Friday, September 23, 2005

பிந்துகோஷ் கட்சி ஆரம்பிக்கிறார்..

இப்போதெல்லாம் அந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார், இந்த நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார். இதுதான் பத்திரிகைகளில் செய்தி. அவரது கூட்டத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள் என்று செய்தி வருகிறது.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு 10, 15 வருடம் இருக்கும், நான் சிறுவனாக இருக்கும் போது. ஏதோ ஒரு தேர்தல் வந்தது. எங்க தாத்தா என்னிடம் கேட்கிறார் "ஏல, பிந்துகோஷ் வர்றான்னு சொன்னாங்கலால..எப்போல வர்றா?.". தாத்தா ஏதோ ஸ்ரீதேவி வரபோற மாதிரி காலைல இருந்தே கேட்டு கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு வண்டியில் சென்று கொண்டே அறிவிப்பு கொடுக்கிறார்கள். "இதோ ! இன்னும் சற்று நேரத்தில் உங்கள் முன், திரைப்பட நடிகை, நகைச்சுவை மின்னல், நடிகை பிந்துகோஷ் உங்கள் முன் தோன்றி வோட்டு கேட்பார்". ஊர் மொத்தமும் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பார்த்துகொண்டிருக்கும் (என்னையும் சேர்த்து தான்). பிந்துகோஷ் கொஞ்ச நேரத்தில் ஒரு ஜீப்பில், மக்களை பார்த்து கையை அசைத்து கொண்டே வந்தார். ஊர் மக்கள் முகத்தை பார்க்க வேண்டுமே! ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட மாதிரி.

ஓமகுச்சி நரசிம்மனை நெல்லை இரயில் நிலையத்தில் பாத்தாலும் 'மக்கா! நான் ஓமக்குச்சி நரசிம்மனை பார்த்தேன்டா" அப்படின்னு பீற்றி கொள்ளும் இந்த பொது மக்களை பற்றி ஒரு நடிகனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்!. எல்லாரும் திரையில் ஆடி, வாய்ப்பு இல்லாமல் ஓய்ந்து போன காலத்தில் தான், மக்கள் மீது பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. கூட்டம் சேர்க்க உங்கள் சாதி பற்றும் சேர்ந்து கொள்கிறது. திரையில் வாய் கிழிய நாட்டு பற்று பற்றியும், சாதி வெறியை எதிர்த்தும் 3 பக்க வசனம் பேசும் உங்களுக்கு, கூடும் கூட்டத்தில் பாதிக்கும் மேல், நான் மேலே சொன்ன கூட்டம் தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வாருங்கள்! மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் ஒரு பரபரப்பு வேணும்ல. கூட்டத்தில் ரசிகர்கள் கொந்தளிப்பு. நடிகரின் வேட்டி அவிழ்ப்பு. இப்படி எல்லாம்.

Wednesday, September 21, 2005

திருவாசகம்

ஒரு வழியாக இரண்டு வருடமாக காத்திருந்த 'திருவாசகம்' ஒலித்தட்டு (CD) ஜுலை 1 ஆம் தேதி வந்து வெளிவந்தது. நான் ஒரு இளையராஜாவின் பரம ரசிகன் ஆதலால் நம்மலால என்னவெல்லாம் இந்த திருவாசக விற்பனைக்கு செய்ய முடியுமோ அத செய்ய நினைத்தேன். நம்ம நண்பர் ஒருவர் வேற அவர் பங்குக்கு ஒரு 100 CD விற்க போவதாக சொல்ல, நம்மை உசுப்பி விட்டது. காசு கொடுத்து CD வாங்கி இங்கே உள்ள மக்களுக்கு பழக்கமே இல்லை. எல்லாமே இனையத்தில் இருந்து இறக்கி கொள்கிறார்கள்.

நம்ம பங்குக்கு tis-usa கிட்ட இருந்து ஒரு 10 CD அனுப்ப சொன்னேன். ஒரு 20 CD வந்து சேர்ந்தது. வித்தப்புறம் காசு கொடுங்கன்னு சொல்லிட்டங்க. CD விலையை சொன்னதும் எல்லோரும் தலைதெரிக்க ஓடி விட்டார்கள். எல்லாவற்றையும் இந்திய ரூபாயிலேயே மாற்றி பார்த்து பழகி போன நம்ம புத்தி, $15 CD விலை என்றதும், Rs.650 - ஆ ஆ ஆ என்று எட்டி பாக்காலலே ஓட வைக்கிறது. $15 கொஞ்சம் அதிகம் தான். $8 - $10 சரியாக இருந்திருக்கும். தவிர இந்தியாவில் Rs.150 - ம் இங்கே Rs.650 வைத்ததால், நிறைய பேர் இந்தியாவில் இருந்து அனுப்ப சொல்லி விடுகிறார்கள். Rs. 300 க்குள் மேட்டர் முடிந்து விடும் இல்லையா.

சில நண்பர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். மெதுவாக போக ஆரம்பித்தது. tis-usa -ல இருந்து 'நீங்க அங்கே இருக்கற தமிழ் சங்கம், கோவில் எல்லாம் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உதவி பண்ணுவார்கள்" என்று சொன்னார்கள். எனக்கும் சரி என்றே பட்டது.

முதலில் தமிழ் சங்கம். கடல் கடந்து, தமிழை வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறார்கள். இந்த திருவாசகத்திற்க்கும் ஏதாவது உதவி பண்ணுவார்கள் என்று நினைத்தேன். அவர்கள் இனையம் போய் பர்த்தேன். சுனாமிக்கு நிதி கொடுங்க என்று முதல் பக்கத்துலேயே 'ஈ ஈ ஈ' என்று விளம்பரம் பல்லை காட்டியது. வங்கி கணக்கு எண், காசு கொடுக்க விவரம் எல்லாம் தெளிவாக இருந்தது. சுனாமி போய் 6 மாதம் போய் விட்டது, இன்னும் காசு பிரிக்கும் அவர்களின் நாட்டு பற்றை பார்த்து கண் கலங்கி விட்டது. சரி ஒரு இ-மெயில் அனுப்பி பாக்கலாம் அப்படின்னு ஒன்னு அனுப்பினேன். ஒரு வாரம் ஆனது பதிலே இல்லை. பாவம் எல்லாரும் ஜுலையில் டிசம்பரில் வந்த சுனாமிக்கு உதவி செய்ய போய் விட்டார்கள் என்று நினைத்து, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா என்று உறுதி செய்ய, இன்னொரு மெயில் (வேறு ID-ல இருந்து தான்) அனுப்பினேன் , "சார், நான் கொஞ்சம் சுனாமிக்கு பணம் கொடுக்க நினைக்கறேன், விவரம் அனுப்புங்கன்னு'. (புழுவ போட்டா மீன் வெளியெ வந்து தானே ஆக வேண்டும்). அடுத்த நாளே பதில் வந்தது, பணம் அனுப்பசொல்லி விவரங்களுடன். இப்படி இயற்கை அழிவுகள் வந்தால், அடிக்கிற அனுதாப அலையில மீன் பிடிக்க தான் நிறைய கும்மல் கிளம்பிவிடுகிறது. என்னோட திருவாசக மெயிலுக்கு இன்னும் பதில் இல்லை. காசு மேட்டர்னா சொல்லு அப்படின்னு சொல்லறாங்க. என்னே ஒரு தமிழ் பற்று.

சரி, சங்கம் தான் கவுத்துட்டு. கடவுளை பாக்கலாம் அப்படின்னு கோவில் போனேன். ஐயர் தமிழ் தான். பரவாயில்லையே கண்டிப்பா உதவி பண்ணுவார் என்று ஒரு நம்பிக்கை. போய் பேசினேன், "திருவாசகமா..அப்படின்னா என்னா" அப்படின்னு ஒரு குண்டை தூக்கி போட்டாரு. "பள்ளிக்கூடத்துல எல்லாம் 'புல்லாகி பூடாய்' அப்படின்னு படிசிடுப்போமே' - இது நான். ' நியாபகம் வரலை. ஒன்னு பண்ணுங்கோ. ஒரு CD எனக்கு கொடுங்கோ (ஓசி). கேட்டு பாத்துட்டு மத்தவாகிட்ட சொல்லறேன்." இது வேலைக்கு ஆகாதுன்னு, " இங்கே ஒரு நாள் CD வித்துக்கலாமா?. கோவிலுக்கு வெளியே தான் - கேட்டேன். "ஓ! நீங்க என்ன வேணும்னாலும் வித்துக்கோங்கோ. ஆனா, கொஞ்சம் டொனேசன் (donation) மட்டும் கொடுத்துட்டு பண்ணிக்கோங்கோ' . அதோடு அந்த திட்டத்திமும் ஊத்திக்கிச்சு.

பணம் கொடுத்தாதான் எல்லாமே நடக்கும் போலன்னு, நானே நண்பர்கள் எல்லோரிடமும் போய் திருவாசக பாடலை போட்டு காட்டி பேசினேன். கேட்ட எல்லோருமே வாங்கி கொண்டர்கள். கடைசியில மொத்தமாக 35 CD வித்தேன். ஏதோ ஒரு சின்ன திருப்தி..

Tuesday, September 20, 2005

இன்னொரு வாத்து

இப்போதெல்லாம் வாத்து படம் இல்லன்னா இனையதளமாக யாரும் மதிப்பது இல்லை என்பதால் போன வாரம் ஒரு வாத்தை தேடி ஏரி ஏரியாய் தேடி கடைசியில் சிலதுகளை படம் எடுத்தேன். வாத்து சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படம் அவ்வளவு சரியாக வரவில்லை.















இந்த இனையத்தில் வாத்து கூப்பிட விசில் எல்லாம் விற்கிறார்கள். பொதுவாக Tom & Jerrry கார்ட்டுனில் Tom இதை வைத்து தான் வாத்தை கூப்பிடும். நீங்களும் வேணும்னா வாங்கி பாருங்க.

Monday, September 19, 2005

பருவ காலங்கள்


எல்லாரும் படம் காட்டறாங்க. நாமும் காட்டலாமே என்று இந்த பதிவு..

அமெரிக்கா வந்த புதிது. சரியான குளிர் நேரத்தில் வந்து சேர்ந்தேன். மைனஸ் 25 குளிர் எல்லாம் சாதாரணமாக போகும். சர்வ நாடியும் ஒடுங்கி போய் விடும். எங்கு பார்த்தாலும் பளீறென்று வென்மையாக பனி. வெறும் தரையையே பார்க்க முடியாது. திரைபடங்களில் மட்டுமே பார்த்த பனி மலைகள். கதாநாயகனும் கதாநாயகியும் பனிகட்டியை எடுத்து எறிந்து கொள்வார்கள். நமக்கு கேட்கவா வேண்டும். வார இறுதி நாட்களில் எனது அறை நண்பர்கள் மூன்று பேருடன் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம். ஆளுக்கொரு கேமரா இருக்கும். பனியில் படுத்துகிட்டு ஒன்னு, பனிக்கட்டியை தலையில் வைத்துகொண்டு ஒன்னு, தலைகீழாக நின்னு ஒன்னு என்று ஜோராக படம் தயாராகி கொண்டிருக்கும் (எல்லாம் ஊரில் படம் காட்ட தான்.)

விசயத்துக்கு வருகிறேன். பள்ளிக்கூடத்தில் 4 பருவ காலங்கள் படித்ததாக நியாபகம். நம்ம ஊரில் கோடை காலம் மட்டும் தான் நமக்கு தெரியும் (சென்னை வெயில் காட்டு காட்டுன்னு காட்டும்ல). மழை காலத்தில் வானத்தை பார்த்து பார்த்தே மழை காலமும் ஓடி விடும். வசந்த காலமும், இலை உதிர் காலமும் (மரம் இருந்தாதானே இலை உதிர?) பாடத்தில் படித்ததோடு சரி (ஊட்டி போகனுமோ என்னமோ?).

இங்கே அமெரிக்காவில் எல்லா காலங்களும் அழகாக தெரிகிறது. பனி காலத்தில் (Winter) ஒரே வெண்மை நிறம் ( 6 மாதம்.. கொடுமை). அது முடிந்ததும் இளம் பச்சை நிறத்தில் வசந்த காலம், அழகு நிறங்களில் பூக்கள், அப்போது தான் தளிர் விடும் மரங்கள். அதுக்கப்புறம் கரும் பச்சை நிறத்தில் கோடை காலம். பின் வரும் ஆரஞ்சு/மஞ்சள் நிற இலையுதிர் காலம். அழகு தான். படத்தையயும் பாருங்களேன் (எல்லா படமும் நான் தான் எடுத்தேன். எல்லாமும் ஒரே தெரு தான். பருவ காலங்கள் தான் வேறு)

பனி காலம் (Winter) - வெள்ளை நிறம்.






வசந்த காலம் (Spring) - இளம் பச்சை


கோடை காலம் (Summer) - கரும் பச்சை









இலையுதிர் காலம் (படத்திற்க்கு இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள். இப்போது தான் கோடை முடிய போகிறது).

Saturday, September 17, 2005

5 நிமிடத்தில் நீங்கள் கோடீஸ்வரனாக..

.

என்னங்க ஏதோ காளான் வளர்க்க, மெழுகுவர்த்தி செய்ய விளம்பரம்னு நெனைச்சிங்களா?. இல்லீங்கோ!. இது வேற விசயம்.. நீங்கள் கோடீஸ்வரனாக உங்களுக்கு தேவை கீழ்கண்டவற்றுள் ஒன்று,

சில பசு மாடுகள்..இல்லன்னா பரவாயில்லை.. எளிதா ஒன்னு..ஓரு முறுக்கு சட்டி, 1 லி எண்ணை, கொஞ்சம் கடலை மாவு.. கொஞ்சம் வசதி இருந்தா ஒரு பேருந்து.. ஒன்னுமே இல்லயா, கவலைய விடுங்க… உங்க வீட்டுல உங்க தாத்தா பழைய பெட்டிய தொறந்து பாருங்க, ஏதாவது மூலிகை செய்ய ரகசியம் எதாவது இருக்கும்.. இது தவிர முக்கியமான ரெண்டு பேர்… ஒரு திரைப்பட இயக்குனர்.. ஒரு இசை அமைப்பாளர்… ஹீரோ!!! . அது நீங்க தாங்க…

இப்போ புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். போன வாரம் ‘ஒரு நாள் ஒரு கனவு’ படம் பார்த்தேன். ஒரு காட்சியில ஸ்ரீகாந்தோட அம்மா” டேய்.. நீ அவ இடத்துக்கு போய் (அதாங்க அந்தஸ்து) அவள கூட்டி வர வேண்டும்’ அப்படிம்பாங்க.. படமும் கிட்டதட்ட முடியும் நேரம் ஆகிவிட்டது. இனி ஒறே வழி.. “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்’ அண்ணாமலை பாட்டு மாதிரி பாட்டு தான்னு நினைச்சேன். இருந்தாலும் பாசில் மேல ஒரு நம்பிக்கை ( படம் இந்த காட்சி வரும் போதே டப்பா டான்ஸ் ஆடிபோய்தான் இருத்தது). போட்டாரு பாருங்க ஒரு பாட்டை ‘இளமைக்கோர் வேகம் உண்டு , நீயும் எழுந்து வா’ அப்படின்னு. 5 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கோடீஸ்வரனாயிட்டார். பாசில் நீங்களுமா!

விக்ரமனிடமே இருந்த காப்புரிமையை இப்போ சுரேஷ் கிருஷ்ணா, பாசில், ஆர். வீ. உதயகுமார் (படம் ‘நந்தவன தேரு’) எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எதற்க்கும் விக்ரமன் ஒரு வழக்கு தொடர்வது நல்லது.

எல்லா பாட்டுமே5 நிமிடம் வரும் பாட்டு என்றாலும் நல்ல காமெடியா தான் இருக்கு. கதாநாயகன் பஞ்ச பரதேசியா இருப்பார். பாட்டு உச்ச சுதியில் ஓடி கொண்டிருக்கும். ஊருல இருக்கற மில், பள்ளிகூடம்(சைடுல பொது சேவையும் பண்ணறாராம்) ஹீரோ பேருல காண்பிப்பாங்க. ஹீரோ தன் குடும்பத்தை ஒரு பெரிய வீட்டுக்கு மாற்றுவார். குடும்பமே ‘ஆ’ என வாயை பொளந்துகிட்டு நிக்கும். சுத்தி இருக்கற காமெடியனுங்க எல்லாருக்கும டை (Tie) கட்டி விட்டுருவாங்க. அவங்களும் நடக்க முடியாம கஷ்டப்பட்டு ஹீரோ கூட ஓடிக்கிட்டு பரபரப்பா இருப்பாங்க. ஹீரோ எதாவது கோப்புகளிள் கையெழுத்து போட்டுகிட்டே இருப்பார். தலைமுடியையும் மாற்றி மழுங்க சீவீ இருப்பார் (சீரியசா ஆயிட்டாராம்).

இந்த மேட்டர் சீரியல் பண்ணறவங்க கைல கெடைச்சுதுன்ன 365 எபிசோடா மாத்திர மாட்டாங்க…

முதல் பதிவு

தமிழ் மணமும், இந்த ப்ளாக்குகளும் எனக்கு புதிது. நான் இதுவரை எழுதியதும் இல்லை. நான் இலக்கியவாதியும் கிடையாது. மனதில் தோன்றுபவற்றை தமிழில் எழுத நிறைய ஞானம் வேண்டியது இல்லை என, எழுத ஆரம்பிக்கிறேன். உள் குத்து, வெளி குத்து எல்லாமும் வரவேற்க்க படுகின்றன. என் தமிழில் குற்றம் இருப்பின், சுட்டி காட்டுங்கள்.

அன்புடன்,
சிவா.