Sunday, June 11, 2006

விடை பெறுகிறேன்.

நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை. இங்கே சொல்லிட்டேன். மறுபடியும் அதே பல்லவிய பாடதடேன்னு ரெண்டு ப்ளாக்கையும் பாக்கற நண்பர்கள் திட்டுவாங்களே :-)).

( கீழே ஊர் கதை ஒன்னு சொல்லி இருக்கேடே..அப்படியே போய்றாதிய.. என்ன :-))

சிவபுராணம் எதுக்கு ஆரம்பிச்சேன்.ம்ம்ம்..எல்லாம் நமக்குன்னு, நம்ம மூஞ்ச போட்டு, நம்ம பேர போட்டு இணையத்தில் பார்க்க ஒரு கிக் தான். ஒரு யோசனையே இல்லாம ஆரம்பிச்சு, அப்புறம் குமரன் எழுதி கொடுத்த திருவாசகம் பாடல் பொருளை போட ஆரம்பிச்சு, அப்புறம் நம்ம மலேசியா ராஜசேகரன் சாரிடம் சண்டை போட்டு (இவர்கள் இந்தியர்கள்), போக்கு இல்லாம ஊர் கதை எழுத ஆரம்பிச்சேன். அப்போ நம்ம மதியும் (மதி கந்தசாமி) காசி சாரும் நட்சத்திர வாரத்தில் என்னை இழுத்துப் போட்டு எனக்கு ஒரு பெரிய வெளிச்சம் போட்டு கொடுத்தார்கள்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வாரம் எனது தமிழ்மணம் நட்சத்திர வாரம். நம் எழுத்தையும் நல்லா எழுதறடே அப்படின்னு சொலல ஒரு நாலு பேர் இருக்காங்கன்னு பார்க்கும் போது வரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை. எனது சிவபுராணத்தை இது வரை படித்து ஊக்கம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. சத்தியமா எதுவுமே எழுதி பழக்கம் இல்லாம, திடீர்னு ரெண்டு பேர் நல்லா இருக்குடே என்று சொல்லும் போது வரும் போதையே தனி தான். என்னாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுத முடியும் என்று ஒரு சின்ன நம்பிக்கையை, ஆசையை கொடுத்தது நண்பர்கள் உங்களின் ஊக்கம் தான். அதற்கு சும்மா இங்கே 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போகமுடியாது.

நம்ம ஊரு திருநெல்வேலி பாசை எங்க ஊரு பயவுலுவ எல்லாத்துக்கும் இங்கே இணையத்தில் ரொம்பவே நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. 'என்னல மக்கா. நல்லா இருக்கியால' என்று ஊர் நண்பனிடம் இன்றும் பேசும் போது கிடைக்கும் சுகமே தனி தான். இங்கே தமிழ்மணத்தில் சேர்ந்த போது அதை இங்கே ப்ளாக் நண்பர்களிடம் உணர முடிந்த போது வந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

'ஏ! நீங்க நம்ம ஊரு பக்கமா' என்று இங்கே அமைந்த நட்பு வட்டம் ஏராளம். ஊருக்கு போய் பாக்கணும் என்று ஒரு பெரிய பட்டியல், பரஞ்சோதி, தம்பி சிங் (சிங் செயகுமார்), தாணு அக்கா, தருமி சார், ராகவன், சாணக்கியன், மரவண்டு கணேஷ் , இளவஞ்சி....இப்படி ஒரு பெரிய பட்டியல். அத்தனையும் இங்கே தமிழ்மணத்தில் கிடைத்த நண்பர்கள்.

சரி..சரி வழ வழன்னு பேசாம, ஊர் கதை ஒன்னு சொல்லி விடை பெறுகிறேன்...

---------------------------------------------------------------------------------

கிராமத்து மணம் - 5 (வேப்ப முத்து)

சின்ன வயசுல கைல காசு கிடைக்க நிறைய வழிகள் உண்டு. 'யப்பூ! அந்த மனுசன் (அதாங்க. வீட்டுக்காரர்) காலைல புளி வாங்க மறந்து போய்ட்டாரு. இப்போ நான் 11 மணிக்கு சாப்பாடு வேற கொண்டு போணும். கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வர்றீயால. ஒரு ஆரஞ்சு முட்டாயி வேணோன்னா வாங்கிக்க" இப்படி சில நேரம் காசு கிடைக்கும்.

காலைலயே கும்முன்னு கல்லுகடைல ஏத்திட்டு 'ஏல! இன்னைக்கு ஏதாவது மாட்டிச்சின்னா அத்தைக்கிட்ட வந்து கொடுங்கல' அப்படின்னு வேட்டையாட pre-order சில நேரம் கிடைக்கும். நாங்களும் கவுட்டை, கண்ணி, கல்லுன்னு பயங்கர ஆய்தம் எல்லாம் எடுத்துக்கிட்டு கைல கெடைக்கிற எலியோ, அணிலோ, முயலோ, புறாவோ எது கெடைச்சாலும் அடிச்சிக்கிட்டு மாமாவுக்கு side dish ஏற்பாடு பண்ணி கொடுப்போம். எட்டணாவுல இருந்து சில சமயம் ஒரு ரூவா வரைக்கும் கிடைக்கும்.

இன்னொரு சம்பாத்தியம். வேப்ப முத்து பொறுக்குறது. படிக்கு நாலணா என்று ஊருக்குள்ள வேப்ப முத்து வாங்க சைக்கிள்ல நிறைய வியாபாரி வருவாங்க. ஒரு இருபது படி தேத்தினா அஞ்சி ரூபா ஆச்சே. அதுக்கு காடு காடா ஒரு பெட்டிய துக்கிக்கிட்டு வேப்பமுத்து பொறுக்கிக்கிட்டு அலைவோம்.

எங்க ஊரு நூற்பாலை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். காலைல அஞ்சு மணிக்கு பாத்தா சுத்தி இருக்கிற ஊர்ல இருந்து ஆளுங்க கும்பல் கும்பலா உள்ளே போய்ட்டு இருப்பாங்க. மூனு மணி சங்கு அடிச்சா அத்தனை கும்பலும் வெளியே போய்ட்டு இருப்பாங்க. அப்படி சுறுசுறுப்பா இருக்கும். யாருக்காவது சாப்பாடு கொண்டு போகணும்னா மில் வாசல் தான் போக முடியும். வாசலிலேயே போலிசு (வாட்ச் மேன்) சாப்பாட்ட வாங்கிகிட்டு விட்டுடுவாரு. உள்ளே தொழிலாளிகள் தவிர யாரும் நுழைய முடியாது...ஆனால் சின்ன பசங்க நாங்க மட்டும் ஒரு இடம் விடாமல் மில்லை சுற்றி இருக்கிறோம். அது வேப்ப முத்து பொறுக்க போகும் போது..

காலைலயே டவுசர் புல்லா கவுட்டைக்கு கல்ல அள்ளிக்கிட்டு, அது டவுசர ஒரு பக்கமா இழுக்க, அதை இன்னொரு கையால புடிச்சிக்கிட்டு, கைல ஒரு ஓலை பெட்டியையும் வச்சிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் மில்லுக்கு கெளம்பிருவோம். வாசல்ல போலிசு எங்க பெட்டிய எல்லாம் சோதனை போட்டுட்டு உள்ளே அனுப்பும். 'ஏல. அங்கண இங்கண போக கூடாது. பொறுக்கிட்டு பாதி பங்க மறக்காம எல்லா பயலுவலும் வச்சிட்டு போய்றணும். என்ன'. நாங்க பொறுக்கினதில் பாதியை மில்லுக்கு கொடுத்திடணும் (எந்த மவராசனுக்கோ :-). இது தான் டீல்.

நாங்க உள்ளே போய் ஒவ்வொரு மரமா போய் கீழே கெடக்கிற வேப்பமுத்த பொறுக்கிக்கிட்டு இருப்போம். நம்ம பீட்டர் அண்ணன் தான் மடமடன்னு மரத்துல ஏறி உலு்ப்ப ஆரம்பிப்பான். நாங்க எல்லாம் மடமடன்னு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள பொறுக்கிக்கிடுவோம். அலறி அடிச்சிக்கிட்டு ஓடி வருவார் வாட்ச்மேன் 'ஏல! பாவிமக்கா! நாந்தான் சொன்னேன்ல. மரத்துல ஏற கூடாதுன்னு. எறங்குல' அப்படின்னு திட்டு விழும். 'ஏன் வாட்ச்மேன். மேல கெடக்குறது எப்படியும் கீழே தான் விழ போகுது. நாங்க தான் வந்து பொறுக்க போறோம். அதான் நாங்களே...மரத்துல ஏறி'....'நீங்க ஏறி விழுந்து தொலைச்சீங்கன்னா ஆபீசருக்ககு எவம்ல பதில் சொல்றது. சொல்றத கேளுங்கல' .

'நாங்க நல்லா மரம் ஏறுவோம் வாட்ச்மேன். எங்க தெறமைய பாத்தீங்கன்னா நீங்க இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க' இப்படி மனசுக்குள் நெனைச்சுக்குவோம். அந்த திறமை இது தாங்க. கஷ்டப்பட்டு பொறுக்கிய வேப்பமுத்துல பாதிய அப்படியே கொடுக்க மனசு வராது. ஆனா கொடுக்காம வெளியே விடமாட்டாரு. அட போங்கடே அப்படின்னு பீட்டர் அண்ணன் வெளியே நிக்கிற மரத்தோட கிளைய புடிச்சி மடமடன்னு வேப்பமுத்தோடு மில்லுக்கு வெளியே இறங்கி வீட்டுக்கு போய்விடுவான். 'அண்ணே! பேசாம நாம இப்படியே உள்ளே வந்தா என்னா' 'லே! ஏறி உள்ள குதிச்சு வந்தா புடிச்சானுங்கனா திருடனாக்கிருவானுங்க. ஆனா உள்ளே இருந்து வெளியெ போனா பிரச்சினை இல்லல'. அடடா. இந்த தத்துவம் எல்லாம் புரியாம போச்சேண்ணே :-).

'என்னல. போகும் போது அஞ்சு பேரு போனீங்க. இப்போ நாலு பேரு தான் வர்றீங்க. எங்கள இன்னொருத்தன்' வாட்ச்மேன் சரியா புடிப்பாரு. 'அண்ணே அப்பவே வீட்டுக்கு போய்ட்டாங்களே. நீங்க எங்க போய் இருந்தீங்க' இப்படி எடுத்து கொடுப்போம். 'இங்கண தாம்ல இருக்கறேன். என்னல சொல்லுதிய' குழப்பமா பார்ப்பார்.

சரி! ஏறிகுதிச்சி போக முடியாத நாங்க எல்லாம் பங்கு கொடுப்போமான்னு கேக்கறியலா. நாங்க என்ன பண்ணுவோம்னா.....நாங்க வந்து நின்னவுடனே 'ஏல! அங்கண போய் பாதி முத்த தட்டிட்டு வங்கல' அப்படின்னு வாட்ச்மேன் அனுப்புவார். நாங்க அங்க போய் பெரிசா மண்ண குமிச்சி அதுக்கு மேல வேப்பமுத்த நல்லா தூவிட்டு பாக்குறதுக்கு ஏதோ வேப்பமுத்து குவியல் இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருவோம். துரத்துல இருந்து வாட்ச்மேன் பாத்துட்டு 'நெறைய பெறக்கிருக்கீங்க போலையல' அப்படின்னு சொல்லிட்டு அனுப்பிடுவாரு..

அடுத்த நாள் மில்லுக்கு போகும் போது எங்களை வெரட்டி வெரட்டி அடிப்பாரு..அது ஒரு தனி கதை :-))

(மக்கா! இது சின்ன வயசுல பண்ணில ஒரு சில குறும்புகளில் ஒன்றே....நீதி கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடாதிய...என்ன :-))

அன்புடன்,
சிவா

Monday, June 05, 2006

பத்து பைசா

அம்மா அவசரமாக கூப்பிட்டார்கள். 'டேய்! செம்மறிகுளத்தில் இருந்து அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. சீக்கிரம் வாடா'. மாமா வந்திருக்காங்களா! சந்தோசத்தில் விளையாண்டு கொண்டிருந்த பட்டத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். 'போயி மாமாகிட்ட சொகமாருக்கீங்களான்னு விசாரி' அம்மா. 'வாடா ராசா. வெளாட போயிருந்தியா' மாமா நான் நலம் விசாரிப்பதற்கு முன்னமே என்னை பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருந்தார். 'கணேச கூட்டி வரலையா மாமா' 'அவனுக்கு பரிச்சடா. அதான் ஊருலயே விட்டுட்டு வந்துட்டேன். அடுத்த தடவ கூட்டி வர்றேன் என்ன'.

அம்மா உள்ளே கூப்பிட்டு கைல ஒரு ரூபாயை கொடுத்து 'கனி ஆச்சி வீட்டுல போய் ரெண்டு கலர் வாங்கிட்டுவா' என்று அனுப்பினார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு மாமாவும் அத்தையும் கிளம்ப தயாரானார்கள். 'சரி அக்கா. நான் போய்ட்டு வர்றேன்'. 'அடுத்த தடவ வரும் போது பிள்ளையையும் கூட்டிட்டு வாடா' அம்மாவுக்கும் கணேஷ் வராததில் கொஞ்சம் வருத்தம் தான். மாமா கிளம்பும் போது ஒரு இரண்டு ரூபாவை என் கையில் தினித்து விட்டு கிளம்பினார். இது வழக்கம் போல மாமா வரும் போது எனக்கு கிடைக்கும் ஜாக்பாட் தான்.

வழக்கம் போலவே மாமா போனதும் கையில் இருந்த இரண்டு ரூபாய் அம்மா கைக்கு போய் விட்டது.அதிலிருந்து கடைசில எனக்கு கிடைத்தது பத்து பைசா தான்.

இப்போ கைல பத்து பைசா.

என்ன பண்ணலாம்? பல யோசனை மனசுக்குள் ஓடியது.

பேசாம தடியர் கடைல ரெண்டு கோலிக்கா வாங்கி நேத்து எசக்கியிடம் தோத்த கோலிக்காவ திருப்பி கொடுத்திடலாமா? "கோலிக்காவ திருப்பி கொடுல.திருப்பி கொடுல " அப்படின்னு பாக்குற நேரம் எல்லாம் கேக்கறானே. காலைல கூட வெளாட்டுல சேத்துக்காம வெரட்டி விட்டுட்டானே. நேத்து ஜெயிச்சிருக்க வேண்டியது. சாண் போட்டா, வெரலு கோலிக்காவுல ஒட்டலன்னு நூல விட்டு காட்டி கோலிக்காவ எல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டுட்டானே.ம்ம்ம்.

அவங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு கை நிறைய பல்லி முட்டாய வாங்கி வச்சிக்கிட்டு நேத்து முழுசும் பீத்திக்கிட்டு அலைஞ்சானே பீட்டரு. கொஞ்சம் குடுறான்னு கேட்டதுக்கு வீட்டுக்குள்ள ஓடினவன் வெளியே வரவே இல்லையே. இன்னிக்கு நாம வாங்கி, எங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு சொல்லலாமா..

நேத்து கடைல புதுசா பிலிம் எல்லாம் வந்திருக்குன்னு குமாரு சொன்னானே. அவன் வாங்குன பிலிம்ல கூட ரஜினி படம் எல்லாம் இருந்திச்சே. பத்து பைசாவுக்கு பேசாம பிலிம் வாங்கி மத்யானம் படம் போடலாமா.

இப்படி பல யோசனைகளுடன் சாயங்காலம் தடியர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கடையில் கூட்டமே இல்லை. தடியர் சும்மா தான் உட்காந்து கொண்டிருந்தார். 'என்னல பொழுதடைய கடைக்கு வந்திருக்க' விசாரித்தார்.

'ஆமாண்ணே! எங்க மாமா வந்திருந்தாங்க. கைல காசு கொடுத்தாங்க. அதான் ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்' தடியருக்கு பதில் கூறிக்கொண்டே அவரது சின்ன பொட்டிக்கடையை மெதுவாக நோட்டம் விட்டேன். சட்டென்று ஒரு இடத்தில் கண் அப்படியே நின்று விட்டது. நீளமாக ஒரு பிலிம் சுருள் ஒரு அட்டையில் ஒட்டி வைத்திருந்தது. போனவாரம் பீட்டர் பக்கத்து ஊருக்கு படம் பார்க்க போய் நீளமா ஒரு பிலிம் சுருள் கொண்டு வந்தானே, அதே மாதிரி கடையில். 'இது எப்படிடா உனக்கு கிடைச்சது' என்று பீட்டரிடம் ஆச்சரியமாக கேட்ட போது, படம் அத்து போச்சுன்னு வெட்டி போட்டாங்க, எடுத்துட்டு வந்தேன்' என்றான். அதை வைத்து எங்கள் எல்லோரையும் ஒரு வாரமா அவன் வீட்டிலேயே காத்து கிடக்க வைத்தது நினைவுக்கு வந்து போனது.

'இது எவ்வளவுண்ணே' பத்து பைசாவாக இருக்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டே தடியரிடம் கேட்டேன். 'அது காசுக்கு கெடையாதுல. கீழ இருக்குது பாத்தியா கட்டம் கட்டமா சீட்டு. பத்து பைசா கொடுத்து ஒரு சீட்டு கிழிச்சேன்னா, உனக்கு பிலிம் சுருள் விழுந்தா அது உனக்கு தான். ஒரு நம்பரும் வரலண்ணா ஒன்னும் கெடையாது'

பிலிம் சுருளை அவ்வளவு எளிதாக விட மனம் வரவில்லை. 'கிழிச்சி பாருல. ஒன்னோட ராசியையும் தான் பாப்போமே' கண்டிப்பாக கிழிப்பேன் என்று தடியருக்கு என் மூஞ்சை பார்த்தே முடிவுக்கு வந்து விட்டார். கையில் இருந்த காசை தடியர் கைல கொடுத்துவிட்டு ஒரு சீட்டை கிழித்து பார்த்தேன். ஏதோ படம் தான் போட்டிருந்தது. நம்பர் எதுவும் இல்லை. 'என்னண்ணே இது. நம்பர் மாதிரி தெரியலையே' அவரிடமே சீட்டை கொடுத்தேன். 'ஏல! ஒனக்கு ஜோக்கர் வந்திருக்கு. பரிசு ஒன்னும் விழல'. தடியர் எனக்கு எதுவும் கொடுக்காமலேயே எளிதாக என் பத்து பைசாவை அவர் கல்லாப்பெட்டியில் சேர்த்துக் கொண்டார். கையில் இருந்த பத்து பைசாவும் பறிபோனதில் நொந்த படி வீட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டுக்கு போனதும் அம்மாவிடம் கேட்டேன் 'மாமா மறுபடி எப்போம்மா வருவாங்க'.

Friday, May 12, 2006

சாமி வருது...சாமி வருது

ஊர்சனம் மொத்தமும் அம்மன் கோவில் வேப்ப மரத்தடியில் கூடி இருந்தது. 'ஏல! நம்ம முத்துசாமி தாத்தா வரல பாரு. கூட்டி வாங்கல' சின்ன பசங்களை விரட்டிக்கொண்டிருந்தார் பண்ணை.

எல்லோரும் வந்தவுடன் பண்ணை ஆரம்பித்தார். 'சித்திரை வரப்போவுது. சுடலைக்கு கொடை நடத்தணும். வரி போடுறதுக்கு தான் எல்லாரையும் வரச் சொன்னேன்'.

'ரெண்டு வருசமா சாமி வரவே இல்ல. என்ன குத்தமோ தெரியல. அதான் இந்த தடவ கொடைய சிறப்பா செஞ்சிப்புடணும். என்னடே சொல்றீங்க. வரிப்பணம் கூட கொஞ்சம் ஆனா கூட பரவால்ல' முத்துச்சாமி தாத்தா கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்.

கொடை வரி 50 ரூபாய் என்று முடிவு செய்து, கொடைக்கான நாளும் குறித்தாகி விட்டது. "50 ரூபாய்ல கரகாட்டம்லா வருமாடே. பாத்து வரிய போடுங்கப்பா' கரகாட்ட ரசிகர் மன்ற தலைவர் துரை மாமா லேசாக சத்தம் கொடுத்துப் பார்த்தார். 'சும்மா கெடடே! போன தடவையே அவ ஆடுன ஆட்டத்துல வீடு ரெண்டு பட்டு போச்சு. வீட்ல கேட்ட திட்டு போதாதா. இந்த தடவை காசு இருந்தா திரை கட்டி ஒரு படம் போட வேண்டியது தான். கரகாட்டம் எல்லாம் இந்த தடவ கெடையாதுடே'.

'என்ன அதே கருப்பு-வெள்ள படம் தான. கொஞ்சம் கலரா போடுங்கடே'

'50 ரூவா வரில எங்கடே கலருக்கு போறது. ஆளுக்கு ஒரு கலர் கண்ணாடி போட்டுட்டு பாக்க வேண்டியது தான்'

ஊர் பண்டாரத்திடம் கொடைக்கு வேண்டிய பொருட்கள், விவரங்கள் கேட்டுக் குறித்து கொண்டார் பண்ணை. கூட்டம் கலைந்தது.

---

இப்படித் தாங்க ஆரம்பிக்கும் எங்க ஊரு கோவில் கொடை.

---

வியாழன் மதியம் உலகத்துக்கே கேக்கற மாதிரி குழாய்ல எல்.ஆர்.ஈஸ்வரி 'மாரியம்மா..எங்கள் மாரியம்மா' பாட ஆரம்பிக்கும் போது 'லே! செட் வந்துட்டுல' அப்படின்னு நாங்க எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிற கோலிக்காவ அப்படியே போட்டுட்டு கோயிலுக்கு ஓடுவோம். வெளியூர்ல செட்டில் ஆகி கொடைக்கு மட்டும் வெள்ளையும் சுள்ளையுமா வரும் ஒரு கூட்டம் ஒன்னொன்னா மெதுவா வர ஆரம்பிக்கும். அவிங்க அள்ளிட்டு வர்ற ரெக்சோனா சோப்பையும் லக்ஸ் சோப்பையும் சொந்த காரனுவலுக்கு பங்கு வைக்கவே ராத்திரி ஆயிரும். அவிங்க ஆச்சி ஒரு சோப்ப எடுத்து மணிக்கணக்கா மணத்துக்கிட்டே 'யய்யா! ராசா. மெட்ராஸுல இந்த சோப்பு போட்டு தான் குளிக்கறியா. நல்லா வாசமா இருக்கு' (போ! ஆச்சி! எல்லாம் ஊருக்கு வரும் போது போடுற சோப்பு..சே! படம் தான். அங்கே ஊரே சேர்ந்து போட்டாலும் வருசம் புல்லா கல்லு மாதிரி உழைக்கும் லைபாய் தான்).

---

'ஏ! வில்லுப்பாட்டு ஆரம்பிச்சிட்டாவ. கெளம்புங்கடே' ஒரு பாய தூக்கிக்கிட்டு எல்லாரும் கெளம்ப ஆரம்பிப்பாங்க. மாயாண்டி கதையோ, அம்மன் கதையோ போய்கிட்டு இருக்கும். 'ஏண்டே! போன தடவையும் இவள தான கூட்டிட்டு வந்தீங்க. வேற ஆளே கெடைக்கலையா' நம்ம ஊரில் குசும்பு பண்ண நம்ம குரு மாமா. 'அத்தக்கிட்ட தான் கேக்கணும் மாமா. கேட்டுச்சொல்லவா' அப்புறம் குரு மாமா சத்தமே இருக்காது. அப்படியே சாமிக்கு அலங்காரம், சாம கொடைக்கு எல்லாம் போய்கொண்டிருக்கும்.

--

ராத்திரி பண்ணிரண்டு மணிக்கு சரியா சாம கொடை ஆரம்பிக்கும். ம்ம்..ரெண்டு வருசமா சாமி ஆடல. இந்த தடவையாவது சாமி வரணும்.. சாமி கும்பிட்டுக்கிட்டே இப்படி எல்லோரும் கவலையா யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது வேடிக்கை பாக்க வந்த அசலூரு காரர் ஒருத்தர் மெதுவா ஆட ஆரம்பித்தார். 'லே! அந்நா பாருங்கல. அசலூரு காரன் ஆடறான். புடிச்சி அமுக்குங்கல' பண்ணைக்கிட்ட இருந்து கட்டளை பறந்து வந்தது. பசங்க எல்லோரும் ஓடிப்போய் அவரை புடிச்சி அமுக்க ஆரம்பிச்சாங்க. சாமி ரொம்பவே வேகாமா, வெறித்தனமா ஆட ஆரம்பிக்க, 'அட வெளங்கா மட்டைங்களா. புடிச்சி அமுக்கச் சொன்னா. நீங்க அவன் கூட சேர்ந்து சாமி ஆடிக்கிட்டு இருக்கீங்க. நல்லா அமுக்குங்கல'. ஒரு வழியா வந்த சாமிய வெரட்டி உட்டுட்டு தான் மறு சோலி.

இதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு தாங்க. எங்க ஊருல சாமி ஆடுறவங்க தான் அடுத்த கொடை வரை வாரா வரம் கோயிலுக்கு பூஜை பண்ணணும். அசலூர் காரன் வந்து தவறாம பூச பண்ணுவானா?..அதுவும் அசலூர் காரன் பூசை போடுறதா..இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறதால தான் இந்த ஏற்பாடு.

அப்புறம் மேளம் உச்சக்கட்டத்தில் அடிக்க, மெதுவாக எங்க ஊரு குட்டையரு ஆட ஆரம்பித்தார். 'லே! சாமி வந்துட்டுல' எல்லோர் முகத்திலும் தான் என்ன ஒரு சந்தோசம். மட மடவென்று சுடலை மாடனின் அங்கி மற்றும் தலைப்பாகை எல்லாத்தையும் ஒருவர் குட்டையருக்கு மாட்டி விடுவார். 'பந்தம்! பந்தம் ' ஆடிக்கிட்டே சாமி கேட்க கதகதன்னு எரியற தீப்பந்தம் ஒன்று சாமி கையில் கொடுக்கப்படும். ஒரு கையில் தீப்பந்தமும், மறு கையில் சூலாயுதமும் பிடித்துக்கொண்டு வெறியாக ஆடும் குட்டையரை பார்த்து நாங்க சின்ன பசங்க எல்லாம் ஒரு 10 அடி தள்ளி நின்னுக்குவோம்.

அடுத்த கட்டமா சாமி வாக்குச்சொல்ல ஆரம்பிக்கும். கையில் திருநீரோடு முன்னால் நிற்கும் ஒவ்வொருத்தருக்கும் திருநீறு கொடுத்து நல்வாக்கு சொல்ல ஆரம்பிக்கும். வாக்கு எல்லோருக்கும் உண்டு. கல்யாணம் ஆகாத பிரபாகர் அண்ணணுக்கு ஒரு தடவை சாமி வாக்குச் சொன்னது. அண்ணன் பௌயமா சாமி முன்னாடி போய் நிக்க, சாமி 'உனக்கு சம்சாரம்..சம்சாரம்' என்று தெக்க கைய காட்ட...

'ஏல! சாமி உனக்கு பொண்ணு தெக்க தான் இருக்குன்னு சொல்லுதுல'

'தெக்க என்ன இருக்கு. சுடுகாடு தாம்ல இருக்கு' நம்ம குசும்பு குரு மாமா.

'போ மாமா! அத்த ஊரு பூச்சிக்காடும் தெக்க தான இருக்கு'

'போல! பூச்சிக்காட்டுல பொண்ணு எடுக்கறதுக்கு, பேசாம நீ சுடுகாட்டுக்கே போலாம்டே'

--- இப்படி சாமி வாக்கு சொல்லும் போது ஏகப்பட்ட சுவாரஸ்யம் இருக்கும்.

அப்புறம் சாமி ஊர்வலம் கிளம்பும். ஒரு கொட்டுக்காரனை கூட்டிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் பின்னாடியே போவோம். ஒவ்வொரு தெரு தெருவா சாமி வலம் போய்ட்டு, மொத்த ஊரும் சுற்றியவுடன் கோவிலுக்கு திரும்பும்.

------------------

அடுத்த நாள் காலைல ராத்திரி வெட்டின கிடாவ வரிப் பங்கு போட்டு, 'ஏல! எனக்கு எலும்பா அள்ளி போட்டுட்டு அவனுக்கு மட்டும் கறியா அள்ளிப் போட்டிருக்கீங்கல. எவம்ல பங்கு வைக்கிறது. எடுல அந்த அருவாள?' அப்படின்னு அன்பா கொடைய முடிக்கலைனா அன்னைக்கு எவனுக்கும் தூக்கம் வராது. மதியம் நல்லா கறிச்சோறு தின்னுப்புட்டு அன்னைக்கு ராத்திரி 'ஆயிரத்தில் ஒருவன்' திரையில் பார்க்க ரெடியாகிக் கிட்டு இருப்போம்.

Sunday, April 16, 2006

சிலுப்பி

நட்சத்திர வாரத்தில் எங்க ஆடு கதை (கருப்பன்) ஒன்னு பார்த்தேம். இப்போ கோழி கதை ஒன்னு..

எங்க வீட்டுல ஆட்டு கூட்டத்தை விட கோழி தான் அதிகம். காலைல நம்மள எழுப்பி விடறதே வீட்டுக்கொரு சாவல் (சேவல்) தான். காலைல எழுந்து கூட்டை தொறந்து எல்லாத்தையும் பத்தி விடறது தான் முதல் வேலை. அப்புறம் அதுங்களுக்கு தவிடு வாங்க ஒரு சாக்கு பைய எடுத்துட்டு கெளம்புவேன். தவிடு வாங்க ரெண்டு எடத்துக்கு போகலாம். ஒன்னு அடுத்த ஊர்ல இருக்கற ரைஸ் மில். இல்லன்னா பக்கத்து ஊர்ல நெல் அவிப்பாவ. அங்கண போய் அள்ளிக்கிட்டு வந்துறலாம் (காசு கொடுத்து தான்).

நான் மொதல்ல ரைஸ் மில் தான் போவேன். காரணம். அங்கே குமிஞ்சி கெடக்குற உமி மலைல ஏறி வெளாட தான். போனவுடனே ரைஸ் மில் ஓனர் இருக்கறான்னு பாக்கறது. அண்ணாச்சி இல்லன்னா, அந்தாக்க பைய போட்டுட்டு ஒரே வெளாட்டு தான். ஒடம்பெல்லாம் சுள்ளு புள்ளுன்னு உமி குத்தும். ஆனா மேல ஏறி சர்னு உருண்டு விழுற சொகம் இருக்குதே. 'ஏல! குமிச்சி போட்டதை எல்லாம் சரிச்சிட்டியலே' அப்படின்னு வெறட்டி விடற வரைக்கும் வெளாட்டு தொடரும். அப்புறம் பைல தவிட்ட அள்ளிக்கிட்டு எடை பார்த்து காசு கொடுத்துட்டு வந்திருவோம்.

அங்கண இல்லன்னா, அடுத்தால இருக்கற மணிநகர் போவோம். அங்கே நெல் அவிக்கறது தான் குடிசை தொழில். பெரிய அண்டா வச்சி, உமி அள்ளி போட்டு அவிப்பாங்க. பல்லு வெளக்க உமிக்கரி அள்ளவும் அங்கண போறதுண்டு. நமக்கு தெரிஞ்ச நாலு அக்கா வீடு உண்டு. போய்ட்டு தவிடு இருந்தா படி வச்சி அளந்து கொடுப்பாவ. அளக்கறதா..படிக்கு பாதி தான் தேறும். 'நல்லா அமுக்கி அளங்கக்கா' அப்படின்னு சொன்னாலும் அமுக்கற மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்துட்டு காத்த அளந்து காசு பாத்திருவாவ. ஆனா நல்ல மனசு காரவிய. பாசமா பேசுவாவ. 'யக்கா! ஒரு நல்ல அரிப்ப போட்டு அரிக்க கூடாது. இப்படி உமியா அள்ளி கொட்றியலே, எங்க கோழி விக்கி செத்துறாது' அப்படின்னு கேட்டா 'படிக்கு 5 பைசா கொறச்சிக்கடே' அப்படின்னு ஆடி தள்ளுபடி எல்லாம் உண்டு.

அம்மா நல்லா நீத்தண்ணி ஊத்தி தவிட்ட கொழச்சி வச்சதும் கோழி எல்லாம் காலைல சாப்பிட ஓடி வந்திரும். அப்புறம் 'டேய்! அந்த வெள்ள கோழி இன்னிக்கு முட்டை விடணும். புடிச்சி கூட்டுல அடச்சி போடு' அப்படின்னு அம்மாகிட்ட ஒரு முட்டை போடுற கோழி பட்டியல் இருக்கும். அத வெரட்டி புடிச்சி கவுத்தறதுக்குள்ள போதும் போதும்ணு ஆகிடும். இல்லன்னா நம்ம வீட்டுல தின்னுட்டு பக்கத்து வீட்டுல முட்டைய போட்டுடும். முட்டைல என்ன பேரா எழுதி இருக்கு. அப்புறம் ஒரு முட்டைக்காக வெட்டு குத்தா போயிடும். சில கோழிங்க சமத்தா அதுவாவே போய் முட்டைய போட்டுட்டு போய்டும். சிலதுங்க 'டேய்! நான் கஷ்டபட்டு முட்ட போடுறது நீங்க ஆம்லேட் போட்டு திங்காவா' அப்படின்னு கைய கொண்டு போனாலே கூட்டுக்குள்ள கெடந்து கொத்தும். கோழி உர்ருன்னு கெடந்தா, அது அடைக்கு கெடக்குதுன்னு அம்மா சொல்லுவாங்க. அடை காக்க முட்டை இருந்தா தான. எல்லாம் ஆம்லேட்டா போச்சே. சில கோழிங்க ரொம்ப வெவரமானதுங்க. இப்படி போடுற முட்டை எல்லாம் நாசமா போறத பொறுக்க முடியாம, காட்டுக்குள்ள நமக்கே தெரியாம ஒரு புதரை கண்டுபுடிச்சி அங்கணயே முட்ட விட ஆரம்பிச்சிரும். இங்கே வீட்டுல 'அந்த கருப்பு கோழி மூனு வாரமா முட்டையே போடல. என்னான்னு தெரியலையே. வருது. திங்குது. ஓடிருது'ன்னு பொலம்பிகிட்டு இருப்பாங்க. அப்புறம் ஒரு நாள் கொழந்த குட்டியோட கோழி வீட்டுக்கு வரும் போது தான் தெரியும், கோழி நமக்கு அல்வா கொடுத்துட்டுன்னு (திருநெல்வேலி கோழில்லா).

இந்த கோழி அடை வைக்கிறதே நமக்கு ரொம்ப சந்தோசமான விசயம். நான் தேரில போய் குருத்து மண் அள்ளிட்டு வந்தா, அம்மா ஒரு மண் அண்டாவுல கொட்டி சேர்த்து வச்சிருந்த முட்டைய எல்லாம் அடுக்கி அடைக்கி கெடக்கிற கோழிய புடிச்சி ஒரு 21 நாள் அடச்சி போட்டுருவாங்க. அதுவும் சந்தோசமா ஒக்காந்துக்கிடும். சில நேரம் கின்னி கோழி, வான் கோழி முட்டை எல்லாம் சேர்த்து வச்சிடுவோம். கோழிக்கு அது முட்டைக்கும், வான் கோழி முட்டைக்கும் வித்தியாசம் தெரியாது. குஞ்சு பொறித்தவுடன் தான் தாய் கோழி முழிக்கும். என்னடா இது வித்தியாசமா இருக்கு என்று. காக்கா கூட்டுல குயில் முட்டை மாதிரி தான். வெளிய போய்ட்டு வந்த காக்கா 'என்னடா திடீர்னு ரெண்டு முட்ட எக்ஸ்ட்ரா இருக்குன்னு குழம்பினாலும், அடை காக்கும். அப்புறம் குயில்னு தெரிஞ்சதும், காக்கா கூட்டம் முழுசும் சேர்ந்து அந்த குயில் குஞ்சை ஓட ஓட வெறட்டும். இது அடிக்கடி நடக்கும். கோழிய விட்டுட்டு காக்காவுக்கு வந்துட்டேன்.. :-).

கோழி குஞ்சு என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும். குட்டியா, க்யா..க்யான்னு கத்திக்கிட்டு, பட்டு போல முடியோட. அதனால மூனாவது வாரம் வந்தவுடனே ஒவ்வொரு முட்டையா மூக்கு குத்திருக்கா என்று எடுத்து பாக்கறது. உள்ளே இருந்து கோழி குஞ்சு தன் அலகால் சின்னதா ஒரு ஊசி அளவுக்கு துளை போட்டு வச்சிருக்கும். அது இல்லனா அது கூ முட்டையா போச்சின்னு அர்த்தம். கூ முட்ட அப்படின்னு திட்டறதுக்கு இது தான் அர்த்தம் :-).

இப்படி தான் ஒரு தடவை அடைக்கு வைக்கும் போது, ஒரு வெளங்காத கோழி ஒரு வாரம் ஒக்காந்துட்டு அப்புறம் ஒக்கார மாட்டேன்னு ஒரே அடம். ஐயோ! முட்டை எல்லாம் கெட்டு போய்ருமே அப்படின்னு அம்மாவுக்கு ஒரே கவலை. இனி அதை ஆம்லேட்டும் போட முடியாது. நம்ம சிலுப்பி கோழிய புடிச்சி போடலாம்ணு சொன்னா, அம்மாவுக்கு இஷ்டமே இல்ல. 'அது ஒரு குருட்டு கோழில. அதுக்கு பறக்க சுத்தமா ரெக்கை கெடையாது. அப்புறம் எல்லாத்தையும் பருந்துக்கும் காக்காவுக்கும் கொடுத்திரும்ல' அப்படின்னு சொன்னாங்க.

சிலுப்பி. சின்னதா இருக்கும் போதே ஒரு நாய் வாய்க்குள் போய் தப்பித்து வந்தது. அதில் ஒரு கண் சுத்தமாக போய்விட்டது. பாதி உலகம் எப்பவுமே இருட்டு தான் அதுக்கு. வலது பக்கம் இருந்து எது வந்து கொத்தினாலும், பாவம். கொத்து பட்டதுக்கு அப்புறம் அலறிக்கிட்டு ஓடும். முடியெல்லாம் சிலுப்பிகிட்டு இருக்கும். ரெக்கைல முடி ரொம்ப கம்மி. அதனால் அதுக்கு சுத்தமாக பறக்க முடியாது. ஓட தான் செய்யும். ஒரு தடவை ஊர்ல கீரி புள்ளைங்க (அணில் மாதிரி பெரிசா இருக்கும்) ரொம்ப அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சிட்டுதுங்க. ராத்திரி நேரே கோழி கூட்டில் போய் ஒரு கோழிய தூக்கிட்டு போய்டும். ஊர்ல எல்லோரும் அதோட அட்டூழியம் தாங்க முடியாம, கோழிய புடிச்சி புளிய மரத்துல ஏத்தி விட்டுருவோம். கீரி புள்ள கோழி கூட்டுல பாத்துட்டு ஏமாந்து போய்டும். அப்போ எங்க வீட்டுல எல்லா கோழியும் இருட்டின வுடனே பறந்து போய் மரந்துல ஒக்காந்து தூங்க ஆரம்பிச்சிடும். ஒக்காந்துக்கிட்டே எப்படி தான் தூங்குதோன்னு நான் நிறைய தடவை யோசிப்பேன். அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது, டவுன் பஸ்ல நின்னுக்கிட்டே தூங்கற கில்லாடிங்க எல்லாம் இருக்கறாஙன்னு. நம்ம சிலுப்பி மரத்த சுத்தி சுத்தி வரும். குதிச்சி குதிச்சி பாக்கும். உயிர் பிரச்சினை இல்லையா. ம்ம்ம்ம்..ஒன்னும் வேலைக்காகாது. அப்புறம் நான் தான் அதை தூக்கிக்கிட்டு மரத்துல ஏறி ஒரு கிளைல விட்டுட்டு வருவேன்.

அதனால தான் அம்மாவுக்கு சிலுப்பி மேல நம்பிக்கையே இல்ல. வேற எந்த கோழியும் அடைக்கும் இல்லன்னு என்பதால் சிலுப்பிக்கு அடித்தது அதிஷ்டம். அதுவும் சமத்தாக அடை காத்தது. வைத்த எல்லா முட்டையும் குஞ்சு பொறித்தது. அம்மாவுக்கு ஒரே சந்தோசம். இருந்தாலும் ஒரே கவலை, இதுல காக்கா வாயிலையும் பருந்து வாயிலையும் போய் மிச்சம் எத்தனை தேறும் - என்று.

சிலுப்பி, தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு அழகாக மேய செல்லும். அடுக்கடி தன் தலையை திருப்பி தெரியாத பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொள்ளும். ஒக்கார மதி அத்து ஓடிப்போன அந்த வெள்ள கோழி நைசா ஒரு ரெண்டு குஞ்சுகளை கூட்டிக்கிட்டு சுத்தியது. அதை பார்த்த சிலுப்பி சண்டை போட்டு அதை விரட்டி விட்டு தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டது. பக்கத்தில் யார் போனாலும் கொத்து தான்.

ஒரு நாள், 'ஓ' வென்று அம்மா குரல் கொடுக்க அத்தனை குஞ்சுகளும் செடி புதர்களை நோக்கி ஓட்டம் எடுத்தது. அவைகளுக்கு தெரியும் அது பருந்து வருதுன்னு எச்சரிக்கை என்று. சிலுப்பி தலையை சாய்த்து மேலே பார்த்தது. நொடிப்பொழுதில் ஒரு குஞ்சை காலில் பற்றிக்கொண்டு பருந்து மின்சார கம்பி மீது போய் அமர்ந்து கொண்டது. 'இந்த வெளங்காத கோழிய அப்பவே வேணாம்னு சொன்னேனே' அப்படின்னு அம்மா புலம்ப, அடுத்த நொடியில் சட்டென்று தன் ரெக்கையை அடித்து பறந்த சிலுப்பி, கம்பியில் இருந்த பருந்தை தட்டி விட, அதை எதிர் பார்க்காத பருந்து காலில் இருந்த குஞ்சை தவற விட்டது. தன் இரையை தவற விட்டு சிலுப்பியை பார்த்து பயந்து பருந்து பறந்து விட்டது. மேலே இருந்து குதித்து, தன் குஞ்சுகளோடு நொண்டி கொண்டே நடந்து வந்தது சிலுப்பி, தன் குழந்தையை காப்பாற்றிய பெருமிதத்துடன்.

Friday, March 31, 2006

கல்லூரியில் கத்திக்குத்து

முதன் முதலாக சென்னை வாசம். எங்க கிராமத்துல பி.எஸ்.சி முடிச்சதுக்கப்புறம் கெடைச்சது சென்னையில் M.I.T-ல ஒரு சீட். அதுவரைக்கும் திருநெல்வேலிய தாண்டி கூட வந்தது இல்லை. இதுல வேற என் அண்ணன் வேற கடுதாசி போட்டு 'எலே! அங்கண கொஞ்சம் ராகிங் இருக்கும். பாத்து நடந்துக்கல' அப்படின்னு லேசா மிரட்டி அனுப்பினான். ராகிங்கா...அப்படின்னா..எவனுக்கு தெரியும். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போய் சேர்ந்தேன். முதல் நாளே என்னிய ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டு அப்பா நெல்லை எக்ஸ்பிரஸ்ஸ புடிச்சி ஊர் போய் சேர்ந்துட்டாங்க. வாழ்க்கைல தன் முதலா ஹாஸ்டல் வாசம் வேற. எங்க அறையில் மூன்று பேர். எல்லாம் நம்ம மாதிரி கிராமம் தான்.

'வெளியே எங்கயும் போனா சீனியர் புடிச்சுக்குவானுங்க'அப்படின்னு எல்லா பயலுவலும் எச்சரிக்கையா ரூமுக்குள்ளேயே கொடக்குறானுவ. திடீர்னு எங்க ஹாஸ்டல்ல ஒரே பரபரப்பு. எல்லா பயலுவலும் ஓடி ஒளியறானுங்க. மொத்தமா சீனியர் பயலுவ எல்லாம் ஹாஸ்டல்ல புகுந்து மாட்ட புடிக்கிற மாதிரி எங்களை எல்லாம் மொத்தமா பத்திக்கிட்டு வெளியே கூட்டிட்டு போனானுங்க. நான் ஒரு கும்பல் கிட்ட மாட்டினேன். என்னிய அந்த கும்பல் அப்படியே ஹாஸ்டலுக்கு வெளியே தள்ளிக்கிட்டு போச்சு. ராத்திரி 11 மணி. துணைக்கு என் ரூம் மேட் செந்திலும்.

அதுல ஒருத்தன் ஆரம்பிச்சான் 'என்ன! பர்ஸ் இயரா'. அதான்!நாங்க முழிக்கிற முழியிலேயே தெரியுதுல்லா. அப்புறம் என்ன கேள்வி. 'ஆமாண்ணே! பர்ஸ் இயர் தான். இன்னிக்கு தான் சேர்ந்தேண்ணே' பவ்யமா பதில் சொன்னேன். 'டே! என்னா இது 'அண்ணே' அப்படின்னுகிட்டு. சீனியர்னு தான் சொல்லணும். தெரிஞ்சிதா' கடுப்பகிப் போன ஒரு அண்ணன். எங்க ஊருல எல்லாம் காலேஜ்ல அண்ணேன்னு தான் கூப்பிடுவோம். அத இந்த பயலுவகிட்ட சொன்னா புரியுமா. 'சரிண்ணே' இப்படி பதில். 'டே! என்னா நக்கலா. நீ என்னா எந்தம்பியா'. ரொம்ப நாளா அண்ணேன்னு தான் பாசமா கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். நாம எல்லாம் பாசக்கார பயலுவ இல்லையா.

அப்படியே என்னிய தள்ளிக்கிட்டு வெளியே இருக்குற டீக்கடைக்கு போனது கூட்டம். அடப்பாவிங்களா ரெண்டு பேர ராகிங் பண்ண இருபது பேரா. அடுக்குமாடா. போன உடனே ரெண்டு பேருக்கும் ஓசில டீ வாங்கி கொடுத்தானுவ. மொத நாளே ஓசில டீ எல்லாம் வாங்கி தாராணுவலேன்னு நம்ம மனசே குளுந்து போச்சு. அப்புறம் தான் வெனையே ஆரம்புச்சுது. டீக்கடைல சத்தமா தேவா கானா பாட்ட ஓட விட்டு ரெண்டு பேரையும் ரோட்டுல ஆட சொன்னானுவ. 'லே! ஒரு டீக்கு இப்படி நடு ரோட்டுல ஆடுறதுக்கு நான் என்ன கழைக்கூத்தாடியால' அப்படின்னு எங்களை நொந்து கொண்டே 'டண் டண் டண்..டணக்கு டணக்கு' அப்படின்னு ரோட்டுல ஒரு குத்தாட்டம் போட்டோம். அந்த ராத்திரியிலையும் அதை பார்க்க பொதுஜனமெல்லாம் கூடிடிச்சு. 'அண்ணே! ஒரு இளையராசா பாட்டாவது போடுங்கண்ணே' அப்படின்னு கேட்டுப் பார்த்தேன். ஹும்..நாம என்ன டூயட்டா பாட போறோம். ஆடுங்கடா அப்படின்னு மறுத்துட்டானுவ. அப்புறம் என்ன ஒரு அரை மணி நேரம் 'டணக்கு டணக்கு' தான்.

அப்புறம் காலைல ரொம்ப சாக்ரதையா பார்த்து பார்த்து வெளியே வந்தேன். ஒரு எரும என்னிய பாத்துட்டு. 'டே! எங்க போற!. எப்படிக்கீற! காத்தால நாஸ்டா துண்ட்டியா' அப்படின்னு ஒரு கேள்வி. எனக்கு கிர்ருன்னு தலை சுத்திச்சு. வெளி மாநில கோட்டாவுல வந்தவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டேனே. இங்கிலீசும் தெரியாதே அப்படின்னு முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்போ என்னிய காப்பாத்த வந்தவரு தான் இந்த கத்திக்குத்து. 'லே! எந்த ஊருல' அப்படின்னு ஒரு வார்த்தைக்கே 'அண்ணே! நீங்க நம்ம ஊருங்கலா. நல்லாருப்பிய. இந்த அண்ணே ஏதோ கேக்கறாவ. புரியாம நிக்குறேண்ணே' அப்படின்னு பக்கத்தில போய் உரிமையா உக்காந்தேன். 'லே! எந்திரில. சீனியர் முன்னாடி ஒக்கார்ற' அப்படின்னு திட்டினப்போ தான் தெரிஞ்சது அண்ணன் தான் அங்கே ராகிங்ல பெரிய ஆளுன்னு. தெரியாம வழில போற மூதேவிய வெத்தள பாக்கு வச்சு அழைச்சிட்டோமோன்னு தோணிச்சு.

'இவரு யாரு தெரியுமா. கத்திக்குத்து' அந்த மெட்ராஸ் சொன்னது. 'ஓ! அது நீங்க தாணாண்ணே! பயலுவ ஒங்கல பத்தி கத கதயா சொன்னானுவ' அப்படின்னு நெனைச்சிக்கிட்டு, அடுத்த ஆட்டத்துக்கு தயாரானேன். அண்ணாச்சி பேர கேட்டா, எப்படி சொல்லணும் தெரியுமா. நம்ம நாக்க மடக்கி கடிச்சிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு, ராமநாராயணன் படம் கிளைமாக்ஸ்ல வர்ற அம்மன் மாதிரி கைய வச்சி போஸ் கொடுத்துக்கிட்டு 'கத்த்த்திக்குத்து' அப்படின்னு ஓங்கி சொல்லணும். இது எங்க கல்லூரில ரொம்ப பேமஸ் அப்போ. கத்திக்குத்துன்னா எல்லோரும் ஓடுவானுவ. இப்படி ஒரு தடவ சொல்லலாம். ஒரு நாள் என்னிய கல்லூரி வாசலில் விட்டு 50 தடவ சொல்லுல அப்படின்னு விட்டுட்டானுவ. கத்திக்குத்து கத்துக்குத்துன்னு கத்தி கத்தி, கண்ணுமுழி எல்லாம் பிதுங்கிப் போச்சு. போற வர்ற புள்ளைங்க எல்லாம் என்னை பாத்து 'சாமி! எறங்கிடுச்சு போல' அப்படின்னு ஒரு மாதிரி சைடு வாங்கி போச்சுதுங்க. மவனே! அன்னிக்கு எங்கைல கத்தி ஒன்னு தான் இல்ல. இல்லன்னா ராமநாராயணன் படம் க்ளைமாக்ஸ் தான்.


'சரி! அந்த பொண்ணு போறால்லா. அவகிட்ட போய் அவ பேரு என்னான்னு கேட்டுட்டு வா' அப்படின்னு என்னிய தொரத்தி விட்டுட்டாரு கத்திக்குத்து. 'அடப் பாவிமக்கா ! முன்ன பின்ன தெரியாத புள்ளைக்கிட்ட பேர கேட்டு அடி வாங்கி கொடுத்துருவிய போல' அப்படின்னுக்கிட்டே அந்த பொண்ணுக்கிட்ட போனேன். அது என்னிய பார்த்ததும் எவனோ சீனியர்னு நெனைச்சு அது திரு திருன்னு முழிக்க, நானு கேக்க வந்தத கேக்கமுடியாம முழிக்க, ஒரு வழியா கேட்டு வந்தேன். 'சரில! அந்த பொண்ண இங்கண வரசொல்லுல' அடுத்த கட்டளை. நீங்க கடலை போடுறதுக்கு உதவி செய்ய நான் தான் கெடச்சேனா. அப்புறம் ஒரு இலைய பறிச்சி 'லே! இதுல எத்தனை இலை இருக்குன்னு எண்ணுல' அப்படின்னு பெரிய பொறுப்பை கொடுத்துட்டு வறுக்க ஆரம்பிச்சுட்டார். 'அண்ணே! ஏதோ தீயிற மாதிரி வாசனை வருது' அப்படின்னு கேட்க ஒரு பிடி மண்ணை அள்ளி என்னிய எண்ணுல அப்படின்ன்னு விட்டுட்டாவ. இப்படி ஏதாவது புள்ளைங்க மாட்டினா, நாம தப்பிச்சிக்கலாம். ஒரு பொண்ணு வந்துட்டா அப்புறம் நாம சீனியர் கண்ணுக்கே தெரிய மாட்டோம்.

ஒரு நாள் ராத்திரி எதோ அசோசியேசன் வேலை அப்படின்னு ராத்திரி மறுபடி அந்த கூட்டம் வந்து எங்களை தள்ளிக்கிட்டு போனது. அதுல ஒருத்தன் ஜூனியர் மாதிரி என்னிடம் வந்து பயந்து பேச, நானும் அவனை நம்ம ஜாதி தான்னு நெனச்சி, கொஞ்சம் தைரியம் வந்து 'லே! அந்தா இருக்கானுங்க பாரு. சீனியர்னு சொல்லிக்கிட்டு. எல்லாம் கிறுக்கு பயலுவ' அப்படின்னு ஏடா கூடமா பேசி வச்சேன். காலைல தான் தெரிஞ்சது அவன் இறுதி ஆண்டு சீனியர்னு. அப்புறம் என்ன..அன்னைக்கு ராத்திரி அதே டீக்கடை..அதே பாட்டு..அதே 'டணக்கு டணக்கு' தான். அப்புறம் வாய தொறக்குறதே இல்ல.

இதுல சூப்பர் சீனியர்னு ஒருத்தர் உண்டு. அது என்ன சூப்பருன்னு கேக்கறியலா. நமக்கு ஒரு நம்பர் இருக்கும் இல்லையா. அதே நம்பர்ல இருக்குற ரெண்டாவது வருசம் படிக்கிற ஆண்ணாச்சி/அக்கா தான் நம்ம சீனியர் (பரம்பரை மாதிரி). அப்புறம் எல்லாத்துக்கு மேல அதே நம்பர்ல கடைசி வருசதுல ஒரு அண்ணன் இருப்பாரே, அவரு தாங்க சூப்பரு. அவர பாக்குறதுக்கு முட்டாய்/கேக் எல்லாம் வாங்கிட்டு போய் பாக்கணும். நான் என்னோட சூப்பர பார்த்ததே இல்ல. சூப்பர பாக்கலண்ணா பெரிய குத்தம் மாதிரி. அப்புறம் அடிக்கடி ஆட வேண்டிவ வரும். என்னோட சூப்பரு பேரு/அறை எண் எல்லாத்தையும் விசாரிச்சு, இருந்த காசுல ஒரு அரைக்கிலோ முட்டாய் வாங்கிக்கிட்டு ஒரு நா ராத்திரி போனேன். அங்கே அறைக்குள்ள ஒரு மூனு பேரு. நாமலே போய் மாட்டினா விடுவானுங்களா. அதுல என்னோட சூப்பரு யாருன்னு வேற தெரியல. 'என்னடா! முட்டாயா! கொண்டா கொண்டா. உன்னோட சூப்பர் சீனியர பாக்க வந்தியா. நான் தான் அது' அப்படின்னு முட்டாய வாங்கி மூனும் தின்னுட்டுதுங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அதுல என்னோட சூப்பரே இல்லன்னு. தின்னுட்டு 'ஹி..ஹி' ந்னு ஒரு சிரிப்பு வேற. இன்னொரு அரைக்கிலோவுக்கு காசுக்கு நான் எங்கடா போவேன்னு என்னிய நானே நொந்துக்கிட்டேன்.

அப்புறம் தாங்க அந்த பரிதபமான நாவரசு கொலை நடந்துச்சு. அப்புறம் கல்லூரில ஏகப்பட்ட கெடுபுடி. ராத்திரி சீனியர் ரூம்ல ஜூனியரை பாத்தாங்கண்ணா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் சீனியருங்க எல்லாம் எங்களை பாத்தா தல தெரிக்க ஓடுவானுவ. தெரியாம அவனுங்க ரூமுக்கு போய்ட்டோம்னா 'யய்யா! ராசா! தயவுசெஞ்சு போய்ரு ராசா!' அப்படின்னு கை எடுத்து கும்பிடுவானுவ. யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வருது பாத்தியலா.

இப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. ரெண்டாவது வருடம். எங்கள் வகுப்புக்கு போனா அங்கே நம்ம கத்திக்குத்து அண்ணன் சோகமா ஒக்காந்துகிட்டு இருக்காரு. 'யண்ணே! இங்கே எதுக்கு ஒக்காந்து இருக்கிய.வகுப்பு மாறி வந்துட்டியலா' அப்படின்னு போய் விசாரிச்சேன். 'அட! போடே. விசயம் தெரியாத மாதிரி பேசாத. அதான் போன வருசம் என்னிய ராகிங் பண்ணும் போது புடிச்சி ஒரு வருசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாவல்லா. இனி மறுபடி ரெண்டாவது வருசம் உங்க கூட தான் படிக்கணும்' பாவமாய் கத்திக்குத்து. 'நெலமைய பாத்தியலா அண்ணே! எங்களை ராகிங் பண்ணிட்டு, இப்போ எங்க கூட படிக்கிற மாதிரி ஆகி போச்சு. பாத்துண்ணே! இந்த வருசமாவது கத்திய தூர தூக்கிப் போட்டுட்டு நல்ல புள்ளையா இரு. அப்புறம் அடுத்த வருசம் ஒன்னிய நாங்கெல்லாம் ராகிங் பண்ணுற மாதிரி ஆகிட போவுது'. 'ஆமாண்டே! என்னிய மறுபடி மொத வருசத்துல தூக்கி போட்டாலும் போட்டுவானுங்க' நொந்து போய் சொன்னார் கத்துக்குத்து.

Friday, March 17, 2006

கிராமத்து மணம் - 4 ( கொடுக்காப்புளியும் கிளியும்)

நம்ம ராகவன் பதிவுக்கு பதிவு கொடுக்காப்புளி கொடுக்காப்புளி என்கிறார். சரி! நம்ம கொடுக்காப்புளி புராணம் ஒன்ன எடுத்து விடலாம்னு தான் இந்த பதிவு. எங்க ஊரிலயும் ஒரு கொடுக்காப்புளி மரம் உண்டு. ரொம்ப பெரிய மரம். யாராலயும் ஏற முடியாத அளவுக்கு உயரம். அப்படி ஒரு ஏக்கருக்கு படர்ந்து கிடக்கும். காலைலயே கனி ஆச்சி வீட்டுக்கு பால் வாங்க போகும் போது, அப்படியே தூக்குச் சட்டிய வச்சிட்டு மரத்த சுத்தி சுத்தி வருவோம். ஏதாவது கொடச்சுதுன்னா, நாம தான் இன்னிக்கி மொத ஆளுன்னு நெனைச்சிக்கலாம். ஒன்னுமே கீழே இல்லன்னா, ஏதோ ஒன்னு நமக்கு முன்னாடியே வந்துட்டு போய்ட்டுன்னு நெனைச்சிக்கலாம்.

கொடுக்காப்புளி அவ்வளவு ருசியா இருக்கும். முத்து முத்தா, வெள்ளையா அத பாக்குறதுக்கே நல்லா இருக்கும். ஆனா கைக்கும் நம்ம சொரண்டி கம்புக்கும் எட்டாத உயரத்துல கெடக்கும். மரத்துல ஏறி ஓடிப்பிடிச்சி வெளையாண்ட காலம். கை வழுக்கி தொப்புன்னு மேலே இருந்து விழுந்தா டவுசர தொடச்சிட்டு மறுபடி மரத்துல ஏறி தாவிக்கிட்டு இருப்போம். 'கொரங்கா பொறக்க வேண்டியதுங்க எல்லாம் மனுசனா பொறந்துட்டுதுங்க' என்று பெரிசுங்க எல்லாம் நாங்க போடுற கூச்சல் தாங்க புடியாம திட்டுவாங்க. ஆனா எங்களால அந்த கொடுக்காப்புளி மரத்துல ஏற முடியாது. அவ்வளவு பெரிய மரம். இல்லன்னா ஒரே நாளில் மரம் மொட்டையாகி விடும். அனைச்சி புடிச்சாலே மூனு பேரு சேர்ந்து புடிக்கணும்.

சரி! ஏறவும் முடியாது. கம்பு வச்சி பறிக்கவும் முடியாது. அப்புறம் என்ன தான் வழி. ஒரே வழி தாங்க. தானா விழுந்தா வுண்டு. வெளையாட்டு எல்லாமே அங்கே தான். டப்புன்னு ஒரு சத்தம் கேட்டுட்டா எல்லோரும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடிப் போய் பார்ப்போம். 'எங்கல விழுந்திச்சி' அப்படின்னு தேடு தேடுன்னு தேடி எடுத்து பங்கு போட்டுக்குவோம். சில பேர் கெடைச்சவுடனே அப்படியே நைசா வீட்டுக்கு ஓடிருவானுங்க. அப்புறம் அவனை அடுத்த வாட்டி வெளாட்டுக்கு சேத்துக்கிறது இல்ல. 'லே! நீ கொடுக்காப்புளிய கொடுக்காம ஓடிட்டால்லா! ஒன்னிய வெளாட்டுக்கு சேத்துக்கமாட்டோம்' என்று வெரட்டி விட்டுடுவோம். அப்புறம் அவன் போய் அவங்க அம்மாவ கூட்டி வந்து, எங்களுக்கெல்லாம் திட்டு வாங்கி கொடுத்து, எங்க தாத்தாவையும் களத்துல எறக்கி விட்டு பெரிய சண்டைல போய் முடிஞ்சிரும்.

தானா விழுவதை தவிர, ஒரு ஆள் மட்டும் எங்களுக்கு பறித்து போடுவார். அது காட்டுக் கிளி. கிளி எல்லாம் காட்டுல மேஞ்சிட்டு சாயங்காலம் எங்க ஊர தாண்டி தான் பறந்து போகும். கொடுக்காப்புளி மரத்துக்கு கிளி கூட்டம் வந்துட்டாலே, நாங்க எல்லாம் அங்கே ஆஜராகி விடுவோம். அவ்வளவு உச்சத்துல அந்த பச்சை இலைகளுக்கு ஊடால கிளி எங்கே இருக்குன்னு தேடி ஆன்னு கீழே இருந்து பாத்துக்கிட்டே இருப்போம். கிளி மெதுவா போய் ஒரு கொடுக்காப்புளிய பறிச்சி கொறிச்சிக்கிட்டு இருக்கும். காக்கா வாயில இருக்குற வடைக்கு அடி போடுற நரி மாதிரி தான். செல வெவரம் கெட்ட கிளி பறிச்சவுடனேயே தவறி கீழே போட்டுடும். அன்னைக்கு பெரிய ஜாக்பாட் தான். செல வெவரமான கிளிங்க பறிச்சி மெதுவா மொத்தமா தின்னுட்டு வெறும் தோலை மட்டும் போடும். 'நாசமா போற கிளி' அப்படின்னு திட்டிட்டு ஒக்காந்துக்கிட்டே இருப்போம். சோம்பேறி கிளிங்க சில வந்து உக்காந்து ரொம்ப நேரமா யோசிச்சிக்கிட்டே இருக்கும். நாங்களும் அது கொடுக்காப்புளி பறிக்குதா அப்படின்னு பொறுமையா கழுத்து வலிக்க பாத்துக்கிட்டு இருப்போம். 'ஏல! அது தூங்கிட்டுல. அசையாம இருக்கு பாரு' 'இல்லல! அசையுது பாரு. தெரியுதா' அப்படின்னு பேசிக்கிட்டு இருப்போம். அப்புறம் அதுக்கே ஒரு மூடு வந்து பறிச்சி போட்டா உண்டு. இல்லன்னா கடுப்பாகி ஒரு கல்ல எடுத்து வெரட்டி வுட்டுடுவோம்.

இப்படி தாங்க கிளியும் கொடுக்காப்புளியும் எங்க வாழ்க்கைல ஒரு அங்கமா போச்சி. இப்படி இருக்கச்சுல, திடீர்னு ஒரு யோசனை. கிளிக்காக இப்படி காவல் இருப்பதை விட, கிளிய நாமலே புடிச்சி வளந்தா என்ன? அப்போ இந்த துர்கா மாதிரி ராமநாராயணன் படமெல்லாம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிருந்தோம். 'லே! பாம்பே பல்லாங்குழி ஆடுது. நாம கிளிய பழக்கி கொடுக்காப்புளி பறிக்க வச்சா என்னா' அப்படின்னு ஒரு யோசனை. கிளி புடிக்கணும்னா நம்ம பீட்டர் அண்ணனை விட்டா வேற வழி. 'யண்ணே! எங்களுக்கு ஆளுக்கு ஒரு கிளி புடிச்சி கொடுங்கண்ணே' அப்படின்னு அவன் வீட்டுல போய் நாங்க வாண்டுங்க எல்லாம் போய் கேட்டோம்.

அடுத்த நாள் எல்லோடும் தேரி காட்டுக்கு கெளம்பிகிட்டு இருக்கோம். கிளி புடிக்கத் தான். காடை கவுதாரி எல்லாம் தரைலயே, முள்வேலிக்குள்ள கூடு கட்டும். காக்கா, குருவி எல்லாம் எல்லா மரத்துலயும் கூடு கட்டும். ஆனா இந்த கிளி இருக்குது பாருங்க. அது ரொம்ப வெவரம்ங்க. நல்ல மொட்ட பனைல (கொண்டை இல்லாம பட்ட மரம்) உச்சத்துல போய் ஒரு பொந்து போட்டு அங்கண போய் கூடு கட்டி வச்சிருக்கும். மொட்ட பன உறுதியா இருக்கா, இல்ல உளுத்துப்போய் இருக்கான்னு முக்கா பன ஏறினா தான் தெரியும். டப்புன்னு ஒடைஞ்சிட்டா, நேரே மேலே தான். இப்படி உயிர பனையம் வச்சி நம்ம பீட்டர் அண்ணன் ஒவ்வொரு பனையா ஏறி ஏறி பார்த்தான். கிட்டத்தட்ட ஆளுக்கு ஒன்னுன்னாலே ஒரு 8 கிளி தேவை பட்டது.

எங்க கூட்டத்த பார்த்துட்டாலே காக்கா குருவி எல்லாம் லபோ திபோன்னு அடிச்சிக்கும். வந்துட்டானுங்கடா காட்டுவாசிங்க அப்படின்னு. அதுலயும் கருப்பு டவுசர் போட்டிருந்தோம்னா காக்கா வந்து டக்குன்னு நம்ம தலைல ஒரு தட்டு தட்டிட்டு 'சௌக்கியமால' அப்படின்னு சொல்லிட்டு போகும். ஏன்னா! கவுட்ட வார் கருப்பு பாத்தீங்களா. அதனால எல்லாத்துக்குமே கருப்புன்னா கொஞ்சம் அலர்ஜி. சும்மா ஒரு கருப்பு துணிய காட்டுனாலே பறவைங்க எல்லாம் ஓடும். அன்னைக்கு நாங்க மரத்துல ஏறுவதை பாத்துட்டு, எல்லாம் கூடிட்டு. நாங்க கைல இருக்குற கவட்டையால வெறட்டி விட்டுக்கிட்டே இருக்க, பீட்டர் அண்ணன் ஒரு மொத்தமா கொஞ்சம் கிளி அள்ளிட்டு வந்தான். 'எண்ணனே இது! கிளி கேட்டா! உறிச்ச கோழிய கொண்டு வந்திருக்க' 'ஏல! இனி தாம்ல முடி மொளைக்கும். போய் நல்லா வாழைப்பழம் கொடுங்கல! சீக்கிரம் பெரிசாயிரும்' இது எங்கள் அண்ணன்..பீட்டர்.

நான் கொடுக்காப்புளிக்கு கொஞ்சம் பேராசை பட்டு, ரெண்டு கிளிய எடுத்துக்கிட்டேன். வீட்டுக்கு கொண்டு போன வுடனேயே ஒரே திட்டு 'ஏல! போன வாரம் தான ஒரு மைனாவ தூக்கிட்டு வந்த..இப்போ இது வேற எதுக்குல' அப்படின்னு. எங்க வீட்டு பூனை வேற ரெண்டு கிளியையும் ஒரு மாதிரி பார்த்தது. நேத்து மைனாவ புடிக்கப் போய் என்னிடம் வாங்கிய அடியை நினைத்து பேசாமல் இருந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் கிளி எல்லோர் வீட்டுலையும் வளர்ந்தது. நல்லா முடி மொளைச்சி இப்போ பச்சை கலர்ல கிளி மாதிரி ஆகிட்டு.

பொரிகடலை போட்டா, அது பாட்டுக்க ரெண்டும் ஒக்காந்து கொறிச்சிக்கிட்டு இருக்கும். சட்னிக்கு வச்ச கடலைய காணோம்னு வீட்டுல அம்மாவோட சத்தம் அடிக்கடி கேட்கும். நானும் ரெண்டு கிளிகளுக்கும் நல்லா தீனி போட்டு வளர்த்தேன். எல்லாம் கொடுக்காப்புளி கனவுல தான். சரி! அதுங்களுக்கு நாம சொன்ன ஏதாவது கேக்குற மாதிரி பயிற்சி கொடுக்கலாம்னு நெனைச்சேன். கடைசில நான் கூப்பிட்டா கூட எட்டி பாக்காம ஒரு சோம்பேறி கிளிகளா போச்சி. எம்மனசு ஒடைஞ்சி போச்சி. நான் விசிலடிச்சி கூப்பிட்டா, லேசா எட்டிப்பாத்துட்டு கடலைய கொறிக்கிறதை தொடரும். சில நேரம் ரெண்டும் போய் தூக்கிக்கிட்டு இருக்கிற எங்க வீட்டுப் பூனையை போய் கொத்தி வெரட்டி விட்டுடும். அப்போ நம்ம பூனையார் உச்ச கட்ட எரிச்சலில் இருப்பார். 'கிளிய புடிச்சி என் கைல கொடுப்பாங்க..இங்கே என்னைய புடிச்சி அதுங்க கைல கொடுத்து கொடும படுத்தறீயே! இது நியாயமால' என்பது போல இருக்கும். திருப்பி கடிச்சா அடி விழும் என்று பேசாம இருக்கும்.

அப்புறம் ரெண்டும் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிச்சிட்டுதுங்க. சரி! இனி நம்ம வீட்டுல கிளி பண்ணை தான் வைக்கனும்னு பயந்து, நல்லா ரெக்கை மொளச்சவுடனே பறக்கும்னு தூக்கி வீசி வீசி பார்த்தேன்.ம்ம்ம்.. சோம்பேறிங்க..வீசுன வேகத்துலேயே திரும்பி வந்து கடலை சட்டி முன்னாடி ஒக்காந்துக்கிடுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டு எங்க வீட்டு பூனை என்னிய கேவலமா ஒரு லுக் விடும். 'லே! என்னையும் திங்க விட மாட்டேங்குற. ஒனக்கும் ப்ரோஜம் இல்ல. பாத்தியா' அப்படிங்கிற மாதிரி இருக்கும். வெறுத்துப்போய் ஒரு நாள் ரெண்டையும் புடிச்சி ஒரு புளிய மரத்துல ஏறி விட்டுட்டு வந்துட்டேன்.

கடைசில நமக்கு கொடுக்காப்புளி பறிக்க காட்டு கிளிய விட்டா வேற கதி இல்லாம போய்ட்டு. ஒரு நாள் தூத்துக்குடில அடிச்ச புயலில் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு கொடுக்காப்புளி மரம் மொத்தமா சாஞ்சிப் போச்சி. அதுவரைக்கும் கைக்கு எட்டாத கொடுக்காப்புளிய அன்னைக்கு கைலயே பறிச்சி தின்னோம். இனி கொடுக்காப்புளி கைக்கு எட்டாமலே போகப் போறது தெரியாமலேயே.

Friday, March 10, 2006

சாத்தானே விலகிப் போ !

அப்போது நான் நான்காம் வகுப்பில். காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் டிப்-டாப்பா கோர்ட்- சூட் எல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர் எங்கள் வகுப்புக்கு வருவார். கையில் ஒரு சின்ன சூட்கேஸும் வச்சிருப்பார். எங்களுக்கு தினமும் காலையில் கதை சொல்வது தான் அவர் வேலை. கதை கேட்பது என்றால் எல்லோருக்கும் விருப்பம் தானே. 9 வயது சிறுவன் எனக்கு புடிக்காம போகுமா. வகுப்பில் எல்லோரும் ஆவலாய் கேட்போம். சின்ன சின்ன படம் வைத்து கதை சொல்வார். கதையில் சிங்கம், கரடி, யானை என்று எல்லாம் வரும். இன்னொரு கதாபாத்திரமும் எல்லா கதையிலும் கண்டிப்பா வரும். அது இயேசு. இப்படி போகும் கதை ' குழந்தைகளா! இது தான் நம்மை நேசிக்கும் ஒரே கடவுள். நாமெல்லாம் பாவம் செய்தால் நரகத்தில் தான் போய் விழுவோம். நரகம் என்றால் அங்கே கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் தூக்கி போடுவார்கள்.இயேசு ஒருவரே நம்மை சொக்கத்துக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட தேவன். நீங்கள் எல்லாம் இயேசு பிள்ளைகளா?'. நாங்கள் எல்லாம் மொத்தமாக 'ஆமாம்' என்று தலை ஆட்டுவோம்.

ஒரு 9 வயது சிறுவனுக்கு 'பாவம்' என்றால் என்ன தெரியும்..'நரகம்' என்றால் என்ன தெரியும்..கொதிக்கும் எண்ணை..தீ..என்று ஏன் இந்த மிரட்டல். இவர்களுக்கு என்ன வேண்டும்?. ஒன்றும் புரியாத வயது அது. நீ கும்பிடுவது வெறும் கல். இயேசு ஒருவர் தான் தெய்வம் என்று திரும்ப திரும்ப சொல்லி அந்த பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க அப்படி என்ன தான் அவசியம். இத்தனைக்கும் என் வகுப்பில் அத்தனை பேரும் இந்து.

இவர்களுக்கு ஒவ்வொரு மாணவனுக்கு பின்னாலும் இருக்கும் குடும்பம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரிய அவசியமும் இல்லை. அந்த குழந்தைக்காக தேரி காட்டில் போய் கஷ்டப்பாட்டு விறகு சுமந்து 'யய்யா! ..நல்லா படிய்யா' என்று, இருக்கும் ஒரு வேளை சோத்தையும் பிள்ளைக்கு கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அந்த தாயை பற்றி இவர்களுக்கு தெரியாது. 'மாரியாத்தா! எம்புள்ளைய காப்பாத்து தாயே' அப்படின்னு ஒரு சின்ன காய்ச்சல் என்றாலும் உடம்பெல்லாம் திருநீறு அள்ளி போட்டு, இரவெல்லாம் கண் விழித்து கவனித்துக்கொள்ளும் அந்த தாயின் அன்பை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தோமா, பிஞ்சு மனச கெடுத்தோமா என்பது தான்.

'யப்பூ! செயகுமாரு அம்மங்கோயிலுக்கு போமாட்டேன்னு சொல்றான். கல்லுங்கறான்யா' என்று சொல்லி அழுத ஒரு தாயின் (எனது அத்தை) வேதனையை விட இவனுங்களுக்கு மதம் பெரிசா போனது. காட்டில் போய் ஓலை சுமந்து, இயலாமல் வீடு வந்தவுடன் அப்படியே ஒரு கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள் என் அம்மா. ஒரு மணி நேரம் அவர்களால் எதுவும் பேச கூட சக்தி இருக்காது. நான் அக்கா எல்லாரும் சுத்தி உக்காந்துக்கிட்டு இருப்போம். மூச்சு கூட விட முடியாமல் அப்படியே படுத்து கிடப்பார்கள். இது அப்போது எங்கள் வீட்டில் தொடர்கதை. அந்த கஷ்டத்திலும் எங்களை ஆளாக்கினார்கள். 'புள்ளையாரப்பா..புள்ளையாரப்பா' என்று என் தாய் எங்கள் நலனுக்காக வேண்டாத தெய்வம் கிடையாது. இப்படி என் கிராமத்தில் ஒவ்வொரு தாயின் கதையும் இது தான். இவர்களை அழவிட்டு மதம் பரப்பும் அந்த மதம் பிடித்த கிறுக்கர்களை அன்றே எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவே. இவர்கள் என்ன இயேசுவை நேரில் பார்த்திருக்கிறார்களா? இல்லை நான் தான் முருகனை நேரில் பார்த்திருக்கிறேனா?. பின் எதற்கு ஏதோ சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பது போல் 'பாவிகளே! மனம் திரும்புங்கள்' என்று கூச்சல். நான் இங்கு எந்த மதத்தையும் பெரிசு என்று சொல்லவில்லை. தன் தலையிலேயே தங்க காசுகளை அள்ளிக் கொட்டிக்கொண்டு தான் இறைவன் அடிமை என்று சொல்லும் பரதேசிகள் இந்து மதத்திலும் உண்டு. உன் மதத்தை, உன் நம்பிக்கைகளை உன் சமூகத்தில் மட்டும் காட்ட தெரியாதா?. மனிதனை, மனித மனங்களை நேசிக்க, புரிந்து கொள்ள தெரியாத, ஆனால் கடவுளை பற்றி பேசும் இவர்கள் தான் பாவிகள்.

என் கிராமத்தில் எல்லா மதத்தவரும் உண்டு. பொங்கலுக்கு கிருஸ்தவர்கள் வீட்டுக்கு பொங்கல் கொடுப்போம். அதே போல் கிருஸ்மஸுக்கு அங்கே இருந்து வரும். சின்ன வயசில் அந்த திராச்சை ரசத்திற்கும், அப்பத்திற்கும் ஆசை பட்டு நானும் சர்ச்சில் போய் நின்றிருக்கிறேன். ஆர்.சி கோவில் (மாதா கோவில்) திருவிழா என்றால் தவறாமல் "உப்பு-மிளகு (மாதாவுக்கு வேண்டி படைப்பார்கள்) வாங்கி போட்டுட்டு வந்துருய்யா" என்று என் அம்மா தவறாமல் 25 பைசா கொடுத்து அனுப்புவார்கள். நான் காதலிப்பது ஒரு கிருஸ்தவ பெண் என்று தெரிந்ததும் அம்மா சொன்ன ஒரே வார்த்தை 'அடப்பாவி! நல்லா பழகிக்கிட்டு இருக்கிற குடுப்பத்துல இப்படி பண்ணிட்டியே' என்று மட்டுமே. ஒரு வார்த்தை கூட மதம் பற்றி பேசவில்லை. என் திருமணம், திருநீறு, அதன் மேல் சிலுவை, அதன் மேல் திருநீறு என்று (நெத்தியில போட்டு நெத்திய ஒரு வழி ஆக்கிட்டாங்க) அத்தனை பேர் ஆசீர்வாதத்துடன் நடந்தது. இன்று என் வீட்டில் தீபாவளியும் உண்டு. கிருஸ்மஸும் உண்டு. மருதமலைக்கு என்னை கூட்டிச்சென்று, கோவில் கற்பகிரகம் வரை வந்து, ஐயர் கொடுத்த திருநீறை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொண்ட என் மச்சான் (மனைவியின் அண்ணன்) ஒரு கிருஸ்தவர் தான். நானும் அவருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு போயிருக்கிறேன். இப்படி மதம் என்பது நம் உறவுகளில், பாசங்களில் பினைத்து கிடப்பது உண்மை தான்.நம் யாருக்கும் யார் தெய்வமும் பெரிசா தெரிவதில்லை. அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரிந்திருக்கிறது. இதில் 'இயேசு..இயேசு' என்று தெரு தெருவாக அவரை இழுத்துக்கொண்டு அலையும் இவர்கள், சிறு குழந்தைகளிடம் நஞ்சை விதைப்பதை தான் என்னால் பொருத்துக்கொள்ளவே முடிவதில்லை.

எங்க ஊர் சுடலைமாடன் கோவில் கொடையில் எப்பவுமே முன்னால் நிற்கும் சுப்ரமணி அண்ணனை இந்த தடவை பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் கிருஸ்தனாக மாறி விட்டாராம். என் உறவினர் ஒருவார் எப்பவுமே தண்ணி. அவர் மனைவி ஏதோ பிரச்சினையில் தீக்குளிக்க, அங்கே ஆஸ்பத்திரியிலேயே இவர்கள் ஆஜர். இவர்கள் தீக்குளித்தால் கடவுள் என்ன செய்வார். இப்போது அவர்கள் கிருஸ்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால் உடனே அவர்கள் பெயரும் மாற்றப்பட்டு விடுகிறது. அவர் பையன்கள் இப்போது இலவசமாக கிருஸ்தவ பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். இப்படி நான் பார்த்த மதமாற்றம் ஏராளம். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பணம், வேலை, படிப்பு. ஏன் யாருமே முஸ்லீமாகவோ, இல்லை ஒரு முஸ்லீம் இந்துவாகவோ மாறுவதில்லை. இவர்கள் மட்டும் என்ன இயேசுவை நேரில் பார்த்துவிட்டார்களா..என்ன?. 'பாரதி' படத்தில் கிருஸ்தவனாக மாறிவிட்ட தன் நண்பனை (நிழல்கள் ரவி) பார்த்து 'நம் சமூகத்தில் இப்படி ஒரு அமைப்பு இல்லாமல் போய்விட்டதே..மகாசக்தி' என்று புலம்புவார். உண்மை அது தான். மொத்த முடிச்சியையும் பார்த்தால் கடைசியில் அது முடியும் இடம் 'பணம்'. இதற்கு விபசாரம் பண்ணலாமே. இந்த பாவங்களை இவர்கள் சொல்லும் இயேசுவே மன்னிக்க மாட்டார்.

என்னிடம் திட்டு வாங்கி கொண்டு போகும் கூட்டம் ஏராளம். நெல்லை இரயில் நிலையத்தில் ஒரு பெரியவர். ஆசிரியர் போல இருந்தார். எங்கே போனாலும் ஒரு கட்டு நோட்டிஸ், பிட் புத்தகங்களோடு தான் போவார் போல. 'தம்பி! நீ ஏசுவை விசுவாசி. அவர் வரும் காலம் சீக்கிரம் வருகிறது' என்று சில நோட்டிஸ்களை என் கையில் திணித்தார் (இது போல 100 சம்பவங்கள் சந்தித்து இருக்கிறேன்). அங்கேயே அவர் மூஞ்சியில் கிழித்து எறிந்தேன். ஒரு பிச்சைக்காரன் பேசினால் கூட நின்று பேசுவேன். அவனும் மனிதன் தானே. ஆனால் அன்று தெரிந்தே அவரை காயப்படுத்தினேன். அவர் காயப்பட்டது அவர் மூஞ்சியிலேயே தெரிந்தது. ஆனால் இவர்கள் செய்யும் காயங்கள் அவருக்கு தெரியாதா என்ன?. நான் பழனி முருகன் திருநீறு என்று கொடுத்தல் பூசுவாரா?. என் மதத்தை பற்றி கேட்க கூட பிடிக்காத இவனுங்க நாம மட்டும் கை கட்டி 'நீ பாவி' என்று சொன்னால் தலையாட்டி கேக்கணுமாம். 'இந்த நோட்டிஸ் அடிக்கும் காசுக்கு வெளியில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரு பொட்டலும் இட்லி வாங்கி கொடுக்கலாமே.அதை உங்களை கடவுள் ஆசீர்வதிக்க மாட்டாரா! என்ன?' என்று கேட்க நினைத்தேன். அவரின் வயது கருதி கேட்கவில்லை. இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் இவர்களை பார்த்தது எனக்கு ஆச்சரியமே. நம்ம நெத்தியில தான் எழுதி ஒட்டி இருக்குமே இந்து என்று (திருநீறு). 'Hi! Are you from India?. Are you Hindu?. Do you know about Jesus Christ' அப்படின்னு ஆரம்பிப்பானுங்க. ஏன் இந்தியனா இருக்க கூடாதா...இந்துவா இருக்க கூடாதா..அது பாவமா என்ன?..இவர்கள் மனதில் இருப்பது தான் என்ன. இங்கே இருந்து மதம் பரப்புகிறேன் என்று வரும், பணம் அனுப்பும் இவர்கள் யார் கேட்க போகிறார்கள்?. தெரியவில்லை.

இப்போதெல்லாம் இவர்கள் பார்க்கும் போதெல்லாம் நான் மெதுவாக மிருகமாக மாறி விடுகிறேன். இவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான். 'நீ சொல்லும் இறைவன் உண்மையிலேயே இருந்தால், அவன் மதம் பிடித்து அலையும் உன்னை சொர்க்கத்திலும், அவனை நான் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரே காரணத்திற்காக என்னை நரகத்திலும் தள்ளினால், நீ தேவன் என்று கொண்டாடும் அவனிடம் ஒன்று சொல்வேன் ' நீ தேவன் அல்ல..ஒரு சாத்தான் என்று'

அன்புடன்,
சிவா