Tuesday, February 07, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே (இறுதி பாகம்)

இதை படிச்சிட்டு வாங்க

கடிதம் வந்ததில் இருந்து மலரை எப்போ பார்ப்போம் என்று இருந்தது. எல்லா சந்தோசமும் திங்கள் கிழமை வரை தான். இந்த கடிதம் எல்லாமே பசங்க செட்டப் தான் என்று தெரிந்த போது ரொம்பவே நொந்து போனேன். அதற்கு மூலக்காரணமே பாலா தான் என்று அறிந்த போது ரொம்பவே என்னை வைத்து விளையாடிட்டானுங்க என்று தெரிந்தது. 'டேய்! சந்தனம். ஜோசப் தான்டா அப்படி ஒரு வெளாட்டு பண்ணலாம்னு சொன்னான். லெட்டர் எழுதியது அவன் தான்டா. சாரிடா'. 'டேய் அவ எப்படிடா லெட்டர் போடுவா. அதுவும் ஊரே பார்க்கிற மாதிரி எந்த பொண்ணாவது போஸ்ட் கார்டுல எழுதுமாடா. அறிவு கெட்டவனே' பாலா செய்வதையும் செய்துவிட்டு என்னை திட்டினான். 'ஆமான்டா எனக்கு அறிவு கெட்டு தான் போச்சு' வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை.

மலர் வழக்கம் போல என்னிடம் பேசுவாள். இயற்பியல் செய்முறை வகுப்புகள் எங்கள் நட்புக்கு ரொம்பவே உதவியது. மலர் பக்கத்திலேயே உள்ள எக்ஸ்பரிமென்ட் வந்து விட்டால், அன்று அவ்வளவு தான். நான் ஏதாவது வேண்டுமென்றே சொதப்புவதும், மலர் என்னை செல்லமாக திட்டிக்கொண்டே உதவி செய்வதும், மறக்க முடியாத நாட்கள் அவை. பசங்களை சொல்லவும் வேண்டுமா?. 'டேய்! சந்தனம். அது எப்படிடா மலர் பக்கத்துல வந்துட்டா நீ அப்படி சொதப்புற. ம்..நடத்து நடத்து'. இப்படி எங்கள் நட்பு வேறுன்ற ஆரம்பித்தது. நான் வகுப்பு போகாவிட்டால் எழுதி கொடுப்பது, பரிட்சைக்கு முக்கிய வினாக்கள் சேகரித்து கொடுப்பது என்று மலருக்கு நான் ரொம்பவே நட்பாகி போனேன்.

'இன்னும் எதுக்குடா சொல்லாம இருக்குற. நேர்ல சொல்ல முடியலன்னா, ஒரு லெட்டராவது கொடுடா. லெட்டர் எழுதனும்னா நம்ம ஜோசப் கிட்ட வேணும்னா ஐடியா கேளுடா' பாலா அடிக்கடி என்னை கேட்க ஆரம்பித்தான். ஒரு நாள் கடிதம் எழுதியே விட்டேன். நானும் பாலாவும் செமஸ்டர் பரிட்சையை பாதியில் கட் அடித்துவிட்டு மலருக்காக காத்திருந்தோம். 'டேய்! அவ வெளியே வரும் போது நான் பேச்சு கொடுத்து நிறுத்தறேன். அப்புறம் உன் கைல தான் இருக்கு' பாலா திட்டம் வகுத்தான். மலரும் பரிட்சை முடித்துவிட்டு வெளியே வந்தாள். 'என்ன மலர்! எக்ஸாம் எல்லாம் எப்படி?' பாலா ஆரம்பித்தான். நான் அவன் பின்னாடி பைக்கில் பையில் லெட்டரோடு. 'ஈஸியா இருந்தது பாலா. உனக்கு எப்படி. சந்தனம் உனக்கு எப்படி. தேறுமா' சிரித்தாள். 'நாங்க ரெண்டு பேரும் சென்டம் அடிச்சிருவோம்னு பாதில வரும் போதே மோகன் சார் சொல்லிட்டார்' பாலா பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். அதுவரை தைரியாமாக இருந்த எனக்கு லெட்டரில் கை வைத்ததும் எல்லா தைரியமும் ஓடி விட்டது. சுற்றி எல்லோரும் என்னையே பார்ப்பது போல இருந்தது. 'டேய் குடுடா..குடுடா' மலரிடம் பேசிக்கொண்டே கை முட்டியால் என்னை இடித்தான் பாலா. 'சரி பாலா! சந்தனம் நான் வரேன். பஸ்ஸுக்கு நேரம் ஆச்சு' மலர் போய் விட்டாள்.

'போடா! எதுக்குடா குடுக்கலை. உன்ன நம்பி வம்பா ஒரு அரியர்ஸ் வேற வாங்கியாச்சு' திட்டினான் பாலா. 'இல்லடா! பாலா. ஒரு வேள மலருக்கு என்ன புடிக்காம போய் என்கிட்ட பேசாம போய்ட்டா, என்னால தாங்க முடியாதுடா. இன்னும் ஒரு வருடம் இருக்கு. என்னால அந்த இழப்பை தாங்க முடியாதுடா' மலர் என்னுள் எவ்வளவு படர்ந்து விட்டாள் என்று எனக்கே இப்போது புரிந்தது.

இறுதி ஆண்டும் வந்தது. மலரின் அண்ணன் கல்யாணம் என்று எங்கள் வகுப்புக்கு விடுமுறை. எல்லோரும் மலரின் வீட்டிற்கு முதன் முதலாக சென்றோம். அன்பான குடும்பம். மலர் எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்து கொண்டாள். அவளது இரு தங்கைகளையும் ரொம்பவே விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் வீட்டில் எல்லோரும் அவள் மேல் காட்டிய பாசம், அவள் அந்த வீட்டின் தேவதை என்று அழகாக காட்டியது. என்னை மட்டும் அழைத்துப்போய் அவள் அம்மா அப்பாவிடம் சிறப்பு அறிமுகம் செய்த போது, நான் மலருக்கு ஏதோ ஒரு பந்தத்தில் நெருங்கியவனாகிய போனது நன்றாகவே தெரிந்தது. அந்த பந்தம் நட்பா, காதலா?. முடிவு செய்ய முடியாமல் தவித்தேன்.

கடைசி செமஸ்டரும் வந்து சேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து கொடைக்கானல் சுற்றுலா போகலாம் என்று முடிவானது . மூன்று நாள் கொடைக்கானலில். இன்று நினைத்தாலும் இனிக்கும் நாட்கள். நானும் மலரும் மூன்று நாளும் சேர்ந்தே சுற்றினோம். பேச நினைத்ததை எல்லாம் மொத்தமாக மூன்று நாளில் பேசி தீர்த்தேன். என் காதல் மட்டும் மனசுக்குள்ளேயே தங்கி போனது. இரண்டு பேரும் சேர்ந்தே சுற்றிய போது, மனோ சாரே கேட்டார், 'என்னப்பா சந்தனம். என்ன மேட்டரு' 'ஒன்னும் இல்ல சார்' சிரித்து மழுப்பினேன்.

கல்லூரி இறுதி நாட்களும் வந்து சேர்ந்தது. எல்லோர் கைகளிலும் வண்ண வண்ண ஆட்டோகிராப் புத்தகங்கள். இந்த மூன்று வருடத்தில் கிடைத்த சந்தோசங்களும், நட்புகளும் இன்னும் சில நாட்களில் பறி போகப் போகும் கவலை எல்லோர் முகத்திலும். என் மனதில் இருப்பதை சொல்ல இன்னும் சில நாட்களே இருந்தது. இனி சொல்லி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்ல முடிவு செய்தேன். மலர் என்னுடைய ஆட்டோகிராப்பை எழுதி திருப்பி கொடுக்கும் போது சொல்லியே விட்டேன். 'இல்ல சந்தனம். நீ எனக்கு எப்பவுமே ப்ரண்ட் தான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட். நான் அந்த எண்ணத்தோட எப்பவுமே உன்னிடம் பழகவில்லை' மூன்றே வார்த்தையில் முடித்து விட்டாள். அவள் கொடுத்த ஆட்டோகிராப்பை திறந்து பார்த்தேன் 'உன்னுடைய பால் போன்ற தூய்மையான நட்பை என்றும் மறவாத - மலர்' என்றிருந்தது..

அதன் பிறகு மலரை தொடர்பு கொள்ள மனது கேட்கவில்லை. பிறகு வேலை தேடுவதிலேயே வருடங்கள் ஓடி விட்டது.

'சார்! காபி! காபி' குரல் கேட்டு எழுந்தேன். வண்டி மணியாச்சியை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் விடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நெல்லை வந்து விடும். மேலே இருந்து இறங்கி பெட்டியை எடுத்து இறங்க தயாரானேன். மலரை எட்டிப் பார்த்தேன். இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். இத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் என்னிடம் தான் அதே உரிமை, அதே பேச்சு. நான் வாழ்க்கையில் இழந்தது கொஞ்சம் பெரிதாகவே பட்டது. மலரிடம் சொல்லாமல் செல்ல மனசு வரவில்லை. தொட்டு எழுப்பவும் உரிமை இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'மலர்' கூப்பிட்டுப் பார்த்தேன். எந்திரிப்பது மாதிரி தெரியவில்லை. இவ்வளவு நாள் கழித்து பார்த்துவிட்டு சொல்லாமல் போவது ஏனோ மனசை பிழிவது மாதிரி இருந்தது. நெல்லையும் வந்து விட்டது. 'தம்பி! எறங்குப்பா' பின்னாடி நிற்பவர்கள் அவசரப் பட்டார்கள். மலர் என் வாழ்வில் இருந்து மொத்தமாக போய்விட்டதை உணர்ந்த போது, சட்டென்று வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். ரயில் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது, என் மலரோடு.

(முற்றும்)

35 comments:

கைப்புள்ள said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு சிவா.எதார்த்தமான கதை.

சிங். செயகுமார். said...

இங்கே அரங்கேற்றம் ஓர் காதல் சரித்திரம்
சின்ன ரணம்தான்
முளையிலேயே முடக்கபட்டதே
மூன்று நாட்கள் பேசியும்
மூன்றெழுத்து சொல்
மூச்சு வாங்கியதா!
உதவியும் நட்பும்
உறவாகாதோ?
வேண்டாத விஷயத்திற்கு சிரித்து
வேண்டிய விஷயத்தை மறைத்து
எஷுதிய கடிதம்
எத்தனை நாளாய் சட்டை பையில்?
அருகில் சென்றாலே
தைரியம் இல்லை
திறந்த மடல்
மலர் கரத்தில் சேர!
பாழும் காதல்
பசங்களால் வந்ததே!
பத்து பைசா கார்டையும்
பாவி அவள் கடிதமென
கற்பனை செய்து
எனக்குறியவள் அவள்தானென
எகோபித்த சந்தோஷத்தில்
எல்லாம் கற்பனையா?
இருந்தாலும் என்னுள்ளே
இதுவும் ஓர் காவியமாய்
எனக்குள்ளும் ஓவியமாய்
எங்கும் சேரா தண்டவாளமாய்!

ILA (a) இளா said...

அருமையான நடை, 3 வருஷம் நானும் உங்கள் கூட படித்தது போன்ற உணர்வு, கடைசி வரி மட்டும் கவிதை. எங்கேயோ போய்டீங்க.

ilavanji said...

கலக்கீட்டீங்க சிவா! கடைசி பத்தி மனசை கஸ்டப்படுத்திடுச்சி...

இது சம்பந்தமா சம்பந்தமில்லாத ஒரு விளம்பரம்! ஹிஹி...

http://ilavanji.blogspot.com/2005/10/blog-post_07.html

சத்தியா said...

கதையை வாசித்த போது ஏனோ
தெரியவில்லை என் மனசையும் ஓர் வேதனை கசக்கிப் பிழிந்தது.

குமரன் (Kumaran) said...

//கடைசி வரி மட்டும் கவிதை.//

இதை வழி மொழியலாம்ன்னு தான் நினைச்சேன் சிவா. ஆனா அப்புறம் தான் ஒரு திருத்தம் தோணிச்சு. கடைசி வரி மட்டும் இல்லை. முழுக் கதையே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு.

அதனால தான் சிங்கு அதைக் கவிதையாவே எழுதிட்டார் போல. அவர் கவிதையில கடைசி வரி ரொம்ப நல்லா இருக்கு.

ஆனா இந்த கதை கற்பனைன்னு சொல்றீங்களா என்ன? நம்ப முடியலையே....

kirukan said...

very nice story

Vasudevan Letchumanan said...

அன்பு சிவா,

இன்று மதியம் தான் என் CD-இல் 'காதலின் தீபம் ஒன்று..ஏற்றினாளே என் நெஞ்சில்..' எனும் சற்று பழைய ஆனாலும் அருமையான பாடலை இரசித்துக் கேட்டு வந்தேன்.
மனசு இலேசாகியிருந்தது.

உங்கள் கதை? இல்லை க(வி)தையை படித்த பின்பு இன்னும் இலேசாக்கி விட்டுச் சென்றது.

மனசு வெற்றிடமாச்சு!

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

தாணு said...

சிவா
நல்லா சொல்லியிருக்கீங்க. நிறைய உறவுகள் ரயில் பயணங்கள் போல்தான் ஆகிவிடுகிறது. Love is a part of life which is unescapable

Santhosh said...

ஆகா சிவா நல்லா எழுதியிருக்கிங்க... ம்.. எங்கேயோ போயிட்டேன்.:))

சிவா said...

நன்றி கைப்புள்ள (மோகன்ராஜ்). முதலிலேயே படிச்சி கமெண்ட் கொடுத்திட்டீங்க. தொடர்ந்து வரும் பதிவுகளையும் படிச்சி சொல்லுங்க.

தம்பி சிங்கு! கலக்கிட்டீயேப்பா...கவிதை அருமை. படித்து மிகவும் ரசித்தேன். டக்கு டக்குன்னு எடுத்து விடுறீங்களே...உங்கள் திறமையே திறமை ( நானும் யோசிச்சி பாக்கறேன், ஒரு வரி கூட வர மாட்டேங்குது :-))

சிவா said...

நன்றி இளமுருகு (பேரு சரி தானே)!
//** 3 வருஷம் நானும் உங்கள் கூட படித்தது போன்ற உணர்வு, **// இது போதுங்க, இந்த கதை எழுதினதுக்கு பலன் கெடைச்ச மாதிரி இருக்கு.

இளவஞ்சி! மனச கஷ்டபடுத்தியதற்கு மன்னிச்சிடுங்க :-)))
சைடு கேப்புல ஒரு விளம்பரம் கொடுத்திட்டு போய்ட்டீங்க :-)). நான் தானய்யா உங்க ப்ளாக்ல வந்து விளம்பரம் கொடுக்கணும். அப்படியாவது எனக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும். :-)) எல்லாத்தையும் தலைகீழா பண்ணறீங்க :-))

சிவா said...

சத்தியா (பேர சரியா இந்த தடவை சொல்லிட்டேன் :-))
//** என் மனசையும் ஓர் வேதனை கசக்கிப் பிழிந்தது. **// என்னோட எழுத்துக்கு கிடைத்த பெரிய பாராட்டு.நன்றி சத்தியா.

குமரன்! //** முழுக் கதையே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு. **// பாராட்டுக்கு நன்றி குமரன். நானும் தம்பி சிங் கவிதையை ரொம்ப ரசித்து படித்தேன்.

சிவா said...

கிறுக்கன் (பேர சொல்லுங்க சார்) :-(,

உங்களை மாதிரி புது ஆளுங்க பாராட்டு ரொம்பவே சந்தோசமா இருக்கு. தொடர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

சிவா said...

எல்.ஏ.வாசுதேவன். இன்று குமரன் உங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நீங்க இந்த பக்கம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. //**உங்கள் கதை? இல்லை க(வி)தை**// இன்னொரு நன்றி வாசுதேவன். //** 'காதலின் தீபம் ஒன்று..ஏற்றினாளே என் நெஞ்சில் **// கலக்கல் ராஜா பாடல் ஆச்சே. என்னோட கீதம் ப்ளாக் பார்த்திருக்கீங்களா? நல்ல பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் ரசிகன் நான்.

சிவா said...

தாணு! வேலை பழுவுக்கும் இடையில் வந்து ரெகுலரா படிச்சிடறீங்க. ரொம்ப நன்றி தாணு. //**Love is a part of life which is unescapable **//
உண்மையோ உண்மை. அதில் நானும் தப்பிக்கவில்லை :-)). தப்பிச்சிட்டதா சொல்றவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம் :-))

சந்தோஷ்! பாராட்டுக்கு நன்றி. //** எங்கேயோ போயிட்டேன் **// உங்க கல்லூரி காலத்திற்கு போய்ட்டீங்களா...ம்ம்...என்னன்னு எங்க கிட்டயும் சொல்றது :-))

Anonymous said...

சிவா,
நேற்று முதல் பாகம் படித்த போது, இதை எப்படி நிறைவு செய்ய போகிறீர்கள் என்று யோசித்தேன். நன்றாக முடித்துள்ளீர்கள். கதையை விட உங்கள் நடை நன்றாக இருந்தது.

NONO said...

"காதலை"யும் நற்பையும் ஒன்றாய் போட்டு குளப்பக் கூடாது!!!

ஜோ/Joe said...

ஆகா! 'இதயம்' படம் பார்த்த பீலிங்..நல்லா இருக்கு மக்கா!

யோவ்! சிங்.செயக்குமார் .மடக்கி மடக்கி எப்படித் தான் இவ்வளவு சுலபமா எழுதுறீங்களோ?கலக்குப்பா!

சிவா said...

தேசிகன்! உங்களை மீண்டும் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோசங்க. கதையை எப்படி முடிப்பது என்று எனக்கும் கூட கொஞ்சம் யோசனை வந்தது. எழுதும் போது இது தோன்றியது, அப்படியே எழுதிட்டேன். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி தேசிகன்.

சிவா said...

oliyinile ! //** "காதலை"யும் நற்பையும் ஒன்றாய் போட்டு குளப்பக் கூடாது!!!**// நட்பு தாங்க நிறைய சமங்களில் காதலாக மாறும். கண்ணும் கண்ணும் நோக்கியவுடன் காதல் வந்தால், அது வயசு கோளாறு என்று அர்த்தம் :-)) (சும்மா! ஜாலியா தான்)

சிவா said...

பாரதி! உங்கள் வரவைத் தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் உணர்வு பூர்வமா சிம்பிளா முடிச்சிட்டேன். முடிவு உங்களுக்கு புடிச்சி இருந்ததா?.
//** கதையைப் படிப்பவர்களை கதைக் களத்துக்கே இழுத்துச் செல்லும் வலிமையான எளிய நடை **// ரொம்ப நன்றி பாரதி. எனக்கு இந்த மாதிரி பாராட்டுகளை கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

//** இதே கதையை மலர் அவளுடைய கோணத்தில் சொன்னால் எப்படியிருக்கும்? **// எப்படி இருக்கும். நட்பின் வரலாறு மாதிரி இருக்குமோ. நீங்க சொல்லுங்களேன்.

சிவா said...

ஜோ மக்கா! பாராட்டுக்கு நன்றி மக்கா. தம்பி சிங் கவிதைல புகுந்து வெளையாடுகிறார். நான் கூட அவரது கவிதையை ரொம்ப ரசித்தேன்.

சிங். செயகுமார். said...

நன்றி ஜோ ! எல்லாம் நீங்க ஆரம்பிச்சி வச்சதுதான்!

rv said...

இவ்வளவு அருமையா எழுதறீங்க. அப்புறம் ஏன் இவ்ளோ கஞ்சத்தனம்?

இதுக்கு உங்க குமரன உதாரணமா எடுத்துகிட்டு, நிறைய பதிவுகள் போடலாமே?

பரஞ்சோதி said...

சிவா,

அருமையான கதை. முடிவு ரொம்பவே அருமை.

நீங்க தொடர்ந்து கதைகள் கொடுங்க.

சிவா said...

இராமநாதன்! பாராட்டுக்கு நன்றி!
//** அப்புறம் ஏன் இவ்ளோ கஞ்சத்தனம்? **// சட்டில இருந்தா தானே அகப்பைல வரும் :-)) எப்பவாவது தான் இப்படி ஒன்னு தோணுது..அப்போ போடுகிறேன். வச்சிக்கிட்டு கஞ்சத்தனம் இல்லைங்க :-)) .

//** இதுக்கு உங்க குமரன உதாரணமா எடுத்துகிட்டு **// ஐய்யா! வேணாம் சாமி..அவரு கூட எல்லாம் போட்டி போட முடியாது..அவரு ரூட்டே தனி :-))

பாரதி!

//** மலரின் மனதில் இருந்தது நட்பு மட்டும்தானா?

தற்போது அது தேவையில்லாத ஆராய்ச்சி தான் விட்டுவிடலாம். **// மலரிடம் கேட்டு சொல்கிறேன் :-)) (சும்மா தாங்க)

சிவா said...

பரஞ்சோதி!
//** அருமையான கதை. முடிவு ரொம்பவே அருமை**// நன்றி பரஞ்சோதி.

//** நீங்க தொடர்ந்து கதைகள் கொடுங்க **// இராமநாதனுக்கு கொடுத்த பதிலை பாருங்க :-))

தருமி said...

தொட்டதெல்லாமே துலங்குமாமே சிலருக்கு...ம்..ம்ம்...அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமில்லா..என்ன நாஞ்சொல்லுறது..?

சிவா said...

//** என்ன நாஞ்சொல்லுறது..? **//

தருமி சார் ! நம்ம ஊரு பாசைய கேக்கவே நல்லாருக்கு :-)). உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி சார் :-))

சிவா said...

உஷா அக்கா! உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி :-)
கதை எழுத இப்போது தான் கத்துக்கறேன். கதை சொல்றது...நல்ல சொல்லுவேன் :-)). என்னோட பொண்ணுக்கிட்ட..

//** In real life -
Love panna self confident venum.
Family, relations ellam marandhudanam. **//

உண்மையோ உண்மை..எனக்கும் அனுபவம் இருக்குல்லா :-))

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க சிவா..

இந்த கதைல புதைஞ்ச சில அழகான கவித்துவமான வரிகள்
//மலர் என்னுள் எவ்வளவு படர்ந்து விட்டாள் என்று எனக்கே இப்போது புரிந்தது

பேச நினைத்ததை எல்லாம் மொத்தமாக மூன்று நாளில் பேசி தீர்த்தேன். என் காதல் மட்டும் மனசுக்குள்ளேயே தங்கி போனது

மலர் என் வாழ்வில் இருந்து மொத்தமாக போய்விட்டதை உணர்ந்த போது, சட்டென்று வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். ரயில் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது, என் மலரோடு. //

சூப்பர் மலருடனும் சந்தனத்துடனும் பழகியது பொன்ற ஒரு பிரம்மை ஒட்டிக்கிட்டது. பாலாவையும் மறக்க முடியாது ம்ம்

சிவா said...

//** ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க சிவா.. **//
நன்றி கீதா :-)
//** சில அழகான கவித்துவமான வரிகள் **// - காதலிச்சிருக்கேம்லா :-))

//** சூப்பர் மலருடனும் சந்தனத்துடனும் பழகியது பொன்ற ஒரு பிரம்மை ஒட்டிக்கிட்டது. பாலாவையும் மறக்க முடியாது ம்ம் **// எல்லாம் நான் பழக்கிய நண்பர்களை மொத்தமாக போட்டு ஒரு கதை பண்ணிட்டேன் (பேரை மாத்துட்டேன் :-))

Anonymous said...

Nalla arumaiyaana kathai, continue :)

சிவா said...

ஹனீப்! இந்த பதிவும் படிச்சீங்களா. ரொம்ப நன்றி. உங்கள் பாராட்டுக்கும் நன்றி.