மூனு நாளா ஒரே உருக்கமா எழுதறேனா :-),கொஞ்சம் ஜாலியா ஏதாவது எழுதலாம்னு இந்த பதிவு. நம்ம ஊர் புராணம் தான். நம்ம பொழப்பே அப்படி தானே ஓடுது. எங்கள் குருகுலம் பற்றி நிறைய இந்த இரண்டு பதிவிலும் சொல்லியிருக்கேன், இன்று இன்னும் சில.
மணம் - 1 ; மணம் - 2
குளம், ஏரி எதுவும் இல்லாத கிராமம் எங்க கிராமம். நீச்சல் தெரியலன்னா மனுசனாகவே மதிக்க மாட்டானுவ. அப்புறம் நீச்சல் கத்துக்கறது எல்லாமே கெணத்துல தான். கற்றுக் கொடுப்பது...அதே தான்...பீட்டர் அண்ணன். அப்போ வீட்டுக்கு வீடெல்லாம் போர் கெடையாது. தடுக்கி விழுந்தா கெணத்துல தான் விழணும். அப்படி அடிக்கு ஒரு கெணறு இருக்கும். அதுல பாதி மொட்ட கெணறா இருக்கும். குடிகார பயலுவ ரோட்டுக்கும் கெணத்துக்கும் வித்தியாசம் தெரியாம, கெணத்தில விழுந்து தெளிஞ்சி எழுந்து வந்த கத நெறைய நடந்திருக்கு. விழுந்தா ஏறி வர, படி இருக்கும். கெணத்துல தண்ணி இருக்குமான்னு கேக்காதீங்க. அது ஒங்க நேரத்த பொருத்தது.
மழை காலத்துல கெணத்துல தண்ணி கைல எட்டுற அளவுக்கு மேல வந்துடும். மேல இருந்து வெறும் அஞ்சு அடில தண்ணி கெடக்கும். கிணற்றில் ஊற்று எல்லாம் அருவி மாதிரி கொட்டும். அது தான் நாங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் காலம். இடுப்புல ஒரு சின்ன கயித்த கட்டி தண்ணில தள்ளி விட்டுடுவான். எமன் கைல இருக்குற பாசக்கயிறு மாதிரி தான். இப்போ நம்ம உயிரு அண்ணன் கைல. கயிற விட்டான்னா, நேரே சொர்க்கம் தான். நம்ம புள்ளைங்க சோபாவுல இருந்து விழுந்தாலே நமக்கு 'ஐயோ'ன்னு ஆகுது. 100 அடி தண்ணில நீச்சல் தெரியாம நம்மை அனுப்ப அம்மா-அப்பாவுக்கு மனசு வந்திருக்கே. அதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம், பீட்டர் அண்ணன் திறமையை. கப்புன்னு ரெண்டு மடக்கு தண்ணிய குடிச்சிட்டு தரைய நோக்கி பயணம் புறப்பட்டோம்னா, பீட்டர் அண்ணன் பாய்ந்து வத்து தூக்கிடுவான்.கயிறு எல்லாம் ரெண்டு நாள் தான். மூனாவது நாள், நீச்சல் அடித்துக்கொண்டிருப்போம்.
ஊர்ல இருக்கிற தோட்டத்தில் எல்லாமே பெரிய பெரிய கெணறுங்க. நீச்சல் குளம் பெரிசு இருக்கும். அங்கே அடிக்கடி குளிக்க போவோம். ஒரு நாள் போய் கெணத்தில குதிக்கலாம்னு போய் எட்டிப்பாத்தா, கெணத்துல தண்ணி இல்ல. நேத்து தான மேல வரைக்கும் தண்ணி கெடந்துச்சி. ஒரே நாளில் தோட்டத்திற்கு பாய்த்து காலி பண்ணிவிட்டார் தோட்டக்காரர். வெறும் 15 அடி தான் தண்ணி கெடந்தது. குதிச்சிருந்தா அவ்ளோதான்.
அந்நேரம் பார்த்து தூரத்தில் என்னோட கூட்டாளி செந்தில் வந்து கொண்டிருந்தான். நேத்து நான் பாத்து வச்சிருந்த தக்காளி செடிய புடிங்கிட்டு போய்ட்டான். அவனை பார்த்ததும் நான் பீட்டர் அண்ணனிடம் 'யண்ணே! செந்திலு நா பாத்து வச்சிருந்த செடிய புடிங்கிட்டு போய்ட்டான்'னு புகார் சொல்லிக்கொண்டிருந்தேன். 'அப்படியால பண்ணுனா அவன்.' ஏதாவது அவன பண்ணனும்னு ஒரு திட்டம் போட்டோம். அவன கிணத்துக்குள்ள தள்ளி விடுறதுன்னு..
நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கெணத்து பக்கத்துல போய் நின்னுக்கிட்டோம். செந்தில் வந்தவுடன் 'ஏல! நான் வரதுக்கு முந்தியே குளிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. நானும் வரேன்ல' அப்படின்னு சொல்லி சட்டையை கழட்டி வச்சிட்டு ஓடி வந்து கெணத்த பார்க்காமலேயே கெணத்தில் குதித்தான். கொஞ்ச நேரம் கழித்து தொபுக்கடீர்னு ஒரு சத்தம். நாங்க எல்லாம் ஓடிப்போய் எட்டி பார்த்தோம். பையன் ஒழுங்கா குதித்ததினால் தப்பிச்சான். மேல ஏறி வந்து எங்களுக்கு செம திட்டு. அதுல இருந்து கெணத்த எட்டி பாக்காம குதிக்க மாட்டான்.
-----------------------------------------------
ஊர்ல எங்க பாத்தாலும் ஒரே ஒடங்காடு தாங்க (முள் மரம்). குருவி கூடு, தேன் கூடு என்று நிறைய பார்க்கலாம். புட்டான் பிடிக்க அலையும் போது, சில நேரம் தேன் கூடு ஏதாவது கண்ணுல மாட்டிக்கும். அப்புறம் என்ன, தேன் கூட்ட பாத்த கரடி மாதிரி தேனுக்கு சுத்தி சுத்தி வருவோம். நாம பாத்து வச்சத வேற எவனாவது தின்னுட்டு போய்ட கூடாதேன்னு, அதை மறைக்க ஏதாவது அள்ளி போட்டு மறைச்சிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்குவோம்.
எப்படி தேன் கூட்டில் கை வைக்கிறது. தேனீ கிட்ட கொட்டு பட்டுருக்கியலா. சும்மா சின்னதா எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கும். சும்மா வீங்கி வலி பிண்ணிடும். அது கூட பரவாயில்லை. சுண்ணாம்பு எதையாவது தடவி சரி பண்ணிக்கலாம். ஆனா, நம்ம மானம்னு ஒன்னு இருக்கே. மூஞ்சில வெளையாட்டு போய்ட்டுன்னு வச்சிக்குங்க, அப்புறம் வெளிய தல காட்ட முடியாது. ஊரே சிரிக்கும். ஒரு முக்காட போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கனும்.
அதானால நானும் என்னோட கூட்டாளி செந்திலும் சேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா தான் தேன் கூட்டுல கை வைப்போம். மொதல்ல இன்னைக்கு அம்மாவாசையான்னு பாத்துக்குவோம். அம்மாவாசை அன்னைக்கு தேனை எல்லாம் குடிச்சிடுமாமே..ஒங்களுக்கு தெரியுமா?. அப்புறம் அம்மாவாசை இல்லன்னா, தேன் கூட்டுக்கு நாள் குறிச்சிடுவோம். அன்று செந்தில் ஒரு கண்டுபிடிப்போடு வந்தான். 'ஏல! எங்க ஆச்சி சொன்னாங்க. ஈச்சிக்கு வெங்காய வாசம் புடிக்காதாம்ல. நாம வெங்காயத்த சவச்சி ஊதுனா தேனீச்சி எல்லாம் ஓடிடும். நாம நிம்மதியா தேன் எடுக்கலாம்'. நீங்க Warner Bros 'Lonely Tunes' cartoon பாத்திருக்கீங்களா..அதுல எறும்பு எல்லாம் பொருள் எடுத்து செல்லும் போது 'Hold Onion' அப்படின்னு சொல்லிட்டு ஆனியனை விட்டுட்டு போய்டும். நானும் ஒரு வேளை பூச்சிக்கெல்லாம் வெங்காயம்னா அலர்ஜின்னு நெனைச்சி ஒரு அஞ்சி சின்ன வெங்காயத்த எடுத்துக்கிட்டு தேன் எடுக்க கெளம்பினோம்.
நான் ஒரு 3 வெங்காயத்த வாயில போட்டு சவச்சிக்கிட்டே தேன் கூட்டு பக்கம் போனோன். கொஞ்சம் பயமா தான் இருந்தது. செந்தில் பாதுகாப்பா தள்ளி நின்னுக்கிட்டான். சரி கடவுளை வேண்டிக்கிட்டு 'ப்ப்பூ' அப்படின்னு ஊதி பாத்தேன். தேனீ ஒன்னும் அசையற மாதிரி தெரியலை. 'லே! இன்னும் பக்கத்துல போய் ஊதுல. நீ ஊதுறது கூட்டுல படவே மாட்டேங்குது' அப்படின்னு செந்தில் தூரத்துல இருந்து கத்தினான். நானும் கொஞ்ச கொஞ்சமா நெருங்கு கூட்டு பக்கத்துல வந்துட்டேன். நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிபடாத வெங்காயம் வாயில இருந்து ஸ்லிப் ஆகி நேரே கூட்டை போய் தட்டிட்டு. அவ்வளவு தான். எவனோ கல்ல வுட்டு தான் எறிஞ்சிட்டான்னு நெனைச்சி தேனீ எல்லாம் பாய்ந்து வந்து என் மூச்சில கோலம் போட்டுடுச்சிங்க. ரெண்டு நாளா வெளிய தல காட்ட முடியல.
அப்புறம் அஹிம்சா முறையை எல்லாம் விட்டுப்புட்டு கடுப்புல கல்ல விட்டு எறிஞ்சே கூட்ட காலி பண்ணிடறது. இல்லன்னா புகைய காட்டி எல்லா தேனீயையும் காலி பண்ணிட்டு தேன் திம்போம். சில நேரம் புகை காட்டுறோம் என்று காட்டையே கொளுத்தி விட்டிருக்கோம். ஆனா அத்தனை தேனீச்சையும் கொன்னுட்டு தேனை தின்னுட்டு வந்தது ரொம்ப கவலையா போச்சி. அடுத்த கூட்டுக்கு இன்னொரு ஐடியா வந்தது.
கொஞ்சம் பாலிதீன் கவரை எடுத்துக் கிட்டோம். இப்போ கண்ணுக்கு தெரியற மாதிரி ரெண்டு ஓட்ட போட்டுக்கிட்டு தலைல ஒன்ன கட்டிக்கிட்டோம். கை ரெண்டுக்கும் பாலிதீன் கவர சுத்திட்டு, வீட்டுல ஒரு போர்வைய சுத்திக்கிட்டு வேட்டைக்கு கிளம்பினோம். ரொம்ப தைரியமாவே தேன் கூட்டு பக்கத்துல போய் நின்னு கைய வச்சே கலச்சி வுட்டோம். சுத்தி தேனீச்சி 'ங்ஙே' அப்படின்னு ஆயுது. ஆனா கொட்ட முடியாதுல்லா. கூட்டில இருக்கிற தேனை மட்டும் காலி பண்ணிட்டு வந்துட்டோம்.
அப்புறம் தான் இன்னொரு ஐடியா வந்தது. ஐடியா கொடுத்தது செந்தில் தான் 'ஏல! ராணி தேனீய புடிச்சிட்டு வந்தா, எல்லா தேனீயும் பின்னாடியே வந்திருமாம்ல. அப்புறம் ராணிய வீட்டுல கெட்டி போட்டுட்டா, எல்லாம் அங்கேயே கூடு கட்டுமாம்ல. நமக்கும் இப்படி தேன் திங்க காடு காடா அலைய வேண்டியது இல்லை'. ராணிய புடிக்கிறதுன்னு, ஒரு நாள் ரொம்ப பொறுமையா (கவசத்தோட தான்) கூட்டு பக்கத்துல ஒக்காந்து பெரிசா இருக்கிற ஒரு தேனீய புடிச்சி ஒரு டப்பால போட்டு கொண்டு வந்துட்டோம். எல்லா தேனீயும் பின்னாடியே பறந்து வரும்னு பார்த்தா ஒன்னையும் காணோம். பீட்டர் அண்ணன் தான் வந்து திட்டினான் 'ஏல! ராணி தேனீய புடிச்சி வச்சிட்டு என்னல பண்றீங்க, அதுக்கு தேன் எடுக்க நீங்களால போக போறிங்க. தொறந்து விடுங்கல'. மனசே இல்லாம தொறந்து விட்டோம்.
அவனே எல்லா வித்தையையும் கத்து கொடுத்தான். சொன்னா நம்ப மாட்டீங்க. நாங்க எல்லோருமே கவசமே இல்லாம தேன் கூட்டுக்கிட்ட போய் கைய வச்சே தேனீய எல்லாம் தள்ளி விட்டுட்டு தேன் எடுக்க ஆரம்பிச்சோம். அமைதியா ஆடாம செஞ்சா ஒரு கொட்டு கூட வாங்காம தேன் எடுக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், அருவாள கொண்டு போய் கொம்போட வெட்டி கைல கூட்டை (தேனீ கலையாமலேயே) தூக்கிட்டு வருவோம். வந்து வீட்டு பின்னாடி ஒரு நல்ல மரமா பாத்து கூட்டோட ஏறி ஒரு கொம்புல கட்டி வச்சிடுவோம். தேன் வேணும்னு தோனிச்சின்னா, ஒரு தட்டையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு மரத்துல ஏறி தேனை மட்டும் எடுத்து வருவோம். அப்படி வீட்டுக்கு ரெண்டு மூனுன்னு தேன் கூடு கட்டி வச்சிருப்போம். இப்போ அந்த தைரியம் வருமான்னு கேட்டா...இல்லை..சத்தியமா இல்லை.
32 comments:
சிவா
ஏன் கிணத்து நீச்சலோடவே நிப்பாட்டீட்டீங்க? கடம்பா குளத்துலே அடிச்சதில்லையா? ஓகோ, ஒருவேளை அடுத்த பதிவு, குளத்து நீச்சலும், மீன் பிடித்தலும் பற்றி இருக்குமோ?
'ஏல! ராணி தேனீய புடிச்சி வச்சிட்டு என்னல பண்றீங்க, அதுக்கு தேன் எடுக்க நீங்களால போக போறிங்க. தொறந்து விடுங்கல'// :-))))))
சூப்பருங்க. மண்ணின் மணம் வீசும் நினைவுகள்
தேன் கூடு கதை நல்லா இருக்கு சிவா. :-)
தாணு! குளம், மீன் இந்த ரெண்டு தாங்க நான் கொஞ்சம் மிஸ் பண்ணி இருக்கிறேன். கடம்பா குளத்தை தூரத்தில் நின்னு பார்த்ததோடு சரி! ஆழ்வார்தோப்புல சித்தி வீட்டுக்கு போனா, ஆத்துல வாய்கால்ல குளிப்பதுண்டு. அது கோடை விடுமுறையில் மட்டும் தான். பசங்க கூட மீன் பிடிக்க சுத்தி இருக்கிறேன். ஆனா முழு நேரம் செய்தது கிடையாது. ஊர்ல இருந்து குளம் எல்லாம் தூரம். அவ்வளவு தூரம் எல்லாம் சுற்ற விடுவதில்லை :-))
நீங்க ஒரு பதிவு போட்டுடுங்களேன். :-))
உஷா! என்னோட கிராமத்து பதிவுக்கு வந்து தவறாம ஒரு ஸ்மைலி போட்டுட்டு போய்டுவீங்க :-))) நன்றி
//** சூப்பருங்க. மண்ணின் மணம் வீசும் நினைவுகள் **// நன்றி கோபி.
//** தேன் கூடு கதை நல்லா இருக்கு சிவா. :-) **// நன்றி குமரன். நீங்க தேன் எடுத்திருக்கியலா?
//குமரன். நீங்க தேன் எடுத்திருக்கியலா?//
இல்லை சிவா. பாட்டில் தேன் தான் எனக்கெல்லாம் தெரியும். :-)
இங்கே கிணறு என்றால் நமக்கு குளம். கோட்டம் போடுவது ரொம்ப பேமசு.தண்ணிரில் மூழ்கி எதிராளியை தொடுவது.கண்கள் சிவக்கும் வரை ஆட்டம்தான்.ஒரு நாளைக்கு மூன்று தடவை குளத்தில் குளித்த நான் பின்னாளில் குளத்தில் குளித்தே ஏழெட்டு வருஷம் ஆச்சு.தேன்கூடு விஷயமும் அப்பிடியே நம்ம ஊருதான்.கிராமிய மணம் கமழும் இந்த பதிவு பார்க்கையில் பழைய ஞாபகங்கள் சிறகடிக்கிறதே!
இந்த கதை சொல்ற கலை எங்க ராசா கத்துகிட்டீங்க!
சிவா, எங்க கொளக்கட்டாங்குறிச்சி புதூர்ல ஒரு வட்டக்கெணறு உண்டு. ஊர்ப்பயக பொண்ணுக எல்லாம் அங்கதான் நீச்சப் பழகுறது.
நாம பட்டணக்கரையில்லையா...(அட தூத்துக்குடியத்தான் சொன்னேன்) அப்பப்பா லீவுக்குதான ஊருக்குப் போவோம். ஆனா எனக்கோ நீச்சத் தெரியாது.
ஒரு வாட்டி அப்பா என்னைய நீச்சக் கத்துக்குடுக்க கெணத்துக்குக் கூட்டீட்டுப் போனாங்க. சின்னப்பய நானு. டின்ன முதுல கட்டி தண்ணிக்குள்ள தள்ளி விட்டாங்க.
நா குய்யோ முய்யோன்னு கத்திக் கதற்றேன். அந்நேரம் பாத்து எங்க சின்னதாத்தா சரியா அங்க வந்தாரு.
அப்பாவுக்கு பயங்கர திட்டு..கொலகாரா பிள்ளையக் கொல்லப் பாக்கியேன்னு....திட்டீட்டாரு.
அப்பாவும்...படிச்சாப் படீன்னு...விட்டுட்டாரு. அத்தோடு போச்சு நீச்சலாரம்பம்.
"மணம் - 1 "
நீச்சல் பற்றிய கதை வாசிக்க நல்லா
இருந்திச்சு சிவா.
"நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிபடாத வெங்காயம் வாயில இருந்து ஸ்லிப் ஆகி நேரே கூட்டை போய் தட்டிட்டு. அவ்வளவு தான். எவனோ கல்ல வுட்டு தான் எறிஞ்சிட்டான்னு நெனைச்சி தேனீ எல்லாம் பாய்ந்து வந்து என் மூச்சில கோலம் போட்டுடுச்சிங்க. ரெண்டு நாளா வெளிய தல காட்ட முடியல."
இதை கற்பனைக் கண் முன் நிறுத்திப் பார்த்தேனா... ஒரே சிரிப்பு. ம்...வாய் விட்டுச் சிரித்தேன்.
நன்றி சிவா.
சிவா, நகரவாசிகளான எங்களையெல்லாம் ஏங்க வைக்கும் ஆக்கம்.
தமிழ்மணத்தில் ஒருகாலத்தில் ஒரே மாயவரம் மணம் வீசியது. இப்போது சில வாரங்களாக தென்பாண்டி மணம் வீசுகிறது. Discovery/ National Geography channelsஐ விட தமிழகத்தை தமிழ்மணம் மூலம் (சொற்களால்) காணமுடிகிறது. ஆனால் உங்கள் முந்தைய பதிவில் கூறியபடி இக்காட்சிகள் பழங்கதையாவது வருத்தமளிக்கிறது.
ஏனுங் சிவாண்ணா
அப்பிடியே கிராமத்து வாழ்க்கையயும், அதுல இருக்கற சந்தோஷத்தயும் கண்ணு முன்னால கொண்டாந்து நிறுத்திட்டிங்க போங்க..!!... நெம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க படிக்கறதுக்கு....!!
எங்கூர பத்தியும் யாரச்சும் எழுதினா எத்தனை நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குதுங்க..!!. நீங்க மேல மேல நெறய எழுதோனும்னு என்ற வாழ்த்துக்களுங்க...
நேத்துதான் உங்க வலைப்பதிவுக்கு மொதல்ல வந்தனுங்க... பூராத்தையும் ஒரே மூச்சுல படிச்சுப் போட்டனுங்க...!!!
அன்புடன்
காஞ்சனா
சிவா,
அப்ப்டியே பொண்வண்டு (தீபெட்டி அடைத்து) கதையையும் சொன்ன நல்லது. ஒருவேளை உங்க பக்கம் famous இல்லயா ?
குளத்துல நீச்சல் அடிச்சி தாமரை தண்டுல காலு மாட்டி கதய யாரவது சொன்ன நமக்கும் கூட்டாளி இருக்குனு :-)
என்ன சொல்ல எல்லாம் கொசுவத்தி தான்
தம்பி சிங்! தண்ணிக்குள்ளேயே ஓடி புடிச்சி வெளையாண்ட கதைய சொல்றீங்க. இப்போ தரையிலேயே எவனும் ஓடி வெளையாட மாட்டேங்கிறான் :-))
தேனீ கிட்ட நீங்களும் கொட்டு பட்டுருக்கிய போல :-))
//** இந்த கதை சொல்ற கலை எங்க ராசா கத்துகிட்டீங்க! **// :-) நா எங்கப்பு கதை சொல்லறேன். அதுவா வருது :-)). உங்களுக்கு புடிச்சிருந்தா சரிதாங்கறேன்.
ராகவன்! முதுகுல டின் கட்டறதுன்னா அது தானா.. :-)). தூத்துக்குடின்னு சொல்றிய..கடல்ல முங்கி முத்தெடுப்பியன்னுல்லா நெனைச்சிருந்தேன்.. பாத்துப்பு..நீச்சல் தெரிஞ்சி வச்சிக்கோங்க..சென்னைல மழை காலத்துல தேவைப்படும். :-)).
சத்தியா! பாராட்டுக்கு நன்றி! வெங்காயத்தை அன்னைக்கோட விட்டுட்டேங்க. :-)
மணியன்! ஆமாங்க போன வாரம் ஆறுமுகனேரி தாணு..அதுக்கு முந்தின வாரம் மருத குமரன்..அதுக்கு முந்தி அதே மருத முத்துகுமரன்..இப்போ நானு..தெக்கே வீசுது காத்து..ஒங்களுக்கு ஊர் கத புடிச்சிருக்குல்லா.. :-))
//** இக்காட்சிகள் பழங்கதையாவது வருத்தமளிக்கிறது. **// ஆமாங்க இப்போ உள்ள பயலுவ ஒன்னத்துக்கும் ஆவ மாட்டானுங்க..மட்டைய தூக்கிட்டே அலையறானுவ..ஆக்கங்கெட்ட பயலுவ (சும்மா தான்) :-)))
அல்லி மகன் (பேரு நல்லாருக்குதுய்யா), முறுக்கு செல்லையா வரை தேடி படித்ததுக்கு நன்றிய்யா. உங்க பாராட்டுக்கு நன்றி. எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா..தாங்ஸ்ப்பு :-))
காஞ்சனா! முதல் வருகைக்கு நன்றி!
//** நெம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க படிக்கறதுக்கு....!! **// எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க..இப்படியெல்லாம் உங்க வாயால கேக்கறதுக்கு. நன்றிங்க.
//** எங்கூர பத்தியும் யாரச்சும் எழுதினா எத்தனை நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குதுங்க..!!. **// நீங்களே எழுதுங்களேன். ப்ளாக்கர் உருவாக்க உதவி தேவைப் பட்டால் சொல்லுங்க.
//** பூராத்தையும் ஒரே மூச்சுல படிச்சுப் போட்டனுங்க...!!!**// ஏனுங்க அம்மணி, ஊரு கோயமுத்தூருங்களா.. :-))
கார்த்திக்! நெசமாவே அந்த பொண்வண்டு கத தெரியாது..நீங்களே சொல்லிருங்க.
//** என்ன சொல்ல எல்லாம் கொசுவத்தி தான் **// அப்படியே கொசுவத்திய சுத்த வேண்டியது தானே :-)
வாங்க பாரதி!
//** கிணற்றில் குதித்த கதை கேட்ட போதும், தேன் வேட்டைக்குச் சென்று வீரத்தழும்புகள் பெற்ற போதும் சிவாவாக நானிருந்தேன் **// கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்குங்க. ரொம்ப நன்றி பாரதி..
//** ஹாரிபாட்டர் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்து விட்ட நகரத்துச் சிறுவன் போல் **// :-))
சிவா,
பொண்வண்டுனு ஒரு பூச்சி இருக்கு. கருவேலம் காட்டுல இருக்கும். புடிக்குரது ரொம்ப கஷ்டம். அதை ஒரு தீபெட்டியில் வச்சிகிட்டு சுத்துரது ஒரு கிரேடு.மத்த சகாக்கள்குள்ள அத வாங்குரதுக்கு பெரிய்ய அடிதடியே நடக்கும்
trade in value
பொண்வண்டு = 2 to 3 Marlboro சிகரெட் அட்டை
//நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கெணத்து பக்கத்துல போய் நின்னுக்கிட்டோம்.//
ஆஹா உங்ககிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல :)
தேன்கூடு சூப்பர். :)
கார்த்திக்! இந்த பொண்வண்டு விசயம் நாங்க செய்தது இல்லைங்க. மத்தப்படி அந்த Trade in Value எல்லாத்திலும் உண்டு..புட்டான் புடிக்கிறதுல இருந்து :-)).
சிகரெட் அட்டை தானே...நான் முதலில் வாசிக்கும் போது பயந்துட்டேன் :-))) (சும்மா)
கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறியலா
:-)).
செந்தில் நம்ம நண்பன் தான். இப்பவும் இப்படி நிறைய பேசிக்கொண்டிருப்போம் :-))..ஹும்..அதெல்லாம் அந்த காலங்க..நெனைச்சா ஏக்க பெருமூச்சு தான் வருது
சிவா நானும் உங்க அளவிற்கு கிராமத்தில் கிராம சுகம் (கஷ்டங்கள்) அனுபவித்தவன் தான். பிறகு எழுதுகிறேன். அந்த கலங்களில் எந்த பொருளையும் வீணாக்க மாட்டார்கள். வேட்டி கிழிந்தால் துண்டு துண்டு கிழிந்தால் கோவணம்.
காய் மீதமிருந்தால் வத்தல். பனையில் சோறாக்கி தண்ணீர் உற்றி வைத்திருந்து காலையில் திறந்து பார்த்தால் வருமே வாசம் அது தானய்யா தேவாமிருதம் அதுவும் காட்டில் வேலைசெய்து விட்டு தாயோ தாரமோ கொண்டு வருவார்கள் இல்லையா? ஒரு பாசத்துடன் 'ஐயோ பசியோடு இருப்பாகளே' என அந்த பாசம் தானய்யா உண்மையான பாசம் அதில் மீத சோற்றை அவர்கள் சாப்பிடுவார்கள் பாருங்கள் அந்த சுகமே அலாதியப்பா.
என்னார்! அழகா அருமையா சொல்லிட்டீங்க. கஷ்டம் இருந்தாலும் சுகமா இருந்த காலம். எந்த ஊரு நீங்க? சொல்லுங்க.
//** வேட்டி கிழிந்தால் துண்டு துண்டு கிழிந்தால் கோவணம்.
காய் மீதமிருந்தால் வத்தல் **// உண்மை.
பழைய சோறும், வெங்காயமும் தேவாமிர்தம். பசித்து தின்றால் அந்த சுவையே தனி தான்.
//** காட்டில் வேலைசெய்து விட்டு தாயோ தாரமோ கொண்டு வருவார்கள் இல்லையா? ஒரு பாசத்துடன் 'ஐயோ பசியோடு இருப்பாகளே' என அந்த பாசம் தானய்யா உண்மையான பாசம் **// 100% உண்மை என்னார்.
//கீதா! ஹாஹாஹா! நீச்சல் தெரியுமா..எங்க ஊருக்கு வறியலா
:-)). //
எனக்கு நீச்சல் தெரியாது.. தெரிஞ்சாலும் வரமாட்டேன்..
பின்ன.. தண்ணியே இல்லாத கிணத்துல தள்ளி விட்டுடுவீங்க.. தண்ணி இருந்தாத்தானே நீச்சல் அடிக்க..
:)
அன்புடன்
கீதா
//** தண்ணியே இல்லாத கிணத்துல தள்ளி விட்டுடுவீங்க **// :-))) . நா ஒங்கள தள்ளி விடணும்னாலும் (சும்மா :-) எங்க ஊருல இப்போ கெணறு கெடையாது..எல்லாத்தையும் மூடிட்டானுவ :-)))
உஷா அக்கா! தம்பிய ரொம்ப பாராட்டுறீங்க :-)). ஏனோ நாங்க அந்த பொன்வண்டு மேட்டர் மட்டும் அனுபவிக்கலை..எங்க ஊருல பொன்வண்டு கெடையாதோ..தெரியலை..உங்கள் பொன்வண்டு நினைவுகள் அருமை..நீங்களும் எழுத ஆரம்பிங்க..நான் ப்ளாக் ஆரம்பிக்க உதவுகிறேன்...என்ன ஆரம்பிச்சிடலாமா :-)
வேப்பம் பழம் தின்னுட்டு வேப்பம் கொட்டையை சேர்த்து விற்ப்போம்..வேப்பெண்ணை செய்றவங்க ஊருல வந்து படி இவ்வளவுன்னு வாங்கிட்டு போவாங்களே..
பம்பரம், கோலி, நொண்டி அடித்து விளையாடுவது எல்லாம் வருது..மெதுவா எழுதறேன் :-))
என் எழுத்தை ரொம்ப பாராட்டிட்டீங்க..நன்றி..நன்றி..ஒன்னும் பெரிய ஸ்டைல் எல்லாம் கெடையாது...நான் உங்க முன்னாடி உக்காந்து கதை சொன்னா எப்படி இருக்கும், அப்படியே எடுத்து விடுறது தான் :-))..
ரொம்ப நன்றி உஷா அக்கா..என்னோட எல்லா பதிவுகளையும் படிச்சி சொல்வதற்கு :-)
Post a Comment