எல்லா கிராமத்தை போலவே என் கிராமமும் ஒரு சுறுசுறுப்பான கிராமம். மொத்த கிராமமும் 5 மணிக்கே எழுந்து விடும். அம்மா எழுந்து முற்றம் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்பா வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருப்பார்கள். சேவல் கூவுகிறதோ இல்லையோ எங்கள் ஊர் மில் 6 மணி சங்கு சரியாக அடிக்கும். 'ஏல ராஜா! சங்கு அடிச்சப்புறமும் தூங்கறான் பாரு. எழுந்திரு' அம்மா என்னை எழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஊரில் முக்கால்வாசி பேர் வீட்டில் கடிகாரம் இருக்காது. எங்க ஊர் நூற்பாலை சங்கு தான் கடிகாரம். அதை கேட்டு, பேசத்தெரிந்த எந்த குழந்தையும் சரியாக நேரம் சொல்லும்.
ஊரில் பாதி பேருக்கு வேலை கொடுத்து வந்தது அந்த நூற்பாலை. அப்பா ஒரு சைக்கிள் கடையில் கணக்கு எழுதும் வேலை பார்த்து வந்தார்கள். கணக்காப்பிள்ளை வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆறு, ஏரி என்று நீர்வளம் எதுவும் கிடையாது.நிலத்தடி நீர் தான் ஆதாரம். ஊரை சுற்றி தென்னை தோப்புக்கள், புளிய மரங்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் பச்சை பசேல் என்று இருக்கும். ஊரில் நுழைந்தவுடன் வரவேற்கும் மாரி அம்மன் கோவில். அதை தாண்டி சுப்ரமண்ய சாமி கோவில். அதை ஒட்டி கத்தோலிக்க தேவாலயம். இப்படி 40 வீட்டிற்கு 3 கோவில்கள்.
ஆண்கள் வேலைக்கு சென்றாலும், வீட்டிற்கு வீடு ஏதாவது வேலை நடந்து கொண்டிருக்கும். பொதுவாக பனை சார்ந்த தொழில்கள்.கிராமத்தை ஒட்டி தேரி (பனங்காடு) என்பதால், காலையிலேயே பெண்கள் ஒரு அருவாளையும், தூக்குசட்டியில் கொஞ்சம் கஞ்சியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். அந்த கஞ்சிக்கும், வெங்காயத்துக்கும் ஆசைப்பட்டு நானும் அம்மா கூட நிறைய தடவை போயிருக்கிறேன். ஒரு 6 கி.மீ காட்டுக்குள் நடந்து போவோம். எங்கும் பரவி கிடக்கும் செம்மண். நிழலுக்கு ஒதுங்க கூட பனையை விட்டால் வேறு மரங்கள் கிடையாது. மழை பெய்து விட்டால் அவ்வளவு தான். ஒரு பனை ஓலையை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்போம். மதியம் சாப்பிட கொண்டு போன கஞ்சியும் கடித்து கொள்ள வெங்காயமும் தேவாமிர்தம். முடித்துவிட்டு கிளம்பும் போது தான் ஏண்டா போனோம் என்று இருக்கும். கொண்டு போன துண்டை சுற்றி தலையில் வைத்து ஒரு கட்டு ஓலையை தூக்கிவிட்டு விடுவார்கள். அந்த சுமையுடன் 6 கி.மீ நடக்க வேண்டுமே. ஊர் கண்ணில் தெரிந்து விட்டால் அப்படி ஒரு சந்தோசம். அப்போ அப்போ வழியில் கண்ட காளான்கள், விழுந்து கிடக்கும் பனம்பழம், முளைத்த பனங்கொட்டை என்று அள்ளி வருவதுண்டு. வந்து சேர்ந்ததும் காளானை சுட்டு தின்போம். அம்மா பனம்பழம் சுட்டு அருவாளால் கொத்தி சின்ன சின்னதாக கொடுப்பார்கள். அந்த வாசனைக்கே சுத்தி இருக்கிற அத்தை, சித்தி எல்லோரும் வந்துவிடுவார்கள். எல்லோரும் சுற்றி இருந்து பேசிக்கொண்டே தின்று கொண்டிருப்போம்.
இதை போல சில வீடுகளில் தென்னை ஓலையை வைத்து கீற்று முனைவார்கள். எப்படியோ தினமும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். எவருக்கும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. சந்தோசம். அது மட்டுமே நிறைந்த கிராமம் அது. சண்டைகளும் உண்டு. அருவாள் வரையும் போகும். ஆனால் வெட்டியது எல்லாம் கிடையாது. சும்மா 'ஏய்! வெட்டிருவேனாக்கும்' என்பதோடு சரி. அதுவும் பெரியவர்களை தாண்டி வராது. அந்த சண்டையும் பொதுவாக சின்ன பசங்க எங்களால் முடிவுக்கு வரும். 'வா! ராஜா! உள்ள வா! எதுக்கு வெளியயே நின்னுக்கிட்டு இருக்க. மருகப்புள்ளைக்கு என்னோட சேர்த்து சாப்பாடு போடுடீ' என்று நேற்று அருவாளை தூக்கிய மாமா வீட்டுக்குள் கூப்புடும் போது, தயங்கி தயங்கி போனதுண்டு. சாப்பிட்டு விட்டு வந்து பயந்துகொண்டே 'அம்மா! மாமா வீட்டுல உள்ள கூப்பிட்டாங்க. சாப்பிட்டுட்டு வந்தேன்' என்று கூறியதுண்டு. 'அவன மாதிரி எவனுமே பாசமா இருக்க மாட்டானுங்கடா' அம்மா மாமாவுக்கு நற்சான்றிதழ் கொடுப்பார்கள். ரெண்டாவது நாள் மாமா எங்க வீட்டுல சாப்பிட்டுக்கிட்டு இருப்பார். இப்படி நகமும் சதையுமாக பின்னி பிணைந்த உறவுகள்.
ஊரில் ஒருவருக்கு சுகமில்லை என்றால், ஊர் மொத்தமும் போய் விசாரிக்கும். ஒருவர் வீட்டில் மாடு கன்று ஈன்றதென்லால், ஊரில் எல்லார் வீட்டிற்கும் சீம்பால் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். சின்ன விசேஷம் என்றாலே திருவிழா கோலம் தான். திருமணம் ஆகட்டும், கோவில் திருவிழா ஆகட்டும். அத்தனையும் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும். வில்லுப்பாட்டு, பாவை கூத்து என்று விடிய விடிய உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். பக்கத்து ஊரில் திரைப்படம் போடுறாங்க என்று பாய் தலையனை சகிதமாக கிளம்பிய காலங்கள் அவை.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அரிசி, பருப்பு, எண்ணை என்று கொண்டு வந்து மொத்தமாக புளியமரத்தடியில் அம்மா, சித்தி, அத்தை என்று எல்லோரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைப்பார்கள். எல்லோரும் மொத்தமாக மரத்தடியில் அமர்ந்து உண்போம். பௌர்ணமி இரவு சின்னப் பசங்க நாங்க எல்லோரும் சாப்பாட்டு தட்டை தூக்கிக்கொண்டு தெருவில் மொத்தமாக நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்போம். அது தான் நிலாச்சோறு. இன்று நிலவை பார்த்தே நாளாச்சு.
மின்சாரம் முக்கால்வாசி வீட்டில் கிடையாது. நான் மின்சார விளக்கில் முதன் முதல் படித்தது எனது கல்லூரி இறுதி ஆண்டில் தான். மண்ணெண்ணையில் எரியும் திரி போட்ட பழைய இங்க் பாட்டில் தான் எங்கள் விளக்கு. சமயத்தில் தெரு விளக்கில் அமர்ந்து படித்ததுண்டு. மூளையை மழுங்கடிக்க, நேரத்தை வீணடிக்க தொலைக்காட்சி எவர் வீட்டிலும் கிடையாது. மாலை ஆகிவிட்டால், பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கதைத்து கொண்டிருப்பார்கள். நாங்கள் அந்த இருட்டிலும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருப்போம். வெறும் காடு தான். இருட்டுக்கும் பயம் கிடையாது. பாம்புக்கும் பயம் கிடையாது. முள்ளிற்க்கும் பயம் கிடையாது. காலில் குத்திவிட்டால் புடுங்கி போட்டுட்டு ஓடிக்கிட்டே இருப்போம். அப்படியும் ஏதாவது வெட்டிவிட்டால், கொஞ்சம் மஞ்சளும் உப்பும் வச்சி ஒரு கட்டு. ரெண்டாவது நாள் காயம் இருந்த இடம் தெரியாது.
சில ஆண்கள் குடித்து வருவதுண்டு. ஊருக்குள் வரும்போதே வசனம் பட்டையை கிளப்பும். எல்லாம் ஊருக்கும் வரும் போது தான். பெண்கள் யாராவது சத்தம் போட்டால், கை எடுத்து கும்பிட்டு விட்டு 'யக்கா! மன்னிச்சிருங்கக்கா' அப்படின்னு சத்தம் இல்லாமல் போய்விடுவார்கள். ஒருவருக்கொருவர் மரியாதை அப்படி வைத்திருப்பார்கள்.
மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் புதிதாய் முளைத்த செடிகள். விதவித புட்டான்கள்(தட்டான்), சிவப்பு பட்டு பூச்சிகள் என்று கிராமம் புதுக்கோலம் பூணும். மழையில் காடுகளில் முளைத்த செடியில் தக்காளி, செண்டு, கத்தரி என்று பிடுங்கி வீட்டில் நட காடு காடாய் அழைந்து கொண்டிருப்போம். வீட்டிலேயே சின்ன தோட்டம். காலையிலே எழுந்தவுடன் தக்காளி மொட்டு விட்டதா, செண்டு பூத்ததா, சுரை ஒழுங்காய் படர்கிறதா என்று பார்பதிலே தான் எவ்வளவு சந்தோசம். சுடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காடு எங்கிலும் வித விதமான பழங்கள். தேடி தேடி தின்பதில் தான் என்ன ஒரு சுகம்.
நூற்பாலையை மூடிய போது, என் கிராமம் கொஞ்சம் கலைந்து போனது. பிழைப்புக்கு வழியில்லாமல் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து போனது. சில வருடம் வானம் பொய்த்து போனதில், தென்னை மரங்களும், தோட்டங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மடிந்து போயின. ஊரே வெறிச்சோடி போனது. சிறுவர்கள் நாங்கள் தலை எடுத்த போது, ஒவ்வொரு வீட்டின் பொருளாதார நிலை கூடி போனது. ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புகள், உதவிகள் தேவைப் படாமல் போனது. வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள். நாங்கள் நீந்தி விளையாண்ட கிணறுகள் குப்பை தொட்டிகளாய் போயின. எங்கும் பாலித்தின் கவர் வந்து பனை தொழிலை அழித்துப் போனது. பனை ஓலையில் மிட்டாய் வாங்கினால் டீசண்ட் இல்லை என்று டி.வி கற்று கொடுத்தது. ஒரு கிரிக்கெட் மட்டையிலும், பந்திலும் மொத்த விளையாட்டும் அடங்கி போனது. கோலிக்காய், பம்பரம், மரம் ஏறி குரங்கு, கில்லி காணாமல் போயின. கேபில் டி.வி சனியனால், பக்கத்து வீட்டு அரட்டைகள் தேவையற்றதாய் போனது. வில்லுப்பாட்டும் பாவை கூத்தும் போரடித்து போயின. வீட்டுக்குள்ளேயே முடங்கி போனது வாழ்க்கை.
இன்று என் கிராமம் தன் அடையாளங்களில் முக்கால்வாசியை இழந்து போனது. இன்றும் அங்கே அங்கே முளைத்த தக்காளி செடிகளும், படர்ந்து கிடக்கும் புட்டு முருங்கையும் அப்படியே இருக்கிறது. பறிப்பதற்கு தான் எவருக்கும் மனம் இல்லை.
92 comments:
மனச என்னமோ பண்ணுச்சி கடைசியில...
உங்க வயசில கூடவா கரண்ட் வர அத்தன வருசம் ஆச்சு? எந்த ஊரு? பேரே சொல்லலை..!
சிவா, ஊர்க்கதையை நல்லா எழுதியிருக்கீக. தருமி ஐயா சொன்ன மாதிரி கடைசியில மனச என்னமோ பண்ணுனது அதிகமா இருந்தாலும் ஆரம்பத்துல இருந்தே எனக்கு மனசு என்னமோ பண்ணுச்சு. பெரிய கிராமம்ன்னு மத்தவங்க சொல்ற மதுரையில பொறந்து வளர்ந்ததால அப்பப்ப கிராமத்துல இருந்து மதுரைக்கு வர்ற அப்பத்தாக்களையும் பெருசுங்களையும் பார்த்ததுண்டு. அவ்வளவு தான் எனக்கும் கிராமத்துக்கும் உள்ள தொடர்பு.
சிங். செயகுமார் பொங்கலுக்கு ஒரு அருமையான பதிவு போட்டுருந்தார். அதுக்கப்பறம் படிக்கிற அருமையான பதிவு இது தான் சிவா.
சிவா,
பாசாங்கில்லாத அருமையான எழுத்து. என் பதிவில் 'படித்தேன் ரசித்தேன்' பகுதியில் link கொடுத்துள்ளேன்.
சிவா,
குடை பிடித்த பெரியவருடன் கைப்பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு குழந்தை எப்படி ஆர்வமாகக் கதை கேட்குமோ, அந்த மாதிரி நான் படித்தேன்/கேட்டேன்...வாழ்ந்தேன்னு சொல்லணும்.
அரைமணி நேரம் கிராமத்து வழியாகக் காலாற நடந்துச் சென்று அங்குள்ள காட்சிகளையும், மக்களையும், வாழ்க்கை முறையையும் கண்ட பூரிப்பு உங்கள் இப்பதிவின் மூலம் கிட்டியது. எளிமையான, உண்மையான், போலித் தனம் இல்லாத உங்கள் எழுத்து நடைக்கு தலை வணங்குகிறேன். தொழிற்நுட்ப வளர்ச்சி எப்படி ஒரு கிராமத்தின் அடிப்படை சமுதாய அமைப்பை மாற்றுகிறது என்ற தங்கள் ஆதங்கத்தை ஒரு பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறீர்கள்...அது தற்போதுள்ள எல்லா கிராமங்களுக்கும் பொருந்தும் என எண்ணுகிறேன்.
அடுத்த பதிவுக்கு இன்னும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். வரும் பதிவுகளில் 'மொட்டை'யுடன் தங்கள் அனுபவங்களையும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இது தான் கிராமம் நன்றாக உள்ளது
migavum nandraha irundhathu.
niraya eluthungal.
Sam
தருமி சார். முதல் தடவையா வந்திருக்கீங்க. எனக்கு ரொம்ப சந்தோசம் சார். பதிவை போட்டவுடனேயே கருத்து சொல்லிட்டீங்க. உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
//** உங்க வயசில கூடவா கரண்ட் வர அத்தன வருசம் ஆச்சு? எந்த ஊரு? பேரே சொல்லலை..! **// கரண்ட் சில வீடுகளில் இருந்தது. 90% வீடுகளில் கரெண்ட் ஒரு வாங்க முடியாத பொருளாகவே இருந்தது. எங்க வீட்டுல முதல் தடவை கரண்ட் வந்தது 1996 ல். ஆனாலும் சந்தோசமான வாழ்க்கை அது.
நம்ம ஊர் காட்டுப் பக்கம் சுத்தி பாத்த மாதிரி இருதிச்சில்லா. நல்லா எழுதரைவே.
குமரன்! கிராமத்து கதைன்னு தொடங்காம காதல் கதைல தொடங்கிட்டேன். இனி கிராமத்து கதை தான். பாராட்டுக்கு நன்றி குமரன். கிராமம் தெரியாம வளர்ந்துட்டீங்க. இதை படித்து ரசிக்க முடியுதா?. தம்பி சிங்கோட பொங்கல் பதிவை நானும் படித்தேன். ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு மாதிரி. அவரு வயக்காட்டு அனுபவங்களை சொல்லி இருந்தார். நான் தேரி காடு ( பனங்காடு). :-)
தேசிகன். உங்கள் தொடர் வருகை, என் நட்சத்திர வாரத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். உங்க சுட்டியை பார்த்தேன். ரொம்ப சந்தோசமா இருக்கு.
மோகன் ராஜ் (கைப்புள்ள)
//** குடை பிடித்த பெரியவருடன் கைப்பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு குழந்தை எப்படி ஆர்வமாகக் கதை கேட்குமோ, அந்த மாதிரி நான் படித்தேன்/கேட்டேன்...வாழ்ந்தேன்னு சொல்லணும். **// நன்றி மோகன்.
ஆமாங்க! தொழிற்நுட்ப வளர்ச்சி ஒரு கிராமத்தை ரொம்பவே பாதிக்கிறது. அது மெதுவாக பரவி சந்தோசங்களின் அர்த்தங்களை திருத்தி எழுதுகிறது. கவலையாகத் தான் இருக்கிறது.
நன்றி என்னார். தொடர்ந்து வாருங்கள்.
மோகன் ராஜ் (கைப்புள்ள), ராஜாவுடன் எனக்கென்ன அனுபவம். நான் கடைக் கோடி ரசிகன் ஐயா. இருந்தாலும் விரைவில் ராஜாவிடன் என் ஈடுபாடு பற்றி ஒரு பதிவு இருக்கிறது.
எனக்கு பார்க்க கூட கிடைக்காத வாழ்க்கையை அழகா சொல்லிட்டீங்க. எளிமையும் ஒரு அழகு என்பது பலருக்கு தெரிவதில்லை.
தமிழ்மணத்தை தாங்கிப்பிடிப்பது இந்த மாதிரியான பதிவுகள்தான்.. ஆட்டோகிராஃப்புகல் அலுப்பதேயில்லை .. தமிழ்மண சண்டைகளுக்கிடையில் இது ஒரு ரிலாக்ஸ் டைம் .. வாழ்த்துக்கள் ..
இந்த மாதிரி கிராமத்திலிருந்தும் இன்று முன்னேறியிருப்பது மிகவும் மனநிறைவைத் தருகிறது. நீர் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ,.
கடந்து வந்த பாதை
கொஞ்சம் திரும்பி பார்க்கையில்
நடந்த தடங்கள்
நெஞ்சில் அலை மோதுகின்றதே
தலை பாகையோடு தந்தை
உச்சி வெயிலும் ஊச காத்தும்
நித்தம் தன் மேல் தவம் கொள்ள
காடு மேடு கழனி சுற்றி
வீடு வந்து விளக்கு வச்சி
வெற்றிலை பாக்கு செவந்த வாயோடு
வீதி சென்று வெளக்கு எண்ணெய் முதல்
வெளுக்க சவுக்காரம் வரை
வாங்கிவர இருப்பு பணம் போதாதே!
அளுக்கு துணியை
இளக்காரமாய் பார்த்து
வெளக்கு வச்சாச்சு
வெள்ளிகிழமை அதுவும் கடன் கிடையாது
இன்னிக்கி மட்டும் கடன் தாரேன்
இன்னோரு நாளு இப்பிடி வராதே
விடி காலையில்
வீதி சங்கு ஊதியாச்சு
அடுமனையில் ஆட்டாம்பால் காப்பிக்கு
அரை கைப்பிடி சர்க்கரை போதல
எதிர்த்த வீட்டில் கரைத்த பாகில்
கொஞ்சம் கடனாய் கேட்டு
காலை டிபன் முடிந்தது
கழனி வேலைக்கு
கணவணை அனுப்ப வேண்டுமே
உணவென்று ஊருகாயுடன்
தயிர் கொண்டு தாளித்து கொட்டி
களிம்பேரிய தூக்கோடு
களத்துமேடு அனுப்பியாச்சு
வீட்டு வேலை முடிஞ்சிது
வீண் வம்பு பேசும் வேலையில்
காத துராம் போயி
கருக்கு வெட்டி வந்தா
குருக்கு பாயும்
தடுக்கு பொட்டியும் செய்யலாமே
மூனு ஜோடி நாலு ரூபா
மூத்த புள்ளைக்கி
ரெண்டு குயர்ல கட்டுரை நோட்டு
பசும்பால் வித்த காசு
பள்ளிக்கூட பீசுக்கு
சின்னவனுக்கு சினிமா கொட்டகையில்
கண்ணம்மா படம் பாக்கனுமாம்
பக்கத்துவிட்டுல
போன வருழமே
போய் வந்தாச்சாம்
தை மாசம் பொறக்கட்டும்
கைலாசம் கோவிலில்
தினம் ஒரு படம் பாக்கலாம்
கிட்டிப்புல் அடிச்சி
காருவாயும்
பொன்னாந்தட்டாம் புடிச்சி
நாலு ரூபாயும்
புத்த்கத்துகுள்ள வச்சுருக்கேன்
பொழுது சாஞ்சதும் போய் வருவோமா?
போட போகாத்தாவனே
தினம் ஒருத்தன்
திருட்டு கள்ள குடிச்சிட்டு
இருட்டுல நிக்கிறானுக
இன்னோரு நாளு போவோம்
கதிர் வீட்டு மாமா
கூட வாராராம்
கட்டு சோரு கூட வேண்டாம்
சுட்ட பனம்பழம் போதும்
சுருக்க வந்து சேருவேன்
கரண்டுக்கு எழுதி போட்டு இருக்கேன்
கருப்பு வெள்ளை டீவில
குழ்பூ படம் பாக்கலாம்
இருக்கிற காச எடு
எதிர்த்த வூட்ல
குமுதா பொண்ணுக்கு சடங்காம்
நானும் வச்சு குடுக்கனும்
நம்ம வூட்டுக்கு நாளக்கி
வந்து நிப்பா
சிலுக்கு மாமி
இந்த சிருக்கிக்கு என்ன செஞ்சேன்னு
பயலுக்கு நல்லா படிப்பு வருதாம்
பட்டணம் போயி படிக்கணுமாம்
கட்டணம் ஒன்னும் இல்லையாம்
கை செலவுக்கு மட்டும்
குறைவில்லாம வேணுமாம்
தளுக்கு நடை போட்டு
சுருக்க படிச்சி வந்து
கருவ காட்டுக்குள்ள
கரண்டு மரம் கொண்டு வந்து
இரண்டு நாள் இருந்து பாக்கல
உடனே கெளம்பி வரணும்
உனக்கு வாழ்க்கை உசந்த எடத்துல
கடுதாசி பாக்கையில
கண நேர சந்தோஷம்
உடனே ஊர் கழனி ஞாபகம்
என் செய்ய என் குடி உயர
இதோ கடல் கடந்து
கரண்டு பக்காத கிரமத்தான்
இன்டெர்னெட்டில் காதல் கதை
இழுக்கிறதே ஊர் ஞாபகம்
பனங்காய் வண்டி ஓட்ட ஆள் இல்லையாம்
பத்திரிகையில் வரி விளம்பரம்!
மக்கா! பிச்சுபுட்ட மக்கா! நெஞ்ச தொட்டுடியேப்பா!
//ஒரு கிரிக்கெட் மட்டையிலும், பந்திலும் மொத்த விளையாட்டும் அடங்கி போனது. கோலிக்காய், பம்பரம், மரம் ஏறி குரங்கு, கில்லி காணாமல் போயின. கேபில் டி.வி சனியனால், பக்கத்து வீட்டு அரட்டைகள் தேவையற்றதாய் போனது. வில்லுப்பாட்டும் பாவை கூத்தும் போரடித்து போயின. வீட்டுக்குள்ளேயே முடங்கி போனது வாழ்க்கை. //
அற்புதமா சொன்ன மக்கா!
அருமையான பதிவு. கிராம வாழ்க்கையின் பல பரிணாமங்களையும் மாறிவரும் கோலத்தையும் அழகாக படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!
ஏங்குதே மனம் பாடலையும் இணைத்திருக்கலாம்.. உங்கள் பாணியாக :)
சிவ
வாசிக்கும்போதே சுட்ட பனம்பழ வாசம் மூக்கில் ஏர்றமாதிரி இருக்கு. `சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை’ எல்லாம் அந்நியதேசத்துப் பலகாரம் மாதிரி ஆயிடுச்சு இப்போ. எங்க வீட்டில் நான் மருத்துவக் கல்லூரி முடிச்ச பிறகுதான் மின்சாரம் வந்தது.
நிறைய எழுதுங்க., தினத்தந்தி சிந்துபாத் கதை மாதிரி எழுதினாலும், வாசிக்க நாங்க ரெடி!
சிவா மிக அருமையா எடுத்திட்டு போயிருக்கீங்க. இதெல்லாம் அனுபவித்து பார்க்காமல் தான் சில நேரங்களில் சிலருக்கு புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக தோணுகிறது. இரண்டையும் ருசித்து பார்த்தால்தான் எதில் சுவை அதிகம்மென உணர முடியும் என எனக்குப் படுகிறது. இப் பொழுது ஒவ்வொரு நாளும் வாழ்வின் ஆழத்தை நன்கு நீங்கள் உணர்ந்து ரசித்து வாழ்வதாக எனக்குப் படுகிறது. நானும் மின் வசதி எனது கிராமத்தில் இல்லாத காலங்களில் நிலாச் சோறும், பால்வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களையும் பார்த்து பருகிய காலங்கள் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அதுவே இன்று சில வெறுமையான நேரங்களில் நினைவுக்கு கொண்டுவரும்பொழுது ஆருதாலிப்பதாக உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை என்னைப் பொருத்த வரையில். தொடர்க உங்கள் பணி.
அன்பு,
தெகா.
சிவா,
மிகவும் அருமை. கிராமங்களுக்கும் எனக்குமுண்டான தொடர்பு பாரதிராஜா படங்களோடு முடிந்துவிட்டது.
எளிமையான வாழ்க்கையும் சுகம் தான். பத்து நிமிஷம் கரெண்ட் கட்டானாலோ கேபிள் டிவி தெரியலெனாலோ கூட, என்னாடா ஊரு இதுன்னு அலுத்துக்கற கோஷ்டி நாங்கள்லாம். :)
எல்.எல்.தாஸு சொல்வதை வழிமொழிகிறேன். வாழ்த்துகள்.
இது ஒரு கிராமத்தின் பரிமாண வளர்ச்சி! புதியவையை ஏற்கும் நேரம் சில பழயவையையும் ஆதரிக்கவேண்டும்!!!
இந்த கிராமத்து நினைவுகள் இருக்கே அதனோட சுகமே அலாதிதான். நானும் மூணாவது படிக்கும் வரை இது போன்றதொரு கிராமத்தில்தான் இருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் அப்படியேதான் இருக்கிறது.
கடைசியில் நெஞ்சைக் கொஞ்சம் கனக்கச் செய்து விட்டீர்கள்.
அன்பு சிவா,
அழகிய பதிவு, நிறைவான வர்ணனை. தமிழகத்து அன்றைய கிராமத்து வாழ்வியல் சூழலை மனத்திரைதில் ஒட்டிவிட்டீர், அன்பரே!
மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்கள்; செப்பனைத் தோட்ட தொழிற்சாலை எங்கள் ஊரின் அருகாமையில் அமைந்திருந்தது. அங்கும் சங்கு அதிகாலை 5 மணிக்குக் கேட்கும்.
பழைய நினைவுளை மீண்டும் மீட்டுக் கொணர சங்கே முழங்கு!
வாழ்த்துக்கள்,சிவா.
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்
சிவா, நல்லா எளிமையா எழுதி இருக்கீங்க. ஊர் நடையில எழுதி இருந்தீங்கன்னா இன்னும் ரசிச்சிருக்கலாம். திருநெல்வேலித் தமிழ் கேட்டு நாளாச்சு.
உண்மையிலேயே கிராம வாழ்க்கை பார்க்கதவங்க இதைப் படிச்சு கொஞ்சம் பொறாமைப்படுவாங்க
//வா! ராஜா! உள்ள வா! எதுக்கு வெளியயே நின்னுக்கிட்டு இருக்க. மருகப்புள்ளைக்கு என்னோட சேர்த்து சாப்பாடு போடுடீ' என்று நேற்று அருவாளை தூக்கிய மாமா வீட்டுக்குள் கூப்புடும் போது, தயங்கி தயங்கி போனதுண்டு. //
வெகு உண்மை. கிராமத்து மனிதர்களின் பாசமே தனிதான். அதன் அடிப்படையில் நான் எழுதிய கதையைப் பதிவாய் போட்டுவிட்டுப் பார்த்தால் உங்கள் பதிவுலும் ஒத்த கருத்து. நட்சத்திர வாரத்தில் நேரம் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_08.html
சிவா,
நம்ம ஊரை அருமையாக சொல்லியிருக்கீங்க.
தெரு விளக்கில் படிச்சது முதல் இன்றைய கிராமத்தின் நிலைமை சொன்னது அனைத்தும் நானும் அனுபவத்திருக்கிறேன்.
நானும் நம்ம ஊர் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையை தூண்டியிருக்கீங்க.
சிவா,
ரொம்ப நாளைக்கு அப்புறம் மண்வாசனையை முகர்ந்தேன்.நன்றி.
சிவா, மிகவும் அருமையாக உங்கள் கிராமத்து வாழ்க்கையை எழுதிப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நன்று. எல்லாக் காலங்களிலும் அப்படிப்பட்ட கிராம வாழ்க்கையில் லயித்திருந்ததில்லை என்றாலும் அவ்வப்போது போய் வந்திருக்கிறேன். அதனால், இந்தப் பதிவின் உணர்ச்சிகளோடு ஒன்றிப் போய் உணர முடிகிறது.
மொத படிக்கும்போது கொஞ்சம் பொறாமையா இருந்தது, நீங்க விவரிச்சதில ஒரு அறிந்திராத நிம்மதி தெரிஞ்சது, கடைசில சோகமா போச்சே.
என்னுடைய கல்லூரி அறைத்தோழன் வீட்டிலும் (கோபிச்செட்டி பாளையம் பக்கம்) மின்சாரம் கிடையாது என்று அறிந்த போது சற்று ஆச்சர்யம்/அதிர்ச்சி- ஆக இருந்தது.
உங்கள் பதிவை படிக்கும்போது நெடுநாளைய நண்பன் பேச கேட்பது போல உள்ளது, தொடருங்கள். வாழ்த்துக்கள்.
இத இத இதத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
நன்றி சிவா.
-மதி
ஒரு கிராமத்தின் தோற்றத்தை, வாழ்வை, அதன் எளிமையை எளிமையான மொழியில் சொல்லிச்சென்றிருக்கிறீர்கள். அனுபவும் மொழியும் ஒன்றை ஒன்று அழகு செய்கின்றன.
நன்றி!
1. நிஜம்மா...மதிக்கு முதல் நன்றி- இப்படி ஒருவனை வெளிக்காட்டியதற்கு.
2.தப்புத்தான்.. உங்க பதிவுகளை இதுவரை தவற விட்டத்ற்கு.
3. ஆமா, எதுக்குத் தேறிக்காட்டில் வெயில்லேயே நிக்கணும்...விடிலி இருக்குமுல்லா..?
4. யாருப்பா அங்க, அந்த சிங். ஜெயக்குமார்...என்னமா எழுதியிருக்கு அந்த மனுசன்... வாழ்த்துக்கள். இதை தனிப்பதிவாகவும் உங்கள் இடுகையில் இட்டுவிடுங்களேன்.
நன்றி
சிவா,
ரொம்ப நல்ல இருந்தது, நான் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்க குடுத்து வைக்கவில்லை. படித்து முடித்த பிறகு முன்னேற்றம் என்ற பெயரில் எதை எல்லாம் இழந்து இருக்கிறேம் அப்படின்னு எண்ணிப்பார்க்கையில் கஷ்டமாக இருக்கிறது.
இயக்கத்தின் மூத்தவரே. முதிர் இளைஞர் தருமி அவர்களே !உங்கள் வாழ்த்துதலுக்கு நன்றிகள்!
Sam! பாராட்டுக்கு நன்றிங்க! நேரம் கிடைக்கும் போது எனக்கு தெரிந்ததை எழுதறேங்க.
இலவசக்கொத்தனார்! //** நல்லா எழுதரைவே.**// உங்களுக்கு எந்த ஊரு?. //** நம்ம ஊர் காட்டுப் பக்கம் சுத்தி பாத்த மாதிரி இருதிச்சில்லா **// காட்டுவாசி மாதிரி கவலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்தா தான் அது வாழ்க்கை. என்ன சொல்றிய? :-)
உஷா! நீங்க சிட்டீங்களா..//**எளிமையும் ஒரு அழகு என்பது பலருக்கு தெரிவதில்லை. **// உண்மைங்க. நான் வளர்ந்த விதம் தாங்க காரணம். நாம கொடுத்து வச்சவங்க அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியது தான்.
LLதாஸ்! வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. என்னோட முன்னேற்றத்திற்கு என்னோட பெற்றோர்கள், என்னோட அண்ணன், ஆசிரியர்கள்... எல்லாத்துக்கும் மேல, கடவுள் - இவங்க தாங்க காரணம். இவங்க எல்லாம் தூக்கி விடப்போயி தான் இந்த நிலைமையில இன்னைக்கு வந்திருக்கிறேன். அதை பற்றி நிறைய பேசலாம். அப்புறம் சுயபுராணம் மாதிரி ஆகிடும் :-))
தம்பி சிங்! இந்த அண்ணன் நட்சத்திர பதிவு ஒவ்வொன்னுக்கும் ஒரு கவிதை கொடுத்து சந்தோச படுத்துறீங்க. ரொம்ப நன்றி தம்பி.
//** இன்டெர்னெட்டில் காதல் கதை
இழுக்கிறதே ஊர் ஞாபகம்
பனங்காய் வண்டி ஓட்ட ஆள் இல்லையாம்
பத்திரிகையில் வரி விளம்பரம்! **// இப்படி உடனே உடனே எடுத்து விடுறீய..கலக்குங்க.
ஜோ மக்கா! எனக்கு தோணுவதை எழுதறேன். விடாம படிச்சி பாராட்டுற உங்க ஆதரவுக்கு நன்றி ஜோ
மணியன்! முதல் வருகைக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.
//** ஏங்குதே மனம் பாடலையும் இணைத்திருக்கலாம்.. உங்கள் பாணியாக :) **// ஓ! நம்ம பாட்டு பதிவும் பார்த்திருக்கீங்களா..நன்றி. பாட்டு தனி பதிவா போட்டுடலாம். என்ன :-)
அபிராமன்! 'சொடக்கு தக்காளி' 'பட்டுப் பூச்சி' எல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கேன்னு பார்கறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த பதிவு உங்கள் பழைய நினைவுகளை கிளறி விட்டதில் மகிழ்ச்சி. சில சமயம், இப்போ இருப்பதை விட கிராமத்து வாழ்க்கை 1000 மடங்கு சந்தோசத்தை கொடுத்ததாகவே எனக்கு தோன்றும். உண்மை தானே :-)
தாணு! என்ன டாக்டர்! எப்படி தினமும் நேரம் கிடைக்குது :-). பனம்பழம் சுட்டு சாப்பிடும் போது அந்த கொட்டைக்கு அடித்துக் கொண்டதும் நினைவுக்கு வருகிறதா?. அப்புறம் அதை முளைக்க போட்டு தவின் தின்னது..ம்ம்ம்ம்..
பனம்பழம் (லேசான காய்) அவித்து சாப்பிட்டிருக்குறீங்களா?
//** நிறைய எழுதுங்க., தினத்தந்தி சிந்துபாத் கதை மாதிரி எழுதினாலும், வாசிக்க நாங்க ரெடி! **// ஊர் கதை சிந்துபாத் கதை மாதிரி மாதிரி தான். தொடங்கினால் போய்கிட்டே இருக்கும். எழுத நேரம் வேணுமே..இந்த வாரமே வீட்டுல ஏகப்பட்ட தகராறு :-)))
நண்பர் தெக்கிக்காட்டான். கிராமத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த சந்தோசங்கள் தெரியாது இல்லையா. அவரவருக்கு ஒவ்வொரு விசயம் சந்தோசம்.
//** இன்று சில வெறுமையான நேரங்களில் நினைவுக்கு கொண்டுவரும்பொழுது ஆருதாலிப்பதாக உள்ளது **// :-)) அப்படி நினைத்து நினைத்து தானே இங்கே நான் புலம்பறேன் :-))
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.
இராமநாதன்! //** கிராமங்களுக்கும் எனக்குமுண்டான தொடர்பு பாரதிராஜா படங்களோடு முடிந்துவிட்டது. **// பாரதிராஜா அந்த விதத்தில் உங்களுக்கெல்லாம் கிராமத்தை சுற்றிக் காட்டி இருக்கிறார். நானும் படம் எடுத்தா (நீங்க தயாரிக்கிறதா இருந்தா :-)) நிறைய சுற்றி காட்டுகிறேன்.
//** எளிமையான வாழ்க்கையும் சுகம் தான். **// உண்மை.
Oliyinile! //**சில பழயவையையும் ஆதரிக்கவேண்டும்!!! **// ஆனால் நாம புதுசா ஒன்ன பார்த்துட்டா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அது பின்னாடி ஓடுவது தான நம்ம பழக்கம். அதனால் வாழ்க்கையில் நிறைய நிஜ சந்தோசங்களை தொலைக்கிறோன் என்று யாருக்கும் தெரிவதில்லை. ம்ம்ம்
நாமக்கல் சிபி! நீங்க மூனாவது வரையா..நான் பிறந்ததில் இருந்து B.Sc முடிக்கும் வரை 20 வருடம் கிராமம் தான். அனுபச்சிருக்கேன் அந்த வாழ்க்கையை..அதான் அது பாட்டுக்கு வருது :-))
//** கடைசியில் நெஞ்சைக் கொஞ்சம் கனக்கச் செய்து விட்டீர்கள்.**// இன்றைய நிலைமை அப்படி தன் இருக்கு. என்ன செய்ய
:-(
எல்.ஏ.வாசுதேவன்! பாராட்டுக்கு ரொம்ப நன்றி அன்பரே! தோட்டப்புறங்களில் வாழும் எல்லாருக்குமே அந்த வாழ்க்கை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
//** பழைய நினைவுளை மீண்டும் மீட்டுக் கொணர சங்கே முழங்கு! **// :-)
பாரதி! தொடர் வருகைக்கு நன்றிங்க. எந்த ஊரு நீங்க?. நீங்க எதை கேட்கறீங்க?. அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலையா ( பூச்சிக்காட்டுக்கும், நாலுமாவடிக்கும் இடையில இருக்கே). சுனைய பத்தி ஒரு பதிவே போடலாங்க. அதுவும் பனையை முங்கி போகும் உயரமான மணல் மேடுகள்..தாழம்பூ... எழுதலாம் மெல்ல :-))
//** அதே விளக்கில் கல்லூரி செல்லும் வரை
படித்தவன் தான் நானும். **// சூப்பருங்க..கஷ்டப்பட்டு படித்தாலும், ஒரு நிறைவு இருந்ததென்பதே உண்மை..இல்லையா?
//** பாதுகாக்கப் படவேண்டிய பதிவு. **// நன்றி பாரதி.
வாங்க நிலா!
//**ஊர் நடையில எழுதி இருந்தீங்கன்னா இன்னும் ரசிச்சிருக்கலாம் **// அங்கே அங்கே தொட்டிருப்பேன். மொத்தமா கொடுத்தா சொல்ல வந்தது நிறைய பேருக்கு புரியாம போய்டுமோன்னு தான் எழுதவில்லை. அடுத்த பதிவுல எழுதிறறே..என்ன சொல்லுதிய. :-))
//** கிராமத்து மனிதர்களின் பாசமே தனிதான் **// ஆமாங்க. எதிர்பார்ப்பு இல்லாத வெள்ளத்தியான மனங்கள்.
உங்க சுட்டியை பார்த்தேன். நட்சத்திர வாரம் முடிந்த வுடன் கண்டிப்பா படிச்சிட்டு சொல்கிறேன். அடிக்கடி இந்த பக்கம் வாங்க.
பரஞ்சோதி! //** நம்ம ஊரை அருமையாக சொல்லியிருக்கீங்க **// பரமன்குறிச்சியை பற்றியும் அப்படியே எடுத்து விடுறது..
//**நானும் நம்ம ஊர் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையை தூண்டியிருக்கீங்க **// எழுதுங்க மக்கா..நமக்கெல்லம் எதுக்கு இமேஜ் பயம்..நாம் நாமாக இருப்போமே. எதற்கு முகமூடி :-))
//**ரொம்ப நாளைக்கு அப்புறம் மண்வாசனையை முகர்ந்தேன் **// நன்றி முத்து.
செல்வராஜ்! முதல் வருகைக்கு நன்றிங்க! உங்கள் பாராட்டுக்கு நன்றி செல்வராஜ்!
//**எல்லாக் காலங்களிலும் அப்படிப்பட்ட கிராம வாழ்க்கையில் லயித்திருந்ததில்லை என்றாலும் அவ்வப்போது போய் வந்திருக்கிறேன் **// அது போதுமே..இப்படி கிராமத்தானுங்க எழுதறத ரசிக்க..
:-)))
பார்த்தா! முதல் வருகைக்கு நன்றி.
//** கடைசில சோகமா போச்சே. **// என்னங்க பண்ணுறது. நிலைமை அப்படி தான் இருக்கிறது.
//** மின்சாரம் கிடையாது என்று அறிந்த போது சற்று ஆச்சர்யம்/அதிர்ச்சி- ஆக இருந்தது. **// அந்த வாழ்க்கையே தனிங்க. அந்த இருட்டிலும் கோலிக்கா விளையாடுவோம். ஓடிப்பிடித்து விளையாடுவோம்.
//** உங்கள் பதிவை படிக்கும்போது நெடுநாளைய நண்பன் பேச கேட்பது போல உள்ளது **// ரொம்ப சந்தோசம் பார்த்தா. என் நினைவுகளை தான் பதிகிறேன். அது உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. மற்ற பதிவுகளையும் படித்து பாருங்கள். உங்களுக்கு புடிக்கலாம் :-)
மதி! உங்களது இந்த வார்த்தையை நான் இந்த பதிவு போட்டதில் இருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோட முதல் பதிவை பார்த்தவுடம் 'என்னடா இவன்! கிராமத்தை பற்றி எழுதுவானென்று பார்த்தால், காதலை பற்றி எழுதுறானேன்னு நெனைச்சிருப்பீங்க :-)) இனி ஒரே கிராமம் தான். நீங்க கொடுத்த வாய்ப்பை முடிந்த அளவு நிறைவாக செய்ய முயற்சிக்கிறேன்.
//** இத இத இதத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். **// இது போதுங்க என்னோட நட்சத்திர வாரம் மொத்தத்துக்கும். பாராட்டுக்கு ரொம்ப நன்றி மதி.
தங்கமணி! முதல் வருகைக்கு நன்றி!
//** அனுபவும் மொழியும் ஒன்றை ஒன்று அழகு செய்கின்றன. **// உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி தங்கமணி.
தருமி சார்! என்னோட ஊரு, நெல்லைக்கு பக்கத்துல... திருச்செந்தூருக்கு போற வழியில... நாசரேத் அப்படின்னு ஒரு ஊர் வரும். அதுக்கு பக்கத்துல கந்தசாமிபுரம் அப்படின்னு ஒரு சின்ன கிராமம் ( இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன் :-)))
//** இப்படி ஒருவனை வெளிக்காட்டியதற்கு. **// இது ரொம்ப அதிகம் தான். என் நினைவுகளை தானே பதிகிறேன். இருந்தாலும் பெரியவர் நீங்க சொல்லிட்டீங்க. பாராட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.
//** தப்புத்தான்.. உங்க பதிவுகளை இதுவரை தவற விட்டத்ற்கு **// இருக்கிற 1000 ப்ளாக்ல எல்லாத்தையும் படிக்க நேரம் யாருக்கும் இருக்கிறது இல்லை சார்?. அது ஒன்னும் தப்பு இல்லை சார்.
:-)) நான் கூட உங்க வீட்டுப்பக்கம் வந்ததே இல்ல சார்.
//** ஆமா, எதுக்குத் தேறிக்காட்டில் வெயில்லேயே நிக்கணும்...விடிலி இருக்குமுல்லா..? **// விடிலிக்குள்ள நின்னுக்கிட்டா யாரு ஓலைய வெட்டி காய போட்டு அடுக்குறது :-)). தேரிக்குள்ள போயிட்டா விடிலி எல்லாம் அவ்வளவா இருக்காது. எல்லாம் உயர்ந்த பனைகள் தான். :-)
வாங்க சந்தோஷ்!
//** முன்னேற்றம் என்ற பெயரில் எதை எல்லாம் இழந்து இருக்கிறேம் **// நிஜம் தாங்க. உண்மையான உறவுகளும், சந்தோசங்களும் தெரியாமல் போய்விட்டது. நம்ம கைல என்ன இருக்கு..நாமாவது அப்படியே இருக்கணும். அது ஒன்று தான் என்னோட ஆசை.
//இருந்தாலும் விரைவில் ராஜாவிடன் என் ஈடுபாடு பற்றி ஒரு பதிவு இருக்கிறது.//
நான் கேட்டதும் அதே அதே
After long time, I got chance to read thamizmanam today. Congrats for your star week, Siva. I could say this is one of the best post. simply super. Keep it up, Siva.
சிவா,
அழகான பதிவு. நல்ல நடை!
வாழ்த்துக்கள்.
கடந்த சில நாட்களாகத்தான் தமிழ்மணம் வழியாக வலைப்பதிவுகளை நேரம் கிடைக்கும்போது வாசித்து வருகிறேன். நீங்களும் மஞ்சள் பை ஆள்தானா? அடியேனும்தான்.
//நான் மின்சார விளக்கில் முதன் முதல் படித்தது எனது கல்லூரி இறுதி ஆண்டில் தான். மண்ணெண்ணையில் எரியும் திரி போட்ட பழைய இங்க் பாட்டில் தான் எங்கள் விளக்கு. சமயத்தில் தெரு விளக்கில் அமர்ந்து படித்ததுண்டு.//
நானும் எட்டாம் வகுப்பு வரை மண்ணெண்ணை விளக்குதான். எட்டு மணிக்கு மேல் விளக்கு வைத்துக்கொண்டு படித்தால் திட்டு விழும், மண்ணெண்ணை வீனாகின்றது என்று!!. அதெல்லாம் ஒரு காலம்.
//இன்று என் கிராமம் தன் அடையாளங்களில் முக்கால்வாசியை இழந்து போனது//
உண்மைதான்.
நான் சென்றமுறை இந்தியா சென்றபோது எனது கிராமத்தில் பார்த்த மாற்றங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.
http://vssravi.blogspot.com/2006/02/blog-post_03.html
தொடர்ந்து எழுதுங்கள்..
அன்புடன்,
-ரவிச்ச்ந்திரன்
நான் கூட உங்க வீட்டுப்பக்கம் வந்ததே இல்ல சார்"// - அப்புறம் எப்படி வயசக் கண்டுபிடிச்சி, சார்..அப்டின்னு எழுதுறீக..?
சரி விடுங்க..நாசரேத் வரை வந்திருக்கேன்.
என் தமிழ் பக்கம் வர்ரீங்களோ இல்லியோ, நம்ம இங்கிலீஸ் பக்கம் போய், autobiographical போய், வாசிச்சிட்டு - எல்லாம் கிராமப்புறம்தான் - சொல்லுங்க..நேரம் இருக்கும்போது.
அன்புடன்.....
நான் கூட உங்க வீட்டுப்பக்கம் வந்ததே இல்ல சார்"// - அப்புறம் எப்படி வயசக் கண்டுபிடிச்சி, சார்..அப்டின்னு எழுதுறீக..?
சரி விடுங்க..நாசரேத் வரை வந்திருக்கேன்.
என் தமிழ் பக்கம் வர்ரீங்களோ இல்லியோ, நம்ம இங்கிலீஸ் பக்கம் போய், autobiographical போய், வாசிச்சிட்டு - எல்லாம் கிராமப்புறம்தான் - சொல்லுங்க..நேரம் இருக்கும்போது.
அன்புடன்.....
தருமி சார்! என்னங்க தமிழ்மணத்துலையே சுத்தறேன் உங்களை தெரியாதா..உங்க ப்ளாக் பக்கம் வந்து படித்தது இல்லைன்னு சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க சார். :-)
நாசரேத் வரையும் வந்திருக்கீங்களா?. எந்த ஊர் சார் நீங்க? சொல்லுங்க சார் :-))
//இலவசக்கொத்தனார்! //** நல்லா எழுதரைவே.**// உங்களுக்கு எந்த ஊரு?.//
இதோட ரெண்டு வாட்டி கேட்டுபுட்டீரு. சொல்லவேண்டாமா? தனி மடல் அனுப்பி இருக்கேன். பாத்துக்கிடும்.
வாங்க விஜய்! வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி. வேலை பளு அதிகமாயிட்டோ..நேரம் கிடைக்கும் போது வந்து படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டுப் போங்க :-)
வாங்க ரவிச்சந்திரன்! உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
ஓ! நீங்களும் நம்மள மாதிரி தானா!
//** கடந்த சில நாட்களாகத்தான் தமிழ்மணம் வழியாக வலைப்பதிவுகளை நேரம் கிடைக்கும்போது வாசித்து வருகிறேன். **//
நிறைய வாசிங்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
//** நீங்களும் மஞ்சள் பை ஆள்தானா? **// அதே அதே :-))
புரியுது சிவா புரியுது.....தூத்துக்குடீல சின்னப்புள்ளைல...கொடுக்காப்புளி மரம் நெறைய இருக்கும். வீட்டுக்குப் பின்னாடி. தெருவுலயும் இருக்கும். அதே மாதிரி பால்பண்ணை கோனார் வீட்டுக்குப் பக்கத்துல...அதாவது புதுக்கிராமம் பழைய போஸ்ட் ஆபீஸ் பக்கத்துல...நெறைய கொடுக்காப்புளி மரம். எனக்குத் தெரிஞ்சி இப்ப அந்தச் சுத்து வட்டாரத்துலயே கொடுக்காப்புளி மரத்தப் பாக்க முடியாது.
தியாகராஜங் கடைக்குப் பின்னால சங்கரமடம்த்துக்கு முன்னாடி பெரிய காம்பவுண்டு இருந்தது. உள்ள செடியும் கொடியும் மரமுமா இருக்கும். அந்தப் பக்கம் போனாலே நல்லாருக்கும். இப்ப அங்க ஒரு அப்பார்ட்மெண்ட் வந்துருக்கு.
ஓரளவுக்குப் பெரிய ஊருல இருந்த எனக்கே இப்படீன்னா....பட்டிக்காட்டுல இயற்கையோட இருந்த உங்களுக்கு எப்படி இருக்குமுன்னு புரியுது.
ராகவன்! கொடுக்கப்புளிய நியாபக படுத்திட்டீங்களே..எங்க ஊருல செம பெரிய மரம்..கிளி கொத்துதா..திங்காம கால் தவறி கீழே விழுமா அப்படின்னு ஆஆ-என்று பாத்துக்கிட்டு இருப்போம்..அந்த சொகமே தனி தான்..என்ன சொல்லறிய :-))
//** ஓரளவுக்குப் பெரிய ஊருல இருந்த எனக்கே இப்படீன்னா....பட்டிக்காட்டுல இயற்கையோட இருந்த உங்களுக்கு எப்படி இருக்குமுன்னு புரியுது **// இயற்கையோட இருந்தீங்கன்னு சொன்னீங்க பாரு, உண்மை..நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அழிஞ்சி கட்டடங்களா ஆகிட்டு வருது.. :-((
வாங்க சதிஷ்! பாராட்டுக்கு நன்றி..மற்ற பதிவுகளையும் படிச்சிட்டு சொல்லுங்க :-)
நாசரேத் வரையும் வந்திருக்கீங்களா?. எந்த ஊர் சார் நீங்க? சொல்லுங்க சார் :-))
உங்க ஊருக்கு (நாசரேத்துக்கு ரெண்டுதடவை; அனேகமா -1968,1984) வந்திருக்கேன்- கலயாணங்களுக்கு.
எங்க ஊரு நெல்லையிலிருந்து மேக்கால தென்காசிக்கு ஒரு ரேடு போவும்லா, அதில் நட்ட நடுவில ஆலங்குளம்..ஆலங்குளம்னு ஒரு பெரிய ஊரு...அதில இருந்து ஒரு மைலு போன நல்லூருன்னு ஒரு ஊரு...80, 90 வருஷமா ஒரு பெரிய ஸ்கூலு இருக்கு அங்கன...அங்க இருந்து ஒரு அரை மைலு..ஆலடி(ப்பட்டி)..அத ஒட்டி காசியாபுரம்னு ஒரு ஊரு. வந்திட்டீங்க...நம்ம ஊருக்கு இப்ப.
தருமி சார்! சூப்பரா உங்க ஊருக்கு வழி சொல்லிட்டீங்க..இத வச்சிக்கிட்டு வந்தேம்னா ரொம்ப எளிதா கண்டு புடிச்சிடலாம் போல :-)
ம்ம்
நியாயமான ஆதங்கம். கிராமத்தின் தூய்மையான வாழ்க்கையை அனுபவித்தவர் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆதங்கம்.
உண்மைதான் சிவா.. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்..
நான் பரீட்சை லீவுக்கு எங்க ஊருக்கு போயிருவேன். 2 மாசம் போறதே தெரியாது.. ஊரெல்லாம் சுத்துவோம்... கிராமத்துல எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். நாம போன யாரோட பேரன்.. யாரோட பேத்தினு தெரியும். எல்லாரும் உபசரிப்பாங்க. கள்ளம் இல்லாத பாசம். ஒரு பயம் கிடையாது. ஊரு சின்னதுன்னாலும் மனசு விசாலமானது எல்லாருக்கும்.
ஹ்ம்.. பனம்பழம் சுட்டு சாப்பிடா அடடா.. அமிர்தமா இருக்குமே.. பனங்கிழங்கு தோண்டி எடுத்து வருவோம்.. முந்திரி தோப்பு, வண்ணாங்குளம்.. தாமரைக்குளம்.. ஹ்ம்.. தேர்த்திருவிழா.. எவ்வளவோ சந்தோஷம் இருக்கு..
பஞ்சாயத்து டிவி. கூத்து..
ஏரில மீன் பிடிக்கறது.. அடடா அது ஒரு கனாக் காலம்..
(தெரியுமா நானும் என் புராணத்தை எழுத ஆரம்பிச்சிட்டேன் www.geeths.info/dreams/ ரொம்ப நாளைய ஆசை இது. : ) )
அன்புடன்
கீதா
ஓ! கீதாபுராணமும் ஆரம்பிச்சாச்சா...கண்டிப்பா வந்து படிக்கிறேன். எந்த ஊரு..அத சொல்லுங்க..
நீங்க சொன்ன அத்தனையும் உண்மை கீதா...நெனைச்சி நெனைச்சி ஏக்கம் தான் வருது..எப்படியோ..இன்னும் ஒரு வருசத்துல இந்தியா போய் செட்டில் ஆயிடுவேன்..அப்புறம் வருசம் ஒரு மாதமாவது ஊருக்கு போக முடியும்... :-)..
உங்க புராணத்தை படிச்சிட்டு சொல்கிறேன்
உஷா அக்கா!
உங்கள் பாராட்டுக்கு நன்றி! கிராமத்து வாழ்க்கை கற்றுக் கொடுப்பது நிறைய. நீங்க சொன்ன மாதிரி வசதிகளும், சொகுசுகளும் வாழ்க்கையை உயர்த்தி விடுவது இல்லை. உண்மை. நான் அதை தான் எல்லா பதிவிலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நமக்கென ஒரு அடையாளம், அந்த குடும்பத்து பையனா அப்போ பொறுமையா இருப்பான், இந்த குடும்பத்து பையனா ரொம்ப தைரியமா இருப்பான் என்று அடையாளம் வருவது உண்மை தான்.
//** தாத்தா பாட்டியிடம் 'அப்பா என்ன அடிக்கிறாங்க' அப்படின்னு சொன்னா 'ஏல! குழந்தைய போட்டு ஏண்டா இப்படி அடிக்கிற..' அப்படின்னு ஏச்சி விழும் **// :-))
இப்போ நிறைய குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டிக்கிட்ட பேசவே முடியலை..தமிழே தெரியலை..ஆங்கிலம் மட்டுமே தெரிகிறது..குழந்தை 25 வயதில் எபப்டி இருக்க வேண்டும் என்று கனவு காணுபவர்களுக்கு அது தன் மழலை வயதில் கிடைக்க வேண்டியதை தொலைக்கிறதே என்று கவலை இருப்பதில்லை..அப்புறம் எங்கே தாத்தா-பாட்டி எல்லாம் :-)))
என்னை பொருத்த வரையில் முடிந்த வரை நாம் கற்றுக்கொண்டதை நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.நாம் பெற்ற சந்தோசங்களை அவர்களுக்கும் அந்த அந்த வயதில் கொடுக்க வேண்டும்..அது ஒன்று தான்..
//** Enna life idhu!!! enaku pidikavillai indha life style!!! **// உண்மை உஷா..
தனி மடலில் விரிவாக எழுதுகிறேன்..
அன்புடன்,
சிவா
Arumaiyana pathivu. Nan Maduraikkaran, but varushathukku 2 thadavayavathu gramam pakkam ponathundu. In fact, retire anathukkaparam, nagara (naraga?) vasanai adikkatha gramathukku poi settle aganumnu asai.
Barathiraja padam patha mathiriyum oru feeling.
Kalakkunga,
Kumaresh
பாராட்டுக்கு நன்றி குமரேஷ்!
//** Barathiraja padam patha mathiriyum oru feeling. **// :-))
//** retire anathukkaparam, nagara (naraga?) vasanai adikkatha gramathukku poi settle aganumnu asai. **// ஆசையோட விடாதீங்க..நானெல்லாம் 20 வருச கிராமத்து வாழ்க்கை..எப்போடா அங்கே போய் செட்டில் ஆவறதுன்னு மனசு அடிச்சிக்கிறது. :-)
நன்றி பாஸ்கரன் அவர்களே !
//** Ennoda valkaiyai thirumbi parthathu pola irunthathu **// ரொம்ப சந்தோசம் பாஸ்கரன் :-)
இதை தன் நண்பர்களுக்கு அறிமுக படுத்திய குமரனுக்கு ஒரு சிறப்பு நன்றி :-)
On readng the comments I wonder how most of the bloggers are from similar background. Also such 'aadhangam' comes only to those who have gone far away. What about those who still live in the same villages in worse conditions?
Pathy.
கிராமிய மணம் கமழும் உங்கள் பதிவை படித்தவுடன் ஊருக்கே ஒரு முறை சென்று வந்து விட்டேன. நல்ல முயற்சி. தொடருங்கள் சிவா.
வாங்க பெரியவரே (கே.வி.பதி)..உங்கள் வருகைக்கு நன்றி.
பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சுவனப்பிரியன்.
Siva...neenga kallukunga......
Anbudan,
Natarajan
சிவா,
நண்பர் குமரன் தயவால் தங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். என் அன்னையின் பிறந்த கிராமமான மாதவனூர் நீங்கள் விவரித்தது போலத் தான் - என்ன பச்சைப் பசுமையெல்லம் அதிகம் கிடையாது. ஜாமமாச்சுன்னா ஒவ்வொரு லாந்தருக்காப் போய் திரியை சீர் பண்ணி விளக்கேத்துவோம். காலையிலே ஒவ்வொரு விளக்கா பாத்து அணையாததெல்லாத்தையும் அணைக்கணும். மதியம் ஒவ்வொரு விளக்கா எடுத்து, கண்ணாடியை சாம்பல் வச்சு கரி போக தேச்சு, கெரசின் ஊத்தி, திரியை மாத்தி வச்சிருப்போம். ஐந்து மாசமாய் என்னுடன் இருக்கும் அம்மா புலம்புவது - வெளிக்காத்தைப் பாத்து மாசமாச்சு! (வெளிலே பனி - போக முடியலே; வீட்டிலே கதவு, ஜன்னலெல்லாம் அடைச்சு சூடான பதனப்படுத்தப்பட்ட காத்து).
என்ன செய்ய: வாழ்க்கையிலே பொருளாதர வளம் அதிகமாக தரம் குறையுதுன்னு படிச்சது ஞாபகம் வருது.
We improve the standard of living but lose the quality of life.
வாங்க ரங்கா அவர்களே!
குமரனோட நண்பரா நீங்க. அவரிடம் கேட்டு உங்களை பற்றி முழுசா தெரிஞ்சிக்கிறேன் :-)
இந்த பதிவு உங்கள் நினைவுகளையும் கொண்டுவந்ததில் சந்தோசம்.
//** வெளிக்காத்தைப் பாத்து மாசமாச்சு! **// உண்மை. மேலே நட்சத்திரங்களையும் விண்மீன்களையும் பாத்தே நாளாச்சி :-(
நீங்கள் சொல்வது போல், We improve the standard of living but lose the quality of life...நாம் நிறையவே இழந்து வருகிறோம்.
அன்புடன்
சிவா
Romba arumaiyaa eshuti irukeenga, naan giramathukku pona mathiri oru ennam
NAN PADIKKA ARAMBITHATHUME MANASA ORU MATHIRI PATHICHATU. ENAKKUM ATHE NINAIPPUTHAM, Nan IPPO URUKKU PONA MUNBU PARTHA ELLAM THALAI KEELA MARI IRUKKUM, ANAULUM ENAKKU POKANUM. APPADI ORU ASAI. OOR MARI NALUM, NAN PARTHA IDANGAL IRUNTH ORAACHE?
வணக்கம்... உங்களின்... இந்த மனதை தொடும் பதிவை இப்பொழுது தான் பார்க்க கிடைத்தது... அருமை. அருமை அருமை... பாராட்டுக்கள்
இங்கு புலத்தில் எதையோ தொலைத்து விட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் ஏதோ தொலைத்து விட்டேன் என்று உணர்வில் எங்கையோ தேடி கொண்டிருக்கிறார்கள்...
எனக்கென்னவோ உங்கள் பதிவை பார்த்த பின் விளங்குது தொலைத்தது அழகான எங்கள் கிராமத்து வாழ்க்கையை என்று...
ஹலோ ஹனீப்!
இவ்வளவு நாள் கழிச்சி இந்த பக்கம் வந்து என்னோட பழைய பதிவுகளை படிச்சு பாராட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோசம் ஹனீப். எப்படி இந்த பக்கம் வந்தீங்க? கொஞ்சம் சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கறேன் :-)).
அன்புடன்,
சிவா
ஹலோ அனானி நண்பரே! உங்க பெயர் என்னன்னு சொல்லாம போய்ட்டீங்களே
எல்லா ஊரோட கதையும் அது தாங்க. ஆனாலும் நான் சொன்ன மாதிரி இன்னும் சில விசயங்கள் ஒட்டிக்கிட்டு இருக்கு. அது தான நம்மள அங்க கொஞ்சமாவது இழுக்குது. ஊருக்கு போய் பழைய நண்பர்களை சேர்த்துக்கிட்டு உக்காந்து பழைய கதைய அசை போடுற சுகமே தனி தாங்க :-)
உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க. மற்ற பதிவுகளையும் படிச்சி பாருங்க.
அன்புடன்
சிவா
சின்னக்குட்டி! நீங்க நான் ப்ளாக்ல இருந்து போன பின்னாடி ப்ளாக் உலகத்துக்கு வந்திருப்பீங்க போல :-). எப்படி இருக்கீங்க. இந்த பக்கம் எப்படி வந்தீங்க. சொல்லுங்க. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி சின்னக்குட்டி.
//தொலைத்தது அழகான எங்கள் கிராமத்து வாழ்க்கையை என்று// சரியா சொன்னீங்க. மற்ற பதிவுகளையும் படிச்சி பாருங்க. நானும் அந்த பக்கம் வந்து பார்க்கிறேன்.
அன்புடன்
சிவா
ஹலோ ஹனீப்!
இவ்வளவு நாள் கழிச்சி இந்த பக்கம் வந்து என்னோட பழைய பதிவுகளை படிச்சு பாராட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோசம் ஹனீப். எப்படி இந்த பக்கம் வந்தீங்க? கொஞ்சம் சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கறேன் :-)).
அன்புடன்,
சிவா
Tamil blogs patri kelvipattu irukken, google vasiyaaga taan vanthen :)
ஹலோ சிவா சார்,
எப்படி இருக்கீங்க? இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க? WCM க்ளாஸ் எல்லாம் எப்படி போவுது? டிஜிட்டல் கேமரா வாங்குனீங்களா? ஒரு ரிப்ளை போட்டீங்கன்னா சந்தோசப் படுவேன்.
:)
unga kathai padithen an en manathai ennavo mathhiriyaha iunthathu
Post a Comment