Friday, March 17, 2006

கிராமத்து மணம் - 4 ( கொடுக்காப்புளியும் கிளியும்)

நம்ம ராகவன் பதிவுக்கு பதிவு கொடுக்காப்புளி கொடுக்காப்புளி என்கிறார். சரி! நம்ம கொடுக்காப்புளி புராணம் ஒன்ன எடுத்து விடலாம்னு தான் இந்த பதிவு. எங்க ஊரிலயும் ஒரு கொடுக்காப்புளி மரம் உண்டு. ரொம்ப பெரிய மரம். யாராலயும் ஏற முடியாத அளவுக்கு உயரம். அப்படி ஒரு ஏக்கருக்கு படர்ந்து கிடக்கும். காலைலயே கனி ஆச்சி வீட்டுக்கு பால் வாங்க போகும் போது, அப்படியே தூக்குச் சட்டிய வச்சிட்டு மரத்த சுத்தி சுத்தி வருவோம். ஏதாவது கொடச்சுதுன்னா, நாம தான் இன்னிக்கி மொத ஆளுன்னு நெனைச்சிக்கலாம். ஒன்னுமே கீழே இல்லன்னா, ஏதோ ஒன்னு நமக்கு முன்னாடியே வந்துட்டு போய்ட்டுன்னு நெனைச்சிக்கலாம்.

கொடுக்காப்புளி அவ்வளவு ருசியா இருக்கும். முத்து முத்தா, வெள்ளையா அத பாக்குறதுக்கே நல்லா இருக்கும். ஆனா கைக்கும் நம்ம சொரண்டி கம்புக்கும் எட்டாத உயரத்துல கெடக்கும். மரத்துல ஏறி ஓடிப்பிடிச்சி வெளையாண்ட காலம். கை வழுக்கி தொப்புன்னு மேலே இருந்து விழுந்தா டவுசர தொடச்சிட்டு மறுபடி மரத்துல ஏறி தாவிக்கிட்டு இருப்போம். 'கொரங்கா பொறக்க வேண்டியதுங்க எல்லாம் மனுசனா பொறந்துட்டுதுங்க' என்று பெரிசுங்க எல்லாம் நாங்க போடுற கூச்சல் தாங்க புடியாம திட்டுவாங்க. ஆனா எங்களால அந்த கொடுக்காப்புளி மரத்துல ஏற முடியாது. அவ்வளவு பெரிய மரம். இல்லன்னா ஒரே நாளில் மரம் மொட்டையாகி விடும். அனைச்சி புடிச்சாலே மூனு பேரு சேர்ந்து புடிக்கணும்.

சரி! ஏறவும் முடியாது. கம்பு வச்சி பறிக்கவும் முடியாது. அப்புறம் என்ன தான் வழி. ஒரே வழி தாங்க. தானா விழுந்தா வுண்டு. வெளையாட்டு எல்லாமே அங்கே தான். டப்புன்னு ஒரு சத்தம் கேட்டுட்டா எல்லோரும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடிப் போய் பார்ப்போம். 'எங்கல விழுந்திச்சி' அப்படின்னு தேடு தேடுன்னு தேடி எடுத்து பங்கு போட்டுக்குவோம். சில பேர் கெடைச்சவுடனே அப்படியே நைசா வீட்டுக்கு ஓடிருவானுங்க. அப்புறம் அவனை அடுத்த வாட்டி வெளாட்டுக்கு சேத்துக்கிறது இல்ல. 'லே! நீ கொடுக்காப்புளிய கொடுக்காம ஓடிட்டால்லா! ஒன்னிய வெளாட்டுக்கு சேத்துக்கமாட்டோம்' என்று வெரட்டி விட்டுடுவோம். அப்புறம் அவன் போய் அவங்க அம்மாவ கூட்டி வந்து, எங்களுக்கெல்லாம் திட்டு வாங்கி கொடுத்து, எங்க தாத்தாவையும் களத்துல எறக்கி விட்டு பெரிய சண்டைல போய் முடிஞ்சிரும்.

தானா விழுவதை தவிர, ஒரு ஆள் மட்டும் எங்களுக்கு பறித்து போடுவார். அது காட்டுக் கிளி. கிளி எல்லாம் காட்டுல மேஞ்சிட்டு சாயங்காலம் எங்க ஊர தாண்டி தான் பறந்து போகும். கொடுக்காப்புளி மரத்துக்கு கிளி கூட்டம் வந்துட்டாலே, நாங்க எல்லாம் அங்கே ஆஜராகி விடுவோம். அவ்வளவு உச்சத்துல அந்த பச்சை இலைகளுக்கு ஊடால கிளி எங்கே இருக்குன்னு தேடி ஆன்னு கீழே இருந்து பாத்துக்கிட்டே இருப்போம். கிளி மெதுவா போய் ஒரு கொடுக்காப்புளிய பறிச்சி கொறிச்சிக்கிட்டு இருக்கும். காக்கா வாயில இருக்குற வடைக்கு அடி போடுற நரி மாதிரி தான். செல வெவரம் கெட்ட கிளி பறிச்சவுடனேயே தவறி கீழே போட்டுடும். அன்னைக்கு பெரிய ஜாக்பாட் தான். செல வெவரமான கிளிங்க பறிச்சி மெதுவா மொத்தமா தின்னுட்டு வெறும் தோலை மட்டும் போடும். 'நாசமா போற கிளி' அப்படின்னு திட்டிட்டு ஒக்காந்துக்கிட்டே இருப்போம். சோம்பேறி கிளிங்க சில வந்து உக்காந்து ரொம்ப நேரமா யோசிச்சிக்கிட்டே இருக்கும். நாங்களும் அது கொடுக்காப்புளி பறிக்குதா அப்படின்னு பொறுமையா கழுத்து வலிக்க பாத்துக்கிட்டு இருப்போம். 'ஏல! அது தூங்கிட்டுல. அசையாம இருக்கு பாரு' 'இல்லல! அசையுது பாரு. தெரியுதா' அப்படின்னு பேசிக்கிட்டு இருப்போம். அப்புறம் அதுக்கே ஒரு மூடு வந்து பறிச்சி போட்டா உண்டு. இல்லன்னா கடுப்பாகி ஒரு கல்ல எடுத்து வெரட்டி வுட்டுடுவோம்.

இப்படி தாங்க கிளியும் கொடுக்காப்புளியும் எங்க வாழ்க்கைல ஒரு அங்கமா போச்சி. இப்படி இருக்கச்சுல, திடீர்னு ஒரு யோசனை. கிளிக்காக இப்படி காவல் இருப்பதை விட, கிளிய நாமலே புடிச்சி வளந்தா என்ன? அப்போ இந்த துர்கா மாதிரி ராமநாராயணன் படமெல்லாம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிருந்தோம். 'லே! பாம்பே பல்லாங்குழி ஆடுது. நாம கிளிய பழக்கி கொடுக்காப்புளி பறிக்க வச்சா என்னா' அப்படின்னு ஒரு யோசனை. கிளி புடிக்கணும்னா நம்ம பீட்டர் அண்ணனை விட்டா வேற வழி. 'யண்ணே! எங்களுக்கு ஆளுக்கு ஒரு கிளி புடிச்சி கொடுங்கண்ணே' அப்படின்னு அவன் வீட்டுல போய் நாங்க வாண்டுங்க எல்லாம் போய் கேட்டோம்.

அடுத்த நாள் எல்லோடும் தேரி காட்டுக்கு கெளம்பிகிட்டு இருக்கோம். கிளி புடிக்கத் தான். காடை கவுதாரி எல்லாம் தரைலயே, முள்வேலிக்குள்ள கூடு கட்டும். காக்கா, குருவி எல்லாம் எல்லா மரத்துலயும் கூடு கட்டும். ஆனா இந்த கிளி இருக்குது பாருங்க. அது ரொம்ப வெவரம்ங்க. நல்ல மொட்ட பனைல (கொண்டை இல்லாம பட்ட மரம்) உச்சத்துல போய் ஒரு பொந்து போட்டு அங்கண போய் கூடு கட்டி வச்சிருக்கும். மொட்ட பன உறுதியா இருக்கா, இல்ல உளுத்துப்போய் இருக்கான்னு முக்கா பன ஏறினா தான் தெரியும். டப்புன்னு ஒடைஞ்சிட்டா, நேரே மேலே தான். இப்படி உயிர பனையம் வச்சி நம்ம பீட்டர் அண்ணன் ஒவ்வொரு பனையா ஏறி ஏறி பார்த்தான். கிட்டத்தட்ட ஆளுக்கு ஒன்னுன்னாலே ஒரு 8 கிளி தேவை பட்டது.

எங்க கூட்டத்த பார்த்துட்டாலே காக்கா குருவி எல்லாம் லபோ திபோன்னு அடிச்சிக்கும். வந்துட்டானுங்கடா காட்டுவாசிங்க அப்படின்னு. அதுலயும் கருப்பு டவுசர் போட்டிருந்தோம்னா காக்கா வந்து டக்குன்னு நம்ம தலைல ஒரு தட்டு தட்டிட்டு 'சௌக்கியமால' அப்படின்னு சொல்லிட்டு போகும். ஏன்னா! கவுட்ட வார் கருப்பு பாத்தீங்களா. அதனால எல்லாத்துக்குமே கருப்புன்னா கொஞ்சம் அலர்ஜி. சும்மா ஒரு கருப்பு துணிய காட்டுனாலே பறவைங்க எல்லாம் ஓடும். அன்னைக்கு நாங்க மரத்துல ஏறுவதை பாத்துட்டு, எல்லாம் கூடிட்டு. நாங்க கைல இருக்குற கவட்டையால வெறட்டி விட்டுக்கிட்டே இருக்க, பீட்டர் அண்ணன் ஒரு மொத்தமா கொஞ்சம் கிளி அள்ளிட்டு வந்தான். 'எண்ணனே இது! கிளி கேட்டா! உறிச்ச கோழிய கொண்டு வந்திருக்க' 'ஏல! இனி தாம்ல முடி மொளைக்கும். போய் நல்லா வாழைப்பழம் கொடுங்கல! சீக்கிரம் பெரிசாயிரும்' இது எங்கள் அண்ணன்..பீட்டர்.

நான் கொடுக்காப்புளிக்கு கொஞ்சம் பேராசை பட்டு, ரெண்டு கிளிய எடுத்துக்கிட்டேன். வீட்டுக்கு கொண்டு போன வுடனேயே ஒரே திட்டு 'ஏல! போன வாரம் தான ஒரு மைனாவ தூக்கிட்டு வந்த..இப்போ இது வேற எதுக்குல' அப்படின்னு. எங்க வீட்டு பூனை வேற ரெண்டு கிளியையும் ஒரு மாதிரி பார்த்தது. நேத்து மைனாவ புடிக்கப் போய் என்னிடம் வாங்கிய அடியை நினைத்து பேசாமல் இருந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் கிளி எல்லோர் வீட்டுலையும் வளர்ந்தது. நல்லா முடி மொளைச்சி இப்போ பச்சை கலர்ல கிளி மாதிரி ஆகிட்டு.

பொரிகடலை போட்டா, அது பாட்டுக்க ரெண்டும் ஒக்காந்து கொறிச்சிக்கிட்டு இருக்கும். சட்னிக்கு வச்ச கடலைய காணோம்னு வீட்டுல அம்மாவோட சத்தம் அடிக்கடி கேட்கும். நானும் ரெண்டு கிளிகளுக்கும் நல்லா தீனி போட்டு வளர்த்தேன். எல்லாம் கொடுக்காப்புளி கனவுல தான். சரி! அதுங்களுக்கு நாம சொன்ன ஏதாவது கேக்குற மாதிரி பயிற்சி கொடுக்கலாம்னு நெனைச்சேன். கடைசில நான் கூப்பிட்டா கூட எட்டி பாக்காம ஒரு சோம்பேறி கிளிகளா போச்சி. எம்மனசு ஒடைஞ்சி போச்சி. நான் விசிலடிச்சி கூப்பிட்டா, லேசா எட்டிப்பாத்துட்டு கடலைய கொறிக்கிறதை தொடரும். சில நேரம் ரெண்டும் போய் தூக்கிக்கிட்டு இருக்கிற எங்க வீட்டுப் பூனையை போய் கொத்தி வெரட்டி விட்டுடும். அப்போ நம்ம பூனையார் உச்ச கட்ட எரிச்சலில் இருப்பார். 'கிளிய புடிச்சி என் கைல கொடுப்பாங்க..இங்கே என்னைய புடிச்சி அதுங்க கைல கொடுத்து கொடும படுத்தறீயே! இது நியாயமால' என்பது போல இருக்கும். திருப்பி கடிச்சா அடி விழும் என்று பேசாம இருக்கும்.

அப்புறம் ரெண்டும் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிச்சிட்டுதுங்க. சரி! இனி நம்ம வீட்டுல கிளி பண்ணை தான் வைக்கனும்னு பயந்து, நல்லா ரெக்கை மொளச்சவுடனே பறக்கும்னு தூக்கி வீசி வீசி பார்த்தேன்.ம்ம்ம்.. சோம்பேறிங்க..வீசுன வேகத்துலேயே திரும்பி வந்து கடலை சட்டி முன்னாடி ஒக்காந்துக்கிடுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டு எங்க வீட்டு பூனை என்னிய கேவலமா ஒரு லுக் விடும். 'லே! என்னையும் திங்க விட மாட்டேங்குற. ஒனக்கும் ப்ரோஜம் இல்ல. பாத்தியா' அப்படிங்கிற மாதிரி இருக்கும். வெறுத்துப்போய் ஒரு நாள் ரெண்டையும் புடிச்சி ஒரு புளிய மரத்துல ஏறி விட்டுட்டு வந்துட்டேன்.

கடைசில நமக்கு கொடுக்காப்புளி பறிக்க காட்டு கிளிய விட்டா வேற கதி இல்லாம போய்ட்டு. ஒரு நாள் தூத்துக்குடில அடிச்ச புயலில் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு கொடுக்காப்புளி மரம் மொத்தமா சாஞ்சிப் போச்சி. அதுவரைக்கும் கைக்கு எட்டாத கொடுக்காப்புளிய அன்னைக்கு கைலயே பறிச்சி தின்னோம். இனி கொடுக்காப்புளி கைக்கு எட்டாமலே போகப் போறது தெரியாமலேயே.

37 comments:

Anand V said...

நல்லா எழுதி இருக்கீங்க சிவா.

இலவசக்கொத்தனார் said...

//இனி கொடுக்காப்புளி கைக்கு எட்டாமலே போகப் போறது தெரியாமலேயே.//

சும்மா கவித மாதிரி முடிச்சிட்டையேடே. நல்லாத்தான் இருக்கு. இந்த காலத்து பசங்களுக்கு இதைப் பத்தி தெரியாமலே போகுதே....

துளசி கோபால் said...

அய்யோ சிவா, அருமையா இருக்கேப்பா.

நாங்கெல்லாம் கொடுக்காப்புளிக்கு மரம் ஏற்ரவகை இல்லேங்க. ஸ்கூல் வாசல்லே கிழவி ஒண்ணு கோணியை விரிச்சு கூறு கட்டி வச்சிருக்கும்
பாருங்க, அதுதான். கொஞ்சமா தோல் வெடிச்சு, வெள்ளையும் சிகப்புமா ஒரு மிக்ஸட் கலர்லே குண்டுகுண்டா,
வட்டவட்டமா சுழிச்சு இருக்கும் பாருங்க அதான் நம்மது. பழத்தைத் தின்னுட்டு தோலை வீசுனாலும் கொட்டையை
எடுத்து வச்சுக்கிட்டு இன்னொரு மாஜிக் செய்வொம்லெ.

முதல்லே ஒரு கொட்டையை நாக்குக்கு அடியிலே ஒளிச்சு வச்சுக்கணும். அப்பாவி ப்ரண்ட்ஸ்
யாராவது, இல்லே நம்மைவிட ச்சின்ன வகுப்புலே இருக்கற பசங்க கிட்டே 'இப்பப்பாரு நான் ஒரு கொட்டையைக்
கடிச்சு எடுத்த பாதியை முழுசாக்கிக் காமிக்கறேன்'னு கதை வுட்டு, அவுங்க முன்னாலே ஒரு கொட்டையைக் கடிச்சுப்
பாதியை துப்பிட்டு வாயை மூடிக்கிட்டே நாக்காலெ துழாவி இந்தப் பாதியை மறைச்சுட்டு, ஏற்கெனவே உள்ளே இருந்த
முழுக்கொட்டையை எடுக்கறதுதான்.

அப்பத்துப் பசங்க இதையும் நம்புச்சுங்களேன்னு நினைச்சா சிரிப்பாணியாக் கிடக்கு:-)

துளசி கோபால் said...

என்னாப்பா இன்னிக்கும் ப்ளொகர் சொதப்புதா? பின்னூட்டம் போடவே வுடமாட்டேங்குது(-:

சிவா said...

ஆமாம் துளசி அக்கா! ரொம்பவே படுத்துது..காலைல இருந்தே ஒன்னுமே வேலை செய்யலை. இப்போ தமிழ்மணம்ல நம்ம பதிவ க்ளிக் பண்ணினா சில நேரம் வேலை செய்ய மாட்டேங்குது...மண்ட காஞ்சி போய் இருக்கேன்.

வசந்தன்(Vasanthan) said...

//அன்னைக்கு நாங்க மரத்துல ஏறுவதை பாத்துட்டு, எல்லாம் கூடிட்டு. நாங்க கைல இருக்குற கவட்டையால வெறட்டி விட்டுக்கிட்டே இருக்க,//

இதை நாங்கள் 'கெற்றப் போல்' எண்டுவம். உதுகளைக் கழுத்தில தொங்கவிட்டுக்கொண்டு 'வேட்டை' எண்ட பேரில பத்தைகளுக்குள்ள திரிஞ்ச காலம் ஞாபகம் வந்திச்சு.
மொட்டைப் பனையில பொந்தொண்டைக் கண்டா, அதுக்குள்ள கிளி இருக்கா இல்லையா எண்டு பாக்கிறதுக்கு, அடிப்படையில பெரிய கல்லால ஓங்கிக் குத்துவோம். அந்தப் பொந்தில கிளியிருந்தா அந்தக் குத்துக்குப் பறந்திடும். கிளி வசிக்கிறது உறுதியெண்டா பிறகு கிளிக்குஞ்சு பிடிக்கிறதுக்கு அடுத்த அடுக்குப் பண்ணுவம்.

நாங்கள் துரத்திற அணில் உப்பிடி பனையேறினாலும் உதே மாதிரி கல்லுக்குத்து தான். எல்லாரும் பனையச் சுத்தி ஒரு பத்து யார் தூரத்தில வட்டமா நிண்டுகொண்டு ஒருத்தனைக் குத்த விடுவம். அணில் பாயேக்க பிடிக்க வேணும். அதையெங்க பிடிக்கிறது? உடும்புக்கு மாத்திரம் சிறிது சாத்தியப்பட்டது. அது தாவி விழுந்தபிறகு கொஞ்சம் நிதானிச்சுத்தான் ஓடும். அந்த நேரத்தில கையில வச்சிருக்கிற கொட்டனால போட்டாச் சரி. பிசகினா இன்னொரு பனையில குத்த வேண்டிவரும்.

நல்லா இருக்கு பதிவு. நல்ல நடை.

சிவா said...

நன்றி ஆனந்த்!

வாங்க இலவசம்! கடைசில நச்சுன்னு ஒரு வரி இருந்தா தானே பதிவு நிறைவு பெருகிறது :-)). பாராட்டுக்கு நன்றிங்க

சிவா said...

துளசி அக்கா! சூப்பரா ஒரு ட்ரிக் சொல்லிருக்கீங்களே. எத்தனை பேருக்கு மாஜிக் காட்டுனீங்களோ :-)). இப்படி நிறைய வித்தைகள் பள்ளி வாழ்க்கையில் உண்டு இல்லையா. நானும் சில வித்தைகளை யோசித்து சொல்லறேன். அக்காவோட வருகைக்கு ரொம்ப நன்றி,

தம்பி 'சிவா'

சிவா said...

வாங்க வசந்தன்! உங்க சிலோன் தமிழை படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.

உங்க நினைவலைகளும் அருமை. நாங்க கூட நீங்க சொல்ற கல் குத்து எல்லாம் பண்ணிருக்கோம். என்னோட 'ஓணானும் இராமாயணமும்' பதிவுல சொல்லிருக்கேன்.

//** அந்தப் பொந்தில கிளியிருந்தா அந்தக் குத்துக்குப் பறந்திடும். கிளி வசிக்கிறது உறுதியெண்டா பிறகு கிளிக்குஞ்சு பிடிக்கிறதுக்கு அடுத்த அடுக்குப் பண்ணுவம். **// ஓ! நீங்களும் கிளி எல்லாம் புடிச்சிருக்கீங்களா :-)). நாங்க இந்த வித்தையை கிளி புடிக்க பயன் படுத்தியது இல்லை. எல்லாம் நீங்க சொன்னமாதிரியே அணில் புடிக்க தான் பயன் படுத்தி இருக்கோம். அந்த புராணத்தை அப்புறம் சொல்றேன். :-)

சிவா said...

பாரதி! வாங்க வாங்க! என்ன? காக்கா கொடுக்கப்புளி திங்குமா..என்னங்க இது ஆச்சரியமா இருக்கு..எங்க ஊரு காக்கா எல்லாம் வீட்டுல தேங்கா திருடும்..கிண்ணம் திருடும்..ஆனா கொடுக்கப்புளி திங்குறத பார்த்ததே இல்லீங்க..உங்க ஊரு காக்கா சைவ காக்கா போல :-)).
இப்படி தான் என்னோட கருப்பன் (ஆடு), மீன் தலையை அப்படியே பச்சையாக தின்பான்..ஆடு ஒரு அசைவ பட்சியா வளர்ந்திச்சி..என்னமோ அப்படி அடிச்சி புடிச்சி திங்கும்..எங்க வீட்டு பூனை தான் பாவம் :-)

சூப்பருங்க..காத்திருந்து கல்ல விட்டு பறிக்கிறது..ஹா..ஹா.. :-)

உங்க கொடுக்கப்புளி மரம் இருக்குதான்னு போய் பாருங்க.

சிங். செயகுமார். said...

அடடே இந்த பதிவ பாக்காம எப்பிடி விட்டேன்! கிராமத்துமணம் சூப்பருங்க! நானு இந்த கொடுக்கபுளி பாத்தது இல்லீங்க ! ஒரு படம் இருந்த எடுத்து போடுங்களேன்! சிலபேரு நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்னு ஓடி போய்டுவாங்க! ஆனா கதையிலேயே கவிதை சொல்லுவாங்களாம்!

G.Ragavan said...

எனக்கு ஓன்னு கதறிக் கதறி அழனும் போல இருக்கு. பின்னே.....அந்தக் கெணத்தடி கொடுக்காப்புளி மரங்க ரெண்டும் கண்ணு முன்னாலயே நிக்கே! ஒன்னு கெணத்துக்கு அந்தப்பக்கம். அது நம்ம வீட்டுக்கு. இன்னோன்னு இந்தப் பக்கம். அது மாமி வீட்டுக்கு. நம்ம வீட்டுக் கொடுக்காப்புளி மரம் ரொம்பப் பெரிசு....அதுல எவ்ளோ கொடுக்காப்புளி தெரியுமா....ஏற முடியாது....முள்ளு குத்துமுல்ல....தொரட்டிதான் தெய்வம். தூத்துக்குடீல ஏது காட்டுக் கிளியும் வீட்டுக் கிளியும். அப்பப்ப காக்காதான் வந்து கருவாடப் போடும். அதயாப் பெறக்க?

ஒசரமான தொரட்டியக் கொண்டு இழுக்குறதுதான். பிஞ்சுன்னா தொவக்கும். நல்ல பருங்காய்னா வெள்ல வெளேர்ன்னு தும்பப் பூவாட்டம் இருக்கும். நல்லா பழுத்துருச்சுன்னா......செக்கச் செவேல்னு இனிச்சுக் கெடக்கும். செவந்த கொடுக்காப்புளி கெடைக்கிறது ரொம்பக் கஷ்டம். பள்ளிக்கூட வாசல்ல கூட அத பத்துப்பீசாவுக்கு வாங்கனும்.

இன்னைக்கு அந்தக் கொடுக்காப்புளி மரம் எங்கருக்கோ தெரியாது...ஆனா அது இருந்த எடத்துல வீடிருக்கு.

பரஞ்சோதி said...

சிவா,

தொடர்ந்து உங்க புராணத்தை சொல்லுறேன்னும் எம் புராணத்தை சொல்லுறீங்கன்னு நினைக்கிறேன்.

நல்லாவே சொல்லியிருக்கீங்க.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணிக்கு விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு சென்றால் அங்கே பெரிய கொடுக்காபுளி மரமுண்டு, நான் அங்கே சென்றாலே போதும் என் அத்தை மகள் எப்பாடு பட்டாவது எனக்கு கொடுக்காபுளி பறிச்சி கொடுப்பார்.

தின்னு முடிச்சிட்டு அவளை நாலு சாத்து சாத்துவேன்.

SnackDragon said...

சரி விடுங்க சிவா,
கிளி பேரைச்சொல்லி நிறைய பொட்டுக்கடலையாவது சாப்பீட்டீர்கள் தானே? ;-)

பீட்டர் அண்ணனை கேட்டதாகச் சொல்லுங்கள்

ENNAR said...

அதிகமாக தின்றால் வாயில் புண் வரும்
அது கிளிகளுக்குத்தான்

சிவா said...

தம்பி சிங்கு! கோவிச்சுக்காதீன தம்பி! கொத்தனார் வேற சும்மா கெடக்காம கவிதைன்னு சொல்ல, தெரியாம ஆமாம் சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோங்க:-)). இனி கவிதைன்னு ஒரு வார்த்தை சொன்னேன்னா, உங்க கவிதையாலையே என்னிய வையுங்க :-)).

கொடுக்காப்புளி பார்த்ததில்லையா..ஆச்சரியமா இருக்கே..ஊருல இருந்தாலும் எங்கணயாவது தேடி படம் புடிச்சி போடலாம்..இங்கே இருந்து என்ன பண்ண :-))

சிவா said...

வாங்க ராகவன்! உங்களுக்கு இந்த கொடுக்காப்புளி பதிவு புடிச்சதா :-))
//** எனக்கு ஓன்னு கதறிக் கதறி அழனும் போல இருக்கு **// அழுவாதீங்கய்யா! நீரு ஒரு வீடு கட்டி அதே மாதிரி ரெண்டு செடி நட்டி மரமா ஆக்கிடலாம். (அப்பார்ட்மெண்ட் வாங்கலியே :-)). அப்புறம் தொட்டியில தான் வளர்க்கணும்.

//** தூத்துக்குடீல ஏது காட்டுக் கிளியும் வீட்டுக் கிளியும். அப்பப்ப காக்காதான் வந்து கருவாடப் போடும். அதயாப் பெறக்க? **// ஹா ஹா ஹா.. கடல்ல இருந்து நேரே புடிச்சிட்டு வருமா :-))

//** இன்னைக்கு அந்தக் கொடுக்காப்புளி மரம் எங்கருக்கோ தெரியாது...ஆனா அது இருந்த எடத்துல வீடிருக்கு. **// நீங்க தம்பி படத்துல வர்ற மாதிரி ஒரு ஆணி அடிச்சி அந்த மரத்த காப்பாத்திருக்கலாம் :-)))

சிவா said...

வாங்க பரஞ்சோதி! //** தொடர்ந்து உங்க புராணத்தை சொல்லுறேன்னும் எம் புராணத்தை சொல்லுறீங்கன்னு நினைக்கிறேன். **// பரமன்குறிச்சி நம்ம ஊரு பக்கத்துல தானே. அப்புறம் ஒங்க கதையும், ஏங்கதையும் ஒன்னு தானே.. :-))

//** நல்லாவே சொல்லியிருக்கீங்க. **// ஒங்களுக்கு புடிச்சா சரி :-)) நம்ம பொளப்பு ப்ளாக்ல ஓடிரும் :-))

//** தின்னு முடிச்சிட்டு அவளை நாலு சாத்து சாத்துவேன். **// அடடா! என்னைய்யா இது..அநியாயமா இருக்கு..ஒங்களுக்கு அப்போ யாரும் 'சிறுவர் பூங்கா' பரஞ்சோதி மாதிரி நீதி கதை சொல்லி கொடுக்கலையா :-))

சிவா said...

வாங்க கார்த்திக்ராமாஸ்!

//** சரி விடுங்க சிவா,
கிளி பேரைச்சொல்லி நிறைய பொட்டுக்கடலையாவது சாப்பீட்டீர்கள் தானே? ;-) **// ஏதோ..கொடுக்காப்புளி தான் கெடைக்கல..கடலையாவது கெடச்சுன்னு சந்தோச பட்டுக்க வேண்டியது தான்.

//** பீட்டர் அண்ணனை கேட்டதாகச் சொல்லுங்கள் **// கண்டிப்பா :-). எங்க குரு அல்லவா :-)

சிவா said...

வாங்க என்னார்! // **அதிகமாக தின்றால் வாயில் புண் வரும்
அது கிளிகளுக்குத்தான் **// புரியலீங்களே :-(

துளசி கோபால் said...

பேசாம தலைப்பை 'புளியும் கிளியும்'னு வச்சிருக்கலாம்:-)

சிவா said...

//** பேசாம தலைப்பை 'புளியும் கிளியும்'னு வச்சிருக்கலாம்:-) **// துளசி அக்கா! அடடா நல்ல நல்ல தலைப்பெல்லாம் கொடுக்கறீங்களே. நன்றி அக்கா :-). புளி என்றால் புளிக்குமே அப்படின்னு எல்லோரும் படிக்காம போய்டக்கூடாதே :-))

பரஞ்சோதி said...

//** தின்னு முடிச்சிட்டு அவளை நாலு சாத்து சாத்துவேன். **// அடடா! என்னைய்யா இது..அநியாயமா இருக்கு..ஒங்களுக்கு அப்போ யாரும் 'சிறுவர் பூங்கா' பரஞ்சோதி மாதிரி நீதி கதை சொல்லி கொடுக்கலையா :-))//

சிவா, நான் பாட்டுக்கு இன்னும் இன்னும், மேலே மேலே என்று கேட்டுக்கிட்டே இருப்பேனா, கிடைக்கிலேன்னா அடி கொடுத்துட்டு ஓடி போயிடுவேன், அப்புறம் முருக்கவத்தல், இலந்தை பழம், பருத்தி காய், வெள்ளரிக்காய் தின்ன கதை எல்லாம் இருக்குது.

G.Ragavan said...

// வாங்க ராகவன்! உங்களுக்கு இந்த கொடுக்காப்புளி பதிவு புடிச்சதா :-)) //
புடிக்காமலா ஓன்னு அழுத்தோணீருக்கும்.

// அழுவாதீங்கய்யா! நீரு ஒரு வீடு கட்டி அதே மாதிரி ரெண்டு செடி நட்டி மரமா ஆக்கிடலாம். (அப்பார்ட்மெண்ட் வாங்கலியே :-)). அப்புறம் தொட்டியில தான் வளர்க்கணும். //

வாங்கீட்டேனே..........அப்ப தொட்டி வாங்கீரவா? (பெங்களூருல நெலம் வாங்கி வீடு கட்டனும்னா....ஓசூர்லதான் கெட்டனும்...கொள்ள வெல சொல்றானுக)

////** தூத்துக்குடீல ஏது காட்டுக் கிளியும் வீட்டுக் கிளியும். அப்பப்ப காக்காதான் வந்து கருவாடப் போடும். அதயாப் பெறக்க? **// ஹா ஹா ஹா.. கடல்ல இருந்து நேரே புடிச்சிட்டு வருமா :-)) //

கடல்ல புடிச்சிக் குப்புற விழுந்துச்சு...அட மீம்பிடித் தொறமுகத்துக்குப் போனா நெறையா கெடைக்குமுல்ல...அதக் கொத்திக்கிட்டு வரும்.

////** இன்னைக்கு அந்தக் கொடுக்காப்புளி மரம் எங்கருக்கோ தெரியாது...ஆனா அது இருந்த எடத்துல வீடிருக்கு. **// நீங்க தம்பி படத்துல வர்ற மாதிரி ஒரு ஆணி அடிச்சி அந்த மரத்த காப்பாத்திருக்கலாம் :-))) //

அதென்ன படம். நான் பாக்கலையே.....கடைசீயா என்னமோ ஆஸ்கார் வாங்குன படமுன்னு ஆபீஸ்ல எல்லாரும் போனோம். வேற எதுவும் பாக்கலையே.

துளசி கோபால் said...

என்ன புளி பிடிக்காதா? நீங்க வேற! தமிழ்மணவாசகர்களுக்கு 'மசக்கை' கூடுதலாக்கும்!
வெளிநாட்டுலே இருக்கறவங்களைக் கேக்கவே வேணாம், இங்கே புளி விக்கற விலையிலே,சக்கையாப்
பிழிஞ்சுட்டுல்லே விடுவோம்:-)

சிவா said...

பரஞ்சோதி!
//** அப்புறம் முருக்கவத்தல், இலந்தை பழம், பருத்தி காய், வெள்ளரிக்காய் தின்ன கதை எல்லாம் இருக்குது **// ஆஹா! நெறைய கத இருக்கும் போல..எப்போ எடுத்து விட போறீங்க?

ராகவன்! உங்களுக்கு தொட்டி தான். ஊருல ஒரு ஏக்கர்ல ஒன்ன வளைச்சி போட்டு கொடுக்காப்புளி தோட்டம் போடலாம். என்ன நாஞ்சொல்றது.

துளசி அக்கா :-))
//** இங்கே புளி விக்கற விலையிலே,சக்கையாப்
பிழிஞ்சுட்டுல்லே விடுவோம்:-) **// ஹாஹாஹா. ப்ரிஞ்சில ஊற வச்சி..தூர போடும் போது வெறும் சக்கை தானே.. :-))

தாணு said...

சிவா
நாந்தான் கடைசி போலிருக்கு. கொடுக்காப்புளி சொல்லி மறுபடியும் ஆட்டோகிராப் பார்க்க வைக்கிறீங்களே. எங்க வீட்லே கோடை விடுமுறைன்னா கூழ் வற்றல் மொட்டை மாடியில் காய விடுவாங்க, அதுக்கு காவல் நாங்கதான், இல்லாட்டி காக்கா கபளீகாரம் பண்ணிடும். எங்களுக்கு ஒதுங்க கொடுக்காபுளி மரத்தின் நிழல்தான் உண்டு. அதிலேயும் ரெண்டு குச்சி வைச்சு ஒரு பெட்சீட் போட்டு இடம் செட் பண்ணிட்டு `கட்பார்'(சீட்டுக் கட்டு) ஆடுவோம். போரடிக்கும்போது மரத்தில் தாவி கொடுக்காப்புளி பறிப்போம். பக்கத்து மாடிக்குப் போனால் கிளை கொஞ்சம் பக்கம் என்பதால் 3 அடி சந்தை ஆகாசத்தில் தாண்டிய அட்வென்ச்சரெல்லாம் உண்டு. ம்....ம்.... மறக்க முடியுமா?

சிவா said...

உஷா அக்கா! ராகவன் ஓசூர்னு சொன்னவுடன் உங்க நினைவு தான் வந்தது. ராகவனுக்கு ஒரு ரெண்டு ஏக்கரை வளைச்சி போடுங்க. சீக்கிரம் வருவார் :-))

//** Neenga azhaga ezhudhareenga!! ADhanalayae innum konjam taste a iruku!!! **// நன்றி அக்கா!

நான் காசு கொடுத்தெல்லாம் கொடுக்காப்புளி வாங்கினது இல்லை
:-). பாட்டிக்கிட்ட ஜவ்முட்டாய் தான் வாங்கி தின்னுருக்கேன் :-). அதுல கடிகாரம் கட்டி விடுவாங்களே :-))

//** Adhil kurangu ( vidham vidhamana size la) **// முதலில் என்னிய தான் சொல்றீங்களோன்னு பயந்துட்டேன். உண்மையான கொரங்கா..அப்பாடா...பேசாம குரங்கா பொறந்திருக்கலாம்னு சொல்றீங்களா :-)) ..நாங்க சின்ன வயசுல மரம் ஏறினா குரங்கு தோத்துரும். அது ஒரு காலம் :-)

எல்லார்கிட்டயும் கதை இருக்கு. நான் உங்களுக்கு ஒரு ப்ளாக் ரெடி பண்ணி தரவா..உஷா அக்கா புராணத்தை தொடங்க :-))

சிவா said...

தாணு அக்கா! வாங்க வாங்க. ஆமாம் நீங்க தான் கடைசி..சரி.சரி..டாக்டர்..அடிக்கடி வர்றீங்களே..அதுக்கே நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.

எல்லோருடைய ஆட்டோகிராப் இது தானே..கூழ்வற்றலுக்கு காவல் இருந்து காக்கா வெறட்டுறது பெரிய வேலையாச்சே..திருட்டு காக்கா நமக்கே வெளாட்டு காட்டுமே..இப்போ கூழ்வற்றல் செய்றீங்களா..இப்படி நல்லத எல்லாம் இங்கே அமெரிக்கவுல கெடக்குறவன்னு நியாபக படுத்தறீங்களே..இது நியாயமா.. :-))

சீட்டுகட்டு எல்லாம் நான் வெளையாடியதே இல்லீங்க..என்னமோ பெரிய தப்பு மாதிரி வளத்துட்டாங்க..இன்னிக்கும் சீட்டுல பேரு கூட தெரியாது :-)) ஏதோ ஆர்டின், ஏஸ்..அப்படிங்கறாங்க :-))

//** பக்கத்து மாடிக்குப் போனால் கிளை கொஞ்சம் பக்கம் என்பதால் 3 அடி சந்தை ஆகாசத்தில் தாண்டிய அட்வென்ச்சரெல்லாம் உண்டு. **// நெனைச்சி பார்த்தா நல்லா இருக்குல்லா..அந்த தைரியம் இப்போ இருக்கா :-)

நிலா said...

சிவா,
சிரிச்சிக்கிட்டே படிச்சேன். நல்லா இருக்கு. பீட்டர் அண்ணன் வீரமானவராவும் பாசமானவராவும் இருப்பார் போல்ருக்கு?

பாவமே பாவம், உங்க பூனை :-)

கிளிகளுக்கு பேரொண்ணும் வைக்கலையா?

சிவா said...

வாங்க நிலா!

//** பீட்டர் அண்ணன் வீரமானவராவும் பாசமானவராவும் இருப்பார் போல்ருக்கு? **// ஆமாங்க. எங்க செட்லயே ரொம்ப மூத்தவன். ஆனா எங்களை சேர்த்துகிட்டு சுத்துவான். கேட்டதெல்லாம் புடிச்சி/பறிச்சி கொடுப்பான். காடு காடா அவனுடன் சுத்திக்கிட்டு இருப்போம். ரொம்ப பாசமா பழகுவான். நாங்களும் உரிமையா அவன் கிட்ட எதுன்னாலும் கேட்போம். ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி..அனைத்தும் தெரிந்தவர். வீரன். அது ஒரு லைப் நிலா. கோடி கொடுத்தாலும் கெடைக்காது.ம்ம்ம்ம்..

கிளிக்கு பேரெல்லாம் வைக்கலை. பறவைகள் விலங்குகள் அளவுக்கு புத்திசாலி இல்லை (பேசும்னு சொல்றாங்க..என் கிளி கத்தவே செய்யாது :-) ஆடு, மாடு, நாய் அளவுக்கு கிளி எல்லாம் வரலை.

சிவா said...

Prakash! Please send me a mail to gsivaraja@gmail.com. I will explain you.

சிவா said...

அண்ணா!

//** பெரிய கிளியை கன்னி வைத்து பிடித்திருக்கலாமே. **// கண்ணி வச்சி நெறைய நேரம் காக்கா தான் மாட்டி இருக்கு. கிளி எங்கே மாட்டுது. அது ரொம்ப வெவரம் :-)

குமரன் (Kumaran) said...

சிவா, நானும் சின்ன வயசுல ஸ்கூல் முன்னாடி வித்த கொடுக்காப்புளி நிறைய வாங்கி சாப்புட்டதுண்டு. நீங்க சொல்ற மாதிரி நேரா மரத்துல இருந்து பறிச்சுச் சாப்புட்டதில்ல.

நிறைய செல்லப் பிராணிகளை வளர்த்திருப்பீங்க போலிருக்கே. நான் சின்ன வயசுல நாலு கலர் கோழிக்குஞ்சு வளர்த்ததோட சரி. அந்த நாலுல ரெண்டு தொட்டித் தண்ணில விழுந்து செத்துப் போச்சு. மிச்ச ரெண்டையும் பக்கத்து வீட்டுப் பூனை தின்னிடுச்சு. அதுக்கப்பறம் எதையும் வளர்க்கலை (என் தொந்தியை தவிர) :-)

சிவா said...

குமரன்! காசு கொடுத்தாவது அப்போ கொடுக்காப்புளி கெடைச்சுதே..இப்போ அதுவும் இல்லாம போச்சுன்னு நெனைக்கிறேன்.

ஆமாம். எல்லாமே வளத்திருக்கிறேன். கைல மாட்டுற எல்லாத்தையுமே வீட்டுக்கு கொண்டு போய் வளக்கிறது. என்ன! செத்துப்போச்சுன்னா 'ஓ' ந்னு ஒரு நாள் பூரா ஒக்காந்து அழுறது.ம்ம்ம்..
நாலு கோழிகுஞ்சு வளத்து இப்படி நாலையும் பறிகொடுத்துட்டீங்களே..ம்ம்ம்..நாயாவது வளத்திருப்பீங்க இல்லையா..

தொந்தியா..அது தானா வளருது ஐயா..ஹா ஹா ஹா.

Anonymous said...

thaalaiva

ayyanar samy,karrupenna samy naan ithu vaaraikum chennaila paathathu illa appu,gramathu alu neer ivvarugalai patri naala therungu irrukum....

engalukum theriyura madiri oru blog podu apuu

unnaku pooniyama pohatum
ganesh

சிவா said...

வாங்க கணேஷ்! என்னோட ப்ளாக் படிக்கறீங்களா :-). சந்தோசம் நண்பரே. எங்க ஊர்ல அய்யனார், கருப்பண்ணன் எல்லாம் இல்லீங்க. சுடலை மாடன் உண்டு. கோர்வையாக வரும் போது அதை பற்றி ஒரு பதிவு போடறேன்.