Monday, June 05, 2006

பத்து பைசா

அம்மா அவசரமாக கூப்பிட்டார்கள். 'டேய்! செம்மறிகுளத்தில் இருந்து அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. சீக்கிரம் வாடா'. மாமா வந்திருக்காங்களா! சந்தோசத்தில் விளையாண்டு கொண்டிருந்த பட்டத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். 'போயி மாமாகிட்ட சொகமாருக்கீங்களான்னு விசாரி' அம்மா. 'வாடா ராசா. வெளாட போயிருந்தியா' மாமா நான் நலம் விசாரிப்பதற்கு முன்னமே என்னை பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருந்தார். 'கணேச கூட்டி வரலையா மாமா' 'அவனுக்கு பரிச்சடா. அதான் ஊருலயே விட்டுட்டு வந்துட்டேன். அடுத்த தடவ கூட்டி வர்றேன் என்ன'.

அம்மா உள்ளே கூப்பிட்டு கைல ஒரு ரூபாயை கொடுத்து 'கனி ஆச்சி வீட்டுல போய் ரெண்டு கலர் வாங்கிட்டுவா' என்று அனுப்பினார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு மாமாவும் அத்தையும் கிளம்ப தயாரானார்கள். 'சரி அக்கா. நான் போய்ட்டு வர்றேன்'. 'அடுத்த தடவ வரும் போது பிள்ளையையும் கூட்டிட்டு வாடா' அம்மாவுக்கும் கணேஷ் வராததில் கொஞ்சம் வருத்தம் தான். மாமா கிளம்பும் போது ஒரு இரண்டு ரூபாவை என் கையில் தினித்து விட்டு கிளம்பினார். இது வழக்கம் போல மாமா வரும் போது எனக்கு கிடைக்கும் ஜாக்பாட் தான்.

வழக்கம் போலவே மாமா போனதும் கையில் இருந்த இரண்டு ரூபாய் அம்மா கைக்கு போய் விட்டது.அதிலிருந்து கடைசில எனக்கு கிடைத்தது பத்து பைசா தான்.

இப்போ கைல பத்து பைசா.

என்ன பண்ணலாம்? பல யோசனை மனசுக்குள் ஓடியது.

பேசாம தடியர் கடைல ரெண்டு கோலிக்கா வாங்கி நேத்து எசக்கியிடம் தோத்த கோலிக்காவ திருப்பி கொடுத்திடலாமா? "கோலிக்காவ திருப்பி கொடுல.திருப்பி கொடுல " அப்படின்னு பாக்குற நேரம் எல்லாம் கேக்கறானே. காலைல கூட வெளாட்டுல சேத்துக்காம வெரட்டி விட்டுட்டானே. நேத்து ஜெயிச்சிருக்க வேண்டியது. சாண் போட்டா, வெரலு கோலிக்காவுல ஒட்டலன்னு நூல விட்டு காட்டி கோலிக்காவ எல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டுட்டானே.ம்ம்ம்.

அவங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு கை நிறைய பல்லி முட்டாய வாங்கி வச்சிக்கிட்டு நேத்து முழுசும் பீத்திக்கிட்டு அலைஞ்சானே பீட்டரு. கொஞ்சம் குடுறான்னு கேட்டதுக்கு வீட்டுக்குள்ள ஓடினவன் வெளியே வரவே இல்லையே. இன்னிக்கு நாம வாங்கி, எங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு சொல்லலாமா..

நேத்து கடைல புதுசா பிலிம் எல்லாம் வந்திருக்குன்னு குமாரு சொன்னானே. அவன் வாங்குன பிலிம்ல கூட ரஜினி படம் எல்லாம் இருந்திச்சே. பத்து பைசாவுக்கு பேசாம பிலிம் வாங்கி மத்யானம் படம் போடலாமா.

இப்படி பல யோசனைகளுடன் சாயங்காலம் தடியர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கடையில் கூட்டமே இல்லை. தடியர் சும்மா தான் உட்காந்து கொண்டிருந்தார். 'என்னல பொழுதடைய கடைக்கு வந்திருக்க' விசாரித்தார்.

'ஆமாண்ணே! எங்க மாமா வந்திருந்தாங்க. கைல காசு கொடுத்தாங்க. அதான் ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்' தடியருக்கு பதில் கூறிக்கொண்டே அவரது சின்ன பொட்டிக்கடையை மெதுவாக நோட்டம் விட்டேன். சட்டென்று ஒரு இடத்தில் கண் அப்படியே நின்று விட்டது. நீளமாக ஒரு பிலிம் சுருள் ஒரு அட்டையில் ஒட்டி வைத்திருந்தது. போனவாரம் பீட்டர் பக்கத்து ஊருக்கு படம் பார்க்க போய் நீளமா ஒரு பிலிம் சுருள் கொண்டு வந்தானே, அதே மாதிரி கடையில். 'இது எப்படிடா உனக்கு கிடைச்சது' என்று பீட்டரிடம் ஆச்சரியமாக கேட்ட போது, படம் அத்து போச்சுன்னு வெட்டி போட்டாங்க, எடுத்துட்டு வந்தேன்' என்றான். அதை வைத்து எங்கள் எல்லோரையும் ஒரு வாரமா அவன் வீட்டிலேயே காத்து கிடக்க வைத்தது நினைவுக்கு வந்து போனது.

'இது எவ்வளவுண்ணே' பத்து பைசாவாக இருக்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டே தடியரிடம் கேட்டேன். 'அது காசுக்கு கெடையாதுல. கீழ இருக்குது பாத்தியா கட்டம் கட்டமா சீட்டு. பத்து பைசா கொடுத்து ஒரு சீட்டு கிழிச்சேன்னா, உனக்கு பிலிம் சுருள் விழுந்தா அது உனக்கு தான். ஒரு நம்பரும் வரலண்ணா ஒன்னும் கெடையாது'

பிலிம் சுருளை அவ்வளவு எளிதாக விட மனம் வரவில்லை. 'கிழிச்சி பாருல. ஒன்னோட ராசியையும் தான் பாப்போமே' கண்டிப்பாக கிழிப்பேன் என்று தடியருக்கு என் மூஞ்சை பார்த்தே முடிவுக்கு வந்து விட்டார். கையில் இருந்த காசை தடியர் கைல கொடுத்துவிட்டு ஒரு சீட்டை கிழித்து பார்த்தேன். ஏதோ படம் தான் போட்டிருந்தது. நம்பர் எதுவும் இல்லை. 'என்னண்ணே இது. நம்பர் மாதிரி தெரியலையே' அவரிடமே சீட்டை கொடுத்தேன். 'ஏல! ஒனக்கு ஜோக்கர் வந்திருக்கு. பரிசு ஒன்னும் விழல'. தடியர் எனக்கு எதுவும் கொடுக்காமலேயே எளிதாக என் பத்து பைசாவை அவர் கல்லாப்பெட்டியில் சேர்த்துக் கொண்டார். கையில் இருந்த பத்து பைசாவும் பறிபோனதில் நொந்த படி வீட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டுக்கு போனதும் அம்மாவிடம் கேட்டேன் 'மாமா மறுபடி எப்போம்மா வருவாங்க'.

14 comments:

தருமி said...

better luck next time, siva

நெல்லைக் கிறுக்கன் said...

வே நீரு தடியரு கடையில பிரைசு கிழிச்ச மாரியே நானும் எங்க ஊரு குத்தவச்சார் கடையில கிழிச்சிருக்கேன். லென்சு, பிளாஸ்டிக் மோதிரம், பிலிம்னு எதாவது விழும். ஆனா நிறய தடவ உம்ம மாரி நானும் ஏமாந்து போயிருக்கேன். சில சமயம் பைசா தான் பிரைசா கெடய்க்கும். 10 பைசா கெடச்சா அத வச்சு அப்பளப்பூ, தேன் முட்டாய், ஆரஞ்சு வில்லனு எதாவது வாங்கித் தின்போம்.

கைப்புள்ள said...

வழக்கம் போல கிராமத்து மணம் கமழுது.

//'இது எப்படிடா உனக்கு கிடைச்சது' என்று பீட்டரிடம் ஆச்சரியமாக கேட்ட போது, படம் அத்து போச்சுன்னு வெட்டி போட்டாங்க, எடுத்துட்டு வந்தேன்' என்றான். அதை வைத்து எங்கள் எல்லோரையும் ஒரு வாரமா அவன் வீட்டிலேயே காத்து கிடக்க வைத்தது நினைவுக்கு வந்து போனது.//

சின்னப் பசங்களுக்கே உரிய ஆசை...பக்கத்து வீட்டு பையன் வச்சிருக்க மாதிரி வேணுமின்னு. நல்லா நினைவு படுத்திருக்கீங்க
:)-

குமரன் (Kumaran) said...

பத்துபைசா பதிவெல்லாம் போடறீங்க... ஹும் நடத்துங்க நடத்துங்க.

எங்க வீட்டு வாசல்லயும் இப்படித் தான் ஒருத்தர் வச்சுக்கிட்டு இருப்பார். எத்தனை தடவை பத்து பைசாவை தொலைச்சிருக்கேன் அங்கே. இது வரைக்கும் ஒன்னுமே கிடைச்சதில்லை. வளந்தப்பறம் அந்த சீட்டுல நம்பரே இருக்காதுன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சேன். :-) எல்லாம் சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். :-)

//பேசாம தடியர் கடைல ரெண்டு கோலிக்கா வாங்கி நேத்து எசக்கியிடம் தோத்த கோலிக்காவ திருப்பி கொடுத்திடலாமா? "கோலிக்காவ திருப்பி கொடுல.திருப்பி கொடுல " அப்படின்னு பாக்குற நேரம் எல்லாம் கேக்கறானே. காலைல கூட வெளாட்டுல சேத்துக்காம வெரட்டி விட்டுட்டானே. நேத்து ஜெயிச்சிருக்க வேண்டியது. சாண் போட்டா, வெரலு கோலிக்காவுல ஒட்டலன்னு நூல விட்டு காட்டி கோலிக்காவ எல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டுட்டானே.ம்ம்ம்.

அவங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு கை நிறைய பல்லி முட்டாய வாங்கி வச்சிக்கிட்டு நேத்து முழுசும் பீத்திக்கிட்டு அலைஞ்சானே பீட்டரு. கொஞ்சம் குடுறான்னு கேட்டதுக்கு வீட்டுக்குள்ள ஓடினவன் வெளியே வரவே இல்லையே. இன்னிக்கு நாம வாங்கி, எங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு சொல்லலாமா..

நேத்து கடைல புதுசா பிலிம் எல்லாம் வந்திருக்குன்னு குமாரு சொன்னானே. அவன் வாங்குன பிலிம்ல கூட ரஜினி படம் எல்லாம் இருந்திச்சே. பத்து பைசாவுக்கு பேசாம பிலிம் வாங்கி மத்யானம் படம் போடலாமா.
//

நல்லா எழுதுறீங்கப்பூ....

சிவா said...

தருமி சார்!
//better luck next time, siva // நான் எடுத்த சீட்டை சொல்றீங்களா? இல்லை பதிவ பற்றி சொல்றீங்களா
:-)

சிவா said...

வாங்க நெல்லைகிறுக்கன் :-).
எங்க ஊரு தடியர் மாரியே உங்க ஊரு குத்தவச்சார் கடையா..பேர் நல்லா இருக்கே :-)).

அப்பளப்பூ, தேன் முட்டாய், ஆரஞ்சு முட்டாயெல்லாம் நியாபக படுத்திட்டீங்க. இப்போ இதெல்லாம் கெடைக்குதாப்பு?

சிவா said...

வாங்க மோகன்ராஜ்,

//வழக்கம் போல கிராமத்து மணம் கமழுது.// நன்றிவே :-)). உமக்கு புடிச்சிருந்தா சந்தோசம் தான்வே :-)

//சின்னப் பசங்களுக்கே உரிய ஆசை...பக்கத்து வீட்டு பையன் வச்சிருக்க மாதிரி வேணுமின்னு. நல்லா நினைவு படுத்திருக்கீங்க
// பழைய நினைவுகளில் முங்கி எழுந்து வந்தோம்னா இப்படி நிறைய சுகமான நினைவுகள் கிடைக்கும். இல்லையா :-)

சிவா said...

குமரன்!

//பத்துபைசா பதிவெல்லாம் போடறீங்க// :-)) பதிவு பைசா பெறும் பதிவாக தெரிகிறதா..இல்லை பைசா பெறாத பதிவாக தெரிகிறதா :-)

// வரைக்கும் ஒன்னுமே கிடைச்சதில்லை. வளந்தப்பறம் அந்த சீட்டுல நம்பரே இருக்காதுன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சேன். :-) எல்லாம் சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். :-)// ஹா ஹா ஹா..

//நல்லா எழுதுறீங்கப்பூ// நன்றி குமரன் :-)

நெல்லைக் கிறுக்கன் said...

நான் போன தடவ ஊருக்கு போயிருந்த போது தேன் முட்டாய் கிடைக்குமான்னு தேடி அலைஞ்சேன். காலு வலிச்சது தான் மிச்சம். அப்பளப்பூ, கடலமிட்டாயெல்லாம் இப்பவும் கெடைக்குதுங்கதுல கொஞ்சம் சந்தோசப் பட்டு கிட்டேன். சூட முட்டாய், கல்கோனா இதெல்லாம் நம்ம ஊருக்காரங்க மறந்து ரொம்ப நாளாச்சு.

பரஞ்சோதி said...

சிவா,
எனக்கும் எங்க வீட்டிக்கு சொந்தக்காரங்க வராங்கன்னா ஒரே கொண்டாட்டம், எப்போ தெரியும் வந்த அன்னைக்கும், திரும்பி போகும் அன்னைக்கும் தான்.

வந்த அன்னைக்கு முட்டாய்பெட்டியில் வரும் மிச்சர், ஏணி முட்டாயும், போற அன்னைக்கு கிடைக்கும் பணமும் தான்.

உங்களுக்காவது 10 பைசா கிடைச்சது எனக்கு அதுவும் கிடைக்காது, அம்மா அப்படியே உண்டியலில் போடச் சொல்லிடுவாங்க, தீவாளிக்கு புதுத்துணி எடுக்கனுமுல்ல.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணிக்கு போனால் அங்கே 3 அத்தை, 2 அக்கா, பக்கத்து வீடு என்று நிறைய சொந்தம், எப்படியும் 50 ரூபாய் வரை தேறும் :), மொதல்ல வேண்டாமுன்னு சொல்லிட்டு, அப்புறம் வாங்கிடுவேன்.

சிவா said...

பரஞ்சோதி!
//வந்த அன்னைக்கு முட்டாய்பெட்டியில் வரும் மிச்சர், ஏணி முட்டாயும், போற அன்னைக்கு கிடைக்கும் பணமும் தான்.// அஹா...முட்டாய்பெட்டில வர்ற ஏணி முட்டாய எல்லாம் நியாபகப்படுத்தறீங்களே :-))

//உங்களுக்காவது 10 பைசா கிடைச்சது எனக்கு அதுவும் கிடைக்காது, அம்மா அப்படியே உண்டியலில் போடச் சொல்லிடுவாங்க, தீவாளிக்கு புதுத்துணி எடுக்கனுமுல்ல.// உண்டியல் சேர்ப்பதும் ஒரு சுக அனுபவம் தான். தீபாவளி வரை காத்திருந்து அதை உடைத்து காச எண்ணி...என்ன ஒரு சந்தோசம்..

//அங்கே 3 அத்தை, 2 அக்கா, பக்கத்து வீடு என்று நிறைய சொந்தம், எப்படியும் 50 ரூபாய் வரை தேறும் :), மொதல்ல வேண்டாமுன்னு சொல்லிட்டு, அப்புறம் வாங்கிடுவேன். // செம கலெக்க்ஷன் தான் :-))

சிவா said...

நெல்லை கிருக்கன். ஊர் மிட்டாயெல்லாம் பட்டியல் போட்டு சொல்லிட்டீங்க. தேன்மிட்டாய் எல்லாம் இப்போ இல்லையா..அடடா...//சூட முட்டாய், கல்கோனா இதெல்லாம் நம்ம ஊருக்காரங்க மறந்து ரொம்ப நாளாச்சு.// இப்போ என்ன...காட்பரீஸ் சாக்லெட் தான் சாப்பிடறாங்களா :-))

சிங். செயகுமார். said...

அண்ணே !பத்து பைசா ..........
நிகழ்வுகள் நல்லா இருந்திச்சி
மருபடியும் வருகின்றேன்................

Anonymous said...

Ungal sontha anubavama :)