லட்சுமி காலையில் இருந்தே கத்திக்கொண்டு இருந்தது. 'டேய்! அத வெளியே விட்டுடாதடா. புடிச்சி கெட்டிப்போடுடா' அடுப்பாங்கரையில் இருந்து அம்மா குரல் கொடுத்தார்கள். லட்சுமி. எங்க வீட்டிற்கு வந்த முதல் ஆடு. அதற்கு லட்சுமின்னு பேர் வைத்தது அக்கா தான். லட்சுமி ஈன்றேடுக்க போகும் குட்டிகளுக்கு நானும் அக்காவும் சேர்ந்து பெயர்கள் தேர்வு செய்தோம். ரெண்டு பெயர் போதும் என்று நினைத்திருந்த எங்களுக்கு லட்சுமி நாலு குட்டி போட்ட போது, ஒரே ஆச்சரியம். ஒவ்வொரு குட்டியாக அம்மா துணியால் சுத்தம் செய்து, கத்தியால் அதன் கால் குளம்புகளை வெட்டி லட்சுமியிடம் கொடுக்க, லட்சுமி பாசமழை பொழிந்து கொண்டுருந்தது. என்னடா இது மூனுமே பொட்ட குட்டியா போச்சி, ஒரு கெடா குட்டி இல்லாம போச்சேன்னு அம்மா புலம்பிக்கிட்டு இருந்தபோது பிறந்த நாலாவது குட்டி தான் சூர்யா. மத்த மூன்று பேரும் ப்ரியா, வித்யா, நித்யா.
ஒரே நாளில் எங்கள் வீடு களை கட்டிப் போனது. நாலும் பாலுக்கு அடித்துக்கொள்ளும். சூரி எப்படியும் அடித்து பிடித்து வயிற்றை நிறைத்து விடுவான். லட்சுமி மேய்ந்து விட்டு தூரத்தில் வரும் போதே இவன் மட்டும் ஓடி போய் கெஞ்சி கூத்தாடியாவது மடியை காலி பண்ணிவிடுவான். 'டேய்! உன் ஆட்ட கெட்டி போடுடா. மத்த குட்டி எல்லாம் பாவம்' அம்மா அவன் மீது அடிக்கடி குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள். அவனது சுறுசுறுப்பும், குறும்பும் பிடித்து போக, சூரி மற்ற மூவரை விட ரொம்ப பிடித்து போய்விட்டான். சூரி என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வருவான். கொஞ்ச நாளில் அவன் கருப்பு நிறத்தை வச்சே அவனை கூப்பிட ஆரம்பித்து 'கருப்பன்' என்றே ஆகி போய் விட்டான்.
என் கூட கட்டிலில் படுத்து தூங்கும் அளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கியவனாகி போனான் கருப்பன். எங்கு சென்றாலும் என் கூட வந்து விடுவான். 'அத மேய விடுடா. அத கூட்டிக்கிட்டே அலையறியே' அம்மா அடிக்கடி என்னைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். நான் விளையாட போனால், அவனும் கூட வந்து ஒரு ஓரத்தில் மேய்ந்து கொண்டிருப்பான். நான் திரும்பி வரும் போது கூட வருவான். அவனது ஒரே கெட்டப் பழக்கம், சின்ன புள்ளைங்கள தூரத்தில் கண்டாலே ஓடி போய் முட்டி தள்ளி விடுவான். 'யக்கா! ஒங்க ஆடு நம்ம பார்வதி புள்ளைய நேத்து முட்டிட்டு. அத கெட்டி போடுங்க' அப்படின்னு தினமும் ஒரு புகார் வீட்டுக்கு வரும். ஒரு நாயை பார்ப்பது போல எல்லா குழந்தைகளும் 'கருப்பன் வர்றான்'ன்னு ஓடுங்க. தமாசா தான் இருக்கும். மொட்ட கொம்பன் அவன். கீழே தள்ளி விடுவதோடு சரி. இல்லன்னா ஊர் பஞ்சாயத்துல நம்மல இழுத்து விட்டிருப்பான்.
நான் தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு கையில் ஒரு சொரண்டி கம்பையும் எடுத்து விட்டால், ரொம்ப குஷியாகி விடுவான். நான் அவனை மேய்க்க கூட்டிச் செல்லப் போகிறேன் என்று அவனுக்கு தெரியும். எல்லாரும் நான் நடக்க ஆரம்பித்தால் ஒழுங்காக என் பின்னாடி வருவார்கள். இவன் மட்டும் எனக்கு முன்னாடி எனக்கு வழி காட்டி செல்வான். லட்சுமியும் மற்ற குட்டிகளும் ஒழுங்காக மேய்ந்து கொண்டிருந்தால், இவனுக்கு மட்டும் நான் தனியாக ஏதாவது பறித்து போட வேண்டும். 'கெடுத்து குட்டிச்சுவராக்கி வச்சிருக்க. மேய கறி வலிக்குது பாரு அதுக்கு' அம்மாவின் அடுத்த புகார். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் போதே வழியில் கிடக்கும் ஒடங்காவை இவனுக்காக பொறுக்கி வருவேன். அவனுக்கு மட்டும் தனி கவனிப்பு தான்.
பட்டாசுன்னா அவனுக்கு ரொம்ப பயம். தீபாவளி அன்னைக்கு பட்டாசு சத்தத்துக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே கெடப்பான். நான் சாப்பிட உட்கார்ந்தால் வந்து நின்று தட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். சாம்பார் ஊத்தி ஒரு உருண்டை கொடுத்தால் சந்தோசமாக சாப்பிடுவான். 'ஆட்டுக்கெல்லாம் சோறு ஊட்டிக்கிட்டு இருக்கான் பாரு' அம்மா திட்டுவார்கள். சட்டில புண்ணாக்கு தண்ணி வைத்தால், முதல் வேலையாக மூச்சை பிடித்துக் கொண்டு கழுத்து வரை தண்ணிக்குள் முங்கி கீழே கிடக்கும் புண்ணாக்கை தேடுவான். மூச்சு முட்டியதும் தலையை வெளியே எடுத்து மூச்சு வாங்கிவிட்டு மறுபடி முங்கி தேட ஆரம்பிப்பான். மொத்த புண்ணாக்கும் அவனுக்குத் தான். தலையை வெளியே எடுக்கும் போது மொத்த தலையும் வெள்ளையாக புண்ணாக்கு படிந்து போய் கோமாளி மாதிரி இருப்பான். அவனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள், 'ஏல! ராஜா. ஒங்க ஆடு கெணத்துல வுழுந்துட்டுல' அப்படின்னு பக்கத்து வீட்டு ஆச்சி சொன்ன போது, தலைதெறிக்க ஓடினேன். ஊர்ல எல்லோரும் தெக்க இருக்கிற கெணத்த சுத்தி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாங்க. தண்ணி இல்லாத பாழுங்கிணறு. துள்ளி குதித்து விளையாடும் போது அந்த மொட்டை கிணத்தில் தவறி விழுந்திருக்கிறான். 'ஐயோ கருப்பா' என்று கத்திக்கொண்டே ஓடி போய் பார்த்தேன். கருப்பன் ஒரு 80 அடி ஆழத்தில் நின்று கத்திக்கொண்டு நின்றான். ஊர்ல எல்லோரும் ஒரு கயிறுல ஒரு கூடையை கட்டி இறக்கினார்கள். கிணத்தில் இறங்கி அவனை கூடைல போட்டு கட்டி விட்டார்கள். ஒரு சின்ன காயம் கூட இல்லாம அப்படியே வந்தான் கருப்பன். அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது. அவ்வளவு ஆழத்தில் விழுந்து ஒரு காயம் கூட இல்லாம வந்து விட்டானே என்று எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.
இப்படி கருப்பன் எனது உயிர் நண்பனாகி போனான். விளையாட நண்பர்கள் இல்லாத போது, இவனிடம் விளையாடிக் கொண்டிருப்பேன். கை முட்டியை வைத்து முட்டுவது போல பாவ்லா காட்டினால், இவன் முன் கால் இரண்டையும் தூக்கிக் கொண்டு முட்டுவான். நான் எங்காவது ஒளிந்து கொண்டால், ஒவ்வொரு இடமாக தேடுவான். என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க முடியுமோ எல்லாம் கற்றுக் கொடுத்தேன். இரண்டு காலால் நடப்பது, சுவர் மேல் நடப்பது, வேலி தாண்டுவது என்று வித்தைகள் நிறைய செய்வான். அவன் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
நாட்களும் ஓடியது. கருப்பனும் வளர்ந்து கொண்டே வந்தான். 'யக்கா! உங்க வீட்டு கெடா நல்லா வளந்திருக்கே. வெல பேசிறலாமா' அம்மாவிடம் மாமா கருப்பணுக்கு நாள் குறித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கருப்பனுக்கும் ஒன்றும் புரிய வாய்ப்பில்லை. நாளும் வந்தது. கசாப்பு கடைக்காரன் எங்கள் வீட்டில். 'கருப்பன எதுக்கும்மா கொடுக்கணும். நம்ம கிட்டயே அவன் இருக்கட்டும்.அவன கொடுக்க வேண்டாம்' அவனை இழக்க முடியாமல் அம்மாவிடம் நான் கெஞ்சிக் கொண்டிருந்தேன். 'இதுக்கு மேல அத வளக்குறதுல பிரயோஜனம் கெடையாதுடா. நீ சின்ன பையன். ஒனக்கு ஒன்னும் தெரியாது. சும்மா இருடா' அம்மா என்னை அடக்கி வைத்து விட்டார்கள். நான் சின்னப் பையன் தான். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, லட்சுமியோடு சேர்ந்து நானும் அழுவதை தவிர. நடக்க மாட்டேன் என்று அடம்பிடித்த கருப்பனை , கசாப்பு கடைக்காரன் அடித்து இழுத்துக்கொண்டே போனான். கத்திக்கொண்டே சென்றான் கருப்பன்...என்னிடம் திரும்பி வருவோம் என்று நினைப்புடன்....
47 comments:
இப்பிடி முடிச்சிட்டிங்களே...!
நீங்கள் கறுப்பனை கடசிவரையும் குடுத்திரிக்கவே கூடாது!!! கத்தி ரகளை பண்னியிருக்கவேண்டும்!!!
சிவா, திரும்பவும் ஒரு நல்ல பதிவை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Romba urukkamaga irunthathu. But the end is anticipated.We know something is going to happen to him.
ம்... முடிவை தாங்க முடியவில்லை சிவா. அன்பாய், ஆசையாய் வளர்த்து
விட்டு இறுதியில் கசாப்புக் கடைக் காரனிடம் கொடுப்பது என்பது எவ்வளவு கொடுமையான வேதனை?
அழுகைதான் வருகுது சிவா..
கற்பனை கதையிலே
கடுகளவுதானே சொல்ல முடியும்
கடந்த நிகழ்வை
உடன் இருந்தோன்
உரிமையுடன் சொல்கிறான்
குட்டியீனும் ஆடும்
குல மகளாய்
கூட பிறந்தோனாய்
கைகுழந்தையாய்.
மைவிழியாளை காணும் வரை
இமை போல இன்னொரு சகோதரனாய்
ஐந்தறிவுதானே
அதற்கென்ன தெரிய போகுது
இதற்கெல்லாம் பதில் சொல்லவா வேணும்
என் சாப்பாட்டில்
இந்தா ஒரு உருண்டை
புண்ணாக்கும்
பழங்கஞ்சியும்
போதுமா உனக்கு?
பொழுதானது
புள்ளு மேஞ்ச
குட்டி பயல காணும்
ஊரெல்லாம் தேடியாச்சு
ஒரு எடம் மட்டும் தேடல
தோட்டத்து கிணத்தில் விழுந்து இருக்குமோ?
துண்ட கட்டிகிட்டு
தனிவாய் நானும் பார்க்க
தொபுகடீர்னு
தோளிலிருந்து குட்டி விழ
ஐயோ பாவம்
நானே பாவி
பக்கெட்டும் பருத்தி கயிரும்
பயல மேலே கொணர்ந்ததே
பாவம் செய்யவில்லை
பயலுக்கு ஒன்னும் அடி இல்லை
வயலுக்கு போனாலும்
வந்துடுவான் கூடவே
வருழம் மூனாச்சாம்
வீரனுக்கு வெட்டனுமாம்
வெந்த மனமாய் நானிருக்க
சொந்த காரனுகெல்லாம்
சுகமான தீனி!
சிவா,
உங்களுக்கு ஒரு கருப்பன் என்றால் எங்களுக்கு ஒரு மேரி. உங்க கதையின் ஒரு பாதி கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க வீட்லேயும் நடந்தது. ஆனால் கொஞ்சம் அதிகப்படியா, மேரி குட்டிக்கு சிசேரியன் செய்து, பிறகு கர்ப்பப் பையும் எடுக்க வேண்டியதாயிடுச்சு.(எங்க ஆட்டுக்கும் சிசேரியன்-பதிவு பாருங்க)
என்னைக்காவது விற்க வேண்டியதாகும்போது எங்க மகனை சமாளிக்க முடியாதுன்னு, தோட்டத்தில் கொண்டு விட்டிருக்கிறோம். ஒடங்காய், புண்ணாக்கு எல்லாம் அவனுக்கும் பரிச்சியம்.
எளிமையான நடைல கலக்கறீங்க, சிவா! இப்போதான் உங்க எல்லா நட்சத்திர பதிவுகளையும் படிச்சேன்! :)
:(
போனபதிவு ஜாலியாக எழுதியதற்கு மாற்றாகவா?
ரெண்டாவது தடவை படிக்கிறேன். இந்தத் தடவையும் மனசை என்னமோ பண்ணுது. நல்ல பதிவு சிவா.
மனசு கொஞ்சம் கனத்துத்தான் போனது படிச்சி முடிக்கும்போது.
இப்பவே மனசு கசக்கிறது - நீங்கள் உங்க நட்சத்திர வாரம் முடிந்தபின் எடுக்கப்போகும் (எல்லா நட்சத்திரங்களும் அப்படித்தானே!) hiatus பற்றி.
தருமி ஐயா. இந்த நட்சத்திரத்துக்கு ஓய்வென்பதே கிடையாது. இவர் ஒரு பெரும் கற்பனை ஊற்று. என் நட்சத்திர வாரத்திற்கு பின்னால் என் வண்டி வேகம் குறைந்துவிட்டது. ஆனால் சிவாவோட வண்டி ஒரே சீராத் தான் போகும். இந்த வாரத்தில் வந்த பின்னூட்ட பெட்ரோலால் வேகம் கூடினாலும் கூடலாம். :-)
என்ன சிவா ஜாலியா ஆரம்பிச்சி இப்படி முடிச்சிட்டிங்களே.. மனசு என்னவோ செய்யுது.
நானும் வளர்த்திருக்கேன் சிவா.. ரங்கா கிளி, செண்பகம்(மாடு), ராமு (நாய்), கோழி.. காக்கா கூட வளர்த்திருக்கேன்.. மரத்திலிருந்து தவறி விழுந்தது..எல்லாம் போச்சு..
கிளி பூனை பிடிச்சிடுச்சி.. மாடு யாருக்கோ கொடுத்துட்டாங்க.. நாய் செத்துப்போச்சு.. கோழி செத்துப்போச்சு.. அதிஅ புதைச்சு.. சமாதி கட்டி.. அழுது.. ஹ்ம்..
இதுங்க மேல எல்லாம் பாசம் வச்சி வச்சி கடைசியில பிரியும்போது நமக்கு தாங்க மாட்டிங்குது.. அதான் இப்ப எதுமே வளர்க்கிறதில்லை.
நல்ல பதிவு சிவா.
சிவா,
உங்கள் நட்சத்திர பதிவு "கருப்பன்" பற்றி
தொடங்கியது சாதாரண வார்த்தைகளில்,
தொடர்ந்தது சரளமான நடைப்போக்கில்
முடிந்தது.
முடிந்ததை
என்னாலும் உணர முடிந்தது
குணா .
Oliyinile,
//** இப்பிடி முடிச்சிட்டிங்களே...! **// என்னங்க பண்ணுறது. கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி 'the end is anticipated'. ஆடு வளக்கிறதே ஒரு தொழில் தான். செல்ல பிராணியாக வளர்க்கிற அளவுக்கு நிலமை அப்போது இல்லை. நானும் சின்ன பையன். என்ன செய்வது.
தேசிகன்! நான் இந்த பதிவ போட்டவுடன் நினைத்தது 'இன்னைக்கு தேசிகன் வருவார்' என்று :-)). தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறீர்கள். ரொம்ப நன்றி தேசிகன்.
கீதா சாம்பசிவம். வாங்க. //* the end is anticipated.**// ஆமாங்க. கிடா குட்டின்னு சொன்ன போதே, அதோட முடிவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் அதோட குறும்பு, செய்கைகளையே முதன்மை படுத்தி இருந்தேன். நம்ம வாழ்வில் ஒரு வாயில்லா ஜீவன் ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே. அந்த அனுபவத்தை சொல்லி இருந்தேன். உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க.
சத்தியா! உங்கள் தொடர் வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
//** அழுகைதான் வருகுது சிவா **// அமாங்க. ஒரு தடவை இல்லை. இப்படி நிறைய..மைனா..குருவி..இப்படி நிறைய இருக்கு :-(
தம்பி சிங்கு! இப்படி கலக்கறியே..அப்படியே கவிதை ஓடுது..நன்றி தம்பி...ரொம்ப நன்றி..கடைசி வரிகள் ரொம்ப உருக்கம்...உங்கள் திறமையை வரும் பதிவுகளில் நிறைய எதிர்பார்க்கிறேன்.
வாங்க தாணு! எப்படிங்க எல்லா பதிவும் தவறாம படிச்சடறேங்க. ரொம்ப நன்றி தாணு. டாக்டர் நீங்க சிசேரியன் பண்ணிட்டீங்க. அப்போது தான் நல்லா ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு ஒரு நிமிடத்தில் சுருண்டு விழுந்து செத்து போயிடும். கொடுமைங்க..ம்ம்..நம்ம மனசு தாங்காது..
உங்க பதிவை சீக்கிரம் படிக்கணும். படித்து சொல்றேன்.
பாரதி! நல்ல கேள்வி. உடனே விட்டு விட்டேன்னு சொல்ல மாட்டேன். நா அப்போ அஞ்சாப்பு தான் படித்தேன். விவரம் தெரியாதுல்லா..இப்போ சாப்பிடுவதில்லை.
வாங்க கதை திலகமே (கே.எஸ்) :-) எளிமையான நடை தாங்க என்னால எழுத முடியும்..எழுத்து வித்தை எல்லாம் பண்ண தெரியாது :-))
பாராட்டுக்கு நன்றி
மணியன்! சாரிங்க. ரொம்ப நொந்துட்டீங்களா..கருப்பனை தான் மூன்றாவது போடற மாதிரி இருந்தது..சரி கொஞ்ச்ம் ரிலக்ஸ் பண்ணிக்கிடலாம்னு தான் தேன் கூட்டை அப்போதே எழுதி போட்டேன். இன்னும் நிறைய காமெடில்லாம் இருக்கு..அப்புறம் மெதுவா பார்க்கலாம்..
நன்றி குமரன்! ஒரே கதைய ரெண்டாவது தடவை படிச்சீங்கன்னு கேட்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
வாங்க நாமக்கல் சிபி! எல்லோர் மனசும் கனத்துத் தாங்க போச்சு
:-(.
நீங்க ஏதாவது வளத்திருக்கீங்களா?
//** நீங்கள் உங்க நட்சத்திர வாரம் முடிந்தபின் எடுக்கப்போகும் hiatus பற்றி **// :-). இது எழுதறக்குள்ளேயே ஓஞ்சி போய்ட்டேன். சரக்கு இருந்தா, மட மடன்னு எழுதி தள்ளலாம்..இங்கே சுத்தம்...என்ன பண்ணறது...நட்சத்திர வாரம் முடிஞ்சவுடன் 'அப்பாடான்னு ஒரு பெரு மூச்சு விட்டுட்டு ஓடி போய்டுவேன் :-))
குமரன்! ஏத்தி விடுறதுல உங்களை மிஞ்ச ஆளே கெடையாதுங்க..வண்டி இப்பவே ஆட்டம் கண்டு போச்சு..இன்னும் ரெண்டு நாள் தாக்கு புடிச்சிட்டு, ஷெட்ல போய் ஹால்ட் ஆயிடும் :-)).
கீதா! நல்லா சொல்லி இருக்கீங்க..நானும் அதே தாங்க..ஆசப்பட்டு வளத்துட்டு, அது செத்துப்போச்சுன்னா தாங்க முடியாது..பத்தாப்பு படிக்கும் போது ஒரு மைனா வளத்தேன்..ரொம்ப பாசமான மைனாங்க அது..என் கால சுத்தி சுத்தி வரும்..எங்க வீட்டு கோழிங்க கூட மேய எல்லாம் போகும்..கரெக்டா வீட்டுக்கு திரும்பி வந்துரும்..ஒரு நாள் நாய் ஒன்னு தூக்கிட்டு போய்டுச்சி..ரொம்பவே அழுதேங்க...ஹும்..இப்படி நிறைய..
நீங்க சொல்ற மாதிரி..நமக்கு எல்லாம் இதுங்கல வளக்காம இருக்கறது தான் நல்லது..
வாங்க தங்கமணி! பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.
குணா! முதல் வருகைக்கு நன்றிங்க..உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//** முடிந்ததை
என்னாலும் உணர முடிந்தது **// :-( ஹும்...எல்லாம் ரொம்ப முன்னாடி..சின்ன பையனா இருக்கச்சுல்ல
இன்னைக்கும் தவறாம வந்துட்டீங்க. நன்றி அல்லி மகன். :-)
//**எத்தனை வருஷம் கிராமத்துல வாழ்ந்திருக்கீங்க,**// நான் ஒரு 20 வருசம் இருந்தேன் :-)
//** சரக்கு தீராதுங்கோ. ஒரு வாரத்துக்கப்புரம் எழுதரது கம்மியாகாம பாத்துக்கங்கன்னே. **// உண்மை அதுதாங்க :-)).
//நீங்க ஏதாவது வளத்திருக்கீங்களா//
எனக்கு விவரம் தெரியாத சிறு வயதில் எங்கள் வீட்டில் நாய் ஒன்று வளர்த்தார்களாம். பின்னாளில் அது ஒரு வண்டியில் அடி பட்டு இறந்துவிட்டது என்று சொல்லுவார்கள். அதற்குப் பிறகு எதுவும் வளர்க்க வில்லை. பிறகு ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் வளர்த்திருக்கிறோம். அதுவும் கோவிலில் பலி கொடுப்பதற்காக. நான் அதனுடன் விளையாடியதுண்டு.
சிபி!
//**அதுவும் கோவிலில் பலி கொடுப்பதற்காக. நான் அதனுடன் விளையாடியதுண்டு.**// நீங்க கொஞ்சம் அனுபவிச்சிருக்கீங்க. நான் ரொம்ப அனுபவிச்சிருக்கேன். :-))
//நீங்க கொஞ்சம் அனுபவிச்சிருக்கீங்க.//
அந்த கொஞ்ச அனுபவத்தால்தான் உங்கள் சோகத்தை உணர முடிகிறது.
சிவா,
மனதை தொடும் பதிவு.
எங்க வீட்டு லட்சுமிக்கும் ஒரு பெரிய கதை உண்டு, நேரம் வரும் போது சொல்கிறேன்.
நீங்க சொல்ல மறந்தது, அடுத்த நாள் உங்க வீட்டில் கறிக்குழம்பு தான் இருந்திருக்கும்.
நம்மை போன்ற கிராமத்து மக்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் சகஜம் தானே.
ஆழ்வார்தோப்பு அத்தை வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டை கோயில் கொடைக்கு என்று கழுத்தை வெட்டியை பார்த்து பயந்ததுண்டு.
சிவா
எனக்குத் தெரிந்த வகையில் ஆண்பிள்ளைகளுக்குத்தான் இந்த pet வளர்க்கிற ஆசை அதிகமா இருக்கு. என் பொண்ணு என்னை மாதிரி கவிதை எழுதுவா( இன்று ஒரு பதிவு போட்டிருக்கேன், அவளோடது). ஆனால் பையன் இதுமாதிரி ஒவ்வொண்ணா வளர்ப்பான். இப்போவும் வீட்டு முன்னாடி லவ் பேர்ட்ஸ் கூண்டு ( 100 பறவை போல இருக்குது), நாய்க்குட்டி வீட்டைச் சுத்துது. இதிலேயும் ரொம்ப அநியாயம் வீட்லே ஓடற எலியை அடிக்கக்கூடாது, அன்னைக்கு முழுதும் அழுவான். எதோ கரப்பான்பூச்சி மட்டும் அடிச்சுக்கலாம்.
கார்லே கூட வரும்போது ஏதாச்சும் நாயை அடிக்கிறமாதிரி தெரிஞ்சாக்கூட வண்டி ஓட்ற ஆள்கூட அன்று முழுவதும் சண்டைதான்!
கதையை படிக்கும் போதே கருப்பன் கசாப்பு கடைக்கு தான் என்று நினைத்து படித்தேன் ( உண்மை முடிவு), கொஞ்சம் வித்தியாசமாவும் இன்னோரு முடிவு குடுத்திருக்கலாம் ( திரைப்படம் மாதிரி) :-))
அனானி நண்பரே!
//** கொஞ்சம் வித்தியாசமாவும் இன்னோரு முடிவு குடுத்திருக்கலாம் **// ஊருல கிடான்னாலே ஒன்னு கசாப்பு கடை காரனுக்கு, இல்லன்னா சாமிக்கு நேந்து விட்டிருப்பாங்க.. இது மொத்தமாக என் நினைவலைகளே..(அனுபவம்)..அதனால் அப்படியே பதிந்து விட்டேன் :-)))
சிவகுமார் அண்ணா!
//** இயற்கை நியதியை பொய்யாக்கி, அனைத்துண்ணியாக இருந்ததாமே? **// இது உண்மை. கதைல சொல்ல மறந்துட்டேன். அம்மா சால மீன் கழுவினா, இவன் எல்லா மீன் தலையையும் தின்று விடுவான். ஒரு ஆடு பச்சையா மீன் தின்பது ஆச்சரியமே..எங்கே கத்துக்கொண்டது என்று தெரியவில்லை..நம்ம வீட்டு பூனை தான் பாவம் :-))
நானும் சின்னப்புள்ளைல கோயில் கொடைக்கு ஆடு வெட்டுறப்போ வேதனைப்பட்டு...அந்த ஆடு வெந்து இலையில வந்து விழுகுற வரைக்கும் ஆடு திங்கா வெரதமெல்லாம் இருந்ததுண்டு. பட்டிக்காடுகள்ள இதெல்லாம் சகஜந்தான்.
சிவா,
மற்றுமொரு ஒரு நல்ல கிராமத்து பதிவு.
ராகவன்!
//** அந்த ஆடு வெந்து இலையில வந்து விழுகுற வரைக்கும் ஆடு திங்கா வெரதமெல்லாம் இருந்ததுண்டு. **// இது உண்மை..சின்ன வயசுல நான் கூட சிக்கனை வெட்டிக்கிட்டே, என்னோட மைனா செத்து போச்சேன்னு அழுதிருக்கேன்...நமக்கு அந்த வயசுல என்ன தோணும்.. என்ன நாஞ்சொல்றது..
நன்றி வி.எஸ்.ரவி
//**ஓடி ஒளிதல் நட்சத்திரங்களால் முடியுமா? **// பாரதி! நேரம் கெடைச்சு, ஏதாவது எழுத தோணிச்சுன்னா கண்டிப்பா கதை அளப்பேன்..உங்கள் ஆதரவு இருக்கும் வரையில் :-)
தாணு அக்கா! உங்க பொண்ணு கவிதையை படிச்சி சொல்லறேன். ஆம்மள பசங்களுக்கு தான் Pet ஆசை அதிகம்..உண்மை தாணு...நாங்கெல்லாம் இளகிய மனசு காரவுக இல்லையா..அதான் ( சும்மா சொன்னேன்..அடிக்க வராதிய :-))
//**ரொம்ப அநியாயம் வீட்லே ஓடற எலியை அடிக்கக்கூடாது, அன்னைக்கு முழுதும் அழுவான். எதோ கரப்பான்பூச்சி மட்டும் அடிச்சுக்கலாம். **// நல்லா இருக்குதே...பையன் என்ன படிக்கிறான்..
பரஞ்சோதி! //** மனதை தொடும் பதிவு **// நன்றி பரஞ்சோதி.
//** ஆழ்வார்தோப்பு அத்தை வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டை கோயில் கொடைக்கு என்று கழுத்தை வெட்டியை பார்த்து பயந்ததுண்டு. **// ஐயோ..ஆழ்வார்தோப்புல ரொம்ப ஓவருங்க...தெருவுக்கு தெரு ஒரு பந்தல போட்டு..வெட்டி தள்ளிக்கிட்டே போய்ட்டு இருப்பாங்க..ஒரே வெட்டு தான்..சொல்லவே கொடுமையா இருக்கு..இத எல்லாம் எதுக்குய்யா நாயபக படுத்தறீங்க :-((
Post a Comment