Saturday, October 29, 2005

"முறுக்கு" செல்லையா (தொடர்ச்சி)


இதை படிச்சிட்டு தொடருங்கள்.

தான் பிச்சை எடுக்க வந்திருப்பதை கூட உணராமல், என்னை பார்த்தவுடன் வெள்ளத்தியாய் சிரித்தான் செல்லையா. "யம்மா! இவ என் கூட தான் படிக்கறான்" அவன் அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொண்டான். என் அம்மாவும் குரல் கேட்டு முன்னால் வர, "யம்மா! இது சின்னவரா?. சின்ன வயசுல பாத்தது. நல்லா வளந்துட்டாவ " இது செல்லையாவின் அம்மா. இப்படி பிச்சை எடுப்பவர்கள் வழக்கமாக வருவதால், நலம் விசாரிப்பது எல்லாம் சகஜம் தான். " சரி! வரேன்" சொல்லிவிட்டு அடுத்த விட்டை பார்க்க செல்லையா கிளம்பிவிட்டான். 'மனது என்னவோ போல இருந்தது' என்று சொல்ல எனக்கும் வயசு பத்தாது. நானும் வெள்ளத்தியாய், அவனுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன்.

பள்ளியில் ஒரு நாள், எனக்கும் ராஜாமணிக்கும் ஏதோ கைகலப்பு வர, சண்டையில் அவன் என் சட்டையை பிடித்து இழுத்து விட்டான். ஏற்கனவே இத்து போயிருந்த சட்டை, அவன் இழுத்தவுடன், ட்ர்ர்ர்-னு மொத்தமா கிழிந்து போய்விட்டது. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் போய் செல்லையாவிடம் போய் "ராஜாமணி என்ன அடிச்சிட்டான்ல" என்று முறையிட, செல்லையா கிளம்பிவிட்டான். எனக்கொரு அடியாள் மாதிரியே அவன் இருந்தான். எவனும் என்னை திட்ட கூடாது, அடித்தாலோ அவ்வளவு தான். பாசக்கார பய. இவன் போய் ராஜாமணியை அடிக்கவும், டீச்சர் வகுப்பிற்க்குள் வரவும் சரியாக இருந்தது. அப்புறம் டீச்சர் வைத்த பஞ்சாயத்தில், ரெண்டு அடி கொடுத்து, என் சட்டையயை வீட்டுக்கு போய் தைத்து கொண்டுவர ராஜாமணிக்கு தீர்ப்பு ஆயிட்டு. ராஜாமணி வீட்டிலும் போய் வாங்கி இருப்பான். தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததற்க்காக செல்லையாவும் அடி வாங்கினான். மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் ஆண்டி போல உக்காந்திருந்ததால் நான் அடி வாங்காமல் தப்பித்தேன்.

செல்லையாவின் ஒரு திறமை, அவன் அப்பாவிடம் இருந்து பழைய ரப்பர் செருப்புகளை வெட்டி அழகாக டிராக்டர் சக்கரம் போல அழகாக செதுக்கி, அதற்கு வண்டியும் ஒன்று செய்து கொண்டு வருவான். எங்களுக்குள் சில சமயம் பண்டமாற்று நடக்கும். நான் அவனுக்கும் சிறுவர் கதை புத்தகங்களில் வரும் கதைகளை படித்து வந்து சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் என் அப்பா வேலை பார்க்கும் சைக்கிள் கடைக்கு வெள்ளிக்கிழமை போய்விடுவேன். தினமணிகதிரில் தொடராக வந்த "சூப்பர் தும்பி" தொடரை படித்து வந்து செல்லையாவுக்கு வாரா வாரம் சொல்லிவிட வேண்டும். அதற்கு அவன் செய்த வண்டியை எனக்கு கொடுப்பான். தியேட்டருக்கு வரும் எல்லா படத்துக்கும் விமர்சனம் சொல்லிவிடுவான். 'நான் சிகப்பு மனிதன்'ல ரஜினி 29 கொலை பண்ணுவான்டா. சூப்பர் படம்" இப்படி தான் இருக்கும் அவனது பட விமர்சனம்.

அப்புறம் என் பெற்றோர்களின் ஆசையால், நான் ஐந்து முடிந்ததும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அதற்க்கப்புறம் இன்று வரை செல்லையாவை பார்க்க முடியாமலே போனது. அவன் நினைவுகள் மெல்ல அடிமனதில் தேங்க தொடங்கின......

சென்னை விமான நிலையம். " வரேன்பா" ஆசிரியர் விடைப்பெற்றுக்கொண்டார். நெல்லை விரைவு வண்டியை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊரில் கல்யாண ஏற்பாடு எல்லாம் போய்க்கிட்டு இருப்பது தூரத்தில் இருந்தே தெரிந்தது. அமெரிக்க புராணத்தை எல்லோரிடம் கொஞ்ச நேரம் பாடிவிட்டு, படமெல்லாம் காட்டி கொண்டிருந்தேன். 'நல்லாருக்கியலா. மருமகன. பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்திச்சா? " மாமனார் நலம் விசாரித்துவிட்டு போனார். ஸ்பீக்கரில் "வினாயகனே! வெவ்வினையை வேரருக்க வல்லான்" சீர்காழி தொடக்க பாடலை கணீரென்று பாடிக்கொண்டிருந்தார். ஊர் வாண்டுகள் எல்லாம் ஒடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கல்யாண வீடு களை கட்டிக்கொண்டிருந்தது.

கல்யாணத்திற்க்கு முந்தின மாலை, ஊரில் இருக்கும் அம்மன் கோவில், சுப்ரமணியன் கோவிலுக்கெல்லாம் மேள தாளத்தோடு ஒரு ரவுண்ட் விட்டுட்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பந்தல் போட்டுக்கொண்டிருக்கும் முகம் ரொம்ப பழகிய முகமாக படவே, போய் பார்த்தால், அது செல்லையா. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனாலும், அந்த முகம் செல்லையா தான் என்று உடனே மனதில் பட்டது.

கிட்ட போய் "ஏல! செல்லையா! எப்படி இருக்கற. என்ன நியாபகம் இருக்குதா" . என்னை அடையாளம் கண்டு கொண்டவன் "நீங்களா! நல்லா இருக்கீங்களா?. ஆளு மாறவே இல்ல. அப்படியே இருக்கீங்க. அமெரிகாவிலா இருக்கீங்க. எல்லோரும் சொன்னாங்க. நல்லா இருக்கியல்லா?" . வார்த்தைக்கு வார்த்தை "ங்க" சேர்த்து கொண்டான். அவனின் "ங்க" வில் அவன் சொல்ல வந்தது ஒன்று மட்டும் புரிந்தது. "நாம் இருவரும் வளர்ந்துவிட்டோம்! ஜாதி, அந்தஸ்து என்னும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்துவிட்டது. " சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான் 'முறுக்கு' செல்லையா.

அவன் அன்று ஓசியில் எனக்கு கொடுத்த அஞ்சு பைசா முறுக்கின் ருசி லேசாக நாக்கில் வந்து போனது.

(முற்றும்).

18 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாக மனதில் பதியும்படி எழுதி இருக்கீங்க சிவா.

-மதி

குமரன் (Kumaran) said...

சிவா, காத்திருந்து இரண்டாவது பாகத்தையும் படித்துவிட்டேன். ஜாதியும் அந்தஸ்தும் ஒருவனுக்கு எவ்வளவு துணை செய்கிறது என்பதை மேல் சாதி என்று கருதப்படும் சாதிகளில் பிறந்து இன்று முன்னேறி நிற்கும் நண்பர்கள் உணர வேண்டும். உணர்ந்து அவ்வாறு நம் சமூக பொருளாதார அமைப்பில் கீழே இருக்கும் சாதியில் பிறந்த நம் உடன்பிறப்புகள் முன்னேற நம்மால் முடிந்த அளவு வழி வகைகள் செய்ய வேண்டும்.

நீங்கள் இங்கு எழுதியிருப்பது உங்கள் கற்பனையில் தோன்றியதல்ல; நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்த்தது என்பது தேவையில்லாத திடுக் திருப்பங்கள் இல்லாமல் எழுதியிருப்பதிலேயே தெரிகிறது. நீங்கள் எழுதியுள்ள கடைசி வரி தான் இன்னும் நம் சமுதாயத்தில் நிதர்சனம்.

பாட்டுக்கொரு புலவன் பாடியதை நாம் எப்போதும் நினைவில் வைத்து நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ramachandranusha(உஷா) said...

நாம் படித்தக்காலத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு இல்லாமல் எல்லாரும் ஓரே அரசு பள்ளியில் படித்தோம். அதனால் பிறகு இத்தகைய குற்றமனப்பான்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. என்னுடன் படித்த, நெருங்கிய தோழி, பதினாறு வயதில் கல்யாணம் ஆகி, நான் கல்லூரி படிப்பு முடிக்கும்பொழுது, கையில் ஒன்று வயிற்றில் ஒன்று என்று என்னால் அவளை சந்தித்தப் பொழுது பேசவே முடியவில்லை.
இப்பொழுது அந்த பிரச்சனையில்லையே :-)
நிறைவான பதிவு. நல்லவேளை செல்லையா பிச்சை எடுக்காமல், தொழில் செய்கிறான்.

தங்ஸ் said...

Very nice!!

துளசி கோபால் said...

சிவா,

அருமை. முறுக்கு இப்ப ஏதோ வேலை செஞ்சு வாழ்க்கை நடத்தறது சந்தோஷம்தான். பிச்சை எடுக்கலைல்லே?

இப்படி இன்னும் எத்தனை செல்லையாங்க படிக்க வசதி இல்லாம ஜாதியிலே மாட்டிக்கிட்டு இருக்காங்க.
ஹூம்......

Thekkikattan|தெகா said...

சிவா என்ன பெத்த ராசா, கரிசக் காட்டு கடுதாசி எழுதற கி.ரா_வா தூக்கி அந்தாண்ட வச்சுப்புட்டியே ராசா. நான் இத படிச்சுப்புட்டு பின்னுட்டமிடாம போன நானும் ஒரு மனுசனான்னு நினைச்சேன் எழுதிப்புட்டேன், ஒரு ஒட்டும் போட்டு புட்டு போரேல்ல...நல்ல இருல.

சிங். செயகுமார். said...

நினைவுகள் சுகம்
இதனை கதையயாய்
நினைக்க முடியவில்லை
அழகான நடையில் அடுத்த தலைமுறைக்கு
இதோ ஓர் எழுத்தாளன்!
வாழ்த்துக்கள் சிவா..வளரட்டும் உம் பணி(எழுத்தாளர் சிவா -வை தெரியுமா?---டேய் என்னோட பிரென்டுதாண்ட அவரு)

-L-L-D-a-s-u said...

மனதை கனமாக்கிய எழுத்து ..

சிவா said...

எல்லா நண்பர்களுக்கும் நன்றி. ரொம்ப அதிகமாகவே புகழ்ந்து விட்டீர்கள் :-). நினைவுகளை பதிவது சுலபம். கதை சொல்வது தான் கடினம். நான் இங்கே பதிந்தது என் நினைவுகள். இதில் செல்லையாவும் நிஜம், நானும் நிஜம், அந்த முறுக்கும் நிஜம். அது உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி

Ramya Nageswaran said...

நல்லா எழுதியிருக்கீங்க, சிவா. ஆரம்ப பள்ளி ஆசிரியரை ப்ராங்பர்ட் விமான நிலையத்தில் சந்திக்கிறது ஒரு விதமான நிஜம். கூட படித்த நண்பன் வாழை இலை கட்டுபவனாக சந்திப்பது இன்னோரு விதமான நிஜம்.

Ramya Nageswaran said...

'இலையை' 'மரம்' என்று படியுங்கள்!

Anonymous said...

செல்லையாவுக்கு ஏதாவது தொழில் தொடங்க உதவியிருக்கிறீர்களா? அவனால் உங்கள் மனதுக்கு கிடைத்த சந்தோஷத்துக்கு பதிலுபகாரம் செய்திருக்கிறீர்களா?
- வலைப்பூவினன்

குமரன் (Kumaran) said...

வலைப்பூவினன் மிக நல்ல கேள்வி கேட்டுள்ளார்....அந்த கேள்வி சிவாவிற்கு மட்டும் அல்ல...நம் எல்லோருக்கும் தான்....நாம் ஏதாவது இந்த மாதிரி சூழ்நிலையில் செய்துள்ளோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

சிவா said...

வளைப்பூவினன், நான் சொன்னது போல், நான் செல்லையாவிடம் பேசியதில் அவன் ஊர் பஞ்சாயத்தில் வேலை பார்ப்பதாகவும், நேரம் கிடைக்கும் போது பந்தல் போடும் வேலையும் செய்வதாக கூறினான். கல்யாணம் ஆகிவிட்டதாகவும், வாழ்வில் நல்லா இருப்பதாகவும் சொன்னான். அவனை பார்த்த அடுத்த நாள் எனது கல்யாணம். வருவேன் என்றவன் வரவில்லை. அடுத்து ரெண்டு நாளில் நான் அமெரிக்கா வந்துவிட்டேன். அதற்க்கப்புறம் அவனைப் பார்க்க முடியவில்லை. இந்த முறை போகும் போது பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு ஒரு பதிவோடு உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்.

நானும் என்னால் முடிந்ததை சிலருக்கு செய்துகொண்டு தான் இருக்கிறேன். என் நண்பர்களுக்கு தெரியும். :-)

Anonymous said...

nanraai ezuthi irukkiReerkaL sivaa...

Unknown said...

Solla Vaarthauigal Illai...Nanbragal Palraum munnamey solli vitaargal.

Nalla pathivu.

பத்மா அர்விந்த் said...

செல்லையா
மனதை தொட்ட பதிவு.இதேபோல செல்வநாயகி கூட முன்பு நெகிழவைக்கும் வண்ணம் எழுதி இருந்தார்கள்.

சிவா said...

தேன் துளி அவர்களே! வருகைக்கு நன்றி! செல்வநாயகி எழுதிய கதை/ப்ளாக் லிங்க் இருந்தால் கொடுங்கள். பார்க்க ஆவலாய் உள்ளேன்.