Sunday, April 16, 2006

சிலுப்பி

நட்சத்திர வாரத்தில் எங்க ஆடு கதை (கருப்பன்) ஒன்னு பார்த்தேம். இப்போ கோழி கதை ஒன்னு..

எங்க வீட்டுல ஆட்டு கூட்டத்தை விட கோழி தான் அதிகம். காலைல நம்மள எழுப்பி விடறதே வீட்டுக்கொரு சாவல் (சேவல்) தான். காலைல எழுந்து கூட்டை தொறந்து எல்லாத்தையும் பத்தி விடறது தான் முதல் வேலை. அப்புறம் அதுங்களுக்கு தவிடு வாங்க ஒரு சாக்கு பைய எடுத்துட்டு கெளம்புவேன். தவிடு வாங்க ரெண்டு எடத்துக்கு போகலாம். ஒன்னு அடுத்த ஊர்ல இருக்கற ரைஸ் மில். இல்லன்னா பக்கத்து ஊர்ல நெல் அவிப்பாவ. அங்கண போய் அள்ளிக்கிட்டு வந்துறலாம் (காசு கொடுத்து தான்).

நான் மொதல்ல ரைஸ் மில் தான் போவேன். காரணம். அங்கே குமிஞ்சி கெடக்குற உமி மலைல ஏறி வெளாட தான். போனவுடனே ரைஸ் மில் ஓனர் இருக்கறான்னு பாக்கறது. அண்ணாச்சி இல்லன்னா, அந்தாக்க பைய போட்டுட்டு ஒரே வெளாட்டு தான். ஒடம்பெல்லாம் சுள்ளு புள்ளுன்னு உமி குத்தும். ஆனா மேல ஏறி சர்னு உருண்டு விழுற சொகம் இருக்குதே. 'ஏல! குமிச்சி போட்டதை எல்லாம் சரிச்சிட்டியலே' அப்படின்னு வெறட்டி விடற வரைக்கும் வெளாட்டு தொடரும். அப்புறம் பைல தவிட்ட அள்ளிக்கிட்டு எடை பார்த்து காசு கொடுத்துட்டு வந்திருவோம்.

அங்கண இல்லன்னா, அடுத்தால இருக்கற மணிநகர் போவோம். அங்கே நெல் அவிக்கறது தான் குடிசை தொழில். பெரிய அண்டா வச்சி, உமி அள்ளி போட்டு அவிப்பாங்க. பல்லு வெளக்க உமிக்கரி அள்ளவும் அங்கண போறதுண்டு. நமக்கு தெரிஞ்ச நாலு அக்கா வீடு உண்டு. போய்ட்டு தவிடு இருந்தா படி வச்சி அளந்து கொடுப்பாவ. அளக்கறதா..படிக்கு பாதி தான் தேறும். 'நல்லா அமுக்கி அளங்கக்கா' அப்படின்னு சொன்னாலும் அமுக்கற மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்துட்டு காத்த அளந்து காசு பாத்திருவாவ. ஆனா நல்ல மனசு காரவிய. பாசமா பேசுவாவ. 'யக்கா! ஒரு நல்ல அரிப்ப போட்டு அரிக்க கூடாது. இப்படி உமியா அள்ளி கொட்றியலே, எங்க கோழி விக்கி செத்துறாது' அப்படின்னு கேட்டா 'படிக்கு 5 பைசா கொறச்சிக்கடே' அப்படின்னு ஆடி தள்ளுபடி எல்லாம் உண்டு.

அம்மா நல்லா நீத்தண்ணி ஊத்தி தவிட்ட கொழச்சி வச்சதும் கோழி எல்லாம் காலைல சாப்பிட ஓடி வந்திரும். அப்புறம் 'டேய்! அந்த வெள்ள கோழி இன்னிக்கு முட்டை விடணும். புடிச்சி கூட்டுல அடச்சி போடு' அப்படின்னு அம்மாகிட்ட ஒரு முட்டை போடுற கோழி பட்டியல் இருக்கும். அத வெரட்டி புடிச்சி கவுத்தறதுக்குள்ள போதும் போதும்ணு ஆகிடும். இல்லன்னா நம்ம வீட்டுல தின்னுட்டு பக்கத்து வீட்டுல முட்டைய போட்டுடும். முட்டைல என்ன பேரா எழுதி இருக்கு. அப்புறம் ஒரு முட்டைக்காக வெட்டு குத்தா போயிடும். சில கோழிங்க சமத்தா அதுவாவே போய் முட்டைய போட்டுட்டு போய்டும். சிலதுங்க 'டேய்! நான் கஷ்டபட்டு முட்ட போடுறது நீங்க ஆம்லேட் போட்டு திங்காவா' அப்படின்னு கைய கொண்டு போனாலே கூட்டுக்குள்ள கெடந்து கொத்தும். கோழி உர்ருன்னு கெடந்தா, அது அடைக்கு கெடக்குதுன்னு அம்மா சொல்லுவாங்க. அடை காக்க முட்டை இருந்தா தான. எல்லாம் ஆம்லேட்டா போச்சே. சில கோழிங்க ரொம்ப வெவரமானதுங்க. இப்படி போடுற முட்டை எல்லாம் நாசமா போறத பொறுக்க முடியாம, காட்டுக்குள்ள நமக்கே தெரியாம ஒரு புதரை கண்டுபுடிச்சி அங்கணயே முட்ட விட ஆரம்பிச்சிரும். இங்கே வீட்டுல 'அந்த கருப்பு கோழி மூனு வாரமா முட்டையே போடல. என்னான்னு தெரியலையே. வருது. திங்குது. ஓடிருது'ன்னு பொலம்பிகிட்டு இருப்பாங்க. அப்புறம் ஒரு நாள் கொழந்த குட்டியோட கோழி வீட்டுக்கு வரும் போது தான் தெரியும், கோழி நமக்கு அல்வா கொடுத்துட்டுன்னு (திருநெல்வேலி கோழில்லா).

இந்த கோழி அடை வைக்கிறதே நமக்கு ரொம்ப சந்தோசமான விசயம். நான் தேரில போய் குருத்து மண் அள்ளிட்டு வந்தா, அம்மா ஒரு மண் அண்டாவுல கொட்டி சேர்த்து வச்சிருந்த முட்டைய எல்லாம் அடுக்கி அடைக்கி கெடக்கிற கோழிய புடிச்சி ஒரு 21 நாள் அடச்சி போட்டுருவாங்க. அதுவும் சந்தோசமா ஒக்காந்துக்கிடும். சில நேரம் கின்னி கோழி, வான் கோழி முட்டை எல்லாம் சேர்த்து வச்சிடுவோம். கோழிக்கு அது முட்டைக்கும், வான் கோழி முட்டைக்கும் வித்தியாசம் தெரியாது. குஞ்சு பொறித்தவுடன் தான் தாய் கோழி முழிக்கும். என்னடா இது வித்தியாசமா இருக்கு என்று. காக்கா கூட்டுல குயில் முட்டை மாதிரி தான். வெளிய போய்ட்டு வந்த காக்கா 'என்னடா திடீர்னு ரெண்டு முட்ட எக்ஸ்ட்ரா இருக்குன்னு குழம்பினாலும், அடை காக்கும். அப்புறம் குயில்னு தெரிஞ்சதும், காக்கா கூட்டம் முழுசும் சேர்ந்து அந்த குயில் குஞ்சை ஓட ஓட வெறட்டும். இது அடிக்கடி நடக்கும். கோழிய விட்டுட்டு காக்காவுக்கு வந்துட்டேன்.. :-).

கோழி குஞ்சு என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும். குட்டியா, க்யா..க்யான்னு கத்திக்கிட்டு, பட்டு போல முடியோட. அதனால மூனாவது வாரம் வந்தவுடனே ஒவ்வொரு முட்டையா மூக்கு குத்திருக்கா என்று எடுத்து பாக்கறது. உள்ளே இருந்து கோழி குஞ்சு தன் அலகால் சின்னதா ஒரு ஊசி அளவுக்கு துளை போட்டு வச்சிருக்கும். அது இல்லனா அது கூ முட்டையா போச்சின்னு அர்த்தம். கூ முட்ட அப்படின்னு திட்டறதுக்கு இது தான் அர்த்தம் :-).

இப்படி தான் ஒரு தடவை அடைக்கு வைக்கும் போது, ஒரு வெளங்காத கோழி ஒரு வாரம் ஒக்காந்துட்டு அப்புறம் ஒக்கார மாட்டேன்னு ஒரே அடம். ஐயோ! முட்டை எல்லாம் கெட்டு போய்ருமே அப்படின்னு அம்மாவுக்கு ஒரே கவலை. இனி அதை ஆம்லேட்டும் போட முடியாது. நம்ம சிலுப்பி கோழிய புடிச்சி போடலாம்ணு சொன்னா, அம்மாவுக்கு இஷ்டமே இல்ல. 'அது ஒரு குருட்டு கோழில. அதுக்கு பறக்க சுத்தமா ரெக்கை கெடையாது. அப்புறம் எல்லாத்தையும் பருந்துக்கும் காக்காவுக்கும் கொடுத்திரும்ல' அப்படின்னு சொன்னாங்க.

சிலுப்பி. சின்னதா இருக்கும் போதே ஒரு நாய் வாய்க்குள் போய் தப்பித்து வந்தது. அதில் ஒரு கண் சுத்தமாக போய்விட்டது. பாதி உலகம் எப்பவுமே இருட்டு தான் அதுக்கு. வலது பக்கம் இருந்து எது வந்து கொத்தினாலும், பாவம். கொத்து பட்டதுக்கு அப்புறம் அலறிக்கிட்டு ஓடும். முடியெல்லாம் சிலுப்பிகிட்டு இருக்கும். ரெக்கைல முடி ரொம்ப கம்மி. அதனால் அதுக்கு சுத்தமாக பறக்க முடியாது. ஓட தான் செய்யும். ஒரு தடவை ஊர்ல கீரி புள்ளைங்க (அணில் மாதிரி பெரிசா இருக்கும்) ரொம்ப அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சிட்டுதுங்க. ராத்திரி நேரே கோழி கூட்டில் போய் ஒரு கோழிய தூக்கிட்டு போய்டும். ஊர்ல எல்லோரும் அதோட அட்டூழியம் தாங்க முடியாம, கோழிய புடிச்சி புளிய மரத்துல ஏத்தி விட்டுருவோம். கீரி புள்ள கோழி கூட்டுல பாத்துட்டு ஏமாந்து போய்டும். அப்போ எங்க வீட்டுல எல்லா கோழியும் இருட்டின வுடனே பறந்து போய் மரந்துல ஒக்காந்து தூங்க ஆரம்பிச்சிடும். ஒக்காந்துக்கிட்டே எப்படி தான் தூங்குதோன்னு நான் நிறைய தடவை யோசிப்பேன். அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது, டவுன் பஸ்ல நின்னுக்கிட்டே தூங்கற கில்லாடிங்க எல்லாம் இருக்கறாஙன்னு. நம்ம சிலுப்பி மரத்த சுத்தி சுத்தி வரும். குதிச்சி குதிச்சி பாக்கும். உயிர் பிரச்சினை இல்லையா. ம்ம்ம்ம்..ஒன்னும் வேலைக்காகாது. அப்புறம் நான் தான் அதை தூக்கிக்கிட்டு மரத்துல ஏறி ஒரு கிளைல விட்டுட்டு வருவேன்.

அதனால தான் அம்மாவுக்கு சிலுப்பி மேல நம்பிக்கையே இல்ல. வேற எந்த கோழியும் அடைக்கும் இல்லன்னு என்பதால் சிலுப்பிக்கு அடித்தது அதிஷ்டம். அதுவும் சமத்தாக அடை காத்தது. வைத்த எல்லா முட்டையும் குஞ்சு பொறித்தது. அம்மாவுக்கு ஒரே சந்தோசம். இருந்தாலும் ஒரே கவலை, இதுல காக்கா வாயிலையும் பருந்து வாயிலையும் போய் மிச்சம் எத்தனை தேறும் - என்று.

சிலுப்பி, தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு அழகாக மேய செல்லும். அடுக்கடி தன் தலையை திருப்பி தெரியாத பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொள்ளும். ஒக்கார மதி அத்து ஓடிப்போன அந்த வெள்ள கோழி நைசா ஒரு ரெண்டு குஞ்சுகளை கூட்டிக்கிட்டு சுத்தியது. அதை பார்த்த சிலுப்பி சண்டை போட்டு அதை விரட்டி விட்டு தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டது. பக்கத்தில் யார் போனாலும் கொத்து தான்.

ஒரு நாள், 'ஓ' வென்று அம்மா குரல் கொடுக்க அத்தனை குஞ்சுகளும் செடி புதர்களை நோக்கி ஓட்டம் எடுத்தது. அவைகளுக்கு தெரியும் அது பருந்து வருதுன்னு எச்சரிக்கை என்று. சிலுப்பி தலையை சாய்த்து மேலே பார்த்தது. நொடிப்பொழுதில் ஒரு குஞ்சை காலில் பற்றிக்கொண்டு பருந்து மின்சார கம்பி மீது போய் அமர்ந்து கொண்டது. 'இந்த வெளங்காத கோழிய அப்பவே வேணாம்னு சொன்னேனே' அப்படின்னு அம்மா புலம்ப, அடுத்த நொடியில் சட்டென்று தன் ரெக்கையை அடித்து பறந்த சிலுப்பி, கம்பியில் இருந்த பருந்தை தட்டி விட, அதை எதிர் பார்க்காத பருந்து காலில் இருந்த குஞ்சை தவற விட்டது. தன் இரையை தவற விட்டு சிலுப்பியை பார்த்து பயந்து பருந்து பறந்து விட்டது. மேலே இருந்து குதித்து, தன் குஞ்சுகளோடு நொண்டி கொண்டே நடந்து வந்தது சிலுப்பி, தன் குழந்தையை காப்பாற்றிய பெருமிதத்துடன்.