. இது நாங்கள் ஊரில் சின்ன வயசில் ஊர்மக்களுக்கு உண்மையிலேயே காட்டிய படம் பற்றியது. அப்போதெல்லாம் ஊரில் டி.வி என்பதே கிடையாது. படம் பார்க்க வேண்டுமென்றால் ஊரில் உள்ள ஒரு ஓட்டை தியேட்டரை விட்டால் வேற போக்கு கிடையாது. ஊத்திக்கிட்ட படம் என்றால் எப்படியும் ஒரு வருடத்திற்க்குள் வந்துவிடும். சூப்பர் ஹீட் படம் என்றால் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். எங்காவது கோவில் கொடை என்றால் திரைப்படம் போடுவார்கள். சுத்துப்பட்டு 18 கிராமத்திலிருத்தும் மக்கள் பாய், தலையனையோடு கிளம்பிவிடுவார்கள். அப்படி என்ன படம் போடுவார்கள் என்று கேட்கறீர்களா?. கொஞ்ச நஞ்ச புதுசு இல்லை.. அப்படி புது படமாக போட்டு தள்ளுவார்கள்.. "வணங்கா முடி" "தூக்கு தூக்கி" "மன்னாதி மன்னன்"..இதற்க்கு புதிதாக பார்த்ததாக எனக்கு நியாபகம் இல்லை. ஒரு இத்து போன ரீலை கொண்டு வந்து படுத்தி கொண்டிருப்பார்கள். அதுவும் அத்து அத்து.. 21 ரீல் படம் 210 ரீலாக ஓடிக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து எங்களை காப்பாத்த வந்தது தான் " டி.வி-டெக் வாடகைக்கு" என்று முளைத்த கடைகள். கிராமமே ஆவலோடு எதிர்பார்க்க ஒருநாள் டி.வியும் டெக்கும் (அதாம்பா VCR) ஒரு ப்ளசர் காருல வந்துச்சி (அம்பாசிடர் கார்). டெக்கையும் கேசட்டையும் பார்க்க எல்லாருக்கும் ஒரெ ஆச்சரியம். கோவிலுக்கு தேங்காயெல்லாம் உடைச்சி படத்தை ஒரு 10 மணிக்கு ஆரம்பிச்சாங்க. அப்போவெல்லாம் அந்த ஓட்டை தியேட்டருல இரவு இரண்டாம் ஆட்டம் ஆரம்பித்தவுடனே தான் ஊர்ல எல்லாம் படம் போடணும்னு ஒரு சட்டம் இருந்துச்சு. முதல் ரெண்டு படங்கள் 1. சம்சாரம் அது மின்சாரம். 2.நம்ம ஊரு நாயகன் (யாருன்னு கேக்கறீங்களா...நம்ம ராமராஜன் தான்).

அப்புறம் கல்யாண வீடு, சிவராத்திரி என்று எல்லாவற்றுக்கும் படம் போட்டு விடுவார்கள். ரெண்டு மூனாகி நாலாகி ஐந்து படமாகி நின்றது. சாயங்காலம் 6 மணிக்கே ஆரப்பித்து விடுவேம். காலை 7 மணி வரை மராத்தான் மாதிரி படம் பார்ப்போம்.

பொழுது போகவில்லை என்றால் பசங்க எல்லாம் சேர்ந்து ஒரு நோட்டையும் போனாவையும் எடுத்துக்கிட்டு வீடு வீடாக படம் போடுகிறோம் என்று காசு பிரிக்க கிளம்பி விடுவோம். மொத்தமே ஊரில் 40 வீடு தான். "ஏல ! உங்களுக்கு வேற வேலை இல்லையா. போங்கல !" பாதி வீட்டுல இருந்து இப்படி தான் பதில் வரும். பக்கத்து வீட்டு பாட்டி ஒரு 5 ரூவா கொடுத்துட்டு "ஒரு எம்.ஜி.ஆர் படம் போடுங்கல என்பார். ஆளுக்கு ஒரு படம் என்று ஒரு 20 படம் பட்டியலில் சேர்த்து விடும். காசுக்கு ஏத்த மாதிரி ரெண்டு படமா மூனு படமான்னு முடிவு செய்து படம் தேர்வு செய்ய முடிவு பண்ணுவோம். இங்கே தான் ரொம்ப ரொம்பா கவனமாக இருக்க வேண்டும். இடக்கு மடக்கா படத்த எடுத்துட்டு வந்து போட்டா, வெட்டு குத்தாயிடும். சனங்களுக்கு ஒரு படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்.

1. படம் கிராமத்து படமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டாமை இருந்தால் நல்லது. கொறைஞ்சது ஒரு பண்ணையாராவது இருக்க வேண்டும்.

2. சாமி படம் பரவாயில்லை. ராமநாராயணன் படம் என்றால் அசத்தி விடலாம். பேபி ஷாம்லி, பாம்பு, கொரங்கு இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.

3. காதல் இருக்கலாம். ஆனால் ஒரே காதல் புராணமாக இருக்க கூடாது (காதல், இதயத்தை திருடாதே மாதிரி).

4. துப்பாக்கியை வைத்து டுமீல் டூமீல் என்று எடுத்ததெற்க்கெல்லாம் சுட்டுக்கொண்டிருக்க கூடாது. வேண்டுமென்றால் அருவாளால் வெட்டி கொள்ளலாம்.

5. ரொம்ப விவரமாக பேசுவதாக நினைத்து கொண்டு முக்கி முனகி அத்து அத்து பேச கூடாது (மணிரத்னம் படம் மாதிரி). சொல்ல வந்ததை நேராக தெளிவாக பேச வேண்டும்.

6. 'மன்மத ராசா' மாதிரி குத்தாட்டம், 'உம்மா..உம்மம்மா' மாதிரி கெட்ட ஆட்டம் எல்லாம் இருக்க கூடாது. வேண்டுமென்றால் 'ஒத்த ரூவா' பாட்டு மாதிரி கரகாட்டம் ஆடி கொள்ளலாம்.

7. ஒளிப்பதிவு நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் "ஏண்டா. நாசமா போனவனுங்களா. இந்த கண்ணு எழவு வேற சரியா தெரிய மாட்டேங்குது. என்னல படம் எடுத்துட்டு வத்தீங்க" அப்படின்னு பாட்டியின் பட விமர்சனம் உடனே கிடைக்கும்.

8. கமல்/மணிரத்னம் படம் சுத்தமாக ஆகாது. அப்படி ஒரு அலர்ஜி.

9. கதை புரட்ச்சிகரமாக இருக்க கூடாது .(எங்க ஊரு பாசையில கேனத்தனமா இருக்க கூடாது). உதாரணமா பாலசந்தர் படங்கள் ( கல்கி).

10. "A" ரக படங்கள் ( "உள்ளே வெளியே" "நியூ" ரகங்கள்) தெரியாதனமா போட்டுட்டா படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஊர் சனம் மொத்தமும் எங்களை வஞ்சிக்கிட்டு இருக்கும். "செம்பருத்தி" வந்த புதிதில் ஊரெ 'ரோசா..ரோசா' அப்படின்னு புலம்பிக்கிட்டு கெடக்க, நாங்களும் சரி நாங்களும் என்னதான் அது ரோசான்னு பாக்க படத்தை எடுக்க, ரெண்டு பாட்டு ( "பட்டு பூவே" , "சலக்கு சலக்கு சேல" ) எங்க இமேஜ சுத்தமாக காலி பண்ணி விட்டது. "ஏல ! மதி கெட்ட மூதி (மூதேவி என்பதன் சுருக்கம்) ! படமால எடுக்கறீங்க. காசுன்னு அடுத்த தடவை வாங்க பாத்துக்கறேன்" - 5 ரூவா கொடுத்துட்டு பாட்டி பொரிந்து தள்ளிவிட்டார் .

மேலே சொன்ன விதிகளை மீறாமல், மொத்தமாக ஓட்டை அள்ளிக்கொண்டு வருபவர்கள் கொஞ்ச பேர் தான். ராமராஜன் படங்கள், இயக்குநர் விக்ரமன்/ஆர்.வி.உதயக்குமார் படங்கள், இராம. நாராயணன் படங்கள். கிட்டத்தட்ட எல்லா ராமராஜன் படங்களும் போட்டிருப்போம். இப்படியே பார்த்து பார்த்து, உண்மையிலேயே டவுசர் ராமராஜன் ஒரு நாள் நேரிலேயே வந்து ஓட்டு கேட்க, இந்த ஜனங்களும் ராமராஜனை எம்.பி ஆக்கி சந்தோசப்பட்டது.

இந்த இலக்கணங்களை எல்லாம் மீறி ஒரு நடிகையின் படம் ரெகுலராக எல்லா "திரைப்பட விழா" விலும் இடம் பெறும். அது அடிதடி மன்னி விஜயசாந்தி படம். அதற்க்கு காரணம், துரை மாமா தான். வீட்டில் அத்தையிடம் படாத பாடு படுவார் போல. விஜயசாந்தி படம் போட்டாத் தான் படம் போடவே அனுமதி கொடுப்பார். ஊர் பெரிய மனிதர் கும்பலில் மாமாவும் ஒருவர் என்பதாலும், நாங்களும் குடும்ப படமா பார்த்து ஓய்ந்து போய் விட்டதாலும், நாங்களே ஒரு விஜயசாந்தி படம் எடுத்து விடுவோம்.

இப்ப்டியெல்லாம் போய்க்கிட்டு இருந்த ஊர் சனங்க சந்தோசத்துல மண் அள்ளி போட வந்தது தான் கேபிள் டி.வி. ஓட்டை தியேட்டருக்கும், எங்கள் பட விழாவுக்கும் சுத்தமாக மூடு விழா நடத்தி விட்டது. சனங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து சீரியலை பார்த்துக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காங்க. ஒரு படம் பார்த்தாலும் அவ்வளவு சந்தோசமா இருக்கும். இப்போ 100 சேனல் வந்தாலும், அந்த திருப்தி இல்லையே! காசு பிரிப்பதில் இருந்து படம் போட்டு முடிக்கும் வரை எத்தனை சுவாரஸ்யங்கள்.. ம் ம் ம் ம்.... அந்த காலம் எல்லாம் போச்சு !

Tuesday, October 04, 2005

பூவேறு கோனும் - பொருள்

இளையராஜாவின் 'திருவாசகம்' இசை தொகுப்பில் 3 வது பாடலாக வரும் 'பூவேறு கோனும்' திருவாசக பாடலின் பொருளை கீழே உள்ள சுட்டியில் இருந்து இறக்கி கொள்ளுங்கள். 6 பாடல்களிலேயே இந்த பாடல் மிகவும் எளிமையான இனிமையான பாடல். இது நண்பர் குமரன் என் போல் சில நண்பர்களுக்காக எழுதி கொடுத்தது. தமிழ் தட்டச்சு மட்டுமே நான். நான் முன்பே சொன்னது போல், ஒரு முறை இந்த பொருளை படித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள்.

பூவேறு கோனும்

மறக்காமல் SaiIndira Font-ஐ இங்கே இருந்து இறக்கி கொள்ளுங்கள் (முதல் தடவை மட்டும்). ( Copy to your C:\Windows\Fonts folder).

நண்பர் குமரன் புதிதாக இரண்டு (அபிராமி அந்தாதி ; விஷ்ணு சித்தர் ) ப்ளாக்குகள் ஆரம்பித்துள்ளார். விரைவில் தன் எண்ணங்களை பதிய பொதுவாக ஒரு ப்ளாக்கும் ஆரம்பிக்கவுள்ளார். வாருங்கள் குமரன், உங்கள் நல்ல தமிழில் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்.

மகாத்மா காந்தி - பாடல்கள்


'மகாத்மா - மகாகவி' பதிவை பார்த்து விட்டு வினதா அக்கா 'டேய் ! இந்த ரெண்டு பாடலையும் போடுடா " அப்படின்னு எனக்கு அனுப்பி இருந்தார்கள். நண்பர் குமரனும் அந்த பாடல் கிடைத்ததா என்று விசாரித்தார். சரி, நல்ல பாடல் தான் போல என்று , நேயர் விருப்பமாக இங்கே போடுகிறேன். ஒன்று ஹிந்தி பாடல், ஒன்று சமஸ்கிருதம் என்று நண்பர் சொன்னார். நமக்கும் ஹிந்திக்கும் ஜென்ப பகை என்பதால் (சுத்தம் :-) ), இந்த இரு நண்பர்கள் போல சில பேர் கேட்டு மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையில் பாடல்கள் இதோ...

Hari -Tum- Haro (MSS)


Maitrim bhajata


Sunday, October 02, 2005

மகாத்மா காந்தி - மகாகவி


நம் தேசப்பிதா மகாத்மாவை மகாகவி போற்றி பாடிய பாடல் காந்தி ஜெயந்திக்காக...

வாழ்க நீ எம்மான் ! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம ! நீ வாழ்க ! வாழ்க !

பொருள்:

வாழ்க நீ எம்மான் - எங்கள் தலைவனே ! நீ வாழ்க
இந்த வையத்து நாட்டில் எல்லாம் - இந்த உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம்
தாழ்வுற்று - கீழான நிலைமை அடைந்து
வறுமை மிஞ்சி - வறுமை மிகுந்து
விடுதலை தவறி - விடுதலை இழந்து அடிமையுற்று
கெட்டு பாழ்பட்டு
நின்ற தாம் ஒர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம !
நீ வாழ்க ! வாழ்க !

( நண்பர்களே! கடைசி வரியில் மகாத்ம என்று குறிலில் தான் பாரதி முடிக்கிறார். எழுத்து பிழை என்று எண்ண வேண்டாம்)

இந்த பாடலை நண்பர் குமரன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எனக்கு அனுப்பி இருந்தார். அதை அப்படியே போட்டாச்சு (அவரிடம் சொல்லி விட்டு தான்!). எளிதான பாடல் தான், என்னை போன்ற தமிழ் அறிவாளிகளுக்காக பொருளையும் சொல்லி விடுவார். நன்றி குமரன்.

நண்பர் குமரன் விரைவில் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க என்னிடம் விவரம் கேட்டுள்ளார். விரைவில் பக்தி, இலக்கியம் என்று நல்ல தமிழில் ஒரு ப்ளாக்கை எதிர்ப்பாக்கலாம்.