Thursday, October 06, 2005

சனங்களே ! நாங்க படம் போட போறோம்..

எங்கேடா படம்னு கேக்காதீங்க. இது நாங்கள் ஊரில் சின்ன வயசில் ஊர்மக்களுக்கு உண்மையிலேயே காட்டிய படம் பற்றியது. அப்போதெல்லாம் ஊரில் டி.வி என்பதே கிடையாது. படம் பார்க்க வேண்டுமென்றால் ஊரில் உள்ள ஒரு ஓட்டை தியேட்டரை விட்டால் வேற போக்கு கிடையாது. ஊத்திக்கிட்ட படம் என்றால் எப்படியும் ஒரு வருடத்திற்க்குள் வந்துவிடும். சூப்பர் ஹீட் படம் என்றால் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். எங்காவது கோவில் கொடை என்றால் திரைப்படம் போடுவார்கள். சுத்துப்பட்டு 18 கிராமத்திலிருத்தும் மக்கள் பாய், தலையனையோடு கிளம்பிவிடுவார்கள். அப்படி என்ன படம் போடுவார்கள் என்று கேட்கறீர்களா?. கொஞ்ச நஞ்ச புதுசு இல்லை.. அப்படி புது படமாக போட்டு தள்ளுவார்கள்.. "வணங்கா முடி" "தூக்கு தூக்கி" "மன்னாதி மன்னன்"..இதற்க்கு புதிதாக பார்த்ததாக எனக்கு நியாபகம் இல்லை. ஒரு இத்து போன ரீலை கொண்டு வந்து படுத்தி கொண்டிருப்பார்கள். அதுவும் அத்து அத்து.. 21 ரீல் படம் 210 ரீலாக ஓடிக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து எங்களை காப்பாத்த வந்தது தான் " டி.வி-டெக் வாடகைக்கு" என்று முளைத்த கடைகள். கிராமமே ஆவலோடு எதிர்பார்க்க ஒருநாள் டி.வியும் டெக்கும் (அதாம்பா VCR) ஒரு ப்ளசர் காருல வந்துச்சி (அம்பாசிடர் கார்). டெக்கையும் கேசட்டையும் பார்க்க எல்லாருக்கும் ஒரெ ஆச்சரியம். கோவிலுக்கு தேங்காயெல்லாம் உடைச்சி படத்தை ஒரு 10 மணிக்கு ஆரம்பிச்சாங்க. அப்போவெல்லாம் அந்த ஓட்டை தியேட்டருல இரவு இரண்டாம் ஆட்டம் ஆரம்பித்தவுடனே தான் ஊர்ல எல்லாம் படம் போடணும்னு ஒரு சட்டம் இருந்துச்சு. முதல் ரெண்டு படங்கள் 1. சம்சாரம் அது மின்சாரம். 2.நம்ம ஊரு நாயகன் (யாருன்னு கேக்கறீங்களா...நம்ம ராமராஜன் தான்).

அப்புறம் கல்யாண வீடு, சிவராத்திரி என்று எல்லாவற்றுக்கும் படம் போட்டு விடுவார்கள். ரெண்டு மூனாகி நாலாகி ஐந்து படமாகி நின்றது. சாயங்காலம் 6 மணிக்கே ஆரப்பித்து விடுவேம். காலை 7 மணி வரை மராத்தான் மாதிரி படம் பார்ப்போம்.

பொழுது போகவில்லை என்றால் பசங்க எல்லாம் சேர்ந்து ஒரு நோட்டையும் போனாவையும் எடுத்துக்கிட்டு வீடு வீடாக படம் போடுகிறோம் என்று காசு பிரிக்க கிளம்பி விடுவோம். மொத்தமே ஊரில் 40 வீடு தான். "ஏல ! உங்களுக்கு வேற வேலை இல்லையா. போங்கல !" பாதி வீட்டுல இருந்து இப்படி தான் பதில் வரும். பக்கத்து வீட்டு பாட்டி ஒரு 5 ரூவா கொடுத்துட்டு "ஒரு எம்.ஜி.ஆர் படம் போடுங்கல என்பார். ஆளுக்கு ஒரு படம் என்று ஒரு 20 படம் பட்டியலில் சேர்த்து விடும். காசுக்கு ஏத்த மாதிரி ரெண்டு படமா மூனு படமான்னு முடிவு செய்து படம் தேர்வு செய்ய முடிவு பண்ணுவோம். இங்கே தான் ரொம்ப ரொம்பா கவனமாக இருக்க வேண்டும். இடக்கு மடக்கா படத்த எடுத்துட்டு வந்து போட்டா, வெட்டு குத்தாயிடும். சனங்களுக்கு ஒரு படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்.

1. படம் கிராமத்து படமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டாமை இருந்தால் நல்லது. கொறைஞ்சது ஒரு பண்ணையாராவது இருக்க வேண்டும்.

2. சாமி படம் பரவாயில்லை. ராமநாராயணன் படம் என்றால் அசத்தி விடலாம். பேபி ஷாம்லி, பாம்பு, கொரங்கு இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.

3. காதல் இருக்கலாம். ஆனால் ஒரே காதல் புராணமாக இருக்க கூடாது (காதல், இதயத்தை திருடாதே மாதிரி).

4. துப்பாக்கியை வைத்து டுமீல் டூமீல் என்று எடுத்ததெற்க்கெல்லாம் சுட்டுக்கொண்டிருக்க கூடாது. வேண்டுமென்றால் அருவாளால் வெட்டி கொள்ளலாம்.

5. ரொம்ப விவரமாக பேசுவதாக நினைத்து கொண்டு முக்கி முனகி அத்து அத்து பேச கூடாது (மணிரத்னம் படம் மாதிரி). சொல்ல வந்ததை நேராக தெளிவாக பேச வேண்டும்.

6. 'மன்மத ராசா' மாதிரி குத்தாட்டம், 'உம்மா..உம்மம்மா' மாதிரி கெட்ட ஆட்டம் எல்லாம் இருக்க கூடாது. வேண்டுமென்றால் 'ஒத்த ரூவா' பாட்டு மாதிரி கரகாட்டம் ஆடி கொள்ளலாம்.

7. ஒளிப்பதிவு நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் "ஏண்டா. நாசமா போனவனுங்களா. இந்த கண்ணு எழவு வேற சரியா தெரிய மாட்டேங்குது. என்னல படம் எடுத்துட்டு வத்தீங்க" அப்படின்னு பாட்டியின் பட விமர்சனம் உடனே கிடைக்கும்.

8. கமல்/மணிரத்னம் படம் சுத்தமாக ஆகாது. அப்படி ஒரு அலர்ஜி.

9. கதை புரட்ச்சிகரமாக இருக்க கூடாது .(எங்க ஊரு பாசையில கேனத்தனமா இருக்க கூடாது). உதாரணமா பாலசந்தர் படங்கள் ( கல்கி).

10. "A" ரக படங்கள் ( "உள்ளே வெளியே" "நியூ" ரகங்கள்) தெரியாதனமா போட்டுட்டா படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஊர் சனம் மொத்தமும் எங்களை வஞ்சிக்கிட்டு இருக்கும். "செம்பருத்தி" வந்த புதிதில் ஊரெ 'ரோசா..ரோசா' அப்படின்னு புலம்பிக்கிட்டு கெடக்க, நாங்களும் சரி நாங்களும் என்னதான் அது ரோசான்னு பாக்க படத்தை எடுக்க, ரெண்டு பாட்டு ( "பட்டு பூவே" , "சலக்கு சலக்கு சேல" ) எங்க இமேஜ சுத்தமாக காலி பண்ணி விட்டது. "ஏல ! மதி கெட்ட மூதி (மூதேவி என்பதன் சுருக்கம்) ! படமால எடுக்கறீங்க. காசுன்னு அடுத்த தடவை வாங்க பாத்துக்கறேன்" - 5 ரூவா கொடுத்துட்டு பாட்டி பொரிந்து தள்ளிவிட்டார் .

மேலே சொன்ன விதிகளை மீறாமல், மொத்தமாக ஓட்டை அள்ளிக்கொண்டு வருபவர்கள் கொஞ்ச பேர் தான். ராமராஜன் படங்கள், இயக்குநர் விக்ரமன்/ஆர்.வி.உதயக்குமார் படங்கள், இராம. நாராயணன் படங்கள். கிட்டத்தட்ட எல்லா ராமராஜன் படங்களும் போட்டிருப்போம். இப்படியே பார்த்து பார்த்து, உண்மையிலேயே டவுசர் ராமராஜன் ஒரு நாள் நேரிலேயே வந்து ஓட்டு கேட்க, இந்த ஜனங்களும் ராமராஜனை எம்.பி ஆக்கி சந்தோசப்பட்டது.

இந்த இலக்கணங்களை எல்லாம் மீறி ஒரு நடிகையின் படம் ரெகுலராக எல்லா "திரைப்பட விழா" விலும் இடம் பெறும். அது அடிதடி மன்னி விஜயசாந்தி படம். அதற்க்கு காரணம், துரை மாமா தான். வீட்டில் அத்தையிடம் படாத பாடு படுவார் போல. விஜயசாந்தி படம் போட்டாத் தான் படம் போடவே அனுமதி கொடுப்பார். ஊர் பெரிய மனிதர் கும்பலில் மாமாவும் ஒருவர் என்பதாலும், நாங்களும் குடும்ப படமா பார்த்து ஓய்ந்து போய் விட்டதாலும், நாங்களே ஒரு விஜயசாந்தி படம் எடுத்து விடுவோம்.

இப்ப்டியெல்லாம் போய்க்கிட்டு இருந்த ஊர் சனங்க சந்தோசத்துல மண் அள்ளி போட வந்தது தான் கேபிள் டி.வி. ஓட்டை தியேட்டருக்கும், எங்கள் பட விழாவுக்கும் சுத்தமாக மூடு விழா நடத்தி விட்டது. சனங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து சீரியலை பார்த்துக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காங்க. ஒரு படம் பார்த்தாலும் அவ்வளவு சந்தோசமா இருக்கும். இப்போ 100 சேனல் வந்தாலும், அந்த திருப்தி இல்லையே! காசு பிரிப்பதில் இருந்து படம் போட்டு முடிக்கும் வரை எத்தனை சுவாரஸ்யங்கள்.. ம் ம் ம் ம்.... அந்த காலம் எல்லாம் போச்சு !

9 comments:

குமரன் (Kumaran) said...

சிவா! நல்லா கதை சொல்றீங்க...எந்த ஊரு நீங்க? மதுரை பக்கமா? வஞ்சிக்கிட்டு, மூதி அப்படின்னு எங்க ஊரு பாசையில எழுதியிருக்கீங்க?

rv said...

நல்ல பதிவு சிவ புராணம்...

கிராமத்துல வளரல நான்! இந்த மாதிரி சில விஷயங்கள மிஸ் பண்ணிட்டோமேன்னு இருக்கு..

//"ஏண்டா. நாசமா போனவனுங்களா. இந்த கண்ணு எழவு வேற சரியா தெரிய மாட்டேங்குது. //
இது சூப்பர்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சரளமா எழுதிருக்கீங்க. நல்லாருக்கு.

-மதி

கூத்தாடி said...

சூப்பரு கண்ணா சூப்பரு ..நான் வணங்காமுடி படங்களும் ..டவுசர் பாண்டிப் படங்களும் உங்களை மரரி புண்ணியவானுக்களாலத் தான் பாத்துருக்கேன் ..உங்களுக்கு சொந்த ஊரு இன்னா தூத்துக்குடி ,திருச்செந்தூர் ஏரியாவா

சிவா said...

எல்லா நண்பர்களுக்கும் நன்றி! கூத்தாடி நண்பரே! எனக்கு ஊர் நீங்க சொன்ன மாதிரி திருச்செந்தூர் ஏரியா தான். நாசரேத் பக்கத்துல ஒரு கிராமம். குமரன்! எங்க ஊருலயும் மூதி போன்ற வார்த்தைகள் சகஜம் தான். ஒரு வேளை மதுர காத்து அடிச்சிருக்குமோ என்னமோ?

Anonymous said...

Nice one

Unknown said...

Siva, neenga chanceyeye illanaga......summa kalakuriunga. Especially antha 7th comment....ahhahahahaha....suthaamma....yennal sirrupa addaka mudiyala......unmayileye sollrenga....janaranchaga ezuthalar neenga...Antha 7th comment padichapa...orr gnabgam vantuduthu.....hmm...naan unga rasganunga...

Anonymous said...

Dear Siva,
Nanum oru village brought up dhan.Unga writings padicha udan ennoda andha naal nyabhagam vandhadhae nanbanae nanbanae!!!
With Love,
Usha

Elangovan said...

அகன்ற வெண்திரையில் இரண்டு திரைப்படங்கள் எல்லாம் போட்ட காலம் போயி இப்போ திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சின்னு ஒன்ன ஆரம்பிச்சிருக்காங்க..
இது..

ஆனா இன்னும் மாரியம்மன் பண்டிகைனா எங்க பக்கத்து ஊர்ல ஒரு சரித்திர நாடகமாவது போட்ருவாங்க..
school படிக்கும்போது அதெல்லாம் miss பண்ணாம பார்த்திருவேன்..
இப்போ அதுக்கெல்லாம் டைம் இல்ல..

ஒரு நல்ல பதிவு..

-இளங்கோ