Sunday, November 27, 2005

கல்யாணமாம் கல்யாணம் -2

இத படிச்சிட்டு வாங்க - பாகம்-1

கல்யாண நாளும் வந்தது. கல்யாண நாளுக்கு முந்தின நாளே ஊர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. மாப்பிள்ளை வீட்டில் பந்தல் போட்டவுடனேயே, எங்களை போன்ற வாண்டுகள் வெளையாட்டு இடத்தை அங்கே மாற்றி கொண்டோம். "ஏல! ஸ்பீக்கர் செட் வந்துட்டுடா' கத்திக்கொண்டே செந்தில் ஒடி வந்தான். அதற்க்காக தானே காலையில் இருந்தே காத்து கொண்டிருந்தோம். எதற்க்கு என்று கேட்கறிங்களா? எல்லாம் அந்த பொட்டி சாவிக்காக தான். அப்போல்லாம் LP ரெக்காட்டு, பெரிசா வால்வு வச்ச ஆம்ளிபயர் தான். ஒரு பெரிய பொட்டில எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு செட்டு கார அண்ணன் வருவாவ. சில நேரம் சாப்பிட போகும் போது அந்த பொட்டி சாவி நம்ம கைல கெடைக்கும். நம்ம இஷ்டத்துக்கு பாட்டு போடலாம்லா. அதுக்கு தான், அண்ணனுக்கு எல்லா சேவையும் செஞ்சிக்கிட்டு இருப்போம்.

கொய்யா மரத்துல ஏறி குழாய் ஸ்பீக்கர் கட்டுறது, ஊர்ல ட்யூப் லைட் போட குழி தோணறது, இப்படி சகல வேலையும் செஞ்சி கொடுப்போம். அப்போத்தான நம்ம கைக்கு சாவி வரும். சாப்பிட போவும் போது எந்த எந்த ரெக்கார்டு எந்த நம்பர்ல ஓட்டணும்னு வெவரம் எல்லாம் சொல்லிருவாவ. அப்புறம் என்னா...விவித்பாரதியே நம்ம கைல கெடைச்ச மாதிரி தான். அப்போல்லாம் ரேடியோவ விட்டா பாட்டு கேக்க வேற நாதி கெடையாது. சிலோன் ரேடியோல தான் பாட்டு. எங்க ஊர்லருந்து திருச்சி ரேடியாவ புடிச்சா, ரெயில் சத்தம் தான் கேட்கும்..அப்போ அப்போ பாட்டு எட்டி பாக்கும். இல்லன்னா, பக்கத்து ஊர்ல ஏதாவது விசேசம்னா, காத்து நம்ம ஊருக்கு நேரே காத்து அடிச்சா, பாட்டு நல்லா கேக்கும். எதிர்காத்து அடிச்சிச்சுன்னா, பாட்டையும் சேர்த்து தள்ளிக்கிட்டு போய்டும். அப்படி பாட்டு கேக்கறது கூட ஒரு சொகம் தான்.

இந்த மாதிரி சமயம் மட்டுமே தேர்ந்து எடுத்து பாட்டு போடலாம். அப்புறம் என்ன! நேயர் விருப்பம் தான். பாரதிராஜா 'என் இனிய கிராமத்து மக்களே" அப்படின்னு ஆரம்பித்து "முதல் மரியாதை"ல இருந்து ஒவ்வொரு பாட்டா போட்டுக்கிட்டு இருப்பாரு. ஓட்ட ரெக்கார்டு மாட்டிக்கிட்டா தட்டிவிடறது, ஸ்பீடு மாத்தி பாட்டு போடறது இப்படியே நல்லா பொழுது போவும். "ஏல! அந்த விதி கதை வசனம் இருந்தா போடுல" அப்படின்னு அத்தை கேட்டா, " அந்த ரெக்கார்டு போட்டு போட்டு தேஞ்சி போச்சாம்" சொல்லி தப்பித்துக்கொள்வோம் ( யப்பா! அந்த ரெக்கார்டு ஒரு காலத்துல எப்படி ஓடிச்சி தெரியுமா)

சாயங்காலம் ஆனவுடன் ஊர் ஜனங்கள் ஒவ்வொன்னா வர ஆரம்பித்தது. பந்தக்கால் நட்டறது, தாய்மாமன் சடங்கு எல்லாம் அன்று தான். தாய்மாமன் என்று இருந்தால், அங்கே பகை இருக்க வேண்டும் என்பது கிராமத்தில் எழுதப்படாத விதி. அப்போ தான ஊர்ல மத்த பயலுவலுக்கு இவங்க சண்டைய பாத்து பொழுது போவும். அப்புறம் ஊர் பெரிசுங்க எல்லாம் போய் "ஏ! உன் தங்கச்சி பையன் தானப்பா! நீ வராம இருந்த எப்படி..வாடே" அப்படின்னு தள்ளிக்கிட்டு வரும். அப்புறம் ஆலந்தலை (ஆல்+அத்தி+இலை) மாப்பிளைக்கு சுத்தி போடுற கதை ஒன்னு நடக்கும். நாங்களும் வரிசையில் பெரிய ஆள் மாதிரி நின்றுக்கிட்டோம். துரை மாமா "ஏல! இது சொக்காரனுங்க மட்டும் தான் செய்யணும். பொடிசுங்க அந்தால போங்கல" என்று எங்களை பத்தி விட, எங்க செட் குமாரு " போங்க சித்தப்பா! ஓந்தான் அடிக்கிறதுல இருந்து பன மரத்துல ஏறி பயினி திருடறது வர நாங்களும் மாப்ளையும் ப்ரண்டு. தெரியுமா! நீங்க போங்க சித்தப்பா" அப்படின்னு மாப்ளைக்கு எங்க ஜன்ம பந்ததை சொல்லி வைத்தான்.

அப்புறம் பந்தி ஆரம்பிச்சதும் தான் எங்க வேலையே ஆரம்பிக்கும். அவன் அவன் சைசுக்கு தகுந்த மாதிரி கொளம்பு வாளி, கூட்டு வாளி, தண்ணி ஊத்துறது போற்ற பதவிகளை பிடித்துக்கொண்டேம். அந்த பாயச வாளில மட்டும் ஒரு கண்ணு இரூக்கும். ஆனா அது நம்ம கைக்கு கெடைக்காது. சமையல்காரர் கஸ்டடில தான், அவர் தான் பரிமாறுவார். இல்லன்னா, நாங்க கொண்டாடிருவோம்லா. இப்படி பரிமாறுவதுல இருக்கற சொகமே தனி தான். நம்ம சொந்த பந்தங்கள பாத்து, வேணுமா, வேணுமான்னு கேட்டு பரிமாறுகிறதே சொகம் தான். கூட்டத்துல 'ஏ! இது நம்ம ராஜி மொவனா" அப்படி விசாரிப்புகள் வேறு நடக்கும். எந்த கல்யாண வீடு என்றாலும் ஒரு போதும் பந்திக்கு முந்துகிற வழக்கம் கெடையாது. எவன் எந்த வாளியை புடிக்கலாம்னு தான் போட்டி இருக்கும். எல்லாம் முடிஞ்சப்புறம் மொத்தமா உக்காந்து வாளியை வரிசையா வச்சி இஷ்டத்துக்கு அள்ளி கட்டினோம்னா, ரெண்டு நாளைக்கு இரை எடுக்க வேண்டியது இல்லை பாருங்க :-)

எல்லாம் முடிஞ்சப்புறம் பெரிசுங்க, இளசுங்க எல்லாம் சீட்டாட ஆரம்பிச்சிட்டங்க. ஊர்ல இருந்து ரொம்ப நாள் பாக்காத மாமன், மச்சினன் எல்லாம் வந்திருக்கும் அல்லவா. விடியும் வரை சீட்டாட்டம் தான்.

( தொடரும் - மன்னிக்கனும். வேலை அதிகமாகி விட்டதால் :-) )

Saturday, November 26, 2005

கல்யாணமாம் கல்யாணம் -1


ஒரு கல்யாண வீட்டுக்கு போகலாமா?. எங்கன்னு கேக்கறீங்களா?. எங்க கிராமத்துல தான். யாருக்கு கல்யாணம்?. நம்ம முருகேசன் அண்ணனுக்கு தான். சும்மா! உங்கள கிராமத்து கல்யாணத்த காட்டலாம்னு நெனைச்சேன். அப்படியே ஒரு 18 வருசம் பின்னாடி போயிரலாம். . சரி தொடஙகலாமா.....

எங்க கிராமத்துல மொத்தமே 40 வீடு தான். எல்லோரும் சொக்காரனுங்க.. சொந்தகாரனுங்க.. ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும். கல்யாணம்னா சொல்ல வேண்டுமா! . திருவிழா தான் போங்க. நிச்சயம் பண்ண போறதுல இருந்தே ஜாலி தான். அதுவும் என்னை போல வாண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். மொதல்ல பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுடலாம். அப்புறம் புதுசா ஊர் பாக்கலாம். இன்னும் நெறைய இருக்கு. ஒவ்வொன்னா பாக்கலாம்.

காலைலயே ஒரு மகிந்திரா ஜீப் வந்துட்டு. முருகேசன் அண்ணன் ஒவ்வொரு வீடா வந்து கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். "யக்கா! ரெடியா! மயினி! ரெடியா! வண்டி வந்துட்டு. கெளம்புங்க" இப்படி வீடு வீடாக கெளப்பிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை முருகேசு. எல்லோரையும் அள்ளிக்கிட்டு மூச்சு முட்ட ஜீப் கெளம்பியது, பொண்ணு பாக்க. இந்த மாதிரி சமயங்களில் தான் பெரிசுங்க குசும்பு , நக்கல், நையாண்டின்னு பொளந்து கட்டும். "ஏல! தெக்கயா பொண்ணு எடுக்க. வெளங்குமாடே! ஏற்கனவே மயினி கத்துனா ஊர்ல எவனும் இருக்க முடியல! இதுல எதிர்பாட்டு பாட தெக்காட்டு காரிய வேற விட்டா ஊரு தாங்குமால. பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடி ஊர் பயலுவலயும் நெனைச்சு பாருங்கல" வாலகுரு மாமா முருகேசு அண்ணனை பயம் காட்டிக்கொண்டிருந்தார். "இல்லண்ணே! நம்ம சொடலமாடன் சாமி போன கோயில் கொடைல தம்பிக்கு தெக்க தான் பொண்ணு எடுக்கணும்னு வாக்கு சொல்லிருச்சுல்ல. பய என்ன பண்ணுவான்" இது துரை மாமா.

ஆழ்வார்தோப்பு வந்து விட்டது. ஆத்துக்குள் அத்தனை பேரையும் வைத்து இழுக்க முடியாமல், போராடி தோற்று , ஜீப் ஆத்துக்குள்ளேயெ நின்று விட்டது. எங்க ஊர்ல ஆறு, குளம் எதுவும் இல்லை என்பதால், வாண்டுகள் எல்லோரும் தாமிரபரணி ஆத்துக்குள் இறங்கி வெளையாட ஆரம்பித்தோம். ஜீப் டிரைவர் ஒரு நீள 'ட' மாதிரி ஒரு கம்பியை ஜீப்பின் முன்னாடி விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்தி போராடிக்கிட்டு இருந்தார். வண்டி ஒரு வழியாக மூச்சு விட, எல்லோரும் ஆத்துல மீன் பிடிக்கிற வேலைய விட்டுட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்ல எங்க ஜீப்ப பாத்தவுடன் ஊர் ஜனம் எல்லாம் வரிசையாக பாதை ஓரத்தில் நின்னு மாப்பிள்ளை ஜீப்புக்குள்ள எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள்.

பொண்ணு வீட்ல பெரிய வரவேற்பு. அங்கேயும் ஊர் பெரிசுகள் எல்லாம் ஆஜர். ஒவ்வொன்னும் அது அதுக்கு ஏற்ற மாதிரி கும்பல் சேர்த்துக்கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தன. பெரியவர்கள் தட்டு மாற்றிக்கொண்டார்கள்.

"யண்ணே! பொண்னு கலரு கம்மியா இருக்கும் போலயே" நம்ம துரை மாமாவிடம் கல்யாணி சித்தி.

"சும்மா. கெடடே. நம்ம மாப்ள மழைல நனைஞ்ச பன மரம் கலர்ல தான இருக்கான். அவனுக்கு இது போதும்டே. மயினிக்கு ஈடுக்கட்ட இது தாண்டே சரி. நிம்மதியா கள்ள குடிச்சிட்டு ஊர்ல அலம்ப முடியுதா. மயினி போடுற சந்தத்துல எல்லா போதையும் எறங்க்கிடுது " துரை மாமாவின் வழக்கமான நக்கல் தொடர்கிறது.

தட்டு மாற்றி, கல்யாண நாள் எல்லாம் குறித்து, சம்பிரதாயம் எல்லாம் முடிந்தவுடன், பந்தி ஆரம்பிக்கிறது. பொண்ணு வீட்டில் எல்லோருக்கும் ராஜ மரியாதை தான். போடுகிற இலையில் இருந்து பரிமாறுகிற இட்லி வரை மிக கவனமாக பரிமாறினார்கள். இல்லன்னா "பொண்ணு வீட்டுக்காரன் கிழிஞ்ச எலைய போட்டுட்டான்"னு பெரிய ரகளையை உண்டு பண்ண, மாமா மாதிரி ஊருக்கு ரெண்டு மூனு பேராவது இருப்பாங்க. எல்லாம் முடிந்து கிளம்ப ஊருக்கு ஆரம்பித்தோம்.

( கல்யாணத்துக்ககு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. காத்திருங்கள்)

Thursday, November 17, 2005

அன்புள்ள தாத்தாவுக்கு...


அன்புள்ள தாத்தா மலேசியா ராஜசேகரன் அவர்களுக்கு பேராண்டி சிவா எழுதுவது, நலம். நலமறிய அவா. உங்களை இங்கே தாத்தா என்று குறிப்பிட்டது சத்தியமாக கிண்டல் அடிப்பதற்காக அல்ல. "சமுதாய உணர்வு கொண்ட பெரியவர்" என்று நீங்களே சொல்லியிருக்கிற காரணத்தினாலும் "விடை பெறுகிறேன்" என்று கடைசி பதிவு போல போட்டிருந்ததினாலும், நானும் சின்னப்பையன் என்பதாலும் 'தாத்தா' என்றே அழைக்கிறேன்.

நம்ம கதை, குஷ்பு கதை போல மறுபடி உங்களால் தொடங்கி வைக்கப்பட்டாதால், இந்த பதிவு போட வேண்டியாதா போச்சி. முதலில், என்னோட "இவர்கள் இந்தியர்கள்" பதிவு உங்களுக்கு வெறும் வசை கட்டுரையாக தெரிந்தது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமே. அந்த பதிவிற்க்கு நீங்கள் "பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று சொன்ன போது, எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதைக்கத் தான் செய்தது "மவனே! ஏதோ பருப்பு மாதிரி எழுதிட்ட. பெரியவர் அவர் பதில் சொல்லி உனக்கு லாடம் கட்ட போறார்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . இன்று குமரன் வந்து உங்கள் எதிர்பாட்டு பதிவை சொன்ன போது, ஓடி வந்து பார்த்த முதல் ஆள் நான் தான். எனக்காடா அருகதை இல்லை இந்தியாவ பத்தி சொல்ல - என்று நீங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு ஆரம்பித்ததை பார்த்து நான் பயந்தே போய்விட்டேன். இப்படி சப்பென்று ஆக்கிட்டியலே தாத்தா.

"என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள்" என்று ஆரம்பித்து போகும் உங்க பட்டியல் --

1. வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட.

2. மலேசியாவில் சம்பாதித்ததை வைத்து தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன

3. "இதெல்லாம் போக " என்று பெரிய Build-up கொடுத்து என்னமோ சொல்ல போறீங்கன்னு பாத்தா, இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது.

4. உங்கள் சொத்து சொந்த பந்தம் எல்லாம் அங்கே இங்கே தான் இருக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறீர்கள்.

5. உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன் " -- இப்படி முடித்திருக்கிறீர்கள். இப்படி ஒரு பட்டியலை கொடுத்துவிட்டு, இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கிறது என்கிறீர்கள். அந்த 'இன்னும்' என்ன "தவறாமல் இந்தியா சுதந்திர தினத்திற்கு எங்க வீட்ல பாயாசம் பண்ணிருவோம்" " எல்லா குடியரசு தினத்திற்கும் மாரியாத்தா கோவில்ல கூலு ஊத்திருவோம்" இப்படியா?.

சரி இவ்வளவு உணர்ச்சி வசப்படும் உன் அருகதை என்ன என்று ஒரு கேள்வி வரும் அல்லவா. அதை சொல்லத் தான் இந்த பதிவே. நீங்களும் உங்கள் சுயபுராணம் பாடிட்டீங்க. சரி நாங்களும் எங்க சுயபுராணத்த இந்த சிவபுராணத்தில் பாடிடலாமேன்னு தொடங்குகிறேன்.

DreamIndia2020 பற்றி தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். என்னோட பதிவுகளில் தவறாம நடராஜனையும் குமரனையும் பார்த்திருக்கலாம். நடராஜனின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு சின்ன இயக்கமே DreamIndia2020. இவர்கள் வேலை 'இதோ சீனாவை பாருங்கள். ஜப்பானை பாருங்கள்' என்று இந்தியாவை வெறுமனே எழுத்துக்களில் மட்டும் நேசிக்காமல், கொஞ்சம் செயலிலும் காட்டுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நமக்கு அரை மணி நேரம் செலவழித்து இணைய வசதியோடு இதை படிக்க வசதி இருக்கிறது. நம் நாட்டில் எத்தனை பேர் அடுத்த வேளை சோத்துக்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவையே நம்மால் தலைகீழாக ஒரே நாளில் மாற்ற சக்தி வேண்டும் என்றல்ல. நம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு நன்றாக இருக்கும் நாம் நம்மாலான உதவிகளை செய்யலாம் அல்லவா. நாம் ஆளுக்கு இரண்டு பேரை முன்னேற்றினால், நம் நாடு முன்னேறாதா என்ன?. சொல்லுங்கள்.

DreamIndia2020 நண்பர்கள் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குழு அமைத்து சுற்றி இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வது, வயதான உழைக்க முடியாத, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவுவது போன்றவற்றை முடிந்த அளவு செய்து வருகிறார்கள். இப்போது மும்பையில் நரிக்குறவர்கள் போல் வாழும் ஒரு இன மக்களுக்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வாரம் 'பாத்திமா இல்லம்' என்று ஒரு அனாதை விடுதி சென்னை மழையால் மூழ்கிப் போய்விட, அதை கவனித்துக்கொள்ளும் அம்மாவின் வேண்டுகோளின் படி, 10 லோடு மணல், கழிவுகள் போட்டு தரை மட்டத்தை உயர்த்த நடா & Co வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்க்கு எல்லாம் பணம் கொடுக்க எல்லா நண்பர்களுமே உதவி செய்கிறார்கள்.

நண்பர் குமரன் இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்க Rs. 13000 கொடுத்துள்ளார். நான் போன மாதம் தான் இவர்கள் நட்பு வட்டத்துக்குள் வந்து விழுந்தேன். போன வாரம் நடராஜன் மூன்று ஏழை குழந்தைகளை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிடலாம், Rs.4500 ஆகும் என்று சொன்ன போது, அதற்கான செலவை ஏற்றுக் கொண்ட மூன்று நண்பர்களுள், உங்கள் பேராண்டி நானும் ஒருவன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா எங்கள் தாய் நாடு என்ற ஒரு பற்றும் அது முன்னேறும் என்று நம்பிக்கையும் இந்த இளைஞர்களிடம் இருக்கிறது. இதை சுயவிளம்பரம், வசை பதிவு என்று எடுத்துக் கொண்டாலும், உங்களில் சொத்துப் பட்டியலை விட எங்கள் பட்டியல் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்லறீங்க.

இவர்கள் எல்லோருமே போன வருடம் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர்கள். உங்கள் கிழட்டு அனுபவத்தில் நீங்கள் பட்டியல் போட்டிருக்கும் அருகதையை விட இந்தியாவை பற்றி பேச எங்கள் அருகதை கொஞ்சம் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் என்னவோ. நாங்கள் இன்று சிறிய அளவில் இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நாள் நாங்கள் வளர்வோம். இந்தியாவும் வளரும்.

இந்த இளைஞர்களுக்கும் இந்தியாவுக்கும் உங்கள் கிழட்டு அனுபவம் எந்த வகையில் பயன்?. சொல்லுங்க தாத்தா. வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் இவர்கள் இந்தியாவில் செய்திருக்கும் விசயங்கள் என்ன? இவர்கள் வயத்தை விட அதிக அனுபவம் கொண்ட தாங்கள் பட்டியலிட்டிருக்கும் "அருகதை" என்ன?. எந்த நாட்டில் அடுத்து புலம் பெயர்தால் நல்லது என்று மண்டையை போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இதை பற்றி யோசிக்க நேரம் இருக்காது தான்.

நீங்க ஏரோப்ளேன் படம் எல்லாம் போட்டு அழகழகா ஓயின் கதை எல்லாம் சொல்லிருக்கீங்க. எங்களிடமும் சில கதைகள் இருக்கு. அதை போட்டா பதிவு பெரிசாயிடும் என்பதால், நேரம் இருந்தால் இங்கே படித்துக்கொள்ளுங்கள்.

கதை எண்-1 ; கதை எண்-2 ; கதை எண்-3

அன்புடன் பேராண்டி,

சிவா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களில் யாராவது எங்களை போல எண்ணத்தில் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (dream_india_2020@yahoo.co.in) . பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை.





தீபாவளிக்கு வசந்தம் என்ற ஒரு மனநிலை குறைந்த குழந்தைகளின் காப்பகத்தில் குழந்தைகளோடு DreamIndia நண்பர்கள்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் DreamIndia நண்பர்கள்:

Friday, November 11, 2005

பா..பா...பா...பா..பா...பாம்பு


பாம்பு.

என் தைரியத்தையும் வீரத்தையும் சோதிப்பதற்க்காகவே கடவுளால் படைக்க பட்ட ஒரு உயினினம். படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்புக்கு பொதுவாக ரெண்டு வேலைகள் தான் கொடுக்கப் பட்டிருக்கும். ஒன்னு, கதாநாயகி தலையில் பூவைத்து விடுவது, அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுவது, தொட்டில் ஆட்டுவது, வில்லியை பயங்காட்டுவது. இது (இராமநாராயணன்) சாமி பாம்பு. ரெண்டாவது, நேரே போய் ஹீரோ கழுத்துல போய் தொங்கிக்கிட்டு காமெடி பண்ணுறது. ஹீரோவும் "பா..பா..பா...பா" அப்படின்னு நமக்கு வயிறு வலி வரும் வரைக்கும் இழுத்துக்கிட்டே இருப்பாரு. "பா" க்கள் தாங்க முடியாமல் பாம்பும் வெறுத்துப் போய் இறங்கி பொந்துக்குள்ள போயிடும். அப்புறம் "ம்பு" அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ தொப்புன்னு மயக்கம் போட்டு விழுந்திடுவாரு. இது காமெடி பாம்பு. இப்போதெல்லாம் இராமநாராயணன் கலைஞரை வைத்து மட்டும் தான் படம் எடுப்பதால் (கழக கண்மணிகள் மன்னிக்கவும்), பாம்புகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் கோடம்பாக்கத்தை சுற்றி வருவாதாக கேள்வி.

எனக்கும் பாம்பை பார்த்தால் 'பா...பா...பா...பா.." தான். கிராமத்தில எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்பு ரொம்ப சகஜம். யாரு தோட்டத்திலாவது பாம்பு புகுந்திட்டுன்னா, என்னை மாதிரி அப்பாவிங்க ஜீவன்கள் கைல ஒரு கம்ப கொடுத்து பாம்பு அடிக்க அனுப்பிருவாங்க. எனக்கு பாம்பு என்று நினைத்தாலே உள்ளுக்குள் உதறும். அதன் வழ வழ உடம்பும், நெளிந்து வளைந்து ஒடும் ஓட்டமும், நினைத்தாலே சகலமும் ஒடுங்கி விடும். என்ன பண்ணறது?. ஆம்பளையா பொறந்துட்டோம். அதுவும் கிராமத்துல பொறந்துட்டோம். அதனால், கொஞ்சம் தைரியமா நடிச்சி தான் ஆவனும். பாம்பு வரும் போது எவன் மாட்டுகிறானோ அவன் தான் அன்னைக்கு "டாக் ஆஃப் த கிராமம்".

அப்படித்தான் ஒரு நாள் அத்தை வீட்டு தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. "எய்யா! ராசா! நம்ம தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. வந்து அடிய்யா" அப்படின்னு அத்தை, மகளுடன் வந்து என்னிடம் சொன்ன போது, என்னால் தட்ட முடியவில்ல. பாம்படிக்க போகும் போதெல்லாம் நான் வேண்டுவது "நல்ல பாம்பாகவோ, சாரை பாம்பாகவோ இருக்கக் கூடாது. பாம்பு கொஞ்சம் சின்னதாக இருந்தால் நல்லது. நம் மானம் காப்பாற்றப்படும்" என்று. இதுல வேற, 'ஏல! நல்ல பாம்ப அடிச்சி விட்டுறாதல! நெனவு வச்சி வந்து போட்டு தள்ளிடும்" என்று பெரிசுங்க வேற கொஞ்சம் இருக்கிற தைரியத்துலயும் மண் அள்ளி போட்டுங்க. "நீயா" மாதிரி படம் பார்த்து, அந்த நெனப்பு வேற நம்மை ஆட்டும். "ஒரு வேள இது ஜோடி பாம்பா இருக்குமோ" இதுவும் அதே பெருசு தான்.

கையில் ஒரு கம்பை கொடுத்து, பாம்பு இருப்பதாக தெரியும் இடத்தை காட்டி விட்டு எல்லோரும் பாதுகாப்பா ஒரு 30 அடி தள்ளி நின்று கொண்டார்கள். உள்ளுக்குள் உதறினாலும், அத்தை பொண்ணு வேற நம்ம சாகசத்தை பார்க்க நின்று கொண்டிருப்பதால், தடியை எடுத்துக் கொண்டு, எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு கிளம்பினேன். ஆடிப் போய்விட்டேன். சும்மா ஒரு 5 அடி நீளத்தில், எனக்கு சோதனையாக நின்று கொண்டிருந்து பாம்பு. என் நேரம், கோட்டைச் சுவரின் முக்கில் (Corner), ஓட வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இல்லன்னா, படம் காட்டி அதை விரட்டிட்டு "பாம்பு ஒடிடிச்சி" அப்படின்னு சொல்லிக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஒன்னு அது. இல்லன்னா நான். அப்படி ஒரு நெலம.

கொஞ்ச நேரம் நான் பாம்பு கூட போட்ட சிலம்பாட்டத்தில் சுத்தி இருக்கற பூச்செடி எல்லாம் ஒவ்வொன்னா மண்டைய போட, அத்தை தள்ளி நின்னு "ஏல! மனுசா! ஒன்ன பாம்படிக்க கூட்டி வந்தா! இருக்கற செடிய அடிச்சிக்கிட்டு இருக்கற" என்று சொல்ல, அத்தை பொண்ணு வேற நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்க, வீரம் வந்து பாம்பு மண்டைல ஒரே போடு. பாம்பும் மண்டைய போட, அப்புறம் அன்றைக்கு நான் தான் "டாக் ஆஃப் த கிராமம்".

சென்னை மடிப்பாக்கம் . நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே வசிக்க கூடிய இடம். வேலையில் சேர்ந்த புதிதில் அக்கா வீட்டில் அங்கு தான் தங்கி இருந்தேன். மழை பெய்தால் வெள்ளம் தான். சகலமும் வந்து போகும். அப்படித்தான் ஒரு பாம்பு பொழுது போகாமல் நேரே எதிரில் உள்ள மாமி வீட்டு சமையல் அறைக்குள் போய்விட்டது. நல்ல வேளை. மாமி பார்த்து விட்டார்கள். அசைவ பாம்புக்கு அது 'மாமி வீடு' என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு என்ன பசியோ, சமையல் அறையை உருட்ட போய்விட்டது. மாமி அலறிக் கொண்டு அக்கா வீட்டுக்கு ஓடி வந்தார்கள். நானும் என் அத்தான் கடை பையன் கோட்டானும் (சின்ன பையன் தான்) கம்பை எடுத்துக்கிட்டு போனோம். மாமி பையனுக்கும் என் வயது தான். வீட்டில் தான் இருந்தான். ஆனால் அம்பி நடுங்கி போய், வீட்டுக்குள் வரவே இல்லை. மாமி பொண்ணோ சமையல் அறை வாசலில் தைரியமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அது போதாதா நமக்கு. சின்ன சமையல் அறை. அறை எங்கும் உரிக்கப்படாத தேங்காய் குவிந்து கிடக்க, வெளிச்சமும் அதிகம் இல்லாத அறை. பாம்பு ஒடினால் நமக்கு ஓடவும் இடம் இல்லாத அறை. நானும் கோட்டானும் ஒவ்வொரு தேங்காயாக நகர்த்திக்கொண்டே வந்தோம். சரியான பாம்பு. பெரிய போராட்டத்துக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பாம்பை காலி செய்தோம்.

வெளியே வரும் போது மாமி அம்பியை பார்த்து "ஏண்டா! ராம்கி. சின்ன பையன். எவ்வளவு நன்னா, தைரியமா இருக்கான் பாரு. நோக்கு தைரியமே கிடையாதுடா. தண்டம்" . இப்படி மாமியின் மொத்த ஓட்டையும் கோட்டான் அள்ளிக் கொண்டு போக, நான் முடிவு செய்தேன் " அடுத்த தடவை மாமி வீட்டுக்குள்ள பாம்பு போனா, கோட்டானை கழட்டி விடுவது" என்று.

Friday, November 04, 2005

தாலாட்டு கேக்குதம்மா!!


திரை இசையில் தாலாட்டுப் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்று தேடியதில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு. தாலாட்டு பாடல்கள் எல்லாமே சுகமானவை. அழகான தாய்மையை சொல்லும் வரிகள் கொண்ட பாடல்கள். இங்கே சிலவற்றை கேட்டு பாருங்கள்.
__________________________________________________

முதல் பாடல். இசைகருவிகள் பயன்படுத்தாத ஒரு பாடல். சின்ன குயில் என்று சும்மாவா சொன்னார்கள். பாடல் இதோ...

தவமான தவமிருந்து தாளாம நா சொமந்த முக்கனியே !
நவமான மாமணியே ! நா படைச்ச கண்மணியே எந்துரையே !
பழஞ்சேலையில ஏனகட்ட செல்வ மக தூங்கிரலாம் !
அதிகாலையிலே கண்முழிச்சி வெளையாட போயிரலாம்.!




________________________________________________________

இதுவும் சித்ரா தான். அப்படி ஒரு இனிமை. தபேலா இசை மேலும் அழகு சேர்க்கிறது. கேட்டு பாருங்கள்.

சிறுவாழை தண்டு ரெண்டு சினுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில்
தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா!
உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா!
இளங்காற்றின் இன்பமே ! இனி ஏது துன்பமே !



__________________________________________________

மூன்றாவதாக ஒரு சுசிலா பாடல்.

குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழழை உன் சொல் போல இசையாவதேது!

யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை !
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவும் இல்லை !

அன்பிலே அன்பை இனைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே !




_________________________________________________________

"துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில், புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்....அறிவாயோ" இதோ ஒரு அன்னையின் பாசம்.

பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடி இருக்கும்!
இதழ் ஒரத்திலும் சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும் !
நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் !
நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்.....அறிவாயோ?.




_____________________________________________________________

கடைசியாக ஒரு சின்ன தாலாட்டு. மூன்று வரி தான் இந்த பாடல். சோகம் கலந்த ஒரு தாலாட்டு.

ஆசை ராஜா ஆரீரோ !
அம்மா பொன்னே ஆரீரோ !
தோளிலே மாலையாய் ஆடும் கண்ணா ஆரீரோ!
ஆடும் கண்ணா ஆரீரோ!

உமா ரமணனின் முதல் பாடல் என்று நினைக்கிறேன். பாடல் கேட்க..



_________________________________________________________________

பின் குறிப்பு : இதில் சின்ன தம்பியில் வரும் "தூளியிலே ஆட வந்த" போன்ற பாடல்களை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பாடல்களில் பொதுவாக "பாட்டெடுத்து நான் படிச்சா. ...காட்டருவி கண்ணுறங்கும்" - இந்த ரீதியில் ஹீரோவில் பாடும் திறமையை போற்றி பாடுவதாகவே போகும். இதை தாலாட்டு பாடலாக எடுத்துக் கொள்ளவில்லை.

உங்களுக்கு தெரிந்த பாடல்களையும் கூறுங்கள்.