Friday, October 28, 2005
"முறுக்கு" செல்லையா
ப்ராங்பர்ட் (Frankfurt) விமான நிலையம். சிகாவோவில் இருந்து வந்த என் விமானம் தாமதமானதால், சென்னை செல்லும் விமானத்தை தவற விட்டு நின்று கொண்டிருந்தேன். அடுத்த வாரம் கல்யாணம். யாருக்குன்னு கேக்கறீங்களா?. எனக்கு தான். இந்நேரம் பார்த்து இவனுங்க வேற படுத்தறானுங்களே என்று எரிச்சலாக இருந்தது. மும்பை செல்லும் விமானத்தில் அனுப்புவதாக கூறினார்கள். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. எரிச்சலோடு இருக்கையில் போய் அமர்ந்தேன். பொழுது போகாமல், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் தள்ளி, ஒரு அம்மாவை, எங்கேயோ பார்த்தது போல இருக்கவே, அருகில் போய் பார்த்தால், எனது நாலாம் வகுப்பு ஆசிரியர். அவர் பெயர்....தெரியாது. ஆரம்ப பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் பெயர் ஒன்னாப்பு டீச்சர், ரெண்டாப்பு டீச்சர், இப்படி தான். இரு கைகளையும் கூப்பி "வணக்கம்! டீச்சர்" என்றேன். என்னை இனம் கண்டு கொண்டவர், "எப்படிப்பா இருக்க?" என்று நலம் விசாரித்தார். தன் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு திரும்புவதாகவும் கூறினார். ஆசிரியரை எனக்கு ஊரிலேயே தெரியும். மெயின் பஜாரில் தான் அவர்கள் வீடு. அடிக்கடி பார்க்கலாம். "நீ நல்லா வருவேன்னு எனக்கு அப்பவே தெரியும். அப்பவே நீ நல்லா படிப்பே" என்று என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். தான் கற்றுக் கொடுத்த மாணவனை இன்று நல்ல நிலைமையில் பார்க்கும் போது வரும் நல்வார்த்தைகளே அவை.
ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "கிருஷ்ணன தெரியுமா! டீச்சர். இப்போ அவன் மெட்ராசுல ஒரு பேங்க்ல வேலை பாக்கறான். சக்தி கணேசன் மெட்ராசுல ஜூஸ் கடை வச்சிருக்கான்" - இப்படி எனது ஐந்தாம் வகுப்பு நண்பர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு அவர்கள் நினைவிருக்க நியாயம் இல்லை தான். எத்தனை ஆயிரம் மாணவர்கள் அவரை கடந்து வந்திருப்பார்கள். இருந்தாலும், சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டு வந்த போது தான் "செல்லையா" பேச்சும் வந்தது.
செல்லையா. எனது ஆரம்ப பள்ளித் தோழன். எனது ஆரம்ப பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்ப பிண்ணனியும் வித்தியாசமானது. அதில் செல்லையாவின் பிண்ணனி,
செல்லையா கிராமத்தில் பிச்சை எடுப்பதே ஒரு தொழிலாக இருந்தது. காலையிலேயே ஒரு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு குழந்தைகளுடன் கிளம்பி விடுவார்கள். சில பேர் செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். செல்லையா அப்பாவும் செருப்பு தைப்பவர் தான். அப்படி ஒரு ஏழ்மையான நிலையில் இருந்து அவன் படிக்க வந்திருப்பதே பெரிய விசயம் தான்.
ஐந்து படிக்கும் போது, என் சித்தி தவறாமல் எம்.ஜி.யார் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டி போவார்கள். அங்கு தியேட்டரில் செல்லையாவை பார்க்கலாம். முறுக்கு விற்றுக் கெண்டிருப்பான். "முறீக்கே! முறீக்கே!" என்று அவன் கத்துவது தியேட்டர் முழுவதும் கேட்கும். ஒரு தகட பெட்டியில் அடுக்கி வைத்த முறுக்கை தலையில் வைத்துக்கெண்டு, மேல் சட்டை இல்லாமல், டவுசரை கையில் பிடித்த படி முறுக்கு விற்றுக் கொண்டிருப்பான். அந்த கூட்டத்தில் என்னை எப்படியும் கண்டு பிடித்து, என்னிடம் வந்து ஒரு முறுக்கையாவது கொடுத்து "வச்சிக்கல" ன்னு கொடுத்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைப்பதே இரண்டு முறுக்குக்குறிய காசாக தான் இருக்கும். முறுக்கை எண்ணி தான் கொடுத்திருப்பார்கள் என்றும் அவனுக்கு தெரியும். இருந்தாலும், ஒன்றை கைல தினித்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைக்கும் பெரிய கூலி, ஓசியில் படம் பார்ப்பது தான். அவனுக்கு கொடுக்க என் கையிலும் அஞ்சு பைசா கூட இருக்காது. என் வகுப்பில் வேறு யாருக்கும் முறுக்கு கொடுக்க மாட்டான். நண்பன் நான் என்றால் மட்டும் தான்.
ஏற்கனவே நிறைய தடவை இதே படத்தை பார்த்து இருப்பான் என்பதால், படம் தொடங்கியதும் என்னிடம் வந்து அமர்ந்து கொண்டு, கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். நம்பியார் எம்.ஜி.யாரை கத்தியால் குத்த மணிக்கணக்கில் போராடி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் கத்தியை பார்த்தவுடனே பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொள்வோம். இடைவேளை வரப் போவது தெரிந்ததும், தன் பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவான், "முறீக்கே! முறீக்கே" என்று கூவிய படி. என் வருப்பில் எல்லோருமே தியேட்டருக்கு போகும் போது செல்லையாவை பார்த்திருப்பதால், அவனுக்கு பட்ட பெயரே "முறுக்கு" செல்லையாவாகி போனது.
ஒரு நாள் வீட்டில், "அம்மா! தருமம் போடு தாயீ" என்று குரல் வர, அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி வைத்து "போட்டுட்டு வந்துருல" ன்னு கூறினார்கள். நான் தட்டை எடுத்துக் கொண்டு கதவை திறந்தால், வெளியே, தட்டு எந்திய படி அவன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தான் செல்லையா!
(தொடரும் - பதிவின் நீளம் கருதி)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சிவா,
படிச்சிட்டேன்...வழக்கம் போல நல்லா கொண்டு போறீங்க...'முறுக்கு' செல்லையா மாதிரி இருக்கிறவங்களைப் பத்தி இன்னும் நெரைய எழுதப்படணும்...படிக்கப் படணும்...
சிவா ,
இதுபோல் எனக்கும் பல முறுக்கு/ ஐஸ் நண்பர்கள் உண்டு. பழைய நினைப்புகளை கிளறிவிட்டீர்கள்
Anbulla Siva,
Intha Murrai Verra Mathiri Kaaruthai sollra mathir theiryudhu. nandru. Nalla Pathivu Pathiyil.....hmmm....Sikiram podunga. innum orru varaam ellam 22222222222 much....
Anbudan,
Nata
நன்றாக பசித்த ஒருவன்
எதுரே இலை நிறைய பதார்த்தம்
எடுத்து சாப்பிட தடை.............
அழகாக சென்ற கதை
என்னண்ணே பாதியிலேயே நிக்கவச்சுட்டு போய்ட்டேலே!
உங்களையெல்லம் என்ன செய்ய!
செயகுமாரு! என்னவோய் பண்ண?. நீளமா போட்டா, பாதிலயே படிக்கம போயிடறாங்க. அதான் பாதியா போட்டுட்டேன். சீக்கிரம் போட்டுடறேன் மிச்சத்தையும். நல்லாருக்குன்னு சொல்லிட்டிய, நன்றிவோய்!
Nicely written. Continue
என்ன சிவா இப்படி எல்லாத்துக்கும் தொடரும் போட்டால் எப்படி.... நமக்கு ஒரு நேரம் போல ஒரு நேரம் வாய்க்க மாட்டேங்குதே
nalla kathai. sikkiram thodarunkal.
கணேஷ், சீக்கிரம் அடுத்த பகுதியை போட்டுடறேன். இது ஒன்னும் தான் நிஜமான 'தொடரும்'ஆ போச்சு. :-)
திருப்பதி சார்! அடிக்கடி வந்து போங்க.
சிவா,
ஒண்ணு செய்யுங்க.
தொடரும்னு போட்டுக் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் -ஒரு அரை மணிநேரம்- அடுத்த பதிவையும் போடலாமே. போட்டிருங்க.
சீக்கிரம்.. :)
-மதி
Post a Comment