Friday, September 23, 2005

பிந்துகோஷ் கட்சி ஆரம்பிக்கிறார்..

இப்போதெல்லாம் அந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார், இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார். இதுதான் பத்திரிகைகளில் செய்தி. அவரது கூட்டத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள் என்று செய்தி வருகிறது.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு 10, 15 வருடம் இருக்கும், நான் சிறுவனாக இருக்கும் போது. ஏதோ ஒரு தேர்தல் வந்தது. எங்க தாத்தா என்னிடம் கேட்கிறார் "ஏல, பிந்துகோஷ் வர்றான்னு சொன்னாங்கலால..எப்போல வர்றா?.". தாத்தா ஏதோ ஸ்ரீதேவி வரபோற மாதிரி காலைல இருந்தே கேட்டு கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு வண்டியில் சென்று கொண்டே அறிவிப்பு கொடுக்கிறார்கள். "இதோ ! இன்னும் சற்று நேரத்தில் உங்கள் முன், திரைப்பட நடிகை, நகைச்சுவை மின்னல், நடிகை பிந்துகோஷ் உங்கள் முன் தோன்றி வோட்டு கேட்பார்". ஊர் மொத்தமும் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பார்த்துகொண்டிருக்கும் (என்னையும் சேர்த்து தான்). பிந்துகோஷ் கொஞ்ச நேரத்தில் ஒரு ஜீப்பில், மக்களை பார்த்து கையை அசைத்து கொண்டே வந்தார். ஊர் மக்கள் முகத்தை பார்க்க வேண்டுமே! ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட மாதிரி.

ஓமகுச்சி நரசிம்மனை நெல்லை இரயில் நிலையத்தில் பாத்தாலும் 'மக்கா! நான் ஓமக்குச்சி நரசிம்மனை பார்த்தேன்டா" அப்படின்னு பீற்றி கொள்ளும் இந்த பொது மக்களை பற்றி ஒரு நடிகனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்!. எல்லாரும் திரையில் ஆடி, வாய்ப்பு இல்லாமல் ஓய்ந்து போன காலத்தில் தான், மக்கள் மீது பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. கூட்டம் சேர்க்க உங்கள் சாதி பற்றும் சேர்ந்து கொள்கிறது. திரையில் வாய் கிழிய நாட்டு பற்று பற்றியும், சாதி வெறியை எதிர்த்தும் 3 பக்க வசனம் பேசும் உங்களுக்கு, கூடும் கூட்டத்தில் பாதிக்கும் மேல், நான் மேலே சொன்ன கூட்டம் தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வாருங்கள்! மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் ஒரு பரபரப்பு வேணும்ல. கூட்டத்தில் ரசிகர்கள் கொந்தளிப்பு. நடிகரின் வேட்டி அவிழ்ப்பு. இப்படி எல்லாம்.

6 comments:

பரஞ்சோதி said...

சிவா சரியாக சொன்னீங்க. என்ன செய்வது.

பாருங்க, எங்க ஊருலே, வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாது டவுசர் மாட்டுக்காரனை எம்.பியாக்கி டெல்லிக்கே அனுப்பி வைத்தாங்க.

அவர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி எங்க ஊரில் சினிமா எடுப்பதாக, அதன் பலனோ என்னவோ அவரால் அத்தோடு படம் எடுக்கவே முடியவில்லை.

பரஞ்சோதி said...

நம்மை விட புகழ் பெற்றவர்களாக கருதுபவர்களைப் பற்றி சொல்வதில் ஒருவகையான இன்பம் கிடைக்க்த் தான் செய்கிறது.

சென்ற ஆண்டு கூட மயில்சாமி குவைத் வந்திருந்தார், நானும் என் நண்பரும் ஒரு கடை முன்னால் நின்று கொண்டிருந்தோம், அப்படியே பார்வையை நான் கொஞ்சம் வேறு பக்கம் பார்க்க, ஒரு தெரிஞ்ச மாதிரி முகம், உடனே என் நண்பரை பார்த்து, குவைத்தில் ஒரு மயில்சாமி மாதிரியே இருக்காரு என்றேன், அருகில் வந்தப்பின்பு மயில்சாமி தான். என்ன மயில்சாமி சவுக்கியமா என்று சொன்னேன், அவரோ திரு திரு என்று விழித்து, சவுக்கியம், சவுக்கியம் என்றார்.

என்ன தனியா நிக்கிறீங்க என்றேன், அவர் சொன்னார், "என் கூட வந்தவங்களை காணவில்லை", குவைத் தமிழ் குழுவின் ஆட்கள் கொஞ்ச முன்னாடி தான் நான் நின்ற கடைக்கு சென்றது எனக்கு தெரியும், ஆகையால் அவரை உள்ளே கொண்டு சென்று விட்டு வந்தேன். நானும் கூட இப்போ உங்க கிட்ட மயில்சாமி சந்திப்பை பெருமையாக சொல்லவில்லையா.

சிவா said...

அண்ணா நீங்க நம்ம ஊருங்களா?. காலேஜ் படிக்கும் போது 'டேய்! ராமராஜன எம்.பி ஆக்கினது நீங்க தானடான்னு' ஒரே நக்கல் போங்க. தலையில் துண்டு போட்டுகிட்டு கொஞ்ச நாள் சுற்றி கொண்டிருந்தேன். அ.தி.மு.க பேருல ஒரு கழுதைய விட்டா கூட ஜெயிக்கும். எல்லாம் அந்த இரட்டை இலை பண்ணும் வேலை. என்னத்த சொல்ல...

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

//அண்ணா நீங்க நம்ம ஊருங்களா?. காலேஜ் படிக்கும் போது 'டேய்! ராமராஜன எம்.பி ஆக்கினது நீங்க தானடான்னு' ஒரே நக்கல் போங்க. தலையில் துண்டு போட்டுகிட்டு கொஞ்ச நாள் சுற்றி கொண்டிருந்தேன். அ.தி.மு.க பேருல ஒரு கழுதைய விட்டா கூட ஜெயிக்கும். எல்லாம் அந்த இரட்டை இலை பண்ணும் வேலை. என்னத்த சொல்ல...
//

பரஞ்சோதி, சிவா அவர்களுக்கு ராமராஜன் அந்த தேர்தலில் வெற்றிபெற்றதற்கு திரைப்பட மாயை, இரட்டை இலை என காரணங்கள் அடுக்கினாலும் அந்த முக்கிய காரணம் உள்ளூர் அரசியல், தனுஷ்கோடி ஆதித்தன் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று கோடிக்கணக்கில் செலவு செய்தாரே அந்த பெரும்புள்ளி, செல்வின் நாடார் கொலைக்கும் வேட்பாளருக்கும் தொடர்பிருந்ததாக உண்மையா பொய்யா என அறியாமலேயே கடுமையான பேச்சு அந்த நேரத்திலே உங்கள் ஊரில் பரவியிருந்ததே நீங்கள் சொன்ன மற்ற காரணங்களை விட மிக முக்கிய காரணமாக இருந்தது ராமராஜன் வெற்றிபெற வேண்டுமென நினைத்ததைவிட தனுஷ்கோடி ஆதித்தன் தோல்வி அடைய வேண்டுமென்ற அந்த எண்ணம் ஓங்கியிருந்தது தான் முக்கிய காரணமென மிக நெருங்கிய அந்த ஊர் நண்பர்கள் கூறினர்...

வசந்தன்(Vasanthan) said...

//ஒரு வயது வந்த பின் தான் தெரிந்தது நடிகைகளும் நம்மை போல் ஒரு மனிதன் என்று.//

ChithaMurali,
ஒரு வயசுக்கு முன்பேயே தவக்களையைப் பார்த்து....
ஒரு வயசிலயே ஞானம் பெற்று....
பயங்கர ஆளப்பா நீர்.