Monday, February 06, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே !

ஒரு வழியாக அலுவலகத்தில் விடுப்பு வாங்கி விட்டேன். பொங்கலுக்கு ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். இந்த நெரிசல் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போவது தான் என்ன ஒரு சந்தோசம். ஒரு வழியாக ஆட்டோக்காரனிடம் ரேட் பேசி தாம்பரம் இரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். பொங்கல் என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்ததும் ஏறி லக்கேஜுக்கு ஒரு இடத்தை கண்டுபுடித்து தள்ளிவிட்டு என் இருக்கையில் அமந்த்தேன். எதிரில் வயதான தம்பதிகள். என்னை பார்த்ததும் லேசாக புன்னகைத்தார்கள். 'தம்பி ஒங்களுக்கு லோயர் பெர்த்தா. கொஞ்சம் அப்பர்ல படுத்துக்க முடியுமா' அந்த பெரியவர் கேட்டார். 'சரிங்க. படுக்கும் போது சொல்லுங்க'. இன்னும் ஒரு சீட் காலியாகவே இருந்தது. 'பையனுக்கு லீவு கெடைக்கல. ரெண்டு நாள் கழிச்சி தான் வரேன்னு சொன்னான். அதான் மருமகள கூட்டிக்கிட்டு பொங்கலுக்கு ஊருக்கு கெளம்பறோம்' என்றார். பொதுவாக ஒரே ஊர்காரர்களை ஒரே இடத்தில் பார்த்தால் இந்த மாதிரி விசாரிப்புகள் எப்போதும் இருக்கும். 'மருமக ஏதோ அவ ப்ரண்ட் பக்கத்து பொட்டில பார்த்தாளாம். அதான் பேசிட்டு வர்றேன்னு போய்ருக்கா'. ரொம்ப உரிமையாக பேசிக்கொண்டு வந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மருமகள் வந்தாள். அவள் மலர். என் கல்லூரி தோழி. கல்லூரி முடிந்தவுடன் மறைந்து போன, மறந்து போன எத்தனையோ நட்புகள். யாரையாவது மறுபடி பார்க்க மாட்டோமா என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் மலரையே பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அவளுக்கும் ஆச்சர்யம். 'சந்தனம்! எப்படி இருக்கீங்க' முகத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோசம். பக்கத்திலேயே அவளது மாமனார்-மாமியார். 'நீங்க' என்று ஆரம்பிப்பதா, 'நீ' என்று ஆரம்பிப்பதா என்ற சின்ன தடுமாற்றத்துடன் 'நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க' நான். என்னிடம் இன்னும் அதே புன்னகை. அதே விசாரிப்புகள். கல்லூரியில் என் நெருங்கிய தோழி அல்லவா. கிட்டத்தட்ட 5 வருடம் கழித்து இருவரும் பார்க்கிறோம். என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாள். 'எங்கே இருக்குறீங்க ! என்ன வேலை! எப்போ வேலை கெடைச்சது! கல்யாணம் ஆயிடுச்சா' என்று விசாரிப்புகள் நீண்டு கொண்டே போனது.

சில வருடங்களில் வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது. என் நினைவுகள் கொசுவத்தி சுருளாய் பின்னோக்கி சுழன்றன.

பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண்ணில் சாதிக்க முடியாமல் கடைசியில் எனக்கு கிடைத்தது எங்க ஊர் கல்லூரியில் இயற்பியல் துறை தான். பசங்க பள்ளிக்கூடத்தில் படித்து விட்டு கல்லூரியில் ஒரே தாவணியா பார்த்த போது அசந்து தான் போனோம். மற்ற துறை மாணவர்கள் பொறாமை படும் அளவுக்கு எங்கள் வகுப்பில் நிறைய பெண்கள். பசங்களில் நிறைய பேர் ஏற்க்கனவே பாய்ஸ் ஸ்கூலில் வருடக் கணக்கில் ஒன்னா குப்பை கொட்டியவர்கள் தான். சுத்தி இருக்கும் அத்தனை ஊருக்கும் அது ஒன்று தான் கல்லூரி.

எல்லோருக்குமே பொண்ணுங்க கிட்ட முதல்ல பேச சின்ன தயக்கம். அப்புறம் பாலா தான் தொடங்கி வைத்தான். 'ஏல! நாம எல்லாம் ஒரே வகுப்புடா. எல்லோரும் நம்ம ப்ரண்ட்ஸ்டா. மூனு வருசம் ஒண்ணா தான் படிக்க போறோம். பட்டிக்காட்டன் முட்டாய் கடைய பாத்த மாதிரி முழிக்காதீங்கடா. பேசுங்கடா' எங்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான். அப்படி நான் முதலில் பேசியது மலர்விழியிடம் தான். செய்முறை வகுப்பில் நான் வயரை மாற்றிக் கொடுத்து முழித்துக் கொண்டிருந்த போது 'சந்தனம்' என்று ஒரு குரல். குரல் வந்த திசையை எட்டிப்பார்த்தேன். மலர் நின்று கொண்டிருந்தாள். 'நீ தப்பா கொடுத்திருக்க. அதான் வேலை செய்யலை' அவளே எல்லாம் சரி செய்து கொடுத்த போது, ஏதோ ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். மனசுக்குள் சில பட்டாம்பூச்சிகள் பறக்கத் தான் செய்தது.

அப்புறம் வகுப்பு முடிந்தவுடன் கிணத்தில் போட்ட கல்லு மாதிரி பின் தங்கி மலர் கிளம்பும்போது எதேச்சையாக கிளம்புவது போல கிளம்பி மலரிடம் பேசிக்கொண்டே வர ஆரம்பித்தேன். நான் அடித்து பிடித்து கடைசி பெஞ்சில் இடம் பிடித்த போது 'டேய் சந்தனம்! உன் ஒயரத்துக்கு பின் பெஞ்ச் எதுக்குடா. தூங்கணும்னா முன் பெஞ்சில ஒங்காந்தே தூங்குடா. மனோ சார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க' பாலா இடம் கொடுக்காமல் அடம்பிடித்தான். நான் பின் பெஞ்சிக்கு ரொம்பவே முரண்டு புடிக்க, மோப்பம் புடிச்சிட்டான். 'டேய் சந்தானம்! கத இப்படி போகுதா. நடத்து நடத்து'. இது போதாதா அத்தனை பசங்களுக்கும் சேர்ந்து அவனுங்களே வகுப்பில் ஒரு காதல் கதை ரெடி. அதுல ஹீரோவா என்னை போட்ட போது 'டேய்! ஒன்ன ஏத்தி வுடுறானுங்கடா. ஒனக்கு ஒத்து வராத வேலடா இது' அப்படின்னு உள்மனசு சொன்னது. ஆனால் அதை கேட்கும் நிலமையில் நான் இல்லை. 'டேய் பாலா! அவளுக்கு என்ன புடிக்குமாடா'ன்னு நானே உளறியபோது என்னை அறியாமல் நான் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதில் இருந்து பசங்க ஒவ்வொரு விசயமா சேகரித்து கொடுக்க ஆரம்பித்தார்கள். மலரோட அப்பா என்ன பண்ணுறார். கூட பொறந்தவங்க எத்த பேரு. இப்படி பல விவரங்கள். 'எல்லாம் சரிடா! மலருக்கு என்ன புடிக்குமா'. கேட்டுட்டா போச்சி. ஆசிரியர் இல்லாத நேரம் பார்த்து பாலா 'எப்பா! நம்ம சந்தனம் மலர லவ் பண்ணராம்பா. என்ன சொல்றீங்க' அப்படின்னு எல்லோருக்கும் கேட்கிற மாதிரி கத்த நான் ஆடி போனேன். சரி மொத்தமா சமாதி கட்டிட்டான். கொஞ்ச நஞ்சம் பேசுறதுக்கும் மூடு விழா நடத்திட்டான் என்று தான் நினைத்தேன். மலரை லேசாக எட்டி பார்த்தேன். கொதித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்தால் குளிர்நிலவாய் ஒரு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். 'உன் ஆள பாருடா. இந்நேரத்துக்கு பண்ணி இருக்கிற வேலைக்கு, நான் பிரின்சிபால் முன்னாடி கை கட்டி நின்னுக்கிட்டு இருக்கனும். அவ சிரிக்கிறாடா. போய் தைரியா சொல்லுடா'. 'என் ஆள்' இந்த இரண்டு வார்த்தையில் தான் எவ்வளவு போதை. பாலா எனக்கு உதவி செய்வதாகவே பட்டது.

அன்று சனிக்கிழமை. வீட்டிற்கு என் பெயருக்கு ஒரு போஸ்ட் கார்ட். உருகி உருகி காதலில் நனைந்து போய் இருந்தது. இறுதியில் 'சந்தனம்! இது 15 பைசா கார்டு கிடையாது. என்னோட வாழ்க்கை. உன் முடிவுக்காக காத்திருக்கும்' அப்படின்னு ஒரு பூ படம் மட்டும் போட்டிருந்தது. கையெழுத்து எதுவும் இல்லை. என்னால் நம்பவே முடியலை. நம்ப சொல்லி காதல் பித்து பிடித்த மனசு சொன்னது. அன்று முழுவதும் சாப்பாடே இறங்க வில்லை . அடுத்த நாள் பாலா வீட்டுக்கு போய் காட்டினேன். 'டேய். சந்தேகமே இல்லை. பூ படம் போட்டிருக்குல்லா. மலர் தான்டா. கலக்கிட்டாடா சந்தனம்'. உலகமே என் காலடிக்குள் கிடப்பது போல் ஒரு சந்தோசம்.

(இறுதி பாகம் அடுத்த பதிவில்..கதையின் நீளம் கருதி மட்டுமே)

33 comments:

பரஞ்சோதி said...

சிவா,

காதல் கதையா, அட்டகாசம் தான் போங்க, அதுவும் விடலை பசங்க காதலா.

அடுத்த பாகம் சீக்கிரம் சொல்லுங்க.

(தனிமடலில் யார் அந்த சந்தனம் என்பதையும் சொல்லுங்க).

G.Ragavan said...

கதையா...சந்தனமுன்னு பேரு வரைலயே சந்தேகந்தான். சரீன்னு பாத்தா கதைதான்.

அது சரி. அதென்ன தூத்துடி கல்லூரீ. வ.உ.சிதான? அதச் சொல்றது. நம்மூருக் காலேஜூ. மூனாம் மைலு போற பஸ்சுல ஏறுனா எறக்கி விட்டுர்ரான்.

குமரன் (Kumaran) said...

ஆஹா. நல்ல இடத்துல நிறுத்திட்டுப் போயிட்டீங்களே சிவா...அதுல வேற கதையின் நீளம் கருதி வெட்டி அடுத்ததுல போடறேன்னு சொல்றீங்க....ஹும்...அடுத்தப் பதிவு எப்போ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட்டகாசம் தான்

rv said...

சிவா,
ரொம்ப நல்லாருக்கு. தொடரா.. நமக்கேவா?? சரி சரி.. சங்கத்துல காப்பிரைட் வாங்கலேனாலும் நல்லாருக்கறதாலவும், சங்கத்தலைவி சூறாவளி சுற்றுப்பயணம் போயிருக்கறதாலேயும் சும்மா விடறேன். இல்லேனா சட்டப்படி சந்திச்சிருப்போம். :)))

Karthik Jayanth said...

Siva .Congrats for being star of this week.

//'உன் ஆள பாருடா ...

//பாலா வீட்டுக்கு போய் காட்டினேன். 'டேய். சந்தேகமே இல்லை. பூ படம் போட்டிருக்குல்லா. மலர் தான்டா. கலக்கிட்டாடா சந்தனம்'//

இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் மனசு/உடம்பு ரணகளமா இருக்கு பல பேருக்கு.எல்லா செட்லயும் இந்த மாதிரி ஒருத்தன் இருபான் போல

மத்தபடி காதல் கதை நல்லா இருக்கு :-)

Santhosh said...

ஆகா சிவா,
நீங்க தான் இந்த வார நட்சத்திரமா? செல்லவே இல்லை. சரி இந்த வாரம் காதல் வாரம் போல இருக்கே ம்ம்ம்ம் கலக்குங்க. சரி தனி மெயில்ல முழுகதைய அனுப்புங்க suspense தாங்க முடியலை சந்தனம் :))

Anonymous said...

இந்த வார நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள். அசத்துங்க. நான் பிறகு பொறுமையா படிக்கிறேன்.

அன்புடன்
கீதா

kirukan said...

eagerly awaiting the last part.

சிங். செயகுமார். said...

இங்கே புதுபிக்கபட்ட சினேகம்
சந்தனமாய் மலராய்
சிவமலராய்
கல் உரசிய காதல்
கல்லூரி காளைகளின்
கேளி பேச்சால்
களம் கண்டதே!
உளமாற காதல் சொல்ல
உனக்குள்ளும் காதல்
ஒரு கார்டில்
ஒராயிரம் எண்ணங்கள்
உன் வழித்துணையாய்
வாழ்க்கைதுணையாய்?
பதில் கடிதம் போட்டாயா?
பசங்க சும்மாவா விட்டாங்க?
சும்மா சொல்ல கூடாது
பனக்காட்டு நரிக்கும்
பக்குமாய் ஓர் காதல் கதை
பரிசென்ன பனங்காய் வண்டியா?
பயணங்கள் தொடரட்டும்

சிவா said...

விரைவிலேயே இறுதி பாகத்தை போட்டுடறேன் நண்பர்களே!
//**தனிமடலில் யார் அந்த சந்தனம் என்பதையும் சொல்லுங்க **// ஏங்க யோசித்து ஒரு கதை சொல்ல விட மாட்டீங்கறீங்க. உடனே ஆள் யாருன்னு கேக்கறீங்க. எனக்குத் தெரியாதுப்பா..நான் இந்த விளையாட்டுக்கு வரல :-)))

ராகவன்! எங்க ஊரு நாசரேத்திலேயே ஒரு சூப்பர் கல்லூரி இருக்கு. உங்களுக்கு தெரியுமா? நீங்க வ.உ.சி-ல தான் படிச்சீங்களா?

சிவா said...

குமரன்! படத்துக்கு இடைவேளை இப்போ தான விட்டிருக்கு. அடுத்த பதிவு சீக்கிரம் போட்டுடறேன். உங்கள மாதிரி 30 பதிவு கை வசம் இல்லையே குமரன். இருந்தா தினமும் மூனு ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்கலாம். :-)

சிவா said...

நன்றி ஞானியார்! நீங்களும் நம்ம ஊரு தானா?

ராமநாதன்! மன்னிச்சிருங்க. காப்பி ரைட் வாங்க நேரம் இல்லாம போச்சி :-) டீச்சர் கிட்ட போட்டு கொடுத்திடாதீங்க.

சிவா said...

கார்த்திக்! ஹா ஹா ஹா! என்னங்க ரொம்ப அனுபவம் பேசுது போல..கல்லூரில இதெல்லாம் சகஜமப்பா - என்று சொல்றீங்களா

//** இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் மனசு/உடம்பு ரணகளமா இருக்கு பல பேருக்கு.எல்லா செட்லயும் இந்த மாதிரி ஒருத்தன் இருபான் போல **// சூப்பர் போங்க. அப்படியே இன்னொரு ஏத்து வுட்ட கதையையும் இங்கே பாருங்க

http://sivapuraanam.blogspot.com/2005/09/blog-post_26.html

சிவா said...

சந்தோஷ்! ஆமாம் சந்தோஷ்! சஸ்பென்சா இருக்கட்டும் என்று சொல்லலை. :-))

காதல் வாரம் எல்லாம் இல்லீங்க. கிராமத்து கதைன்னு நம்ம ப்ளாக் ஆகி போச்சு. அதை காப்பாத்தனும் இல்லையா..அதனால அடுத்து கிராமத்துக்கு தாவிடுவேன். :-)

வாங்க கீதா! வீட்டுல மாமியார்-மாமனார் எல்லாம் சவுக்கியமா?. நேரம் கெடைக்கும் போது படிங்க. அப்புறம் கடைசி பதிவுல வந்து எல்லாத்தையும் படிச்சேன், கமெண்ட் கொடுக்க நேரம் இல்லை அப்படின்னு பொய் சொல்ல கூடாது..அப்புறம் நான் மனுசனா இருக்கக மாட்டேன்..சொல்லிப்புட்டேன் ( சும்மா ..ஜாலியா தான்).. :-))

சிவா said...

வாங்க கிறுக்கன் (ஏங்க இப்படி எல்லாம் பேரை வச்சி என்னை சங்கடத்தில் விடுறீங்க). கதை படிச்சதற்கு ரொம்ப நன்றிங்க. சீக்கிறம் இறுதி பாகத்தை போட்டுடறேன்.

ராஜ்! விட்டா கதை முழுதும் சொல்லிடுவங்க போல :-))))

ஜோ/Joe said...

மக்கா! மொதல்ல உன் கதையுண்ணுல்லா நெனச்சேன்..சீக்கிரம் மீதிய சொல்லு மக்கா!

சிவா said...

தம்பி செயக்குமாரு! கவிதை எல்லாம் சொல்லு கலக்கி புட்டியப்பூ..நன்றி.

//** பதில் கடிதம் போட்டாயா?
பசங்க சும்மாவா விட்டாங்க? **// ஏங்க எல்லோரும் என் கதை மாதிரி கேக்கறீங்க. என்னோட கதைய போட்டா மெகா சீரியல் மாதிரி போய்டும் செயக்குமாரு...அப்படி எல்லாம் இல்லை..நம்புங்கையா..வீட்டுல குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க
:-)))

சிவா said...

ஜோ மக்கா! எதுக்குவே என் கதை என்று நெனைச்சீரு :-)). சீக்கிரம் கதைய சொல்லிடறேன்.

G.Ragavan said...

// ராகவன்! எங்க ஊரு நாசரேத்திலேயே ஒரு சூப்பர் கல்லூரி இருக்கு. உங்களுக்கு தெரியுமா? நீங்க வ.உ.சி-ல தான் படிச்சீங்களா? //

இல்லை சிவா. அது என் சகோதரி படித்த கல்லூரி.

கைப்புள்ள said...

உண்மையாலுமே கதையா? நான் 'சிவா'ங்கிற உங்களோட பேரை, சுருக்கி செல்லமா 'சந்தானம்'னு கூப்பிடுறாங்கனு நினைச்சேன்.
:)-

Karthik Jayanth said...

சிவா,
இந்த மாரி வசனத்தை சொல்லி, எத்தன பேருக்கு ஆப்பு வச்சிருகேன்னு நினைச்சேன். சிப்பு தான் வருது. நீங சொன்ன மாதிரி கல்லூரில இதெல்லாம் சகஜமப்பு.

தாணு said...

சிவா
நிறைய காதல் உசுப்பேத்தல்லேதான் தொடங்கவே செய்யும்.
எஞ்சினீயரிங் படிக்கப் போற ஆளு மர்காஷியஸ்லே என்ன பண்ணுனீங்க?

சிங். செயகுமார். said...

நட்சத்திரமே அவிச்ச கடலை அமெரிக்காவுல கெடைக்குதா? இல்லன்னா ஒரு மூட்டை அனுப்பி வைக்கிறேன்!

சிவா said...

ராகவன்! நீங்க எங்கே படித்தீர்கள். சொல்லாம போறீங்களே. தெரிஞ்சவங்க இருந்தா ஒங்கள பத்தியும் விசாரிப்போம்லா :-))

வாங்க மோகன் ராஜ்! 'சிவா'வ சுருக்குனா எப்படிங்க 'சந்தனம்' வரும். ஏங்க என் வாழ்க்கையோட வெளையாடுறீங்க. நா புள்ளக்குட்டி காரம்யா :-)))). சில சம்பவங்கள் நாங்கள் பண்ணிய லூட்டி. மற்றபடி உண்மை கதை எல்லாம் இல்லீங்க. எனக்கு கற்பனை திறனே கெடையாதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?

சிவா said...

ஆமாம் கார்த்திக், ஏத்துவிட்டு பாக்குறது தான நமக்கு வேல..ஏறிப்போச்சுன்னா நமக்கு ஒரு கதை கெடைக்குதுல்லா..என்ன சொல்லுதிய :-)

சிவா said...

//** எளிய வார்த்தைகள், அழகான கதையோட்டம்..அழகு.. அழகு **// பாராட்டுக்கு ரொம்ப நன்றி பாரதி. பளிரொளியா...எங்க ஊரு காரவுங்க எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும் போல :-)).

//**இறுதி பாகம் இப்படித்தான் இருக்கும்னு
மனசுக்குள்ள ஒரு பதிவு விழுந்துருச்சி..**// இறுதி பாகம் போட்டுட்டேன் பார்த்துட்டு நீங்க நெனைச்ச மாதிரி இருந்துதான்னு சொல்லுங்க பாரதி.

சிவா said...

//**நிறைய காதல் உசுப்பேத்தல்லேதான் தொடங்கவே செய்யும் **// உண்மை உண்மை..

//** எஞ்சினீயரிங் படிக்கப் போற ஆளு மர்காஷியஸ்லே என்ன பண்ணுனீங்க **// விட்டா முடிவே பண்ணிடுவீங்க போல, மர்காஷிஸ்-ல நடந்த கதை என்று..ஆப்பு வைக்காம ஓய மாட்டீங்க போல :-)).

நான் மர்காஷிஸ்-ல B.Sc பண்ணிட்டு சென்னையில் B.Tech பண்ணினேன். அப்போ அந்த முறை உண்டு. தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு கல்லூரியில். தெரியும் தானே..

சிவா said...

தம்பி சிங்கு! எதுக்குப்பா..கடலை?. அண்னன் கஷ்டப்பட்டு கதை எழுதறார். கொறித்துக் கொண்டே எழுதுவதற்கா...ரொம்ப நன்றி தம்பி.. :-)) நல்ல வருத்த கடலையா அனுப்பி வையி..:-)

கைப்புள்ள said...

ஐயா அப்துல் கலாம் வழி வந்த கருப்பு சந்தனமே!
என்னங்க நீங்க ஸ்மைலியை பார்க்கலியா? அப்படியே பார்க்கலைன்னாலும் உங்க யுனிவர்சிடி ஜூனியர் எதோ வெளயாட்டு தனமா சொல்லிட்டான்னு நினைச்சுக்குங்க! சரியா?

சிவா said...

//**என்னங்க நீங்க ஸ்மைலியை பார்க்கலியா?**//

ஐய்யோ! நான் ஜாலியா தாங்க சொல்லி இருக்கிறேன். கடைசில ஸ்மைலி போட மறந்து போச்சி :-))). இதை எல்லாம் தப்பா எடுத்துப்பேனாங்க...தமாசு ஆளுப்பா நீங்க :-)

Anonymous said...

அடடா சிவா என்ன இப்படி கலக்கறீங்க..

கதையை (கதைதானே??) படிக்கும்போது நிறைய இடங்களில் பக்கத்தில இருந்து பார்த்தா மாதிரி எழுதி இருக்கிங்க. ரொம்ப யதார்த்தமா உண்மையிலயே நடக்கும் விஷயமா இருக்கு

//ஒங்களுக்கு லோயர் பெர்த்தா. கொஞ்சம் அப்பர்ல படுத்துக்க முடியுமா' // - இதெல்லாம் நடந்திருக்கு

//'உன் ஆள பாருடா// இப்படித்தான் எல்லாருமே இருப்பாங்களா.. உன் ஆளப்பாருடான்றது.. அந்த பொண்ணு போகும்போது அவன் பேரை உரக்கச்சொல்லி கூப்பிடறது.. அடங்கமாட்டாங்க போல.. ஆனாலும் அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம்தான். :)

அடடா இரண்டாம் பாகமா..

அன்புடன்
கீதா

சிவா said...

கீதா! //** கதைதானே?? **./// ஆமாங்க...ஆமாம் :-))) ( கொஞ்சம் உண்மை (நமக்கு காலேஜ்ல அடுத்தவன் கதைய ஓட்டுறது தானே சுகம்) ....அதுல என்னோட காதல் வரிகளை கலந்து அடிச்சாச்சு :-) அடியேனுடையதும் காதல் திருமணம் தான் :-). அதனால வார்த்தைகளில் பிச்சி ஒதறிட்டேன் :-)). //** அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம்தான். :)
**// அதே..அதே.. :-))