Sunday, February 19, 2006

எசக்கி

ஆறாம் வகுப்பு. ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்கும் எங்கள் பள்ளியில் சேர்ந்த எல்லோரும் புதிய முகங்கள். புதிய நட்புகள். இசக்கி முத்துவை பார்த்த போது எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று அவனை கேட்டேன். என் கூட அஞ்சாப்புல படிச்ச சின்னத்துரை தம்பி என்று சொன்னான். ஏற்கனவே என்னோட கூட்டாளியான சின்னத்துரை தம்பி என்பதாலோ எசக்கி எனக்கு முதலிலேயே பழக்கமாகி விட்டான்.

தொடக்கத்தில் இருந்தே எசக்கிக்கு ஏனோ படிப்பு அவ்வளவாக வரவில்லை. வகுப்பில் எல்லாத்துக்கும் அடி வாக்குறது அவனா தான் இருக்கும். 'மக்கு. மக்கு. படிச்சிட்டு வர சொன்னா சும்மா வந்து நிக்குது பாரு' என்று அத்தனை ஆசிரியர்களிடமும் அடி வாங்கிக்கிட்டே இருப்பான். காலையில் முதல் வேலையாக வகுப்பு ஆசிரியர் யாரெல்லாம் ராப்பாட சீட்டு வாங்கி வரலைன்னு வெளியே வரச் சொல்வார். எசக்கி முத ஆளா போய் நிற்பான். எனக்கு மறந்துட்டா அப்பா வேல பாக்குற கடை பக்கத்துல தான். ஓடி போய் வாங்கி வந்துருவேன். படிச்சேனோ..படிக்கலையோ..அப்பா நான் சொல்கிற நேரம் எல்லாம் போட்டு 'என் மகன் நேற்று 7:00 மணியில் இருந்து 9:00 மணி வரை பாடம் படித்தான்' என்று எழுதி கொடுத்துருவாங்க. 'ஏல! ராப்பாட சீட்டு வாங்கிட்டு வரதுல என்ன' கேட்டா ' இல்லல! மறந்து போய்டுது'இதெல்லாம் ஒரு அடியா என்பது போல பதில் சொல்வான்.

வகுப்பு ஆசிரியருக்கு நான் ஒரு செல்லப் பிள்ளை மாதிரி. 'ஒங்க ஊரு தேரி தண்னி தேங்கா தண்ணி மாதிரி இருக்குமாம்ல. அப்படியா?. சாருக்கு தினமும் ஒரு கேன் கொண்டு வந்திரு' அப்படிம்பார். அந்த வருடம் முழுவதும் ஒரு பெரிய கேன்ல சாருக்கு தண்ணி கொண்டு போவேன். எல்லாம் ஒரு பாசம் தான். அப்புறம் அடிக்கிறதுக்கு கம்பு சப்ளையும் நான் தான். 'லே! நாளைக்கு ரெண்டு கம்பு வெட்டிட்டு வால' என்று ஆசிரியரிடம் இருந்து ஆர்டர் வரும். அருவாள தூக்கிக்கிட்டு நல்ல வாடாச்சி மரமா தேடிக்கிட்டு அலைவேன். எசக்கி அடி வாங்குறான் என்றால், கம்பு உடைவது நிச்சயம். 'எரும மாடால நீ! எதுக்கு இப்படி அடி வாங்கி சாகுற. படிச்சிட்டு வர சொன்னா வர வேண்டிய தானே' அவன் சின்ன அடிக்கு எல்லாம் அமைதியா நிற்பதை பார்த்து கடுப்பாகி பின்னி எடுத்து விடுவார். கம்பு நார் நாராக போய் விடும். அப்புறம் நான் தான் அருவாள தூக்கிக்கிட்டு அலையனும்.

ஏனோ எசக்கிக்கு படிப்பு என்பது வராத ஒன்றாகவே இருந்தது. வராத ஒன்றுக்காக அவன் மெனக்கெடவும் இல்லை.

எசக்கியோடு சேர்ந்து நானும் அடி வாங்குவது ஒரே ஒரு வகுப்பில் தான். அது அறிவியல் பாடம். 'லே! என்ன ரெண்டு டவுசரா! ' என்னை பார்த்து நக்கலாக சிரிப்பான் எசக்கி. 'ஒன்ன மாதிரி எரும மாடா இருந்தா பரவாயில்லை. நான் ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை அடி வாங்கிறவன். நம்மால தாங்க முடியாதுல' நான் திருப்பி அவனை நக்கலடிப்பேன். நான் அரசாங்கம் இனாமாக கொடுத்த டவுசரை போட்டு வந்தாலே அவனுக்கு தெரிந்து விடும், இன்னைக்கு அறிவியல் சார் கேள்வி கேக்குறாங்கன்னு. அந்த டவுசரை மற்ற நாளில் போட முடியாது. முட்டி வரை கிட்டத்தட்ட ஒரு பாவாடை மாதிரி தான் இருக்கும். துணி சும்மா சாக்கு துணி மாதிரி இருக்கும். அறிவியல் ஆசிரியர் கேள்வி கேட்டால் மொத்த வகுப்புக்கும் அடி கிடைக்கும். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. அவர் வகுப்பிற்கே அரைகுறை போதையில் வருவது மாதிரி தான் வருவார். எவனையும் வாயை தொறந்து பதில் சொல்ல விடமாட்டார். ஒரே கேள்வி தான். வரிசையா எந்திரிச்சி மரியாதையா முட்டங்காளில் போய் நின்னுக்குவோம்.

அப்புறம் வரிசையா அடி விழும். பின்னாடி டவுசரில் விழும் அடிக்கு பயந்து தான் ரெண்டு டவுசர் ஏற்பாடு. அடி விழும் போது சும்மானாட்டுக்கும் 'ஐயோ! சார்! சார்!' என்று கத்துவேன். அடி உறைக்கலன்னு எரும மாடு மாதிரி நின்னோம்னா, முதுகுல பளீர்னு ஒன்னு விழும். அப்புறம் ஒக்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம நெளிஞ்சிக்கிட்டு இருக்கணும். அதுக்கு தான் அந்த நடிப்பு. எசக்கி அது பாட்டுக்கு அடி வாங்கிட்டு வருவான். ஒரு உணர்ச்சியே இல்லாம. தினமும் அடி வாங்குபவனுக்கு அது ஒன்றுமில்லை தான்.

வகுப்பில் நன்றாக படிக்கும் ஐந்து மாணவர்களை எடுத்து ஆளுக்கு 10 பேரை நேந்து விட்டாங்க. வகுப்புல ஒரு அட்டைல தலைவர் மாதிரி நம்ம பேரும், கீழே நமக்கு நேந்து விட்ட 10 பேரோட பேரும் எழுதி போட்டிருக்கும். என்னோட நேரம் எனக்கு கீழே எசக்கி. மாலையில் ஆறு மணி வரை எல்லோரும் இருந்து என்னிடம் ஒப்பித்துவிட்டு போக வேண்டும். பள்ளி முடிந்ததும் ஓட ஆரபித்தான் எசக்கி. 'அவன புடிச்சி தூக்கிட்டு வாங்கல' கோபத்தில் ஆசிரியர். நாங்க ஒரு நாலு பேர் இருக்குற ரெண்டு கேட்டுக்கும் ஓடினோம். எங்கையாவது எசக்கியை மடக்கி நாலு பேரும் சேர்ந்து தூக்கி வந்து ஆசிரியரிடம் கொடுப்போம். அப்புறம் என்ன அடுத்த கம்புக்கு ஆர்டர் தான். 'சார்! சார்! விட்டுருங்க சார். இனி ஓட மாட்டேன்' வாங்கிய அடி தாங்க முடியாமல் எசக்கி அழுவான். பாவமாக இருக்கும். ஆனால் அதையே தினமும் பண்ணுவான். ஒரு மனதாக என்னிடம் வந்து உக்கார்ந்தான். ஒரு கேள்வி ஒப்பிக்க அன்று முழுவதும் போராடிக்கொண்டிருந்தான். பக்கத்து சர்ச் மணியையே பார்த்துக் கொண்டிருப்பான், எப்போடா மணி 6 ஆறு ஆகும்னு. 'லே! சீக்கிரம் ஒப்பில. இன்னிக்கு செவ்வாக்கெழமல ! நா சந்தைக்கு போணும்ல' நான் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருப்பேன். வழக்கம் போல அடுத்த நாள் ஒப்பிக்காதவர்கள் பட்டியலில் அடி வாங்க அவனும் இருப்பான்.

பள்ளிக்கூடத்திற்கு கல்வி ஆய்வாளர் வந்த போது எல்லா ஆசிரியர்களும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள். காலையில் இருந்தே எங்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று பயிற்சி போய் கொண்டிருந்தது. ஆய்வாளர் முந்தைய வகுப்பிற்கு வந்த சத்தம் கேட்டவுடனேயே, ஆசிரியர் 'எசக்கி! நீ எங்கையாவது போய்ட்டு ஒரு அர மணி நேரம் கழிச்சி வால' என்று அவனை மட்டும் வெளியே போக சொன்ன போது, ஆசிரியரின் பயம் தெரிந்தது. இதை எதிர் பார்க்காத எசக்கி, தான் மற்ற மாணவர்கள் முன்னால் ரொம்பவே நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த போது கலங்கி போனான்.

அப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது. கோடை விடுமுறை முடிந்து எல்லோரும் இப்போது ஏழாம் வகுப்பில். மறுபடியும் எங்கள் வகுப்பு கலைத்து விடப் பட்டது. மற்ற வகுப்பில் இருந்து சில புதிய நண்பர்கள். நான் எசக்கியை தேடினேன். என் வகுப்பில் இல்லை. 'அப்பாடி! இனி தொல்லை இல்லை. சந்தைக்கு நிம்மதியா போலாம்' என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்து வகுப்பு நண்பர்களிடம் விசார்த்து பார்த்ததில் அங்கேயும் அவன் இல்லை. 'அவன் பெயிலாயிருப்பான்டா..அவனாவது பாஸ் ஆறதாவது. போய் ஆறாப்புல பாரு' நண்பர்கள் கிண்டல் அடித்தார்கள்.

முதல் வகுப்பு தொடங்கியது. வகுப்பு ஆசிரியர் ஒரு அதிர்ச்சி செய்தியோடு வந்திருந்தார் 'மாணவர்களே! நம் பள்ளி மாணவன் இசக்கி, போன மாதம் வயலில் விளையாண்டு கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்து விட்டான். எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து இசக்கிக்கு அஞ்சலி செலுத்துவோம்'. எல்லொரும் எழுந்து நின்றோம். நான் உடைந்து போய் விட்டேன். கண்ணை முடிய போது, எசக்கி ஓடியது, அவனை நாங்க எல்லோரும் விரட்டி பிடித்து தூக்கி வந்து அடி வாங்கி கொடுத்தது. அவன் அடி தாங்க முடியாமல் தினமும் அழுதது. ஒவ்வொன்றாக என் கண் முன்னே வந்தது. செத்து போறதுக்கு தான் அவ்வளவு அடி வாங்கினியால. என்னால் தாங்க முடியவில்லை. மனசுக்குள்ளேயே அழுத படியே இசக்கியிடம் கேட்டேன் 'என்ன மன்னிச்சுடுல! எசக்கி'.

( ஆறாம் வகுப்பில் மறைந்த என் நண்பனின் நினைவாக)

20 comments:

சிங். செயகுமார். said...

இப்போவெல்லம் சாக்கு டவுசர் ,வெள்ள பல்பொடி இதெல்லாம் கொடுக்கிறதில்லையின்னு நெனைக்கிறேன்! அது என்னது தேரி (கிணறு தானே)?உங்க ஊரு கிணறு என்ன ஆழம் இருக்கும்?

பூனைக்குட்டி said...

சிவா நானும் ஸ்கூலில் அடிவாங்கவே மாட்டேன் ஏன்னா அப்பா வேலைபார்க்கும் ஸ்கூலில் தான் நான் 8 வது வரை படித்தது. அதற்குப்பிறகு அவர் வேலை பார்க்கும் நிர்வாகத்தின் கீழிருக்கும் ஒரு பள்ளியில்.

கஷ்டமாயிருந்ததுங்க படிச்சிட்டு.

பரஞ்சோதி said...

சிவா,

இசக்கி பற்றி படித்ததும் எனது நண்பன் இசக்கி முத்து நினைவு வந்து விட்டது.

பத்தாம் வவுப்பு படிக்கும் போது நானும் இசக்கியும் மாப்பிள்ளை பெஞ்ச், நான் இருக்க காரணம் நெடு நெடுன்னு வளர்ந்து பனை மரம் மாதிரி இருப்பேன், என் புண்ணியத்தால் மாப்பிள்ளைமாருக்கு அடி விழாமல் தப்பிப்பார்கள்.

அப்போ என் தலைமை ஆசிரியர் திரு.ஹெர்பட் சாந்தப்பா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, கடைசி 3 மாதம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பள்ளியில் ஆங்கிலம், அறிவியல், கணிதப்பாடம் சொல்லிக் கொடுத்தேன், 12 பேரில் 8 பேர் தேறினார்கள்.

ஊருக்கு போனப்போ என் நண்பன் எசக்கி டாக்ஸி ஓட்டுவதாக சொன்னாங்க, ஆனா பார்க்கத் தான் முடியலை.

சிவா said...

வாங்க அபிராமம்! கூட பழகிய சிறு வயது நண்பர்களை பறிகொடுப்பது ரொம்ப கொடுமை தான். அதுவும் நானே அவனுக்கு நேர்ந்த சின்ன கொடுமைகளுக்கு துனை நின்றிருந்தேன் என்று எண்ணும் போது கஷ்டமாக தான் இருக்கும்!

உண்மை தான்! ஒன்னாப்பு, ரெண்டாப்பு, ஒன்னாப்பு டீச்சர் அப்படின்னு சொல்றதுல ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அது நம்மை அந்த காலத்துக்கே கூட்டிச்செல்வது நிஜம்.

அன்புடன்,
சிவா

சிவா said...

தம்பி சிங்!
//** இப்போவெல்லம் சாக்கு டவுசர் ,வெள்ள பல்பொடி இதெல்லாம் கொடுக்கிறதில்லையின்னு நெனைக்கிறேன்! **// நீங்களும் வாங்கியிருக்கியலா?.

தேரின்னா பனங்காடு, எங்கு பார்த்தலும் செம்மண். இந்த இடம் தான் தேரி. எங்க ஊரு அப்படித்தான் இருக்கும். அதனால் ஊரில் இருக்கும் கிணற்று நீர் சுவையாக இருக்கும்.

சிவா said...

//** சிவா நானும் ஸ்கூலில் அடிவாங்கவே மாட்டேன் **// நான் அப்போ அப்போ வாங்குவேன். +1-ல் நிறையவே வாங்கி இருக்கிறேன். அப்பா பள்ளிக்கூடத்துலேயே படிச்சீங்களா..அப்புறம் என்ன..ராஜா மாதிரி இருந்திருப்பீங்க.

//** கஷ்டமாயிருந்ததுங்க படிச்சிட்டு. **// எனக்கும் கூட இசக்கியை நினைத்து பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முன் நடந்த ஒரு அசம்பாவிதம்.

சிவா said...

வாங்க பாரதி! மறு வருகைக்கு நன்றி! ஓய்வு போதும் :-). என்னோட வேகத்தில் (ஆமை தெரியும் தானே) வண்டி போகும்.

20 வருடத்திற்கு முன் நடந்தது அது. முகங்கள் மறந்து மறைந்து போய், நினைவுகளாய் மனதுக்குள் தங்கி போன சம்பவங்கள் அவை. நாமே அவனை சில சின்ன சின்ன காரியங்களில் கஷ்டபடுத்தி இருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கும். ம்ம்ம்..எல்லாம் சின்ன வயசு..

சிவா said...

வாங்க பரஞ்சோதி! உங்க நண்பரும் இசக்கி தானா?. பசங்களுக்கு சொல்லி எல்லாம் கொடுத்திருக்கிறீர்களா..புண்ணியம் செஞ்சிருக்கிறீங்க.

இசக்கியை இந்த தடவை பார்க்க முயற்சி செய்யுங்க

சிவா said...

சிவனடியார்! முதல் வருகைக்கு நன்றிங்க.
//** "எசக்கி" என்றவுடன் எதாவது மகிழ்ச்சியான கதை என்று பார்த்தால் இப்படி செய்துவிட்டீர்கள். **// என் நண்பனை நினைத்து எழுதிய ஒரு சின்ன நினைவோடை..அவ்வளவே..கதை மெதுவாக சொல்கிறேன்..மீண்டும் வந்து பாருங்க.

அன்புடன்,
சிவா

G.Ragavan said...

தூத்துடி பக்கம் எசக்கிங்குற பேரு நெறைய கேக்கலாம்.

சிவா....நீங்கள் என்னுடைய பள்ளிக்கூட நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். படித்து முடித்ததும் திக்கென்று இருந்தது. அப்பாடியோவ்!

பள்ளிக்கூடத்தில் நானும் பெரும்பாலும் அடி வாங்கியதில்லை. பத்தாம் வகுப்பில் கணக்கு வாத்தியார் அடித்தது தான் இன்னும் நினைவு இருக்கிறது. அவருக்கு நான் செல்லப்பிள்ளை. எந்தக் கணக்கையும் முதலில் போட்டுக் காட்டி நோட்டுப் புத்தகத்தில் வி.வி.வி.குட் வாங்குவேன்.

ஆனால் அன்றைக்கு என்னவொ....என்னவோ எழுதி...என்னவொ போட்டு...காட்டினேன். பளார் என்று ஒரு அறை. கண்ணாடி எகிறி விழுந்தது. அவமானம். நோட்டையும் கண்ணாடியையும் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்தேன்.

b said...

பள்ளிப்பருவகால நினைவுகளைச் சுண்டி இழுத்துள்ளீர். நன்றாக இருந்தது ஆக்கம் சிவா.

சிவா said...

வாங்க ராகவன்! ஆமாம் நம்ம ஊரு பக்கம் நிறைய இசக்கி பார்க்கலாம். பசங்க..பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே இசக்கி என்று பேர் இருக்கும்.

//சிவா....நீங்கள் என்னுடைய பள்ளிக்கூட நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்// நன்றி. நன்றி. இன்னும் நன்றாக கிளற நேரம் இல்லை.

//** எந்தக் கணக்கையும் முதலில் போட்டுக் காட்டி நோட்டுப் புத்தகத்தில் வி.வி.வி.குட் வாங்குவேன். **// எனக்கெல்லாம் குட் மட்டும் தான். இந்த பொட்டப்புள்ளைங்க தான் முந்திக்கும் :-(.

//** அவமானம். நோட்டையும் கண்ணாடியையும் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்தேன். **// இது சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமல் நடந்து விடும். நாம் செல்ல மாணவனாக வளர்ந்திருப்போம். இப்படி திடீரென்று நடக்கும் போது, நம்மால் தாங்க முடியது. நானும் பட்டிருக்கிறேன்.

சிவா said...

//** பள்ளிப்பருவகால நினைவுகளைச் சுண்டி இழுத்துள்ளீர். நன்றாக இருந்தது ஆக்கம் சிவா **// நன்றி மூர்த்தி! உங்கள் தொடர் வருகைக்கும்.

சிவா said...

உஷா அக்கா! பாராட்டுக்கு நன்றி உஷா அக்கா!

உங்க மூனாப்பு கதை ரொம்ப சுவாரசியம். உங்களிடமும் இப்போ நான் கதை கேட்க ஆரம்பித்து விட்டேன். கஷ்டபட்டு படிச்சி நாலாப்புல நல்ல வகுப்புக்கு போய்ட்டீங்க. உங்க நண்பிகள் யாராவது அந்த வகுப்பு போய் மாட்டி இருப்பாங்களே.

உண்மை தான், சில ஆசிரியர்கள் வீட்டு பிரச்சினைகளை வகுப்பில் கொண்டு வந்து நம்மை பொளந்து கட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பார்த்து பரிதாப படவேண்டியது தான்.

G.Ragavan said...

// வாங்க ராகவன்! ஆமாம் நம்ம ஊரு பக்கம் நிறைய இசக்கி பார்க்கலாம். பசங்க..பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே இசக்கி என்று பேர் இருக்கும்.//

ஏல எசக்கி...ஏல ஆறுமுகம்...ஏல சம்முகம்ன்னு கூப்புட்டா அது பயலாவும் இருக்கலாம். பிள்ளையாவும் இருக்கலாம். தூத்துக்குடிப் பக்கம் அப்படித்தான்.

// //** எந்தக் கணக்கையும் முதலில் போட்டுக் காட்டி நோட்டுப் புத்தகத்தில் வி.வி.வி.குட் வாங்குவேன். **// எனக்கெல்லாம் குட் மட்டும் தான். இந்த பொட்டப்புள்ளைங்க தான் முந்திக்கும் :-(.//

என்ன சொல்ல வர்ரீங்க இப்ப......

// //** அவமானம். நோட்டையும் கண்ணாடியையும் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்தேன். **// இது சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமல் நடந்து விடும். நாம் செல்ல மாணவனாக வளர்ந்திருப்போம். இப்படி திடீரென்று நடக்கும் போது, நம்மால் தாங்க முடியது. நானும் பட்டிருக்கிறேன். //

உண்மைதான். ஆனால் அதே ஆசிரியர் ஆண்டுத் தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு வந்து எப்படிச் செய்தாய் என்று கேட்டார்.

சிவா said...

பாராட்டுக்கு நன்றி சங்கர். முதல் தடவை வந்திருக்கிறீங்க. நேரம் இருந்தால் என்னுடை மற்ற பதிவுகளையும் படித்து பாருங்கள்.

அன்புடன்,
சிவா

சிவா said...

ராகவன்!

//** என்ன சொல்ல வர்ரீங்க இப்ப......**// ஐய்யோ! நான் ஒன்னும் சொல்ல வரலைங்க :-)). எங்க பள்ளிகூடத்துல அப்படின்னு சொன்னேன்.. ஹாஹாஹா

குமரன் (Kumaran) said...

என்ன சிவா. லீவு முடிஞ்சு வந்து ஒரு பதிவு போட்டா இப்படியா அழறமாதிரி போடறது? நீங்க எசக்கியைப் பத்தி சொல்லிக்கிட்டுப் போறப்பயே ஏதோ தோணுச்சு. கடைசியிலப் பாத்தா நினைச்சமாதிரியே சோகமா முடியுது பதிவு.

சிவா said...

குமரன்!

//** இப்படியா அழறமாதிரி போடறது? **// திடீர்னு எசக்கி பற்றி நெனைச்சேன்..அதான் இந்த பதிவு..அடுத்த பதிவுல அழவைக்காம பாத்த்துக்கறேன்.

சிவா said...

//** உங்கள் பதிவுகளை ஏற்கனவே படித்துள்ளேன் **// ரொம்ப சந்தோசம் ஷங்கர். உங்கள் வருகையில் எனக்கு ரொம்ப சந்தோசம்.