சில என் பள்ளிக்கூட நினைவலைகள் உங்களுடன்.
அப்போல்லாம் 6 வயசுல தாங்க பள்ளிக்கூடம். அதுவும் 'நா போமாட்டேன்..போமாட்டேன்' அப்படின்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அப்பா ரெண்டு அடிய போட்டு பள்ளிக்கூடத்துல போய் விடுவாங்க. அங்கே போனா, எனக்கு ஏகப்பட்ட கிராக்கி. டீச்சர் வேற எங்கம்மா கூட அஞ்சாப்பு ஒன்னா படிச்சாங்கலாம். அவங்க B கிளாஸ் டீச்சர் கூட சண்டை. நாந்தான் ராசாவ எடுப்பேன்னு. ஒரு வழியா எங்கம்மா ப்ரண்டு பூமணி டீச்சர் போட்டியில ஜெயிச்சி என்ன 1 ஆ வகுப்புல தூக்கி போட்டாங்க. வீட்டுல நாம கடக் குட்டியா இருந்தோம்னு வச்சுக்கோங்க, நம்ம அண்ணன், அக்கா எல்லாம் பள்ளிக்கூடத்துல நமக்கு நல்ல பேர வாங்கி வச்சிருப்பாங்க. போய் சேந்தவுடனே 'ஓ! அவனோட தம்பியா..நல்ல புள்ளையாச்சே' அப்படின்னு நமக்கும் சேர்த்து ஒரு நற்சான்றிதழ் கொடுப்பாங்க. அப்புறம் நாம வெளியேறுவதற்குள்ள அண்ணன், அக்கா சேர்த்து வச்ச பேர மொத்தமா நாஸ்தி பண்ணிடுவோம். அது வேற கத.
ஒன்னப்புல சிலேட்டு எல்லாம் கெடையாது. ஒரு பிடி மண்ண எடுத்து அதுல 'அ..ஆ' எல்லாம் போடுவோம். மூனாப்புல தான் ABCD எல்லாம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே ஒரே டீச்சர் தான் இங்கிலீசு சொல்லி கொடுப்பாங்க. அப்புறம் தான் சிலேட்டு. அதுக்கு மாக்குச்சி, கல்லுகுச்சி, பம்பாய் குச்சின்னு எழுத எத்தனை வகை குச்சி. அதையும் சில பயபுள்ளைங்க தின்னே தீத்திருங்க. 'டீச்சர்! பையன பாத்துக்கோங்க. குச்சி ரொம்ப திங்கறான்'னு மணிகண்டன் அம்மா அடிக்கடி சொல்லிட்டு போவாங்க. அவன் பேரே குச்சி தின்னி.
மதியம் ஆச்சின்னா, நானும் மத்த பயலுவ எல்லாம் சத்துணவு அக்காவுக்கு உதவி பண்ணி கொடுத்துக்கிட்டு இருப்போம். கிணத்துல தண்ணி எறச்சி ஊத்துறது, உப்பு புளி வாங்கியாறது அப்படின்னு செஞ்சிக்கிட்டு கெடப்போம். நமக்கு சோறு போடுற அக்கா இல்லையா.
எனக்கு ரொம்ப நல்லா நியாபகம் இருக்கிறது என்னோட அஞ்சாப்பு தான் (செல்லையா தெரியுமுல்லா). இன்னொரு நண்பன் கிருஷ்ணன். அவன் தான் டீச்சருக்கு செல்லப் பிள்ளை. 'போடா. போய் தலைகிழா நில்லு' அப்படின்னு டீச்சர் சொன்னா இவனும் போய் ஒரு முக்குல போய் குட்டிகரணம் அடிச்சிக்கிட்டு நிற்பான். வகுப்புல முதல் மாணவன். அப்போல்லாம் கிட்ட தட்ட ஒரு 10 பேரு முதல் ரேங்க் தான். அதுல இந்த பொட்ட புள்ளைங்க இருக்கே அது ஒரு 8 இருக்கும். நானும் கிருஷ்ணனும் மற்ற ரெண்டு பேரும்.
ஒரு தடவை எங்க வகுப்புக்கு தண்ணி மண் பானை வாங்க சந்தைக்கு போய் ஒரு பானை வாங்கி வந்தோம். வரும் போது வெயிலில் கால் சூடு தாங்க முடியாம, பானையை போட்டு உடைத்து விட்டோம். சந்தையில் இருந்து பள்ளிக்கூடம் வரை ஓன்னு அழுதுகிட்டே வந்தோம். டீச்சர் அடிப்பாங்களோன்னு தான். இப்படி நிறைய (அஞ்சாம் கிளாசுக்கே ஒரு தனி பதிவு போடலாம். பிறகு)
அப்புறம் நான் அந்த பள்ளிக்கூடத்துல நிம்மதியா படிக்கிறது புடிக்காம, என்னை இங்கிலீசு மீடியத்துல போடலாம்னு எங்க அண்ணன் ஹெட்மாஸ்டர் கூட சண்டை போட்டு டீ.சி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்தாங்க. இங்கிலீசு மீடியம்னா A கிளாஸாம்ல. என் நண்பன் கிருஷ்ணனும் அதே வகுப்பில். 'ஏல! நீயும் இங்கே தான் இருக்கியா மக்கா' அப்படின்னு ஒரே சந்தோசம். வகுப்புல மொத்தம் 80 பேரு. வாத்தியார் வந்து Atmosphere அப்படின்னாலே எனக்கு தலை கிர்ருன்னு சுத்தும். இவ்ளோ பெரிய வார்த்தையா இருக்கேன்னு. C for Cat ..D for Dog.. அந்த ரேஞ்சில தான் அப்போ நம்ம இங்கிலீசு இருந்திச்சி. அப்புறம் தான் விசயமே தெரிஞ்சது இந்த 80 பேருக்கும் ஒரு நுழைவு தேர்வு இருக்கு, அதுல தேறலைன்னா அடிச்சி வெறட்டிருவாங்கன்னு. ஏதோ வல்கேனோ (Volcano) அப்படின்னு ஒன்ன கொடுத்து தமிழ்ல எழுத சொன்னாவ. என்னாடா இது வல்கேனோ...நம்ம கல்கோனா முட்டாய் மாதிரி ஒரு முட்டாயோன்னு நெனைச்சி மொழிபெயர்த்தலில் சும்மா பூந்து வெளையாடிட்டேன் (கல்கோனா முட்டாய் தெரியுமா..சீடை மாதிரி இருக்கும்..காலைல வாயில போட்டா..மதியம் வரைக்கும் கரையாது..சுமா கல்லு மாதிரி கெடக்கும்). அப்புறம் தான் தெரியும் வல்கேனோன்னா எரி மலையாம்ல.
அடுத்த நாள் என்னோட பைய எடுத்துக்கிட்டு 'அன்னா இருக்குல்லா..வரிசையா கிளாஸு..
அதுல ஏதாவது ஒன்னுல போய் ஒக்காந்துக்கோன்னு வெரட்டி உட்டுட்டாங்க. நானும் குத்து மதிப்பா D வகுப்பு முன்னாடி போய் பரிதபமா போய் நின்னேன்.. ஆசிரியர் 'என்னப்பு! என்ன வேணும்' அப்படின்னு கேட்டாரு...'ஒன்னுமில்லைய்யா! அந்த கடைசில ஒரு வகுப்பு இருக்குல்லா..அங்கே இருந்து வெரட்டி விட்டுட்டாங்க' அப்படின்னு சொன்னேன். உள்ளே இருக்குற பயலுவ எல்லாம் என்னைய ஒரு மாதிரி பாத்தானுவ. அப்புறம் என்னைய உள்ளே கூட்டிக்கிட்டாரு...அதோட முடிஞ்சது நம்மோட ஆங்கில கனவு..எனக்கு ஒரே ஒரு கவலை...கிருஷ்ணன் பாசாகி அங்கேயே தங்கிட்டான்...'இனி ஒரே வகுப்புல வரவே முடியாதாம்ல' ரொம்ப சோகமா பேசிக்கிட்டோம்.
இங்கிலீசு மீடியம் பசங்க எல்லாம் ஒரு ரேஞ்சில இருக்குறானுவ..நமக்கு பார்த்தாலே ஏதோ இங்கிலீசு கார தொரைய பாக்குறப்புல இருக்கு..அப்புறம் கிருஷ்ணன் கூட அவ்வளவா ஒட்டுதல் இல்லாமலே போச்சி. ஆறாப்புல நான் தான் ஒன்னாம் ரேங்க். நல்லா படிக்கிற அஞ்சு பேர எடுத்து ஆளுக்கு ஒரு 10 மாணவர்களை மேய்க்க கொடுத்திருப்பார்கள். வகுப்பு முடிஞ்சதும் 10 பயலுவலுக்கிட்டயும் ஒப்பிக்க சொல்லி, ஒப்பிக்காதவனை போட்டுக்கொடுப்பது தான் எனக்கு கொடுக்கப் பட்ட வேலை.
மதியம் ஆச்சினா, நானும் முருகனும் தட்டை தூக்கிக்கிட்டு சத்துணவு சாப்பிட கெளம்பி விடுவோம். சத்துணவா அது...செத்த உணவு...உப்பும் இருக்காது..உறைப்பும் இருக்காது..சில சமயம் புழு கூட கிடக்கும்..நானும் முருகனும் ஆளுக்கு அஞ்சு பைசா போட்டு கடைக்கு போய் பச்ச மொளகா வாங்கி வச்சிருப்போம். சும்மா நறுக்குன்னு கடிச்சிக்கிட்டு சாப்பிட்டோம்னு வச்சிக்கோங்க..தேவாமிர்தம்.
இப்படியே வாழ்க்கை 10 வரைக்கும் போச்சி. எங்க பத்தாப்புக்கு ஒரு ஆசிரியர் புதிதாக வந்திருந்தார். பள்ளிக்கூடத்துக்கே அவர் புதிது. எங்கள் வகுப்பு ஆசிரியர். ரொம்ப நல்ல மனுசங்க. சொந்த காசுல பேப்பர், பேனா எல்லாம் வாங்கி எங்களுக்கு கொடுப்பார். ரொம்ப அன்பா இருப்பார். நான் பள்ளிக்கூடத்துக்கு லீவே போடலைன்னு எனக்கு ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் எல்லாம் பரிசா கொடுத்தார். எல்லோரும் பரிச்சை எழுதிட்டு பொது தேர்வு மதிப்பெண் எல்லாம் வந்தது. சொல்லலாம்னு கிளம்புனா அவரு செத்து போய்ட்டாருன்னு வகுப்பு மக்கா வந்து சொன்னான். எல்லோரும் அவரு வீட்டுக்கு போய் அழுதுட்டு வந்தோம். எங்களுக்காக ரொம்ப உழைத்த ஆசிரியர். மனசே கேக்கலை.
நம்ம ஆசை எங்கே விட்டது. மறுபடியும் வீட்டுல 11ஆம் வகுப்பிற்கு இங்கிலீசு மீடியம் கேட்டாங்க வீட்டுல. உடனே கொடுத்திட்டாங்க. எனக்கு ஒரே சந்தோசம், கிருஷ்ணன் கூட சேர்ந்து படிக்கலாம்லா. வகுப்பில் போய் தேடினேன். அவனை காணோம். விசாரித்து பார்த்ததில், படிக்க வசதி இல்லாமல் வீட்டில் படிப்பை நிப்பாட்டி விட்டார்களாம். ஏண்டா போய் சேர்ந்தோம் என்று ஆகி விட்டது. என்னை மாதிரியே ஒரு 5 பசங்க, தமிழ் மீடியத்துல இருந்து சேந்திருந்தானுங்க. முதல் பரிட்சைல தமிழ், ஆங்கிலம், கணிதம் தவிர எல்லாம் காலி. விலங்கியலில் மட்டும் பாஸாக ஒரு மார்க் தேவை பட்டது. சரி விழுற அடியில ஒன்னு கொறையுமேன்னு ஆசிரியரிடம் போய் 'சார்! ஒரு மார்க் போடுங்க சார்' அப்படின்னு கேட்டேன். 'தாவரவியலில் எத்தனைல' அப்படின்னார் ' அதுவும் ஊத்திக்கிச்சி சார்' அப்படின்னேன். 'லே! மொத்தமா ரெண்டையும் சேர்த்து தாம்ல பார்ப்போம். கூட்டி கழிச்சி பாத்தா, நீ எப்படியும் பெயிலு தாம்ல. ஓடி போல' அப்படின்னு ஒரு மார்க் போட மறுத்திட்டார். அப்போல்லாம் பண்ணிரண்டாம் வகுப்பிலும் டவுசர் போட்டுக்கிட்டு தான் போவோம். 10 படிக்கும் வரைக்கும் படாத அடிக்கு அன்னைக்கு மொத்தமா வாங்கினேன். என் கூட வந்த மத்த 5 பயலுவலுக்கும் அதே கதி..அடுத்த நாள் பார்த்த மத்த பயலுவ எல்லாம் மூன்றாம் வகுப்பில் போய் மண்வெட்டிய புடிச்சிக்கிட்டு இருக்கானுவ...என்னலன்னு கேட்டா 'மக்கா! நமக்கு அது ஒத்து வராதுல..நமக்கு மண்வெட்டி தாம்ல சரி..மனுசன் அந்த அடிய வருசம் முழுக்க வாங்க முடியுமால' அப்படிங்கறானுங்க.
அப்புறம் கிருஷ்ணன் பாலி டெக்னிக் படித்து விட்டு, அப்புறம் தங்க நகை செய்யும் தொழில் படித்து விட்டு, இப்போ பேங்கில் வேலை செய்கிறான். போன வருடம் கல்யாணம் ஆனது. கல்யாண கார்டு கொடுக்க வீடு தேடி வந்தான். இப்பவும் போனில் பேசுவோன். என்னோட ஒன்னாம் கிளாஸ் நண்பன் இல்லையா. இன்றும் ரெண்டு பேரும் மேலே சொன்ன கதை எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.
( இன்னும் நிறைய சொல்லலாம்..சரி நம்ம வாரம் முடிய போதுல்லா..லீவுல போறதுக்கு முன்னாடி..ஒரு சின்ன நினைவலைகள்...அவ்வளவே)..
24 comments:
பள்ளி நினைவுகளை அசைபோடறதென்னவோ ஒரு சுகந்தான், நல்லா எழுதிருக்கே அப்பு, அடுத்தவன் பாஷயை கத்துக்கிறதுக்கு எவ்வளவு சிரமப்பட்டிர்ப்பீய, இப்ப தமிழ் மண நட்சத்திரமா, தமிழை காப்பாத்தி புட்டீரு, நல்லதைய்யா, வாரும், பாட்டு போட்டு எல்லாத்தையும் சந்தோஷமா வச்சக்கிடும், ரொம்ப மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!
என்ன சிவா. திடீர்ப் பதிவா? இல்லை ஏற்கனவே எழுதி வச்சிருந்ததா?
என்ன சிவா. பதிவைப் போட்டுட்டு தூங்கப் போயிட்டீங்களா? எந்தப் பின்னூட்டமும் பதிவாகலை?
பள்ளிக்கூட நினைவுகள கொட்டித் தீர்த்துட்டீங்களா? நல்ல்ல்லா இருக்கு....
ஏதோ தக்கி முக்கி மேல வந்துட்டம்னா பழைய பள்ளி ஞாபகங்கள் நல்லாதான் இருக்கு. ஆனாலும் நம்ம கூட இருந்த சேத்தாளிகள்ல பல பேரு ட்ராப் அவுட் ஆகி, இப்போ ஊருப்பக்கம் போகும்போது வாழ்க்கையின், வறுமையின் ஓரத்தில் என் நண்பன் தங்கச்சாமி மாதிரி நிற்பதைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கு .
சிவா
பள்ளிக்கூட நினைவுகளே நிறைய இருக்கும். நேரம் பத்தாததால் சுருக்கமா முடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். நட்சத்திர வாரம் முடிஞ்சுகூட எழுதலாம்., உங்க ரசிகர் கூட்டம் அப்படியேதான் இருக்கும்.
நீங்களாவது 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழி படிப்பு சேர்ந்தீங்க. நாங்கல்லாம், மருத்துவம் படிக்கும்போதுதான் ஆங்கில வழி. நமக்கு கடக் ரேகை ,மகர ரேகை தாண்டி தெரியாது. ஆங்கில வழிப் பிள்ளைகளெல்லாம் கேன்சர், ஈகுவேட்டர்ன்னு பீத்தறப்போ முழிக்க வேண்டியதுதான்!! அது ஒரு அழகிய இம்சைக் காலம்.
சிவா! அற்புதமைய்யா!!
படிக்கறதுக்கு அவ்வளவு சொகமா இருக்கப்பு!
அன்பு சிவா,
இந்தப் பதிவு என்னை ஒன்றாம் வகுப்பிற்கு பயணித்தது.
கால ஓட்டத்தில் நிகழ்வுகள் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது; பழைய
நண்பர்களையும், ஆசிரியர்களையும் தற்செயலாக சந்திக்கும் போதும் - அவர்களின் மறைவைக் கேள்விப் படும் போதும்.
தங்களின் ஒரு வாரப் பதிவுகளைப் படித்து மிகவும் இரசித்தேன்.
இனிய வாழ்த்துக்களுடன்,
எல்.ஏ,வாசுதேவன்.
வெளிகண்ட நாதர்! வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கு நன்றி!
//** அடுத்தவன் பாஷயை கத்துக்கிறதுக்கு எவ்வளவு சிரமப்பட்டிர்ப்பீய **// இன்னும் சிரமமா தான் இருக்கு :-).
குமரன்! இது திடீர் பதிவு தான். அரை மணி நேரத்தில் என்ன எழுதலாம்னு யோசிச்சி மடமடன்னு எழுதி போட்டேன். காரணத்தை இறுதி பதிவில் சொல்லி இருக்கிறேன். பாருங்க. உங்களுக்கு புடிச்சதில் ரொம்ப சந்தோசம் குமரன்.
பதிவை போட்டுட்டு ரொம்ப நேரமா காத்திருந்தேன். யாரும் பின்னோட்டம் இடலை. சரி..யாருக்கும் புடிக்கலை போல (அவசரத்துல வந்த ஆக்கம் இல்லையா) என்று தூங்க போயிட்டேன். காலைல பாத்தா, நெறைய பேரு படிச்சிட்டு சொல்லி இருக்கீங்க. சந்தோசமா இருந்தது.
தருமி சார்! தொடர் வருகைக்கு ரொம்ப நன்றி. நீங்க சொல்வது நெசம் தான். நம்மல விட அறிவாளி பயபுள்ளைங்க எல்லாம், வாய்ப்புகள் இல்லாம, வறுமையால் படிப்பை தொடர முடியாம, இப்போ வேலைக்காக கஷ்டப்படுவதை பார்க்கும் போது, மனசுக்கு கஷ்டமா இருக்கும். என்னிய விட எங்கையோ போக வேண்டிய பயலுவ..நேரத்த பாத்தீங்களா..
தருமி சார்! நீங்க கொடுத்த பதிவை படிச்சிட்டு சொல்லறேன். ( ஆமாம்! பின்னூட்டத்தில் சுட்டி எப்படி கொடுக்கிறீர்கள். அந்த வித்தையை கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்') :-)
இளவஞ்சி!
//**படிக்கறதுக்கு அவ்வளவு சொகமா இருக்கப்பு **// நன்றிங்க. பழச அசை போட்டாலே சுகம் தானே..என்ன நாஞ்சொல்றது :-)
யுகன்! முதல் வருகைக்கு நன்றி. நீங்க முதலில் போட்ட இரு பின்னோட்டங்களிலும் யுனிகோட் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். புரியாத எழுத்துக்களில் வந்திருந்தது. அதனால் நீக்கி விட்டேன். அது வேறு யாராவது போட்டிருந்தா, தயவு செய்து மறுபடி போடும் படி கேட்டுக்கறேன்.
பாராட்டுக்கு நன்றி யுகன்! ஓட்டுக்கும் நன்றி :-))
எல்.ஏ,வாசுதேவன்!
//** தங்களின் ஒரு வாரப் பதிவுகளைப் படித்து மிகவும் இரசித்தேன். **// நன்றி வாசுதேவன். உங்கள் வரவால் எனக்கும் ரொம்ப சந்தோசம்.
//** பழைய
நண்பர்களையும், ஆசிரியர்களையும் தற்செயலாக சந்திக்கும் போதும் **// உண்மை தான்..இப்பவும் என்னோட நாலாப்பு டீச்சரை பார்த்து நான் கையெடுத்து கும்பிடும் போது வரும் சந்தோசமே தனி. 'எனக்கு அப்பவே தெரியும். நீ நல்ல வருவேன்னு' அவங்க வாயால கேட்கும் போது, சந்தோசமா இருக்கும். எல்லாம் அவங்க ஆரம்ப காலத்தில் நமக்கு கொடுத்த கல்வி அறிவு தானே..
உஷா அக்கா! பாராட்டுக்கு நன்றிங்க.
//** namba annan akka ellam serthu vecha nalla perai
naam ottu mothama kedupom **// ஹாஹா...ஒன்னாங்கிளாஸ்ல இருந்து கல்லூரி வரை நமக்கு இதானே வேலை :-))
//** 5 m vagupu patri thani padhivu - kandipa podunga Siva **// நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதறேன்.
//** Yarukum, yaraiyum yematra theriyadhu!!!**// இது. ஒரு அஞ்சி பைசா முட்டாய்னாலும் ஆளுக்கு பாதியா தின்னுட்டு தோள் மேல கை போட்டுக்கிட்டு அலைஞ்சிக்கிட்டு இருப்போம். :-)
//** Yeno adhil oru perumai!!! oru Sandhosham!!! Idhu dhan Guru bhakthi!! **// பரவாயில்லையே. ஆசிரியருக்கு ரொம்ப மரியாதை செய்திருக்கிறீர்கள். நாங்க அப்படி பூஜை எல்லாம் போட்டது இல்லை. உங்க கதையும் சுவாரசியமா இருக்கே..எங்க கிட்டையும் சொல்லுங்க.
//** slate and pencil - idhai patri yum niriaya sollanam **// ஆமாம். எழுதிக்கிட்டே இருக்கலாம்..எழுதுவோம், நேரம் கிடைக்கும் போதெல்லாம்..
நன்றி உஷா, என்னுடைய நட்சத்திர வார பதிவுகள் அனைத்தையும் படித்ததுக்கு.
தாணு!
//** பள்ளிக்கூட நினைவுகளே நிறைய இருக்கும். நேரம் பத்தாததால் சுருக்கமா முடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். **// ஆமாங்க. அவசர பதிவு இது. அரை மணி நேரத்தில் தோன்றியதை முடிஞ்ச அளவு சுவாரசியமா எழுதி போட்டேன். இன்னும் உட்கார்ந்து எழுதினால், மெகா சீரியலே போடலாம்.
//** நட்சத்திர வாரம் முடிஞ்சுகூட எழுதலாம்., உங்க ரசிகர் கூட்டம் அப்படியேதான் இருக்கும்.**// :-))). ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க. நம்ம ப்ளாக் வழக்கமான வேகத்துல போகும் (வாரம் ஒன்றாவத்) :-))
ஒங்களுக்கு 11 படிக்கிற பொண்ணு இருக்கா..இனி உங்களை அக்கா என்றே சொல்லுகிறேன்..என்ன...
:-))
//** மருத்துவம் படிக்கும்போதுதான் ஆங்கில வழி.**// அப்படிப்போடு. //** அது ஒரு அழகிய இம்சைக் காலம் **// கஷ்டப்பட்டு படிச்சிருப்பீங்களே..
பாரதி!
//** விரல் பிடித்து மணலில் உயிரும், மெய்யும் கற்றுத் தந்த ஆசிரியரையும்
மறந்து போகச் செய்கிறது வாழ்க்கை **// உண்மை தான். ஒன்றாம் வகுப்பில் படிப்பு என்றால் என்னன்னு நமக்கு சொல்லிக் கொடுத்த தெய்வங்கள் அவர்கள். ஏனோ நம் வாழ்க்கை ஓட்டத்தில் ஆசிரியர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. எவ்வளவு பெரிய தவறு. இனியாவது சில ஆசிரியர்களை போய் பார்த்து பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.
அருமை சிவா....நான் எங்கெங்கோ போய் வந்தேன்...உங்கள் பதிவைப் படிக்கையில்.
//குச்சி தின்னி //
ஹா ஹா ஹா எனக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு. முட்டை தின்னி. எங்க அத்தை என்னோட டப்பாவுல முட்டை அவிச்சி வெச்சி அனுப்புவாங்க. அதுனால அந்தப் பேரு.
சத்துணவு பத்திச் சொன்னீங்க. நம்ப மாட்டீங்க....ஒவ்வொரு வேளைக்கு நான் வீட்டுல இருந்து கொண்டு போற சாப்பாட்டை சத்துணவு வாங்குற பசங்களோட மாத்திக்கிட்டும் சாப்பிட்டிருக்கேன். அதுலயும் ஒரு ருசிதான்.
இப்போ ஆஃபீசுல இத்தன கேண்டீன் இருக்கு. ஆனாலும் சரியில்லைன்னு பொலம்பல். அலம்பல். ஹா ஹா ஹா
இப்பதான் வாசிக்க நேரம் கிடைச்சுது சிவா. பள்ளிக் கால நினைவுகள் அருமை! அருமை!
வாழ்த்துக்கள் சிவா.
நினைவுகள் சுகம்
அனைவுகளாய்!
ராகவன்! 'முட்டை தின்னி'யா ! நல்லா இருக்கே பேரு :-). பாருங்க சத்துணவு எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க..இப்போ நமக்கு நல்லா சாப்பாடு கெடைக்கிற கேண்டினே போர் அடிக்குது :-)).
//** அருமை சிவா....நான் எங்கெங்கோ போய் வந்தேன் **// நன்றி ராகவன்.
//** வீட்டுல இருந்து கொண்டு போற சாப்பாட்டை சத்துணவு வாங்குற பசங்களோட மாத்திக்கிட்டும் சாப்பிட்டிருக்கேன்**// எங்க செட்டுல கூட ஒரு நண்பன் அப்படித்தான்..வீட்டு சாப்பாடு..நாங்களும் பகிர்ந்து உண்டதுண்டு :-)
நன்றி சத்தியா!
நன்றி தம்பி சிங். ( கவிதை பெரிசா எழுத நேரம் இல்லையோ :-))
சிவா,
பள்ளி நினைவலைகள் அருமை
நன்றி கார்த்திக் ஜெயந்த்
Post a Comment