Saturday, January 07, 2006

கிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா)

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சுடே! சரி இன்னொரு ஊர் கதைய சொல்லிட்டு போலாம்னு வந்தேன். எங்க ஊரு பீட்டர் அண்ணனும் நாங்களும் பண்ணின கூத்தை கிராமத்து மணம்-1 ல சொல்ல ஆரம்பிச்சி அப்படியே கெடப்புல போட்டுட்டேன். சரி இன்னைக்கு ஒன்ன சொல்லலாம்னு ஆரம்பிச்சாச்சு.

பீட்டர் அண்ணன் கூட சுத்துறதுல இன்னொரு விசயம் என்னனா, தீனி. போட்டுக்கிட்டே இருப்பான். எளநீ வேணுமால அப்படின்னு தென்ன மரத்துல ஏறி கொல கொலையா வெட்டி போட்டிக்கிட்டே இருப்பான். எல்லாம் நம்ம ஊரு காரங்க தோட்டம் தான். நம்ம தோட்டம்னு நெனைச்சுக்காதீங்க. ஒரு நாள் அப்படி தான் பனை நுங்கு சாப்பிடலாம் என்று ஒரு அருவாளையும் எடுத்துக்கிட்டு தேரிக்கு கெளம்பினோம். தேரின்னா பனங்காடு. வெறும் பனை மரம் மட்டும் தான் ஏக்கர் கணக்கில் பரவி கிடக்கும். ஊர்ல இத தேரின்னு சொல்லுவோம்.

பனை ஏறுவதற்க்கு ரொம்ப திறமை வேண்டும். பாதி வழியில முடியலன்னா குதிக்க முடியாது. ஓய்வு எடுக்கவும் கிளை கெடையாது. மேலே கொண்டைக்கு போனவுடன் நெரே போய் ஒக்கார முடியாது. கிழிச்சுரும். மட்டைல இருக்குற கருக்க எல்லாம் அருவாளால வெட்டிவிட்டு பன மரத்துல ஒக்காரததுக்குல்ல போதும் போதும்னு ஆயிடும். கைய எசகுபிசகா விட்டோம்னா நேரே சொர்க்கலோகம் தான். எங்க பசங்களில் எல்லோருக்குமே பனை ஏற சொல்லி கொடுத்தான். அதுல தேறாதது நான் தான் :-). பாதி பனை எறிவிட்டு முன்னேறவும் முடியமாம, இறங்கவும் தெரியாம நெஞ்செல்லாம் காயத்தொரு நான் சறுக்கி விழுத்ததோடு சரி, என் பனை ஏறும் முயற்சி. அப்புறம் சரிந்து கிடக்கும் பனைல ஏறுவதோடு சரி.

சரி கதைக்கு போவோம். தேரில ஒரு நல்ல பனைய தேர்ந்தெடுத்து பீட்டர் அண்ணன் ஏற ஆரம்பித்தான். நாங்கள் தூர நின்று குத்தகைகாரன் வரானானு பாத்துக்கிட்டோம். மாட்டிக்காம திருடனும் இல்லையா. பெரிய கொலையா (குலையா..பயந்துராதீங்க) மூனு வெட்டி போட்டான். ஊரே ஒக்காந்து திங்கலாம். நாங்க ஒரு அஞ்சு பேரு இருந்தோம். அண்ணன் கீழே இறங்கி எல்லோருக்கும் சீவி கொடுக்க, திங்க ஆரம்பிச்சோம்.

திடிர்னு "ஏல! பாவி மக்கா" அப்படின்னு சத்தம் வரவே, எட்டி பாத்தா தூரத்துல குத்தகை காரன். 'நிம்மதியா திங்க விடமாட்டானுங்களே" அப்படின்னு திட்டிக்கிட்டே எல்லோரும் ஓட ஆரம்பிச்சோம். சினிமாவுல விசிலடிச்சு திருடன எச்சரிக்கை பண்ணி வெரட்டிட்டு பின்னாயே போலிசு தொறத்துமே, அப்படியே அண்ணாச்சியும் ஒரு சத்தம் கொடுத்ததால் நாங்களும் ஓட ஆரம்பித்தோம். நாங்க எல்லாம் அப்போ ஆறாவது படிச்சிக்கிட்டு இருந்தோம். பீட்டர் அண்ணன் தான் எட்டாங்கிளாஸ். எல்லோருக்கும் பெரியவன். அவன் முன்னாடி ஓட, நாங்க எல்லாம் அவனை தொடர்ந்து ஓட, (குத்தகை) அண்ணாச்சி வெரட்ட, ஓட்ட பந்தயம் தான் அன்னைக்கு. பின்னாடி திரும்பி பாத்த அண்ணன், அப்படியே நின்னுட்டான். என்னடா இது, எல்லோரும் நல்லா தானே ஓடரோம். இவன் எதுக்கு இப்படி நிபந்தனையற்ற சரண்டர் ஆகிறான் என்று நாங்களும் நின்னோம்.

பாத்தா, அண்ணாச்சி மடி நெறைய பெரிய பெரிய கருங்கல். வேட்டில மடிச்சு வச்சுருக்காவ. இன்னும் ரெண்டு அடி ஓடிருந்தோம்னா மண்டைய பொளந்திருப்பாரு. நாங்க பனைய மேஞ்சிக்கிட்டி இருப்பதை தூரத்துல பார்த்தவுடனேயே கல்லு பொறுக்கி வச்சிட்டு தான் எங்களுக்கு சத்தம் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பீட்டர் அண்ணன் பின்னடி போய் ஒளிஞ்சிக்கிட்டோம். இப்படி பட்ட சமயங்களில் அண்ணன் எப்பவுமே பின் வாங்கியதும் இல்லை, எங்களை மாட்டிவிட்டுட்டு ஓடினதும் இல்லை. தலைவன் என்றால் அவன் தான். அதை நம்பி தான வீட்டுல அவன் பின்னாடி விடுவாங்க.

"பாவி மக்கா! இப்படி கொல கொலையா வெட்டி சாச்சுப்புட்டியலேல. யாரு மவன்ல நீங்க". அமைதியா நின்னுக்கிட்டு இருந்தோம். அப்பா பேர சொல்றதும், வீட்டுக்கு அட்ரஸ் சொல்லி அனுப்புவதும் ஒன்னு தான். ஊர்ல போய் இன்னாரு பையன்னு சொன்னா ஊரே கைய காட்டும். அதுகாக அப்பா பேர தப்பாவா சொல்ல முடியும். "என்னல! புடிச்சு வச்ச கொழுக்கட்ட மாத்தி நிக்கீங்க. பேசுங்கல". அப்புறம் பீட்டர் அண்ணன் தான் பேச்சு வார்த்தை நடத்தினான் "இத பாருங்க அண்ணாச்சி! பயலுவ ஆசபட்டானுங்க. அதான் வெட்டினோம். இந்த ஒரு வாட்டி (நெறைய வாட்டி) விட்டுடுங்க. இனி இந்த பக்கம் வரமாட்டோம்". எங்க கிட்ட பிடுங்குவதற்ககு ஒன்னும் இருக்காது. மேல் சட்டை கூட இருக்காது. கைல ஒரு கவட்டை, கொஞ்சம் கல்லு. இது தான் இருக்கும். அப்புறம் அருவாள (அது ஒன்னு தான எங்க கிட்ட இருக்குறதுல உருப்படி) புடிங்கிகிட்டு "ஓடுங்கல. இனி இந்த பக்கம் வரப்புடாது" என்று எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க அண்ணாச்சி.

---

என்னடா கிராமத்துல இப்படி திருட்டு எல்லாம் சாதாரணம் தானா என்று நெனைச்சிராதீங்க. உள்ளூர் காரன் பண்ணுர வரைக்கும் தான் அது ஜாலி. அசலுரு கார பய பண்ணினா அவன் காலி. ஒரு பிடி மண் எடுத்தாலும் வெட்டு குத்தாயிடும்.

அப்படி தான். ஊரில் சுடலைமாடன் சாமி கோவில் கொடையோட, ராத்திரி ஊர் சனங்க எல்லாம் கோவில்ல வில்லுப்பாட்டு பார்த்துக்கிட்டு இருக்கு. அசலூருகார பய ஊருக்குள்ள சுத்துறதா தகவல் வந்தது. எல்லோரும் டார்ச் லைட் ஒன்னையும், ஒரு கம்பையும் எடுத்துக்கிட்டு தெரு தெருவா (மொத்தமே 3 தெரு தான), தோட்டம் எல்லா இடத்திலும் தேடினோம். கை வேற நம நமன்னு யாரையாவது அடிக்கனும் போல எல்லொருக்கும் இருந்தது. பய தப்பிச்சிட்டான்.

மூதேவி. அடுத்த வாரமே ஏதோ தோட்டத்துல ஏறி குதிக்க, மாட்டிக்கிட்டு. புடிச்சி ஊர்ல இருக்குற அம்மன் கோவில் வேப்பமரத்துல கட்டி போட்டுட்டு, நாங்க எல்லாம் வீடு வீடா போய் "சித்தி! கள்ளன் மாட்டிருக்கான். பெரியப்பா! கள்ளன் மாட்டிருக்கான். ஊர் வேப்பமரத்துல கட்டி போட்டிருக்கு" அப்படின்னு சொல்லிட்டு வந்தோம். எல்லோரும் வந்தது பூஜை ஆரம்பித்தது. கேட்ட கேள்விக்கு எடக்கு முடக்கா பதில் வர, பெரிசுங்க எல்லாம் அடி பொளக்க ஆரம்பிச்சது. ஊர்மக்கள் எல்லாம் வரிசையா நின்னு டோக்கன் போட்டு அடிச்சது அவன தான். நேத்து பொறந்தது வரை வந்து ரெண்டு அப்பு அப்பியது. "ஐயோ! என்ன போலிசுல புடிச்சு கொடுத்துருங்க" அப்படின்னு அடி தாங்காம அவன் அலற, அப்புறம் அவன அவுத்து விட்டு 'இந்த பக்கமே வந்துராதல" அப்படின்னு எச்சரிக்கை பண்ணி வெரட்டி விட்டோம். வாங்குன அடிக்கு அவன் திரும்பி வருவான்னு நெனைக்கறீங்க?

கிராமத்துல எல்லாம் திருட்டு பயம் எல்லாம் கிடையாது. 50,000 ரூவா வண்டிய வெளிய விட்டுட்டு 10 நாள் ஊருக்கு போய்ட்டு வந்தா வண்டி அப்படியே நிற்க்கும். ஊருக்குள்ள வருகிற புது மனிதர்கள் ஒவ்வொருத்தாரும் தெரியும். போலிசு எல்லாம் ஊருக்கும் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு தனி உலகம்.

சென்னையில் நிலமை தலைகீழ். அப்படி தான், பக்கத்து வீட்டுகாரர் தன்னோட வண்டிய ஒரு யானைய கட்டுற சங்கிலியால டெய்லி ஒரு தூண்ல கட்டி போட்டுட்டு, தொங்கி பார்த்து கொள்வார். ஒரு நாள் ராத்திரி லாரில வந்து தூணோட உடைச்சு வண்டிய தூக்கிட்டு போய்டானுங்க. சிட்டில நெலம இப்படி இருக்கு.

- அன்புடன்
கிராமத்தான்.

7 comments:

ramachandranusha(உஷா) said...

+ :-)))

குமரன் (Kumaran) said...

சிவா. உங்க ஊரு பக்கம் நான் வரமாட்டேன்பா. சும்மா வந்தாலே அப்பு அப்புன்னு அப்பிடுவீங்க போலிருக்கே. சூப்பர் மாத்து மாத்திருக்கீங்க அந்த அசலூர்க்காரப் பயல. யம்மாடீ....

சிங். செயகுமார். said...

உச்சி வெயில்ல பசங்க நாங்க இருவது பேரு அப்பிடியே கெளம்பி போனோம்னா பனங்கொலைய வெட்டி சாச்சுருவோம்ல ,பல தடவ பஞ்சாயத்து வரைக்கும் போயிருக்கு,அதுகெல்லாம் நாம கவல படுவோமா?.இதவிட பெரும் கூத்து என்னான்னா பனக்கள்ளு,..... திருவிழான்ன ஊர்ல பத்து நாளு கதா காலட்சேபம் நடக்கும்.கோயிலுக்கு பக்கத்தில உள்ள கள்ளுமரமெல்லாம் கல்லடிபடும் ,ஒரு வருழம் கள்ளு மரத்த கொள்ளையடிக்க ஆரம்பிச்சங்களா ,பாவி மனுஷன் பேதி மருந்த ஒரு நாளு மரத்துல உள்ள கலையத்தில ஊத்தி வச்சுட்டான்,எல்ல பசங்களும் மறுநாளு ஆஸ் பத்திரிலதான். இப்போ அந்த பசங்கள்ள யாருமே ஊர்ல இல்ல!

பரஞ்சோதி said...

சிவா,

நானும் உங்களைப் போலவே பல கூத்துக்களை கட்டியிருக்கிறேன்.

என்னுடைய பரஞ்சோதியின் நினைவலைகள் பகுதியில் அலிபாபாவும் நான்கு திருடர்களும் என்ற பதிவில் இதையே நானும் செய்திருப்பேன், படித்து சொல்லுங்க.

நான் அதுக்கு மேலே சொன்னால் என் இமேஜ் டேமேஜ் ஆயிடும் என்று நண்பர்கள் சொன்னதால் நிறுத்தி விட்டேன்.

சிவா said...

வாங்க உஷா! + கொடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி :-)

ஹலோ குமரன்! இப்படி பயந்தா எப்படி?. நீங்க தாராளமா வரலாம். திரு திருன்னு முழிக்காம பாத்துக்கோங்க. :-))

சிங்கு! பேதி மருந்து கலப்பது எங்க ஊருலயும் உண்டு. அதனால எப்பவுமே கலப்படம் பண்ணமுடியாத பொருளா பாத்து தான் கை வைக்கிறது. இல்லன்னா திருடனுக்கு தேள் கொட்டின கத மாதிரி ஆகிவிடும். அந்த வாழ்க்கை எல்லாம் நல்லா அனுபவித்த வாழ்க்கை. இல்லையா சிங்கு :-)

வாங்க பரஞ்சோதி! நான் உங்கள் பதிவில் தேடி பார்த்தேன். கிரிக்கட் நினைவலைகள் தான் தெரிந்தது. பதிவிற்க்கு link கொடுத்தீங்கன்னா, நானும் படித்து மகிழ்வேன்.

G.Ragavan said...

நல்ல கூத்துதான் போங்க..... ஒரு பிளஸ் போட்டுர்ரேன்.

பரஞ்சோதி said...

அன்பு சிவா,

என் களவாணித்தனங்களை முத்தமிழ் மன்றத்தில் சொல்லியிருக்கிறேன். அங்கே நட்பு பகுதியில் என் நினைவலைகள் இருக்குது. போய் பாருங்க.

வலைப்பூவில் சொன்னால் என் இமேஜ் மேமேஜ் ஆயிடுமோ என்று நினைத்தேன் :)

அன்புடன்
பரஞ்சோதி