Saturday, December 17, 2005

வேலை கிடைச்சிடுச்சி

'பற்களின் வெண்மைக்கு பூபால் பல்பொடி
பூப்போன்ற பற்களுக்கு பூபால் பல்பொடி
ஒய்யாங்குடி, பாட்டக்கரை, சாத்தான்குளத்தில்
விற்பனையில் முதலிடம் பூபால் பல்பொடி'


இப்படி எங்க ஊரு தேட்டருல அடிக்கடி ஒரு விளம்பரம் ஓடும். ஒரு நாள் அப்படி தான் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா 'ஏல! பூபால் கம்பெனில ஒனக்கு வேல கெடச்சிருக்கு. நாளைல இருந்து போவணும்" அப்படிங்கறாங்க. அடடா! நம்ம திரைல பாத்த கம்பெனில நமக்கு வேலையா. ஒரே சந்தோசம். தூக்கமே வரல.

அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டு, லீவுல வீட்ல இருந்தேன் :-). வெயில்ல புள்ள காடு காடா சுத்தி கருத்து போயிர கூடாதுன்னு இப்படி ஒரு வேலை ஏற்பாடு. இங்கே கருத்து போறதுக்கு ஒன்னும் இல்லன்னாலும், நானும் காக்காவும் ஒரே ஜாதி என்றாலும், ஒரு பழமொழி சொல்லுவாங்கல்லா. அதான்.

கம்பனிக்கு போறதுக்கு முன்னாடி பல்பொடி பற்றி ஒரு ப்ளாஷ் பேக். என்னோட சின்ன வயசுல சாம்பல் (உமிக்கரி) தான் பல்பொடி. காலைல எந்திருச்சோம்னா, வீட்டு பின்னாடி ஒரு டால்டா டின்ல உமிக்கரி தொங்கிகிட்டு இருக்கும். ஒரு கை நிறைய அப்படியே அள்ளி வாயில போட்டு சவச்சி வாய கொப்பளிச்சா, பல் வெளக்கின மாதிரி. பல்பொடி முடிஞ்சி போச்சின்னா, டின்ன தூக்கிக்கிட்டு பக்கத்து ஊரு மணிநகருல போய் யாரு வீட்லயாவது 'யக்கா! பல்பொடி இருக்குமா' ன்னு கேட்டா, "அடுப்புக்குள்ள கெடக்கு. அள்ளிட்டு போப்பு" அப்படின்னு நெல் அவிக்கும் பெரிய அடுப்ப காட்டுவாவ. மணிநகர்ல எல்லோருக்கும் நெல் அவிக்கிற தொழில். "பாத்துப்பு! தணலா கெடக்கு. அப்படியே அள்ளி வாயில போட்டுறாத. வாயி வெந்துரும்". அடுப்பு அண்டா சைசுக்கு இருக்கும். ஒரு நீளமான கரண்டிய வச்சி டின்ன நெறப்பிக்கிட்டு வந்து சேருவோம்.

நான் கண்ணால பல்பொடிய பார்த்தது, மூனாங்கிளாஸ் படிக்கும் போது தான். எம்.ஜி.ஆர் படம் போட்டு பல்பொடி ஒன்னு பள்ளிக் கூடத்துல ஓசில கொடுப்பாவ. செம டேஸ்ட். அதும் வீட்டுக்கு வந்து சேர்வதற்க்குள் காலியா போய்விடும். மொத்த பாக்கெட்டையும் வர வர தின்னே தித்துடுறது.

இப்படி பட்ட நிலமைல, பல்பொடி கம்பெனில வேலைன்னா சும்மாவா. ஆயிரம் கனவுகளோடு பல்பொடி கம்பெனிக்கு எங்க ஊரு பசங்க ஒரு அஞ்சு பேரு கெளம்பினோம். மொதளாளி எல்லோரையும் வரவேற்று வேலை நெளிவு சுழிவுகளை பற்றி சொல்லி கொடுத்தார். எனக்கு கொடுக்கப் பட்ட முதல் வேலை "ஏல! அந்த ரூமுக்குள்ள கெடக்கற பல்பொடிய இந்த மெஷின்ல அள்ளி வந்து கொட்டுல". நானும் அண்ணாச்சி காட்டுன ரூமுக்குள்ள போய் பாத்துட்டு "யண்ணே! அங்க பல்பொடி ஏதும் இல்லண்ணே. உமிக்கரி தான் கெடக்கு" என்றேன். "அதாம்ல பல்பொடி. கொண்டு வந்து கொட்டுல" என்றார் சூப்பர்வைசர் அண்ணன். அடப்பாவிங்களா! இங்கேயும் அதானா. பல்பொடி திங்கலாம்னு வந்த நாக்கு செத்து போச்சி.

என்னோட வேலை. பல்பொடி :-) ய கலக்குற மெஷுன்ல கொண்டு வந்து கொட்டணும். மெஷின் பல்பொடியோட ரோஸ் கலர் சாயம், கொஞ்சம் சாக்கரீன் (அப்போ தான சுவையா வரும்) கலக்கும். அதை அள்ளி வெயில்ல காய வைக்கணும். இப்போ சுவையான, மணமான பூபால் பல்பொடி தயார். அப்புறம் அதை அள்ளி, ஒரு பொடி டப்பா சைசுல அளந்து சின்ன சின்ன பாக்கெட்ல அடைச்சி ஒட்டணும். அப்புறம் சின்ன பாக்கெட் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பெரிய பண்டலா மாற்றுவோம். வாரம் அஞ்சு ரூவா சம்பளம். ரெண்டு வாரம் வேலைக்கு போனேன். மொத்தம் பத்து ரூவா கெடைச்சது. அப்படியே அம்மா கைல கொடுத்தாச்சி. மொத சம்பளம் இல்லையா.


அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன்.

13 comments:

ilavanji said...

//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன். ///

:)))))))))

கலக்கல் சிவா!

குமரன் (Kumaran) said...

வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க சிவா. இப்ப நீங்க அமெரிக்கா வந்துட்டீங்களே? உங்க ஊர்ல ஓணான் தொல்லை அதிகமாயிருக்குமே? இல்லை யாராவது சிஷ்யப்பிள்ளைங்களை விட்டுட்டு வந்துருக்கீங்களா? :-)

சிங். செயகுமார். said...

சாமியோவ் அசத்திடீங்க போங்க.கொஞ்சம் இருங்க திஷ்டி சுத்தி போடுறேன்.சீக்கிரம் ஓணான் கதையும் வரட்டும்.

நிலா said...

//அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன். //

இதை நானும் ரொம்ப ரசிச்சேன்

சிவா said...

வாங்க வாங்க இளவஞ்சி! முதல் முதல் இந்த பக்கம் வந்திருக்கீங்க. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

நன்றி குமரன்! ஆமாம் குமரன்! ஊர்ல சிஷ்யப்புள்ளைங்க எல்லாம் கவனிச்சிக்கிடுதுங்க. நானும் இப்போ ஊருக்கு போனா அவர்களுக்கு உதவுவது உண்டு :-)

சிங்கு! உங்க தொடர் ஆதரவுக்கு நன்றி. நாம ரெண்டு பேரும் கதை சொல்றதுல ரொம்ப ஒத்து போகுதுன்னு நினைக்கிறேன். எந்த ஊருய்யா நீரு?.

நிலா! வருகைக்கு நன்றி! அடடா! எல்லோருக்கும் ஓணான் தான் புடிச்சிருக்கா! அடுத்த பதிவுல நம்ம சிங்கு கேட்ட மாதிரி, ஓணான் கதைய பாத்துடலாம்.

சிங். செயகுமார். said...

"சிஷ்யப்புள்ளைங்க எல்லாம் கவனிச்சிக்கிடுதுங்க"

Unknown said...

Summa super Siva.....

Nice one.....Ungallai mingha Allaey kiddaiyathu Siva....

Anbudan,
Natarajan

மு மாலிக் said...

அருமை. படிப்பதற்கு கட கட வென்று ஒடியது.

சிவா said...

நடா! மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்திருக்கீங்க. பாராட்டுக்கு நன்றி.

மாலிக்! முதல் வருகைக்கு நன்றி! பாராட்டுக்கும் நன்றி.

பரஞ்சோதி said...

சிவா, அட்டகாசம்,

ஆமாம் உங்க ஊர் எது? எனக்கு திருச்செந்தூர் அருகில்...

நம்ம கதையை எல்லாம் நீங்களே சொல்லுறீங்களேன்னு ஆச்சரியாம படிக்கிறேன்.

பேசாம என் நினைவலைகளுக்கு உங்க பதிவுகளின் லிங்க் கொடுத்தா போதும்.

சிவா said...

வாங்க பரஞ்சோதி! அடடா, நீங்க திருச்செந்தூர் பக்கமா? எந்த ஊரு?. காயல்பட்டிணமா?. ஆறுமுகநேரியா?.
நமக்கு, நாசரேத். நாசரேத் பக்கத்துல என்னோட கிராமம் ஒரு சின்ன கிராமம். B.Sc வரைக்கும் நாசரேத்ல தான்.

நம்ம ஊரு வேற ஆகி போய்டீங்க. அப்புறம் அதே வேலைய தான செஞ்சிருப்போம். அணில் அடிக்கிறது, புட்டான் புடிக்கிறது. அதனால, நினைவலைகள் ஒன்னா தான் இருக்கும். உங்களதையும் பதிங்க. நானும் படிக்கிறேன்.

பரஞ்சோதி said...

சிவா,

நான் நாசரேத்தில் தான் +2 படிக்க ஆசைப்பட்டேன், வசதி இல்லாததால் முடியவில்லை, மெஞ்ஞானபுரத்தில் படித்தேன்.

எனது ஊர் காயாமொழிக்கு, உடன்குடிக்கும் நடுவில் இருக்குது. உங்களுக்கு தெரியுமா?

அப்புறம் நாசரேத் கல்லூரி அணியுடன் கிரிக்கெட் எல்லாம் ஆடியிருக்கிறேன்.

சிவா said...

//** ஒரு கம்பு நுனியில நூலக் கட்டி நூலின் இன்னொரு முனையில சுருக்குப் போட்டு ஒட மரத்துல பதுங்கி நின்னு தலையத் தலைய ஓணான் தூக்கிப் பாக்கும் போது கழுத்துல சடக்குன்னு சுருக்க மாட்டி ஒரு இழுப்பு. **//

பாரதி! அதே அதே! கரெக்டா சொல்லிட்டிய :-)). நீங்களும் சின்ன வயசுல அப்படி செஞ்சிருக்கியலோ :-)).

( இந்த பழைய பதிவை படித்ததற்கு ஒரு சிறப்பு நன்றி :-))