Friday, May 12, 2006

சாமி வருது...சாமி வருது

ஊர்சனம் மொத்தமும் அம்மன் கோவில் வேப்ப மரத்தடியில் கூடி இருந்தது. 'ஏல! நம்ம முத்துசாமி தாத்தா வரல பாரு. கூட்டி வாங்கல' சின்ன பசங்களை விரட்டிக்கொண்டிருந்தார் பண்ணை.

எல்லோரும் வந்தவுடன் பண்ணை ஆரம்பித்தார். 'சித்திரை வரப்போவுது. சுடலைக்கு கொடை நடத்தணும். வரி போடுறதுக்கு தான் எல்லாரையும் வரச் சொன்னேன்'.

'ரெண்டு வருசமா சாமி வரவே இல்ல. என்ன குத்தமோ தெரியல. அதான் இந்த தடவ கொடைய சிறப்பா செஞ்சிப்புடணும். என்னடே சொல்றீங்க. வரிப்பணம் கூட கொஞ்சம் ஆனா கூட பரவால்ல' முத்துச்சாமி தாத்தா கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்.

கொடை வரி 50 ரூபாய் என்று முடிவு செய்து, கொடைக்கான நாளும் குறித்தாகி விட்டது. "50 ரூபாய்ல கரகாட்டம்லா வருமாடே. பாத்து வரிய போடுங்கப்பா' கரகாட்ட ரசிகர் மன்ற தலைவர் துரை மாமா லேசாக சத்தம் கொடுத்துப் பார்த்தார். 'சும்மா கெடடே! போன தடவையே அவ ஆடுன ஆட்டத்துல வீடு ரெண்டு பட்டு போச்சு. வீட்ல கேட்ட திட்டு போதாதா. இந்த தடவை காசு இருந்தா திரை கட்டி ஒரு படம் போட வேண்டியது தான். கரகாட்டம் எல்லாம் இந்த தடவ கெடையாதுடே'.

'என்ன அதே கருப்பு-வெள்ள படம் தான. கொஞ்சம் கலரா போடுங்கடே'

'50 ரூவா வரில எங்கடே கலருக்கு போறது. ஆளுக்கு ஒரு கலர் கண்ணாடி போட்டுட்டு பாக்க வேண்டியது தான்'

ஊர் பண்டாரத்திடம் கொடைக்கு வேண்டிய பொருட்கள், விவரங்கள் கேட்டுக் குறித்து கொண்டார் பண்ணை. கூட்டம் கலைந்தது.

---

இப்படித் தாங்க ஆரம்பிக்கும் எங்க ஊரு கோவில் கொடை.

---

வியாழன் மதியம் உலகத்துக்கே கேக்கற மாதிரி குழாய்ல எல்.ஆர்.ஈஸ்வரி 'மாரியம்மா..எங்கள் மாரியம்மா' பாட ஆரம்பிக்கும் போது 'லே! செட் வந்துட்டுல' அப்படின்னு நாங்க எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிற கோலிக்காவ அப்படியே போட்டுட்டு கோயிலுக்கு ஓடுவோம். வெளியூர்ல செட்டில் ஆகி கொடைக்கு மட்டும் வெள்ளையும் சுள்ளையுமா வரும் ஒரு கூட்டம் ஒன்னொன்னா மெதுவா வர ஆரம்பிக்கும். அவிங்க அள்ளிட்டு வர்ற ரெக்சோனா சோப்பையும் லக்ஸ் சோப்பையும் சொந்த காரனுவலுக்கு பங்கு வைக்கவே ராத்திரி ஆயிரும். அவிங்க ஆச்சி ஒரு சோப்ப எடுத்து மணிக்கணக்கா மணத்துக்கிட்டே 'யய்யா! ராசா. மெட்ராஸுல இந்த சோப்பு போட்டு தான் குளிக்கறியா. நல்லா வாசமா இருக்கு' (போ! ஆச்சி! எல்லாம் ஊருக்கு வரும் போது போடுற சோப்பு..சே! படம் தான். அங்கே ஊரே சேர்ந்து போட்டாலும் வருசம் புல்லா கல்லு மாதிரி உழைக்கும் லைபாய் தான்).

---

'ஏ! வில்லுப்பாட்டு ஆரம்பிச்சிட்டாவ. கெளம்புங்கடே' ஒரு பாய தூக்கிக்கிட்டு எல்லாரும் கெளம்ப ஆரம்பிப்பாங்க. மாயாண்டி கதையோ, அம்மன் கதையோ போய்கிட்டு இருக்கும். 'ஏண்டே! போன தடவையும் இவள தான கூட்டிட்டு வந்தீங்க. வேற ஆளே கெடைக்கலையா' நம்ம ஊரில் குசும்பு பண்ண நம்ம குரு மாமா. 'அத்தக்கிட்ட தான் கேக்கணும் மாமா. கேட்டுச்சொல்லவா' அப்புறம் குரு மாமா சத்தமே இருக்காது. அப்படியே சாமிக்கு அலங்காரம், சாம கொடைக்கு எல்லாம் போய்கொண்டிருக்கும்.

--

ராத்திரி பண்ணிரண்டு மணிக்கு சரியா சாம கொடை ஆரம்பிக்கும். ம்ம்..ரெண்டு வருசமா சாமி ஆடல. இந்த தடவையாவது சாமி வரணும்.. சாமி கும்பிட்டுக்கிட்டே இப்படி எல்லோரும் கவலையா யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது வேடிக்கை பாக்க வந்த அசலூரு காரர் ஒருத்தர் மெதுவா ஆட ஆரம்பித்தார். 'லே! அந்நா பாருங்கல. அசலூரு காரன் ஆடறான். புடிச்சி அமுக்குங்கல' பண்ணைக்கிட்ட இருந்து கட்டளை பறந்து வந்தது. பசங்க எல்லோரும் ஓடிப்போய் அவரை புடிச்சி அமுக்க ஆரம்பிச்சாங்க. சாமி ரொம்பவே வேகாமா, வெறித்தனமா ஆட ஆரம்பிக்க, 'அட வெளங்கா மட்டைங்களா. புடிச்சி அமுக்கச் சொன்னா. நீங்க அவன் கூட சேர்ந்து சாமி ஆடிக்கிட்டு இருக்கீங்க. நல்லா அமுக்குங்கல'. ஒரு வழியா வந்த சாமிய வெரட்டி உட்டுட்டு தான் மறு சோலி.

இதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு தாங்க. எங்க ஊருல சாமி ஆடுறவங்க தான் அடுத்த கொடை வரை வாரா வரம் கோயிலுக்கு பூஜை பண்ணணும். அசலூர் காரன் வந்து தவறாம பூச பண்ணுவானா?..அதுவும் அசலூர் காரன் பூசை போடுறதா..இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறதால தான் இந்த ஏற்பாடு.

அப்புறம் மேளம் உச்சக்கட்டத்தில் அடிக்க, மெதுவாக எங்க ஊரு குட்டையரு ஆட ஆரம்பித்தார். 'லே! சாமி வந்துட்டுல' எல்லோர் முகத்திலும் தான் என்ன ஒரு சந்தோசம். மட மடவென்று சுடலை மாடனின் அங்கி மற்றும் தலைப்பாகை எல்லாத்தையும் ஒருவர் குட்டையருக்கு மாட்டி விடுவார். 'பந்தம்! பந்தம் ' ஆடிக்கிட்டே சாமி கேட்க கதகதன்னு எரியற தீப்பந்தம் ஒன்று சாமி கையில் கொடுக்கப்படும். ஒரு கையில் தீப்பந்தமும், மறு கையில் சூலாயுதமும் பிடித்துக்கொண்டு வெறியாக ஆடும் குட்டையரை பார்த்து நாங்க சின்ன பசங்க எல்லாம் ஒரு 10 அடி தள்ளி நின்னுக்குவோம்.

அடுத்த கட்டமா சாமி வாக்குச்சொல்ல ஆரம்பிக்கும். கையில் திருநீரோடு முன்னால் நிற்கும் ஒவ்வொருத்தருக்கும் திருநீறு கொடுத்து நல்வாக்கு சொல்ல ஆரம்பிக்கும். வாக்கு எல்லோருக்கும் உண்டு. கல்யாணம் ஆகாத பிரபாகர் அண்ணணுக்கு ஒரு தடவை சாமி வாக்குச் சொன்னது. அண்ணன் பௌயமா சாமி முன்னாடி போய் நிக்க, சாமி 'உனக்கு சம்சாரம்..சம்சாரம்' என்று தெக்க கைய காட்ட...

'ஏல! சாமி உனக்கு பொண்ணு தெக்க தான் இருக்குன்னு சொல்லுதுல'

'தெக்க என்ன இருக்கு. சுடுகாடு தாம்ல இருக்கு' நம்ம குசும்பு குரு மாமா.

'போ மாமா! அத்த ஊரு பூச்சிக்காடும் தெக்க தான இருக்கு'

'போல! பூச்சிக்காட்டுல பொண்ணு எடுக்கறதுக்கு, பேசாம நீ சுடுகாட்டுக்கே போலாம்டே'

--- இப்படி சாமி வாக்கு சொல்லும் போது ஏகப்பட்ட சுவாரஸ்யம் இருக்கும்.

அப்புறம் சாமி ஊர்வலம் கிளம்பும். ஒரு கொட்டுக்காரனை கூட்டிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் பின்னாடியே போவோம். ஒவ்வொரு தெரு தெருவா சாமி வலம் போய்ட்டு, மொத்த ஊரும் சுற்றியவுடன் கோவிலுக்கு திரும்பும்.

------------------

அடுத்த நாள் காலைல ராத்திரி வெட்டின கிடாவ வரிப் பங்கு போட்டு, 'ஏல! எனக்கு எலும்பா அள்ளி போட்டுட்டு அவனுக்கு மட்டும் கறியா அள்ளிப் போட்டிருக்கீங்கல. எவம்ல பங்கு வைக்கிறது. எடுல அந்த அருவாள?' அப்படின்னு அன்பா கொடைய முடிக்கலைனா அன்னைக்கு எவனுக்கும் தூக்கம் வராது. மதியம் நல்லா கறிச்சோறு தின்னுப்புட்டு அன்னைக்கு ராத்திரி 'ஆயிரத்தில் ஒருவன்' திரையில் பார்க்க ரெடியாகிக் கிட்டு இருப்போம்.

29 comments:

பரஞ்சோதி said...

என்ன சிவா, இப்படி அட்டகாசம் பண்ணிபுட்டிய.

நம்ம ஊரு மாயாண்டு சுவாமி கோவில் கொடை நினைப்புக்கு வந்துட்டுது.

அப்புறம் உம்மை பூச்சிக்காடு ஆளுங்க அருவாளை தூக்கிட்டு தேடிக்கிட்டு இருக்காக, ஊருக்கு போகும் போது பார்த்து போவே :).


ஒங்க ஊருல கோழி சுடுவது இல்லையா? நம்ம ஊருல உண்டு, கிழக்கட்டைங்க காலு, தொடைக்கறி எல்லாம் துன்னுபுட்டு, நம்மக்கு எலும்பு தான் கிடைக்கும், வயித்தால போக என்னு சாபம் கொடுத்துபுட்டு தேங்காய் பழத்தோடு பம்மிடுவோம்.

அடுத்த நா, காலையிலேயே கறிச்சோறு பனவோலை மடிச்சு (பெயர் என்னவே, மறந்து போச்சுது), அதில் வாங்கி சாப்பிட்டுபுட்டு, நம்ம வீட்டு பங்கை வாங்கி வருகிற சொகம் இருக்குதே, அதை அனுபவசிச்சு பல வருசம் ஆகுது, அதை மீண்டும் அனுபவிக்க தான் இந்த வருசம் போக இருக்கிறேன்.
நீரும் வாரும்.

தருமி said...

வருஷா வருஷம் எங்க ஊரு அம்மங்கொடைக்கு நடக்கிற கூத்தை ஞாபகப்படுத்திச்சு உங்க பதிவு.

அதோட, எங்க ஊர்ல ஒரு குடும்பத்துக்கு 'கள்ளப் பேயாடிட்டம்' (பேயாடிட்டம் = பேயாடி கூட்டம்)அப்டின்னு பேரு. அந்தக் குடும்பத்து ஆளு ஒருத்தரு ஒரு காலத்துல பக்கத்து ஊருக்குப் போனவரு கிடைக்கப்போற சாப்பாட்டுக்காக, கள்ளப் பேய் (சாமி) வந்தது மாதிரி ஆடிட்டாராம்.அதனால அவங்க குடும்பத்துக்கே அந்தப் பெயராம்!

சிவா said...

வாங்க பரஞ்சோதி! ஒரு மாசம் கழிச்சி பதிவு போட்டாலும் நம்ம ஊரு கதன்னா கரெக்டா ஆஜராயிடறீங்க..நன்றி.

பூச்சிக்காடா...அப்படி ஒரு ஊரு இருக்கா (ஹி..ஹி..ஹி..இப்படி சொல்லி தான் தப்பிச்சிக்கணும்). நம்ம ஊருல அடுத்த ஊர இப்படி நக்கல் விடுறது சகஜம் தானே :-)). விட்டா நீங்களே பூச்சிக்காட்டுக்கு ஒரு தந்தி அடிச்சி அருவாளோட ரெடியா இருப்பீங்க போல :-)) பாத்து தான் போவணும்.

எங்க ஊருலயும் கோழி உண்டு..அது ராத்திரில எஸ்கேப் ஆகி, அப்புறம் வீடு வீடா நடு ராத்திரில தேடுன கதை எல்லாம் உண்டு.

பனவோலை மடிச்சா...பட்டைய சொல்றீயலா..ஆமாம்...கொடை முடிஞ்சி அடுத்த நாள் காலைல பட்டைல சோறு கிடைக்கும். காலைல ஒரு கூடைய தூக்கிக்கிட்டு நம்ம பங்கு, ஊர்ல இருக்கிற சித்தப்பா பங்கு எல்லாம் மொத்தமா வாங்கி வருகிற சுகம் தனி தான். இந்த வருசம் போறீங்களா..எப்போ..நான் அடுத்த வருசம் தான்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சிவா, நல்லா எழுதியிருக்கீங்க. கண் முன்னாலே காட்சிகள் விரிகின்றன.

சிங். செயகுமார். said...

இந்த மாதிரி சாமி சடங்குகளாலதான் நமக்கு சாமி பக்தியே இல்லாம போயிட்டு. சாமி வருவதெல்லாம் சும்மான்னு சொல்லி வாங்கி கட்டிகிட்டத்தெல்லாம் ... இபாவெல்லாம ரொம்ப குறைஞ்சி .............
உங்கள் நினைவுகள் நல்லா இருந்திச்சி

சிவா said...

தருமி சார்! எங்க காலத்திலயே இப்படி கூத்து நடந்திருக்கு என்றால், நீங்க எல்லாம் ரொம்ப கூத்தடிச்சிருப்பீங்க :-))).

சாப்பாட்டுக்காக கள்ளச்சாமி ஆடினாறா...ஹா ஹா..நல்லா இருக்குதே..பக்கத்து ஊருல போய் ஆடினாரா..நாங்கன்னா புடிச்சி அமுக்கி இருப்போமே :-)))

சிவா said...

செல்வராஜ்! உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க. சந்தோசமா இருக்கு.

அன்புடன்,
சிவா

சிவா said...

வாங்க தம்பி (சிங்கு)! சாமி சடங்கு எல்லாம் நான் குறை சொல்ல மாட்டேன். அவன் அவன் வழக்கம் அது. எனக்கு தெரிந்து யாரும் கள்ளச்சாமி ஆட வேண்டிய அவசியம் வந்தது இல்லை. இவ்வளவு கூத்துக்கு இடையில் ஒரு குடும்பம் கண்ணீரோடு நின்று கொண்டிருக்கும். அது சாமி ஆடுபவரது குடும்பம் தான். நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.

அந்த பிரச்சினையை பற்றி பேச வேண்டாம் என்று தான் கவனமாக கொஞ்சம் ஜாலியா எழுதினேன். இதை விவாத பதிவாக்க வேண்டாமே :-)

G.Ragavan said...

ஆகா ஊர்க்கொடைய நேருல பாத்தாப்புலயே இருக்கே. எங்கூரு அம்மங் கோயில்லயும் ஐயனாரு கோயில்லயும் இப்பிடித்தான இருக்கும்.

தலக்கட்டுக்குப் பணம் தெரட்டி ஒறமுறையெல்லாம் கூட்டி...அடடா!

நாங்கள்ளாம் வெளியூர்லருந்து வர்ர வெள்ள சொள்ள கூட்டங்க. அதுனால வேணுங்குற பேஸ்ட்டு, பிரஷ், சோப்பு எல்லாம் எடுத்துக்கிட்டு போவோம்.

நல்லா நெனவிருக்கு. ஒரு வாட்டி போய்ச் சேரும் போது இருட்டு வேளை. ராகவான்னு அக்கா வந்து கூப்புட்டு சாப்புடுப்பான்னு சட்டீல சொறும் பருப்பும் போட்டுப் பெசஞ்சி வெண்டக்காயோட குடுத்தது. அதுவும் வண்டில உக்காந்துகிட்டு.

அதே போல ஆலி பொம்மைக வரும். பெரிய பொம்மைக. உள்ள ஆளுக சொமந்துக்கிட்டு வருவாங்க. அப்புறம் வீட்டுல இருந்து பொம்ம செஞ்சி எடுத்துக்கிட்டு போவாங்க...

கோழியறுப்பு, கெடாவெட்டுன்னு பிரமாதப்படும். ஒரு வாட்டி இப்பிடித்தான் சமையல் பொறுப்பு ஒரு தூரத்துச் சித்தப்பா...அவரு ஏ ராகவா...வான்னு அடுப்பங்கரைக்கே கூட்டீட்டுப் போயி பெரிய கரண்டீல அரிச்சி அரிச்சி கறியா சாப்பிடக் குடுத்தாரு.

கும்பியடிப்பாங்க. கொலவ போடுவாங்க. கோலாட்டம் ஆடுவாங்க. மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. வீடுவீடாப் போவாங்க. ஒரே கொண்டாட்டந்தான். இத்தனையும் இப்ப இல்ல. கார்ல காலைல கொடைக்குப் போயிட்டு சாந்தரம் திரும்புறோம். கறிச்சோறு கூட மத்தவங்க சாப்பிடட்டும்னு வந்துர்ரோம்.

விட்டுது சிகப்பு said...

கரிசகாட்டு சிவா அவர்களே. வழக்கம் போல ஒரு நல்ல கட்டுரையாத் தான் எழுதியிருக்கீக. நல்லா இருங்க. பெளவியமான்னா என்னாங்க? புரியலிங்களே?

சிவா said...

வாங்க ராகவன்!
//எங்கூரு அம்மங் கோயில்லயும் ஐயனாரு கோயில்லயும் இப்பிடித்தான இருக்கும்.//

உங்க ஊருல ஐயனாரா..எங்க ஊருல சுடலை.

//நாங்கள்ளாம் வெளியூர்லருந்து வர்ர வெள்ள சொள்ள கூட்டங்க.// அடடா! நானெல்லாம் சம்பாதிக்க ஆரம்பித்த போது எங்க ஊரு உருப்படாம போச்சு. எல்லாரும் ரொம்ப முன்னேறி டீசண்டாகிட்டாங்க :-)))

//அதே போல ஆலி பொம்மைக வரும்// ஆலி பொம்மையா..கேள்வி பட்டது இல்லையே..அப்படின்னா என்னா?

//ஏ ராகவா...வான்னு அடுப்பங்கரைக்கே கூட்டீட்டுப் போயி பெரிய கரண்டீல அரிச்சி அரிச்சி கறியா சாப்பிடக் குடுத்தாரு.// நாலு நாளைக்கு சேர்த்து இரை எடுத்தீங்களா.. :-)). கல்யாண விட்டுல நம்மக் கிட்ட நல்லா ஒரு வாளி கெடைச்சாலும் இப்படி தான் :-)

//இத்தனையும் இப்ப இல்ல. கார்ல காலைல கொடைக்குப் போயிட்டு சாந்தரம் திரும்புறோம். கறிச்சோறு கூட மத்தவங்க சாப்பிடட்டும்னு வந்துர்ரோம்.// ஐயோ..ஏன் ராகவன். எங்க ஊருல கூட இப்போ முன் அளவுக்கு இல்லை. பொழைப்பு தேடி முக்காவாசி இளசுங்க வெளியூர்ல. உள்ளூர்ல பொழப்பு இல்லாம போச்சு. அப்புறம் இந்த சனியன் டி.வி வந்ததில் இருந்து எவன் வில்லுப்பாட்ட எல்லாம் உக்காந்து பாக்கறான்..எல்லாம் போச்சு..ம்ம்ம்ம்ம்

சிவா said...

வாங்க விடாதுசிகப்பு! 'கரிசல்காட்டு சிவாவா' :-)). ஏதோ நம்ம மலரும் நினைவுகளை அவுத்து விடறேன். உங்க பாராட்டுக்கு நன்றி.
பௌயமா..பௌவியமா என்பதை பெ ள வியமா என்று பிரிச்சி படிச்சிட்டீங்களோ..
பௌயமான்னா அடக்கமா என்று சொல்வாங்க..'வி' சேர்த்ததால் குழம்பிட்டீங்களோ..

Anonymous said...

மிகச் சுவையாகவுள்ளது உங்கள் எழுத்துப் பாணி!
அருமையாக நையாண்டியும் இழையோடியுள்ளது. எங்கள் ஈழத்தில் அற்றுப் போன விடயங்கள்; இணையத்தில் வாசிக்க மகிழ்வாக உள்ளது; கலக்குங்க!
யோகன்
பாரிஸ்

சிவா said...

3signs (நில் கவனி செல் :-))

உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே

சிவா said...

யோகன்! உங்கள் தொடர் வருகைக்கு நன்றி. உங்கள் பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி. ஊர் கதை நிறைய எழுதலாம். நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். படித்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ஈழத்தில் இப்படி இந்து கோவில்கள் (சுடலை, அம்மன்) உண்டா..என் நண்பர் மூலமாக சிலோனில் ஒரு பெரிய சிவன் கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

அன்புடன்
சிவா

துளசி கோபால் said...

சிவா,

திருவிழாவையும் சாமியையும் அழகாச் சொல்லிட்டீங்க. படிச்சுட்டு எங்கியோ போனவ,
இப்பத்தான் திரும்பி இங்கெ வந்தேன்னு பவ்வியமாச் சொல்லிக்கறென்.

இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தா, எனக்கே 'சாமி' வந்துருமுல்லெ:-))

G.Ragavan said...

// //அதே போல ஆலி பொம்மைக வரும்// ஆலி பொம்மையா..கேள்வி பட்டது இல்லையே..அப்படின்னா என்னா? //

ஆலி பொம்மைன்னா பெரிய மனுசப் பொம்மைங்க. அதுக்குள்ள ஆளுங்க போயி தூக்கீட்டு நடப்பாங்க. பாத்தா பெரிய பொம்மைங்க நடந்து வர்ர மாதிரி இருக்கும்.

சிவா said...

ராகவன்! ஓ! இது தான் ஆலி பொம்மையா..இதெல்லாம் நான் சினிமாவில் பார்த்ததா தான் நியாபகம். எங்க ஊரு ரொம்ப சின்ன ஊரு. இதெல்லாம் கிடையாது. தகவலுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஊர் பண்டாரம்ன்னா யாரு சிவா?

Anonymous said...

அட இது திருநெல்வேலி பக்கமுள்ள கோயில் கொடையா...

போட்டுத் தாக்கிடீயளே....நமக்கும் அந்தப் பக்கம்தான்வே....


இந்த பதிவ தேசிபண்டிட்ல சேர்த்திருக்கோம்லா....

http://www.desipundit.com/2006/05/17/templefestival/

சிவா said...

குமரன்! ஊரில் கோவிலில் பூஜை செய்பவரை பண்டாரம் என்பார்கள். அவர்கள் தான் ஊருக்கு பூ கட்டி கொடுப்பார்கள். அவ்வளவே.

சிவா said...

வாங்க டுபுக்கு! ஓ நீரும் திருநவேலி ஆளு தானாவே..தெரியாம போச்சே..
ஏற்கனவே நம்ம கீதம் ப்ளாக்க ஒரு தடவை லிங்க் கொடுத்தீங்க. இப்போ நம்ம ஊரு கதை லிங்கும் கொடுத்திருக்கீங்க. நன்றி நன்றி.
அந்த பக்கம்னா எந்த ஊரு..பூச்சிக்காடு இல்லையே :-)))

சிவா said...

துளசி அக்கா! வாங்க வாங்க..
//இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தா, எனக்கே 'சாமி' வந்துருமுல்லெ:-))// ஹா ஹா..ஒரு ஆட்டம் ஆடிட்டா போச்சு :-))

நெல்லைக் கிறுக்கன் said...

எய்யா,
கொடைய பத்தி விலாவாரியா எழுதியிருக்கீயளே...! பூச்சிக்காடு நெல்லைல எந்த தாலுகாலவே இருக்கு? கோவில் கொடய ஒட்டி கும்பாட்டம், குடராட்டிணமெல்லாம் ஊருக்குள்ள வருமே.. நீரு அதப் பத்தி ஒன்னுஞ் சொல்லலியே....

சிவா said...

வாங்க நெல்லைகிறுக்கன்! நம்ம ஊரு ஆளா இருக்கிய :-). பூச்சிக்காடு இருக்கிற தாலுகா எல்லாம் தெரியாதுவே (விட்டா என்னிய மாட்டி விட்டுடுவிய போல :-)). நம்ம ஊரு பக்கம் தான். எங்க ஊரு ரொம்ப சின்ன கிராமம்வே..மொத்தமே 40 வீடு தான்..அதனால கொடைக்கு ராட்டினம் எல்லாம் வராது..அதான் விட்டுப் போச்சு.

நீங்களும் நம்ம ஊரு கதைய எடுத்து விடறியலா..வந்து பாக்கறேன்.

மணியன் said...

நெல்லை கிராமத்துமணத்தை இடுகைகளில் அப்படியே கொண்டுவருவதில் தேர்ந்தவர்தான். உங்கள் ஊர் திருவிழாவிற்கு நேரில் சென்று வந்ததைப் போல உள்ளது.

anandh said...

sivanu nandri!
vanakkam..
chumma google la unga blog kedachuthu.
nellai thamizh .. konji vizhaayaduthu..
btw.. neenga entha oor?
enna panreenga..

nandri
anand

anandh thangavelsamy said...

ahaa.... enakku poochikaadu theriyum.. i have some relations..
Siva neenga entha area.. :)

கடம்பவன குயில் said...

நிஜமாகவே திருநெல்வேலியில் ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்ட உணர்வை உங்கள் கதை தந்தது சிவா. ஊர்மணம் கமழ உயிரோட்டமான ஒரு கதை. நன்றி சிவா.