Thursday, November 17, 2005

அன்புள்ள தாத்தாவுக்கு...


அன்புள்ள தாத்தா மலேசியா ராஜசேகரன் அவர்களுக்கு பேராண்டி சிவா எழுதுவது, நலம். நலமறிய அவா. உங்களை இங்கே தாத்தா என்று குறிப்பிட்டது சத்தியமாக கிண்டல் அடிப்பதற்காக அல்ல. "சமுதாய உணர்வு கொண்ட பெரியவர்" என்று நீங்களே சொல்லியிருக்கிற காரணத்தினாலும் "விடை பெறுகிறேன்" என்று கடைசி பதிவு போல போட்டிருந்ததினாலும், நானும் சின்னப்பையன் என்பதாலும் 'தாத்தா' என்றே அழைக்கிறேன்.

நம்ம கதை, குஷ்பு கதை போல மறுபடி உங்களால் தொடங்கி வைக்கப்பட்டாதால், இந்த பதிவு போட வேண்டியாதா போச்சி. முதலில், என்னோட "இவர்கள் இந்தியர்கள்" பதிவு உங்களுக்கு வெறும் வசை கட்டுரையாக தெரிந்தது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமே. அந்த பதிவிற்க்கு நீங்கள் "பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று சொன்ன போது, எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதைக்கத் தான் செய்தது "மவனே! ஏதோ பருப்பு மாதிரி எழுதிட்ட. பெரியவர் அவர் பதில் சொல்லி உனக்கு லாடம் கட்ட போறார்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . இன்று குமரன் வந்து உங்கள் எதிர்பாட்டு பதிவை சொன்ன போது, ஓடி வந்து பார்த்த முதல் ஆள் நான் தான். எனக்காடா அருகதை இல்லை இந்தியாவ பத்தி சொல்ல - என்று நீங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு ஆரம்பித்ததை பார்த்து நான் பயந்தே போய்விட்டேன். இப்படி சப்பென்று ஆக்கிட்டியலே தாத்தா.

"என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள்" என்று ஆரம்பித்து போகும் உங்க பட்டியல் --

1. வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட.

2. மலேசியாவில் சம்பாதித்ததை வைத்து தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன

3. "இதெல்லாம் போக " என்று பெரிய Build-up கொடுத்து என்னமோ சொல்ல போறீங்கன்னு பாத்தா, இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது.

4. உங்கள் சொத்து சொந்த பந்தம் எல்லாம் அங்கே இங்கே தான் இருக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறீர்கள்.

5. உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன் " -- இப்படி முடித்திருக்கிறீர்கள். இப்படி ஒரு பட்டியலை கொடுத்துவிட்டு, இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கிறது என்கிறீர்கள். அந்த 'இன்னும்' என்ன "தவறாமல் இந்தியா சுதந்திர தினத்திற்கு எங்க வீட்ல பாயாசம் பண்ணிருவோம்" " எல்லா குடியரசு தினத்திற்கும் மாரியாத்தா கோவில்ல கூலு ஊத்திருவோம்" இப்படியா?.

சரி இவ்வளவு உணர்ச்சி வசப்படும் உன் அருகதை என்ன என்று ஒரு கேள்வி வரும் அல்லவா. அதை சொல்லத் தான் இந்த பதிவே. நீங்களும் உங்கள் சுயபுராணம் பாடிட்டீங்க. சரி நாங்களும் எங்க சுயபுராணத்த இந்த சிவபுராணத்தில் பாடிடலாமேன்னு தொடங்குகிறேன்.

DreamIndia2020 பற்றி தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். என்னோட பதிவுகளில் தவறாம நடராஜனையும் குமரனையும் பார்த்திருக்கலாம். நடராஜனின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு சின்ன இயக்கமே DreamIndia2020. இவர்கள் வேலை 'இதோ சீனாவை பாருங்கள். ஜப்பானை பாருங்கள்' என்று இந்தியாவை வெறுமனே எழுத்துக்களில் மட்டும் நேசிக்காமல், கொஞ்சம் செயலிலும் காட்டுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நமக்கு அரை மணி நேரம் செலவழித்து இணைய வசதியோடு இதை படிக்க வசதி இருக்கிறது. நம் நாட்டில் எத்தனை பேர் அடுத்த வேளை சோத்துக்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவையே நம்மால் தலைகீழாக ஒரே நாளில் மாற்ற சக்தி வேண்டும் என்றல்ல. நம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு நன்றாக இருக்கும் நாம் நம்மாலான உதவிகளை செய்யலாம் அல்லவா. நாம் ஆளுக்கு இரண்டு பேரை முன்னேற்றினால், நம் நாடு முன்னேறாதா என்ன?. சொல்லுங்கள்.

DreamIndia2020 நண்பர்கள் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குழு அமைத்து சுற்றி இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வது, வயதான உழைக்க முடியாத, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவுவது போன்றவற்றை முடிந்த அளவு செய்து வருகிறார்கள். இப்போது மும்பையில் நரிக்குறவர்கள் போல் வாழும் ஒரு இன மக்களுக்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வாரம் 'பாத்திமா இல்லம்' என்று ஒரு அனாதை விடுதி சென்னை மழையால் மூழ்கிப் போய்விட, அதை கவனித்துக்கொள்ளும் அம்மாவின் வேண்டுகோளின் படி, 10 லோடு மணல், கழிவுகள் போட்டு தரை மட்டத்தை உயர்த்த நடா & Co வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்க்கு எல்லாம் பணம் கொடுக்க எல்லா நண்பர்களுமே உதவி செய்கிறார்கள்.

நண்பர் குமரன் இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்க Rs. 13000 கொடுத்துள்ளார். நான் போன மாதம் தான் இவர்கள் நட்பு வட்டத்துக்குள் வந்து விழுந்தேன். போன வாரம் நடராஜன் மூன்று ஏழை குழந்தைகளை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிடலாம், Rs.4500 ஆகும் என்று சொன்ன போது, அதற்கான செலவை ஏற்றுக் கொண்ட மூன்று நண்பர்களுள், உங்கள் பேராண்டி நானும் ஒருவன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா எங்கள் தாய் நாடு என்ற ஒரு பற்றும் அது முன்னேறும் என்று நம்பிக்கையும் இந்த இளைஞர்களிடம் இருக்கிறது. இதை சுயவிளம்பரம், வசை பதிவு என்று எடுத்துக் கொண்டாலும், உங்களில் சொத்துப் பட்டியலை விட எங்கள் பட்டியல் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்லறீங்க.

இவர்கள் எல்லோருமே போன வருடம் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர்கள். உங்கள் கிழட்டு அனுபவத்தில் நீங்கள் பட்டியல் போட்டிருக்கும் அருகதையை விட இந்தியாவை பற்றி பேச எங்கள் அருகதை கொஞ்சம் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் என்னவோ. நாங்கள் இன்று சிறிய அளவில் இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நாள் நாங்கள் வளர்வோம். இந்தியாவும் வளரும்.

இந்த இளைஞர்களுக்கும் இந்தியாவுக்கும் உங்கள் கிழட்டு அனுபவம் எந்த வகையில் பயன்?. சொல்லுங்க தாத்தா. வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் இவர்கள் இந்தியாவில் செய்திருக்கும் விசயங்கள் என்ன? இவர்கள் வயத்தை விட அதிக அனுபவம் கொண்ட தாங்கள் பட்டியலிட்டிருக்கும் "அருகதை" என்ன?. எந்த நாட்டில் அடுத்து புலம் பெயர்தால் நல்லது என்று மண்டையை போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இதை பற்றி யோசிக்க நேரம் இருக்காது தான்.

நீங்க ஏரோப்ளேன் படம் எல்லாம் போட்டு அழகழகா ஓயின் கதை எல்லாம் சொல்லிருக்கீங்க. எங்களிடமும் சில கதைகள் இருக்கு. அதை போட்டா பதிவு பெரிசாயிடும் என்பதால், நேரம் இருந்தால் இங்கே படித்துக்கொள்ளுங்கள்.

கதை எண்-1 ; கதை எண்-2 ; கதை எண்-3

அன்புடன் பேராண்டி,

சிவா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களில் யாராவது எங்களை போல எண்ணத்தில் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (dream_india_2020@yahoo.co.in) . பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை.





தீபாவளிக்கு வசந்தம் என்ற ஒரு மனநிலை குறைந்த குழந்தைகளின் காப்பகத்தில் குழந்தைகளோடு DreamIndia நண்பர்கள்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் DreamIndia நண்பர்கள்:

18 comments:

சிங். செயகுமார். said...

நண்பரே சிவா நலமோடு வாழ நான் வாழ்த்துகிண்றேன்!
தாத்தாவின் தகிடு தன பதிவும் பர்த்தேன்
தன்னலமில்லா வரலாற்று நாயகனையும் பார்த்தேன்
உண்டியில் காசு இடுவதை விட
உணவில்லா மக்களுக்கு ஒரு பிடி அரிசி
இதுவல்லவோ இந்தியன்?
ஒயினில் ஒஸ்த்தி பார்க்கும் நீ எங்கே?
கழனி தன்னிக்கே வழியில்லாதோர்க்கு
முழ துணியும்
மண் லாரி கொண்டு
தண்ணீர் மேல் பொன் வாழ்வு தந்த இவன் எங்கே?

அய்யா படத்துல ஓர் வசனம்
பிறக்கும் போது வெற்றுடம்பு
போகும் போதும் அதே உடம்பு
இதனிடையே அரிதாரம் பூசா நடிப்பு
மல்லாக்க படுத்து மேலே உமிழ்ந்தால்........................



நண்பரே தொடறட்டும் நற்பணி!

யாத்ரீகன் said...

வணக்கம் சிவா,

நாங்கள் கல்லூரி நண்பர்கள் 40 பேர், உங்கள் இயக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப்போல், ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதைகளை பிறருக்கு செயல் படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

இத்தகைய எண்ணத்துடன் நாங்கள் சென்ற தீபாவளி அன்று சென்னையில் உள்ள சிறகுகள் என்ற நிறுவனத்துக்கு பயன்பட்டோம், சுனாமி நிவாரண களப்பணியிலும் பயன்பட்டோம்,

பின்பு அதை மாதம் முழுவதும் தொடர நினைத்தும், சில எதிர்பாராத நிகழ்வுகளால் தடை பட்டது.

இம்முறை மீண்டும் மன உறுதியுடன் தொடங்கி உள்ள நிலையில் தான் உங்கள் இயக்கம் பற்றி அறிய வந்தது.

இக்கால இளைஞர்கள் பலரும் இத்தகைய எண்ணங்களில் உள்ளது, மிகவும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கின்றது.

ஓவ்வொரு குழுவும் தனித்தனியே இயங்காமல், இணைந்து இயங்கினால் இரு இயக்கங்களின் பலம், செயல்திறன் மட்டுமின்றி, அதனால் பயன் பெரும் மக்களும் அதிக பயன் பெருவர் என்று நம்புகின்றேன்.

எங்கள் உதவிகள் சிறியதாக இருப்பினும்,ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

நாங்கள் எப்படி உங்களுக்கு பயன்பெற முடியும் என்பதை கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து.

--
என்றும் நட்புடன்,
செந்தில்

Anonymous said...

தம்பி சிவா,

Dreamindia2020 ஐ பற்றி நீங்கள் எழுதியது படித்ததும் அந்த சைட்டுக்கு சென்று பார்த்தேன். அபாரமான முயற்சி. நானும் பல வகையில் மலேசியாவிலும் இந்தியாவிலும் பல ஏழை எழியவருக்கும், அங்கவீனம் ஆனவர்களுக்கும் என்னால் முடிந்த பண உதவிகளையும், உடலால் செய்யக் கூடிய உதவிகளையும் செய்து வருபவன் தான். சென்ற வருடம் நிகழ்ந்த சுனாமி பேரிடரின் போதும் எங்கள் குடும்பமே பத்து, பன்னிரண்டு நாட்களுக்கு இந்தோனீசியா, சிலோன் ஆகிய நாடுகளுக்கு நிவார்ண பொருட்கள் அனுப்புவதற்காக இங்கு உள்ள புத்த கோவிலில் அமைக்கப் பட்டிருந்த நிவாரண பொருள் சேகரிப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் 15 - 16 மணி நேரம் எங்களின் உடலை வருத்தி எங்களால் முடிந்த உதவியை (எங்களை போன்று திரன்றிருந்த நூற்றுக் கணக்கான பல இன நண்பர்களோடு சேர்ந்து) செய்தோம்.

நீங்கள் நடராஜனை பற்றி எழுதியதை பார்த்துவிட்டு, அவரின் ப்ரொபைலை பார்த்தேன். வயது 24 என்று இருந்தது. அந்த கணமே நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனையை வளர விடக் கூடாது என்கிற எண்ணம் என் மனதில் எழுந்தது. 24 வயதில் எனக்கு எதுமே தெரியாது. நான் எதுவுமே செய்ததுமில்லை.

உங்களைப் போன்ற இளஞர்களின் முயற்சியும் துடிப்பும் பாரட்டப் பட வேண்டியவை. ஆதரிக்கப் பட வேண்டியவை. உங்களுக்கும் உங்கள் முனைப்பான நண்பர்களுக்கும் எதிர் புரத்தில் நின்று தர்க்கம் செய்ய எனக்கு மனமில்லை. அது என் முதிர்ச்சிக்கும் அழகில்லை.

ஆதலால், உங்கள் நண்பர்கள் பலரது மனதையும் புண்படுத்துமாறு அமைந்த என் எழுத்துக்களுக்காக நான் இங்கு நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், நான் இந்தியாவிற்கு எதுவுமே செய்யவில்லை என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது என்கிற EGO வும் இருப்பதால். நானும் என் குடும்பத்தாரும் என்ன செய்துள்ளோம் என்பதில் மூன்று முக்கிய விஷயங்களை இங்கு சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

- ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஆசியன் இண்டஸ்டிரியல் சிண்டிரியான் பெர்ஹாட் எனும் என் நிறுவனத்திற்கு, சென்னையில் ஒரு லயசன் ஆபீஸ் பல வருடங்களாக செயல் பட்டு வந்தது. அதில் நான்கு பேருக்கு வேலை கொடுத்திருந்தேன்.

- என்னோடும் சேர்த்து மலேசியாவில் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர், இந்தியாவில் உள்ள பல நண்பர்களோடு சேர்ந்து ஒரு சோவ்ட்வேர் சம்மந்தமான கம்பனி நிறுவி, அது விருஞ்சி எனும் பெயருடன் தற்போது பாம்பே ஸ்டாக் எக்ச்சேஞ்சில் கோட் செய்ய பட்டு நடப்பில் இருக்கிறது. அதில் மலேசியாவில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முதலீடு செய்திருக்கிறோம்.

- மலேசியா இந்தியா வர்த்த அபிவிருத்திக்காக, இதுவரை 5 - 6 பெரிய மலேசிய நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளோம். அதில் ஒரு இரண்டு முயற்ச்சிகள் சரியாக அமைந்துள்ளன (இதில் மலேசிய அரசாங்க மின்சாரத்துரை நிறுவனமான தினாகா நேசனலை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து முதலீடு செய்ய வைத்ததும் ஒன்று). மற்றவைக்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது.

நண்பர்களாக இருப்போம்.

வாழ்க உங்கள் பொது தொண்டு.

அன்புடன்,
மலேசியா ராஜசேகரன்

ஜோ/Joe said...

என் பதிவில் இட்ட பதில் ஒன்று இந்த பதிவு சம்பந்தப்பட்டதால் இங்கும் இடுகிறேன்
-----------------------------------------------------------------------------------

நண்பர் வாய்ச்சொல் வீரன்,
நீங்கள் சொல்லும் முன்னரே சிவாவின் அந்த பதிவை படித்து விட்டேன்.அவரும் அவரோடு சேர்ந்து நண்பர்களும் செய்து வருகிற பணிகளுக்கு நான் தலை வணங்குகிறேன் .அதற்கு என்னால் முடிந்த அளவு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன் .நானும் உங்களைப் போல தாய் நாட்டையும் ,தாய் மொழியையும் மிகவும் நேசிக்கும் இளைஞன் தான் .இந்தியாவைப்பற்றி பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டவன் .

அதே நேரத்தில் ராஜசேகரன் அவர்கள் எழுதியுள்ள சில கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவே நான் கருதுகிறேன் .அன்னிய நாட்டினர் முன் நான் ஒரு போதும் என் நாட்டை விட்டுக்கொடுப்பதில்லை .அதே நேரம் நமது முன்னேற்றத்திற்காக நாம் நமக்குள் பேசிக்கொள்ளும் போது சுய விமர்சனம் செய்து கொள்வதில்லையா? ராஜசேகரன் மலேசியர் என்றாலும் ,நம்மில் ஒருவராக தன்னை உரிமைப்படுத்திக்கொண்டு உளப்பூர்வமான சுய விமர்சனமாகத் தான் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன் .நான் கூட சீனா சென்று வந்த பிறகு நண்பர்களிடம் "சீனாவும் நாமும் வளர்ச்சியில் நெருக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன் .ஆனால் அங்கு சென்று பார்த்தால் நாம் 30 வருடம் பின்னால் நிற்பது போல் இருக்கிறது " என்று சொன்னேன் .அது நம் நாட்டை இகழ்ந்து அல்ல . ஆதங்கத்தில் சொன்னது .அது போல ராஜசேகரன் அவர்களும் உரிமையோடு ஆதங்கப் பட்டதாக எடுத்துக்கொள்வோமே ? மற்றபடி"தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்ற அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தான் .

Unknown said...

சிவா,
நல்ல மனது உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்.
வாழ்த்துக்கள்.

மலேசியா ராஜசேகரன்,
நான் எனது தரப்பை விளக்கமாக உங்களின் "விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன் " என்ற பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். இங்கே நீங்கள் இந்தியாவிற்காக செய்துள்ள சிலவற்றைப் பட்டியல் இட்டு உள்ளீர்கள். இன்னும் நிறையச் செய்யுங்கள்.

குற்றங்களும், குறைகளும் , ஊக்கமிழக்கச் செய்யும் வார்த்தைகளும் ஒருபோதும் நல்ல பலன் தராது. நல்ல எண்ணங்களும் , எப்படிச் செய்தால் (முன்னேறாவிட்டாலும்) முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து நடைபோடலாம் ..என்பது போன்ற அறிவுரைகளே இந்தக்கால இளைஞர்களுக்குத் தேவை.

வாழ்த்துக்கள்

b said...

அன்பின் சிவா,

என் கண்களின் ஆனந்தக் கண்ணீர். தன்னலம் கருதாத உங்கள் பொதுநல நோக்கிற்கு எனது முதல் வணக்கம்.

பெரியவர் ராஜசேகரன் அவர்களின் கட்டுரை அருமையாக இருந்தது. எல்லாப் பாகங்களும் படித்தேன்.

சீனா அதிவேகமாக முன்னேறி வருவது கண்கூடு. ஆனால் இந்தியாவால் அதனை வெல்ல முடியாது என்பது தவறு. கண்டிப்பாக முடியும். ஆனால் அதற்கு நமது அரசியல் கட்சிகள் இடம் என்றுமே கொடுத்ததில்லை. யாராவது ஒருவர் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தாலும் அடுத்தவர் காலைப் பிடித்து கீழே இழுத்து விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்தியா இன்னும் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்பதுதான் நமது அனைவரின் ஆசையும். அதுதான் இராஜசேகரன் அவர்களின் ஆசையாகவும் இருக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் சிவா.

Anonymous said...

WHY ARE YOU REMOVED MY POST

I KNOW WHY? YOU CAN'T EVEN'T FACE THE TRUTH

RAJASERKARAN IS TELLING THE TRUTH
INDIA NOT EVEN CLOSE TO CHINA
IT WILL TAKE TO 10000000000000 YEARS
INDIA IS GOOD FOR BRIBERY, DIRTY POLITICS UNDEVELOP CITY AND OUT OF CONROL POPULATION

அன்பு said...

்ச்சி சிவா மற்றும் நண்பர்களுக்கு,
உங்களுடைய சமூக ஆர்வம் சந்தோசமளிக்கிறது. வெற்றிகரமாக தொடருங்கள். என்னால் இயன்ற உதவி கண்டிப்பாக செய்வேன்.

சிவா said...

பெயர் தெரியாமல் பிறந்துவிட்ட அனாமத்திற்கு, உன் பின்னோட்டத்தை நீக்கியது உண்மையை எதிர்கொள்ள பயந்து அல்ல. உன் புழு பூத்துப்போன மூளையால் இங்கே இன்னொரு வேலையற்ற சண்டையை உண்டு பண்ணாமல் இருக்கவே. ஐயா ராஜசேகரனின் பதிலில் இருந்த ஒரு நல்லெண்ணம், பெயரை கூட சொல்ல வக்கில்லாத உன் இத்துப்போன வார்த்தைகளில் இல்லை என்பதற்காகவே அதை நீக்கினேன். கஷ்டப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று உன் முட்டாள் தனமான ஒரு தர்கத்துக்கு வேலையத்து போய் பதில் போடவேண்டாம் என்று தான் உன் பதிவை நீக்கினேன். உன் போன்ற ஈன பிறவிகளின் தாக்குதல் இருக்கும் என்று தெரிந்து தான் இந்த பதிவை போட்டேன். உன் ஈன புத்தியை மேலும் காட்டுவாய் என்று தெரியும். காட்டி விட்டு போ. அதனால் யாருக்கும் பயன் இருக்கப் போவதில்லை.
( முதல் பதிலே உன்னை போன்ற வேலையத்தவனுக்கு போடவேண்டிதாய் போய்விட்டது).

Anonymous said...

REMEMBER YOUR PEOPLE SPIT ON MOTHER TERESA FACE

Anonymous said...

DIFFERENT BETWEEN SINGAPORE AIRLINE AND AIR INDIA
==================================
Air India - by Phil Thakadiyil
18 November 2005

ORD-FRA-BOM-FRA-ORD. Inbound was relatively ok, on time, plane was in bad condition, toilets horrific, cabin staff was indifferent but efficient. Plane was stopped for refueling and clean up in FRA, passengers were not allowed to disembark, a 2-3 hour layover would of have made more sense and allowed for actual cleaning rather than a Southwest style pass through. Outbound was the worst experience ever, plane was delayed by 2 hours, no explanation, then 4 hours, then 6 hours - food was served to passengers, with the explanation of equipment issues. 8 hours later we boarded a plane and sat and had a meal at the gate, then asked to disembark, waited another 4 hours, asked to board another plane, waited at the gate for 3 hours, then asked to disembark due to cabin crew working beyond union rules. Finally boarded a plane, took off 3 hours later at a full 23 hours delay, given a voucher for $50 in Chicago for "compensation" - will never fly Air India again

சிவா said...

நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். இங்கே ஒரு பெயரில்லாத ஈனப்பிறவி தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து அதனுடன் யாரும் தர்க்கம் செய்ய வேண்டாம். பயனற்ற ஒரு விவாதம் தேவை இல்லை நமக்கு.

சிவா said...

அன்பு ஐயா ராஜசேகரன் அவர்களுக்கு,
தெரிந்தோ தெரியாமலோ நாம் இருவரும் சண்டை கோழிகளாகி விட்டோம். பொதுவில் மன்னிப்பு என்று ஒரு வார்த்தையை பயன் படுத்தவும் ஒரு மனம் வேண்டும். நீங்கள் அந்த குணத்தால் எங்கோ போய்விட்டீர்கள். உங்களை மன்னிப்பு கேட்க வைக்க நாங்கள் இதை செய்யவில்லை. என் அப்பா வயதில் இருக்கும் நீங்கள் (அடியேனின் வயது 29 ), எங்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டதற்கு நன்றி. நடா போன்ற நண்பர்களின் வட்டத்திற்குள் இருப்பதினாலேயே நாங்கள் உங்கள் 'தலைகீழாக' என்ற வார்த்தைக்கு உணர்ச்சிவசப்பட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து. """"நம் கண்ணெதிரேயே ஒருவன் பட்டினியால் வாடும் போது, எனக்கு கொடுத்த பிரியாணி நல்லால்ல என்று வாதிடுவதில் என்ன அர்த்தம். மனிதனாய் பிறந்து மண்டையை போடுவதற்குள் நம்மால் இரண்டு பேரை சந்தோசமாக வைத்து கொள்ள எண்ணக் கூடாதா?. இங்கே சீனாவை பார், ஜப்பனை பார் என்று எதற்கு விவாதம்""" ---- இப்படி தான் எங்கள் எண்ணம் இருக்கிறது. அந்த ஆதங்கத்தில் தான் இவ்வளவும் நடந்து விட்டது. உங்கள் மகன் வயதி இருக்கும் என்னையும் மன்னித்து விடுங்கள். அடிக்கடி குமரன் சொல்வார் "நடாவுக்கு வாழ்க்கையில் எந்த விசயம் என்றாலும் அது அடுத்தவரின் தட்டில் சாப்பாடாக மாறினால் மட்டுமே சந்தோசம்" என்பார். இப்படித்தான் எங்கள் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. உங்கள் கட்டுரையை படித்துவிட்டு "நல்ல பதிவு. பயனுள்ள தகவல்கள்" என்று மொட்டையாக சொல்ல எங்கள் மனம் இடம் தரவில்லை. அதனால் தான் இவ்வளவும். எப்படியோ "நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லியபடி, நாம் நண்பர்களாக இருப்போம்.

அன்புடன்,
சிவா

சிவா said...

அன்பு நண்பர் செயகுமாருக்கு, என் பதிவுகளை தவறாமல் படித்து விடுகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கும் கவிதைக்கும் நன்றி.

செந்தில் (யாத்ரீகன்)! எங்களை தொடர்பு கொண்டதற்கு கோடி நன்றி.
( எல்லா நண்பர்களுக்கும், நண்பர் செந்திலும் நடாவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பற்றி இப்போது பேச ஆரம்பித்து விட்டார்கள். இயன்றதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே)

ஜோ அவர்களே! உங்கள் கருத்தை இங்கேயும் எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

கல்வெட்டு! உண்மை தான் "ஒரு போதும் உருப்படாது" என்பதை விட "முயற்ச்சி செய்யுங்கள்" என்று ஊக்கம் கொடுப்பதே சிறந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

நண்பர் மூர்த்தி. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. எல்லா வணக்கங்களும் நடா-குமரன்&கோ விற்கு தான். குமரன் தான் என்னை நடாவுக்கு அறிமுகப்ப்டுத்திய என் நண்பர். நான் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன்.

அன்பு! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Ramya Nageswaran said...

சிவா, dreamindia2020 லிங்கிற்கு நான் பலமுறை சென்றும் வேலை செய்யவில்லை. மீண்டும் முயலுகிறேன். உங்களின் இந்த பணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுதல்களும் (உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்).

Anonymous said...

மனிதனாய் பிறந்து மண்டையை போடுவதற்குள் நம்மால் இரண்டு பேரை சந்தோசமாக வைத்து கொள்ள எண்ணக் கூடாதா?.

ஒவ்வொருவரும் நன்றாக சிந்திக்க வேண்டிய வரிகள். மரணத்தை நினைத்து எல்லோரும் இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் இந்தியா, சீனா என்ன உலகிலேயே முதல் நிலை நாடாக ஆகும்.

மதுமிதா said...

தம்பி சிவா
நல்ல பணி
தொடர்ந்து செய்யுங்க
நல்லா இருங்க.
நெகிழ்ந்த மனதோட சொல்றேன்
மனமார்ந்த வாழ்த்தும்,பாராட்டும்.

சிவா said...

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுமிதா அக்கா