அமாங்க! அந்தா இந்தான்னு ஒரு வாரம் ஓடிடிச்சி. இன்னைக்கு தான் நம்மோட கடைசி ஷோ. இந்த ஒரு வாரம் தமிழ்மணம் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிட எனக்கு வாய்ப்பு கொடுத்த காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
மறக்க முடியாத ஒரு வாரம். இதை என்னுடைய வலைப்பூ வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வாரமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. நெசமாவே, நான் இந்த அளவு ஆதரவை எதிர்ப்பார்க்கவில்லை..எத்தனை புதிய நண்பர்கள்..எத்தனை பாராட்டுக்கள்..நன்றி..நன்றி..நன்றி..
பொங்கல் பதிவு போட்டு சரக்கு காலியாகி போய் இருக்கும் போது பார்த்து மதி அவர்கள் 'நட்சத்திரம் ஆக விருப்பமா' என்று கேட்ட போது, ரொம்பவே பயமாக இருந்தது. நம் மானம் போய்டக் கூடாதேன்னு கொஞ்சம் யோசித்தேன். ஒத்துக்கொண்ட நாளில் இருந்தே ஒரே யோசனை...என்ன எழுத..என்ன எழுத..என்று..பல்லு வெளக்கும் போது...சாப்பிடும் போது..இப்படி சதா அதே நெனப்பு தான். அப்போ அப்போ தோனுவதை எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக மொத்தம் ஐந்து பதிவுகளுடன் தயாரானேன்.
நான் அவ்வளவாக மற்றவர்கள் வலைப்பதிவுகளுக்கு சென்றதில்லை. நேரம் இருப்பதில்லை என்பது ஒன்றே காரணம். என் 3 வயது மகளுடன் விளையாடவே நேரம் போய்விடும். எல்லோரும் தூங்கியதும் விடியற்காலை கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது எழுதுவது உண்டு. நெலம இப்படி இருக்க, இப்படி அறிமுகம் இல்லாத எனக்கு வரவேற்பு கிடைக்குமா என்று அச்சம் இருந்தது. இங்கே வலைப்பதிவை படிப்பதில் 95% நண்பர்கள் வலைப்பதிவர்களே. இங்கே வரும் 1000 வலைப்பதிவையும் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நமக்கென ஒரு நட்பு வட்டம், நம் ரசனைக்கேற்ற படி உருவாகிவிடுகிறது. என்னை மாதிரி நினைவலைகளில் காலம் தள்ளும் கும்பல், நக்கல்/நையாண்டி என்று ஒரு கும்பல், கருத்து/குடுமி சண்டைக்கு என்று ஒரு கும்பல் என்று நமக்கு ஒரு வட்டம் உருவாவது உண்மையே. இதை எல்லாம் மீறி என்னை கண்டு கொள்வார்களா என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து விட்டீர்கள். நன்றி நண்பர்களே..
மொத்தம் ஐந்து பதிவுகளுடன் நட்சத்திர வாரத்தை தொடங்கினேன்.
'இன்று முதல்' என்று ஆரம்பத்திற்கு 23 நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் என்னுடைய
'ஏங்குதே மனம்' 32 நண்பர்களை தேடிக் கொடுத்தது. ஒரு காதல் கதை சொல்ல முயற்சியின் விளைவே
'மலரே..குறிஞ்சி மலரே'. இதன் இறுதி பாகத்தை நண்பர் நடாவிடம் காட்டிய போது, சுத்தமாக திருப்தி இல்லை என்று சொல்லி விட்டார். அப்புறம் உட்கார்ந்து நிறைய திருத்தினேன். 'யோய்! காதலர்களை சேர மட்டும் விட்டுடாதீங்க என்ன. நல்லா இருங்கைய்யா' என்று திட்டினார். 'அதெல்லாம் சேர்த்து வைக்க முடியாது. முடிவை மாற்ற ஐடியா இல்லை' என்று கூறிவிட்டேன் :-). சில பதிவுகளை நான் பதிவதற்கு முன்னமே படித்து அதன் நிறை குறைகளை கூறிய நண்பர்கள் நடாவுக்கும், குமரனுக்கும் என்னோட நன்றி. அந்த கதையின் முடிவு எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்து உங்க கருத்துக்களை சொன்னீங்க. அவங்களுக்கு என் மனசுக்குள்ளேயே ஒரு பெரிய நன்றி.
மதி அவர்கள் என்னிடம் என்ன மாதிரியான பதிவை எதிர்பார்ப்பார்கள் என்றும், இந்த வாய்ப்பை எதற்கு கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பதிவிலாவது அவர்களே 'இதை தான் எதிர்பார்த்தேன்னு சொல்ல வைக்கணும்னு நெனைச்சேன். அது 'ஏங்குதே மனம்' பதிவின் மூலம் கிடைத்தது.ரொம்ப சந்தோசமா இருந்தது. நான் இந்த பதிவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மீண்டும் நன்றி நண்பர்களே.
அடுத்து
கருப்பனை தான் பதியலாம் என்று இருந்தேன். அப்புறம் ஒரே செண்டிமெண்ட் பதிவாகவே போய்விடும் என்று தான்
கிராமத்து மணத்தை எடுத்து விட்டேன்.
ஐந்தாவது (கடைசி) பதிவாக, ஒரே கிராமமா எழுதறோமே, கொஞ்சம் சாதாரணமாகவும் எழுத முயற்சிக்கலாமேன்னு வந்த ஆசையின் விளைவே
'வர..வர..நாடு நல்லால்லே'. நண்பர் கைப்புள்ள (மோகன்ராஜ்) சொன்ன மாதிரி, ஒரு கிராமத்து கதை எடுத்து விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்தாலும் ஒரு முயற்சி தானே. அதில் நான் ஒரு நகைச்சுவை/நையாண்டி நடையில் தான் முயற்சி பண்ணினேன். சில நண்பர்களுகு புரிந்தது. என் மனைவியே வாசித்து பாத்துட்டு திரு திருன்னு முழிக்கிறா. சரி டோட்டல் ப்ளாப்னு நெனைச்சிக்கிட்டேன் :-). அதில் நான் சொல்ல நினைத்த விசயம், ஒரு தனி மனிதனாக நம்மால் முடிந்த அளவு நல்ல விஷயங்களை முயற்சிக்கிறோமா என்று தான். கடைசில எல்லோரும் லஞ்சத்தை புடிச்சிக்கிட்டாங்க. எனக்கே பயம் வந்துட்டு..நாமே ஒரு குடுமி புடி சண்டையை, அதுவும் நட்சத்திர வாரத்தில் ஆரம்பித்து வைக்கிறோமோன்னு..புள்ளையார் புடிக்க கொரங்கா மாறிடுச்சு..அதனால தான் அவசர அவசரமா ஒரு பதிவை
'பள்ளிக்கூடம் போகலாமான்னு' எழுதி போட்டேன் (திருப்தி இல்லாமலேயே), ஒரு விவாத விடயத்துடன் என் நட்சத்திர வாரத்தை முடித்து கொள்ள மனம் இல்லாமல்.அதுக்கும் நண்பர்கள் கொடுத்த பின்னூட்டத்தை இன்னிக்கு காலைலேயே பாத்துட்டு, சந்தோசமா இந்த கடைசி பதிவை எழுதுகிறேன்.
மொத்ததில் நான் எழுதிய ஐந்து பதிவுகளும் எனக்கு ரொம்ப திருப்திங்க. திருப்தி எப்போ வரும்னா, வரும் பின்னொட்டங்களின் எண்ணிக்கையில் அல்ல. அதில் நண்பர்கள் எழுத்துக்களில். எனக்கு எவருமே 'நல்ல பதிவு' 'அருமை' என்று மொட்டையாக சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரும் மனதில் இருந்து கொட்டி விட்டு போயிருந்தீர்கள். என் பதிவை விட, நீங்கள் இட்ட பின்னோட்டங்கள் ரொம்ப சுவாரசியமானவை. நன்றி நண்பர்களே.
உண்மைய சொல்லனும்னா, இதுக்கே ஓஞ்சி போய்ட்டேன். மண்டையிலே சத்தியமா சரக்கு கெடையாதுங்க. இந்த 5 பதிவுக்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். குடும்ப நேரங்கள் ரொம்பவே அடி வாங்கின. என்ன பண்ணுறது நட்சத்திர வாரமாச்சே. காலியா போன சரக்கு சட்டில இருந்து கொஞ்சம் இருந்ததையும் நல்லா சொரண்டி போட்டாச்சி. இப்போ நல்லா விம் பார் போட்டு கழுவி சட்டிய கவுத்தியாச்சி. என்னுடைய புராணம் வழக்கம் போல வாரம் ஒன்றாவது தொடர முயற்சி செய்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் மனசார என் நன்றியை மீண்டும் சொல்லிக்கிறேன்.
எனக்கு அடுத்தததா நட்சத்திரமாக ஆரம்பிக்க காத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
இந்த ரெண்டு மூனு வாரமாகவே பரிச்சைக்கு படிக்கும் மக்கு மாணவன் போல தான் என் நிலைமை. கஷ்டப்பட்டு படிச்சி பரிட்சை எழுதிட்டேன். பாஸா! பெயிலா- என்று நீங்க தான் சொல்லணும். பாஸோ..பெயிலோ...ஆனா பரிட்சை முடிஞ்சதும் பெரிய ஒரு லீவு விடுவாங்களே... :-)
ஹையா...எனக்கு லீவு விட்டுட்டாங்களே...வரேன் :-)
--------------------------------------------------
மொத்தமாக 60 நண்பர்கள் வந்து என்னுடைய வாரப்பதிவுகளை படித்து என்னை ஊக்கப்படுத்திச் சென்றுள்ளீர்கள். எல்லோருக்கும் என்னோட சிறப்பு நன்றிகள் :
தேசிகன், எல்.ஏ. வாசுதேவன், மதி கந்தசாமி, சிங் செயகுமார், பாரதி, தருமி சார், ஜோசப் சார், குமரன், பரஞ்சோதி, கைப்புள்ள (மோகன்ராஜ்), ராகவன், ஜோ, சதீஷ், ரஜினி ராம்கி, தாணு, செல்வன், இலவசகொத்தனார்,முத்துகுமரன், சிங்.செயகுமார்(எல்லா பதிவுக்கும் கவிதை கொடுத்ததுக்கு சிறப்பு நன்றி தம்பி), முத்து (தமிழினி), ஐயா ஞானவெட்டியான், மஞ்சூர் ராசா, இராமநாதன், சுந்தர், என்னார், இளவஞ்சி, இளந்திரையன், நடா, நிலவு நண்பன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், கீதா, கிறுக்கன், டி.ராஜ், விவசாயி, சத்தியா, ஒலியினிலே, உஷா அக்கா, சாம், ராமச்சந்திரன் உஷா, எல்.எல்.தாஸ், மணியன், அபிராமம், தெக்கிக்காட்டான், நாமக்கல் சிபி, நிலா,மதுமிதா அக்கா, செல்வராஜ், பார்த்தா, தங்கமணி, அல்வாசிட்டி விஜய், வி.எஸ்.ரவி, கோபி, அல்லி மகன், காஞ்சனா, கீதா சாம்பசிவம், கார்த்திக், குணா, சிவகுமார்,வெளிகண்ட நாதர், யுகன் மற்றும் அனானி நண்பர்கள். யாராவது விட்டு போயிருந்தா, மன்னிச்சிடுங்க.
மற்றும் படித்து பின்னோட்டம் போட நேரம் இல்லாமல், வசதி இல்லாமல், பின்னோட்டம் எப்படி போடுவது என்று விவரம் தெரியாமல் சென்ற எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
எல்லாத்துக்கும் மேலே இந்த வாரம் முழுவதும் ப்ளாக்கர் என்னை தொந்தரவு செய்யாமல் பாத்துக்கிட்ட கடவுளுக்கு ரொம்ப நன்றி.