Saturday, February 11, 2006

*நட்சத்திரம்* - வர வர நாடே நல்லால்ல..

இன்று சனிக்கிழமை. பெயருக்கு தான் விடுமுறை. காலையில் இருந்தே ஒவ்வொரு வேலையாக வந்து தொலைகிறது. தொலைபேசி நாலு நாளா வேலை செய்யவில்லை. எழுதி வைத்தும் பார்க்க யாரும் வரவில்லை. ஊருக்கு போக டிக்கட் புக் பண்ணணும். இப்படி நிறைய வேலை. 'இதுக்கு பேசாம ஆபீஸ்லயே இருக்கலாம்' எண்ணிக்கொண்டே வண்டியை கிளப்பினால், வண்டி ரிசர்வ்ல கெடக்குது. இதுக்கு வேற 2 கி.மீ போகணும். இங்கேயே போடலாம்னா எல்லாம் கலப்பட பெட்ரோல். எங்க எங்க கலப்படம் பண்ணறாங்க பாருங்க. இப்படி நம்ம காச கொள்ள அடிச்சி என்ன பொழப்போ. எரிச்சலோரு கிளம்புகிறேன்.

ஒரு வழியாக பெட்ரோல் போட்டுட்டு மவுண்ட் ஸ்டேசன் போய் சேர்ந்தேன். ஏற்கனவே ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. இப்போதைக்கு முடியாது போல இருக்கே. எங்கே பார்த்தாலும் கூட்டம். இந்த மக்கள் தொகை தாங்க நம்ம நாட்டுல ஒரே பிரச்சினை. எங்க போனாலும் மணிக்கணக்கா நிக்க வேண்டிய இருக்கு. நிற்பதை தவிர வேறு வழி இல்லை. வரிசையில் போய் நின்றேன். ஏதொ ஒரு எருமை பருப்பு மாதிரி வரிசைல நிக்காம முன்னாடி போனது.என்னா திமிரு பாருங்க. 'யோய்! இங்கே நிக்கறவன் எல்லாம் கேணப்பசங்க மாதிரி தெரியுதா. லைன்ல வாவே' கத்தினேன். என்னை முறைத்துக்கொண்டே பின்னால் போய் நின்றான். ஒரு வேளை இந்த ஏரியா ரௌடியா இருக்குமோ. இந்த வாய் சும்மாவும் இருக்க மாட்டேங்குது. என்னை நானே நொந்து கொண்டேன். ரிசர்வ் பண்ணிட்டு வரும்போது மறுபடியும் முறைத்தான். எட்டிப் பாக்காம வண்டிய கிளப்பிட்டு வந்துட்டேன்.

அடுத்து நேரே எக்ஸ்சேஞ்ச் ஆபீஸ். நான் போய் சேர்ந்தவுடனே முருகன் என்னை கண்டு கொண்டான். 'என்ன சார்! இந்த பக்கம்'. 'ஏம்பா! வீட்ல டெலிபோன் நாலு நாளா வேல செய்யல. எழுதி வச்சும் யாரும் வர காணோம். எதுக்கு இப்படி படுத்தறீங்க' நான். 'இல்ல சார்! எல்லாரும் லீவுல இருக்காங்க. அதான் சார் மெதுவா நடக்குது. எழுதி வச்சவங்களுக்கு வரிசையா பார்க்கிறோம். இருங்க உங்களுக்கு எப்போன்னு பாத்து சொல்றேன்' உள்ளே போய் விட்டான் முருகன்.

'வரிசைப்படி உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும் சார்!'. 'என்னப்பா இது இன்னும் ரெண்டு நாளா. அது வரைக்கும் தாங்காது'. காசு வெட்டினாத் தான் வேலை நடக்கும் போல. அவன் மூஞ்சிலேயே காசுக்கு அடி போடுகிறான் என்று எழுதி ஒட்டி இருந்தது. ஒரு 50 ஐ தள்ளினேன். 'சரி சார். இன்னைக்கு சாயங்காலமே பண்ணிடலாம் சார்' முருகன் வரும்படி பார்த்த சந்தோசத்தில் வழிந்தான்.

வீட்டுல ரொம்ப போர் அடிக்குது. சரி புது படம் பார்க்கலாம்னு அப்படியே வண்டிய மவுண்ட் ரோட் சரவணன் கடைக்கு விட்டேன். 'என்னப்பா ஆதி சி.டி வந்துட்டா'. 'இன்னும் வரலை சார். படம் வந்து ரெண்டு நாள் தான ஆகுது. நாளைக்கு வந்துடும். பரமசிவம் இருக்கு கொண்டு போறீங்களா'. சரின்னு 20 ரூபா கொடுத்துட்டு பரமசிவத்தை கொண்டு வந்தேன். ஏதோ கஞ்சாவ கொடுக்கற மாதிரி மறைச்சி கொடுக்கறான். இப்போ ரொம்ப கெடுபுடியாம்ல. வாங்கிட்டு கிளம்பும் போது, சுத்தி போக மாச்சப்பட்டு வண்டிய குறுக்கு வழில விட்டேன். நம்ம நேரம். வழில வசூல்ராஜா...அதாங்க சென்னை டிராபிக் போலிஸ். நிறுத்தி ஏதோ மிருகத்தை கூப்பிடுவதை மாதிரி கூப்பிட்டார். 'இது ஒன் வே! தெரியுமா'. 'தெரியும் சார். நீங்க இருப்பீங்கன்னு தான் தெரியாது' என்றா சொல்ல முடியும். 'நா இந்த ஏரியாவுக்கு புதுசு சார். தெரியாம வந்துட்டேன்' முடிந்த அளவு பவ்யமா பதில் சொன்னேன். இன்னைக்கு மொய் 50 ஆ 100 ஆன்னு தெரியலை. பர்ஸ்ல 50 இருந்தா தப்பிச்சேன். 'சரி லைசன்ஸ்-அ கொடு' புடுங்கி வைத்துக் கொண்டு டிராபிக்கை கவனிக்க போய்ட்டார்.

நாமா ஏதாவது அமௌண்ட் முடிவு பண்ணி நீட்டணும். அதுவரை நம்மள எட்டிப் பார்க்க மாட்டார். 'எப்படி வசதி. வண்டிய கோர்டுக்கு கொண்டு போனா அலையணும். பார்த்து கொடுத்துட்டு போ' என்னை பார்க்காமலே பேசுகிறார். பேரம் நடக்கிறது. தெரிந்த கெட்ட வார்த்தையை எல்லாம் சொல்லி மனதுக்குள் அவருக்கு அர்ச்சனை பண்ணி விட்டு ஒரு ஐம்பதை நீட்டினேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டார். 'சே! என்ன பொழப்பு இது. எங்கு பார்த்தாலும் லஞ்சம்' திட்டிக்கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

சைதாப்பேட்டை வரும் போதே மழை பிடித்து விட்டது. ஐந்து நிமிடம் தான் மழை பெய்தது. அதற்குள் எங்கும் ஒரே தண்ணிக்காடு. பூமிக்குள்ள தண்ணி எறங்குவதே இல்லை. என்ன ஊரோ. இதுல முன்னாடி போறவனுங்க வேற அடிக்கிற சேத்துல சட்டை எல்லாம் நாஸ்தியாயிடுது. வீட்டுக்கு போற முன்னாடி வர்ற வழில அண்ணாச்சி கடைல வண்டிய நிறுத்தி பால் பாக்கெட் ஒன்னு கேட்டேன். கடை பையன் எடுத்து கொடுத்தான். 'ஒரு கவர்ல போட்டு கொடுப்பா'. 'ஏன் சார்! ஒரு பாலுக்கு கூட கவரா' புலம்பிக்கொண்டே ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொடுத்தான். இதுக்கெல்லாம் கூடைய தூக்கிக்கிட்டா அலைய முடியும். கெடைக்கிற 10 பைசாவுல 5 பைசா போச்சேன்னு எரிச்சல் அவனுக்கு.

நேரே வீட்டுக்கு கிளம்பினேன். வழியெங்கிலும் ஒரே சகதி. வண்டி குடை சாயாமல், ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். காலையிலேயே கிளம்பி விட்டதால், பேப்பர் பார்க்க கூட நேரம் இல்லை. இன்றைய பேப்பரை எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தேன். திறந்தவுடன் கொட்டை எழுத்தில் 'பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பிக்கள் லஞ்சம்'. "சே! என்னடா நாடுடா இது. எங்க பார்த்தாலும் லஞ்சம். எங்க பார்த்தலும் ஏமாத்து. ஒரே ஊழல்' புலம்பிக் கொண்டே பரமசிவத்தை சி.டி ப்ளேயருக்குள் தள்ளினேன். ரசிக கண்மணிங்க எல்லாம் தல திரைல வந்ததும் பூ போடுவது வரை தெரிகிறது. மெதுவாக திரையை போகஸ் பண்ணுகிறார்கள். இதுவும் கேமரா பிரிண்ட் தான் போல. இதையும் நல்ல பிரிண்டுன்னு சொல்லி ஏமாத்தறானுங்க பாருங்க. மறுபடியும் புலம்புகிறேன். பரமசிவம் என்னை படுத்த ஆரம்பிக்கிறார்.

36 comments:

இளவஞ்சி said...

அதுசரி! :)

ENNAR said...

காலம் கெட்டுப்போச்சு

சிங். செயகுமார். said...

நானே சரியில்லை
நாட்டை எப்படி நான் குறை சொலவது?
என் வேலை நடக்க
என்ன விலை கொடுக்கவும் தயார்

இந்த எண்ணம் எனக்கும் இருக்கே?

பெட்ரோலில் பினாயில் கலந்தால்
என் பெட்ரூமுக்கு புது கார்பெட்
சைட்டை சந்தில் நிக்கவச்சுட்டு
சுருக்க வாரேன்
சொடக்கு போட்டா எனக்கும்
கிடைக்கும் டிக்கட்
சொன்ன வார்த்தை என்னாவது
என் காதலி என் கவுரவம்!
குறுக்க எவன் வந்தாலும்
சரித்துவிடுவேன் குடலை
நானா எருமை?
நாமெல்லம்தான் எருமை
நீனே சொல்கிறாய்
டெலிபோனுக்கும் காசு குடுத்தேன்னு
கலிகாலம் இதுதான்னு புலம்புவது சரியா?
கவுருமெண்டே சொல்லிபுட்டு
கள்ள சீடி பாக்காதேன்னு
மெல்ல போயி மூனு சீடி
வாங்கி முப்பது பிரிண்ட்
காண்ட்ராக்ட் காரனுக்கு
நாலுதாரம்
கருப்புதாரில்
கள்ளதனம்
கடவுளே இது தப்பா?


முடிவில் ஒன்று

ஷோரூமில் சொன்ன வெலைக்கு
காரு வாங்கும் நீ
வயக்காட்டில்
வெயில்சுகத்தில் விளைந்த
வெள்ளரிக்காய்
வெறும் மூனு ரூபாதான்
வெட்டி நியாயம் பேசி
வெரும் ரெண்டு ரூபாய்
பெரும் திறமை உனக்கு!

கைப்புள்ள said...

சிவா சார்,
சமீப காலமா உங்க எல்லா பதிவுகளையும் படிப்பவன் நான். ஆனா இந்த பதிவு எனக்கு அவ்வளவா பிடிக்கலை. தப்பா எடுத்துக்காதீங்க. கிராமிய மணம் தவழ அழகான அனுபவங்களைக் கவிதை மாதிரி விவரிச்சதை படிச்சுட்டு இது ஏனோ டாக்குமெண்டரி மாதிரி இருந்துச்சு. இதை நாங்களும் தினம் தினம் தானே அனுபவிக்கிறோம்...அதனாலேயோ என்னவோ?

ப்ளீஸ்! தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு பட்டதை நான் சொன்னேன். இன்னொரு கிராம கதை எழுதியிருந்தீங்கன்னா அசத்தலா இருந்திருக்கும்.

மணியன் said...

A good satire.
ஒருமுறை மாநகராட்சி வருவாய்துறை அலுவலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டே அவரின் ஊழல் ஒழிப்புத் துறையின் ஊழல் பற்றி ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தார்.

ramachandranusha said...

அதுதானே, வருத்தமா இருக்கு :-)))))

சிவா said...

இளவஞ்சி... அது :-))

என்னார்! கலி காலம்யா :-))

சிவா said...

தம்பி சிங்கு! எல்லா பதிவுக்கும் சட்டு சட்டுன்னு எடுத்து விடுறியலே...எப்படி அந்த வித்தையை கத்துக்கிட்டீங்க..

என்னைய திட்டுன மாதிரியே இருக்குது :-)). "முடிவில் ஒன்று" அப்படின்னு ஒரு சுத்தியல வச்சி மண்டைல நச்சுன்னு அடிச்ச மாதிரி இருக்கு :-)).

சிவா said...

நண்பர் மோகன்ராஜ் அவர்களுக்கு! உங்கள் கருத்தை பூச்சு இல்லாமல் சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க. நான் இந்த பதிவை எழுதும் போதே, இது நமக்கு தேவையான்னு தோணிச்சி. நீங்க சொன்ன மாதிரி என்னோட பாணியில ஒரு கிராமத்து கதை விட்டுருந்தேனா நல்ல இருந்திருக்கும்.

இருந்தாலும் என்னோட ஒரு சின்ன முயற்சி இது அவ்வளவே. எனக்கு இன்றைய சமுதாயத்தின் மேல் இருக்கும் ஒரு சின்ன வருத்தம் இது அவ்வளவே. ஊரெங்கும் பாலிதீன் பைகளை கொட்டி வைத்து விட்டு, நிலத்தடி நீரே கொறைஞ்சி போச்சி அப்படின்னு புலம்புவதில் என்ன நியாயம். 'நான் ஒருவன் திருந்தினால், எல்லாம் சரியாகி விடுமா' என்று சாக்கு சொல்லி நம்மை நாமே முட்டாளாக்கி கொண்டிருக்கிறோம். அந்த கோவம் தான் இந்த பதிவு.

கிரமத்தை தவிர காதல், சமுதாயம் என்றும் முயற்சி செய்து பார்ப்போமே என்ற என்னுடைய சின்ன அல்பாசையின் விளைவே இந்த பதிவு.


உங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்து விடுங்கள். கண்டிப்பாக பின் வரும் பதிவுகளில் ஊர் கதைகள் வரும்.

அன்புடன்,
சிவா

சிவா said...

மணியன்! உண்மை தாங்க. எல்லோரும் அடுத்தவரை குறை சொல்வதில் தான் அக்கறை செலுத்துகிறார்கள். நாமாவது ஒழுங்கா இருப்போம் என்று நினைப்பது இல்லை :-) (என்னையும் சேர்த்து தான்)

சிவா said...

உஷா! :-))). எனக்கும் கூட தாங்க :-))

Vasudevan Letchumanan said...

அன்பு சிவா,

தங்களின் முந்தைய பதிவுகள்
கடந்த காலத்தை 'ஞாபகம் வருதே'
பானியில் எழுதினீர்கள்.

இந்தப் பதிவோ- அப்பட்டமான
நிகழ்கால யதார்த்தப் பதிவு.

முன்பு மனப்பதிவால் கலக்கினீர்.
இப்போது, மனப்பாதிப்பால் கலங்கினீர்,
என்று கருதுகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
எல்.ஏ.வாசுதேவன்.

சந்தோஷ் aka Santhosh said...

சிவா மக்கள் தான் லஞ்சம் வாங்க தூண்டுறாங்க. சும்மா அதிகாரிங்களை நாம் சப்பை கட்ட உபயோகப்படுத்துகிறோம் அவ்வளவு தான். நான் இங்க செல்லி இருக்கேன் பாருங்க. http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_31.html

தாணு said...

சிவா
லஞ்சம் வாங்குறதைப் பத்தி நமக்கு வேறே அபிப்பிராயம் இருந்தாலும், கொடுக்காமல் வேலை நடப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். பாலீதீன் பொருட்களை உபயோகிக்காமல் நம் வரையிலாவது மாற முயற்சிப்பது சமுதாய சிந்தனை; லஞ்சமே கொடுக்காமல் காரியம் நடக்க வேண்டுமென்று காத்திருந்தால் கெடப்போவது நம் கடமைகள்.
அறுபது வயசு வாக்கில் நம்மால்தான் வாழ்க்கை தொடரப் பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாத போதுதான் லஞ்சம் கொடுக்க முடியாதுன்னு வீறாப்பாக இருக்கவும் முடியும், `இந்தியன்’ தாத்தா மாதிரி சொருகவும் முடியும். அதுவரை நாமெல்லோருமே சூழ்நிலைக் கைதிகள்தான்.அதுவரை //தெரிந்த கெட்ட வார்த்தையை எல்லாம் சொல்லி மனதுக்குள் அவருக்கு அர்ச்சனை பண்ணி விட்டு ஒரு ஐம்பதை நீட்டினேன்// நிலைமைதான் எல்லோருக்கும்

கைப்புள்ள said...

சிவா,
ஏனோ இப்பதிவை முதல் முறை படிக்கும் போது அது ஓரு Satire(நையாண்டி) என்றே தோன்றவில்லை...மற்றவர்களுடைய பின்னூட்டங்களை படித்த பின் தான் எனக்கு அது விளங்கியது.

என்னடா இது பாரதிராஜா மாதிரி கதை சொன்னவரு திடீர்னு அன்றாட வாழ்க்கையை அப்படியே எழுதறாரேனு நான் நெனச்சுட்டேன். என்ன சொல்ல வர்றாருன்னு புரியலையேனு யோசிச்சி தான் மேலே உள்ள பின்னூட்டத்த போட்டேன். மத்தபடி கிராமத்துக் கதையை மட்டுமே நீங்க எழுதணும்னு சொல்ல வரலை.

Satireனு எல்லாரும் சொல்றாங்களேனு நெனச்சு இன்னொரு தரம் படிச்சு பார்க்கும் போது தான் அடடா இந்த விஷயம் நம்ம மண்டைக்கு மட்டும் தான் வெளங்காம போயிருக்கு...மத்த எல்லாரும் கப்புனு கற்பூரமா முதல் தரமே புடிச்சுக்கிட்டாங்கன்றதும் புரிஞ்சது.

'பாசத்துக்குரிய இந்த பாரதிராஜா' ஒரு சிகப்பு ரோஜாக்களையும், ஒரு கேப்டன் மகளையும் எடுங்க(எழுதுங்க)...அதையும் நான் படிப்பேன். கோச்சுக்காம பொறுமையா வெளக்கியதுக்கும் ஒரு நன்றிண்ணா!

குமரன் (Kumaran) said...

நல்லாக் கீதுபா சனியன் கத....இல்ல....சனிக்கெழம கத....

சிவா said...

எல்.ஏ.வாசுதேவன்! உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி. உங்கள் தொடர் வருகைக்கு நன்றி :-)

தெருவில் பார்ப்பது எல்லாம் எரிச்சலாகத் தானே வருகிறது. நிறைய பேர் தன்னால் முடிந்த அளவு நேர்மையாக இருப்பதில்லை. ஆனால், அரசியல் சரியில்லை, நாடு சரியில்லை என்று நீட்டி முழக்கி ஆரம்பித்து விடுகிறார்கள். நீங்க எப்படின்னு திருப்பி கேட்டீங்கன்னா..நான் 100% ஒழுங்கு என்று சொல்ல மாட்டேன். முடிந்த அளவு முயற்சி செய்யலாமே என்பது தான் என் ஆதங்கம்.

சிவா said...

வாங்க சந்தோஷ்! நான் உங்கள் பதிவை முன்பே பார்த்து விட்டேன். இங்கே நான் சொல்வது லஞ்சம் மட்டும் அல்ல...சுற்றுப்புற சூழல், ஊழல், இன்னும் நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் தான்..

சிவா said...

தாணு! //** வேலை நடப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்.**// உண்மை தான். சில இடங்களில். சில இடங்களில் நம் சொகுசுக்காக நாமே ஆரம்பித்து விடுவதும் இருக்கு தானே :-))

//** பாலீதீன் பொருட்களை உபயோகிக்காமல் நம் வரையிலாவது மாற முயற்சிப்பது சமுதாய சிந்தனை **// நான் சென்னையில் இருக்கும் போது கடைக்கு போனால் கூடையை எடுத்து போவதுண்டு, என் மனைவியும் அப்படியே..'ஆமாம்! நீங்க ஒருத்தரால தான் ஊரே திருந்த போகுது' அப்படின்னு எங்க வீட்டம்மா நக்கலடிப்பாங்க :-)).

வீட்டு முன்னாடி தண்ணி தேங்கிட்டுன்னு நல்ல இருக்கிற ரோட்ட வெட்டி விட்ட ஆளுங்களையும் பார்த்திருக்கிறேன். அப்புறம் அது உடைஞ்சி உடைஞ்சி வருடம் பூராவும் அந்த இடம் வந்தால் வண்டி குதிக்கும். அவனிடம் பேசி பார்த்தீங்கன்னா, 'நாட்டுல ஒரே லஞ்சம். ஆத்துல மணல தோண்டிரறாங்க..நீர் வரத்தே கொறைஞ்சி போகுது' அப்படி இப்படின்னு புலம்புவான். இப்படிதானே நிறைய பேர் இருக்கிறாங்க...இவங்களை என்ன பண்ணுறது :-(

Sivakumar said...

பாராட்ட பட வேண்டிய புதிய முயற்சி. தேறி விடுவீர்கள். இது கற்பனைதானே. கொஞம் மசாலா கலந்து எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இல்லை இதுவும் உண்மை சம்பவங்களோ?

பாரதி said...

சிவா,

லஞ்சத்தைப் பற்றி satire ஆக நீங்கள் பதிவு செய்திரூக்கும் கருத்துகளில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

லஞ்சம் மட்டும் ஒழிந்து விட்டால் நாடு சுபிட்சமாகிவிடும் என்ற தவறான எண்ணம் பதிவு செய்யப் படுவது சரியல்ல.

நீங்கள் பதிவு செய்திருக்கும் நடுத்தர வர்க்க நாயகனின் பிரச்சினைகள் மட்டும்தான் அனத்து மக்களூக்குமான பொதுவான பிரச்சினைகள் என்று கொள்ள முடியாது.

முன்பதிவு செய்யப்படும் பயணமும்,தொலைபேசியும்,இருசக்கர வாகனமும், வி.சி.டியும் இல்லாத அன்றாடங்காச்சிகளின் பிரச்சினைகள் எங்கும் அழுத்தமாகப் பதிவு செய்யப் படுவதில்லை.

ஊடகங்களும், சினிமாவும், அரசியல் கட்சிகளும் கூட நடுத்தர வர்க்க நல விரும்பிகளாகவே காட்டிக் கொள்கின்றன.

அதனாலேயே நமக்குள்ள பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் நாடே கோவிலாகி விடும் என்ற எண்ணம் மேலிடுகிறது.

லஞ்சம் என்பது நோயின் அறிகுறி மட்டுமே... வழக்கம் போல நாம் defaultஆக symptom க்கு மட்டுமே மருந்து தேடி அலைகிறோம்.

Anonymous said...

//லஞ்சம் என்பது நோயின் அறிகுறி மட்டுமே...

Then what's the illness?

சிவா said...

அண்ணா ( எங்க அண்ணன் தாம்பா)
//** பாராட்ட பட வேண்டிய புதிய முயற்சி. தேறி விடுவீர்கள். **// நன்றி :-)

//** கொஞம் மசாலா கலந்து எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் **// இதை எழுதிய போது மசாலா ஒன்றும் தோன்ற வில்லை..

சென்னைல இருக்குற எல்லாத்துக்குமே டிராபிக் போலிஸ் நண்பன் மாதிரி தான். அடிக்கடி பார்த்துப்போம் :-))

சிவா said...

பாரதி,

//** லஞ்சம் மட்டும் ஒழிந்து விட்டால் நாடு சுபிட்சமாகிவிடும் **// நான் அப்படி சொல்லலீங்களே :-))

//** வி.சி.டியும் இல்லாத அன்றாடங்காச்சிகளின் பிரச்சினைகள் எங்கும் அழுத்தமாகப் பதிவு செய்யப் படுவதில்லை. **// அன்றாடங்காச்சிகள் நாட்ட பற்றி அவ்வளவா பேசறது இல்லை. அவன் பொழப்ப பார்க்கவே நேரம் இல்லை. நான் சொன்னது நம்ம கதை கதாநாயகன் மாதிரி ஆளுங்களை தான் :-))

//**லஞ்சம் என்பது நோயின் அறிகுறி மட்டுமே **// சத்தியமா நான் லஞ்சம், லஞ்சம் ஒழிக்கணும் என்று இந்த பதிவில் சொல்லலைங்க..நம்மால முடிஞ்ச சில விசயங்களை கடைபிடிக்கலாமேன்னு தான் சொன்னேன். அதனால நாடே சுபிட்சமாயிடும் என்று எல்லாம் சொல்லலை..

நீங்க பாட்டுக்கு போய் 'அன்புள்ள சிவாவுக்கு' அப்படின்னு ஒரு பதிவு போட்டுடாதீங்க...என்ன :-)) (சும்மா..ஜாலியா தான் )..

சிவா said...

நன்றி குமரன்.

G.Ragavan said...

சிவா, நேற்று ஒரு நிகழ்ச்சி. அதாவது 11-02-2006. பெங்களூரி.

நண்பனோடும் அவனது குடும்பத்தோடும் வெளியே போய் சாப்பிட்டு விட்டு வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு உதடுகள் சிவந்து கிடக்க பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தேன். இரவு பத்தரை. பின்னால் இன்னொரு நண்பன். அவனையும் வழியில் இறக்கி விட வேண்டும்.

ஓல்டு மெட்ராஸ் ரோடில் இருந்து 80 அடி ரோட்டிற்குத் திருப்பும் பொழுது ஒரு இளம் போலீஸ் கையைக் காட்டி வண்டியை நிறுத்தினார். குடித்திருக்கின்றேனா என்று கேட்டார்.

ஹெல்மெட்டைக் கழற்றி இல்லை என்றேன் கன்னடத்தில்.

லைசென்சைக் கேட்டார். பையில் தூழாவும் பொழுதுதான் தெரிந்தது அது வீட்டில் இருப்பது. ஒரு திக். நூறு ரூபாய் தொலைந்தது என்று நினைத்தேன்.

நான் : மனையல்லி இதே சார். (வீட்டுல இருக்கு சார்)

போலீஸ் : மனே எல்லி இதே (வீடு எங்க இருக்கு?)

நான் : சீதே ஹோகி...கொனையல்லி ரைட் தொகண்டரே பருத்தே சார். (நேராப் போயி முக்குல ரைட் திரும்புனா வரும் சார்)

போலீஸ் : சரி. காடி இட்டு பிட்டு, மனே ஹோகி தொகண்டு பன்னி. (வண்டியப் போட்டுட்டு போய் எடுத்துட்டு வாங்க)

நான் : (பின்னால் இருக்கும் என் நண்பனைக் காட்டி) நன்ன ஃபிரண்டு இருத்தானே சார். நான் பைக்கல்லே ஹோகி பேக தொகண்டு பர்த்தினி. (என்னோட ஃபிரண்டு இருப்பான். நான் பைக்ல போய் வேகமா எடுத்துட்டு வர்ரேன்.)

போலீஸ் : (கொஞ்சம் யோசித்த பின்) சரி. பரவாகில்லா. ஹோகி. (சரி. பரவால்ல. போங்க.)

சட்டுன்னு வண்டிய எடுத்துட்டு ரெண்டு பேரும் வந்துட்டோம்.

சிவா said...

ராகவன்! பரவாயில்லையே..விட்டுட்டாங்களா
:-)..நண்பனை விட்டுட்டு அப்படியே எஸ் ஆகலாம்னு நெனைச்சீங்களோ :-)))...கன்னடம் தெரியலன்னா கஷ்டம் தான்..இல்லையா.. ( எங்க சித்தி வீடு கூட கர்னாடகாவில் டிப்டூரில் இருக்குது...ரெண்டு மூனு தடவை போயிருக்கிறேன்..'நின்ன ஹெசரு ஏனு' 'ஊட்டாயித்தா' 'எஸ்டு' 'அல்லி நோடுத்தீரே' அப்படி சின்ன சின்ன வார்ததைகள் தெரியும் :-))

G.Ragavan said...

// பரவாயில்லையே..விட்டுட்டாங்களா
:-)..நண்பனை விட்டுட்டு அப்படியே எஸ் ஆகலாம்னு நெனைச்சீங்களோ :-)))...//

அதெல்லாம் இல்லீங்க. வீட்டுல லைசென்ஸ் இருந்தது. கண்டிப்பா கொண்டு வந்து காட்டீருப்பேன். முந்தி ஒரு வாட்டி ஒரு போலீஸ் கிட்ட வீட்டுல இருக்குன்னு சொன்னேன். மூனு வருசம் இருக்கும். யோசிச்சிட்டு...சரி...போய்க் கொண்டு வான்னு அனுப்பீட்டாரு. நானு வீட்டுக்குப் போய் லைசென்ஸ் கொண்டு வந்து காட்டினேன். அவர் ஆச்சிரியப் பட்டுப் போயிட்டாரு. நான் வரமாட்டேன்னு நெனச்சிருப்பாரு போல.

// கன்னடம் தெரியலன்னா கஷ்டம் தான்..இல்லையா.. ( எங்க சித்தி வீடு கூட கர்னாடகாவில் டிப்டூரில் இருக்குது...ரெண்டு மூனு தடவை போயிருக்கிறேன்..'நின்ன ஹெசரு ஏனு' 'ஊட்டாயித்தா' 'எஸ்டு' 'அல்லி நோடுத்தீரே' அப்படி சின்ன சின்ன வார்ததைகள் தெரியும் :-)) //

இருக்குற ஊருக்குத் தக்க மொழியக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும். அதுதான் முறை. நல்லதும் கூட.

கீதா said...

//பரமசிவம் என்னை படுத்த ஆரம்பிக்கிறார்//

இது நீங்களா தேடிச் சென்ற வினை.. ஒன்னும் செய்ய முடியாது..ம்ம்

சும்மா சும்மா குறை சொல்லாதிங்க. நீங்க ஒழுங்கா இருந்தா புலம்பலை கம்மி பன்னியிருக்கலாம்

1.//வண்டி ரிசர்வ்ல கெடக்குது //- இது யார் தப்பு.. ரிசர்வ் விழப்போவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும இல்லையா..முன்னமே சும்மா இருக்கும்போதே போய் நிரப்புறதுக்கென்னா
2.//ஒரு 50 ஐ தள்ளினேன்//- உங்க வேலையாகனுமின்னு லஞ்சம் கொடுத்தது யார் தப்பு. லஞ்சம் வாங்கறாங்க வாங்கறாங்கன்னு சொன்னா மட்டும் போதாது.. கொடுக்காமயும் இருக்கணும். 2 நாள் ஆனா ஆகுதுனு விட வேண்டியது தானே..
3.//ஏதோ கஞ்சாவ கொடுக்கற மாதிரி மறைச்சி கொடுக்கறான்// ஏன் தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டியதுதானே.. இங்க யாரு வாங்கச்சொன்னா??

நீங்க குறையா சொன்னதாலே நானும் குறையா சொன்னேன்.. அவ்வளவுதான்.

எழுதி இருப்பதெல்லாம் உண்மைதான்.

அன்புடன்
கீதா

சிவா said...

கீதா! சரியா சொன்னீங்க..நான் சொல்ல வந்தத பாதி புரிஞ்சிக்கிட்டீங்க..இன்னும் பாதி 1. பெட்ரோல் பங்க்-ல கலப்படம், ஊழல் பண்ணுறான்னு பொலம்பிட்டு, நாம திருட்டு வி.சி.டி வாங்கி பார்க்கிறேன்...2. ரிசர்வ் பண்ணும் போது வரிசைல இல்லன்னா சண்டை போடுறேன்...ஆனா தொலைபேசி சீக்கிரம் வருவதற்கு வரிசையை மீறுகிறேன்..3. போலிஸ் காரன் லஞ்சம் வாங்கினா பொலம்பறேன், ஆனா தொலைபேசி வர நானே லஞ்சம் கொடுக்கிறேன். ...

- இப்பவாவது நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா :-)))

கீதா said...

அதான் சொன்னேனே சிவா..

//2.//ஒரு 50 ஐ தள்ளினேன்//- உங்க வேலையாகனுமின்னு லஞ்சம் கொடுத்தது யார் தப்பு. லஞ்சம் வாங்கறாங்க வாங்கறாங்கன்னு சொன்னா மட்டும் போதாது.. கொடுக்காமயும் இருக்கணும்//

உங்க வேலையாகணுமின்னா என்ன வேணா செய்விங்க.. அடுத்தவன் செய்தா குத்தம் சொல்றது..

(நீங்க என்ன சொன்னிங்கன்னு புரியாம கூட இருக்குமா... என்னடா மனுஷம் ஒரேயடியா பொலம்புறார்னு நினைக்கலை..அதெப்படி திடுதிப்புனு ஒரு புலம்பல் வரும் அங்கருந்து :) )

அன்புடன்
கீதா

சிவா said...

கீதா! சும்மா ஊர்கதையில் இருந்து வித்தியாசமா முயற்சி பண்ணினது இது..அவ்வளவே..நாம அடுத்தங்களுக்கு அறிவுரை சொல்லுற அளவுக்கு இன்னும் யோக்கியனா வளரலை :-))) ...

Karthik Jayanth said...

சிவா,
good satire.
2 வாரமா கொஞ்சம் வேலை ஜாஸ்தி.இப்பதான் கடைசி 3 நாள் பதிவு படிச்சேன்.

உங்க பள்ளி நினைவுகள் பதிவும் அருமை. 5 வகுப்பு பத்தி கண்டிபா பதிவு போடவும்.

மண்டபத்தின் (thamizmanam) "கிராமத்து ராசா" பட்டம் உமகே.

ஆள்தோட்டபூபதி said...

உங்கள் satire பிடித்திருக்கிறது. மிக அருமையான முயற்சி. நானும் இது குறித்து ஒரு பதிவு இட வேண்டும் என வெகு நாட்களாய் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

சிவா said...

வாங்க கார்த்திக் ஜெயந்த்! பாராட்டுக்கு நன்றி :-). என்னுடைய நட்சட்திர வாரத்தில் எல்லா பதிவுகளையும் படிச்சதுக்கு ரொம்ப நன்றி கார்த்திக் :-)

//** உங்க பள்ளி நினைவுகள் பதிவும் அருமை. 5 வகுப்பு பத்தி கண்டிபா பதிவு போடவும். **// ஆமாம். பள்ளிக்கூட நினைவுகள் நிறைய இருக்கு. சீக்கிறம் ஒன்றை வலையேத்தறேன்..

சிவா said...

ஆள்தோட்டபூபதி!

//** உங்கள் satire பிடித்திருக்கிறது. மிக அருமையான முயற்சி. **// நன்றிங்க..ஏதோ என்னுடைய ஒரு சின்ன முயற்சி. உங்கள் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது. நீங்களும் இது பற்றி ஒரு பதிவு போட போறீங்களா..போடுங்க..போடுங்க
:-))