Friday, May 12, 2006

சாமி வருது...சாமி வருது

ஊர்சனம் மொத்தமும் அம்மன் கோவில் வேப்ப மரத்தடியில் கூடி இருந்தது. 'ஏல! நம்ம முத்துசாமி தாத்தா வரல பாரு. கூட்டி வாங்கல' சின்ன பசங்களை விரட்டிக்கொண்டிருந்தார் பண்ணை.

எல்லோரும் வந்தவுடன் பண்ணை ஆரம்பித்தார். 'சித்திரை வரப்போவுது. சுடலைக்கு கொடை நடத்தணும். வரி போடுறதுக்கு தான் எல்லாரையும் வரச் சொன்னேன்'.

'ரெண்டு வருசமா சாமி வரவே இல்ல. என்ன குத்தமோ தெரியல. அதான் இந்த தடவ கொடைய சிறப்பா செஞ்சிப்புடணும். என்னடே சொல்றீங்க. வரிப்பணம் கூட கொஞ்சம் ஆனா கூட பரவால்ல' முத்துச்சாமி தாத்தா கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்.

கொடை வரி 50 ரூபாய் என்று முடிவு செய்து, கொடைக்கான நாளும் குறித்தாகி விட்டது. "50 ரூபாய்ல கரகாட்டம்லா வருமாடே. பாத்து வரிய போடுங்கப்பா' கரகாட்ட ரசிகர் மன்ற தலைவர் துரை மாமா லேசாக சத்தம் கொடுத்துப் பார்த்தார். 'சும்மா கெடடே! போன தடவையே அவ ஆடுன ஆட்டத்துல வீடு ரெண்டு பட்டு போச்சு. வீட்ல கேட்ட திட்டு போதாதா. இந்த தடவை காசு இருந்தா திரை கட்டி ஒரு படம் போட வேண்டியது தான். கரகாட்டம் எல்லாம் இந்த தடவ கெடையாதுடே'.

'என்ன அதே கருப்பு-வெள்ள படம் தான. கொஞ்சம் கலரா போடுங்கடே'

'50 ரூவா வரில எங்கடே கலருக்கு போறது. ஆளுக்கு ஒரு கலர் கண்ணாடி போட்டுட்டு பாக்க வேண்டியது தான்'

ஊர் பண்டாரத்திடம் கொடைக்கு வேண்டிய பொருட்கள், விவரங்கள் கேட்டுக் குறித்து கொண்டார் பண்ணை. கூட்டம் கலைந்தது.

---

இப்படித் தாங்க ஆரம்பிக்கும் எங்க ஊரு கோவில் கொடை.

---

வியாழன் மதியம் உலகத்துக்கே கேக்கற மாதிரி குழாய்ல எல்.ஆர்.ஈஸ்வரி 'மாரியம்மா..எங்கள் மாரியம்மா' பாட ஆரம்பிக்கும் போது 'லே! செட் வந்துட்டுல' அப்படின்னு நாங்க எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிற கோலிக்காவ அப்படியே போட்டுட்டு கோயிலுக்கு ஓடுவோம். வெளியூர்ல செட்டில் ஆகி கொடைக்கு மட்டும் வெள்ளையும் சுள்ளையுமா வரும் ஒரு கூட்டம் ஒன்னொன்னா மெதுவா வர ஆரம்பிக்கும். அவிங்க அள்ளிட்டு வர்ற ரெக்சோனா சோப்பையும் லக்ஸ் சோப்பையும் சொந்த காரனுவலுக்கு பங்கு வைக்கவே ராத்திரி ஆயிரும். அவிங்க ஆச்சி ஒரு சோப்ப எடுத்து மணிக்கணக்கா மணத்துக்கிட்டே 'யய்யா! ராசா. மெட்ராஸுல இந்த சோப்பு போட்டு தான் குளிக்கறியா. நல்லா வாசமா இருக்கு' (போ! ஆச்சி! எல்லாம் ஊருக்கு வரும் போது போடுற சோப்பு..சே! படம் தான். அங்கே ஊரே சேர்ந்து போட்டாலும் வருசம் புல்லா கல்லு மாதிரி உழைக்கும் லைபாய் தான்).

---

'ஏ! வில்லுப்பாட்டு ஆரம்பிச்சிட்டாவ. கெளம்புங்கடே' ஒரு பாய தூக்கிக்கிட்டு எல்லாரும் கெளம்ப ஆரம்பிப்பாங்க. மாயாண்டி கதையோ, அம்மன் கதையோ போய்கிட்டு இருக்கும். 'ஏண்டே! போன தடவையும் இவள தான கூட்டிட்டு வந்தீங்க. வேற ஆளே கெடைக்கலையா' நம்ம ஊரில் குசும்பு பண்ண நம்ம குரு மாமா. 'அத்தக்கிட்ட தான் கேக்கணும் மாமா. கேட்டுச்சொல்லவா' அப்புறம் குரு மாமா சத்தமே இருக்காது. அப்படியே சாமிக்கு அலங்காரம், சாம கொடைக்கு எல்லாம் போய்கொண்டிருக்கும்.

--

ராத்திரி பண்ணிரண்டு மணிக்கு சரியா சாம கொடை ஆரம்பிக்கும். ம்ம்..ரெண்டு வருசமா சாமி ஆடல. இந்த தடவையாவது சாமி வரணும்.. சாமி கும்பிட்டுக்கிட்டே இப்படி எல்லோரும் கவலையா யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது வேடிக்கை பாக்க வந்த அசலூரு காரர் ஒருத்தர் மெதுவா ஆட ஆரம்பித்தார். 'லே! அந்நா பாருங்கல. அசலூரு காரன் ஆடறான். புடிச்சி அமுக்குங்கல' பண்ணைக்கிட்ட இருந்து கட்டளை பறந்து வந்தது. பசங்க எல்லோரும் ஓடிப்போய் அவரை புடிச்சி அமுக்க ஆரம்பிச்சாங்க. சாமி ரொம்பவே வேகாமா, வெறித்தனமா ஆட ஆரம்பிக்க, 'அட வெளங்கா மட்டைங்களா. புடிச்சி அமுக்கச் சொன்னா. நீங்க அவன் கூட சேர்ந்து சாமி ஆடிக்கிட்டு இருக்கீங்க. நல்லா அமுக்குங்கல'. ஒரு வழியா வந்த சாமிய வெரட்டி உட்டுட்டு தான் மறு சோலி.

இதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு தாங்க. எங்க ஊருல சாமி ஆடுறவங்க தான் அடுத்த கொடை வரை வாரா வரம் கோயிலுக்கு பூஜை பண்ணணும். அசலூர் காரன் வந்து தவறாம பூச பண்ணுவானா?..அதுவும் அசலூர் காரன் பூசை போடுறதா..இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறதால தான் இந்த ஏற்பாடு.

அப்புறம் மேளம் உச்சக்கட்டத்தில் அடிக்க, மெதுவாக எங்க ஊரு குட்டையரு ஆட ஆரம்பித்தார். 'லே! சாமி வந்துட்டுல' எல்லோர் முகத்திலும் தான் என்ன ஒரு சந்தோசம். மட மடவென்று சுடலை மாடனின் அங்கி மற்றும் தலைப்பாகை எல்லாத்தையும் ஒருவர் குட்டையருக்கு மாட்டி விடுவார். 'பந்தம்! பந்தம் ' ஆடிக்கிட்டே சாமி கேட்க கதகதன்னு எரியற தீப்பந்தம் ஒன்று சாமி கையில் கொடுக்கப்படும். ஒரு கையில் தீப்பந்தமும், மறு கையில் சூலாயுதமும் பிடித்துக்கொண்டு வெறியாக ஆடும் குட்டையரை பார்த்து நாங்க சின்ன பசங்க எல்லாம் ஒரு 10 அடி தள்ளி நின்னுக்குவோம்.

அடுத்த கட்டமா சாமி வாக்குச்சொல்ல ஆரம்பிக்கும். கையில் திருநீரோடு முன்னால் நிற்கும் ஒவ்வொருத்தருக்கும் திருநீறு கொடுத்து நல்வாக்கு சொல்ல ஆரம்பிக்கும். வாக்கு எல்லோருக்கும் உண்டு. கல்யாணம் ஆகாத பிரபாகர் அண்ணணுக்கு ஒரு தடவை சாமி வாக்குச் சொன்னது. அண்ணன் பௌயமா சாமி முன்னாடி போய் நிக்க, சாமி 'உனக்கு சம்சாரம்..சம்சாரம்' என்று தெக்க கைய காட்ட...

'ஏல! சாமி உனக்கு பொண்ணு தெக்க தான் இருக்குன்னு சொல்லுதுல'

'தெக்க என்ன இருக்கு. சுடுகாடு தாம்ல இருக்கு' நம்ம குசும்பு குரு மாமா.

'போ மாமா! அத்த ஊரு பூச்சிக்காடும் தெக்க தான இருக்கு'

'போல! பூச்சிக்காட்டுல பொண்ணு எடுக்கறதுக்கு, பேசாம நீ சுடுகாட்டுக்கே போலாம்டே'

--- இப்படி சாமி வாக்கு சொல்லும் போது ஏகப்பட்ட சுவாரஸ்யம் இருக்கும்.

அப்புறம் சாமி ஊர்வலம் கிளம்பும். ஒரு கொட்டுக்காரனை கூட்டிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் பின்னாடியே போவோம். ஒவ்வொரு தெரு தெருவா சாமி வலம் போய்ட்டு, மொத்த ஊரும் சுற்றியவுடன் கோவிலுக்கு திரும்பும்.

------------------

அடுத்த நாள் காலைல ராத்திரி வெட்டின கிடாவ வரிப் பங்கு போட்டு, 'ஏல! எனக்கு எலும்பா அள்ளி போட்டுட்டு அவனுக்கு மட்டும் கறியா அள்ளிப் போட்டிருக்கீங்கல. எவம்ல பங்கு வைக்கிறது. எடுல அந்த அருவாள?' அப்படின்னு அன்பா கொடைய முடிக்கலைனா அன்னைக்கு எவனுக்கும் தூக்கம் வராது. மதியம் நல்லா கறிச்சோறு தின்னுப்புட்டு அன்னைக்கு ராத்திரி 'ஆயிரத்தில் ஒருவன்' திரையில் பார்க்க ரெடியாகிக் கிட்டு இருப்போம்.