Friday, March 31, 2006

கல்லூரியில் கத்திக்குத்து

முதன் முதலாக சென்னை வாசம். எங்க கிராமத்துல பி.எஸ்.சி முடிச்சதுக்கப்புறம் கெடைச்சது சென்னையில் M.I.T-ல ஒரு சீட். அதுவரைக்கும் திருநெல்வேலிய தாண்டி கூட வந்தது இல்லை. இதுல வேற என் அண்ணன் வேற கடுதாசி போட்டு 'எலே! அங்கண கொஞ்சம் ராகிங் இருக்கும். பாத்து நடந்துக்கல' அப்படின்னு லேசா மிரட்டி அனுப்பினான். ராகிங்கா...அப்படின்னா..எவனுக்கு தெரியும். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போய் சேர்ந்தேன். முதல் நாளே என்னிய ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டு அப்பா நெல்லை எக்ஸ்பிரஸ்ஸ புடிச்சி ஊர் போய் சேர்ந்துட்டாங்க. வாழ்க்கைல தன் முதலா ஹாஸ்டல் வாசம் வேற. எங்க அறையில் மூன்று பேர். எல்லாம் நம்ம மாதிரி கிராமம் தான்.

'வெளியே எங்கயும் போனா சீனியர் புடிச்சுக்குவானுங்க'அப்படின்னு எல்லா பயலுவலும் எச்சரிக்கையா ரூமுக்குள்ளேயே கொடக்குறானுவ. திடீர்னு எங்க ஹாஸ்டல்ல ஒரே பரபரப்பு. எல்லா பயலுவலும் ஓடி ஒளியறானுங்க. மொத்தமா சீனியர் பயலுவ எல்லாம் ஹாஸ்டல்ல புகுந்து மாட்ட புடிக்கிற மாதிரி எங்களை எல்லாம் மொத்தமா பத்திக்கிட்டு வெளியே கூட்டிட்டு போனானுங்க. நான் ஒரு கும்பல் கிட்ட மாட்டினேன். என்னிய அந்த கும்பல் அப்படியே ஹாஸ்டலுக்கு வெளியே தள்ளிக்கிட்டு போச்சு. ராத்திரி 11 மணி. துணைக்கு என் ரூம் மேட் செந்திலும்.

அதுல ஒருத்தன் ஆரம்பிச்சான் 'என்ன! பர்ஸ் இயரா'. அதான்!நாங்க முழிக்கிற முழியிலேயே தெரியுதுல்லா. அப்புறம் என்ன கேள்வி. 'ஆமாண்ணே! பர்ஸ் இயர் தான். இன்னிக்கு தான் சேர்ந்தேண்ணே' பவ்யமா பதில் சொன்னேன். 'டே! என்னா இது 'அண்ணே' அப்படின்னுகிட்டு. சீனியர்னு தான் சொல்லணும். தெரிஞ்சிதா' கடுப்பகிப் போன ஒரு அண்ணன். எங்க ஊருல எல்லாம் காலேஜ்ல அண்ணேன்னு தான் கூப்பிடுவோம். அத இந்த பயலுவகிட்ட சொன்னா புரியுமா. 'சரிண்ணே' இப்படி பதில். 'டே! என்னா நக்கலா. நீ என்னா எந்தம்பியா'. ரொம்ப நாளா அண்ணேன்னு தான் பாசமா கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். நாம எல்லாம் பாசக்கார பயலுவ இல்லையா.

அப்படியே என்னிய தள்ளிக்கிட்டு வெளியே இருக்குற டீக்கடைக்கு போனது கூட்டம். அடப்பாவிங்களா ரெண்டு பேர ராகிங் பண்ண இருபது பேரா. அடுக்குமாடா. போன உடனே ரெண்டு பேருக்கும் ஓசில டீ வாங்கி கொடுத்தானுவ. மொத நாளே ஓசில டீ எல்லாம் வாங்கி தாராணுவலேன்னு நம்ம மனசே குளுந்து போச்சு. அப்புறம் தான் வெனையே ஆரம்புச்சுது. டீக்கடைல சத்தமா தேவா கானா பாட்ட ஓட விட்டு ரெண்டு பேரையும் ரோட்டுல ஆட சொன்னானுவ. 'லே! ஒரு டீக்கு இப்படி நடு ரோட்டுல ஆடுறதுக்கு நான் என்ன கழைக்கூத்தாடியால' அப்படின்னு எங்களை நொந்து கொண்டே 'டண் டண் டண்..டணக்கு டணக்கு' அப்படின்னு ரோட்டுல ஒரு குத்தாட்டம் போட்டோம். அந்த ராத்திரியிலையும் அதை பார்க்க பொதுஜனமெல்லாம் கூடிடிச்சு. 'அண்ணே! ஒரு இளையராசா பாட்டாவது போடுங்கண்ணே' அப்படின்னு கேட்டுப் பார்த்தேன். ஹும்..நாம என்ன டூயட்டா பாட போறோம். ஆடுங்கடா அப்படின்னு மறுத்துட்டானுவ. அப்புறம் என்ன ஒரு அரை மணி நேரம் 'டணக்கு டணக்கு' தான்.

அப்புறம் காலைல ரொம்ப சாக்ரதையா பார்த்து பார்த்து வெளியே வந்தேன். ஒரு எரும என்னிய பாத்துட்டு. 'டே! எங்க போற!. எப்படிக்கீற! காத்தால நாஸ்டா துண்ட்டியா' அப்படின்னு ஒரு கேள்வி. எனக்கு கிர்ருன்னு தலை சுத்திச்சு. வெளி மாநில கோட்டாவுல வந்தவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டேனே. இங்கிலீசும் தெரியாதே அப்படின்னு முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்போ என்னிய காப்பாத்த வந்தவரு தான் இந்த கத்திக்குத்து. 'லே! எந்த ஊருல' அப்படின்னு ஒரு வார்த்தைக்கே 'அண்ணே! நீங்க நம்ம ஊருங்கலா. நல்லாருப்பிய. இந்த அண்ணே ஏதோ கேக்கறாவ. புரியாம நிக்குறேண்ணே' அப்படின்னு பக்கத்தில போய் உரிமையா உக்காந்தேன். 'லே! எந்திரில. சீனியர் முன்னாடி ஒக்கார்ற' அப்படின்னு திட்டினப்போ தான் தெரிஞ்சது அண்ணன் தான் அங்கே ராகிங்ல பெரிய ஆளுன்னு. தெரியாம வழில போற மூதேவிய வெத்தள பாக்கு வச்சு அழைச்சிட்டோமோன்னு தோணிச்சு.

'இவரு யாரு தெரியுமா. கத்திக்குத்து' அந்த மெட்ராஸ் சொன்னது. 'ஓ! அது நீங்க தாணாண்ணே! பயலுவ ஒங்கல பத்தி கத கதயா சொன்னானுவ' அப்படின்னு நெனைச்சிக்கிட்டு, அடுத்த ஆட்டத்துக்கு தயாரானேன். அண்ணாச்சி பேர கேட்டா, எப்படி சொல்லணும் தெரியுமா. நம்ம நாக்க மடக்கி கடிச்சிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு, ராமநாராயணன் படம் கிளைமாக்ஸ்ல வர்ற அம்மன் மாதிரி கைய வச்சி போஸ் கொடுத்துக்கிட்டு 'கத்த்த்திக்குத்து' அப்படின்னு ஓங்கி சொல்லணும். இது எங்க கல்லூரில ரொம்ப பேமஸ் அப்போ. கத்திக்குத்துன்னா எல்லோரும் ஓடுவானுவ. இப்படி ஒரு தடவ சொல்லலாம். ஒரு நாள் என்னிய கல்லூரி வாசலில் விட்டு 50 தடவ சொல்லுல அப்படின்னு விட்டுட்டானுவ. கத்திக்குத்து கத்துக்குத்துன்னு கத்தி கத்தி, கண்ணுமுழி எல்லாம் பிதுங்கிப் போச்சு. போற வர்ற புள்ளைங்க எல்லாம் என்னை பாத்து 'சாமி! எறங்கிடுச்சு போல' அப்படின்னு ஒரு மாதிரி சைடு வாங்கி போச்சுதுங்க. மவனே! அன்னிக்கு எங்கைல கத்தி ஒன்னு தான் இல்ல. இல்லன்னா ராமநாராயணன் படம் க்ளைமாக்ஸ் தான்.


'சரி! அந்த பொண்ணு போறால்லா. அவகிட்ட போய் அவ பேரு என்னான்னு கேட்டுட்டு வா' அப்படின்னு என்னிய தொரத்தி விட்டுட்டாரு கத்திக்குத்து. 'அடப் பாவிமக்கா ! முன்ன பின்ன தெரியாத புள்ளைக்கிட்ட பேர கேட்டு அடி வாங்கி கொடுத்துருவிய போல' அப்படின்னுக்கிட்டே அந்த பொண்ணுக்கிட்ட போனேன். அது என்னிய பார்த்ததும் எவனோ சீனியர்னு நெனைச்சு அது திரு திருன்னு முழிக்க, நானு கேக்க வந்தத கேக்கமுடியாம முழிக்க, ஒரு வழியா கேட்டு வந்தேன். 'சரில! அந்த பொண்ண இங்கண வரசொல்லுல' அடுத்த கட்டளை. நீங்க கடலை போடுறதுக்கு உதவி செய்ய நான் தான் கெடச்சேனா. அப்புறம் ஒரு இலைய பறிச்சி 'லே! இதுல எத்தனை இலை இருக்குன்னு எண்ணுல' அப்படின்னு பெரிய பொறுப்பை கொடுத்துட்டு வறுக்க ஆரம்பிச்சுட்டார். 'அண்ணே! ஏதோ தீயிற மாதிரி வாசனை வருது' அப்படின்னு கேட்க ஒரு பிடி மண்ணை அள்ளி என்னிய எண்ணுல அப்படின்ன்னு விட்டுட்டாவ. இப்படி ஏதாவது புள்ளைங்க மாட்டினா, நாம தப்பிச்சிக்கலாம். ஒரு பொண்ணு வந்துட்டா அப்புறம் நாம சீனியர் கண்ணுக்கே தெரிய மாட்டோம்.

ஒரு நாள் ராத்திரி எதோ அசோசியேசன் வேலை அப்படின்னு ராத்திரி மறுபடி அந்த கூட்டம் வந்து எங்களை தள்ளிக்கிட்டு போனது. அதுல ஒருத்தன் ஜூனியர் மாதிரி என்னிடம் வந்து பயந்து பேச, நானும் அவனை நம்ம ஜாதி தான்னு நெனச்சி, கொஞ்சம் தைரியம் வந்து 'லே! அந்தா இருக்கானுங்க பாரு. சீனியர்னு சொல்லிக்கிட்டு. எல்லாம் கிறுக்கு பயலுவ' அப்படின்னு ஏடா கூடமா பேசி வச்சேன். காலைல தான் தெரிஞ்சது அவன் இறுதி ஆண்டு சீனியர்னு. அப்புறம் என்ன..அன்னைக்கு ராத்திரி அதே டீக்கடை..அதே பாட்டு..அதே 'டணக்கு டணக்கு' தான். அப்புறம் வாய தொறக்குறதே இல்ல.

இதுல சூப்பர் சீனியர்னு ஒருத்தர் உண்டு. அது என்ன சூப்பருன்னு கேக்கறியலா. நமக்கு ஒரு நம்பர் இருக்கும் இல்லையா. அதே நம்பர்ல இருக்குற ரெண்டாவது வருசம் படிக்கிற ஆண்ணாச்சி/அக்கா தான் நம்ம சீனியர் (பரம்பரை மாதிரி). அப்புறம் எல்லாத்துக்கு மேல அதே நம்பர்ல கடைசி வருசதுல ஒரு அண்ணன் இருப்பாரே, அவரு தாங்க சூப்பரு. அவர பாக்குறதுக்கு முட்டாய்/கேக் எல்லாம் வாங்கிட்டு போய் பாக்கணும். நான் என்னோட சூப்பர பார்த்ததே இல்ல. சூப்பர பாக்கலண்ணா பெரிய குத்தம் மாதிரி. அப்புறம் அடிக்கடி ஆட வேண்டிவ வரும். என்னோட சூப்பரு பேரு/அறை எண் எல்லாத்தையும் விசாரிச்சு, இருந்த காசுல ஒரு அரைக்கிலோ முட்டாய் வாங்கிக்கிட்டு ஒரு நா ராத்திரி போனேன். அங்கே அறைக்குள்ள ஒரு மூனு பேரு. நாமலே போய் மாட்டினா விடுவானுங்களா. அதுல என்னோட சூப்பரு யாருன்னு வேற தெரியல. 'என்னடா! முட்டாயா! கொண்டா கொண்டா. உன்னோட சூப்பர் சீனியர பாக்க வந்தியா. நான் தான் அது' அப்படின்னு முட்டாய வாங்கி மூனும் தின்னுட்டுதுங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அதுல என்னோட சூப்பரே இல்லன்னு. தின்னுட்டு 'ஹி..ஹி' ந்னு ஒரு சிரிப்பு வேற. இன்னொரு அரைக்கிலோவுக்கு காசுக்கு நான் எங்கடா போவேன்னு என்னிய நானே நொந்துக்கிட்டேன்.

அப்புறம் தாங்க அந்த பரிதபமான நாவரசு கொலை நடந்துச்சு. அப்புறம் கல்லூரில ஏகப்பட்ட கெடுபுடி. ராத்திரி சீனியர் ரூம்ல ஜூனியரை பாத்தாங்கண்ணா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் சீனியருங்க எல்லாம் எங்களை பாத்தா தல தெரிக்க ஓடுவானுவ. தெரியாம அவனுங்க ரூமுக்கு போய்ட்டோம்னா 'யய்யா! ராசா! தயவுசெஞ்சு போய்ரு ராசா!' அப்படின்னு கை எடுத்து கும்பிடுவானுவ. யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வருது பாத்தியலா.

இப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. ரெண்டாவது வருடம். எங்கள் வகுப்புக்கு போனா அங்கே நம்ம கத்திக்குத்து அண்ணன் சோகமா ஒக்காந்துகிட்டு இருக்காரு. 'யண்ணே! இங்கே எதுக்கு ஒக்காந்து இருக்கிய.வகுப்பு மாறி வந்துட்டியலா' அப்படின்னு போய் விசாரிச்சேன். 'அட! போடே. விசயம் தெரியாத மாதிரி பேசாத. அதான் போன வருசம் என்னிய ராகிங் பண்ணும் போது புடிச்சி ஒரு வருசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாவல்லா. இனி மறுபடி ரெண்டாவது வருசம் உங்க கூட தான் படிக்கணும்' பாவமாய் கத்திக்குத்து. 'நெலமைய பாத்தியலா அண்ணே! எங்களை ராகிங் பண்ணிட்டு, இப்போ எங்க கூட படிக்கிற மாதிரி ஆகி போச்சு. பாத்துண்ணே! இந்த வருசமாவது கத்திய தூர தூக்கிப் போட்டுட்டு நல்ல புள்ளையா இரு. அப்புறம் அடுத்த வருசம் ஒன்னிய நாங்கெல்லாம் ராகிங் பண்ணுற மாதிரி ஆகிட போவுது'. 'ஆமாண்டே! என்னிய மறுபடி மொத வருசத்துல தூக்கி போட்டாலும் போட்டுவானுங்க' நொந்து போய் சொன்னார் கத்துக்குத்து.

20 comments:

கால்கரி சிவா said...

அடே நீயும் நம்ம ஜீனியர்னு சொல்லவேவில்லையேப்பா, ராகிங் பண்ணிடிவேன்னு பயமா? நீயி ஸ்டார் ஆனப்ப்போ நம்ம பேர்லே ஒருத்தர் ஸ்டார் ஆயிட்டார்னு வாழுத்து சொன்னேன் எதோ அப்பாவியா அண்ணே நீங்களும் எழுதுங்கண்ணே என பவ்யமா சொல்லி மாட்டிவிட்டுடேயே சிவா. ஆமா எந்த வருஷம் படிச்சே? எந்த ஃபாகல்டி நம்ம பாலசந்தர் கணேசனும் நம்ம காலெஜி தான்பா. போன் நம்பர் குடுப்பா போன்லே கூப்பிட்டு ஒன்னே ராக் பண்றேன்

அன்புடன்

கால்கரி சிவா

G.Ragavan said...

ராகிங்....மிகக் கொடுமையான விஷயம்...பல உயிர்களைக் கொன்றிருக்கிறது. அதை எவ்வளவு தடுத்தாலும் எப்படியாவது முளைத்துக் கொண்டிருக்கிறது.

நல்லவேளை ஒங்கள ஒன்னுஞ் செய்யல....தப்பிச்சீங்க.....அடுத்தவன் காசுல முட்டாயி வாங்கித் திங்குறதும் ஒரு பொழப்பா.....சீச்சீ....

கத்திக்குத்த நெனச்சா சந்தோஷமா இருக்கு. நிச்சயமா தேவையான தண்டனைதான். எத்தனை பேர் வயிற்றெரிச்சலோ.......

சிவா said...

சிவா! நானு 1999 பாஸ் அவுட் :-). நீங்க? போன்ல ராகிங்கா..நல்லா இருக்குதே :-)

சிங். செயகுமார். said...

டண்டண்ட டனக்குனக்க.....டண்டண்ட டனக்குனக்க

Boston Bala said...

கல்லூரி வாசமா... நல்ல இருக்குதுங்க

கால்கரி சிவா said...

சிவா, நானு வெரி ஓல்டுபா. நான் 1984 பாஸ் அவுட்.

ராகவன், நான் படிக்கும் காலத்தில் ராகிங் என்பது ஒரு அறிமுகமாக படலமாக இருந்தது. என்னை ராகிங் செய்தவர்களும் என்னல் ராகிங் செய்யப்பட்டவர்களும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் அன்பு சகோதர்களாய் உலகம் முழுவதும் பரவி இருக்கிறோம். நான் எந்த நாட்டிற்கு போனாலும் ஒரு சீனியர் இல்லையென்றால் ஜுனியர் இருப்பார். நமக்கு எல்லா உதவிகளையும் செய்வார். அதேபோல் தான் நானும்.

காலபோக்கில் சில வக்கிர புத்திகாரர்களால் ராகிங் திசை மாறி ஒரு அரக்கனாகிவிட்டது.

சிவா, உங்களுடைய டீ.நம்பர் என்ன? நீங்கள் என்னுடைய வாரிசாக (அதான்பா டீ ஜுனியர்) இருக்க வாய்ப்பு உண்டு. என்னுடைய நம்பர் 33435

சிவா said...

சிவா சீனியர் (ஹி ஹி ஹி..பாசமப்பா :-), gsivaraja@gmail.com -க்கு மெயில் ஒன்னு தட்டி விடுங்க. பேசலாம்.

சிவா said...

கால்கரி சிவா! ஓ! பாலசந்தர் கணேசனும் நம்ம கல்லூரி தானா. போய் ஒரு எட்டு விசாரிச்சுட்டு வந்துடறேன். :-).

சிவா said...

ராகவன்! ராகிங் சில நேரம் ஜாலியா தான் இருக்கும். பண்ணுறவனுக்கு மட்டுமே. ஆனா, பல நேரங்களில் 'ஒருத்தன் கெடச்சுட்டான்' என்று புடிச்சு தன்னோட ஆணவம், அகங்காரம் எல்லாவற்றையும் காட்டவே பயன் படுகிறது. சிலபேர் வக்கிர கெட்டவார்த்தைகளை பயன்படுத்திய போது நான் எதிர்கொள்ளமுடியாமல் அமைதியாக சென்றதும் உண்டு. சில நேரம் சண்டை கூட போட்டிருக்கிறேன் 'போங்கடா போக்கத்த பயலுவலா'என்று. நீங்க சொல்ற மாதிரி அது தடுக்க வேண்டிய ஒன்று தான்.

சிவா said...

தம்பி சிங்கு! ஒரே வரில கவிதை சொல்லிட்டு போய்ட்டீங்க. டண் டண் டண்..டணக்கு டணக்கு :-))

சிவா said...

வாங்க பாஸ்டன் பாலா! உங்கள் வருகைக்கு நன்றிங்க. பாராட்டுக்கும் நன்றி.

சிவா said...

வாங்க பாரதி!நீங்க தொடர்ந்து வந்து கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நன்றிங்க.

'முஸ்தபா முஸ்தபா' பாடல் நான் அந்த கல்லூரியில் படிக்கும் போது வந்த பாடல் தான் :-)

//** சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சும் போது அமிர்தமும் நஞ்சாகிவிடுகிறது.**// உண்மை தான். இப்போது நிலமை எப்படி என்று தெரியவில்லை.

பரஞ்சோதி said...

ஆகா சிவா,

நம்ம ஊரை விட்டு விட்டு பட்டணம் போயிருக்கீங்க. நிறைய கதைகள் வரும் போலிருக்குதே..

கலக்குங்க..

சிவா said...

வாங்க பரஞ்சோதி! கல்லூரி கதைகள் நிறைய இருக்கு :-). ஆனா நம்ம கிராமத்து கதை தான் வழக்கம் போல தொடரும். :-)

குமரன் (Kumaran) said...

சிவா, கத்திக் குத்து அது இதுன்ன உடனே ஏதோ விவகாரமா எழுதியிருக்கீங்களோன்னு நெனைச்சேன். :-) நான் பட்ட ராகிங் நினைவுகள் வந்தன.

Anonymous said...

ராகிங் ஒரு சுகானுபவம் - அதில் பங்கு கொள்வோர் அதனில் முழுமையாக ஈகோ, சாதி, மதம், இனம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்ளும் வரை. அப்படித்தான் அதில் கலந்து கொள்ளல் வேண்டும்.அப்போதுதான் ராகிங் நட்புக்கு பாலம் அமைக்கும். அதன் நோக்கமும் அதுவே.

எம்.ஐ.டி யில் ராகிங் பட்டும் ராகிங் செய்துவிட்டும், இன்றுவரை அந்த நட்பின் பாலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் எம்.ஐ.டி அலுமினி அடியேன்.

அன்புடன்,
சரவணன்

சிவா said...

குமரன்! என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்தேன். கொஞ்சம் பரபரப்பா இருக்கட்டுமேன்னு அப்படி வைத்து விட்டேன் :-)). நீங்க கூட ரொம்ப பட்டிருப்பீங்க போல. நீங்க ராகிங் பண்ணி இருக்கீங்களா?

சிவா said...

மோகன்! வருகைக்கு நன்றி! ஆமாம் ராகிங் முறையை ஒழித்தால் நல்லது தான். விரைவில் நடக்கும் என்று பார்ப்போம்,

சிவா said...

சரவணன்! நீங்களும் MITயா. எந்த ஆண்டு. நாங்க தான் கடைசி B.Sc Batch. அப்புறம் வந்த +2 பசங்க கூட அவ்வளவா ஒட்டாம அந்த Trend போச்சு :-(

சிவா said...

அண்ணா! நீ கூறுவது போல சில விசயங்கள் நன்றாக தான் இருந்தது. ஆனால் ஒரு சில விசயங்கள் அப்படி இல்லை. நம்க்கெல்லாம் சீனியர் கால்கரி 'சிவா'வே இருக்கிறார். அவரும் நீயும் ரொம்ப சீனியர்ஸ். அப்போ ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது கொஞ்சம் மாறிவிட்டது என்பது உண்மை.