நான் பார்த்த மொத வேலைய பத்தி இங்கே சொல்லிருக்கேன். இப்போ ரெண்டாவதா கெடைச்ச வேலைய பற்றி புராணம் பாட வந்திருக்கேன்.
அப்போ காலைல எந்திரிச்ச வுடனே மொத வேல, பக்கத்து ஊரு மணிநகருக்கு போய் மளிகை சாமான் வாங்கி வருவது தான். எங்க ஊருல கட கெடையாதுல்லா. ஊருல யாரு கண்ணுலையும் படாம போனோம்னா பொழைச்சோம். இல்லன்னா, வீட்டுக்கு வீடு ஒரு சீட்ட எழுது கைல கொடுத்துருவாவ. அப்பாவோட சைக்கிள எடுத்துக்கிட்டு கொரங்கு பெடல போட்டுக்கிட்டே போய் சேரவும், தடியர் வருவதற்கும் சரியா இருக்கும். தடியர் கடை தான் இருக்குற ரெண்டு கடைல ஒன்னு. ஆள் எப்படி இருப்பர்னு சொல்ல தேவை இல்லை. அவரு கடைக்கு போறதுக்கு ரொண்டு காரணம், ஒன்று தேங்கா தண்ணி. ரெண்டாவது ஓசில படிக்க கெடைக்கும் சிறுவர் மலர். 'நல்லா பெரிய தேங்காவா ஒடைங்கண்ணே' தேங்கா செரட்டையோட நின்னுக்கிட்டு இருப்பேன். ரொம்ப பழக்கமாயிட்டார். 'ஏல! லீவு வருதுல்லா. நம்ம கடைக்கு வந்துர்றீயா?' ஓசியில ஒரு வேலையால் கெடைச்சா நல்லா தானே இருக்கும். எனக்கும் ஆசை தான். பல்பொடி கம்பெனிக்கு போய் தண்டமா போச்சி. பசிச்சா ஏதாவது சாப்பிட முடியுதா. மளிகை கடைன்னா, அப்போ அப்போ ஏதாவது அள்ளி வாய்ல போட்டுக்கலாம். 'சரின்னே! லீவு வந்ததும் வந்துடறேன்'. 'கடைய இடிச்சிட்டு கொஞ்சம் பெரிசா கெட்டுங்கண்ணே. நான் நிக்கிறதுக்கு எடம் வேண்டாமா' ரொம்பவே நக்கலா போகும் எங்கள் பேச்சு வார்த்தை.
கோடை விடுமுறை விட்டாலே நம்ம தொல்லை தாங்க முடியாம எங்கையாவது தள்ளி விடுறதுல வீட்டுல குறியா இருப்பாங்க. தொல்லை விட்ட மாதிரியும் இருக்கும். படிக்காம உருப்படாம போய்ட்டா பின்னாடி பயன் படலாம் பாருங்க. தடியர் கடைக்கு தான் இந்த தடவை போவேன்னு சொல்லிட்டேன். நம்ம ஆசைய யாரு கேக்குறா. கடைசில சைக்கிள் கடைல தள்ளி விட்டுட்டாங்க. அப்பா வேல பாக்குற சைக்கிள் கடைல என்னையும் விட்டா வெளங்காதுன்னு, கொஞ்சம் தள்ளி அப்பாக்கு தெரிஞ்சவரோட சைக்கிள் கடை.
ஆனா ஒரு வகைல சந்தோசம். அப்போ சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்ட காலம். அப்பாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பா சைக்கிள வாங்கி, அதையும் ஒரு முள்ளுக்காட்டுக்குள்ள மொத்தமா போய் விழுந்து பஞ்சராக்கி திட்டு வாங்கிகிட்டு இருந்த காலம். தீபாவளி பொங்கல்ன்னா ஒரு குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து கொடுப்பாங்க. அன்னைக்கு முழுசும் சோறு தண்ணி இல்லாம ஒட்டிக்கிட்டே இருக்கிறது. அன்னைக்கு முழுசும் அப்படி ஒரு சந்தோசமா இருக்கும். இப்படி இருக்கும் போது சைக்கிள் கடைலயே வேலைன்னா சும்மாவா. எப்படியும் சைக்கிள் கெடைக்கும். சந்தோசமா வேலைல போய் சேர்ந்தேன்.
கடை ஒன்னும் பெரிய கடை இல்லை. காதல் படத்துல பாத்திருப்பீங்களே ஒரு கடை. அதே மாதிரி தான். என்ன இங்கே சைக்கிள். காலைலயே போனவுடனே கடைல பெருக்கி தண்ணி தெளிச்சிக்கிற வேலை. அப்புறம் வர்றவன் போறவனுக்கெல்லாம் காத்தடிச்சி கொடுக்கிற வேலை. நானே அப்போ பம்பு வளத்தி தான் இருப்பேன். என்னைய போய் 'லே! சாருக்கு ப்ரண்டுல காத்தடிச்சி விடுல' அப்படின்னு வெறட்டுவாரு. நானும் பம்பு கூட போராடி போராடி அடிச்சி கொடுத்தா சில சமயம் ஒரு பத்து பைசா கெடைக்கும். அதை மொதலாளி புடுங்கிகிடுவார். உழைப்பு என்னோடதா இருந்தாலும், கடை அவரோடது தானே.
என்னோட முக்கிய வேலை. எவனாவது பஞ்சர்னு வந்தா ட்யூப்ப கலட்டி காத்தடிச்சி ஒரு அழுக்கு தண்ணில முக்கி பஞ்சர கண்டுபுடிச்சி அவருகிட்ட சொல்றது. அவரு ஒட்டி முடிச்சதும், மறுபடி காத்தடிச்சி ரெடி பண்ணி வைக்கிறது.
மத்யானம் ஆயிடுச்சின்னா, அவரு வீட்டுக்கு போயி மதியம் சாப்பாடு வாங்கிட்டு வரணும். மொதலாளி வீடு ஒரு 5 கீ.மீ தள்ளி ஒய்யாங்குடின்னு ஒரு ஊரு. அந்த மே மாசம் வெயிலுல, கொரங்கு பெடல் போட்டே லொங்கு லொங்குன்னு 5 கீ.மீ ( போய் வர மொத்தம் 10 கீ.மீ) அழுத்திப் போய் மொதலாளிக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுப்பேன். போற வழில ஒரு குளம் உண்டு. அதுல இறங்கி கொஞ்ச நேரம் வெளாண்டுட்டு, அப்புறம் தான் பிரயாணத்தை தொடருவேன்.
ஊரு பயலுவலுக்கு கவட்ட செய்றதுக்கு சைக்கிள் ட்யூப் எல்லாம் சப்ளை நான் தான். அப்புறம் சாயங்காலம் ஆச்சின்னா மொதலாளி பக்கத்து டீ கடைல ஒரு டீயும், ஸ்வீட் பன்னும் வாங்கி கொடுப்பாரு. அது தான் அன்னைக்கு பம்பு கூட காலைல இருந்து போராடுனதுக்கு கொடைச்ச ஒரே வெகுமதி. தின்னுட்டு மறுபடி வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவேன். ராத்திரி ஒரு 10 மணிக்கு போல அப்பா வீட்டுக்கு போகும் போது என்னையும் அழைத்துக்கொள்வார்கள்.
இப்படியே ரெண்டு மாசம் ஓடி போச்சி. நல்ல மனுசன். பேசாம அப்படியே அங்கேயே தங்கிறலாம்னு நெனைச்சேன். மண்டைல ஒரு தட்டு தட்டி, படிக்க போலன்னு வெரட்டி விட்டுட்டாங்க. 'யப்பூ! அடுத்த தடவையும் வந்துரு என்ன' மொதலாளி சுட சுட மதிய சாப்பாடு பறிபோன சோகத்தில். 'சரிண்ணே! ' சொல்லிட்டு வந்தேன்.
( அடுத்த பார்த்த வேலை விரைவில்)
27 comments:
அப்பூ சிறுவர் மலர்ல தெனாலி ராமன் கதை படிச்சேளா?கொரங்குபெடல் கவட்டைக்கு சைக்கிள் டியூப்பு. நம்ம ஊர்லேயும் உண்டுங்க!
நல்லா சுவாரசியமா இருக்குண்ணே...
என்னமோங்க...வர வர சில ஆட்கள் பதிவைப் படிச்சதும் மனசுக்குள்ள ஒரு சத்தம் கேக்க ஆரம்பிக்குது: "ஏலே தருமி, நீ'ல்லாம் எழுதணுமா'ல".
சிவா, நல்லா இருக்கு உங்க வேலை புராணாம். அந்த விளையாட்டு பருவத்தில ஜாலியா செய்ற வேலைகள் அதை இப்ப நினைச்சாலும் சொர்க்கம் தான். இதை பத்தி தான் என் பால்ய பருவத்தில நிறைய எழுத ஆசைப்பட்டேன், இப்ப உங்க இந்த் பதிவுக்கு என்னோட இன்னெஒரு ச்ம்பத்தை ஞாபக படுத்திடிச்சு, விரைவில் எழுதுறேன்!
தம்பி சிங்கு! ஆமாம் அப்படி படிச்சதால தானே இப்போ நம்ம பரஞ்சோதியோக ப்ளாக் ரொம்ப புடிக்குது :-)
வாங்க சாணக்கியன்! உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க.
( அண்ணேன்னு சொல்லிப்புட்டிய :-))
சிவா, கடைசியா உங்க சிறுவயது அனுபவங்கள்ல எனக்கும் ஒத்துப் போற மாதிரி ஒன்னு சொல்லிட்டீங்க. எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு மளிகைக்கடை இருந்தது (இன்னும் இருக்குது). அந்தக் கடைக்கு நான் போறப்ப எல்லாம் சிரட்டையில தேங்காத் தண்ணி வாங்கிக் குடிச்சது நினைவுக்கு வந்தது நீங்க எழுதியிருந்ததைப் படிச்சப்ப. :-)
தருமி சார்! என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு
:-). ஏதோ சொந்த கதையை எடுத்து வுடுறேன்..பெரியவுங்க நீங்க பாராட்டுனா ஒரு பெரிய திருப்தி வர தான் செய்யுது..நன்றி சார் :-)
வெளிகண்ட நாதர்! பாராட்டுக்கு நன்றி. ஆமாங்க. விவரம் அறியாத வயசுல, மனசு போன போக்குல அலைஞ்சிக்கிட்டு, சின்ன விசயத்தையும் ரசிச்சிக்கிட்டு....சந்தோசமான நாட்கள் அவை..அசை போட்டுக்கிட்டே இருக்கலாம்..நீங்களும் சீக்கிரம் எழுதுங்க..படிக்க ஆவலாய் உள்ளேன்.
குமரன்! உங்களுக்கு ஒத்துப்போற மாதிரி ஒன்னு சொல்லிட்டேனா.. பரவாயில்லையே.. :-))
அந்த செரட்டைல தேங்கா தண்ணி வாங்கி குடிக்கிற சொகமே தனி தான் :-)
இந்தக் கவட்டைங்குற சொல்லு இருக்கே.....இது தெக்கத்திக்காரக சொல்லு. ஏல கவட்டையப் பெளந்துக்கிட்டு நடக்கான்லே-ம்பாங்க. வீட்டுல கூட கால பப்பளாச்சு பளாச்சுன்னு விரிச்சு உக்காந்திருந்தா கவட்டய விரிச்சி உக்காராதல-ம்பாங்க.
ஆனா நான் இதுவரைக்கும் ஒரு கவட்டையைக் கூட பயன்படுத்துனதில்லை. தூத்துக்குடில எங்க வீட்டுக்குப் பின்னால ஒரு பெரிய தோட்டமிருந்தது. அதுல சும்மாப் பொழுது போக்குறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் பெரிய மஞ்சக்கனகாம்பரப் பொதரு...கொடுக்காப்புளி மரம்...சரி. சரி..கதய இங்க நிறுத்துறேன்.
மேலை நாடுகள்ள படிக்கிற பிள்ளைக வேலையும் பாப்பாகன்னு கேட்டிருக்கேன். நான் செஞ்சதில்லை. அப்படிச் செய்யனுமுன்ன் ஒரு வாட்டி வீட்டுல கேட்டப்போ அதை ஒத்துக்கலை. நானும் அதைப் பெருசா எடுத்துக்கலை....
சிவா...ஒரு பெரிய பின்னூட்டம் போட்டேன்...அது என்னமோ வராமப் போயிருச்சு..தொலைஞ்சு போச்சு... :-(((( நாளைக்கு வந்து போடுறேன். இனிமே பின்னூட்டத்தை வேறதுல எழுதி வெச்சுக்கிட்டுப் போடனும்.
ராகவன்! கவுட்டையை பயன்படுத்தியதில்லையா..நாங்க அதுக்கு ஒரு பெரிய ஆராச்சியே பண்ணி, அந்த கட்டையை தீயில் சுட்டு (வாட்டி), அதை ரெடி பண்ணுவோம். ஆனா அத வச்சி ஒன்னு கூட அடிச்சது கெடையாது..சும்மா டவுசர் பாக்கெட்ல கொஞ்சம் கல்ல அள்ளி போட்டுக்கிட்டு சுத்துறதோட சரி :-))
உங்களுக்கு கொடுக்கப்புளி மரம் ரொம்ப புடிக்கும் போல. முழுக்கதையையும் சொல்றது தானே..நிறுத்திட்டீங்க :-(
ஆமாம். இங்கே அமெரிக்க மனேஜர்களிடம் பேசினால், படித்துக்கொண்டிருக்கும் போது பெட்ரோல் பல்க், மளிகை கடைகளில் வேலை பார்த்துவந்ததை சொல்வார்கள். இவர்கள் வாழ்க்கையே அப்படி சின்ன லெவலில் தொடங்கி தான் மெதுவாக பெரிய லெவலுக்கு வருகிறார்கள். நாம தான் ஒரே இடத்தில் தங்கி விடுகிறோம் :-)
ராகவன்! உங்களுடைய முந்தைய பின்னோட்டத்தை சொல்றீங்களா?. அது வந்துட்டே..கமெண்ட் மாடரேஷன்-ல இருந்திருக்கும்..இல்ல வேற ஒன்ன சொல்றீங்களா?
பாரதி
//** ஒரு பெரிய விசயத்தை போகிற போக்கில் ரொம்ப யதார்த்தமா சொல்லிட்டுப் போயிட்டீங்க சிவா. உழைப்பின் அருமையும், வலியும் புரியாத வயதல்லவா அது? **// அது நீங்க சொன்ன மாதிரி ஒரு புரியாத வயசு..அப்புறம் அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை (அப்போது), ஏன்னா நான் அவருக்கு ஒத்தாசையா தானே இருந்தேன். வேலை என்று வரும்போது நீங்கள் சொல்வது உண்மையே. அது எல்லா மட்டத்திலும் இருக்கிறது.
உங்கள் தொடர் வருகைக்கு நன்றி பாரதி. ரொம்ப சந்தோசமா இருக்கு
:-)
வணக்கங்கண்ணா!
பேசாம உங்க கிராமத்து கதைங்களுக்குப் பின்னூட்டம் போடுறதையே உட்டுடலாமானு யோசிக்கிறேன். ஏன்னா படிச்சா பின்னூட்டம் எழுதுறதுக்கு வார்த்தையே வர மாட்டேங்குது! நல்லா இருக்கு, அருமை, பிரமாதம்னு சும்மா சும்மா சொன்னா உங்களுக்கும் போர் அடிச்சுடாதா? வருசத்துக்கு ஒரு தரம்(அதுவும் சின்னப்புள்ளயில்) கிராமத்துக்குப் போற என்னை மாதிரி ஆளுங்களுக்கு அதுவும் திருச்சிக்கு தெற்கே ஒரு ஊரையும் பாக்காத எனக்கு உங்க கதைகள்ல வர்ற காட்சிகளைப் பாத்தா ஏதோ ஒரு புது உலகத்தையே பார்த்த அனுபவம். உங்களுடைய கிராமத்து அனுபவங்களை இன்னும் பல நாள் படிக்கும் பாக்கியம் மட்டும் எனக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.
வாங்க மோகன்ராஜ் (கைப்புள்ள)!
//** பேசாம உங்க கிராமத்து கதைங்களுக்குப் பின்னூட்டம் போடுறதையே உட்டுடலாமானு யோசிக்கிறேன் *// ஏங்க இப்படி சொல்லீட்டீங்க..ஒரு present sir ஆவது சொல்லிடுங்க :-)).
//** ஏதோ ஒரு புது உலகத்தையே பார்த்த அனுபவம் **// இப்படி பட்ட பாராட்டுக்களை கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு மோகன்ராஜ்.நன்றிங்க. இது என்னுடைய வாழ்க்கை வரலாறு :-)) அவ்வளவே...ஓணான் அடித்தது, குளத்தில் குளித்ததுன்னு நான் பாட்டுக்க புராணம் பாடறேன். நீங்க ரொம்பவே ரசிக்கறீங்க :-). சந்தோசமா இருக்குங்க.
//** உங்களுடைய கிராமத்து அனுபவங்களை இன்னும் பல நாள் படிக்கும் பாக்கியம் மட்டும் எனக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும். **// பாக்கியம் அப்படின்னுல்லாம் சொல்லாதீங்க :-)). ரொம்ப பெரிய வார்த்தை..நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா ஏதாவது கதை விடறேன்
:-).
உஷா அக்கா! இப்போ என்னுடைய புராணம் ப்ளாக்குக்கும் தொடர்ந்து ஆதரவு தர்றீங்க..நன்றி :-))
பாராட்டுக்கு நன்றி அக்கா! Y shape கிளையை கண்டுபுடிச்சி, அதை வெட்டி ( அப்படி அடுத்தவன் மரத்தை வெட்டியே சண்டை வந்திருக்கு :-)) ரெடி பண்ணி, சரல் ரோட்டுல கெடக்குற கல்லை பைக்குள்ள போட்டுக்கிட்டு காடு காடா அலையறது ஒரு சுகம் :-)). நீங்க உங்க மாமா பசங்க கூட :-) சேர்ந்து குருவி அடிச்சிக்கிட்டு சுத்திருக்கீங்க..கலக்கல் :-). உங்க கிட்ட நெறைய கதை கேக்கலாம் போல :-)
உங்கள் மலரும் நினைவுகள் அருமை. கோலி, பம்பரம், நொண்டி ஒரு கோர்வையா தோணும் போது எழுதறேன். :-).
காத்தாடிய சொல்றீங்களா...அந்த பெரிய முள்ளில் (காக்கா முள்ளுன்னு சொல்வோம்) ஒலையை குத்தி,ஓடினா சுத்துமே..ஒல காத்தாடி...அதை மறக்க முடியுமா
:-)
Siva,
Ummai Adichikka Allaey illaya....U are the King of Tamizhmanam.
Naan I open Tamizhmanam only to read your blog......Nandri for your time and posting.
Anbudan,
Natarajan
நடா! யப்பா! இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சதா :-). எப்படியோ, உங்களை நீண்ட நாட்கள் கழித்து இந்தப் பக்கம் பார்ப்பதில் சந்தோசம்.
ரொம்ப புகழாதீங்க நடா :-)). ஏதும் பிரச்சினைன்னா தனி மடல் அனுப்பி தீர்த்துகலாம்..என்ன...ஹாஹாஹா
:-)
அப்படியே பழைய பதிவுகளையும் படிச்சீங்களா?
அன்புடன்,
சிவா
// ராகவன்! உங்களுடைய முந்தைய பின்னோட்டத்தை சொல்றீங்களா?. அது வந்துட்டே..கமெண்ட் மாடரேஷன்-ல இருந்திருக்கும்..இல்ல வேற ஒன்ன சொல்றீங்களா? //
முந்தைய பின்னூட்டந்தான். அப்ப பேஸ் கேண்ட் பீ டிஸ்பிளேடு ன்னு வந்தது...அதான் அப்படி நெனச்சேன்...
கொடுக்காப்புளின்னா உசுரு..........ஆகா....அந்த மரம் என் கண்ணுல இருக்கு. ரெண்டு மரங்க..கெணத்துக்கு அந்தப் பக்கம் ஒன்னு. இந்தப் பக்கம் ஒன்னு...பிஞ்சோ காயோ பழுத்ததோ பழுக்காததோ தொவக்கத் தொவக்கக் கடிச்சித் திங்குற சொகம்........ஆகா!
மனுஷனைச் சும்மா இருக்க வுடமாட்டீங்களே நீங்கெல்லாம்? கவட்டை, கொடுக்காப்புளி, புளியம்பழம்( நல்லா ஒதப்பழமா
இருக்கணும்) ஹூம்...... அது ஒரு கனாக் காலம். அண்ணனோட கவட்டையைப் புடுங்கிவச்சுக்கறதுலே நான் பெரிய ஆளு.
எத்தனை சரளைக்கல்லை ஓட்டுலே அடிச்சு உடைச்சுட்டு அடி வாங்கியிருக்கேன்....
வாங்க துளசியக்கா! (அத்தை என்று தான் கூப்பிடனும்). ஊரெல்லாம் சுத்திட்டு வந்துட்டீங்களா. ஆளுக்காளு உங்கள பற்றி பதிவ போட்டு கலக்கிட்டாங்க :-). நீங்க இல்லாம தமிழ்மணமே டல்லடிச்சி போச்சி. என்னோட நட்சத்திர வாரத்துல இல்லாம போய்ட்டீங்களே.
இந்த பழைய பதிவை தேடி பிடித்து படித்ததுக்கு ரொம்ப நன்றி :-). நானெல்லாம் சின்ன பையன் (29 தானே ஆகுது).நானே இப்படி என்ஞாய் பண்ணிருக்கேன் என்றால், உங்களை பற்றி சொல்லவும் வேண்டுமா ;-). கொடுக்காப்புளி, புளியம்பழம் எல்லாம் வரிசையா வருது (காப்பி ரைட் என்னிடம் தான் இருக்கு :-)).
அன்புடன்,
சிவா
சிவா, சும்மா தூளா எழுதி இருக்கீங்க. ஒங்க மொழி ப்ரவாளம் ரொம்ப சரளமாயிருக்குது...கீப் இட் அப்.
ஹரிஹரன்! உங்க சைக்கிள் கதையை பார்த்தவுடன் என் சைக்கிள் கதையும் ஒத்து போனத பார்த்து ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி. உங்கள் பதிவில் தொடுப்பு கொடுத்ததற்கும் நன்றி.
அன்புடன்,
சிவா
Sivakumar Said (Brother! you wrongly posted this in Geetham blog :-))
சைக்கிள் கடையில் 'வால்' ட்யுப் மாட்டிய அனுபவம் காணோமே. அதை அமுக்கு அமுக்கு என்று அமுக்கி, நக இடுக்கில் வலி எடுத்த பின்னாலும் வால் ட்யுப் முழுவதும் உள்ளே செல்லாமல் பாடு படுத்தியிருக்குமே. சொல்லவே இல்லியே
அண்ணே! சைக்கிள் கேப்புல சைக்கிள் ட்யூப் பத்தி மறந்து போச்சி. நியாபக படுத்தியதறிகு நன்றி.
Post a Comment